– எஸ்.எச்.எம். இஸ்மாயில் (ஸலபி)
“ஹஜ் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளில் ஒன்றாகும். கலிமா, தொழுகை, நோன்பு என்பன உடலுடன் மட்டும் சம்பந்தப்பட்ட வணக்கங்களாகும். “ஸகாத்” பணத்துடன் மட்டும் சம்பந்தப்பட்ட இபாதத்தாகும். ஆனால் ஹஜ் பணத்தாலும், உடலாலும் செய்யப்படும் தியாகமாகும். எனவே ஹஜ் ஏனைய இபாதத்களை விடச் சற்று மாறுபட்ட தன்மையைக் கொண்டதாகும்.
ஹஜ் கடமை:- மக்காவுக்குச் சென்று இந்தக் கடமையைச் செய்யத் தக்க பொருள் வளமும், உடல் நலமும் உள்ளவர்கள் மீது கட்டாயமானதாகும். எனவே உலக நாடுகளிலிருந்து இலட்சோப இலட்சம் சக்திபடைத்த முஸ்லிம்கள் சமத்துவமாக, சகோதரத்துவமாக தியாகத்துடன் ஹஜ் கடமைக்காக மக்காவில் அணி திரள்கின்றனர்.
தியாகம்:- இந்த ஹஜ் கடமை அதைச் செய்வோரிடம் தியாகத்தை எதிர்பார்க்கின்றது. இப்றாஹீம் நபி, இஸ்மாயில் நபி, அன்னை ஹாஜறா ஆகியோரது தியாகத்தை நினைவூட்டும் பல அம்சங்கள் ஹஜ்ஜுடன் சம்பந்தப்பட்டுள்ளது. ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத் திருநாளாகத்தான் கொண்டாடப்படுகின்றது. எனவே இந்த ஹஜ் கடமையைச் செய்யும் ஹாஜிகள் தம்மிடம் தியாகத் தன்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும். முஸ்லிம் சமுதாயத்தின் செல்வந்தர்களிடம் சமுதாய விழிப்புணர்வு எனும் தாகத்துடன் கூடிய தியாகச் சிந்தனை ஏற்பட்டால் சமுதாயத்தில் நல்ல பல மாற்றங்களைக் காணலாம்.
கொள்கை உறுதி:- இப்றாஹீம், இஸ்மாயில், அன்னை ஹாஜறா ஆகியோரது கொள்கை உறுதியைப் பறைசாட்டும் நிகழ்வாகவும் ஹஜ் திகழ்கின்றது. அல்லாஹ் அறுக்கச் சொன்னதும் மகன் என்று பாராமல் தந்தை அறுக்கத் துணிகின்றார். மகனும் எந்த மறுப்போ, தயக்கமோ இன்றி அந்தக் கட்டளைக்குப் பணிகின்றார். அல்லாஹ் சொன்னதைச் செய்வது என்பதிலும், அதில் சுய விருப்பு-வெறுப்புகளுக்கு இடம் கொடுப்பதில்லை என்பதிலும் எத்தகைய கொள்கை உறுதியுடன் இந்தக் கோமான்கள் திகழ்ந்துள்ளனர் என்பதை இது எடுத்துக் காட்டுகின்றது. ஹஜ் செய்யும் அல்லாஹ்வின் விருந்தினர்கள் இந்தக் கொள்கை உறுதியைத் தம் மனதில் ஆழமாய்ப் பதித்துக்கொள்ள வேண்டும். எமது சமூகத்தில் உள்ள எத்தனையோ பணம் படைத்தவர்கள் தமது செல்வத்தை அநாகரிக அரசியலுக்காகவும், ஆபாசம் நிறைந்த “கலை-கலசாரம்” என்ற பெயரில் நடக்கும் கலாசாரக் கொலை நிகழ்ச்சிகளுக்கும் வாரி வழங்குவதைப் பார்க்கின்றோம். குர்ஆன்-ஸுன்னாவுக்கு எந்நிலையிலும் கட்டுப்படுவேன். அதற்கு மாற்றமான நடவடிக்கைகளுக்கு எக்காரணம் கொண்டும் உதவ மாட்டேன் என்ற உறுதி எமது செல்வந்தர்களிடம் உருவாக வேண்டும்.
இரக்கம் பிறக்கட்டும்:- “ஹஜ்” என்பது மனிதனிடம் நடத்தை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். எனவேதான் அம்மாதங்களில் யார் தன் மீது ஹஜ்ஜை விதியாக்கிக் கொண்டாரோ அவர் ஆபாசமான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம்! பாவச் செயல்களில் ஈடுபட வேண்டாம்! தர்க்கங்களில் ஈடுபட வேண்டாம் எனக் குர்ஆன் கூறுகின்றது.
சமூகத்தில் பெரும் பெரும் குற்றச் செயல்களை சமூக அந்தஸ்த்து மிக்கவர்கள் துணிவுடன் செய்கின்றனர். பணம் இருக்கிறது என்ற திமிரில் அடுத்தவர்களை ஆள் வைத்து அடிப்பது, சட்டத்தையும் அரசியல் பலத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திப் பலவீனமானவர்களைப் பழி தீர்ப்பது, தொழிலாளர்களின் உரிமைகளைப் பறிப்பது போன்ற அடாவடித்தனங்களில் ஈடுபடுவோர் அதிகம் உள்ளனர்.
ஹஜ் செல்வந்தர்களின் இதயத்தில் இரக்கத்தை ஏற்படுத்த வேண்டும். தம்மை விடக் கீழானவர்கள் மீது அன்பையும், கருணையையும் பொழியும் நல்ல உள்ளங்களை உருவாக்க வேண்டும்.
ஈகை மலரட்டும்:- ஹஜ் பெருநாளை “ஈகைத் திருநாள்” என்று கூறுகின்றோம். இப்றாஹீம் நபி தனது மகனை அறுக்கத் துணிந்ததை நினைவூட்டும் முகமாகக் கால்நடைகளை அறுத்து வறியவர்களுக்கு வழங்குகின்றோம். இந்த ஈகைக் குணம் ஹஜ்ஜாஜிகளிடம் ஏற்பட வேண்டும். தமக்கு அல்லாஹ் வழங்கிய அருளில் வறியவர்களையும் பங்குகொள்ளச் செய்யும் பக்குவம் பிறக்க வேண்டும்.
உள்ளத்தின் கண்கள் திறக்கட்டும்:- முஸ்லிம் சமூகத்தின் தேவைகள் பல. முஸ்லிம் சமூகத்தின் நலிவடைந்த நிலை இஸ்லாத்தையும், முஸ்லிம் உம்மத்தையும் தப்பும் தவறுமாகப் பிற மக்கள் கணிக்கும் நிலையை உருவாக்கியுள்ளது.
இந்த சமுதாயத்தின் கல்வி நிலை வீழ்ச்சியடைந்துகொண்டே செல்கின்றது. சமூகத்தின் பண்பாடுகளும், பழக்க-வழக்கங்களும் மாறிக்கொண்டு செல்கின்றது. வறுமை சமூகத்தை வாட்டி வதைக்கின்றது. பாரிய பொருளாதாரப் பிரச்சினைகள் உள்ள அடி மட்ட மக்களின் தொகை அதிகரித்துக்கொண்டு செல்கின்றது. விதவைகள், அநாதைகள் மற்றும் ஏழைகளின் நடத்தைகளில் வறுமை பல பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. போதைக்கும், ஆபாச சினிமாவுக்கும் அடிமைப்பட்ட இளம் சமூகம் உருவாகி வருகின்றது. ஒட்டுமொத்தமாகக் கூறுவதென்றால் முஸ்லிம் உம்மத்தின் அத்திவாரங்கள் ஆட்டங்கண்டு வருகின்றன; ஆணிவேர்கள் அரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையை நீக்கப் பாரிய சமூகப் போராட்டம் ஒன்றை முன்னெடுக்க வேண்டியுள்ளது.
குர்ஆன்-ஸுன்னா எனும் சத்தியப் பிரசாரம் சமூகத்தின் அடி மட்டம் முதல் அழுத்தமாகப் பிரசாரம் செய்யப்பட வேண்டும்.
கல்வியின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டுக் கல்வி விழிப்புணர்வை ஊட்ட வேண்டும். கல்விக்குத் தடையாக உள்ள கட்டுப்பாடுகள் தகர்க்கப்பட வேண்டும். கற்கும் ஆற்றலும், ஆர்வமும் உள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். அவர்களின் கல்விக்குத் தடையாக இருக்கும் பொருளாதாரத் தடைகள் அகற்றப்பட வேண்டும்.
விதவைகள், அநாதைகள் போன்ற பலவீனமானவர்களின் தேவைகள் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். இந்தச் சமய-சமூக மாற்றத்திற்கும் நல்ல மனம் கொண்ட செல்வந்தர்களின் பணம் அர்ப்பணமாக வேண்டும். பணம் படைத்தவர்கள் தமது உள்ளத்தால் சமூகத்தைப் பார்க்க வேண்டும். உள்ளத்தின் கண்கள் திறந்தால் சமூகத்தின் அவலநிலை அவர்களுக்குப் புரியும். அதை நீக்க வேண்டும் என்ற ஏக்கமும் அவர்கள் இதயத்தில் பிறக்கும்.
இதயத்தில் இரக்கம் பிறக்கட்டும்:- இல்லாதவன் தன் வறுமையிலும் பொறுமையைக் கடைப்பிடித்து அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணி வாழ வேண்டும். “இருப்பவன் இல்லாதவனுக்குப் “பொறுமையுடன் வாழ வேண்டும்!” என்று புத்தி சொன்னால் மட்டும் போதாது. இருப்பதில் கொஞ்சம் கொடுத்துப் பொறுமை பற்றியும் கூற வேண்டும்” என்று குர்ஆன் சொல்கின்றது.
இல்லாதவன் பொறுமையைக் கடைப்பிடிப்பதும், இருப்பவன் இரக்கம் காட்டுவதும் சுவனம் செல்வதற்கான வழிகளில் ஒன்றாகும். எனவே பணம் படைத்தவர்கள் இதயத்தில் இரக்கம் பிறக்க வேண்டும். அந்த இரக்கம் சமூகத்தில் உறக்கம் களைத்து உயர்வைத் தர வேண்டும்.
ஹஜ் செய்யும் ஹாஜிகளிடம் ஹஜ் என்பது நல்ல மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். அவர்களிடம் அல்லாஹ்வுக்கும், ரஸூலுக்கும் கட்டுப்படும் இயல்பை வளர்க்க வேண்டும். இந்த மாற்றங்கள் இல்லாமல் வெறுமனே சென்றோம்-வந்தோமென்று இருந்தால் அந்த ஹஜ்ஜின் நிலை குறித்தே சிந்திக்க வேண்டியதாகி விடும்.
எனவே இந்த ஹஜ், ஹாஜிகளிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தி சமூகத்தின் உயர்வுக்கு அடித்தளமாக அமைய அனைவரும் பிரார்த்திப்போமாக!