அஷ்ஷெய்க் ஸாஹிர் பின் முஹம்மத் அஷ்ஷஹ்ரீ (ஹபிfழஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“ 'கஸான்' (غسان) பிரதேசத்து மன்னர் 'ஜபலா பின் அய்ஹம் அல்கஸானீ' என்பவருக்கு நடந்த கீழ்க்காணும் சம்பவத்தை நன்றாக சிந்தித்துப் பாருங்கள்! இஸ்லாமிய மார்க்கத்தை விட்டும் மதம் மாறிச் செல்வதற்கு பெருமை அவரை எப்படிக் கொண்டுபோய் விட்டிருக்கிறது!?
இவர் இஸ்லாமிய மார்க்கத்தைத் தழுவி முஸ்லிமாக இருந்தார். அப்போது, தன் சமூகம் சார்ந்த மக்களில் பெரும் எண்ணிக்கை கொண்ட பட்டாளத்தோடு மதீனா நகருக்கு அவர் வந்தார். அவரை 'விசுவாசிகளின் தலைவர்' உமர் இப்னுல் ஹத்தாப் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அன்புடன் வரவேற்று தனது அவையிலும் அவரை நெருக்கமாக வைத்துக்கொண்டார்கள். உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்களுடன் ஹஜ் வணக்க வழிபாட்டிலும் அவர்கள் கலந்து கொண்டார்கள்.
மன்னர் 'ஜபலா' அவர்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றும் முகமாக கஃபதுல்லாவை 'தவாப்f' செய்யும் (வலம் வரும்) வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளையில் அவரது கீழாடையை (வேட்டியை) 'பிfஸாரா' கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவர் மிதித்து விட அது அவிழ்ந்து கீழே விழுந்து விட்டது. உடனே மன்னர் 'ஜபலா' கோபமடைந்தார். மன்னரின் பாதுகாவலர்களும், அவரது படைகளும் அவருக்காக பாதையை விரிவாக்கி விசாலப்படுத்திக் கொண்டிருந்ததால் ஏற்பட்ட அந்த நெரிசலை அந்த மனிதர் உண்மையில் அறிந்திருக்கவில்லை. தனது ஆடை பூமியில் விழுந்து கிடந்ததைக் கண்ட மன்னர் தன் கையை நீட்டி அம்மனிதரின் கன்னத்தில் பலமாக அறைந்தார். அப்போது, அம்மனிதரின் மூக்கு உடைந்துவிட்டது. அந்த அடியால் அவரது கண் பறிபோனது என்றும் சொல்லப்படுகிறது.
தனக்கு நடந்த அநியாயம் குறித்து அமீருல் முஃமினீன் உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்களிடம் அம்மனிதர் முறையிட்டார். உடனே 'ஜபலா'வை அழைத்து அம்மனிதருடைய கூற்றின் உண்மை நிலை பற்றி அவரிடம் வினவ, அவர் கூறியது சரியென 'ஜபலா' ஒப்புக்கொண்டார். அப்போது உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் ஜபலாவிடம், “நீங்கள் செய்த காரியத்திற்காக நீங்களாகவே அம்மனிதரிடம் பழிக்குப்பழியைப் பெற்றுக்கொள்ளுங்கள்!” என்று கூற, “நான் ஒரு மன்னன்; அவரோ பொதுமக்களில் சாதாரணமான ஒருவர்” என்று சொன்னார். இதைக்கேட்ட உமர் ரழியழ்ழாஹு அன்ஹு அவர்கள் அவரிடம், “இஸ்லாம் உம்மையும், அவரையும் (சகோதரர்களாக) ஒன்றுசேர்த்து வைத்துவிட்டது. எனவே, இறையச்சம் மூலமேயன்றி அவரைவிட நீர் சிறப்புக்குரியவராகிவிட முடியாது; மனிதர்களுக்கிடையில் பார்க்கப்படும் இஸ்லாத்தின் நீதம் இதுதான்!” என்று கூறினார்கள். அப்போது 'ஜபலா', “அறியாமைக் காலத்தில் நான் கண்ணியத்தோடு இருந்ததை விட இஸ்லாத்தில்தான் நல்ல கண்ணியத்தோடு நான் இருக்கிறேன் என்றல்லவா நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!” என்று சொன்னார். அதற்கு உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள், “உம்மை விட்டும் இதையெல்லாம் விட்டுவிடுங்கள்; நான் சொன்னதில் நீங்கள் திருப்திப்படவில்லை என்றால் நானே அவருக்காக பழிக்குப்பழியை வாங்கிக்கொடுத்து, உம்மிடமிருந்து அவருக்கான உரிமையைப் பெற்றுக் கொடுப்பேன்!” என்று கூறினார்கள். இதைக்கேட்ட 'ஜபலா', “அப்படியாக இருந்தால் இஸ்லாத்திலிருந்து நான் வெளியேறி, ஏற்கனவே நான் இருந்தது போல கிறிஸ்தவராகி விடுகிறேன்!” எனச் சொன்னார். “நீர் கிறிஸ்தவராகினால், மதம் மாறியவர் என்ற காரணத்திற்காக உமது கழுத்தை நான் வெட்டுவேன்!” என்று உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் கூறினார்கள்.
தனது விடயம் குறித்து ஜபலா சிந்திக்கத் தொடங்கினார். (பெருமையுடன் கூடிய) வரட்டு கெளரவம் அவரைப் பாவத்தில் கொண்டுபோய் தள்ளியது. தனது முடிவில் உமர் உறுதியாக இருந்ததைக் கண்ட 'ஜபலா', “எனது விடயத்தில் இன்று இரவு நான் பரிசீலனை செய்து பார்க்கிறேன்!” என்று கூறிவிட்டு உமரிடமிருந்து திரும்பிச் சென்றுவிட்டார். இரவு அவர்களைச் சூழ்ந்தபோது தன் சமூகத்தாரிடம் சென்ற ஜபலா, தனக்குக் கீழ்படிந்தவர்களைக் கூட்டிக்கொண்டு 'ஷாம்' பிரதேசம் சென்றார். உரோம சாம்ராஜ்யத்துக்குள் பிரவேசித்து உரோமாபுரி மன்னர் ஹிர்கலை (ஹிரேக்லிசை) சந்திக்க அவர் அனுமதி கோரினார். அவருக்கு மன்னர் அனுமதி கொடுத்ததும், மன்னர் முன்னிலையிலேயே தான் கிறிஸ்தவ மதத்தைத் தழுவி இஸ்லாமிய மார்க்கத்தை விட்டுவிட்டதாக 'ஜபலா' கூறினார். அப்போது மன்னர் ஹிர்கல் மகிழ்ச்சியுற்று அன்புடன் அவரை வரவேற்றார். 'ஜபலா' கிறிஸ்தவ மதத்தில் இருக்கும் நிலையிலேயே மரணத்தைத் தழுவினார்”.
[ நூல்: அறிஞர் இப்னு கதீர் அவர்களின் 'அல்பிதாயா வந்நிஹாயா' எனும் நூல். பாகம் - 08, 'ஜபலா பின் அய்ஹம்' என்பவரின் சம்பவம் ].
قال الشيخ زاهر بن محمد الشهري حفظه الله تعالى:-
{ وتأمل معي هذه القصة التي وقعت لجبلة بن الأيهم الغساني ملك غسان، وكيف أن الكبر أوصله إلى الرّدّة عن الدين الإسلامي...
فإنه أسلم فركب في خلق كثير من قومه إلى المدينة واستقبله عمر بن الخطاب رضي الله عنه ورحب به وأدنى مجلسه، وشهد الحج مع عمر.
فبينما هو يطوف بالكعبة إذ وطئ إزاره رجل من بني فزارة، فانحل الإزار فغضب جبلة، إذ كان حرسه وجنوده يفسحون له الطريق فلا يعرف الزحام، فلمّا رأى إزاره على الأرض مدّ يده إلى الفزاري ولطمه لطمة شديدة هشمت أنفه. وقيل: قلع عينه بتلك الضربة. فشكاه الفزاري إلى أمير المؤمنين عمر بن الخطاب، فاستدعى عمر جبلة، وسأله عن صحة قول الفزاري، فاعترف جبلة بذلك فقال له عمر: أقده من نفسك. قال: كيف وأنا ملك وهو سوقة من عامة الناس؟ قال له عمر: إن الإسلام جمعك وإياه فلست تفضله إلا بالتقوى، فهي ميزان الإسلام بين الناس.
فقال جبلة: قد كنت أظن أن أكون في الإسلام أعز منّي في الجاهلية! فقال عمر: دع ذا عنك، فإن لم ترض أقدته أنا وأعطيته حقه منك. قال: إذا أخرج من الإسلام وأتنصّر كما كنت. قال: إن تنصّرت ضربت عنقك؛ لأنك مرتدّ.
فأخذ جبلة يفكر في أمره وأخذته العزة بالإثم، فلمّا رأى الجد من عمر قال: سأنظر في أمري هذه الليلة، فانصرف من عند عمر، فلمّا أدلّهم الليل ركب في قومه ومن أطاعه وسار إلى الشام، ودخل بلاد الرّوم، واستأذن على هرقل فأذن له فلمّا دخل عليه أعلن النصرانية بين يديه، وترك الإسلام، فرحب به هرقل وفرح بذلك، ومات جبلة على النصرانية }.
[ المصدر: 'البداية والنهاية' لابن كثير، الجزء الثامن، قصة جبلة بن الأيهم الغساني ]
🌀➖➖➖➖➖➖➖➖🌀
*✍தமிழில்✍*
அஷ்ஷெய்க் *N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)*
புதிய சாளம்பைக்குளம்,வவுனியா