ஒவ்வொரு வருடமும் உலகின் பல பாகங்களில் இருந்தும் 20 லட்சத்துக்கு மேற்பட்ட ஹாஜிகள் மக்காவில் புனித ஹஜ்ஜை நிறைவேற்ற ஒன்று கூடுகின்றனர். பிறை எட்டில் ஹஜ்ஜின் அமல்கள் ஆரம்பமாவதால் பெரும்பாலான ஹாஜிகள் அன்று மினாவுக்கு சென்று விடுவர்.
இருப்பினும் அன்று மினாவில் தங்குவது சுன்னத்தானது ஆகையால் சிலர் அங்கு செல்லாமல் மக்கா ஹாரத்திலும் இருப்பர். ஆனால் பிறை ஒன்பதாம் அன்று அரஃபா தினமாகும். அரபாவில் தங்காவிட்டால் ஹஜ்ஜே கூடாது என்பதால் அனைத்து ஹாஜிகளும் அன்று அரபாவுக்கு சென்று விடுவார்கள். அன்றைய தினம் புனித காஃபா தவாப் செய்பவர்கள் எவரும் இன்றி வெறுமையாக இருந்து விடக் கூடாதல்லவா?, ஆகையால் தொண்டு தொட்டு மக்கா வாசிகளிடத்தில் ஒரு பழக்கம் இருக்கின்றது. அதாவது அரபா தினத்தன்று மக்கா வாசிகளில் ஆண்கள் அனைவரும் ஹாஜிகளுக்கு உதவி செய்வதற்காக அரபாவுக்கு சென்று விடுவதும் மக்கா பெண்கள் அனைவரும் அன்றைய தினம் காஃபாவுக்கு வந்து உம்ரா தவாப் அமல்களை முடித்துக் கொண்டு ஹஜ் பெருநாள் மாலை வரை முறை வண்ணமாக ஹரத்தில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவர் .
அதனால் இப்பெண்களுக்கு மூனிசாத்தில் ஹரம் அதாவது ஹரத்துக்கு ஆறுதல் அளிப்பவர்கள் என்று செல்லமாக பெயர் கூறி அழைக்கப்படுவர். அரபா தினமான இன்று மக்கா ஹரத்தில் பெண்கள் மட்டும் அமல் செய்யும் காட்சியே இது.
துல்ஹஜ் ஒன்பதாம் நாளான அரஃபா நாளில் மினாவும் மக்கா நகரமும் முற்றிலும் ஆள் அரவமற்று வெறிச்சோடிக் காணப்படும். இந்தத் தருணத்தில் தான், மஸ்ஜிதுல் ஹராமில் (காபாவில்) ஒரு கண்கொள்ளா அற்புத ஆன்மீகப் பாரம்பரியம் அரங்கேறுகிறது.
உள்ளூர் மக்களால் இது ‘காபாவில் பெண்கள் தினம்’ அல்லது உத்தியோகபூர்வமாக ‘யவ்முல் குலைஃப்’ என்று அழைக்கப்படுகிறது. உலகப் பயணிகள் பலரும் அறிந்திராத, மக்கா நகரின் இந்த நெகிழ்ச்சியான வரலாற்றுப் பாரம்பரியத்தைப் பற்றி நம்முடைய வழமையான பாணியில் சற்று ஆழமாகப் பார்ப்போம்!
அரபியில் 'குலைஃப்' (الخَليف) என்றால் 'பின்னே தங்கிவிட்டவர்கள்' அல்லது 'பின்னாலேயே இருப்பவர்கள்' என்று பொருள். ஹஜ்ஜின் மிக முக்கிய கிரியையான அரஃபா நாளுக்காக, உலக நாட்டு ஹாஜிகள் அனைவரும் நேற்று இரவே மக்காவை விட்டு வெளியேறிவிடுவார்கள். அதேபோல, மக்கா நகரத்தில் வசிக்கும் உள்ளூர் ஆண்களும் ஹாஜிகளுக்குச் சேவை செய்வதற்காகவோ அல்லது தாங்கள் ஹஜ் செய்வதற்காகவோ அரஃபாத் மற்றும் மினா மைதானங்களுக்குச் சென்றுவிடுவார்கள்.
விளைவாக, மக்கா நகரமே ஆண்களின் நடமாட்டமின்றி முற்றிலும் நிசப்தமாகும். இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, வீடுகளில் இருக்கும் மக்கா நகரத்து அரபுப் பெண்கள், தங்களின் பெண் குழந்தைகள் மற்றும் முதியவர்களுடன் மஸ்ஜிதுல் ஹராமை நோக்கிப் படையெடுப்பார்கள். அரஃபா நாளில் காபா முற்றிலும் பெண்களின் வசம் ஒப்படைக்கப்படுவதால் தான் இது 'பெண்கள் தினம்' எனப்படுகிறது.
ஆண்டு முழுவதும் பல்லாயிரக்கணக்கான ஆண்கள் ‘இஹ்ராம்’ எனும் வெண்ணிற ஆடைகளுடன் வலம் வரும் காபாவின் ‘மதாஃப்’ (சுற்றும் பகுதி) இன்று முற்றிலும் தலைகீழாக மாறும்.
மக்காவின் பூர்வகுடிப் பெண்கள் தங்களின் பாரம்பரியக் கறுப்பு நிற அபாயா அணிந்து காபாவைச் சுற்றி வரும்போது, மஸ்ஜிதுல் ஹராமின் வெண்ணிறப் பளிங்குத் தரைக்கு நடுவே கறுத்த அலைகள் வலம் வருவது போன்ற ஒரு பிரம்மாண்டமான காட்சி உருவாகும்.
எப்போதும் மனிதக் கடலாய் ஆர்ப்பரிக்கும் காபாவின் முற்றம் இன்று முற்றிலும் பெண்களின் இஃதிகாஃபும், மெல்லிய குரலிலான தஸ்பீஹ் முழக்கங்களும், துஆக்களுமே நிறைந்து ஒரு ஆழமான ஆன்மீக அமைதியைப் பிரதிபலிக்கும்.
ஆண்டு முழுவதும் கடுமையான கூட்ட நெரிசலின் காரணமாக, பெண்களால் காபாவின் திரைச்சீலையையோ (கிஸ்வா), ஹஜருல் அஸ்வத் கல்லையோ, மகாமு இப்ராஹீமையோ நெருங்குவது என்பது மிகவும் கடினமான காரியம். ஆனால் இன்று நிலைமை வேறு!
எந்தவித முண்டியடித்தலும், நெரிசலும் இல்லாத அமைதியான சூழலில் அவர்கள் காபாவை மிக நெருக்கமாகத் தொட்டு முத்தமிடுகிறார்கள்.
காபாவின் சுவர்களில் தங்களின் தலைகளைச் சாய்த்து, மனப்பாரங்களை இறக்கி வைத்து உருகி துஆ செய்கிறார்கள்.
தங்களின் வாழ்நாளில் எளிதாகக் கிடைக்காத இந்த ஆன்மீகப் பாக்கியத்தை, இந்த ஒரு நாளில் அவர்கள் முழுமையாக அனுபவிக்கிறார்கள்.
இது ஏதோ நேற்று இன்று தொடங்கிய வழக்கமல்ல; பல நூற்றாண்டுகளாக மக்காத்து சமூகத்தில் வழிவழியாகத் தொடரும் ஒரு அழகான பண்பாடு.
அன்றைய காலத்தில் ஆண்கள் அனைவரும் போருக்குச் சென்றிருக்கும் போதோ அல்லது இது போன்ற ஹஜ்ஜின் போதோ, மக்கா நகரின் பாதுகாப்பையும், காபாவின் கண்ணியத்தையும் தங்களின் கைகளில் ஏந்தும் பொறுப்பு பெண்களுக்கு இருந்தது. அதன் எச்சமாகவே இன்றும் இந்த நாள் அரபுக் குடும்பங்களால் மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
