உள்ளத்தின் சுவனமும் அதைக் கெடுக்கும் காரணிகளும்

இமாம் இப்னுல் கய்யிம் (ரஹ்) அவர்கள் தங்களது ‘மதாரிஜுஸ் ஸாலிகீன்’ எனும் நூலில் உள்ளத்தை சீர்கெடுக்கும் ஐந்து காரணிகள் பற்றி விரிவாக விளக்கியுள்ளார்கள்.

‘அறிந்துகொள்! உள்ளம் அல்லாஹ்வை நோக்கியும், மறுமையை நோக்கியும் பயணிக்கின்றது. அது தனது பிரகாசம், உயிரோட்டம், சக்தி, ஆரோக்கியம், மனவுறுதி, அதன் செவி, பார்வை என்பன ஈடேற்றமாக இருத்தல், திசைதிருப்பும் காரணிகள் அதனை விட்டும் மறைவாக இருத்தல் என்பவற்றின் மூலம் உண்மையின் பாதையையும், வழிமுறையையும், செயல்களதும், மனதினதும் ஆபத்துக்களையும், வழிப்பறிக் கொள்ளையர்களையும் தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டும். இந்த ஐந்து காரணிகளும் அதன் ஒளியை அணைக்கும். அதன் அகப்பார்வையைக் குருடாக்கும். அதன் செவிப்புலனை – செவிடாக்கி பேசமுடியாத நிலைக்கு இட்டுச் செல்லாவிட்டாலும் – பலவீனமடையச் செய்யும். உள்ளத்தின் அனைத்து சக்திகளையும் நலினப்படுத்தும். அதன் ஆரோக்கியத்தைக் குறைக்கும். அதன் மனவுறுதியை உடைக்கும். அதன் இலட்சியப் பயணத்தை இடைநிறுத்திப் பின்வாங்க வைக்கும். யார் இதை உணரவில்லையோ அவரது உள்ளம் மரணித்துவிட்து. மரணித்தவரைப் காயப்படுத்துவதால் அது வலியை உணர்வதில்லை.

அந்த ஐந்து காரணிகளும் உள்ளம் அதன் முழுமையை அடைவதை விட்டும் அதைத் தடுக்கும். படைக்கப்பட்ட நோக்கத்தை அடைவதை விட்டும் மற்றும் அதன் இன்பம், சந்தோசம், முகமலர்ச்சி, விருப்பம் என்பன எதை அடைவதில் வைக்கப்பட்டுள்ளதோ, அதை அடைவதை விட்டும் அதனை வழிமறிக்கும். நிச்சயமாக அல்லாஹ்வை அறிவது, அவனை அன்புகொள்வது, அவனை நினைவுகூர்வதில் நிம்மதி காண்பது, அவனை சந்திக்க ஆசை கொள்வது என்பவற்றைக் கொண்டுதான் உள்ளத்திற்கு சுகண்டியும், இன்பமும், முகமலர்ச்சியும், முழுமையும் உள்ளது. இவைதான் உள்ளத்தின் இவ்வுலக சுவர்க்கமாகும். இவ்வுலக சுவனத்தின் இந்த இன்பத்தை அடைந்தவுர்களுக்கே தவிர, ஏனையோருக்கு மறுமையில் இன்பமோ, வெற்றியோ கிடையாது. எனவே, உள்ளத்திற்கு இரண்டு சுவர்க்கங்கள் உண்டு. முதல் சுவர்க்கத்திற்கு நுழையாத உள்ளத்திற்கு இரண்டாவது சுவர்க்கத்திற்கும் நுழைய முடியாது.

ஷைய்குல் இஸ்லாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறக் கேட்டுள்ளேன், ‘இந்த உலகில் ஒரு சுவனம் உள்ளது. யார் அதில் நுழையவில்லையோ, அவர் மறுமையில் உள்ள சுவனத்தில் நுழைய மாட்டார்.’

இறைஞானிகளில் ஒருவர் கூறுகின்றார், ‘எனது உள்ளத்திற்கு சில சந்தர்ப்பங்கள் ஏற்படும். நான் அப்போது கூறுவேன், ‘சுவனவாதிகளுக்கு இது போன்ற நிலை இருந்தால், நிச்சயமாக அவர்கள் சந்தேசமான வாழ்க்கையில் இருப்பர்’

இறைநேசர்களில் ஒருவர் இவ்வாறு கூறுகின்றார், ‘உலக மக்கள் பரிதாபத்திற்குரியவர்கள். உலகில் இருக்கும் மிகச் சிறந்த அம்சத்தை சுவைக்காமலே அவர்கள் அதனை விட்டும் வெளியேறுகின்றனர்.’ உலகிலிருக்கும் மிகச் சிறந்த அம்சம் எது? என அவரிடம் வினவப்பட்ட போது, ‘அல்லாஹ்வை அன்பு வைத்தல், அவனில் மனநிம்மதி காணல், அவனை சந்திக்க ஆசை கொள்ளல், அவனையே முன்னோக்கல், அவன் அல்லாதோரைப் புறக்கணித்தல் ஆகியவை’ என்றார். அல்லது அதுபோன்ற ஒரு வார்த்தையைக் கூறினார்.

உயிரோட்டமான உள்ளமுள்ள யாரும் இதனைக் காண்பார்கள், சுவைத்து அறிந்துகொள்வார்கள்.

இந்த ஐந்து அம்சங்களும் இதனை விட்டும் உள்ளத்தைத் துண்டித்துவிடுகின்றன. உள்ளத்திற்கும் அதற்குமிடையில் தடையை ஏற்படுத்துகின்றன. அதன் பயணத்தை விட்டும் அதை வழிமறிக்கின்றன. பல நோய்களை உள்ளத்திற்கு ஏற்படுத்துகின்றன. நோயாளி அதற்கு மருத்துவம் செய்யாவிடின் அவை அவனை அழித்தேவிடலாம்.

முதல் காரணி : மக்களுடன் கலத்தல்.

மக்களுடன் அதிகம் கலப்பது ஏற்படுத்தும் தாக்கம் என்வெனில், உள்ளம் மக்களது மூச்சுக்களின் புகையால் நிரம்பி அது கறுப்பாகிவிடுவதாகும். மேலும் அது உள்ளத்திற்குத் தடுமாற்றத்தையும், குழப்பநிலையையும், கவலையையும், துக்கத்தையும், பலவீனத்தையும் ஏற்படுத்தும். தன்னால் சுமக்க முடியாத, கெட்ட நண்பர்களின் பாவச் சுமைகளைச் சுமக்கவைக்கும். தனது நலவுகளைப் பாழாக்கிவிட்டு, அவர்களையும் அவர்களது விவகாரங்களையும் கவனிக்கச் செய்யும். உள்ளத்தின் சிந்தனையை அவர்களது விருப்பங்களையும், தேவைகளையும் நிறைவேற்றி வைப்பதில் பங்குபிரித்துவிடும். அப்போது, உள்ளத்தில் அல்லாஹ்வுக்காகவும், மறுமைக்காகவும் என்ன எஞ்சியிருக்கப் போகின்றது?

இது ஒருபுறமிருக்க, மக்களுடன் கலப்பது எத்தனை சோதனைகளைக் கொண்டு வந்துள்ளது! எத்தனை அருள்களைத் தடுத்து நிறுத்தியுள்ளது! எத்தனை துன்பங்களை இறக்கியுள்ளது! எத்தனை அருள்களைப் பாழாக்கியுள்ளது! எத்தனை இழிவுகளைக் கொண்டுவந்துள்ளது! எத்தனை குழப்பங்களில் வீழ்த்தியுள்ளது! மனிதர்களுக்கு மனிதர்களை விட அதிகம் ஆபத்து எங்கிருந்து வரப்போகின்றது? அபூ தாலிபின் மரண தருவாயில் கெட்ட நண்பர்களை விட வேறு யார் அவருக்கு தீங்காக இருந்தனர்? நிரந்த சந்தோசத்தைத் தரும் ஒரே ஒரு வார்த்தையைக் கூறாமல் அவரைத் தடுத்தே விட்டனர்.

உலகை நோக்காகக் கொண்ட ஒருவித அன்பிற்காகவும், அவர்களில் ஒருவர் மற்றவரின் தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் ஏற்பட்டுள்ள இத்தோழமை யதார்த்தங்கள் வெளிப்படும் நேரத்தில் விரோதமாக மாற்றமடைந்துவிடும். அப்போது, அதற்காகத் தோழமை கொண்டவன் கைசேதப்படுவான்.

‘அந்நாளில் அநியாயக்காரன் கைசேதப்பட்டு, ‘ரஸூலுடன் (எனது) பாதையை எடுத்துக்கொண்டிருக்கக் கூடாதா! இன்னவனை எனது தோழனாக எடுத்துக் கொண்டிருக்கக்கூடாதே! நினைவூட்டல் (அல்குர்ஆன்) வந்த பின்னரும் நிச்சயமாக அவன் என்னை வழிகெடுத்துவிட்டான்’ என்று கூறுவான்.’ (ஸூரா அல்புர்கான் : 27 – 29)

‘இறையச்சம் உள்ளோரைத் தவிர, நேசர்கள் அனைவரும் அந்நாளில் ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருப்பர்’ (ஸூரா அஸ்ஸுக்ருப் : 67)

அல்லாஹ்வின் நேசர் இப்ராஹீம் (அலை) அவர்கள் தங்கள் கூட்டத்தினரைப் பார்த்து இவ்வாறு கூறினார்கள், ‘அவர் கூறினார், ‘நீங்கள் அல்லாஹ்வை விட்டு சிலைகளை எடுத்துக்கொண்டிருப்பதெல்லாம், உங்களுக்கு மத்தியிலுள்ள நேசத்தின் காரணமாகவே. பின்பு, மறுமை நாளில் உங்களில் சிலர் சிலரை நிராகரிப்பர். மேலும், சிலர் சிலரை சபிப்பர். இன்னும் உங்களது தங்குமிடம் நரகம்தான். உங்களுக்கு உதவி செய்யும் யாரும் கிடையாது.’ ( ஸூரா அல்அன்கபூத் : 25)

இதுவே ஒரு ஆதாயத்தை நோக்காகக் கொண்டு ஒன்றிணைந்த அனைவரதும் நிலை. அதை அடைய ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கும் காலமெல்லாம். அன்பு பாராட்டிக் கொள்வார்கள். அவ்வாதாயம் இல்லாமல் போன பின்னர் அந்த ஒன்றிணைவு கைசேதத்தையும், நோவினையையும், கவலையையுமே ஏற்படுத்தும். அந்த அன்பு வெறுப்பாகவும் சாபமாகவும் மாறிவிடும். அந்த நோக்கம் கவலையாகவும் வெறுப்பாகவும் மாறிய பின்னர் ஒருவரையொருவர் ஏசிக்கொள்வர். இந்த உலகில் இழிவான ஒரு நோக்கத்திற்காக ஒன்று சேர்ந்து, பின்னர் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டவர்களின் நிலைமையை இதற்கு உதாரணமாகக் காணலாம். பிழையான ஒன்றிற்காக ஒருவருக்கொருர் உதவிசெய்து, அதற்காக அன்பு பாராட்டிக் கொள்கின்ற அனைவரது அன்பும் விரோதமாகவும், குரோதமாகவும் மாற்றமடைந்தே தீரும்.

மக்களுடன் கலக்கின்ற விடயத்தில் பயனுள்ள வரையறை என்னவெனில், ஜும்ஆ, ஜமாஅத் தொழுகை, பெருநாட்கள், ஹஜ், அறிவைக் கற்றல், ஜிஹாத், உபதேசித்தல் போன்ற நல்ல அம்சங்களில் மக்களுடன் கலப்பதும், கெட்ட அமச்ஙகளில் மேலும் அனுமதிக்கப்பட்டவற்றிலும் அநாவசியமானவைகளில் அவர்களை விட்டு ஒதுங்கியிருப்பதுமாகும். கெடுதியில் அவர்களுடன் கலக்கத் தேவை ஏற்பட்டால், மேலும் அவர்களை விட்டும் ஒதுங்கிக் கொள்ள முடியாமல் போனால், அவர்களை ஆமோதிப்பதை விட்டும் அவன் எச்சரிக்கையாக இருக்கட்டும். அவர்கள் தரும் நோவினையில் பொறுமையாக இருக்கட்டும். ஏனெனில் அவனுக்கு பலமோ, உதவியாளனோ இல்லாவிட்டால் கட்டாயமாக அவர்கள் அவனை நோவினை செய்வார்கள். எனினும் அந்த நோவினைக்குப் பின்னர், அவர்களிடமிருந்தும், முஃமின்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் புகழ்ச்சியும் கண்ணியமும், நேசமும் மதிப்பும் கிடைக்கும். அவர்களை ஆமோதித்தால், அதன் பின்னர், அவர்களிடமிருந்தும் முஃமின்களிடமிருந்தும், அல்லாஹ்விடமிருந்தும் இகழ்ச்சியும், விரோரதமும், வெறுப்பும் இழிவுமே கிடைக்கும். எனவே, அவர்களது நோவினையில் பொறுமையாக இருப்பது சிறந்தது. அது அழகான முடிவைத் தரும். அதன் பின்விளைவு புகழாக இருக்கும்.

அனுமதிக்கப்பட்டவற்றில், அநாவசியமானவைகளில் அவர்களுடன் கலக்கவேண்டி ஏற்பட்டால், அவரால் முடியுமாயின் அச்சபையை அல்லாஹ்வுக்கு வழிப்படும் சபையாக மாற்ற முயற்சிக்கட்டும். அதற்காக தனது மனதை உற்சாகமூட்டி, அதற்காக பலப்படுத்திக்கொள்ளட்டும். ‘இது முகஸ்துதி, நீ உனது அறிவையும், மார்க்கப்பற்றையும் வெளிக்காட்ட விரும்புகின்றாய்’ என ஷைத்தான் அதை விட்டும் அவனைத் தடுப்பதற்காக ஏற்படுத்தும் சந்தேகங்களை திரும்பியும் பார்க்கவேண்டாம். ஷைத்தானுடன் அவர் போராடட்டும். அல்லாஹ்விடம் உதவி கேட்கட்டும். அவரால் முடியுமான அளவு அவர்களில் நல்ல தாக்கங்களை ஏற்படுத்தட்டும்.

மேற்கூறியவற்றை செய்ய அவர் சக்தி பெறவில்லையானால், குழைக்கப்பட்ட மாவிலிருந்து தலைமுடியை உருவி எடுப்பது போல, அவர்களிமிருந்து தனது உள்ளத்தை உருவி எடுத்துவிடட்டும். அவர்களுடன் (உடம்பால்) நெருங்கி இருப்பார். (உள்ளத்தால்) தூரமாகி மறைந்திருப்பார். (உடம்பால்) விழிப்புடனிருக்கட்டும். (உள்ளத்தால்) தூங்கி இருக்கட்டும். கண்ணால் அவர்களைப் பார்ப்பார். உள்ளத்தால் பார்க்கமாட்டார். காதால் அவர்களது பேச்சைக் கேட்பார். உள்ளத்தால் செவிமடுக்கமாட்டார். ஏனெனில், அவர் தனது உள்ளத்தை அவர்களிடமிருந்து எடுத்து, மலக்குமார்களிடம் உயர்த்தி, தூய்மையான உயர்ந்த ஆன்மாக்களுடன் அர்ஷின் கீழால் பறக்கவிட்டுள்ளார். இது மனதிற்கு எவ்வளவு கஷ்டமானது! நிச்சயமாக யாருக்கு அல்லாஹ் இதை இலகுபடுத்திக் கொடுக்கின்றானோ, அவர்களுக்கு இது இலகுவானதே! அடியான் அதை அடைந்துகொள்ள செய்யவேண்டியது, அல்லாஹ்வுடன் உண்மையாக நடந்துகொண்டு, எப்போதும் அவனிடம் இறைஞ்சி, தனது உள்ளத்தை அவன் முன்னிலையில் தாழ்ந்த நிலையிலும், எறியப்பட்ட நிலையிலும் விழவைப்பதாகும். அதற்கு உதவியாக இருப்பது, உண்மையான இறைஅன்பும், உள்ளத்தாலும் நாவாலும் எப்போதும் அவனை நினைப்பதும், பின்வருகின்ற ஏனைய சீர்கெடுக்கும் காரணிகளைத் தவிர்ப்பதும் தான். இதை அவர் அடைவதென்றால், நல்லமல்கள், அல்லாஹ்விடமிருந்து ஒரு சக்தி, உண்மையான மனவுறுதி, அல்லாஹ் அல்லாதவரை நேசிக்காமல் இருத்தல் ஆகிய விடயங்கள் கட்டாயமாகும்.  

உள்ளத்தை சீர்கெடுக்கும் இரண்டாம் காரணி கற்பனைக் கடலில் பயணிப்பதாகும். அது கரையற்ற ஒரு கடல். உலகில் வங்கரோத்துக்காரர்கள் பயணிக்கும் கடல். அதனாலேயே, ‘கற்பனைகள் வங்கரோத்துக்காரர்களின் முதல்’ எனக் கூறப்படுகின்றது. அதில் பயணிப்பவர்களின் பயணப் பொதி ஷைத்தானின் வாக்குகளும், போலியான சாத்தியமற்ற கற்பனைகளுமாகும். பிணத்தை நாய்கள் சூழ்ந்து விளையாடுவதைப் போல, பொய்யான மேலெண்ண அலைகள், மற்றும் போலியான கற்பனைகள் அதில் பயணிப்பவர்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும். மேலும் அது கீழ்த்தரமான, இழிவான, மட்டகரமான அனைத்து ஆத்மாக்களதும் சொத்து. கண்கூடான உண்மைகளை அடைந்துகொள்வதற்கான இலட்சியம் அவைகளிடம் கிடையாது. மாறாக, அவற்றிற்குப் பதிலாக கற்பனை எண்ணங்களை எடுத்துக்கொண்டுவிட்டன. அவ்வாத்மாக்கள் ஒவ்வொன்றும் அவற்றின் நிலைமையப் பொறுத்திருக்கும். சிலர் ஆட்சி, அதிகாரத்தைக் கனவு காண்பர். சிலர் பூமியில் சுற்றித்திரிவதாகக் கனவு காண்பர். சிலர் சொத்துக்களையும் பணத்தையும் அடைவதாகக் கனவு காண்பர். இன்னும் சிலர் பெண்களையும் கவர்ச்சியான ஆண்களையும் அடைவதாகக் கனவு காண்பர். கற்பனை செய்பவன் தான் விரும்பும் பொருளை தனது மனக்கண் முன் உருவகப்படுத்தி, அதை அடைந்துவிட்டதாகவும், அனுபவித்துவிட்டதாகவும் கனவு காண்பான். அவ்வாறு கனவு கண்டுகொண்டிருக்கும் போதே, கண்விழித்துப் பார்த்தால், தனது விரிப்பும் கையுமென இருப்பான்.

உயர்ந்த இலட்சியம் உடையவர்களின் மேலெண்ணங்கள், அறிவையும், ஈமானையும், அல்லாஹ்விடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் நற்கிரியைகளையும் சூழாக சுற்றிக்கொண்டிருக்கும்.

இவரது மேலெண்ணங்கள் ஈமானாகவும், பிரகாசமாகவும், ஞானமுமாக இருக்க, அவர்களது மேலெண்ணங்கள் போலியாகவும், ஏமாற்றமாகவும் இருக்கும்.

நன்மையை மேலெண்ணம் வைப்பவனை நபியவர்கள் புகழ்ந்துள்ளார்கள். சிலபோது, சில அம்சங்களில் அவனது கூலியை அச்செயலை செய்பவனின் கூலிக்கு சமப்படுத்தியுள்ளார்கள். உதாரணமாக, ஒருவர் கூறுகினறார், ‘என்னிடத்தில் பணம் இருந்திருந்தால், தனது பணத்தின் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சி, அதன் மூலம் தன் உறவுகளை சேர்ந்து நடந்து, அதன் கடமைகளை நிறைவேற்றுகின்ற இன்ன நபர் அமல் செய்வது போன்று, நானும் செய்திருப்பேன்’ நபியவர்கள், ‘இவ்விருவரும் கூலியில் சமனானவர்கள்’ என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் தங்களது இறுதி ஹஜ்ஜில், தான் தமத்துஉ(1) செய்து தஹல்லுல்(1) ஆகியிருக்கவேண்டும் என்றும் குர்பான் பிராணியைக் கொண்டுவந்திருக்கக் கூடாது என்றும் ஆசைப்பட்டார்கள். எனினும் அவர்கள் கிரான்(1) செய்திருந்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு கிரான் செய்தமைக்காக அதன் மூலியையும், தமத்துஉவிற்கு ஆசைப்பட்டதால் அதன் கூலியையும் வழங்கி இரு கூலிகளையும் கொடுத்தான்.  

(1) தமத்துஉ, கிரான் என்பன ஹஜ் செய்யும் இரு முறைகளாகும். தஹல்லுல் என்பது ஹஜ், அல்லது உம்ராக் கிரியைகளை செய்து முடிப்பதன் மூலம் ஹஜ், உம்ராவிற்கான நிய்யத்தினால் தடுக்கப்பட்டவற்றை ஹலாலாக்கிக் கொள்தல் ஆகும்.

உள்ளத்தை சீர்கெடுக்கும் மூன்றாவது காரணி. அல்லாஹ் அல்லாதவர் மீது நம்பிக்கை வைப்பதாகும். உள்ளத்தைக் கெடுக்கும் காரணிகளில் மிகப் பாரதூரமானது இதுவே. இதைவிட உள்ளத்தைப் பாதிக்கும் எதுவும் கிடையாது. உள்ளத்தை அல்லாஹ்வை விட்டும் துண்டிக்கின்ற, அதற்கும் அதன் சந்தோசம், நலவுகளுக்கும் மத்தியில் திரையை ஏற்படுத்துகின்ற மிகப் பெரிய காரணி இதுவே. ஏனெனில் உள்ளம் அல்லாஹ் அல்லாதவர் மீது நம்பிக்கை வைத்துவிட்டால், அதனிடமே அல்லாஹ் அதனை சாட்டிவிடுவான். எதற்காக அதன் மீது உள்ளம் நம்பிக்கை வைத்துள்ளதோ, அந்நோக்கத்தை அடைய அல்லாஹ் அதற்கு உதவமாட்டான். எனவே, அல்லாஹ் அல்லாதவரை நம்பிக்கை கொண்டு, அதனையே முன்னோக்கிய காரணத்தால், தன் நோக்கத்தை அல்லாஹ்வைக் கொண்டு நிறைவேற்றிக் கொள்ளும் பாக்கியம் அதற்குத் தப்பிப் போகின்றது. எனவே, தனக்குரியதை அல்லாஹ்வைக் கொண்டு அடைந்துகொள்ளவுமில்லை. தான் நம்பிக்கை வைத்திருப்பவனிடமிருந்து அடைந்து கொள்ளவும் இல்லை.

அல்லாஹ் கூறுகின்றான். ‘அவர்கள் அல்லாஹ்வைத் தவிர கடவுள்களை எடுத்துக்கொண்டார்கள். இவர்களுக்கு அவர்கள் உதவியாக இருக்கவேண்டும் என்பதே அதன் காரணம். அவ்வாறல்ல. இவர்கள் வணங்கியதை அவர்கள் மறுப்பார்கள். மேலும், இவர்களுக்கு எதிராகவும் இருப்பார்கள்.’ (ஸூரா மர்யம் : 81,82).

மேலும் அல்லாஹ் கூறுகின்றான், ‘அவர்கள் உதவிசெய்யப்பட வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வைத் தவிர கடவுள்களை எடுத்துக்கொண்டுள்ளார்கள். அவர்கள் இவர்களுக்கு உதவி செய்ய சக்திபெறமாட்டார்கள். மேலும், அவர்கள் இவர்களுக்கு (எதிராக சாட்சிகூற) முன்னிலைப் படுத்தப்படும் படையினர்.’ (ஸூரா யாஸீன் : 74,75)

மனிதர்களில் அதிகம் அல்லாஹ்வால் கைவிடப்படுபவன், அல்லாஹ் அல்லாதவன் மீது நம்பிக்கை வைத்தவனே! அவனிடமிருந்து தப்பிப் போன வெற்றி, சந்தோசம், மற்றும் நலவுகள் என்பன அவன் நம்பிக்கை வைத்திருப்பவனிடம் பெற்றுக்கொண்டவற்றை விட அதிகமாகும். அதேநேரம் அவனிடமிருந்து இவன் பெற்றுக்கொண்டவை அழிந்துபோகவும் அதிகம் வாய்ப்புள்ளவை. அல்லாஹ் அல்லாதவரிடம் நம்பிக்கை வைத்துள்ளவனுக்கு உதாரணம், சூட்டிலிருந்தும், குளிரிலிருந்தும் மிகப் பலவீனமான வீடாகிய சிலந்தி வலையைக் கொண்டு பாதுகாப்பு எடுத்துக்கொண்டவனைப் போலாகும்.

இணைவைப்பின் அடிப்படை மேலும் அது நிறுவப்பட்டுள்ள அடித்தளம் அல்லாஹ் அல்லாதவரிடம் நம்பிக்கை வைப்பதாகும். அவ்வாறு செய்பவர் இகழப்பட்டுள்ளார். மேலும், அவர் உதவியும் மறுக்கப்படுவார். அல்லாஹ் கூறுகின்றான், ‘அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை ஆக்கிக் கொள்ளாதே! அவ்வாறு செய்தால் நீ இகழப்பட்டவனாகவும், உதவி மறுக்கப்பட்டவனாகவும் இருந்துவிடுவாய்.’ (ஸூரா அல்இஸ்ரா : 22) அதாவது, உன்னைப் புகழும் யாருமில்லாமல் இகழப்பட்டவனாகவும், உனக்கு உதவும் யாருமில்லாமல் உதவி மறுக்கப்பட்டவனாகவும் ஆகிவிடுவாய். சிலர் (உதவி மறுக்கப்பட்டு) மிகைக்கப்பட்டிருப்பர். அதே நேரம் புகழுக்குரியவர்களாக இருப்பர். உதாரணமாக, அநியாயமாக மிகைக்கப்பட்டுள்ள ஒருவனைப் போல. இன்னும் சிலர் இகழுக்குரியவர்களாக இருப்பர். அதேநேரம், உதவி செய்யப்படுபவராகவும் இருப்பர். உதாரணமாக, அநியாயமாக அடக்கியாளும் ஆட்சியாளனைப் போல. இன்னும் சிலர் புகழுக்குரியவராகவும், அதேநேரம் உதவிசெய்யப்படுபவராகவும் இருப்பர். உதாரணமாக, நியாயமாக வழியில் ஆட்சியை அமைத்துக் கொண்டவனைப் போல. இந்த நான்கு பங்குகளிலும் அல்லாஹ் அல்லாதவனிடம் நம்பிக்கை வைப்பவனின் பங்கு மிகத் தாழ்ந்ததாகும். அவன் புகழுக்குரியவனும் அல்ல. உதவி செய்யப்படுபவனும் அல்ல.

உள்ளத்தை சீர்கெடுக்கும் நான்காம் காரணி உணவாகும். இரண்டு விதமான உணவுகள் உள்ளத்தைக் கெடுக்கின்றன.

1. குறிப்பிட்ட அவ்வுணவு அடிப்படையிலேயே கெட்டதாக இருத்தல். உதாரணமாக, ஹராமான உணவுகள். இவை இரண்டு வகைப்படும்.

1) அல்லாஹ்வின் உரிமைக்காகத் தடைசெய்யப்பட்டவை. உதாரணமாக, இறந்த பிராணிகள், இரத்தம், பன்றி இறைச்சி, வேட்டைப் பல் உள்ள ஐவாய் மிருகங்கள், வேட்டையாடும் நகம் உள்ள பறவைகள்.

2) அடியார்களின் உரிமைக்காகத் தடைசெய்யப்பட்டவை. உதாரணமாக, திருடப்பட்டவைகள், பறித்தெடுக்கப்பட்டவைகள், கொள்ளையடிக்கப்பட்டவைகள், பலவந்தமாகவோ, அல்லது வெட்கத்தினாலோ உரியவரின் அனுமதியின்றி எடுக்கப்பட்டவை.

2. எல்லைமீறிப் போவதால் பாதிப்பை ஏற்படுத்துபவை. உதாரணமாக, ஹலாலான உணவில் வீண்விரயம் செய்தல், அளவுக்கதிகமாக வயிற்றை நிரப்புதல். இது அவருக்கு வணக்கங்களில் ஈடுபடுவதைப் பாரமாக்கும். மேலும், தனது வயிற்றை நிரப்பிக் கொள்ளும் வரை அதற்காக முயற்சி செய்வதிலும், செலவழிப்பதிலும் அவரை ஈடுபடுத்தும். வயிற்றை நிரப்பிக் கொண்டால் அதைக் கவனிப்பதிலும், அளவை மீறிய உணவின் பாதிப்பை விட்டும் தற்காப்பதிலும், அதன் பாரத்தினால் துன்புறுவதிலும் அவரை ஈடுபடச் செய்யும். அந்த உணவு அவரிடத்தில் இச்சையின் தூண்டல்களையும், இரத்தத்தில் ஷைத்தானின் ஓடுபாதைகளையும் பலப்படுத்தி, விசாலமாக்கும். ஏனெனில் ஷைத்தான் மனிதனின் இரத்தம் ஓடுமிடமெல்லாம் ஓடுகின்றான். நோன்பு அவன் ஓடும் இடங்களை நெருக்கடிக்குள்ளாக்கி, அவனது பாதைகளை அடைக்கின்றது. வயிறு நிரம்புவது அப்பாதைகளை இலகுபடுத்தி, விசாலமாக்கின்றது. யார் அதிகம் சாப்பிடுகின்றாரோ அவர் அதிகம் அருந்துவார். பின்னர் அதிகம் உறங்குவார். எனவே, அதிகம் நட்டமடைவார். பிரபல்யமான ஒரு நபிமொழி இவ்வாறு கூறுகின்றது, ‘தனது வயிற்றை விட கெட்ட ஒரு பையை மனிதன் நிரப்பவில்லை. தனது முள்ளந்தண்டை நிமிர்த்து வைக்குமளவு சிறிய சில கவளங்கள் அவனுக்குப் போதுமாக இருக்கும். அவ்வாறு அதைவிட அதிகம் உண்பது கட்டாயமாக இருந்தால், மூன்றில் ஒரு பகுதி உணவிற்கும். இன்னுமொரு பகுதி நீருக்கும் எஞ்சிய மூன்றில் ஒரு பகுதி மூச்சிற்கும் என வைக்கட்டும்.’

ஒரு சம்பம் கூறப்படுகின்றது, அதாவது, இப்லீஸ் – அல்லாஹ் அவனை சபிப்பானாக – யஹ்யா பின் ஸகரிய்யா (அலை) அவர்கள் முன் தோன்றுகின்றான். அப்போது யஹ்யா (அலை) அவர்கள், ‘நீ என்னிடமிருந்து எதையாவது அடைந்துகொண்டுள்ளாயா?’ எனக் கேட்கிறார்கள், அதற்கு இப்லீஸ், ‘இல்லை. எனினும் ஓர் இரவு உமக்கு ஓர் உணவு வழங்கப்பட்டது. நீங்கள் அதனால் வயிறு நிரம்பும் வரை நான் உங்களுக்கு அதில் அதிக விருப்பத்தை ஏற்படுத்தினேன். பின்பு நீங்கள் உங்கள் வழமையான அமல்களை செய்யாமல் உறங்கிவிட்டீர்கள்.’ என்றான். அதற்கு யஹ்யா (அலை) அவர்கள், ‘எந்த உணவையும் வயிறு நிரம்ப சாப்பிடமாட்டேன் என அல்லாஹ்வுக்காக என் மீது நான் கடமையாக்கிக் கொண்டுவிட்டேன்.’ எனக் கூறினார்கள். அதற்கு இப்லீஸ், ‘நானும் ஒருபோதும் எந்த மனிதனுக்கும் உபதேசிக்கமாட்டேன் என அல்லாஹ்வுக்காக என் மீது நான் கடமையாக்கிக் கொண்டுவிட்டேன்.’ எனக் கூறினான்.

உள்ளத்தைக் கெடுக்கும் ஐந்தாவது காரணி அதிக தூக்கமாகும். ஏனெனில் அது உள்ளத்தை மரணிக்கச் செய்யும். உடம்பைப் பாரமாக்கும். நேரத்தை வீணடிக்கும். அதிக பராமுகத்தையும், அதிக சோம்பலையும் தரும். தூக்கத்தில் அதிகம் வெறுக்கப்படும் வகைகள் உள்ளன. உடம்பிற்கு எந்தவொரு பயனையும் தராமல் கெடுதியையே தரும் வகைகளும் உள்ளன. மிகப் பயனுள்ள தூக்கம் என்னவெனில், தூங்குவதற்கான அதிக தேவை வரும் போது தூங்குவதாகும். இரவின் இறுதியில் தூங்குவதை விட அதன் ஆரம்பத்தில் தூங்குவது பயனுள்ளது. மேலும் வரவேற்கப்படவேண்டியது. பகலின் இரு ஓரங்களிலும் தூங்குவதை விட நடுப்பகலில் தூங்குவது பயனுள்ளது. தூக்கம் அவ்விரு ஓரங்களையும் நெருங்கும் போதெல்லாம் அதன் பயன் குறைவடையும். பாதிப்பு அதிகமாகும். குறிப்பாக அஸ்ர் நேரம் தூங்குவது, மேலும் இரவில் விழித்திருந்தவரைத் தவிர வேறு யாரும் பகலின் ஆரம்ப நேரத்தில் தூங்குவது.

ஸுபஹ் தொழுகைக்கும் சூரியன் உதிப்பதற்கும் இடையில் தூங்குவது அவர்களிடத்தில் வெறுக்கப்பட்ட ஒன்றாகும். ஏனெனில் அது நன்மைகளை அள்ளிக்கொள்ளும் நேரம். அல்லாஹ்வை நோக்கிப் பயணிப்பவர்களிடம், அந்த நேரத்தில் பயணிப்பதற்கு விஷேட சிறப்பம்சம் உண்டு. அவர்கள் இரவு முழுவதும் பயணித்திருந்தாலும் சூரியன் உதிக்கும் வரையுள்ள அந்த நேரத்தில் பயணிக்காமல் இருந்துவிடுவதை அனுமதிக்க மாட்டார்கள். ஏனெனில், அது பகலின் ஆரம்பம். மேலும் அதன் திறவுகோல், ரிஸ்குகள் இறங்குகின்ற, அவை பங்குவைக்கப்படுகின்ற நேரம், அபிவிருத்தி இறங்குகின்ற நேரம். அதிலிருந்தே பகல் உருவாகின்றது. எனவே அந்தநேரத்தில் நிலைமையே பகல் முழுதும் நீடிக்கப் போகின்றது. தவிர்க்கமுடியாத ஒரு நிலையில் தான் அந்தநேரத்தில் தூங்குவது அவசியமாகும்.

சுருக்கமாக, பயனுள்ள, நடுநிலையான தூக்கம் இரவின் முதல் அரைப்பகுதியிலும், இரவை ஆறாகப் பிரிக்கும் போது, அதன் இறுதி ஆறில் ஒன்றில் தூங்குவதுமாகும். ஆக மொத்தம் எட்டு மணித்தியாலங்களாகும். வைத்தியர்களிடத்தில் இதுதான் நடுநிலையான உறக்கமாகும். இதைவிட அதிகரித்தால், அல்லது குறைந்தால் அதற்கேற்ப ஒரு தாக்கத்தை அது இயல்பில் ஏற்படுத்தும்.

பயனற்ற இன்னுமொரு தூக்கம் சூரியன் மறைந்தவுடன் இரவின் ஆரம்பத்தில், இஷாவின் ஒரு பகுதி போகும் வரைத் தூங்குவதாகும். நபி (ஸல்) அவர்கள் அதை வெறுப்பவர்களாக இருந்தார்கள். மார்க்கத்திலும், இயல்பிலும் அது வெறுக்கப்படும் ஒன்றாகும்.

அதிக உறக்கம் மேற்கூறிய ஆபத்துகளைக் கொண்டு வருவது போல, தூக்கத்தை தடுத்து நிறுத்துவதும், கெட்ட, காய்ந்த மனநிலை, தடுமாற்றமான உள்ளம், விளங்குவதற்கும், செயற்படுவதற்கும் உதவும் ஈரலிப்புத் தன்மைகள் காய்ந்து போதல் போன்ற மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். மனித உள்ளம், உடல் இரண்டையும் பாதிக்கும் கொடிய நோய்களையும் ஏற்படுத்தும். எதுவும் நிலைத்து நிற்பது நடுநிலைமையாக இருப்பது கொண்டே. யார் நடுநிலைமையப் பற்றிப் பிடித்துக் கொள்கின்றாரோ, அவர் நலவின் பல வாயில்களை தனதாக்கிக் கொள்கின்றார்.  

-சுவனப்பாதை
Previous Post Next Post