இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்)

இமாம் அபூஅப்துல்லாஹ் அஹ்மத் இப்னு ஹம்பல் ஹிஜ்ரி 164 ல் பக்தாதில் பிறந்தார். அவரது பாட்டனார் ஹம்பல் பின் ஹில்லாஸ் உமையாக் காலப் பிரிவில் குராஸானின் கவர்னராகப் பணிபுரிந்ததுடன், அவரது தந்தை அப்பாஸிய இராணுவத்தின் தளபதியாகவும் விளங்கினார். இமாம் ஹம்பல் தமது சிறுபிராயம் முதல் இயற்கையிலலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், சுதந்திர மனப்பான்மையுடையவராகவும் விளங்கினார். அக்கால அறிவினதும், நாகரீகத்தினதும் மத்திய தலமாக விளங்கிய பக்தாதில் அவரது இளமைக் காலம் கழிந்தது. மிகச் சிறு வயதிலேயே குர்ஆனை மனனம் செய்த அவர்கள் பதினாலாவது வயதில் மொழியியலில் புலமை பெற்று விளங்கியது மட்டுமன்றி, கணிதம், தத்துவம், தஸவ்வுப் ஆகிய துறைகளிலும் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்கள். இமாம் அபூயூஸுபின் கீழ் ஹதீஸ் கலையைக் கற்க ஆரம்பித்த அவர்கள், ஏனைய பல ஹதீஸ் கலை அறிஞர்களோடு தொடர்பு கொண்டு அதனை ஆழமாகக் கற்றார்கள். ஈராக்கின் சட்டத்துறை அறிஞர்களிடம் பிக்ஹ் கலையைக் கற்ற அவர்கள் இமாம் ஷாஃபிஈ ன் மாணவராகவும் சில காலம் விளங்கினார்கள். ஹதீஸ் கலையைக் கற்பதில் அவர் காட்டிய தீவிர ஆர்வமானது, ஸிரியா, ஹிஜாஸ், எமன், கூபா, பஸரா ஆகிய பல நகரங்களுக்கு அவரை நீண்ட பயணங்களை மேற்கொள்ளச் செய்தது. பாரசீக மொழியிலும் பரிச்சயமுடையவராக அவர்கள் விளங்கினார்கள். குறிப்பாக, ரஸூல் (ஸல்) அவர்களின் ஹதீஸ் - சுன்னாவில் மிக அக்கறை கொண்டிருந்த அவர்கள் ஹதீஸ்களைத் திரட்டுவதில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார்கள். இமாம் ஷாஃபிஈ னதும் மாணவராக விளங்கியதுடன், இமாம் மாலிக்கின் சட்ட விளக்கங்களை ஆதரிக்கக் கூடியவராகவும் விளங்கினார்கள். குர்ஆன், ஹதீஸ் ன் மூல வார்த்தைகளுக்கே (நஸ்) முக்கியத்துவம் அளித்த அஹ்மத் இப்னு ஹம்பல், சுய அபிப்ராயத்தின் அடிப்படையில் ('ரஃய்' யைப் பயன்படுத்தி) சடட விளக்கம் அளிப்பதைக் கடுமையாக விமர்சித்தார்கள்.

இமாம் ஷாஃபிஈ, தாவூத் ழாஹிரி ஆகியோரின் மாணவராக விளங்கி, இமாம் மாலிக்கின் சட்ட விளக்கங்களில் ஈடுபாடு கொண்டு, காலப் போக்கில் சிறந்த சட்டக் கலை மேதையாக மாறிய அஹ்மத் இப்னு ஹம்பல் தமது நாற்பதாவது வயதில் தமக்கென ஒரு தனிச் சட்ட மரபைத் தோற்றுவித்து, அத்துறையில் விரிவுரைகள் நிகழ்த்தும் பணியை ஆரம்பித்தார்கள். ஒரு சட்ட அறிஞர் என்ற வகையில் அவர்களது பணி இக்காலப் பிரிவிலேயே ஆரம்பமாயிற்று.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் பக்திபூர்வமான எளிய, தூய்மையான வாழ்க்கையை நடத்தினார்கள். மற்றவர்களின் உதவியை நாடாது, கடுமையான உழைத்து பொறுமையோடு வாழ்ந்தார்கள். ஆட்சியாளர்களிடமிருந்தோ, அதிகாரிகளிடமிருந்தோ எத்தகைய அன்பளிப்பையும் பெற மறுத்த அவர்கள் நாளாந்த தேவைகளுக்குக் கடுமையான உடல் உழைப்பைக் கூட மேற் கொள்ளத் தயங்கவில்லை.

இமாம் தஹபீ தமது வரலாற்று நூலில் பின்வரும் சம்பவத்தைக் குறிப்பிடுகின்றார் :
இமாமவர்கள் ஒரு தடவை மக்காவில் ஸுப்யான் பின் உயைனா வின் வீட்டில் தங்கினார்கள். ஒருநாள் திடீரென அவரைக் காணவில்லை. பல நாட்கள் தேடுதல் நடத்தியும் அவரைப் பற்றி எதுவும் அறிய முடியவில்லை. இறுதியில் அவர் ஓர் அறையில் அடைபட்டிருக்கக் காணப்பட்டார்கள். அதற்கான காரணத்தை அவரது தோழர்களில் ஒருவர் வினவிய போது, அவரது ஆடைகள் திருடப்பட்டு விட்டதாகவும், அதனால் மக்கள் மத்தியில் ஆடையின்றி வர முடியாமலிருப்பதாகவும் கூறினார். அந்தத் தோழர் ஒரு தொகைப் பணத்தைக் கொடுத்து அதனை அன்பளிப்பாக அல்லது கடனாகப் பெற்றுக் கொள்ளும்படி கேட்ட அதற்கு மறுத்து விட்டார். இறுதியில் தனக்கு எதனையாவது எழுதித் தந்து விட்டு, அதற்குக் கூலியாகப் பணத்தைப் பெற்றுக் கொள்ளும்படி கேட்கவே, இமாம் அந்த அறையிலேயே அடைபட்ட நிலையில் அதனை எழுதிக் கொடுத்து, அதற்கான கூலியைப் பெற்று, அதனைக் கொண்டு தமது உடைகளை வாங்கிக் கொண்டார்.

இமாம் ஜவ்ஸி அவர்கள், இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ஏறக்குறைய நூறு அறிஞர்களிடம் அறிவைப் பெற்றார் எனக் குறிப்பிடுகின்றார். ஆனால் அவரது சிந்தனைப் போக்கில் மிகச் செல்வாக்கை ஏற்படுத்தியவர்கள் இருவராவார். அவர்கள் தமது பதினாறாவது வயதில் ஹாபிஸ் ஹாஷிம் பின் பஷீர் என்பவரின் மாணவராக அமர்ந்து, அவரின் கீழ் ஐந்து வருட காலம் ஹதீஸ் கலையைக் கற்றார்கள். பிற்காலத்தில் இமாம் ஷாஃபிஈ ன் மாணவராகவும் பல வருட காலம் பயின்றார்கள். இவ்விருவருமே அவரது ஆசிரியர்களில், அவரது சிந்தனைப் போக்கில் திவிர செல்வாக்குச் செலுத்தியுள்ளோராக விளங்குகின்றார்கள். ஆனால் இவர்கள் தவிர ஸுப்யான் பின் உயைனா, வகீ பின் ஜர்ராஹ், எஹ்யா பின் ஸஈத் போன்றவர்களிடமும் இமாம் அவர்கள் தமது அறிவைப் பெற்றார்கள்.

அவர்கள் வாழ்ந்த காலம் அரசியல் பிரச்சினைகள் நிறைந்த காலமாக அமைந்தது. அப்பாஸியக் கலீபா அமீனுக்கும் மஃமூனுக்குமிடையில் நிகழ்ந்த உள்நாட்டு யுத்தங்கள், அராபியருக்கு எதிரான பாரசீகர்கள் எழுச்சி என்பன அரசியல் சமூக வாழ்வில் பல சிக்கல்களைத் தோற்றுவித்திருந்தன. இமாம் ஹம்பல், இந்த அரசியல் பூசல்களிலிருந்து ஒதுங்கி, அமைதியாக இஸ்லாமிய அறிவுப்பணியில் ஈடுபட்டார்கள்.

இமாம் ஹம்பல் அவர்கள் தமது சட்ட விளக்கங்களில் குர்ஆனோடு, சுன்னாவுக்கும் நபித்தோழர்களின் நடைமுறைகளுக்கும் சிறப்பிடமளித்தார்கள். அவர்களது சட்ட அடிப்படை சுன்னா, ஸஹாபாக்களின் நடைமுறை ஆகியவற்றின் நிழலில் சட்ட விளக்கமளிப்பதாக அமைந்தது. அவரது சட்ட மரபில் இவ்விரண்டும் முக்கிய இடத்தைப் பெற்றன. ஸஹாபாக்கள், தாபிஈன்கள் சட்ட விளக்கங்கள் அனைத்தையும் தமது அபார ஞாபக சக்தியின் காரணமாக நினைவில் வைத்திருந்தார்கள்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலை ஒரு சட்ட அறிஞராகவன்றி ஹதீஸ் கலை அறிஞராக நோக்குவோரும் உளர். 'பிஹ்ரிஸ்த்' என்னும் நூலின் ஆசிரியர் இப்னு நதீம், இமாம் ஹம்பலை இமாம் புகாரீ, இமாம் முஸ்லிம் போன்ற ஹதீஸ் கலை மேதைகளின் வரிசையில் உள்ளடக்கியுள்ளார். ஆனால் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ஹதீஸ் கலை அறிஞர் மட்டுமன்றி, தனக்கென உரிய தனிப்பட்ட இயல்புகளைக் கொண்ட ஒரு சட்ட மரபைத் தோற்றுவித்த சட்ட அறிஞருமாவார். இமாம் ஷாபிஈ ன் மாணவராக அவர் அமைந்ததால், ஷரீஆ சட்டங்களை ஆக்குவதில் தனக்கென சில விதிமுறைகளை வகுத்து, அவற்றினடிப்படையில் செயலாற்றினார்கள். அவரது சட்ட விளக்கங்களுக்கு மூலாதாரமாகக் குர்ஆன், சுன்னா, ஸஹாபாக்களின் சட்டத் தீர்ப்புக்கள் (ஃபதாவா) ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். எனவே, இமாம் அஹ்மத் இப்னு ஹம்பலின் சட்ட மரபு ஹதீஸினதும் ஸஹாபாக்களினது விளக்கங்களினதும் அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட சட்ட மரபாகும் என் நாம் கூறுவது பொருத்தமாகும்.

இமாம் ஹம்பல் தமது சட்ட விளக்கங்கள் எழுத்துருவில் தொகுப்பதை ஆரம்ப காலத்தில் விரும்பவில்லை. ஆனால் காலப்போக்கில் அவர்களது மாணவர்களும் ஏனையோரும் தங்களது சட்டத் தீர்ப்புக்களைத் தொகுப்பதைப் பிற்காலத்தில் ஆதரித்தார்கள். உதாரணமாக, இஸ்ஹாக் பின் மன்ஸூர் என்பார் இமாம் அவர்களின் சட்ட விளக்கங்களைத் தொகுத்திருப்பதைக் கண்டு அதனைப் பாராட்டினார்கள். ஆனால், இமாம் அவர்கள் தாமாகவே எந்த ஒரு சட்ட நூலையும் தொகுக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர்களது நூலான, 'முஸ்னத்' ஹதீஸ்களின் தொகுப்பாகும். அவரது சட்ட விளக்கங்களைப் பொதிந்துள்ள நூல்கள் அனைத்தும் அவரது சட்ட மரபான ஹம்பலி மத்ஹபைப் பின்பற்றிய சட்ட அறிஞர்களால் தொகுக்கப்பட்டவையாகும்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் சட்ட விளக்கங்களில் ஐந்து மூலாதாரங்களைக் கையாண்டதாக இப்னுல் கையிம் குறிப்பிடுகின்றார். முதலாவது, குர்ஆன் ஹதீஸின் மூலவார்த்தைகளை உள்ளடக்கிய 'நஸ்' என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். இரண்டாவது, ஸஹாபாக்களின் சட்ட விளக்கங்களுக்கு இடமளித்தார்கள். ஆனால் வெளிப்படையாக குர்ஆனினதோ, ஹதீஸினதோ சட்ட விளக்கங்களுக்கு முரணாக அமைந்தால், குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முக்கியத்துவமளித்தார்கள். உதாராணமாக, முஆவியா, முஆத் பின் ஜபல் ஆகியோர் ஒரு முஸ்லிமல்லாதவர் மரணிக்கும் பட்சத்தில் அவரால் விட்டுச் செல்லப்படும் சொத்தை முஸ்லிம்களுக்குக் கொடுக்கப்படல் வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார்கள். ஆனால் இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல், ஹதீஸ் இதற்கு முரணாக அமைவதால் இக்கருத்தை நிராகரித்தனர். (இஃலாமுல் முவக்கிஈன் 1,22).

இமாம் ஹம்பல் பலவீனமாக ஹதீஸ்களையும் - ஹதீஸ் முர்ஸல் உட்பட, சில போது ஏற்றுக் கொண்டார். 'நஸ்' இல் எத்தகைய தெளிவான விளக்கமும் இல்லாத சந்தர்ப்பத்தில் கியாஸைக் கையாண்டார். மிக அவசியமான சந்தர்ப்பங்களிலேயே கியாஸ் பயன்படுத்தப்பட்டது.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் ஆழ்ந்த இறைபக்தியும், சத்தியத்தை நேசிக்கும் உயர் பண்பும், கொள்கையில் உறுதியும் மிக்கவராகவும் விளங்கினார்கள். குர்ஆன் படைக்கப்பட்டது என்ற கொள்கையை எதிர்த்து நின்று அப்பணியில் பயங்கரமான சோதனைகள் எதிர் நோக்கினார்கள்.

இமாம் அஹ்மத் இப்னு ஹம்பிலின் சட்ட மரபின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் அவரது மாணவர்கள் அரும்பணி புரிந்தனர். அவரது புதல்வர்களான ஸாலிஹ் (மரணம் ஹிஜ்ரி 266), அப்துல்லாஹ் (மரணம் ஹிஜ்ரி 296) ஆகிய இருவரும் இத்துறையில் சிறப்பிடம் பெறுகின்றனர். அப்துல்லாஹ் இமாம் ஹம்பலின் 'முஸ்னதை'ப் பதிப்பித்தவராவார். இம் மத்ஹபைப் பின்பற்றிய அப்துல் மாலிக் யெமானீ (274), இஸ்மாயீல் கிர்மானீ (280), இப்னு குதாமா (620), இப்னு தைமிய்யா (621-728), இப்னுல் கைய்யிம் ஜவ்ஸி (751) ஆகியோர் இம் மத்ஹபின் வளர்ச்சிக்கும் பரவலுக்கும் காரணமாக அமைந்தார்கள்.
أحدث أقدم