இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?

செல்வம் சேர்த்தல், அழகான பெண்களை அடைவது, குழந்தைச் செல்வங்கள் பெறுவது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக ஆசை வைப்பது இவைகள் தான் பெரும்பாலான சதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய ஆசைகளாகும். இவைகளை வெறுத்து ஒதுக்குவதை இஸ்லாம் கூற வில்லை. ஆனால் இவைகளை அடைவதே தனது வாழ்வின் இலட்சியம் என பலர் தமது வாழ்நாள் முழுக்க செலவழித்து அவைகளை அடைவதற்காக எதை எதையோ இழந்து, குறிப்பாக தமது வாழ்நாட்களின் பெரும் பகுதியையும், கை கால் ஆரோக்கியமாக இருக்கும் இளமையையும் இழந்து விடுகின்றனர். ஒரு மனித படைப்பின் நோக்கம் இது மட்டுமா என்றால் நிச்சயமாக இல்லை சகோதர, சகோதரிகளே!

நம்மைப் படைத்த இறைவனுக்கு பயந்து, அவனையே வணங்கி, அவனுடைய திருப்தியை பெற வேண்டி நல்ல அமல்கள் புரிவது என்பதுதான் ஒவ்வொருவருடைய வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும். அந்தக் குறிக்கோளை அடைவதற்காக அவர் கடுமையாக முயற்சி செய்து உழைக்க வேண்டும். அதற்குண்டான பயிற்சியை தனது ஆத்மாவிற்கு அவர் கொடுக்க வேண்டும். அது தான் நம்மை படைத்த அகில உலக இரட்சகனாகிய அல்லாஹ் இந்த மனித சமுதாயத்தின் மீது ஏற்படுத்தியிருக்கின்ற தேர்வு (பரிட்சை) ஆகும். இந்த தேர்வில் நாம் அனைவரும் வெற்றி பெற வேண்டியது மறுமை வாழ்விற்கு மிக மிக அவசியமாகிறது.

நம்மில் எத்தனை பேர் நிரந்தரமற்ற இந்த மாய உலகத்தின் மீதுள்ள அதீத ஆசைகளைக் கட்டுப்படுத்தி, அதற்குப் பதிலாக மறுமையில் அல்லாஹ்வின் வாக்குறுதியான நிரந்தரமான சுவனபதியின் சோலைகளையும், இறைவனின் திருப்தியையும் பெறுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்?

யார் ஒருவர் அல்லாஹ்வுக்கு பயப்படுவதைத் தேர்ந்தெடுத்து, ஆசைகளைக் குறைப்பதன் மூலம் தனது ஆத்மாவைக் கட்டுப்படுத்தி, தனது மனோஇச்சைகளையும் கட்டுப்படுத்தி, தனது விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கிணங்க ஆக்குகிறாரோ அவர் தான் அல்லாஹ் விதித்த தேர்வில் வெற்றி பெற்றவராவார்.

ஆனால் யார் ஒருவர், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வைத் தேர்ந்தெடுத்து, அழியக் கூடிய உலகின் ஆடம்பரங்கள் மற்றும் இன்பங்கள் இவற்றின் பின்னால் சென்று, தனது மனோ இச்சைகளுக்குக் கட்டுப்பட்டு நம்மைப் படைத்த இறைவனுக்குக் கட்டுப்பட மறுக்கிறாறோ அவர் தமக்கு அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட தேர்வில் தோல்வி அடைந்தவராவார்.

அத்தியாயம் 79, ஸூரத்துந் நாஜிஆத் (பறிப்பவர்கள்), வசனங்கள் 34-41 ல் அல்லாஹ் கூறுகிறான்: –

  • 79:34 எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
  • 79:35 அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
  • 79:36 அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
  • 79:37 எனவே, எவன் வரம்பை மீறினானோ-
  • 79:38 இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
  • 79:39 அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
  • 79:40 எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
  • 79:41 நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.

இறையச்சத்தை (தக்வா) அதிகப்படுத்துவது எவ்வாறு?

ஒருவர் தன்னுடைய இறையச்சத்தை (தக்வாவை) அதிகப்படுத்துவதற்கு முன்னால் அவர் அறிந்துக் கொள்ள வேண்டியவைகளாவன: –

  • நம்மைப் படைத்த இறைவன் யார்?
  • எதற்காக இப்பேரண்டத்தையும் மற்றும் அதில் உள்ளவற்றையும் படைத்தான்?
  • எதற்காக நம்மைப் படைத்திருக்கிறான்?
  • இறைவனை திருப்தி படுத்தக் கூடிய செயல்கள் யாவை?
  • இறைவனுக்கு கோபத்தை ஏற்படுத்தக் கூடிய செயல்கள் யாவை?
  • இறைவன் அவனுடைய கட்டளைகளை ஏற்று நடக்கக் கூடியவர்களுக்கு வாக்களித்திருக்கும் நன்மைகள் யாவை?
  • இறைவனுடைய கட்டளைகளை மீறி நடப்பவர்களுக்கு அவன் தரப்போகும் தண்டனைகள் யாவை?

என்பன போன்ற வினாக்களுக்கான விடைகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.

நம்மைப் படைத்த இறைவன் அனைத்திற்கும் வல்லமையும் ஆற்றலும் படைத்தவன் மட்டுமல்லாது மிக்க கருணையாளனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான். அல்லாஹ் மனிதனைப் படைத்து மேற்கண்ட வினாக்களுக்கு அவனாகவே விடைத் தேடிக் கொள்ளுமாறு அவனைத் தன்னந் தனியாக விட்டு விடவில்லை. மாறாக அல்லாஹ் மேற்கூறிய அனைத்து வினாக்களுக்கும் உரிய பதில்களை, தெளிவுகளை மனித குலத்திற்கு வழிகாட்டியாக அவன் அருளிய திருக்குர்ஆனிலே தெள்ளத் தெளிவாக விளக்கியிருக்கிறான்.

அத்தியாயம் 2, ஸூரத்துல் பகரா (பசு மாடு), வசனங்கள் 2-5 ல் அல்லாஹ் கூறுகிறான்:

  • 2:2 இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை; பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.
  • 2:3 (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள்.
  • 2:4 (நபியே!) இன்னும் அவர்கள் உமக்கு அருளப்பெற்ற (வேதத்)தின் மீதும் உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கை கொள்வார்கள்; இன்னும் ஆகிரத்தை(மறுமையை) உறுதியாக நம்புவார்கள்.
  • 2:5 இவர்கள் தாம் தங்கள் இறைவனின் நேர்வழியில் இருப்பவர்கள்; மேலும் இவர்களே வெற்றியாளர்கள்.

எனவே, ஒருவர் தன்னைப் படைத்த இறைவனையும், தனது நிரந்தரமற்ற இந்த குறுகிய உலக வாழ்வின் சோதனைகளைப் பற்றியும் அறிந்துக் கொள்வதற்கு மிகச்சிறந்த வழி என்னவென்றால்: –

  • அவர் அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அந்த வல்ல இறைவன் மனிதர்களின் மீது கருணைக் கொண்டு அவர்களுக்கு நேர்வழி காட்ட இறக்கி வைத்த அருள் மறையாம் திருமறை அல்குர்ஆனை பொருள் உணர்ந்து படித்து, புரிந்துக் கொண்டு, அது கூறும் வாழ்வியல் நெறிமுறைகளுக்குக் கட்டுப்பட்டு, அவற்றைப் பின்பற்றி நடப்பதுவேயாகும்.

இவ்வாறு நாம் அல்குர்ஆனை முழுமையாகப் பின்பற்றி நடப்பது என்று முடிவு செய்து, அதன்படி நடந்தால், நம்பிக்கை மற்றும் இந்த உலக வாழ்வின் சோதனைகள் ஆகியவற்றுக்கான அனைத்துக் கேள்விகளுக்குமான தெளிவான விடைகள் நமக்குத் தெள்ளத் தெளிவாகத் தெரியவரும். அனைத்தையும் அறிந்தவனான அல்லாஹ் இதையே இறை நம்பிக்கையாளர்களிடமிருந்து எதிர்பார்க்கிறான்.

இவ்வாறு நாம்,

  • நம்மைப் படைத்த இறைவன் யார் என்றும்,
  • இறைவன் நம்மைப் படைத்திருப்பதற்கான நோக்கத்தையும் அறிந்து,
  • இறைவன் வாக்களித்திருக்கும் என்றும் அழியாத சுவனபதியின் நிரந்தரமான வாழ்வை பெறுவதற்காக,
  • நம்முடைய விருப்பு வெறுப்புகளை அல்லாஹ்வின் கட்டளைகளுக்கினங்க அமைத்துக் கொள்வோமேயானால், நம்முடைய முழு வாழ்க்கையின் உன்னதமான இலட்சியம், குறிக்கோள் சுவனபதியை அடைவதை நோக்கியே மாறும். இன்ஷா அல்லாஹ்.

இவ்வாறு, நாம் நமது வாழ்வின் உன்னதமான இலட்சியமாக சுவனபதியை அடைவதையும், அல்லாஹ் மறுமையில் அளிக்க விருக்கும் அளப்பரிய செல்வங்களைப் பெறுவதையும் அமைத்துக் கொண்ட பிறகு, நமக்கு நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வின் ஆடம்பரங்களும், செல்வங்களும், இன்பங்களும், ஆசைகளும் மதிப்பற்றவைகளாகவும் முக்கியத்துவம் இல்லாதவைகளாகவும் ஆகிவிடும். நம்முடைய முழு முயற்சிகளும் தவிர்க்க இயலாத மறுமையை நோக்கியே அமையும்.

இந்த நிலையையே, அதாவது, ஒவ்வொருவரும் தவிர்க்க இயலாமல் மறுமையின் ஒரே நீதிபதியாகிய, ஒரே இறைவனாகிய அந்த அல்லாஹ் ஸுப்ஹானத்தஆலாவின் முன்னிலையில் நிற்பதை அஞ்சக் கூடியவர்களாக இருப்பதையே “இறையச்சம்” அல்லது “பயபக்தி” என அல்லாஹ் திருமறையில் கூறுகிறான்.

  • இந்த இறையச்சமே, நம்முடைய வாழ்நாளில் நற்கருமங்கள் செய்வதற்குத் தூண்டி, அதிக நம்மைகளைக் கிடைக்கச் செய்து, அல்லாஹ்வின் திருப்தியைப் பெற்றுத்தந்து, மறுமையில் நமக்கு இறைவன் வாக்களித்த சுவர்க்கத்தைப் பெற்றுத் தரும். இன்ஷா அல்லாஹ்.
  • இந்த இறையச்சமே, நம்மை அல்லாஹ்வுக்கு கோபத்தை உருவாக்குகிற செயல்களைச் செய்வதை விட்டும் தடுத்துவிடும். இன்ஷா அல்லாஹ்.

தக்வா (இறையச்சம்) என்பது: –

  • அல்லாஹ்வுக்கு விருப்பமில்லாத, அவனுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்தவொரு செயலைச் செய்வதில் இருந்தும் தவிர்ந்து இருப்பதும்,
  • அல்லாஹ் மற்றும் அவனது திருத்தூதர் (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்கின்ற நற்கருமங்களைச் செய்வதும் ஆகும்.

தக்வா (இறையச்சம்) என்பது: –

  • நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்்பொழுதையும், தவிர்க்க இயலாத மறுமை நாளில் நாம் நம்மைப் படைத்த இறைவனின் முன்னிலையில் நிறுத்தப்படுவோம் என்று உறுதியாக நம்புவதும்,
  • நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் இறைவனுக்கு கணக்கு கூறக் கூடியவர்களாக நாம் இருக்கிறோம் என்றும் உறுதியாக நம்புவதும் ஆகும்.

தக்வா (இறையச்சம்) என்பது: –

  • ஒவ்வொரு செயலையும் செய்வதற்கு முன்னால், அந்தச் செயலைச் செய்தால் இறைவன் திருப்தியுறுவானா அல்லது கோபமடைவானா என ஆராய்ந்து தீர்மானிப்பதாகும்.
  • அந்தச் செயலைச் செய்தால் இறைவன் திருப்தியுறுவான் என கருதினால் அதை முழு மனதோடு இறை திருப்திக்காக மட்டுமே செய்வதாகும்.
  • அந்தச் செயலைச் செய்தால் இறைவன் கோபமடைவான் என கருதினால் அதைச் செய்வதை விட்டும் உடனடியாக தவிர்ந்துக் கொள்வதாகும்.

தக்வா (இறையச்சம்) என்பது: –

  • நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அவைதற்காக என்ற எண்ணத்தின் அடிப்படையிலே நற்கருமங்கள் புரிவதும்
  • நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்்பொழுதிலும் அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகிற எந்த ஒரு செயலை விட்டும் தவிர்ந்திருப்பதும் ஆகும்.

நாம் அல்குர்ஆனை படித்துப் பார்த்தால், இறைவன் சுவனபதியை வாக்களிக்கும் பல இடங்களில் தக்வாவை (இறையச்சத்தை)ப் பற்றியும் கூறுவதைப் பார்க்கலாம்.

அத்தியாயம் 3, ஸூரத்துல்ஆல இம்ரான்;(இம்ரானின் சந்ததிகள்), வசனம் 133ல் அல்லாஹ் கூறுகிறான்: –

இன்னும் நீங்கள் உங்கள் இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும், சுவனபதியின் பக்கமும் விரைந்து செல்லுங்கள்; அதன் (சுவனபதியின்) அகலம் வானங்கள், பூமியைப் போலுள்ளது; அது பயபக்தியுடையோருக்காகவே தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் 50, ஸூரத்து ஃகாஃப், வசனங்கள் 31-33 ல் அல்லாஹ் கூறுகிறான்:-

50:31 (அன்றியும் அந்நாளில்) பயபக்தியுடையவர்களுக்கு சுவர்க்கம் தொலைவில்லாத நிலையில் மிகவும் சமீபமாக்கப்படும்.

50:32 ‘இது தான் உங்களுக்கு வாக்களிக்கப்பட்டதா(ன சுவர்க்கமா)கும்; எப்பொழுதும் இறைவனையே நோக்கி, (பாவத்தை தவிர்த்துப்) பேணி நடந்த ஒவ்வொருவருக்கும் (இது உரியது).’

50:33 எவர்கள், மறைவிலும் அர்ரஹ்மானை அஞ்சி நடந்து கொண்டிருக்கிறார்களோ அவர்களுக்கும் (அவனையே) முற்றிலும் நோக்கிய இதயத்துடன் வருவோருக்கும் (இது வாக்களிக்கப்பட்டிருக்கிறது).

அத்தியாயம் 52, ஸூரத்துத் தூர் (மலை), வசனங்கள் 17-18 ல் அல்லாஹ் கூறுகிறான்:

52:17 நிச்சயமாக, பயபக்தியுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (இறையருளில்) இன்புற்றும் இருப்பார்கள்.

52:18 அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அளித்ததை அனுபவித்தவர்களாகயிருப்பார்கள் – அன்றியும், அவர்களுடைய இறைவன் நரக வேதனையிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொண்டான்.

அத்தியாயம் 68, ஸூரத்துல் கலம் (எழுதுகோல்), வசனம் 34 ல் அல்லாஹ் கூறுகிறான்: –

68:34 நிச்சயமாக, பயபக்தியுடையோருக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் (பாக்கியமுடைய) சுவனச் சோலைகள் உண்டு.

அத்தியாயம் 16, ஸூரத்துந் நஹ்ல் (தேனி), வசனம் 31 ல் அல்லாஹ் கூறுகிறான்: –

16:31 என்றென்றும் நிலைத்திருக்கக் கூடிய சுவனபதிகளில் அவர்கள் நுழைவார்கள்; அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; அவர்களுக்கு அங்கே அவர்கள் விரும்புவதெல்லாம் கிடைக்கும். இவ்வாறே பயபக்தியுடையோருக்கு அல்லாஹ் நற்கூலியளிக்கிறான்.

அத்தியாயம் 25, ஸூரத்துல் ஃபுர்ஃகான்(பிரித்தறிவித்தல்), வசனங்கள் 15-16 ல் அல்லாஹ் கூறுகிறான்: –

25:15 அ(த்தகைய நரகமான)து நல்லதா? அல்லது பயபக்தியுடையவர்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள நித்திய சுவர்க்கம் நல்லதா? அது அவர்களுக்கு நற்கூலியாகவும், அவர்கள் போய்ச் சேருமிடமாகவும் இருக்கும்’ என்று (அவர்களிம் நபியே!) நீர் கூறும்.

25:16 ‘அதில் அவர்களுக்கு விரும்பியதெல்லாம் கிடைக்கும்; (அதில்) அவர்கள் நிரந்தரமாகத் தங்குவார்கள் – இதுவே உமது இறைவனிடம் வேண்டிப் பெறக்கூடிய வாக்குறுதியாக இருக்கும்.’

ஆகையால், சகோதர, சகோதரிகளே நாம் மீண்டும் நினைவு கூர்வோம்: – நம்மைப் படைத்த இறைவனைப் பற்றிய பயம், அச்சம் பயபக்தி நம் உள்ளத்தில் இடம்பெறுவதற்கு, நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டு இறையச்சத்துடன் கூடிய வாழ்வு நெறியை மேற்கொள்வதற்குரிய மிகச் சிறந்த வழி என்னவென்றால்: –

அது அல்லாஹ்வின் அருள்மறையாம் திருக்குர்ஆனை பொருள் உணர்ந்து படித்து, புரிந்துக் கொண்டு, அவன் குர்ஆனில் கூறியிருக்கின்ற வாழ்வு நெறிமுறைகளுக்கு முழுவதும் கட்டுப்பட்டு, அவற்றைப் பின்பற்றி நடந்து, நம்முடைய முழு விருப்பு வெறுப்புகளை அல்லாஹ் தன் திரு மறையில் அருளிய கட்டளைகளுக்கிணங்க மாற்றி அமைத்துக் கொள்வதேயாகும்.

அல்லாஹ்வே நமது சாட்சி, யார் சிரத்தையுடன் அல்லாஹ்வுடைய வேதமாகிய திருக்குர்ஆனுக்கு முழுவதும் கட்டுப்பட்டு நடக்கிறாரோ, இன்ஷா அல்லாஹ் அவர் தமது வாழ்நாட்களை அல்லாஹ்வை அதிகமாக வணங்குவதிலும், தொழுகையை நிலை நாட்டுவதிலும், ஜக்காத் கொடுப்பதிலும், ஹஜ் செய்வதிலும், சகோதரத்துவத்தைப் பேணுவதிலும் செலவழிப்பார். மேலும் அவரது ஒவ்வொரு செயலும் அல்லாஹ்வின் திப்பொருத்தத்தை நாடியே இருக்கும்.

அல்லாஹ் ஸுபுஹானத்தஆலா உங்களுக்கும், எங்களுக்கும் மற்றும் முஃமினான ஆண் பெண் அனைவருக்கும் கருணை புரிந்து, அவனது திருப்தியுடன் சுவனபதியைப் பெற்றுத்தரவல்ல அவனது இந்த நேரான பாதையைத் தேர்ந்தெடுக்கும் மன உறுதியைத் தந்து, அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்துகின்ற அனைத்துச் செயல்களிலிருந்தும் தவிர்ந்திருக்கக் கூடிய மன வலிமையத் தந்தருள்வானாகவும். ஆமீன்

Previous Post Next Post