அறிவிப்பை விட சிந்தனைக்கு அதிகம் முக்கியத்துவம் தருவது வழிகேடு

பேரீத்த மரங்களுக்கு நீர் பாய்ச்சுவதற்காக உள்ள 'ஒரு வாய்க்கால்' விஷயத்தில் ஸுபைர் (ரலி) மீது அன்சாரிகளைச் சேர்ந்த மனிதர் ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வழக்குக் கொண்டு வந்தார். (வழக்கு என்னவென்றால்) தண்ணீரை அதன் போக்கில் விட்டுவிட வேண்டும். (தடுத்து தன் தோட்டத்திற்குப் பாய்ச்சக் கூடாது) என்பது அன்சாரி மனிதரின் வாதம். (தனது தோட்டத்துக்கு) நீர் பாய்ச்சும் வரை வாய்க்காலை அடைத்துக் கொள்வேன். அதன் பிறகே திறந்து விடுவேன் என்று ஸுபைர் (ரலி) மறுக்கிறார். இதுதான் வழக்கு! 

ஸுபைரே! (உனது தோட்டத்திற்கு) நீ நீர் பாய்ச்சி விட்டு, அதன் பின் உன் பக்கத்துத் தோட்டத்தாருக்காக தண்ணீரை விட்டு விடு!' என்று நபி (ஸல்) அவர்கள் நீதி வழங்கினார்கள். 

'அல்லாஹ்வின் தூதரே! உங்களின் மாமி மகன் என்பதனால் தான் (ஸுபைருக்கு சாதகமாக) தீர்ப்பு வழங்குகிறீர்களா?' என்று அந்த அன்சாரி கேட்டார். 

(இதைக் கேட்டதும்) நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறியது. பின்னர் (ஸுபைரை நோக்கி) ஸுபைரே! உனது தோட்டத்திற்கு நீ நீர் பாய்ச்சிக் கொள். அதன் பின்பும் தண்ணீரை தடுத்துக் கொள்! அது வரப்பு (வழியாக நிரம்பி வழிந்து) செல்லட்டும்! என்று (கோபமாகக்) கூறினார்கள். 

" ஆனால் உமதிரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி, நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத வரையில், அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள்.” (அல் குர்'ஆன் 4:65) என்ற வசனம் இவருக்காகவே இறங்கியதாக அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் கருதுகிறேன் என்று ஸுபைர் (ரலி) அறிவிக்கிறார்கள். 
(குறிப்பு: புகாரி 4585, முஸ்லிம் 2357, அபூதாவூத் 3630, இப்னுமாஜா 2480, திர்மிதி 1374,5017)

நபி (ஸல்) அவர்கள் அளித்த தீர்ப்பிலும் அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களிலும் அதிருப்தி கொள்ளக் கூடாது. நபி (ஸல்) அவர்களின் ஸஹீஹான ஹதீஸ்களில் சொல்லப்பட்டவைகள் நியாயமற்றதாக நமக்கு தோன்றினாலும், அதை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும். அதிருப்தி கொள்ளக் கூடாது. நபி (ஸல்) ஒன்றை சொல்லிவிட்டார்கள் என்றால், அதுதான் நியாயம். அது தான் உண்மை. அல்லாஹ்வால் நியமிக்கபட்டவரின் சொற்களில் குறை காண நாம் யார்??? 

ஏனென்றால் இந்த ஹதீஸில் அன்சாரி மனிதருக்கு நபிகளாரின் தீர்ப்பு அநீதியாக தோன்றியது.  நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்களில் அதிருப்தி கொள்வதும், அறிவுக்கு பொருந்தவில்லை என வாதிடுவதும் கட்டுப்பட மறுப்பதற்கு ஒப்பானதாகும். இப்படிப்பட்டவர்கள் உண்மையான விசுவாசிகளாக மாட்டார்கள். 

இன்று, நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கிடைத்தாலும், அது   குர்'ஆனோடு மோதுகிறது என்று, தூக்கி எரியும் 'முஅதஸிலா' கொள்கையை வளர்த்து வருகிறார் பீ.ஜே. இதே பீ.ஜே வின் அடிப்படையில் பார்த்தால்,  மேற்கண்ட ஹதீசையும் நிராகரிக்க கூடும். மேற்கண்ட ஹதீஸை பீ.ஜே நிராகரித்து இருப்பார். இல்லையென்றால், இவரின் அடிப்படையை பின்பற்றுபவர்கள்   நாளை இந்த ஹதீஸை மறுப்பார்கள். அதெப்படி நபி (ஸல்) அவர்கள், அநியாயமாக " உனது தோட்டத்திற்கு நீ நீர் பாய்ச்சிக் கொள். அதன் பின்பும் தண்ணீரை தடுத்துக் கொள்!" என்று சொல்லி இருப்பார்??? என்று, இதற்கு நீதமாக நடப்பதை பற்றிய சில குர்'ஆன் வசனங்களை காட்டி, இந்த ஹதீஸை நிராகறிக்க கூடும். 

அப்படி தனது மனதுக்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஹதீஸ்களை நிறாகரிப்பவர்களுக்கு , அல்லாஹ் சொல்கிறான், “ ஆனால் உமதிரட்சகன் மீது சத்தியமாக, அவர்கள் தங்களுக்குள் ஏற்பட்ட சச்சரவில் உம்மை நீதிபதியாக ஆக்கி,  நீர் செய்யும் தீர்ப்பை தங்கள் மனங்களில் எத்தகைய அதிருப்தியையும் பெறாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாத வரையில், அவர்கள் விசுவாசிகளாக மாட்டார்கள்.' 
(அல் குர்'ஆன் 4:65) 

எந்த ஹதீஸ்கள், இவர் குர்ஆனோடு மோதுவதாக சொல்கிறாரோ, அவை எல்லாம் உண்மையில் இவர் சிந்தனையோடு தான் மோதுகிறது. ஏன் என்றால், அந்த ஹதீஸ்கள் எல்லாம் இவருக்கு வஹி மூலமாக வந்தவை இல்லை. இவை எல்லாம் 1430 ஆண்டுகளாக அறியபட்ட ஹதீஸ்களே !! இவருக்கு முரணாக தோன்றியதுபோல் மற்றவருக்கும் அவை முரணாக தோன்றி அவைகளை அவர்கள் நிராகரிக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் மூலமாக சரியான அறிவிப்பாளர்கள் வரிசையில் எந்த ஹதீஸ் வந்தாலும் அவைகளை, நம்பினார்கள். இவர் 'முரண்' என்று வாதாடும் ஹதீஸ்களை எல்லாம், நல்ல விதமாக விளக்கங்கள் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு தோன்றாத ஒன்று, இவருக்கு தோன்றுகிறது என்றால், ஒன்று,  “இவரை போல யாரும் புத்திசாலி இல்லை.ஹதீஸ் கலையில் இவர் முன்னர் வந்தவர்கள் எல்லாம் முட்டாள்கள்” என்று வரும். .  இல்லையென்றால், “ ஹதீஸ் கலையில் இருந்த நமது முன்னோர்களுக்கு இல்லாத ஒரு நோய் இவருக்கு உள்ளது “ என்று வரும். இவரை போல ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை , இவர் சொல்லும் அதே அடிப்படையில் மறுத்தவர்கள் 'முஅத்தசிலா' என்ற வழிகெட்டவர்களே. 

'விதி' சம்மந்தமாக, பீ.ஜே முன்பு பேசுகையில், 'விதி' என்பது இரண்டு விதமாக குர்'ஆனில் முறணாக சொல்லப்பட்டு இருக்கிறது.ஆனால், இந்த விஷயத்தில் நாம் 'புரிய முடியாது' என்ற முடிவுக்குதான் வரவேண்டும், என்று மிக அழகாக விளக்கம் சொல்லியுள்ளார். ஆகையால், குர்'ஆனில் ஒரு வசனம் இன்னொரு வசனதிற்கு மோதுவதாக தோன்றினால், 'எனக்கு புரிய வில்லை' என்ற பக்குவமான முடிவுக்கு வருகிறாரே தவிர,  'குர் ஆனை நிராகரிக்கும்' வகையில் அவர் போகவில்லை.இப்படிபட்ட ஒரு போக்கு ஏன் 'ஸஹீஹான ஹதீஸ்களுக்கு' அவர் கையாளவில்லை ???? 

இவர் குர்'ஆனை அனுகிய அதே பக்குவமான போக்கைதான் நம் ஹதீஸ் கலை வள்ளுனர்கள்,   ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் அனுகியுள்ளார்கள். நமக்கு புரியாமல் உள்ள ஹதீஸ்களை அவர்கள் தெளிவாக விளக்கியுள்ளார்கள்.. குர்'ஆன் ' எல்லா சஹாபிகளும்' ஏற்றுகொண்டது. ஆனால் ஹதீஸ்கள் அப்படி இல்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்றாலும், 'மனிதர்' என்ற வகையில் " ஏதாவது தவறு நடந்து இருக்கும்"  என்று வாதாடுகிறார் பீ.ஜே. ஆனால்,  'குர் ஆன்' எல்லா ஸஹாபிகளும் ஏற்று கொண்ட செய்திக் கூட, “ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள்”  மூலமாகத்தான், இவர் தெரிய முடியும். அந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூட,  இவர் சொல்லும் "ஏதாவது தவறு நடந்து இருக்கும்” என்றால் என்ன செய்வது ???

அல்லாஹ் தன் குர்'ஆனில் சொல்கிறான், “ நிச்சயமாக நாம் தான் திக்ரை (இவ்வேதத்தை ) (உம்மீது) இறக்கி வைத்தோம். நிச்சயமாக நாமே அதன் பாதுகாவலனாகவும் இருக்கின்றோம்.” 
(அல் குர் ஆன் 15:9) 

அல்லாஹ் இதில் , 'திக்ர்' என்று குர்'ஆனை தான் குறிக்கிறான். ஆனால் சுன்னாஹ்வின் பாதுகாப்பு இல்லாமல் குர் ஆனை பாதுகாக்க முடியாது. ஏன் என்றால், அல்லாஹ் குர் ஆனை மட்டும் இறக்கவில்லை. அந்த குர் ஆனை விளக்க ஒரு நபியை அனுப்பினான். 

அல்லாஹ் தன் குர் ஆனில் சொல்கிறான்,”தெளிவான அத்தாட்சிகளையும் வேதங்களையும் (அத்தூதர்களுக்கும் கொடுத்தனுப்பினோம்இ நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் , அவர்கள் சிந்திப்பவர்களாக ஆகி விடலாம் என்பதற்காகவும் உமக்கு திக்ரை (இவ்வேதத்தை ) நாம் அருளினோம்.”(அல் குர்'ஆன் 16:44)

நமக்கு அல்லாஹ் குர்'ஆனை மட்டும் அருளி, அதை நம் மனம் சொல்லும் போக்கில் புரிவதற்கு விட்டுவிடவில்லை. அதை விளக்க நமக்கு நபி (ஸல்) அவர்களின் வழிக்காட்டுதல் தேவை. அவர்களின் சுன்னாஹ் நாம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலமாக மட்டுமே தெரிய முடியும். இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை அல்லாஹ் பாதுக்காக்க வில்லை என்றால், 'வெறும் குர்ஆனை ' பாதுகாத்து என்ன பயன் இருக்க முடியும் ?? ஏன் என்றால், அஹ்லே குர் ஆன் கூட்டங்களுக்கும் பாதுகாக்க பட்ட குர்'ஆன் உள்ளது. அதனால், அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை. வெரும் குர்ஆனின் வார்த்தைகளை பாதுகாப்பது முழுமையான பாதுகாப்பு ஆகாது. முழுமையான பாதுகாப்பு என்றால்     குர்'ஆனின் வார்த்தைகளும் பாதுகாப்பாக இருக்க வேண்டும், அந்த வார்த்தைகளின் விளக்கங்களும் பாதுக்காப்பாக இருக்க வேண்டும். 

இதை நாம் கூட புரிந்துக்கொள்ள முடியும் என்றால், எல்லாம் தெரிந்த அல்லாஹ் நிச்சயமாக தெரிந்திருப்பான். அதனால் இவர் சொல்லும் விதமாக “ஏதோ ஒரு தவறு” ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் அறிவிப்பில் நிச்சயமாக நடந்திருக்க வாய்ப்பே இல்லை. நமது சிந்தனையை 'நம்பிக்கை கொள்ள ' உபயோகிக்கனுமே தவிர 'நிராகரிக்க ' உபயோகிக்க கூடாது.'அறிவிப்பை' விட 'சிந்தனைக்கு' முக்யத்துவம் அதிகம் கொடுத்ததால் தான் வழிகெட்ட பிரிவினர் உருவானார்கள். 

இமாம் அபுல் முதாஃபர் அஸ்ஸம்'ஆனி கூறினார், “ 'மார்கத்தின் அடிப்படை (இத்திபா) பின்பற்றுவதில் தான் உள்ளது ; அதற்குப்பின் தான் சிந்தனை ' என்பதுதான் சுன்னாஹ்வின் மக்களின் கூற்று.மார்கத்தின் அடிப்படை 'சிந்தனை'யாக இருந்ததென்றால், வேதங்களும்,  நபிமார்களும் இந்த படைப்பினங்களுக்கு தேவை இல்லை.மேலும் கட்டளைகளும் தடுத்தல்களும் அர்த்தம் இல்லாமல் போய் விடும்.யார் வேண்டுமானாலும் என்னவென்றாலும் செய்யலாம்.” ( அல் ஹுஜ்ஜா 85/A )

அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள் “ மார்கம், 'பகுத்தறிவின்' அடிப்படையில் தான் இருக்கும் என்றால் காலுரையிக்கு கீழ் பகுதி தான், மேல் பகுதியை விட  'மசஹ்' செய்வதற்கு மிகவும் தகுதியானது.' (ஆனால் அவ்வாரல்ல) (அபூ தாவூத், தாரதுக்னி) 

காலின் கீழ் பகுதியில் தான் அழுக்குகள் அதிகம் வரும். ஆனால் ஒருவர் ஒது செய்ய்யும்போது  காலுரையின் மேல் பகுதி மட்டுமே மசஹ் செய்ய வேண்டும். ஏன் என்றால் இதை தான் நமது தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கற்று தந்துள்ளார்கள். நமது புத்தியும் சிந்தனையும் என்ன சொல்லும் என்றால் 'கீழ் மஸஹ் செய்வது தான் சிறந்தது' என்று. ஆனால் இந்த இடத்தில் நமக்கு கிடைத்த அறிவிப்பை மட்டும் நாம் எடுத்து கொண்டு 'சிந்தனையை' உபயோகிக்க வில்லை. இதே போக்கில் தான் நமக்கு ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸ், நமது சிந்தனைக்கு முரணாக தோன்றினாலும் அதன் விளக்கங்களை  'தூய்மையான மனதோடு' தேடவேண்டும். நிச்சயமாக அப்படிப்பட்ட ஹதீஸ்களின் விளக்கங்கள் நமது முன்னோர்களால் விளக்கம் அளிக்க பட்டவையே. 

அல்லாஹ் நாம் அனைவரையும் 'பீ.ஜே' வின் தவறான சிந்தனையில் இருந்து பாதுக்காப்பானாக.


- Masoud Bin Ahmed
أحدث أقدم