ஹதீஸ் துறையில் புகழ் பெற்ற பெண் மேதை முஹத்திதா கரீமா அல் மர்வஸிய்யா ரஹிமஹல்லாஹ்.

கரீமா அல் மர்வஸிய்யா (ரஹ்) என்று வரலாற்றில் அறியப்பட்ட கரீமா பின்த் அஹ்மத் பின் முகம்மத் பின் ஹாதம் அல் மர்வஸிய்யா அவர்களின் புணைப் பெயர் உம்முல் கிராம் என்பதாகும். 

ஹிஜ்ரி 363 ம் ஆண்டு பிறந்தார்கள்
முஹத்திதா கரீமா அவர்கள் மிகவும் பிரபல்யமான ஹதீஸ் துறை மேதையாகவும் பல இமாம்களின் ஆசிரியையாகவும் இருந்துள்ளார்கள். 

முஹத்திதா கரீமா அவர்களிடம் மாணவர்களாக கல்வி கற்ற மிகப்பெரும் இமாம்கள் ஹதீஸ் கலை நிபுணர்களின் வரிசையில்... 

1- ஹதீஸ் கலை அடிப்படை விதிகளில் நிபுணத்துவமிக்க உலக பிரசித்தி பெற்ற தாரிஹ் பக்தாத் என்ற வரலாற்று நூலின் ஆசிரியரான அல்லாமா அல் ஹாபிழ் ஹதீப் அல்பக்தாதி ரஹ். 

2- இமாம் அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் நஸ்ர் அல் ஹுமைதி ரஹ். 

3- பிரபல்யமான வரலாற்றாசிரியர் இமாம் அபுல் மஹாஸின் அல் மிஸ்ரி.

4- பிரபல்யமான ஹதீஸ் கலை மேதை அல் முஹத்தித் அல் ஹாபிழ் இமாம் ஸன்ஆனி. 

5- அல்லாமா அல் ஹாபிழ் அபூ தாலிப் அல் ஹுஸைன் பின் முஹம்மத் அஸ்ஸைனபி 
போன்றோரை குறித்து வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது . 

மக்காவில் வசித்து வந்த அவர்கள்
புஹாரி ஷரீபை கற்பிப்பதிலும் அதனை பிறருக்கு ரிவாயத் செய்வதிலும் மிகவும் பிரபல்யமடைந்திருந்தார்கள்
இமாம் ஹதீப் அல் பக்தாதி அவர்களும் இவர்களிடமே புஹாரி ஷரீபை படித்துள்ளாரகள். 

ஹதீஸ் கலைக்காகவே தனது வாழ் நாளை அற்பணித்திருந்த இவர்கள்
திருமணம் கூட முடிக்கவில்லை அல்லாமா இமாம் தஹபி ரஹ் அவர்கள் தனது அல் இபர் பீ ஹபரி மன் குغபிர் என்ற கிரந்தத்தில் பாகம் 3 - 254 ம் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்கள். 

ஹதீஸ் கலை மேதை 
கரீமா அல் மர்வஸிய்யா (ரஹ்)
அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி அதிகமான முஹத்திஸீன்களும் இமாம்களும் எழுதியுள்ளனர்... 

இமாம் இப்னுல் அதீர் அவர்கள் அல்காமில் என்ற கிரந்தத்திலும்
இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் முன்தழம் என்ற கிரந்தத்திலும் 
இமாம் தஹபி அவர்கள் ஸியரு அஃலாமிந் நுபலாவிலும்
அல் இபர் பீ ஹபரி மன் குغபிர் என்ற கிரந்தத்திலும்
இமாம் இப்னு கதீர் அவர்கள் அல் பிதாயா வந்நிஹாயா என்ற கிரந்தத்திலும்
இமாம் இப்னுல் இமாத் அவர்கள் ஷத்ராதுத் தஹப் என்ற கிரந்தத்திலும்
இமாம் ஸிரிக்லி அவர்கள் அஃலாம்
என்ற கிரந்தத்திலும்
பதிவு செய்துள்ளனர்.

அபுல் ஹைதம் முஹம்மத் பின் அல்மக்கி அல் குஷ்மீஹனி ரஹ் அவர்களிடமிருந்தே புஹாரியை அறிவிப்பு செய்துள்ளார்கள். 
நான் புஹாரி ஷரீபை அபுல் ஹைதம் முஹம்மத் பின் அல்மக்கி அல் குஷ்மீஹனி (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டு படித்துள்ளேன் அது போன்று ஸாஹிர் பின் அஹ்மத் அஸ் ஸர்ஹஸி, அப்துல்லாஹ் பின் யூசுப்  பின் பாமவைஹி அல் அஸ்பஹானி அவர்களிடமும் கேட்டுப் படித்துள்ளேன் என்று முஹத்திதா கரீமா கூறியதையும் அவர் ஒரு சிறந்த வணக்க சாலி என்றும் வாழ் நாளில் யாரையும் மணந்து கொள்ளவுமில்லை என்றும் இமாம் தஹபி அவர்கள் ஸியரு அஃலாமிந் நுபலாவில் பதிவு செய்துள்ளார்கள். 

முஹத்திதா கரீமா அவர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்தவர்களில்
இமாம்களான அல்லாமா அல் ஹதீப் அல்பக்தாதி , அல்லாமா அபுல் கனாயிம் அந்நர்ஸி ,  அல்லாமா அல் ஹாபிழ் அபூ தாலிப் அல் ஹுஸைன் பின் முஹம்மத் அஸ்ஸைனபி , 
அல்லாமா முகம்மத் பின் பரகாத் அஸ் ஸஈதீ , அல்லாமா அலி பின் ஹுஸைன் அல் பர்ராஃ , அல்லாமா அப்துல்லாஹ் பின் முகம்மத் பின் ஸதகா பின் அல் கஸ்ஸால் , அல்லாமா அபுல் காசிம் அலி பின் இப்ராஹீம் அந் நஸீப் , அல்லாமா அபுல் முழப்பர் மன்ஸூர் பின் அஸ் ஸன்ஆனி இது போன்ற இன்னும் பல மேதைகள் இருப்பினும் இவர்களை பெயர் குறித்து எம்மால் சொல்ல முடியும். 

இமாம் இப்னுல் ஜௌஸி அவர்கள் தனது அல் முன்தழம் பீ தாரிஹில் முலூக் வல் உமம் 8 ம் பாகம் 270 பக்கத்தில் முஹத்திதா கரீமா அல் மர்வஸிய்யா அவர்கள் ஹிஜ்ரி 463 மரணித்ததாக பதிவு செய்துள்ளார்கள். 

எங்களுடைய அன்புக்குரிய முஹத்திதா அவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக. 
‎                  اللهم آمين


-அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.
Previous Post Next Post