ஏழாம் நூற்றாண்டின் முஜத்தித் ஷைஹுல் இஸ்லாம் இப்னு தகீக் அல் ஈத் ரஹிமஹுல்லாஹ்

முழுப் பெயர் : முஹம்மத் பின் அலீ பின் வஹப் பின் முதீஃ பின் அபித்தாஆ அல் குஷைரி அல் கூஸி அபுல் பத்ஹ் தகியுத்தீன் இப்னு தகீக் அல் ஈத். 

பிறப்பு : 
ஹிஜ்ரி 625 ம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை 15 ல் சனிக்கிழமை யன்பஃ என்ற பகுதியில் பிறந்தார்கள். 

சிறு பிராயத்திலிருந்து மார்க்கப்பற்றுள்ளவராகவே இமாமவர்கள் 
காணப்பட்டார்கள். தனது சிறு வயதிலே அல் குர்ஆனையும் மனனமிட்டு முடித்தார்கள். 
அதன் பின் பல்வேறு இமாம்களினதும் நூற்களை படிப்பதிலும் மனனமிடுவதிலும் தனது நேரத்தை செலவு செய்தார்கள். 

ஆரம்பத்தில் தனது தந்தை அல்லாமா மஜ்துத் தீன் அல் குஷைரீ அவர்களிடம் கல்வி கற்றார்கள் அதன்பின் இமாம்களான அபுல் ஹஸன் பின் ஹிபதுல்லாஹ் அஷ் ஷாபிஇய்யி , அல் ஹாபிழ் அல் முன்திரீ , அபுல் ஹஸன் அந்நிஆல் அல் பக்தாதீ , அபுல் அப்பாஸ் பின் நிஃமா அல் மக்தஸீ , அபுல் பழ்ல் யஹ்யா பின் முஹம்மத் அல் குரஷீ , அபில் மஆலீ அஹ்மத் பின் அல் முதஹ்ஹிர் , அல் ஹாபிழ் அபுல் ஹுஸைன் அல் அத்தார் , போன்ற மேதைகளிடம் ஹதீஸ் கலையை பயின்றார்கள். 

இமாம் இப்னு தகீக் அவர்களிடம் கல்வி கற்ற பெருந் தொகையான மாணவர்களில் காழியுல் குழாத் ஷம்ஸுத்தீன் இப்னு ஜமீல் அத்தூனுஸீ , 
காழியுல் குழாத் ஷம்ஸுத்தீன் பின் ஹைதரா , அதீருத்தீன் அபூ ஹையான் அல் கர்னாதீ , அலாஉத்தீன் அல் கௌனவீ , ஷம்ஸுத்தீன் பின் அத்லான் , பத்ஹுத்தீன் அல் யஃமரீ , ஷரபுத்தீன் அல் இஹ்மீமீ போன்ற மேதைகளும் உள்ளடங்குவர். 

ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக இமாமவர்களின் தந்தை மஜ்துத் தீன் அல் குஷைரீ அவர்களும் தாய் கரீமா அவர்களும் கப்பலில் பயணித்துக் கொண்டிருக்கையிலே இமாமவர்கள் பிறந்தார்கள், அவர்களை கையில் சுமந்த வண்ணம் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டே அவர்களது தந்தை கஃபாவை தவாப் செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும். 
 
இமாமவர்கள் தனது ஊரிலிருந்து திமிஷ்க் நகருக்கு பயணமாகி அல்லாமா அஹ்மத் அப்துத் தாயிம் போன்ற அறுஞர்களிடம் கல்வி கற்றார்கள், அதன் பின் ஹிஜாஸ் நோக்கிப் பயணமானார்கள் அங்கிருந்து இஸ்கந்தரிய்யா நோக்கப்பயணமாகி ஷாபி , மாலிக் மத்ஹப்களின் பிக்ஹில் ஆழமாகப் படித்து அதில் தேர்ச்சி பெற்றார்கள், அதன்பின் காஹிராவிலும் சிறிது காலம் தரித்திருந்து அறிவு தேடினார்கள், பின் அங்கிருந்து மீண்டும் தனது சொந்த ஊருக்கு திரும்பி வந்து 
மீண்டும் கல்வி கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்கள். 

அல்லாமா அபுல் பத்ஹ் பின் செய்யிதுந் நாஸ் அல் யஃமரீ (ரஹ்) நான் பார்த்த அறிஞர்களில் இமாம் இப்னு தகீக் அவர்களைப் போன்று வேறு எவரையும் என் வாழ்நாளில் பார்த்ததில்லை என்றும் ஹதீஸ் கலைகளில் தனித்துவம் வாய்ந்த நிபுணர் என்றும் பாராட்டி எழுதியுள்ளார்கள். 

இமாம் தஹபி அவர்கள் தனது சியரு அஃலாமிந் நுபலா என்ற கிரந்தத்தில் ஹிஜ்ரி ஏழாம் நூற்றாண்டின் முஜத்தித் இமாம் இப்னு தகீக் அல் ஈத் (ரஹ்) என்று பதிவு செய்துள்ளார்கள். 

இமாம் ஸுப்கீ , இப்னு பழ்லில்லாஹ் அல் உமரீ , இமாம் அல் அத்பவீ போன்ற வரலாற்றாசிரியர்கள் இமாமவர்கள் ஒரு ( ஹாபிழ் )ஹதீஸ் துறை மாமேதை என்றும் அறிவுக்காக தனது வாழ்நாளை அற்பணித்திருந்தார் என்றும் பாராட்டி எழுதியுள்ளார்கள். 

அல்லாமா இப்னு தகீக் அல் ஈத் அவர்கள் பல துறைகளிலும் பல்வேறு வகையான நூற்களை எழுதியுள்ளார்கள், அவற்றில் முக்கியமான சில நூற்கள் வருமாறு..


١- الإلمام الجامع لأحاديث الأحكام، في عشرين مجلداً.
٢- شرح كتاب التبريزي في الفقه.
٣- شرح مقدمة المطرزي في أصول الفقه.
٤- الاقتراح في علوم الاصطلاح.
٥- اقتناص السوانح.
٦- شرح مختصر ابن الحاجب.
٧- ديوان شعر.
٨- شرح الاربعين النووية
٩- احكام الاحكام شرح عمدة الاحكام
١٠- الامام شرح الالمام

1- அல் இல்மாமுல் ஜாமிஃ லிஅஹாதீஸில் அஹ்காம்
2- ஷர்ஹு கிதாபித் திப்ரீஸீ பில் பிக்ஹ்
3- ஷர்ஹு முகத்திமதில் மித்ரிஸீ பீ உஸூலில் பிக்ஹ்
4- அல் இக்திராஹ் பீ உலூமில் இஸ்திலாஹ்
5- இக்தினாஸுஸ் ஸவானிஹ்
6- ஷர்ஹு முஹ்தஸரி இப்னில் ஹாஜிப்
7- தீவானு ஷஃர்
8- ஷர்ஹு அல் அர்பஈன் அந்நவவிய்யா
9- இஹ்காமுல் அஹ்காம் ஷர்ஹ் உம்ததில் அஹ்காம்
10- அல் இமாம் ஷர்ஹுல் இல்மாம். 

இமாமவர்களின் வபாத் : 
ஹிஜ்ரி 702 ம் ஆண்டு ஸபர் மாதம் பிறை 11 ல் வெள்ளிக்கிழமையன்று காஹிராவில் வபாத்தானார்கள். 

المراجع
سير اعلام النبلاء. 
مقدمة الالمام.

எங்களுடைய அன்புக்குரிய இமாமவர்களை அல்லாஹ் பொருந்திக்கொள்வானாக! சுவனத்தின் உயர்ந்த பதவியையும் அன்னாருக்கு வழங்குவானாக!
‎                  اللهم آمين


- அஷ்ஷெய்க் TM முபாரிஸ் ரஷாதி.
Previous Post Next Post