அறிவில் காட்டும் அக்கறையை அழகிய பண்பாடுகளிலும் காட்டுங்கள்

 

        நவீன கால ஹதீஸ் ௧லை அறிஞர்  அல்லாமா நாஸிருத்தீன் அல்அல்பானீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:

            “நான் கவலையோடு கவனித்து வருகின்ற விடயம் யாதெனில், மனிதர்கள் இன்று *அறிவு* என்ற முதல் பகுதிக்கு முக்கியத்துவம் செலுத்தி இரண்டாவதான மற்ற பகுதிக்கு முக்கியத்துவம் செலுத்தாது விட்டு விடுகின்றார்கள். அதுதான்: *'நற்பண்புகள், நன்னடத்தை'* என்ற பகுதியாகும்.

          நற்பண்புகளையும் நற்குணங்களையும் மையப்படுத்தியே நபியவர்கள் தனது பிரச்சாரத்தை வரையறுத்துக்கொள்ள  முற்பட்டிருக்கின்றார்கள் என்றால் இதன் முக்கியத்துவம் எவ்வளவாக உள்ளது என்பதைப் பாருங்கள்.  இது குறித்த நபியவர்களின் போதனை,  'வரையறுத்து மட்டுப்படுத்தல்' என்பதற்காகப் பயன்படுத்தப்படும் அரபு மொழிச் சொற்பிரயோகத்துடனேயே வந்திருக்கிறது. அவர்கள் கூறுகிறார்கள்: *“நபியாக நான்  அனுப்பப்பட்டதெல்லாம் நற்பண்புகளைப் பூரணப்படுத்துவதற்காக வேண்டித்தான்!”*. அழகிய குணங்களும் பண்பாடுகளும் அண்ணல் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களது அழைப்புப் பணியின் அடிப்படைப் பகுதியொன்றாக இருந்தது என்பதுவே இதன் விளக்கமாகும்.

          நடைமுறை வாழ்க்கையில் இதை  நாம் பார்ப்போமானால், எனது அறிவுத் தேடலின்  ஆரம்ப காலப் பகுதியில் நான் இருந்துகொண்டிருந்தேன். அப்போது, தூய ஏகத்துவக் கொள்கைக்கு அல்லாஹ் எனக்கு நேர்வழியும்  காட்டியிருந்தான்.  இஸ்லாமிய உலகு இந்த ஏகத்துவத்திலிருந்து தூரமாகி வாழ்ந்துகொண்டிருந்ததையும்  அறிந்திருந்திருந்தேன். அந்நேரம் நான்,  இஸ்லாமிய உலகில் ஏற்பட்டிருக்கும் இப்பிரச்சினைக்குக் காரணம் 'லா இலாஹ இல்லழ்ழாஹ்' என்ற ஏகத்துவக்  கலிமாவினுடைய கருத்தின் யதார்த்தத்தை விளங்குவதிலிருந்து முஸ்லிம்கள் தூரமாகியிருந்தது மட்டும்தான் என்று  நினைத்திருந்தேன்.

         எனினும், காலம் செல்லச்செல்லத்தான் 'ஏகத்துவத்தை விட்டும் அவர்கள் தூரமாகியிருந்தது'  என்ற முதலாவது இவ்வடிப்படை  பிரச்சினையுடன் வேறொரு பிரச்சினையும் அங்கே சேர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற தெளிவைப் பெறலானேன். அதுதான்: *'அவர்களில் சொற்ப அளவினரைத் தவிர அதிகமானோர் சரியான இஸ்லாமியப் பண்பாடுகளைக் கடைப்பிடிக்காமல் இருக்கின்றார்கள்'* என்பதாகும். நற்பண்பைக் கடைப்பிடிக்கப் பணிக்கும் நிறைய நபிமொழிகள் நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்களிடமிருந்து வந்திருக்கின்றன.

          ஒருமுறை, தனக்கு உபதேசம் செய்யும்படிக் கேட்ட ஒரு மனிதருக்கு *“நற்பண்பைக் கடைப்பிடிக்கும்படி உமக்கு நான் கட்டளையிடுகிறேன்”* என்று நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் கூறினார்கள்.

          இன்னொரு முக்கிய ஹதீஸில் நபி (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக இவ்வாறு வந்துள்ளது: *“ஒரு மனிதர் தனது நற்பண்பின் மூலம் இரவில் நின்று வணங்கி, பகலில் நோன்பு நோற்றவரின் அந்தஸ்தை அடைந்து கொள்கின்றார்”*.

         வணக்கசாலிகளில் அதிகம்பேர் பகலில் நோன்பு நோற்பவர்களாகவும், மக்கள் தூங்கியிருக்கும் வேளையில் நின்று வணங்குபவர்களாகவும் இருப்பதை உன்னால் பார்க்க முடியும். விடயம் இவ்வாறு இருப்பதுடன் அவர்களில் மிகச் சொற்பமானவர்களைத் தவிர மற்றவர்கள் இஸ்லாமியப் பண்பாடுகளைக் கடைப்பிடித்து நடக்காதவர்களாகவே காணப்படுகின்றார்கள்.

          இதனால்தான், அறிவை செயலுடன்  இணைக்க வேண்டியதும், செயலில் நம்மிடம் நற்பண்பு காணப்பட வேண்டியதும் முஸ்லிம் சமூகமான  எமக்கு அவசியமான ஒன்றாக இருக்கிறது”.

{ 'பfதாவா ஜித்தா', 34 ம் இறுவட்டு }

           


❀ قال الشيخ المُحَدِّث العلاّمة الألباني  - رحمه اللَّه تعالى -

           

« أنا أُلاحظ مع الأسف أنَّ النَّاس اليوم يهتمُّون بالجانب الأوَّل ، *ألا وهو : العِلْم* ، ولا يهتمُّون بالجانب الآخر ، *ألا وهو : الأخلاق والسُّلوك*.


 فإذا كان النَّبِيُّ ﷺ يكاد يحصر دعوته من أجل محاسن الأخلاق ومكارمها ، حينما يأتي بأداة الحصر فيقول : *« إِنَّمَا بُعِثْتُ لِأُتَمِّمَ مَكَارِمَ الأَخْلَاقِ »* .


 فإنَّما ذلك يعني أنَّ مكارم الأخلاق جزء أساسي من دعوة الرَّسول عليه الصَّلاة والسَّلام ، والواقع أنَّني كنت في ابتداء طلبي للعِلْم وهداية اللَّه - عزَّ وجلَّ - إيَّاي إلى التَّوحيد الخالص واطلِّاعي على ما يعيشه العالم الإسلامي من البعد عن هذا التَّوحيد ، كنت أظنُّ أنَّ المشكلة في العالم الإسلامي إنَّما هي فقط ابتعادهم عن فهمهم لحقيقة معنى (لا إله إلَّا اللَّه) ، 


ولكنِّي مع الزَّمن صرت أتبيَّن أنَّ هناك مشكلة أخرى في هذا العالم تُضاف إلى المشكلة الأولى الأساسيَّة - ألا وهي : بُعدهم عن التَّوحيد - ، 


المشكلة الأخرى : أنَّهم أكثرهم لا يتخلَّقون بأخلاق الإسلام الصَّحيحة إلَّا بقدر زهيد 

لقد جاءت أحاديث كثيرة تترى عن النبي ﷺ تأمر بحسن الخلق،


 وقد جاء في بعضها أن رجلا  استوصى أو طلب من النبي ﷺ وصية فقال له عليه الصلاة والسلام : *( عليك بحسن الخلق )* ، وجاء في الحديث الآخر وهو حديث عظيم جدا ألا وهو قوله ﷺ : *( إن الرجل ليدرك بحسن خلقه درجة قائم الليل وصائم النهار )*. إن كثيرا من المتعبدين تراهم صواما قائمين في الليل والناس نيام ومع ذلك لم يتخلقوا بأخلاق الإسلام  إلا بقدر زهيد جدا ،


     ولذلك فعلينا نحن معشر المسلمين أن نقرن العلم إلى العمل والعمل منه حسن الخلق...".


📚(فتاوى جدَّة) (شريط ٣٤)

📚➖➖➖➖➖➖➖➖📚

              *✍ தமிழில்✍*

                  அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா

          

أحدث أقدم