நாவை பேணுதல்

நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம்! நீ வளைந்து இருந்தால் நாங்களும் வளைந்து விடுவோம்!
நாவைப் பாதுகாக்காத வரை 

ஈமானுடைய அந்தரங்கத்தை 

அடைந்துகொள்ள முடியாது!

மனிதனைவிட சக்தி வாய்ந்த எத்தனையோ படைப்புகளை அல்லாஹ் படைத்துள்ளான். ஆனால் அவைகளுக்கு வழங்காத பல உன்னதமான சிறப்பை மனிதனுக்கு வழங்கியுள்ளான். அவற்றில் முக்கிய இடத்தை வகிப்பது "பேசும் சக்தி". இந்த பேசும் சக்திதான் மனிதனுக்கு ஈருலகிலும் அனுகூலமாகவும் அல்லது அழிவாகவும் அமைகிறது. காரணம் மனிதனின் வாயிலிருந்து வெளிப்படும் ஒவ்வொரு வார்த்தையும் இறைவனால் கண்காணிக்கப்படுகிறது. பதிவு செய்யப்படுகிறது.. இது குறித்து இறைவன் தனது திருமறையில்;

"மனிதன் எதை கூறிய போதிலும் (அதனை எழுதக்) காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை." (அல்குர்ஆன் 50:18)

நாவின் எச்சரிக்கைப்பற்றி அண்ணலம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சரிக்கைகள் பல உள்ளன.

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: மனிதன் காலைப்பொழுதை அடைந்தவுடன் அவனது எல்லா உறுப்புகளும் நாவிடம் "நீ எங்களுடைய காரியத்தில் அல்லாஹுத்த ஆலாவை அஞ்சிக்கொள். ஏனெனில் எங்களுடைய காரியங்கள் உன்னுடன் தான் இணைந்துள்ளன. நீ நேராக இருந்தால் நாங்களும் நேராக இருப்போம். நீ வளைந்து இருந்தால் நாங்களும் வளைந்து விடுவோம். (பிறகு அதற்குறிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்) என்று மிகவும் பணிவுடன் வேண்டுகின்றன. (அறிவிப்பாளர்: ஹளரத் அபூ ஸஈத் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: "அடியான் தனது நாவை பாதுகாக்காதவரை ஈமானுடைய அந்தரங்கத்தை அடைந்து கொள்ள முடியாது. (அறிவிப்பாளர்: ஹளரத் அனஸ் இப்னு மாலிக் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: மஜ்மவுஜ்ஜவாயித்)

ஒருமுறை உக்பத் இப்னு ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு எனும் தோழர் "இறைத்தூதர் அவர்களே! ஈடேற்றம் பெற என்ன வழி?" என்று வினவுகின்றார். அதற்கு அண்ணலம் பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "உமது நாவை கட்டுப்படுத்திக் கொள்ளும். உமது பாவங்களை நினைத்து அழுதுகொண்டிருப்பீராக" என்று கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தோழர்களிடம் "அல்லாஹ்வுத்தஆலாவுக்கு மிகவும் பிரியமான நற்செயல் எது?" என்று வினவியபோது - தோழர்கள் அனைவரும் மவுனமாக இருந்தனர். யாரும் பதில் கூறவில்லை. "அல்லாஹ்வுக்கு பிரியமான அமல் நாவைப் பாதுகாப்பது" என்றார்கள் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். (அறிவிப்பாளர்: ஹளரத் அபூஜிஹைப்பா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ)

"(நாளை மறுமையில்) மனிதர்களை முகக் குப்புற நரகத்தில் வீழ்த்துவது அவர்களின் நாவு செய்த தவறே தவிர வேறெதுவும் இல்லை" என ஒரு நீண்ட ஹதீஸில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: திர்மிதீ)

"மனிதன் ஒரு வார்த்தையைப் பேசி விடுகிறான். அதைப் பேசுவதில், சொல்வதில் எந்த குற்றமும் இல்லை என்று கருதுகிறான்.. ஆனால் அதன் காரணமாக எழுபது வருடத் தொலை தூரத்திற்கு சமமான அளவு நரகத்தில் போய் விழுகிறான்" (அறிவிப்பாளர்: ஹளரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)

சரி, நாவின் விபரீதங்களைப்பற்றி எச்சரிக்கை செய்திருக்கும் இறைத்தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிலிருந்து தவிர்ந்து கொள்ளும் வழியை சொல்லாமலா இருப்பார்கள்! சொன்னார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்:

"நல்லதை ஏவுவது அல்லது தீமையை தடுப்பது அல்லது அல்லாஹ்வை திக்ரு செய்வது ஆகியவைத்தவிர மனிதனுடைய எல்லாப் பேச்சுக்களும் அவனுக்கு நஷ்டத்தை தரும். தண்டிக்கப்படுவதற்குக் காரணமாகும். மேலும் மறுமை நாளின் மீதும் எவர் ஈமான் கொண்டாரோ அவர் நல்லதை பேசட்டும். அல்லது மவுனமாக இருக்கட்டும். (அறிவிப்பளர்: ஹளரத் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி)

நாம் சிந்திக்காமல் பேசும் சில வார்த்தைகள் நம்மை நரகத்தின் அடித்தளத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்து விடும். இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். புறம் பேசுதல், கோள் சொல்லுதல், அவதூறு கூறுதல் போன்ற தீய செயல்கள் அனைத்தும் நாவினாலேயே அரங்கேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாவை நமது கட்டுப்பாட்டுக்குள் வைப்போம். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
Previous Post Next Post