உஸ்மான் இப்னு மழ்ஊன்(ரலி) அவர்களின் கப்றின் மீது நபி(ஸல்) அவர்கள் ஒரு பாறையை (பெரும் கல்லை) வைத்து அடையாளமிட்டார்கள். (நூல்: இப்னு மாஜா)
அபூதாவுதில் வரக்கூடிய அறிவிப்பில்,
உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரலி) அவர்களின் ஜனாஸா கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது (அதன் பின) ஒரு கல்லை கொண்டு வருமாறு நபி(ஸல்) அவர்கள் ஒரு மனிதரிடம் கட்டளையிட்டார்கள். அவரால் கல்லை சுமக்கமுடியாமல் போனது. நபி(ஸல்) அவர்கள் சென்று தனது கைகளில் இருந்த ஆடையை முழங்கைளுக்கு மேல் உயர்த்தி அக்கல்லை தூக்கிக் கொண்டு வந்து கப்றின் தலைமாட்டில் வைத்து, எனது சகோதரரின் கப்றை அடையாளமடுகிறேன். எனது குடும்பத்தினரில் மரணித்தவர்களை அவருக்கு பக்கத்தில் அடக்கம் செய்வேன் என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: அபூதாவுத்)
இந்த ஹதீஸின் பிரகாரம்
மையத்தை அடக்கம் செய்த இடத்தை அதாவது கப்றை மக்கள் அடையாளம் காணும் வகையில் ஒரு கல்லை வைப்பது ஆகுமானது என தெரிகிறது.
நபி(ஸல்) அவர்கள் உஸ்மான் இப்னு மழ்ஊன் (ரலி) கப்றின் மீது சுமக்க முடியாத ஒரு கல்லை வைத்து அடையாளமிட்டதன் பிறகு, அவரது கப்றின் பக்கத்தில் எனது குடும்பத்தவர்களில் இறந்தவர்களையும் அந்த கப்றுக்கு பக்கத்தில் அடக்கம் செய்வதாகவும் அடையாளமிட்டதாக குறிப்பிட்டார்கள்.
இதனடிப்படையில் கப்றின் மீது கல்லை வைப்பது ஒரு அடையாளத்திற்கே தவிர வேறெதற்குமில்லை எனத் தெளிவாகின்றது. வைக்கப்படக் கூடிய கல் பெரியதாகவும் மக்களுக்கு தெளிவாக தெரியக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் இதன் மூலம் புரிய முடிகிறது.
அதே வேளை கப்றின் மீது கல் மட்டும் தான் வைக்க வேண்டும் அதல்லாதவைகளை கொண்டு அடையாளமாக வைக்கக் கூடாது என முடிவு செய்யக்கூடாது.
கல்வைப்பது சுன்னாவில் (அதாவது மார்க்க ரீதியான இபாத்தில்) அடங்காது மாறாக நடைமுறையிலுள்ள பழக்கங்களில் (ஆதத்களில்) அடங்கும். (நபிகளாரின் காலத்தில் மிம்பர் பலகையால் செய்யப்பட்டது எமது காலத்தில் மிம்பர் கற்கலால் கட்டப்பட்டுள்ளது போல்)
அரபு நாடுகளில் கப்றின் மீது கல்லை வைத்து அடையாளமிடுகிறார்
கள். இலங்கை போன்ற நாடுளில் பலகையை நட்டி அடையாளமிடுகிறார்
கள்.
மேற்படி ஹதீஸற்கு நைலுல் அவ்தாரில் இமாம் ஷவ்கானீய் (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் போது, அனுமதிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பொருளால் கப்றை அடையாளமிடுவது பற்றிய விடயம் சுன்னாவில் தெளிவுப்படுத்தி வந்துள்ளது என குறிப்பிடுகிறார்கள்.
இமாம் இப்னு குதாமா (ரஹ்) குறிப்பிடும் போது,
கப்றை கல்லை கொண்டு அல்லது பழகையைக் கொண்டு அடையாளப்படுத்து வது குற்றமில்லை என்கிறார்கள். (நூல்: அல்முக்னி)
இமாம் நவவி (ரஹ்) கூறும் போது,
சுன்னாவின் பிரகாரம், கப்றின் தலைமாட்டில் கல், மரத்துண்டு, அல்லது வேறு எதாவது ஒன்றால் தெளிவாகத் தெரியும் படி ஒரு அடையாளம் வைக்கப்பட வேண்டும் என்கிறார்கள்.( நூல்:ஷரஹ் அல்முஹத்தப்)
ஷைக் பின் பாஸ் (ரஹ்) அவர்களிடம் கப்றின் மீது அடையாம் வைப்பது பற்றி கேட்கப்பட்ட போது,
கல் அல்லது பலகை அல்லது எலும்பு அல்லது இரும்பு போன்றவற்றால் கப்றை அடையாளமிடுவது ஆகுமானது என குறிப்பிடுகிறார்கள்.
நாடுக்கு நாடு பழக்க வழக்கங்கள் வித்தியாசமானவையாகும். எனவே எமது நாட்டில் காலாகாலமாக கப்றின் மீது பலகை நட்டுப்பட்டு அடையாளமிடப்பட்டு வரும் வழக்கம் இருப்பதால் அதனை நாம் செய்து வருவதில் எந்த தவறுமில்லை. அது சுன்னாவுக்கு மாற்றமானதுமல்ல என்பதை புரிந்து கொள்வோமாக. அல்லாஹு அஃலம்.
-இம்தியாஸ் யூசுப்