இறுதி முடிவு நல்லதாக அமைய வேண்டும்; அதை நோக்கியே எமது நகர்வுகளும் இருக்க வேண்டும்


          கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்முத்லக் (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-

        “மனிதனுக்கென்று இவ்வுலகத்தில் கிடைத்திருக்கும் பங்கு அவனது வாழ்நாள்தான். இதை,  நிலையான மறுமை வீட்டில் பயன்படும் வகையில் நன்றாக  அவன் பயன்படுத்துவானாக இருந்தால் அவன் செய்துகொண்ட வர்த்தகம் இலாபமுள்ளதாகவே இருக்கும். (இதை விட்டுவிட்டு)  பாவங்களிலும்  தவறுகளிலும் வாழ்நாளை அவன் மோசமாகப்  பயன்படுத்தி, அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அந்த மோசமான முடிவுடனேயே செல்வானாக இருந்தால் நஷ்டமடைந்தவர்களில் அவன் ஆகிவிடுவான். இப்படி நஷ்டமடைந்தவர்கள் எத்தனை பேர் பூமிக்குக் கீழே இருந்துகொண்டிருக்கிறார்கள்!. (எனவே,  மறுமையில்) தன்னை அல்லாஹ் விசாரிக்க முன்னர் (இவ்வுலகில்) தன்னைத்தானே விசாரித்து சுய விசாரணை செய்துகொள்ளும் மனிதனே  புத்திசாலியாவான். நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறுகின்றார்கள்:    *“இறைநம்பிக்கையாளர் தன் பாவங்களை மலைகளைப் போன்று (பாரமாகக்) கருதுவார். அவர் ஒரு மலை அடிவாரத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றும், அந்த மலை தன் மீது விழுந்துவிடுமோ என அஞ்சுபவரைப் போன்றும் அவர் பார்ப்பார்”*. (நூல்: புகாரி - 6308).

           எத்தனையோ பேர் சிறு பாவத்தில் நிலைத்திருக்கின்றார்கள்! இதனால், இதில் ஈடுபடுபவனுக்கு அது  விருப்புக்குரியதாகிப் போனதுடன் அற்பமானதாகவும் ஆகிவிட்டது. தான் யாருக்கு மாறு செய்து நடந்தானோ அந்த அல்லாஹ்வின் விடயத்தில் காணப்படுகின்ற  பாரதூரம் பற்றியெல்லாம் ஒரு நாள்கூட அவன் சிந்தித்துப் பார்ப்பதில்லை. ஆகவே, இது அவனது இறுதி முடிவு மோசமாகிப் போவதற்கு ஒரு காரணியாகி விடுகிறது. நபித்தோழர் அனஸ் இப்னு மாலிக் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் இவ்வாறு  கூறுகிறார்கள்: *“நீங்கள் சில (பாவச்) செயல்களைப் புரிகிறீர்கள். அவை உங்கள் பார்வையில் முடியைவிட மிக மெலிதாகத் தோன்றுகின்றன. ஆனால், அவற்றை நாங்கள் பேரழிவை ஏற்படுத்தும் பெரும்பாவங்களாக நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்களின் காலத்தில் கணக்கிட்டு  வந்தோம்”*. (நூல்: புகாரி - 6492).

           இறுதி முடிவு நல்லதாக அமைய வேண்டியதன் முக்கியத்துவம் குறித்து அல்லாஹ் தனது வேத நூலாகிய அல்குர்ஆனில் எல்லா இறைவிசுவாசிகளுக்கும் உணர்த்துகின்றான். *“நம்பிக்கை கொண்டோரே! அஞ்ச வேண்டிய முறையில் அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். முஸ்லிம்களாகவே அன்றி நீங்கள் மரணத்துவிட வேண்டாம்”*. (03:102)

          *“உம்மிடம் (மரணம் எனும்) உறுதியானது வரும் வரை உமது இரட்சகனை நீர் வணங்குவீராக!”*. (15:99)

             இறுதி முடிவை அழகாக அடைந்து  கொள்வதற்கு  இறையச்சமும் வணக்க வழிபாடும் மரணம் வரைக்கும் தொடர்ந்திருக்க வேண்டும் என்று இங்கு கட்டளையிடப்பட்டிருக்கிறது. மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள்! அவர்களில் ஒருவர் தன் வாழ்நாளில் நீண்ட காலம் இறைவழிபாடுகளில் அதிக ஈடுபாடு காட்டி, பாவங்களை விட்டும் தூரமாகியும் இருப்பார். எனினும், தனக்கு மரணம் சம்பவிப்பதற்கு சற்று முன்னர் பாவங்களையும் தவறுகளையும் புரிந்திருப்பார். இது, இவரது இறுதி முடிவு மோசமாக அமைவதற்கான ஒரு காரணியாகி விடும். நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்)  அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: *“உங்களில் ஒருவர் (நற்) செயல் புரிந்து கொண்டே செல்வார். எந்த அளவிற்கென்றால் அவருக்கும் சுவர்க்கத்திற்குமிடையே ஒரு முழம் (தொலைவு) தான் இருக்கும். அதற்குள் அவரின் விதி அவரை முந்திக் கொள்ளும். அப்போது அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக  நரகம் புகுந்து விடுவார்”*.  (புகாரி - 3208)

[ கலாநிதி அப்துல்லாஹ் பின் முஹம்மத் அல்முத்லக் என்பவருக்குரிய “ஹுஸ்னுல் ஹாத்திமா” எனும் சிறு நூல், பக்கம் - 10,11 ]


         قال الدكتور عبدالله بن محمد المطلق حفظه الله تعالى:-

             { فإن نصيب الإنسان من الدنيا عمره، فإن أحسن استغلاله فيما ينفعه في دار القرار فقد ربحت تجارته، وإن أساء استغلاله في المعاصي والسيئات حتى لقي الله على تلك الخاتمة السيئة فهو من الخاسرين. وكم حسرة تحت التراب!، والعاقل من حاسب نفسه قبل أن يحاسبه الله، وخاف من ذنوبه قبل أن تكون سببا في هلاكه. قال ابن مسعود رضي الله عنه: *( المؤمن يرى ذنوبه كأنه قاعد تحت جبل يخاف أن يقع عليه )*. « رواه البخاري - ٦٣٠٨ »

           وكم من شخص أصرّ على صغيرة فألفها وهانت عليه، ولم يفكر يوما في عظمة من عصاه، فكانت سببا في سوء خاتمته. قال أنس رضي الله عنه: *( إنكم لتعملون أعمالا هي أدقّ في أعينكم من الشّعر كنّا نعدّها في عهد رسول الله صلّى الله عليه وسلم من الموبقات )*. « رواه البخاري - ٦٤٩٢».

           وقد نبّه الله في كتابه جميع المؤمنين إلى أهمية حسن الخاتمة. فقال تعالى: *( يا أيها الذين آمنوا اتقوا الله حقّ تقاته ولا تموتنّ إلا وأنتم مسلمون )* « سورة آل عمران، الآية - ١٠٢ ».

              وقال تعالى: *( واعبد ربّك حتى يأتيك اليقين )* « سورة الحجر، الآية - ٩٩ ».

            فالأمر بالتقوى والعبادة مستمرّ حتى الموت لتحصل الخاتمة الحسنة، وقد بيّن صلّى الله عليه وسلم أن بعض الناس يجتهد في الطاعات ويبتعد عن المعاصي مدة طويلة من عمره ولكن قبيل وفاته يقترف السيئات والمعاصي ممّا يكون سببا في أن يختم له بخاتمة السوء. قال صلّى الله عليه وسلم: *( وإن الرجل ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار فيدخلها )*. « رواه البخاري - ٣٢٠٨ ».

[ المصدر: رسالة 'حسن الخاتمة' للدكتور عبدالله بن محمد المطلق، ص - ١٠ ، ١١ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                 அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post