இருள்களில் சிக்கித்தவிக்கும் மனிதர்களாக இல்லாமல் ஒளியில் நடக்கும் புனிதர்களாக இருப்போம்


🔅அல்லாஹ் கூறுகிறான்: *“(நிராகரிப்பினால்) எவன் மரணித்தவனாக இருந்தானோ அவனை நாம் (நேர்வழியின் மூலம்) உயிர்ப்பித்து, அவனுக்கு நாம் ஓர் ஒளியை ஏற்படுத்தினோம். அதன்மூலம் மனிதர்களுக்கு மத்தியில் அவன் நடந்து திரிகின்றான். இவன், இருள்களில் சிக்கி அவற்றிலிருந்து வெளியேற முடியாதவாறு இருப்பவனைப் போலாவானா? இவ்வாறே, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்துகொண்டிருந்தது அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது”.* (அல்குர்ஆன், 06:122)

            “வழிகேட்டில் சிக்கித்தவித்து தடுமாறிக்கொண்டிருந்ததன் மூலம் மரணித்துப் போயிருந்த இறைவிசுவாசிக்கு அல்லாஹ் கூறும் உதாரணமே இதுவாகும். ஈமானைக்கொண்டு இவர் உள்ளத்தை அல்லாஹ் உயிர்ப்பித்தான்; நேர்வழியையும் இவருக்கு அவன் காட்டினான்; தனது தூதரைப் பின்பற்றி நடக்கவும் அருள்புரிந்தான். இவர் இஸ்லாமிய அறிவின் உயிரோட்டம், நேர்வழி, ஈமான் ஆகியவற்றை இழந்திருந்ததன் மூலம் உள்ளம் மரணித்தவராகவே இருந்தார். மேலும் அல்லாஹ்வை ஏகத்துவப்படுத்துதல், அவனது மார்க்க சட்டதிட்டங்களை அறிதல் ஆகியவற்றில் காணப்பட்ட இவரது அறியாமையைக்கொண்டும், தனது வெற்றிக்கு இட்டுச்செல்லும் வேலையை அல்லாஹ்வுக்காகச் செய்வதை விட்டுவிட்டதன் மூலமும் உள்ளம் மரணித்தவராகவே இவர் இருந்தார். இந்நேரத்தில்தான் அல்லாஹ் இவருக்கு  உடல்  உயிர்வாழ்வதற்குக் கொடுத்த உயிர் அல்லாத வேறொரு உயிரைக்கொடுத்து  இவரை உயிர்ப்பித்தான். அதுதான் இஸ்லாத்தில் இருக்க இவருக்குக் கிடைத்த நேர்வழி என்ற உயிராகும்;  அல்லாஹ்வை சரியாக அறிந்து, அவனை ஏகத்துவப்படுத்தி, அவனுக்கு அன்பு செலுத்தி, எதையும் அவனுக்கு இணையாக்காமல் அவனை மட்டுமே வணங்குவதற்கென அல்லாஹ் இவருக்குக் கொடுத்த உயிராகும். 

          *“இவருக்கு நாம் ஓர் ஒளியை ஏற்படுத்தினோம். அதன்மூலம் மனிதர்களுக்கு மத்தியில் இவர் நடந்து திரிகின்றார்”*: இவ்வசனத்தில் வருகின்ற *'ஒளி'* என்பது *'அல்குர்ஆன், இஸ்லாம்'* என்ற ஒளியாகும். இப்படியான ஒளியில் இருக்கக்கூடிய மனிதன் அறியாமை, நிராகரிப்பு, இணைவைப்பு, சந்தேகம், வழிகேடு, புறக்கணிப்பு, பாவங்கள் ஆகிய இருள்களில் (சிக்கி)  இருப்பவனுடன் சமமாகுவானா? 

          *“இருள்களில் சிக்கிய இவனுக்கு அவற்றிலிருந்து வெளியேற முடியாதிருக்கின்றது”:* இதற்கான காரணம், நேர்வழிக்குக் கொண்டு  செல்லும்  பாதைகள் இவனுக்குக் குழப்பமாகிவிட்டன; நல்வழிகள் இருளடைந்துவிட்டன; சஞ்சலம், துக்கம், கவலை, மூதேவித்தனம் எல்லாம் இவனிடம் வந்துவிட்டன. இதனால்தான் இரவும் பகலும் எப்படிச் சமமாகாதோ, ஒளியும் இருளும் எப்படிச்  சமமாகாதோ, உயிருள்ளவர்களும் உயிரற்றவர்களும் எப்படிச் சமமாகமாட்டார்களோ அதுபோன்று நேர்வழியில் இருப்பவரும், வழிகேட்டில் இருப்பவரும் சமமாகவேமாட்டார்கள் என்று சிந்தனைகள் நன்றாகப் புரிந்து விளங்கிக்கொள்ளும் படியாக அல்லாஹ் இங்கே உணர்த்திக் காட்டுகிறான். 

        *“இவ்வாறே, நிராகரிப்பாளர்களுக்கு அவர்கள் செய்துகொண்டிருந்தது அலங்கரித்துக் காட்டப்பட்டுள்ளது”:* இதன் விளக்கம் என்னவென்றால், அறியாமை மற்றும் வழிகேடு போன்ற  இருள்களில் சிக்கித் தவிக்கும் மனிதர்கள் செய்யும் தீய செயல்களை நல்லவைகளாக ஷைத்தான் அவர்களுக்குக் காட்டிக்கொண்டே இருப்பான்; இத்தீச்செயல்களை  நல்வைகளாகவும், சத்தியமானதாகவும் அவர்கள் பார்க்கும் வரைக்கும் அவர்களின் உள்ளங்களில் இவற்றை அவன்  அலங்கரித்துக் காட்டுவான். அப்போது அவர்களின் உள்ளங்களில் இவை கொள்கையாகவும், எப்போதும் அவர்களுடன் இருந்து வருகின்ற உறுதியான பண்பாகவும்  மாறிவிடும்”.

*[ நூல்கள்:* தப்fசீர் அத்தபரீ 12/88, தப்fசீர் இப்னு கஸீர் 02/163, தப்fசீர் அஸ்ஸஃதீ- பக்கம்: 234, மதாரிஜுஸ் ஸாலிகீன் 03/258 *]*

        

🔅 قال الله سبحانه وتعالى: *{ أو من كان ميتا فأحييناه وجعلنا له نورا يّمشي به في النّاس كمن مّثله في الظلمات ليس بخارج مّنها كذلك زيّن للكافرين ما كانوا يعملون }*  «سورة الأنعام، الآية - ١٢٢».

                  "هذا مثل ضربه الله للمؤمن الذي كان ميتا: أي في الضلالة حائرا فأحيا الله قلبه بالإيمان، وهداه له ووفّقه لاتّباع رسوله صلّى الله عليه وسلم. فقد كان ميت القلب بعدم روح العلم والهدى والإيمان، وبجهله بتوحيد الله وشرائع دينه، وتركه العمل للّه بما يؤدي إلى نجاته، فأحيا الله بروح أخرى غير الروح الذي أحيا بها بدنه، وهي روح هدايته للإسلام، ومعرفة الله وتوحيده، ومحبته، وعبادته وحده لا شريك له. وجعل له نورا يمشي به بين الناس وهو نور القرآن والإسلام، فهل يستوي هذا بمن هو في الظلمات: ظلمات الجهل، والكفر، والشرك، والشك، والغي، والإعراض، والمعاصي؟ 

             ليس بخارج منها؛ قد التبست عليه الطرق، وأظلمت عليه المسالك، فحضره الهمّ والغمّ والحزن والشقاء. فنبّه الله عزّ وجلّ العقول بما تدركه وتعرفه، أنه لا يستوي هذا ولا هذا، كما لا يستوي الليل والنهار، والضياء والظلمة، والأحياء والأموات.

             فأجاب بأنه  *{ زيّن للكافرين ما كانوا يعملون }* : فلم يزل الشيطان يحسن لهم أعمالهم ويزيّنها في قلوبهم حتى استحسنوها ورأوها حقا، وصار ذلك عقيدة في قلوبهم وصفة راسخة ملازمة لهم".

[ المصادر: تفسير الطبري ١٢/٨٨، تفسير ابن كثير ٢/١٦٣، تفسير السعدي  ص - ٢٣٤، مدارج السالكين ٣/٢٥٨ ]

📚➖➖➖➖➖➖➖➖📚

               *✍தமிழில்✍*

                அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*

புதிய சாளம்பைக்குளம்,வவுனியா


Previous Post Next Post