உளப் போராட்டத்தின் படித்தரங்களைப் புரிந்து கொள்வோம்


          அல்லாமா இப்னுல் கைய்யிம் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

         “உளப் போராட்டம் நான்கு படித்தரங்களைக் கொண்டிருக்கின்றது:

*ஒன்று:* ஈருலக  வெற்றியும், சுபீட்சமும் எதன் மூலம் உள்ளத்திற்குக்   கிடைக்குமோ அத்தகைய நேர்வழியையும், சத்திய மார்க்கத்தையும்  கற்றுக்கொள்வதற்காக வேண்டி உள்ளத்தோடு ஒருவர்  போராடுவதாகும்.  உள்ளம் எப்போது இவ்வறிவை இழந்து விடுகிறதோ அப்போது  ஈருலகிலும் அது  துர்ப்பாக்கியமடைந்து விடுகிறது.

*இரண்டு:* இந்த அறிவைப் பெற்றுக்கொண்டதற்குப் பின்னால்,  அதைக்கொண்டு செயல்படுகின்ற விடயத்தில் உள்ளத்தோடு ஒருவர் போராடுவதாகும். ஏனெனில், செயல்பாடு இல்லாத வெறும் அறிவு உள்ளத்திற்குத் தீங்கை ஏற்படுத்தாவிட்டாலும் அதற்குப் பயனை அளிக்கமாட்டாது.

*மூன்று:* தான் கற்று, செயல்படுத்தி வருகின்ற அறிவின் பக்கம் மக்களை அழைக்கின்ற போதும், தெரியாதவருக்கு அதைக் கற்றுக்கொடுக்கின்ற போதும் உள்ளத்தோடு ஒருவர் புரிகின்ற போராட்டமாகும். இப்படி அழைப்புப் பணியில் அவர் ஈடுபடாது விட்டால், அல்லாஹ் இறக்கி வைத்த நேர்வழியையும் தெளிவான ஆதாரங்களையும் மறைத்தவர்களில் ஒருவராக அவர் ஆகிவிடுவார். அத்தோடு, அவர் பெற்ற அறிவு அவருக்குப் பயனையும் அளிக்காது; அது, அல்லாஹ்வின் வேதனையிலிருந்து அவரைக் காக்கவும் செய்யாது.

*நான்கு:* அல்லாஹ்வின் பக்கம் அழைக்கின்ற அழைப்புப் பணியைச் செய்கின்றபோது ஏற்படுகின்ற கஷ்டங்கள், மற்றும்  மக்கள் கொடுக்கின்ற  இன்னல்கள் ஆகியவற்றைப் பொறுத்துக்கொள்கின்ற விடயத்தில் தன் உள்ளத்தோடு ஒருவர் போராடுவதாகும். இதன்போது,  இவையனைத்தையும் அல்லாஹ்வுக்காக வேண்டியே அவர் தாங்கிக்கொள்ளவும் வேண்டும்.

     உளப் போராட்டத்தின் இந்த நான்கு படித்தரங்களையும் பூரணப்படுத்திக்கொண்டவரே 'ரப்பானிய்யூன்' எனும் அல்லாஹ்வுக்காகத் தம்மை அர்ப்பணித்து, அவனைச் சார்ந்திருப்போரில் உள்ளவராக மாறி விடுகிறார். சத்தியத்தை அறிந்து, அதை நடைமுறைப்படுத்தி, அதைப் பிறருக்குக் கற்றுக்கொடுக்கின்ற வரைக்கும் 'ரப்பானிய அறிஞர்' (அல்லாஹ்வைச் சார்ந்த அறிஞர்) என்று ஓர் அறிஞர் பெயர் சூட்டப்படுவதற்குத் தகுதி பெறமாட்டார் என்ற இந்த விடயத்திலும் முன்சென்ற சலfப் அறிஞர்கள் ஏகோபித்த கருத்தைக் கொண்டிருக்கின்றனர்”.

{ நூல்: 'ஸாதுல் மஆத் fபீ ஹத்யி ஹைரில் இபாத்', 03/10 }


            قال العلّامة إبن القيم رحمه الله تعالى:-

       « جهاد النّفس أربع مراتب:

*إحداها:* أن يجاهدها على تعلّم الهدى، ودين الحق الذي لا فلاح لها، ولا سعادة في معاشها ومعادها إلاّ به، ومتى فاتها علمه شقيت في الدّارين.

*الثانية:* أن يجاهدها على العمل به بعد علمه. وإلاّ فمجرّد العلم بلا عمل إن لم يضرّها لم ينفعها.

*الثالثة:* أن يجاهدها على الدّعوة إليه، وتعليمه من لا يعلمه. وإلا كان من الذين يكتمون ما أنزل الله من الهدى والبيّنات، ولا ينفعه علمه، ولا ينجيه من عذاب الله.

*الرابعة:* أن يجاهدها على الصبر على مشاقّ الدّعوة إلى الله، وأذى الخلق، ويتحمّل ذلك كلّه للّه.

           فإذا استكمل هذه المراتب الأربع صار من الرّبّانيّين، فإن السّلف مجمعون على أن العالم لا يستحقّ أن يسمّى ربّانيّا حتى يعرف الحق، ويعمل به، ويعلّمه ».

{ زاد المعاد في هدي خير العباد، ٣/١٠ }

☄➖➖➖➖➖➖➖➖☄

               *✍தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


أحدث أقدم