மறுமணம் செய்யுங்கள்

- எஸ்.எச்.எம் இஸ்மாயில் ஸலபி 

அல்லாஹ் அனைத்தையும் சோடி சோடியாகவே படைத்துள்ளான். மனிதர்களையும் ஆண். பெண் என்று இரு பாலினராகப் படைத்துள்ளான். இதில் ஆணோ, பெண்ணோ எதிர்பாலினரின் துணையின்றி தனித்து வாழ்வதென்பது அசாத்தியமானதாகும்.

இவ்வாறே மனிதனது இயற்கை உணர்வுகளில் பாலியல் உணர்வு பலமானதாகும். அந்த உணர்வை அப்படியே அடக்கியொடுக்கிவிடுவது சர்வசாதாரணமானதொரு காரியமுமல்ல. அப்படி முற்று முழுதாக அடக்கி ஒடுக்கி விடவும் முடியாது. எனவேதான், இஸ்லாம் துறவறத்தைத் தடுத்து இல்லறத்தை ஏவியுள்ளது.

இந்தத் திருமண பந்தத்தில் இணையும் இருவரில் மனைவி மரணித்து விட்டால் கணவன் பெரும்பாலும் மறுமணம் செய்துகொள்கின்றான். இதனை சமூகம் குறைகாண்பதில்லை. ஆண்களும் இதனைத் தவறு என எண்ணுவதில்லை.(சில மனைவியை இழந்தகணவர்கள் மறுமணம் செய்வதற்கு அவர்களது பிள்ளைகள் தடையாக இருப்பதும் உண்டு)

ஆனால் கணவன் இறந்து விட்டால் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதில் பல சமூக சிக்கல்கள் காணப்படுகின்றன.

விதவைப் பெண் :

சில விதைவைப் பெண்கள் கணவன் மரணித்ததும் அத்தோடு தமது இல்லற வாழ்வு முடிந்து விட்டதாக எண்ணுகின்றனர். கணவனை இழந்த கவலையில் அவர் போனபின் எனக்கு இந்த உலகில் என்ன இன்பம் வேண்டிக் கிடக்கிறது. அவரோடு வாழ்ந்த அந்த சில நாட்களின் நினைவிலேயே என் காலத்தைக் கழித்து விடுவேன்' என்று செண்டிமென்டாகப் பேச ஆரம்பித்து விடுகின்றனர்.உண்மையில் ஆரம்பத்தில் உண்மையான உணர்வுடன் இப்படிக் கூறினாலும் காலம் செல்லச் செல்ல தமது எண்ணம் தவறு என்பதை தனிமை வாட்டும் போது நிச்சயமாக உணர்வர். ஆனால், அப்போது அந்த உணர்வை வெளியிட அவர்களுக்குச் சுருதி இருக்காது.

கணவனின் மரணத்தின் பின் மறுமணம் செய்வதைப் பல பெண்கள் தவறானதாக எண்ணுகின்றனர். முதலில் பெண்கள் இந்த எண்ணத்தை எண்ணெய் ஊற்றி எரித்துச் சாம்பலாக்க வேண்டும்.

இந்த இதழிலே நாம் உம்மு ஹராம் பின்து மில்ஹான் என்ற ஸஹாபிப் பெண்மணி பற்றி எழுதியுள்ளோம். இந்தப் பெண்ணின் கணவர் மரணித்த பின்னர் இவர் உப்பாததிப்னு ஸாமித் என்ற நபித்தோழருக்கு வாழ்க்கைப்படுகின்றார்.

இதழ் 50 இல் அறிமுகம் செய்யப்பட்ட இவரது சகோதரி உம்மு சுலைமின் கணவர் மாலிக் மரணித்தபின் அபூதல்ஹாவுக்கு வாழ்க்கைப்படுகின்றார்கள்.

இதழ் 51 இல் அறிமுகம் செய்யப்பட்ட உம்முஸலமாவின் கணவர் அபூஸலமா மரணித்தன்பின் அவர் நபி (ஸல்)அவர்களுக்கு மனைவியாகின்றார்.

எனவே, கணவன் இறந்த பின் மறுமணம் செய்வது தரக்குறைவான செயலன்று. அதுதான் பரிசுத்தமாக வாழ வழியாகவும் ஆண் துணையற்ற ஒரு பெண்ணுக்குரிய சரியான தீர்வாகவும் இருக்கும்.

இல்லறத்தில் இணைந்து மூன்று நான்கு மாதங்களுக்குள் கணவனை இழந்த ஒரு சகோதரி மார்க்க விளக்கம் பெற எனக்கு அடிக்கடி மடல் எழுதி வந்தாள். ஒரு மடலில் தனது குடும்பத்தில் தனக்கு மறுமணம் பேசுவதாகவும் பேசப்படுபவர் நல்லவர் என்றும் மறுமணம் செய்யலாமா என்றும் கேட்டு எழுதியிருந்தார். நான் வரவேற்று பதில் போட்டேன்.மறுமடலில் தான் இரண்டாமவரை மணந்தால் சுவனத்தில் எந்தக் கணவனுக்கு மனைவியாக இருப்பது எனக் கேட்டு எழுதியிருந்தார்.

அந்தப் பெண்ணுக்கு மறுமணத்தில் நாட்டமும் தேவையும் இருப்பதையும் அதேநேரம் வீணே மனதைப் போட்டுக் குழப்பிக்கொள்வதையும் அறிந்த நான்.

மறுமையில் யாருடன் வாழ்வது என்பதை அங்கு போய் முடிவு செய்யலாம். தற்போது இருக்கின்ற வாழ்க்கைக்குத் துணைவரை முடிவு செய்யுங்கள் என்று கடிந்து சூடாகவே பதில் போட்டேன்.

இப்படிப் பல பெண்கள் வாழ்வின் வசந்தத்திற்குள் நுழையுமுன்னரே வாழ்வை இழந்து, வாழும் ஆசையும் தேவையும் இருந்தும் போலியான எண்ணங்களுக்குக் கட்டுப்பட்டு போலி வாழ்க்கை வாழ்கின்றனர்.

இவர்கள் வெளி உலகத்தை எண்ணி கணவனின் மரணத்துடன் தனது பாலியல் உணர்வுகளும் அப்படியே அற்றுப்போய் விட்டது என்றாற்போல் வாழும் நிழல் வாழ்வை விட்டு நிஜவாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும். துணிவுடன் தமக்குரிய மறுமணத்திற்குத் தயாராக வேண்டும்.

வெட்கத்தை விட்டு வேதனையுடன் சொல்வதென்றால் இப்படியான சிலருக்கு அந்நிய ஆண்களிடம் அற்ப சுகத்தைத் தேடும் துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம்.

இப்படித் தவறான வழியில் தன் உணர்வுகளுக்கு வடிகால் தேடுவதைவிட நேர்மையாகத் துணிவுடன் மறுமணம் புரியலாம்.

குடும்பத்தவர்கள்:

பெண்ணுக்கு எதிரி பெண்தான். சில குடும்பங்களில் கணவன் மரணித்து விட்டால் குடும்பப் பெண்களே கூடி "இவள் கொடுத்து வைத்தது இவ்வளவுதான்' என தீர்மானம் செய்து அந்த பைலை அப்படியே குளோஸ் பன்னிவிடுவர்.எந்தப் பெண்ணாவது மறுமணம் புரியச் சம்மதித்தால்கூட "இவளெல்லாம் ஒரு பெண்ண? கணவன் கண்ணை மூடி ஒருவருடம் கூட ஆகவில்லை. அதற்குள் இவளுக்கு ஆம்பிளைச் சுகம் கேட்கிறது" என நாக்கூசாமல் நச்சரிப்பர். இவர்கள் இந்த நிலை தமக்கு ஏற்பட்டால் தனது நிலை எப்படி இருக்கும் என்று எண்ணிப்பார்ப்பதே இல்லை.

அடுத்து கணவன் இல்லாத பெண்களுக்கு மணம் முடித்துக் கொடுக்க சமூகம் தானாக முயற்சிக்க வேண்டும். குடும்பமும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். உமர்(ரழி) அவர்கள் தனது மருகன் மரணித்ததும் உஸ்மான் (ரழி) அவர்களிடம் வந்து தன் மகளை மணமுடிக்குமாறு கேட்கிறார்கள். அவர் முடிவு சொல்லாத போது தன்னை விட வயதில் மூத்த தனது நண்பர் அபூபக்கர் (ரழி) அவர்களிடம் தன் மகளை மணமுடிக்குமாறு கேட்கிறார்கள். ஈற்றில் அவர்களின் மகளை நபி(ஸல்)அவர்கள் மணக்கிறார்கள்.

உங்களது வாழ்கைகைத் துணையற்ற (கைம்) பெண்களுக்கும் ஆண்களுக்கும் திருமணம் செய்துவையுங்கள்" எனக் குர்ஆன் கூறுகின்றது. (24:32)

ஆண்கள் :

விதவைகளுக்கு வாழ்வளித்தல்" என்ற வழிமுறை முற்றாக மறக்கடிக்கப்பட்டு விட்டது. கன்னியருக்கு வாழ்வளிக்கவே கைக்கூலி கேட்கும் ஆண்பிள்ளை (அ)சிங்கங்கள் நிறைந்துள்ள சமூகம் எம் சமூகம் விதவா விவாகத்தை எங்கே நினைத்துப் பார்க்கப் போகின்றது.

ஆண்கள் வாழ்க்கைத் துணை தேவையான பெண்களை நாடிச் செல்ல வேண்டும். அபூஸல்மா மரணித்து உம்முஸல்மா(ரழி) இந்தா இருந்து முடிந்ததும் அபூபக்கர்(ரழி) அவர்கள் உம்முஸலமாவிடம் அவர்களை மணமுடிக்கத் தான் தயார் எனக் கூறினார்கள். உம்முஸலமா மறுக்க உமர்(ழி) அவர்கள் மணமுடிக்க முன்வந்தார்கள். அதனையும் மறுத்தபின் தபி (ஸல்) அவர்கள் உம்முஸலமாவை மணமுடித்தார்கள். இவ்வாறு தேவையுடைய பெண்களை நாடிச் சென்று வாழ்வளிக்க ஆண்கள் முன்வரவேண்டும்.சில ஆண்கள் தமது எல்லா வகையான. இச்சைகளையும் தூக்கியெறிந்து விட்டு விதவையையோ, விவாகரத்தான பெண்களையோ மணமுடிக்கத் துணிந்துவிட்டால் குடும்பமே கொந்தளிக்க ஆரம்பித்துவிடும். அதில் முன்னணிப் பங்கு பெண்களுடையதுதான்.

நீ மனைவியாக ஏற்றாலும் நான் மருமகளாக ஏற்கமாட்டேன் என்று தாயும். எங்களுக்கு இப்படியொரு மதினி தேவையில்லையென்று சகோதரிகளும் நிலத்திலிருந்து வானத்திற்கு எகிரி குதிக்க ஆரம்பித்துவிடுவார்கள். இந்தப் பெண்கள் தமக்கு வந்தால் மட்டும் தான் நியாயமாகச் சிந்திப்பார்கள். இல்லாவிட்டால் சுத்த சுயநலவாதிகளாகவே சிந்திக்கின்றனர். இவ்வாறு இருக்கின்ற எல்லா வகையான சமுதாய சங்கிலிகளையும் உடைத்து எறிந்துவிட்டு சமூகத்தில் தேவையுள்ளோர் மறுமணத்திற்குத் துணிய வேண்டும். அதுவே பாலியல் ரீதியான குற்றங்களைக் குறைத்திடும் ஓர் ஆரோக்கியமான சமூகத்திற்கு அடிப்படை இடும். துணையின்றி வாழும் பெண்களுக்குப் பலம் சேர்க்கும் ஆதரிப்பார் அற்ற அநாதைகளின் பிரச்சினையை ஓரளவு குறைக்கும்.

Previous Post Next Post