கோபக்காரனுடன் எவ்வாறு நடப்பது?

உனது சகோதரன் கோபப்பட்டு, பொருத்தமற்ற விதத்தில் பேச ஆரம்பிப்பதை நீ கண்டால், அவர் கூறுவதையெல்லாம் கணக்கிட்டு குற்றம் பிடிப்பது நல்லதல்ல. ஏனெனில், அவரது நிலை, நடப்பது என்னவென்று அறியாமல் இருக்கும் போதையில் உள்ள ஒருவனின் நிலையே. மாறாக அவனது கோபத்தின் போது நீ பொறுமையாக இரு. அதை வைத்து அவனைக் குற்றம் பிடித்துவிடாதே. ஏனெனில் ஷைத்தான் அவனை மிகைத்துவிட்டான். அவனது உள்ளம் தடுமாற்றமடைந்து புத்தி மறைந்துவிட்டது.

உனது உள்ளத்தில் நீ அவன் மீது கோபம் கொண்டாலோ, அல்லது அவனது செயலுக்கேற்ப நீ அவனுக்கு பதிலளித்தாலோ, பைத்தியகாரனுடன் மோதிய புத்திசாலியாக அல்லது மயக்கத்தில் இருப்பவனுடன் மோதிய சுயநினைவுள்ளவனாக நீ ஆகிவிடுவாய். இறுதியில் பாவம் உனக்கே.

மாறாக, இரக்கக் கண்ணுடன் நீ அவனைப் பார். விதி அவனை எவ்வாறு மாற்றுகின்றது என்பதையும், அவனது உள்ளம் அவனுடன் எவ்வாறு விளையாடுகிறது என்பதையும் கவனி.

அறிந்து கொள்! அவன் விழித்துக் கொண்டால் நடந்ததை நினைத்துக் கவலைப் படுவான். நீ பொறுமையாக இருந்தமைக்காக உன்னை மதிப்பான். (அவனது கோபத்தின் போது) உன்னால் செய்யமுடியுமான மிகக் குறைந்த விடயம், அவன் ஆறுதல் பெறும் ஒன்றிற்கு அவனை நெருக்காமாக்கி விடு.

இந்நிலைமையை, மகன் தனது தந்தை கோபம் கொள்ளும் போதும், மனைவி தன் கணவன் கோபம் கொள்ளும் போதும் கவனிப்பது அவசியமாகும். அவள் தன் கணவன் பேசுவதைப் பேச விடட்டும். அதை வைத்துக் குற்றம் பிடிக்க மாட்டாள். ஏனெனில் பிறகு அக்கணவன் கைசேதப்பட்டு, மன்னிப்புக் கேட்டவராக வந்து நிற்பார்.

எப்போதாவது கோபம் கொண்டுள்ளவனின் கோபத்திற்கோ, வார்த்தைகளுக்கோ பதிலளிக்கப்பட்டால் விரோதம் வளர்ந்துவிடும். தான் போதையில் இருக்கும் போது தனக்கு இழைக்கப்பட்டவைகளுக்காக நினைவில் பழிவாங்குவான்.

பெரும்பாலான மக்கள் நாம் கூறியது போல் நடப்பதில்லை. கோபத்துடன் இருக்கும் ஒருவனைக் கண்டால், அவனது வார்த்தைகளுக்கும் செயல்களுக்கும் பதிலடி கொடுத்துவிடுவார்கள். இது அறிவுடைமையானதல்ல. மாறாக, நான் கூறியதே அறிவுடைமையானது. அறிவுள்ளவர்களே அதைப் புரிந்துகொள்வார்கள்.

- இமாம் இப்னுல் ஜவ்ஸி
ஸைதுல் காதிர்
Previous Post Next Post