பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் திர்ஹம்களில் இதை தான் அவர் எங்களுக்காக விட்டுச் சென்றார்

அல் ஜர்ஹு வத் தஃதீலுடைய இமாம்களுக்கெல்லாம் முன்னோடியும் அமீருல் முஃமினீன் பில் ஹதீஸ் இமாம் புஹாரி மற்றும் இமாம் முஸ்லிமின் ஆசிரியருமான யஹ்யா இப்னு மஈன் ரஹிமஹுல்லாஹ் அவர்களது தந்தை அவரை விட்டு மரணிக்கும் போது அவருக்காக பத்து இலட்சத்து ஐம்பதாயிரம் திர்ஹம்களை விட்டுச் சென்றார்கள், அவை அனைத்தையும் யஹ்யா இப்னு மஈன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது ஹதீஸ் கலைத் தேடலுக்காகவே செலவழித்தார்கள், இறுதியில் அணிவதற்கு பாதரட்சைகள் கூட இல்லாத நிலையில் தமது தேடலைத் தொடர்ந்தார்கள். 

யஹ்யா இப்னு மஈன் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் வபாத்தாகும் போது நூற்றுப் பதினான்கு மிகப்பெரும் பெட்டிகள் மற்றும் இருபத்து நான்கு பெரும் சட்டிகள் (புத்தகங்களைப் பாதுகாக்கும்) நிரம்ப அவர்கள் திரட்டிய நூல்களை விட்டுச்சென்றார்கள். 

என ஹாபிழ் இப்னு ஹஜர் அல் அஸ்கலானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது தஹ்தீபுத் தஹ்தீப் - 11/282 லும் அல்லாமா அபுல் யும்ன் அல் உலைமி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தமது அல் மன்ஹஜுல் அஹ்மத் -1/95 லும் பதிவு செய்துள்ளார்கள். 

இமாம் முஹம்மத் பின் நஸ்ர் அத்தபரி அவர்கள் கூறுகின்றார்கள் நான் யஹ்யா இப்னு மஈன் அவர்களை சந்திக்கச் சென்றேன் அவர்களது இருப்பிடம் முழுக்க புத்தகங்களால் நிரம்பி இருந்தன, இமாமவர்கள் தமது நூல்களின் பக்கம் சாடை செய்து என்னிடம் கூறினார்கள் எந்தெந்த ஹதீஸ்களெல்லாம் இங்கு பெற்றுக் கொள்ளப்படவில்லையோ அது பொய்யான செய்தியாகவே இருக்கும் என்றார்கள். (தஹ்தீபுத் தஹ்தீப் - 11/282)

அனைத்து ஹதீஸ்களையும் தாம் திரட்டிவிட்டதாக அந்தளவு தூரம் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.

சிதறிக்கிடந்த ஒட்டுமொத்த நபிமொழிகளையும் ஒன்று சேர்ப்பதற்காகவே தமது வாழ்நாள் முழுவதையும் செலவு செய்துள்ளார்கள். 

எமது முன்னைய இமாம்கள் அனைவரையும் அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக! 

*By - Shk TM Mufaris Rashadi.*

Previous Post Next Post