இஸ்லாமியப் பேரறிஞர் அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“சில மனிதர்களை நீ பார்க்கலாம்! அவர்களில் ஒருவருக்கு அறிவை அல்லாஹ் கொடுத்திருப்பான்; எனினும் கற்பித்தல், வழிகாட்டல், நூலுருவாக்கம் ஆகிய எந்த ஒன்றைக்கொண்டும் அவரின் அறிவின் மூலம் மக்கள் பயனடைந்திருக்கமாட்டார்கள். அவரோடு மாத்திரம் வரையறுக்கப்பட்டதாகவே அவரது அறிவு இருந்துகொண்டிருக்கும்; அறிவில் அவருக்கு அல்லாஹ் அருள்வளம் (பரக்கத்) செய்திருக்கமாட்டான். இது, அவருக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகமே கிடையாது. ஏனெனில், மனிதனுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் மிகப்பெரிய அருள்வளம் கல்வியாகும். உனக்கு வழங்கப்பட்ட கல்வியை மற்றவருக்கும் நீ கற்றுக்கொடுத்து, சமூக மட்டத்திலும் அதை நீ பரப்பினால் பல வழிகளிலும் அதற்காக உனக்குக் கூலி வழங்கப்படும். இச்சிறப்பைப் பெற்றுக்கொள்ளும் வழிமுறைகள் வருமாறு:
*01)* அறிவைப் பரப்பும் உனது பணியானது அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பரப்புகின்ற மகத்தான பணியாகும். இதைச் செய்வதனால் மார்க்கத்திற்காகப் போராடும் வீரமரணப் போராளிகளில் ஒருவனாக நீ ஆகிவிடுகிறாய். அல்லாஹ்வின் பாதையில் போராடும் ஒரு போராளி, ஒவ்வொரு பிரதேசம் பிரதேசமாக மார்க்கம் அவற்றில் பரவுகின்ற வரைக்கும் அப்பிரதேசங்களில் போராட்டம் மேற்கொண்டு வெற்றிவாகை சூடுகிறார். நீயும் அறிவின் மூலம் உள்ளங்களை வெற்றிகொள்கிறாய்; முடிவில், அல்லாஹ்வின் ஷரீஅத் சட்டங்கள் அவ்வுள்ளங்களில் பரவி விடுகின்றன.
*02)* பெற்ற அறிவைப் பிறருக்குக் கற்றுக்கொடுத்து, அதைப் பிரச்சாரம் செய்வதில் இருக்கின்ற 'பரக்கத்' எனும் அருள்வளம் என்னவென்றால் அல்லாஹ்வின் ஷரீஅத்துக்கான பாதுகாப்பும் அதற்கான பாதுகாப்பு முறையும் அதில் காணப்படுவதாகும். அறிவு இல்லையேல் ஷரீஅத் பாதுகாக்கப்படமாட்டாது; அறிவுடையோரைக்கொண்டுதான் ஷரீஅத்தைப் பாதுகாக்க முடியும்! அறிவைப் பரப்பும் பணியில் நீ ஈடுபட்டு உனது அறிவால் மக்கள் பயனடைந்து வரும்போது அதிலே அல்லாஹ்வின் ஷரீஅத்துக்கான பாதுகாப்பு கிடைத்துக் கொண்டிருக்கும்.
*03)* 'அறிவை நீ யாருக்கு கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறாயோ அவருக்கு நீ உபகாரம் செய்துகொண்டிருக்கிறாய்!' என்பது இதில் இருக்கின்ற முக்கிய விடயமாகும். ஏனெனில், அல்லாஹ்வின் மார்க்கத்தை தெளிவான ஆதாரத்துடனும் விளக்கத்துடனும் அவருக்கு நீ முன்வைக்கின்றாய்; இதைப் பின்பற்றி அல்லாஹ்வை அவர் வணங்கினால் அவருக்குக் கிடைக்கும் கூலி போன்று உனக்கும் கூலி கிடைத்துக் கொண்டிருக்கும். காரணம், நன்மை செய்ய அவருக்கு வழிகாட்டியவர் நீதான்! நன்மைக்கு வழிகாட்டியவர் நன்மை செய்தவர் போன்றவர்தான்; அறிவைப் பரப்பும் பணியில் ஈடுபடும்போது அதைப் பரப்பியவருக்கும், அது சென்றடைபவர்களுக்கும் அதில் நன்மையும் அருள்வளமும் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
*04)* அறிவைப் பரப்புவதிலும், அதைக் கற்றுக்கொடுப்பதிலும் அறிவு விருத்தி ஏற்படுகிறது. அறிஞரின் அறிவு மக்களுக்குக் கற்றுக் கொடுக்கும்போது விருத்தியடைகிறது. ஏனெனில், அறிஞரின் இப்பணி தான் கற்றதை நினைவுபடுத்திப் பார்த்தலாகவும், தான் கற்றுக்கொள்ளாததை கற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது. கற்கும் மாணவர்களிடமிருந்து கற்றுக்கொடுக்கும் ஆசான்கள் நிறையப் பயனடையவே செய்கின்றனர்! சிலவேளை, ஆசிரியரிடம் கற்கின்ற மாணவர்கள் அவ்வாசிரியரின் சிந்தனையில் இல்லாத நல்ல விளக்கங்கள் பலவற்றை அவரிடம் கொண்டு வருவார்கள். இதனால், அம்மாணவர்களுக்கு அவர் கற்றுக்கொடுக்கும்போதே அவர்களிடமிருந்து அவர் பயனடைந்து கொள்வார். இது, நேரடியாகக் காணக்கிடைக்கின்ற விடயமாகும்.
இதனால்தான் ஆசிரியர் தன் மாணவனிடமிருந்து பயன்பாட்டைப் பெற்றுக்கொண்டாலோ, கல்விப் பாடங்களில் ஏதாவது ஒன்றை மாணவன் ஆசிரியருக்கு சொல்லிக் கொடுத்தாலோ அந்த மாணவனை உற்சாகப்படுத்தி, அதற்காக அவனுக்கு நன்றி செலுத்த வேண்டியது ஆசிரியருக்கு அவசியமாகும்”.
*[ நூல்:* 'கிதாபுல் இல்ம்' லில்உஸைமீன், பக்கம் - 249,250 *]*
قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
{ تجد بعض الناس قد أعطاه الله علما، ولكن لم ينتفع الناس بعلمه. لا بتدريس ولا بتوجيه، ولا بتأليف، بل هو منحصر على نفسه، لم يبارك الله له في العلم. وهذا بلا شك حرمان عظيم، مع أن العلم من أبرك ما يعطيه الله العبد؛ لأن العلم إذا علّمته غيرك ونشرته بين الأمة أجرت على ذلك من عدة وجوه:
*🔅 أولا:* أن في نشرك العلم نشرا لدين الله عزّ وجلّ فتكون من المجاهدين. فالمجاهد في سبيل الله يفتح البلاد بلدا بلدا حتى ينشر فيها الدين؛ وأنت تفتح القلوب بالعلم حتى تنشر فيها شريعة الله عزّ وجلّ.
*🔅ثانيا:* من بركة نشر العلم وتعليمه أن فيه حفظا لشريعة الله وحماية لها؛ لأنه لولا العلم لم تحفظ الشريعة. فالشريعة لا تحفظ إلا برجالها رجال العلم، ولا يمكن حماية الشريعة إلّا برجال العلم. فإذا نشرت العلم وانتفع الناس بعلمك حصل في هذا حماية لشريعة الله وحفظ لها.
*🔅ثالثا:* فيه أنك تحسن إلى هذا الذي علّمته؛ لأنك تبصره بدين الله عزّ وجلّ. فإذا عبد الله على بصيرة كان لك من الأجر مثل أجره؛ لأنك أنت الذي دلّلته على الخير، والدّالّ على الخير كفاعل الخير، فالعلم في نشره خير وبركة لناشره ولمن نشر إليه.
*🔅رابعا:* أن في نشر العلم وتعليمه زيادة له. علم العالم يزيد إذا علم النّاس؛ لأنه استذكار لما حفظ، وانفتاح لما لم يحفظ، وما أكثر ما يستفيد العالم من طلبة العلم. فطلابه الذين عنده أحيانا يأتون له بمعان ليست له على بال، ويستفيد منهم وهو يعلّمهم، وهذا شيء مشاهد.
ولهذا ينبغي للمعلم إذا استفاد من الطالب، وفتح له الطالب شيئا من أبواب العلم أن يشجّع الطالب، وأن يشكره على ذلك }.
[ المصدر: 'كتاب العلم' للعثيمين، ص - ٢٤٩،٢٥٠ ]
📚➖➖➖➖➖➖➖➖📚
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா