இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களின் அறிவுரையை அடிப்படையாகக் கொண்ட உரையின் சுருக்கத்தின் தமிழாக்கம்:
அஷ்ஷைக் ஸாலிஹ் இப்னு அப்துல் அஸீஸ் ஆலுஷ்ஷைக் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்:
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களின் அறிவுரை
இப்னு மஸ்ஊத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் மக்களுக்கு வழங்கிய அறிவுரைகளில் இதுவும் ஒன்றாகும்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "இப்னு உம்மி அப்த் (இப்னு மஸ்ஊத்) அவர்களின் உடன்படிக்கையை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்". மேலும், "இப்னு உம்மி அப்த் எனது சமுதாயத்திற்கு எதனைப் பொருந்திக் கொண்டாரோ, அதையே நானும் பொருந்திக் கொள்கிறேன்" என்றும் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவர்கள் தனது தோழர்களிடம் பின்வருமாறு கூறினார்கள்: "நிச்சயமாக நீங்கள் உலமாக்கள் அதிகமாகவும், சொற்பொழிவாளர்கள் (கதீப்கள்) குறைவாகவும் உள்ள ஒரு காலத்தில் இருக்கிறீர்கள். உங்களுக்குப் பின் ஒரு காலம் வரும்; அங்கே ஆலிம்கள் குறைவாகவும், சொற்பொழிவாளர்கள் அதிகமாகவும் இருப்பார்கள்".
ஆலிம்களுக்கும் சொற்பொழிவாளர்களுக்கும் இடையிலான வேறுபாடு
ஸஹாபாக்களின் காலத்தில் — இப்னு மஸ்ஊத் அவர்கள் ஹிஜ்ரி 32 இல் மரணித்தார்கள் — அவர் தனது தோழர்களை எச்சரித்து தர்பிய்யா செய்யும் விதமாக இதைக் கூறினார்கள். ஸஹாபாக்கள் செறிந்து வாழ்ந்ததால் அப்போது ஆலிம்கள் அதிகமாக இருந்தனர். ஆனால் சொற்பொழிவாளர்கள் குறைவாகவே இருந்தனர்; ஒவ்வொரு ஊரிலும் ஒரு அறிஞர் மட்டுமே ஜும்மா உரையாற்றினார். ஆனால் பிற்காலத்தில் ஆலிம்களைத் தேடினாலும் அவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அங்கே சொற்பொழிவாளர்களே அதிகமாக இருப்பார்கள். சொற்பொழிவாளர்கள் என்பது மக்களுக்கு உரையாற்றுபவர்கள், ஜும்மா பிரசங்கம் செய்பவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஆசிரியர்களைக் குறிக்கும். அதாவது பகிரங்கமாக ஒரு கூட்டத்தின் முன் பேசுபவர்கள் அனைவரும் இதில் அடங்குவர்.
செயல் இல்லாத சொற்பொழிவாளர்கள் பற்றிய எச்சரிக்கை
இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் தனது தோழர்களுக்குச் செயல் இல்லாத வெறும் பேச்சை மட்டும் போதிக்கவில்லை. அவர்கள் ஒரு சிறந்த ஆலிமாகவும் , மக்களை நல்வழிப்படுத்தும் போதகராகவும் இருந்தார்கள். மக்கள் ஆலிம்களின் பாதையை விட்டு விலகி, வெறும் சொற்பொழிவாளர்களைப் பின்பற்றுவதைத் தடுக்கவே அவர்கள் இவ்வாறு கூறினார்கள்.
நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: "மக்களில் சிறந்தவர்கள் எனது காலத்தவர், பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள், பிறகு அவர்களுக்கு அடுத்து வருபவர்கள்". மேலும், "ஒரு காலம் வரும், அதற்கு அடுத்து வரும் காலம் அதைவிட மோசமானதாகவே இருக்கும்" என்றும் கூறினார்கள்.
மிஃராஜ்பயணத்தின் போது, நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சிலரது உதடுகள் கத்தரிக்கப்பட்டு அவர்கள் வேதனை செய்யப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, "ஜிப்ரீலே! இவர்கள் யார்?" எனக் கேட்டார்கள். அதற்கு அவர்கள், "இவர்கள் உமது சமுதாயத்தில் தாம் செய்யாததைச் சொல்லிக் கொண்டிருந்த சொற்பொழிவாளர்கள்" என்று பதிலளித்தார்கள்.
பேச்சில் நேர்மையின் தாக்கம்
இன்று மக்களின் உள்ளங்களில் பேச்சின் தாக்கம் குறைவாக இருப்பதற்குக் காரணம், ஒரு பேச்சு தூய்மையான எண்ணத்துடன் வெளிப்பட்டால் மட்டுமே அது உள்ளங்களில் நுழையும். ஆனால் புகழுக்காகவும், தற்பெருமைக்காகவும் பேசப்படும் பேச்சுகள் வெறும் காதுகளுக்கு இன்பத்தைத் தருமே தவிர, காதுகளைக் கடந்து உள்ளத்திற்குச் செல்லாது. மக்கள் "மாஷா அல்லாஹ்! எவ்வளவு அழகான பேச்சு!" என்று இரசிப்பார்களே தவிர, அது அவர்கள் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தாது. இன்று ஜும்மா உரைகளில் எத்தனையோ ஏவல்கள் மற்றும் விலக்கல்கள் கூறப்பட்டாலும், மக்கள் அதனால் அச்சமடைவதோ அல்லது அதை ஏற்பதோ மிகக் குறைவாகவே உள்ளது.
தீர்வு
இதற்கான தீர்வு என்ன?
இப்னு மஸ்ஊத் அவர்களின் அறிவுரைப்படி, ஆலிம்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், வெறும் சொற்பொழிவாளர்களைத் தவிர்ப்பதுமே ஆகும். அதாவது வழிகாட்டல்களையும், கல்வியையும் தகுதியான ஆலிம்ககளிடமிருந்தே பெற வேண்டும். சொற்பொழிவாளர்கள் அதிகமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் ஆலிம்கள் அல்ல. ஆலிம் என்பவர் கல்வி/ அறிவால் வர்ணிக்கப்படுபவர், சொற்பொழிவாளர் என்பவர் பேச்சாற்றலால் வர்ணிக்கப்படுபவர்.
இன்று மக்கள் ஆம்லிகளை விட சொற்பொழிவாளர்களின் பேச்சை அதிகம் கேட்பதால் சுன்னத்துகளைப் பற்றி அறியாமல் இருக்கிறார்கள். ஆம்லிகளின் விளக்கத்திற்கும், சொற்பொழிவாளரின் பேச்சிற்கும் இடையில் பெரும் வேறுபாடு உள்ளது. ஆலிம்கள் நபியின் வாரிசு, சொற்பொழிவாளர் வெறும் பேச்சாளர்களின் வாரிசு. எனவே எச்சரிக்கையாக இருங்கள்; எவரது பேச்சையும் ஆலிம்களிடம் காட்டிச் சரிபார்க்கவும். அதில் உண்மை இருந்தால் ஏற்கவும், தவறுகள் இருந்தால் நிராகரிக்கவும். ஏனெனில் நபியின் வாரிசுகள் ஆலிம்களே தவிர, வெறும் சொற்பொழிவாளர்கள் அல்ல.
தமிழாக்கம்:
Azhan Haneefa