தொழுகைக்குப்பின் தனியாக இருந்து துஆ செய்வோம்.

ஐவேளை தொழுகைகளுக்குப் பிறகு தனியாக இருந்து ஓதவேண்டிய திக்ருகள் அவ்ராதுகள் பற்றி நபி (ஸல்) அவர்கள் நிறையவே கற்றுத் தந்திருக்கிறார்கள். தொழுகை முடிந்ததும் இமாம் உட்பட ஒவ்வொருவரும் அந்த திக்ருகளை அவ்ராதுகளை அமைதியாக தனித்தனியாக ஓதிக் கொள்ளவேண்டும்.
 
நபி(ஸல்) அவர்களின் இந்த வழிமுறைக்கு மாற்றமாக தொழுகை நடாத்தக்கூடிய பள்ளிவாசல் இமாம், ஐவேளை தொழுகைகளுக்குப் பிறகு ஐந்து வகையான துஆக்களை அரபியில் தயாரித்து வைத்து ஓதிவருகிறார். மக்களும் அதற்கு ஆமீன் கூறிவருகிறார்கள்.

இமாம் என்ன துஆ ஓதுகிறார்? எதைப் பற்றி துஆ கேட்கிறார்? அதன் பொருள் என்ன? யாருடைய நிலையை அறிந்து யாருக்காக துஆ கேட்கிறார.? அவருடைய கஷ்டத்தை மனதில் வைத்து துஆ கேட்கிறார?  அல்லது பள்ளிககு வருகைதருகின்ற ஒவ்வொருவருடைய மனநிலையையும் தேவையையும் கேட்டறிந்து துஆ கேட்கிறாரா? அவர் கேட்கும் துஆவுக்கு ஆமீன் சொன்னால் அல்லாஹ் அங்கீகரிப்பானா? அதற்கு உத்தரவாதம் உண்டா?

நபி(ஸல்) அவர்கள் ஐவேளை தொழுகைக்கும் பிறகு இப்படியான துஆவை தயாரித்து ஓதிவந்தார்களா? சஹாபாக்கள் ஆமீன் கூறி வந்தார்களா? அந்த துஆக்கள் ஹதீஸ் கிரந்தங்களில் பதிவாகியுள்ளனவா?பதிவாகியிருந்தால் அந்த துஆக்களை ஐவேலை தொழுஐகக்குப்பின்னால் ஓதலாம் அல்லவா?   என்பது பற்றி எதுவும் தெரியாமல் மக்களும் ஆமீன்! ஆமீன்!என்று சொல்லிவிட்டு போகிறார்கள். 

பள்ளிக்கு தொழ வரக்கூடிய நூற்றுக் கணக்கான மக்களுக்கும் ஆயிரக்கணக்கான பிரச்சினைகள் தேவைகள் இருக்கும். ஒவ்வொருவருடைய பிரச்சினைகளும் வெ வ்வேறானதாக இருக்கும. அவரவர் தன்னுடைய பிரச்சனைகளை விளங்கி சொல்லவருகின்ற விடயஙகளை நன்குபுரிந்து தனக்கு தெரிந்த மொழியில் உள்ளம் உருகி அல்லாஹ்விடம் முறையிட்டு பிரார்த்திக்க வேண்டும்.
 
என்னுடைய கஷ்டங்கள் என்ன? தேவைகள் என்ன என்று எனக்கு மட்டும்தான் தெரியும். மற்றவருடைய கஷ்டங்கள் என்ன? துன்பங்கள் என்ன என்று எனக்குத் தெரியாது. அவரவர் பிரச்சனைகளை அவரவர்தான் அல்லாஹ்விடம் முறையிடவேண்டும்.

தொழுகை நடாத்தக் கூடிய இமாமின் பிரச்சினைகள் என்ன? என்று தொழ வரக்கூடிய மக்களுக்குத் தெரியாது. தொழுகைக்கு வந்த மக்களின் பிரச்சினைகள் என்ன என்று இமாமுக்கும் தெரியாது. இந்நிலையில் இமாம் ஒருசில வசனங்களை அரபியில் தயார்படுத்தி கூற மற்றவர்கள் ஆமீன் சொலலவேண்டும் என்று கூறுவது அறிவுடமையாகுமா?  

பணத்தை பறிகொடுத்து.... 
பிள்ளையை பறிகொடுத்து....
தாய் தகப்பனை இழந்து 
தொழிலை இழந்து  
சொத்தை இழந்து
மனைவியை ஆஸ்பத்திரியில் அனுமதித்து
அனியாயத்திற்கு ஆளாகி  
வறுமையில் தள்ளாடி
சோற்றுக்கு வழியின்றி
ஏழ்மையில் உழன்று  
குடும்ப பிரச்சனையில் சிக்குண்டு-
சமூக பிரச்சனையில் அல்லல்பட்டு நொந்துப் போன மனதுடன் பள்ளிக்கு வந்து இமாம் கூறும் துஆவிற்கு ஆமீன் கூறினால் சரியாகுமா? 
அல்லது தானாக தன்னுடைய பிரச்சனைகளை அல்லாஹ்விடம் முறையிட்டு தனது மனதில் உள்ள பாரத்தை இறக்கி விடுவது பொறுத்தமாகுமா?  
 
துஆ கேட்பது என்பதும் ஒரு வணக்கமாகும். ஒவ்வொருவரும் அவருக்குரிய வணக்கத்தை அவருக்கு தெரிந்த மொழியில் பணிவுடன் அச்சத்துடன் செய்கின்ற போது தான் மனதுக்கு அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.

தாழ்ந்த குரலில் மனம் உருகிய நிலையில் எதைகேட்கிறோம் என்று அறிந்த நிலையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்த நிலையில் துஆ கேட்கும் போது தான் அந்த வணக்கம் அர்த்தமுள்ளதாக இருக்கும்.

எனவே நபி(ஸல்) காட்டித்தராத கற்றுத்தராத இந்த கூட்டுதுஆ முறையை தவிர்த்து தனித்தனியாக பிரார்த்திப்போமாக!

-இம்தியாஸ் யூசுப்
أحدث أقدم