بسم الله الرحمن الرحيم
-உத்தமபாளையம் எம்.எம். அப்துல் காதிர் உமரீ
1. தலாக்
2. மனைவி தன்னுடைய கணவனை குலஃ (விவாகரத்துச்) செய்தல்
தலாக்!
அவ்வப் போது நீதிமன்றங்களாலும், பத்திரிகைகளாலும், சமூக நல அமைப்புகளாலும் விமர்சிக்கப்படும் இஸ்லாமிய விவாகரத்துச் சட்டம், சமீபத்தில் சர்ச்சைகளை எழுப்பி வருகிறது. தலாக் சட்டம் பற்றி மக்களிடையே பிரச்சாரம் செய்தாக வேண்டும் என்ற கருத்தோட்டம் இதனால் பரவலாக்கப்பட்டுள்ளது.
தலாக் சட்டம் இன்றைய முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டும், தவறாகவே நடைமுறைப்படுத்தப்பட்டும் வருகிறது.
இதன் விளைவாக பல பெண்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகிறார்கள். மனித உரிமைகளும் மீறப்படுகின்றன. இப்படியொரு குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டைக் கண்டதும் எதையும் ஆராயாமல் முஸ்லிம்கள் கோபப்படுவதும், ஆவேசப்படுவதும் புத்திசாலித்தனமாகாது.
தலாக் தொடர்பான இன்றைய செயல்பாட்டையும் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட செயல்பாட்டையும் ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திற்கும் வழிகாட்டி, முன்மாதிரி நபி(ஸல்) அவர்கள்தாம் என்பதை எந்த முஸ்லிமும் மறுக்கமாட்டான்.
இஸ்லாமிய அறிஞர்களும், ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகிகளும், இஸ்லாமிய இயக்கத் தலைவர்களும் தலாக் சட்டத்தை முறையாகப் புரிந்து செயல்படவேண்டும்.
இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இறையச்சத்தோடு சிந்தித்து தீர்க்கமான முடிவுக்கு வந்தாலே தலாக் சட்டம் முறையாகப் பயன்படுத்தப்படும்.
மத்ஹபுகள், முன்னோர்களின் நடைமுறைகள், பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் என்று கண்மூடித்தனமான வாதங்களை முன்வைக்காமல் இறைச்சட்டம் என்ன சொல்கிறது என்பதை இவர்கள் அனைவரும் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும்.
கணவன் மனைவி ஆகிய இருவருக்கிடையில் தீராத பிரச்சினைகள் எழும்போது அவர்களுக்குத் தீர்வைச் சொல்வதற்கு இன்றைய உலகில் இஸ்லாத்தைத் தவிர்த்து வேறு யாரிடமும் சரியான சட்டம் இல்லை.
கிருத்துவ மதத்தை இன்று அதிகமான மக்கள் பின்பற்றினாலும், அவர்களிடம் விவாகரத்துச் சட்டம் இல்லை. கிருத்துவத் திருச்சபை இதற்கு அனுமதிப்பதில்லை. இந்திய கிருத்தவர்களுக்கு சமீபத்தில்தான் விவாகரத்துச் சட்டம் உருவாக்கப்பட்டது.
மதம், இனம், தேசம் என்ற அடிப்படையில் விவாகரத்துச் சட்டம் மனித இனத்திற்கு முழுமையான தீர்வைத் தரும் அடிப்படையில் இல்லை.
மனித இனத்திற்கும் முழுமையான தீர்வைத் தரும் அடிப்படையில் விவாகரத்துச் சட்டத்தை இஸ்லாம் மட்டுமே வழங்கியுள்ளது. ஆனால், முஸ்லிம்கள் இச்சட்டத்தைத் தவறாகப் புரிந்துள்ளதாலும், தவறாவே நடைமுறைப்படுத்துவதாலும் மக்கள் இச்சட்டத்தைத் தவறாக எண்ணுகிறார்கள்.
நீதிமன்றத்தில் தலாக் தொடர்பான வழக்கை எடுத்து வாதிடும் வழக்கறிஞருக்கும் அதில் தீர்ப்பளிக்கக் காத்திருக்கும் நீதிபதிக்கும் இஸ்லாம் தெரியாது. திருக்குர்ஆனை அவர்கள் படித்திருக்கவில்லை. நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை அறிந்திருக்கவில்லை. அப்படி இருக்க அவர்களால் இதில் எவ்வாறு நியாயமாகத் தீர்ப்பளிக்க முடியும் என்பதை நன்றாக யோசிக்க வேண்டும்.
முஸ்லிம்கள் இவ்வாறு செய்கிறார்கள்; அவ்வாறு செய்கிறார்கள் எனவே இதில் இப்படித்தான் தீர்ப்பளிக்க வேண்டும் என்று வழக்கறிஞர்கள் வாதிடுவதும், ''ஓ... அப்படியா!"" என்று நீதிபதி தீர்ப்பளிப்பதும் எந்த வகையில் நியாயமாகும்?
இன்று வரை எந்த நீதிபதியாவது தலாக் சட்டத்தைப் பற்றிய பிரச்சினைகள் எழும்போது திருக்குர்ஆன் மற்றும் நபிவழி என்ன சொல்கிறது என்பதை ஆராய்ந்துள்ளார்களா? சட்டங்களை விட்டு விட்டு மனிதர்களின் நடைமுறைகளைப் பார்ப்பது எந்த அடிப்படையில் நியாயமாகும்?
முஸ்லிம்களின் வேதநூல், சட்டநூல், வழிகாட்டும் நூல் திருக்குர்ஆன் என்பதையும், இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வாழ்க்கை நெறிதான் முஸ்லிம்களுக்கு முன்னுதாரணம் என்பதையும் உலகமே அறிந்திருக்கும்போது திருக்குர்ஆனிலும், நபிவழியிலும் தலாக் பற்றி கூறப்பட்டிருப்பது என்ன என்பதைக் கண்டுகொள்ளாமல் நீதிமன்றங்கள் நடந்து கொள்வதும், அவ்வப்போது தலாக் சட்டத்தை தவறாக விமர்சிப்பதும் எந்த வகையில் நியாயமாகும்?
டிடக்டிவ் ஃபோர்ஸ் என்று தங்களைப் பெருமைப்படுத்திக் கொள்ளும் ஊடகங்களாவது இதில் நியாயமாக நடந்து கொள்கின்றனவா?
இந்தக் கட்டுரையைப் படித்த பின்னராவது திருக்குர்ஆன் மற்றும் இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் அடிப்படையில் தலாக் சட்டம் என்ன சொல்கிறது என்பதை இவர்கள் காண்பார்களா?
தலாக் சட்டம் அவசியமா?
திருமணம் என்பது இஸ்லாமியப் பார்வையில் ஒரு வாழ்க்கை ஒப்பந்தம். இது மிகக்கடுமையான ஒப்பந்தமாகும். மனம் விரும்பியபடி இந்த ஒப்பந்தத்தை ஒருவர் செய்து கொள்வதும், முறித்துக் கொள்வதும் கூடாது. இதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.
உங்களிடமிருந்து அவள் பலமான வாக்குறுதியைப் பெற்று ஒருவர் மற்றவருடன் கலந்திருக்கும் நிலையில் நீங்கள் அவளுக்கு அளித்துள்ளதை (மஹர் எனும் ஜீவனாம்சத் தொகையை) எப்படி திரும்பப் பெறமுடியும்? (திருக்குர்ஆன் 4:21) என்று திருக்குர்ஆன் கேட்கிறது.
ஓர் ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக ஒப்பந்தம் செய்து கொண்டு வாழும்போது, பிரச்சினைகள் ஏற்படுவது சகஜம். வீட்டுக்கு வீடு வாசப்படி என்று தமிழன் அன்றே சொன்னான். சில நேரங்களில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் கணவன் மனைவி ஆகிய இருவருக்கிடையில் ஏற்படுகின்றன. இதுபோன்ற நேரங்களில் என்ன செய்வது? இதற்குச் சரியான தீர்வை யார் சொல்வது?
இப்போது மனிதர்களாகிய நாம் ஒரு நியாயமான முடிவுக்கு வந்தே ஆக வேண்டும். மதங்கள், கலாச்சாரங்கள், தேசங்கள் கடந்து நிம்மதியான வாழ்க்கை வேண்டும். கணவனும் மனைவியும் பிரச்சினையின்றி வாழவேண்டும். முடியாத பட்சத்தில் அதற்கு தெளிவான தீர்வு வேண்டும்.
இஸ்லாம் கூறும் தலாக் எனும் விவாகரத்துச் சட்டத்தையும், பிற அரசியல் சாஸனங்களின் விவாகரத்துச் சட்டத்தையும் நியாயமாக ஒப்பிட்டுப் பார்ப்போம். இவற்றில் எது மனித குலத்திற்கு நியாயமான, முழுமையான தீர்வைத் தருகிறதோ அதை மனித குலத்தின் வழிகாட்டியாக எடுத்துக் கொள்ள முன்வருவோம். நாம் சத்தியவாதி என்றால் இந்த முடிவில் உறுதியாக இருப்போம்.
கணவன் மனைவிக்கிடையில் தீர்க்க முடியாத பிரச்சினைகள் ஏற்படும் போது, அவர்களின் திருமணத்தை ரத்துச் செய்வது நல்லதா? அல்லது, இதுதான் விதி என்ற அடிப்படையில் பிரச்சினை என்னதான் வந்தாலும் கணவன் மனைவி என்ற பந்தத்தை முறிக்காமல் விட்டுவிடுவது நல்லதா என்ற கேள்விக்கு.., திருமணத்தை ரத்துச் செய்வதே நல்லது என்ற பதிலை நாம் தந்துள்ளோம்.
ஒரு சமூகத்திற்கு விவாகரத்துச் சட்டம் இல்லை என்றாலோ, விவாகரத்துச் செய்வதற்கு பல ஆண்டுகள் தாமதம் ஏற்பட்டாலோ அங்கு உயிர்ச் சேதங்கள் ஏற்படும் அபாயம் இருக்கிறது. இதன் விளைவைத்தான்.., இன்று நாம் நாளிதழ்களில் மாதம் இரண்டு முறையாவது கணவன் மனைவியைக் கொலை செய்த செய்தியை அல்லது மனைவி கணவனைக் கொலை செய்த செய்தியைப் பார்த்து வருகிறோம்.
கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் சுகம் அளிக்கக் கூடியவர்கள்; அமைதியை அளிக்கக் கூடியவர்கள்.
நீங்கள் அவர்களிடம் ஆறுதல் பெறுதற்கு (உங்களின்) மனைவியரை உங்களுக்காக அவன் உங்களிலிருந்தே படைத்திருப்பதும், உங்களிடையே உவப்பையும், கிருபையையும் உண்டாக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். சிந்தித்து உணரும் சமூகத்திற்கு நிச்சயமாக இதில் அத்தாட்சிகள் உள்ளன. (திருக்குர்ஆன் 30:21)
கணவனும் மனைவியும் வெறுப்புடனிருக்கும் நிலையில் நிர்ப்பந்தமாக இணைந்து வாழச் செய்யும் போது அச்சூழல், ஒருவருக்கொருவர் சுகம் அளித்து வந்த அவர்களை வெறியர்களாகவோ, கொடுமைக்காரர்களாகவோ, கொலைகாரர்களாகவோ மாற்றி விடுகிறது. இதனால் உயிர்ச் சேதங்கள் ஏற்படுகின்றன.
இஸ்லாமிய பார்வையில் உயிர்ச் சேதத்தை ஏற்படுத்துவது மாபெரும் பாவமாகும்.
கொலைக்குப் பதிலாகவோ, பூமியில் ஏற்படும் குழப்பத்தை (த் தடுப்பதற்காகவோ அரசு அளிக்கும் மரண தண்டனை) அன்றி, ஒருவரைக் கொலை செய்கிறவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான். மேலும், 'ஒருவரை வாழவைத்தவன் மக்கள் அனைவரையும் வாழ வைத்தவரைப் போலாவான்". (திருக்குர்ஆன் 5:32)
கணவன் மனைவி ஆகிய இருவருக்கும் இடையில் தீர்க்கமுடியாத பிரச்சினை ஏற்பட்டால் அவர்கள் இருவரையும் நல்லவிதமாக விடுவிடுத்து உயிர்ச் சேதத்திலிருந்து காப்பாற்றுவதுதான் அறிவுடமையாகும்.
கணவன் மனைவிக்கிடையில் ஏற்படும் அழிவைத் தடுப்பதற்காகவே, வேறுவழியின்றி இஸ்லாத்தில் 'தலாக்" எனும் விவாகரத்துச் சட்டம் இறைவனால் வழங்கப்பட்டுள்ளது.
ஏதோ பிரச்சினை என்றதும் தடாலடியாக 'தலாக்" என்ற முடிவுக்கு வருவதை இஸ்லாம் ஏற்கவில்லை. பிரச்சினைகளுக்கு முடிவே இல்லாத போது தான் 'தலாக்" என்ற முடிவுக்கு வரவேண்டும்.
எது ஆகும்;, எது ஆகாது என்பதை இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ள நிலையில் 'தலாக்" சட்டத்தை வேண்டா வெறுப்பாகவே இஸ்லாம் அனுமதித்துள்ளது.
கணவன் மனைவிக்குள் பிரச்சினை ஏற்பட்டால் முதலில் அவர்கள் இருவரும் நடந்து கொள்ளும் விதத்தை இஸ்லாம் போதிக்கிறது.
''ஒரு பெண், தன் சகோதரியை (சக்களத்தியை) தலாக் (விவாகரத்து செய்து) விடுமாறு (கணவனிடம்) கேட்டுத் தன்னுடைய பாத்திரத்தை நிரப்பிக் கொள்ள வேண்டாம்!"" என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்!"" (அறிவித்தவர்: அபூ ஹுரைரா(ரலி)நூல்: புகாரீ 2140)
எவ்வளவுதான் வெறுப்பாக இருந்தாலும் ஒரு பெண்ணுக்கு தலாக்கை வேண்டாதீர்கள் என்றுதான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
கணவன் மனைவிக்கு இடையில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதைத் தீர்ப்பதற்காக நடுவர்களை ஏற்படுத்தவேண்டும். அவர்கள் விசாரணையை மேற்கொள்ள வேண்டும். சமாதானத்தை ஏற்படுத்தவேண்டும்.
ஆத்திரத்தில் விவாகரத்தைக் கூறிவிடக் கூடாது. நிதானமாக யோசித்த பின்னர் தான் தலாக் என்ற முடிவுக்கு வரவேண்டும்.
நபியே! நீங்கள் பெண்களைத் 'தலாக்" சொன்னால், அவர்களின் 'இத்தா" எனும் காத்திருக்கும் காலத்தைக் கணக்கிட ஏற்ற வகையில் (மாதவிடாய் அல்லாத போது) 'தலாக்" கூறுங்கள். உங்களுடைய இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள். தவிர, (அப்பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலான்றி, அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து நீங்கள் வெளியேற்றாதீர்கள். அவர்களும் வெளியேறலாகாது.
இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறவர் உண்மையில் தமக்குத் தாமே அநியாயம் செய்கிறார். (ஏனெனில், கூடி வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதாவது ஒரு வழியை பிறபிக்கலாம் என்பதை அறியமாட்டீர். (திருக்குர்ஆன் 65:1)
மனைவி மாதவிடாயாக இருக்கும்போது ஏதேனும் கோபத்தில் தலாக் சொல்வதற்கு வாய்ப்பிருப்பதால் அந்த நேரத்தில் தலாக் சொல்லக்கூடாது என்றும் இந்த வசனத்தைப் புரிந்து கொள்ளலாம்.
மனைவியை தலாக் சொல்லி விட்டாலும் அதன் பின்னரும் குறிப்பிட்ட தவணையை அளித்து இருவரும் மனம் திருந்தி சேர்ந்து வாழ்வதற்கான வாய்ப்பை இறைவன் எற்படுத்தியுள்ளான்.
எனவே தான் தலாக் சொல்லப்பட்ட பெண்கள் தங்களின் பெற்றோர் அல்லது பொறுப்பாளர்களின் இல்லங்களுக்குச் செல்லாமல் கணவனின் இல்லத்திலேயே இருக்க வேண்டும் என்றும், அவர்களை வெளியேற்றக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
விவாகரத்து கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும் வரை பொறுத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தங்களின் கருவறைகளில், அல்லாஹ் படைத்துள்ளதை மறைத்தல் கூடாது. அவர்களின் கணவர்கள் இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (தலாக்கின்றி)த் திருப்பும் உரிமை அவர்களுக்கு அதிகமுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்களின் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்களின் மீது உயர்வு உண்டு. அல்லாஹ் வல்லமைமிக்கவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)
அவர்கள் காத்திருக்கும் இந்த மூன்று மாதவிடாய்க் காலங்களில் அவர்களுக்கு ஆகும் செலவுகள் அனைத்தையும் செய்து கொடுப்பது கணவனின் கடமையாகும்.
உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியிருக்கும் இடத்தில் ('இத்தா"விலிருக்கும்) பெண்களை குடியிருக்கச் செய்யுங்கள். அவர்களுக்கு நெருக்கடி உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும்வரை, அவர்களுக்குக் கொடுத்து விடுங்கள். (இதைப் பற்றி) உங்களுக்குள் நேர்மையாகப் பேசி முடிவெடுங்கள். ஆனால், (இது பற்றி) உங்களுக்குள் சிரமம் ஏற்பட்டால் (அக்குழந்தைக்கு) மற்றொருத்தி பால் கொடுக்கலாம்.
தக்க வசதியுடையவர்கள், தம் வசதிக்கேற்ப (இவ்விஷயத்தில்) செலவிடவும். ஆனால், எவரின் மீது அவருடைய உணவு(வசதி) நெருக்கடியாக்கப்பட்டுள்ளதோ, அவர் தமக்கு அல்லாஹ் கொடுத்ததிலிருந்து செலவிடவும். எந்த ஆத்மாவையும் அல்லாஹ் அதற்குக் கொடுத்திருப்பதே யல்லாமல் (மிகையாகச் செலவிடும் படி) சிரமப்படுத்த மாட்டான். கஷ்டத்திற்குப் பின்னர், அல்லாஹ் விரைவில் இலகுவை உண்டாக்கியருள்வான். (திருக்குர்ஆன் 65:6,7)
மேற்குறிப்பிட்டுள்ள வசனங்களின் படி மூன்று மாதவிடாய்க் காலம் முடிவதற்குள் கணவன் தன்னுடைய மனைவியை தலாக் இன்றி அழைத்துக் கொள்ள விரும்பினால் அழைத்துக் கொள்ளலாம்.
மனைவி கருவுற்றிருக்கிறாளா என்ற சோதனைக்கு அவகாசம் ஒரு மாதவிடாய்க் காலம் மட்டும் காத்திருந்தால் போதுமானதுதான். இங்கு மூன்று மாதவிடாய்க் காலங்கள் காத்திருக்கும்படி கட்டளையிட்டிருப்பது கணவன் தன்னுடைய மனைவியின் அன்பு மற்றும் அர்ப்பணங்களை நினைத்தாவது மனம் திருந்தி அல்லது அவளுடைய குற்றங்களை மன்னித்து மீண்டும் அழைத்துக் கொள்வதற்காகத்தான்.
இப்போது நாம் காண வேண்டியது ஒருவன் தன்னுடைய மனைவியை திரும்ப அழைத்துக் கொள்ள முடியாதபடி அல்லது திரும்பவும் திருமணம் செய்துகொள்ள முடியாதபடி ஒரே நேரத்தில் முத்தலாக் என்றோ, தலாக், தலாக், தலாக் என்றோ கூறினால் அது ஏற்கப்படுமா?
தொலைபேசியின் மூலம் தலாக் சொல்லலாமா?
தபால் மூலம் தலாக் சொல்லலாமா?
தந்தியின் மூலம் தலாக் சொல்லலாமா?
யாருடைய சாட்சியும் இல்லாமல் தானாக தலாக் சொல்லலாமா?
இப்படிச் சொல்லக் கூடிய தலாக்கின் நிலை என்ன என்பதைத்தான் இப்பபோது நாம் ஆராய வேண்டும். ஏனெனில், இவை சமீபத்தில் மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளாக உள்ளன.
முத்தலாக்:
ஒருவன் தன் மனைவியை ஒரே நேரத்தில் 'தலாக் - தலாக் - தலாக்" என்றோ, 'முத்தலாக்" என்றோ, 'மூன்று தலாக் கூறி விட்டேன்" என்றோ கூறி விவாகரத்துச் செய்தால் அத்துடன் எல்லாமே முடிந்து விடும் என்பது இஸ்லாத்திற்கு எதிரான, தவறான நடைமுறையாகும்.
முதல் தலாக்:
தன் மனைவியை ஒருவன் தலாக் கூறினால் கணவன் மனைவி என்ற உறவு உடலுறவு கொள்வதில் மட்டும் நீங்கி விடுகிறது. இவ்வாறு தலாக் கூறப்பட்ட பெண் தலாக் கூறப்படும் போது கர்ப்பிணியாக இருந்தால் அவள் குழந்தை பெறுவதற்குள் அவளை அவளுடைய கணவன் எந்த நிபந்தனையுமின்றி திரும்பவும் மனைவியாக அழைத்துக் கொள்வற்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது.
தலாக் கூறப்பட்ட பெண் மாதவிடாய் நின்ற பருவத்தில் இருந்தால் மூன்று மாதவிடாய்கள் முடிவதற்குள் கணவன் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளலாம்.
தலாக் கூறப்பட்ட பெண் மாதவிடாய் நின்று விட்ட வயதை அடைந்திருந்தால் தலாக் செய்யப்பட்டதிலிருந்து அவளுக்கு மூன்று மாதவிடாய்கள் ஏற்பட்டு அதிலிருந்து அவள் தூய்மையடையும் கால அவகாசத்தைக் கணக்கிட்டு அதற்குள் அவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ள கணவனுக்கு உரிமை உண்டு.
அதாவது, தலாக் கூறியவுடன் திருமண உறவு முற்றாக நீங்கி விடுவதில்லை. மேற்குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் தன்னுடைய தலாக்கை முழுமையடைய விடாமல் வாபஸ் பெற்று அவளை மனைவியாக தக்க வைத்துக் கொள்ளலாம். இதற்கென சடங்கு சம்பிரதாயம் எதுவும் தேவையில்லை.
தலாக் செய்யப்பட்ட பெண்ணுடன் மேற்குறிப்பிட்டுள்ள கால அவகாசத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளக் கூடாது. அப்படி உடலுறவு வைத்துக் கொண்டால் தலாக் தானாக வாபஸ் ஆகிவிடும். அந்தக் கணவன் தன்னுடைய மனைவியுடன் உடலுறவு கொண்டு விடுவதன் மூலம், அவன் தானாகவே தலாக்கை வாபஸ் பெற்றுக் கொண்டு விடுகின்றான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உடலுறவை மேற்கொள்ள முடியாத பெண் என்றால் அவளுடன் மீண்டும் அன்பான வார்த்தைகள் கூறி தலாக்கை வாபஸ் பெற்றுக் கொண்ட செய்தியைத் தெரிவிக்கலாம்.
கணவனுக்கு அளிக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் அவன் தான் கூறிய தலாக்கை வாபஸ் பெறும்போது அதை மறுக்கும் உரிமை அவனுடைய மனைவிக்கு வழங்கப்படவில்லை.
தன்னுடைய மனைவியைத் தலாக் சொன்ன ஒருவன் மேற்குறிப்பிட்டுள்ள கால அவகாசத்திற்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளத் தவறினால் அவர்களின் திருமண ஒப்பந்தம் முறிந்து கணவன் மனைவி என்ற நிலையை விட்டும் பிரிந்து விடுவர். அதன் பின்னர் அவளை நிபந்தனைகள் இல்லாமல் திரும்ப அழைக்கும் உரிமை அவனுக்கு இல்லை.
மூன்று அவகாசங்கள் நிறைவேறிய பின்பு, மார்க்க அறிஞர்கள் குழு அல்லது இவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட தலைமை இருவரது திருமண உறவை ரத்து செய்ததன் பின்பு, அவள் வேறு ஆணை திருமணம் செய்ய விரும்பினால் செய்து கொள்ளலாம். அதில் தடையாக முந்தைய கணவன் இருக்கக்கூடாது.
தலாக் கூறி அந்தக் கால அவகாசத்திற்கு முன்னரே அவளைத் திரும்ப அழைத்தாலோ, அந்தக் காலக்கெடு முடிந்த பின் அவளையே அவளுடைய சம்மதத்துடன் மீண்டும் திருமணம் செய்தாலோ மூன்று தலாக்குகள் கூறலாம் என்று அவனுக்கு ஏற்பட்டிருந்த மூன்று வாய்ப்புகளில் ஒன்றை அவன் இழந்து விடுகிறான் இன்னும் இரண்டு முறை தலாக்கு கூறுவதற்கான வாய்ப்புகள் மட்டுமே அவனுக்கு உள்ளன.
இரண்டாம் தலாக்:
முதல் தலாக் கூறிய பின் அதை வாபஸ் பெற்று அவளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவர்களிடையே மீண்டும் பிரச்சினைகள் ஏற்பட்டு இப்போதும் தலாக் கூறினால் முதல் தலாக் கூறியபோது நடந்து கொண்டது போன்றே இப்போதும் நடந்து கொள்ளவேண்டும்.
மீண்டும் அவளைத் திரும்ப அழைத்தாலோ, கால அவகாசம் முடிந்ததும் அவளை மீண்டும் திருமணம் செய்தாலோ அவனுக்கு வழங்கப்பட்டிருந்த மூன்று வாய்ப்புகளில் இரண்டு முடிந்து விடுகின்றன. இன்னும் ஒரேயொரு தலாக் மட்டுமே கூறும் வாய்ப்பு உள்ளது.
முதல் தலாக் அல்லது இரண்டாம் தலாக் கூறி குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் அவளைத் திரும்ப அழைத்து கொள்ளத் தவறினால் அதன் பிறகு அவளுடைய சம்மதத்துடன் அவளையே மீண்டும் திருமணம் செய்து கொள்வதற்கு கால வரம்பு எதுவும் கிடையாது. எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் கழிந்த பின்னரும் அவளைத் திருமணம் செய்யலாம்.
மூன்றாம் தலாக்:
அதன் பின்னரும் அவர்களிடையே பிரச்சினைகள் ஏற்பட்டு மூன்றாவது தடவையும் அவன் தலாக் கூறினால் அத்துடன் அவர்களின் திருமண உறவு முற்றாக நீங்கி விடுகிறது ஏனைய இரண்டு தலக்குகளைக் கூறிய பின் அவனுக்கு இருந்த திரும்ப அழைக்கும் உரிமை இப்போது கிடையாது.
மீண்டும் அவளைத் திருமணம் செய்தும் இல்லறவாழ்வை அவ்விருவரும் மீண்டும் தொடர முடியாது அவள் பரிபூரணமாக இதனை விரும்பினாலும் கூட அவர்கள் மீண்டும் திருமணம் செய்து கொள்ள இயலாது.
அப்படியே ஒரு வழி இருக்குமானால், அது மிகவும் மேசமான ஒரு நிலையாக உள்ளது. அவள் மற்றொருவனைத் திருமணம் செய்து, அவனுடன் அவள் வாழ்ந்து அவனுக்கும் அவளைப் பிடிக்காமல் அவனாக அவளை தலாக் கூறி அந்தத் தலாக் முழுமையானால் அதன் பின்னர் முதல் கணவனும் அவளும் சம்மதித்தால் திருமணம் செய்து கொள்ளலாம்.
மேற் குறிப்பிட்ட சட்டங்களுக்குரிய ஆதாரங்கள்:
விவாகரத்து கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தங்களின் கருவறைகளில், அல்லாஹ் படைத்துள்ளதை மறைத்தல் கூடாது. அவர்களின் கணவர்கள் இணக்கத்தை நாடினால், (அத்தவணைக்குள்) அவர்களை (தலாக்கின்றி)த் திருப்பும் உரிமை அவர்களுக்கு அதிகமுண்டு. கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்களின் மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்களின் மீது உயர்வு உண்டு. அல்லாஹ் வல்லமை மிக்கவன்; ஞானமிக்கவன். (திருக்குர்ஆன் 2:228)
(இத்தகைய) 'தலாக்' இரண்டு முறையே கூறலாம். பின்னர் (தவணைக்குள்) முறைப்படி சேர்ந்து வாழலாம். அல்லது அவர்கள் இருவரும்அல்லாஹ்வின் வரம்புகளை நிலைநிறுத்த முடியாது என்று அஞ்சினால் நேர்மையான முறையில் விட்டுவிடலாம். நீங்கள் மனைவியருக்கு கொடுத்தவற்றிலிருந்து எதையும் திருப்பி எடுக்கக்கூடாது. இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் வரம்புகளை அவர்களால் நிலை நிறுத்த முடியாதென அஞ்சினால், அவள்(கணவனுக்கு) ஏதேனும் ஈடாகக் கொடுத்து(ப் பிரிந்து)விடுவதில் குற்றமில்லை. இவை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள வரையறைகளாகும். எனவே, அவற்றை மீறாதீர்கள். அல்லாஹ்வின் வரையறைகளை மீறுவோறே அக்கிரமக்காரர்கள். (திருக்குர்ஆன் 2:229)
அவளை மீட்ட முடியாத (மூன்றாவது முறை) விவாகரத்துச் செய்துவிட்டால், வேறு ஒருவனை அவள் மணக்கும் வரை அவனுக்கு (முதல் கணவனுக்கு) அவள் ஆகுமானவள் அல்ல. அவளை அவனும் (இரண்டாவது கணவனும் தானாக முன்வந்து) விவாகரத்துச் செய்துவிட்ட பின்னர், அவர்கள் இருவரும் (முந்தைய கணவனும் அவளும்) இறைவனின் வரம்புகளை நிலை நிறுத்தமுடியும் என எண்ணினால், அவன் மீண்டும் அவளை திருப்பிக் கொள்வதில் (மணப்பதில்) குற்றமில்லை. இவை அல்லாஹ்வின் வரம்புகள். அறிகிற மக்களுக்குத் இவற்றைத் தெளிவாக விவரிக்கிறான். (திருக்குர்ஆன் 2:230)
கர்ப்பிணிகள்காத்திருக்கும் காலம்அவர்கள் பிரசவிக்கும் வரையிலாகும். (திருக்குர்ஆன் : 65:4)
இது வரை கூறப்பட்ட விஷயங்களில் அறிஞர்களுக்கிடையே எந்தக் கருத்து வேறுபாடும் கிடையாது. மூன்று கட்டங்களில் ஒவ்வொரு தலாக் தான் கூற வேண்டும் என்பதிலும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. 3 கட்டங்களில் கூற வேண்டிய தலாக்கை ஒரே நேரத்தில் ''தலாக்"" தலாக் என்றோ 'முத்தலாக்" என்றோ, மூன்று தலாக் என்றோ கூறக் கூடாது அவ்வாறு கூறவது ஹராமாகும் என்பதிலும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இல்லை. இதில் அறிஞர்களும் ஒருமித்து ஒரே முடிவுக்கே வருகின்றனர். அல்லது, தலாக், தலாக் என்றோ கூறினால் அதன் நிலை என்ன என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
இவ்வாறு ஒருவன் கூறினால் மூன்று கட்டங்களாக தலாக் கூறி தலாக் கூறிய பின் என்ன நிலையோ அதே நிலை இப்போதும் ஏற்படும் என்பது பலரின் கருத்து. அதாவது ஒரே நேரத்தில் இவ்வாறு கூறினால் தலாக் கூறப்பட்டவளைத் திரும்பவும் அழைத்துக் கொள்ளவோ, அல்லது அவளையோ மீண்டும் திருமணம் செய்துகொள்ளவோ அவனுக்கோ உரிமை இல்லை. அவள் இன்னொருவனை மணந்து அவனுடன் வாழ்ந்து அவனும் தலாக் கூறிய பிறகே அவளை திருமணம் செய்யலாம் என்பது இவர்களின் கருத்து.
ஒரே நேரத்தில் முத்தலாக் என்றோ, தலாக் - தலாக் - தலாக் என்றோ கூறினால் முதல் தலாக் கூறப்பட்ட பின் ஏற்பட்ட நிலைமையை இப்போதும் ஏற்படும் என்பது மற்ற சில அறிஞர்களின் கருத்து. அதாவது தலாக் என்பது ஆண்களுக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புகள். எனவே, ஒரே சமயத்தில் முத்தலாக் என்று கூறினாலும் அவனுக்கு வழங்கப்பட்ட ஒரு வாய்ப்பையே அவன் பயன்படுத்தியுள்ளான். எனவே இது ஒரு தலாக் என்றே கருதப்படும். முதல் தலாக் கூறியபின் குறிப்பிட்ட தவணைக்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளலாம் அந்தத் தவணை முடிந்து விட்டால் அவளையே அவளின் சம்மதத்துடன் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று வழங்கப்பட்ட சலுகை அப்போதும் உண்டு என்பது இவர்களின் கருத்து.
நபிவழியை ஆராயும்போது இந்த இரண்டாம் கருத்துடைய அறிஞர்களின் முடிவே சரியானதாக இருக்கிறது.
நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் ஆபூபக்ர் (ரலி) அவர்களின் காலத்திலும் உமர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டது. நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டிய ஒரு காரியத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். எனவே முத்தலாக் என்பதை மூன்று தலாக்காகவே நாம் இனி கருதுவோம் என்று உமர்(ரலி) அவர்கள் தம் ஆட்சியின் மூன்றாம் ஆண்டின் துவக்கத்தில் குறிப்பிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் செய்தி ஒன்று முஸ்லிம் மற்றும் அஹ்மதில் இடம் பெற்றுள்ளது.
ஒரே நேரத்தில் முத்தலாக் நிறைவேறும் என்று வாதிடுவோர் பின் வரும் வரலாற்றுச் சம்பவம் ஒன்றை தங்களின் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.
உண்மையில் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் முத்தலாக் என்பது ஒரு தலாக் என்றே கருதப்பட்டது என்பதற்குத்தான் இது சரியான சான்றாக உள்ளது.
அவர்களின் வாதப்படியே பார்த்தாலும், உமர்(ரலி) சிறந்தவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், நபி(ஸல்) அவர்கள் உமர்(ரலி) அவர்களைவிட கோடிமடங்கு சிறந்தவர்கள் என்பதை மறுக்க முடியுமா? அப்படி இருக்க நபி(ஸல்) அவர்களின் நடைமுறைக்கு மாற்றமாக உமர்(ரலி) அவர்கள் ஒன்றைத் தீர்மானித்தால் அதை ஏற்றுக் கொண்டு, நபி(ஸல்) அவர்களின் வழிமுறையைப் புறக்கணிப்பதுதான் இஸ்லாமா? நன்றாகச் சிந்திக்க வேண்டும். உண்மையில் இவ்வாறு செய்வதற்கு ஒரு முஸ்லிம் முன்வர மாட்டான்.
நபி(ஸல்) அவர்கள் மற்றும் ஆபூபக்ர்(ரலி) அவர்களை விட உமர்(ரலி) அவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க எந்த முஸ்லிமும் விரும்பமாட்டான். அன்றைய மக்களின் மனநிலைக்கு ஏற்றவாறு இவ்வாறு செய்வதால் தவறில்லை என்று உமர்(ரலி) அவர்கள் முடிவு செய்திருக்கலாம். அதற்கு இறைவனிடம் அவர்கள் பதிலளிப்பார்கள்.
நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இவ்வாறு தான் இருந்தது என்பதைத் தெளிவாக அறிந்த பின்னரும் நாம் அதை மறுக்கக் கூடாது.
இதை மறுக்கிறவர்கள் இன்னொரு வரலாற்றுச் சம்பவத்தை ஆதாரமாகக் கூறுகின்றனர். அதுவும் ஏற்புடையதன்று.
ஒரு மனிதர் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் வந்து தன் மனைவியை மூன்று தலாக் கூறிவிட்டதாக முறையிட்டார். திரும்பவும் அழைத்துக் கொள்ளுமாறு அவருக்குக் கூறப்போகிறார்களோ என்று நாங்கள் கருதுமாளவுக்கு மவுனமாக இருந்தார்கள். அதன் பிறகு உங்களின் ஒருவர் முட்டாள் தனமான ஒரு காரியத்தைச் செய்துவிட்டு இப்னு அப்பாஸே! இப்னு அப்பாஸே! என்றால் நான் என்னசெய்ய முடியும்? தன்னை அஞ்சுகிறவருக்கு, தான் ஒரு வழியை ஏற்படுத்துவதாக இறைவன் கூறுகிறான். நீயோ அல்லாஹ்வை அஞ்சவில்லை! நீ உன்னுடைய இறைவனுக்கு மாறு செய்து விட்டாய்! உன் மனைவி உன்னை விட்டு பிரிந்து விடுகிறாள் என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவருக்குக் கூறினார். (அறிவிப்பவர்: முஜாஹித் நூல்: அபூ தாவூத்)
இதே கருத்துள்ள சம்பவம் தாரகுத்னியிலும் இடம் பெற்றுள்ளது.
தலாக் தொடர்பாக நபி(ஸல்) அவர்களின் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை அறிவித்த அதே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அதற்கு மாற்றமாக தீர்ப்பளித்துள்ளதால் அதன் அடிப்படையில் எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றும் இவர்கள் கூறுகின்றனர்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட இந்த இரண்டு சம்பவங்களும் முரண்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் இடையில் வித்தியாசங்கள் உள்ளன. முதல் சம்பவம் நபி(ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட நடைமுறையை அது சொல்கிறது. எனவே, இதன் முதல் ஹதீஸ் என்ற தரத்தை அடைகிறது. இரண்டாம் பகுதி உமர்(ரலி) அவர்களின் வரலாற்றுச் செய்தியாக இடம் பெறுகிறது.
அவர்கள் எடுத்து வைக்கும் இரண்டாம் ஆதாரத்தில் நபி(ஸல்) அவர்கள் சம்மந்தப்படவில்லை. அது இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் சுய முடிவாகவே கூறப்பட்டுள்ளது. இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் சொந்த முடிவைவிட நபி(ஸல்) அவர்களின் முடிவே ஏற்கத்தக்கது என்பதை எந்த முஸ்லிமாவது மறுப்பானா?
மக்களெல்லாம் முத்தலாக் என்று அதில் விளையாட துவங்கி விட்டார்களே என்ற வருத்தத்தில் உமர்(ரலி) அவர்கள் செய்தது போல் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களும் இவ்வாறு கூறியிருக்கலாம்.
மறுமையில் இறைவன் நம்மை விசாரிக்கும்போது என்னுடைய நபியின் வழிமுறையை ஏற்றாயா என்று கேட்பானா? அல்லது ஏன் இப்னு அப்பாஸ் உமர்(ரலி) ஆகியோரின் வழிமுறையை ஏற்கவில்லை என்று கேட்பானா? நிதானமாக யோசிக்க வேண்டும்.
அதே இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் ''நான் அல்லாஹ்வின் தூதர் சொன்னதாகக் கூறுகிறேன். நீங்களோ ஆபூ பக்ர் சொன்னார். உமர் சொன்னார் என்கிறீர்கள்! இதன் காரணமாக உங்கள் மீது கல்மாரி பொழியப்படுமோ என்று அஞ்சுகிறேன்"" என்று ஒரு சந்தர்ப்பத்தில் கூறியுள்ளார்.
முத்தலாக் ஒரு தலாக்காக கருதப்பட்டது ஆரம்ப காலத்தில் இருந்திருக்கும் அதன் பின் அது மாற்றப்பட்டிருக்கலாம் அதனடிப்படையில் இப்னு அப்பாஸ்(ரலி) இவ்வாறு முடிவு செய்திருக்கலாம் என்று இமாம ஷாஃபியீ போன்ற சிலர் கூறுகின்றனர்.
இந்த மறுப்பும் விளக்கமும் அர்த்தமற்றது. முத்தலாக் ஒரு தலாக்காகக் கருதப்பட்டது ஆரம்ப காலத்தில்தான் பின்னர் அது மற்றப்பட்டிருக்கலாம் என்பது யூகம்தானே தவிர உண்மையல்ல. ஏனெனில், நபி(ஸல்) அவர்களால் மாற்றப்பட்ட நடவடிக்கை எப்படி நபி(ஸல்) அவர்களின் காலம் முழுவதும், ஆபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக்காலம் முழுவதும், உமர்(ரலி) அவர்களின் முரலிரண்டு ஆண்டுகளிலும் செயல் வடிவம் பெற்றிருக்க முடியும்? எனவே இந்த வாதம் அறிவுக்கே பொருந்தவில்லை.
அவர்கள் எடுத்து வைக்கும் இன்னொரு ஆதாரத்தையும் பார்ப்போம்.
என்னுடைய பாட்டனார் தன் மனைவியை ஆயிரம் தலாக் என்று கூறி விட்டார் உடனே நான் நபி(ஸல்) அவர்களிடம் வந்து அதுபற்றி நான் கூறியதற்கு, ''உன்னுடைய பாட்டனார் அல்லாஹ்வை அஞ்சவில்லை மூன்று தலாக் நிகழ்ந்துவிடும். மீதி 997 தலாக் வரம்பு மீறியதாகும். அல்லாஹ் நாடினால் அதை மன்னிப்பான். அல்லது அவரைத் தண்டிப்பான்"" என்று நபி(ஸல்) கூறியதாக உபாதா இப்னு அஸ் ஸாமித்(ரலி) அறிவித்ததாக ஒரு ஹதீஸ் முஸன்னப் அப்துர் ரஸ்ஸாக் எனும் நூலில் இடம்பெற்றுள்ள.
இதனடிப்படையில் முத்தலாக் மூன்று தலாக்தான் என்கின்றனர். அவர்கள் இது ஹதீஸாக இருந்தால் இவர்களின் வாதத்தை நியாயமானது என ஏற்கலாம். இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யாகும்.
இதன் அறிவிப்பாளர் வரிசையில் அலா என்பவரும் உபைதுல்லாஹ் இப்னு அல் வலீத் என்பவரும் இடம் பெறுகின்றனர். இவ்விருவமே பலவீனமானவர்கள் இப்ராஹீம் இப்னு உபைதுல்லாஹ் என்ற பெயரில் ஒருவரும் இதன் அறிவிப்பாளர்களில் இடம் பெறுகிறார் இவர் யார்? இவரின் நம்பகத் தன்மை எத்தகையது என்ற விபரம் எதுவும் கிடைக்கவில்லை என்று ஹதீஸ் கலை வல்லுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதை அறிவிப்பதாகக் கூறப்படும் உபாதா இப்னு அஸ் ஸாமித்(ரலி) அவர்களின் தந்தையே இஸ்லாத்தை அடையவில்லை அவ்வாறிருக்க இவரின் பாட்டனார் எப்படி நபி(ஸல்) அவர்களின் காலத்தை அடைந்திருப்பார் என்பதும் சிந்திக்க வேண்டியதாகும்.
இதை ஆதாரமாகக் கொள்வதற்குரிய எந்தத் தகுதியையும் இது பெறவில்லை ஆனால் முத்தலாக் என்பது ஒரு தலாக்கே என்பதற்குப் பலமான ஹதீஸ்கள் உள்ளது.
அபூ ருகானா என்பவர் தன் மனைவி உம்மு ருகானாவைத் தலாக் கூறிவிட்டார் (இதனை அறிந்த) நபி(ஸல்) அவர்கள் உன் மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்! என்றார். அதற்கு அவர் நான் மூன்று தலாக் கூறிவிட்டேனே என்றார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதனை நான் அறிவேன் நீ உன் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்! என்றார்கள் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அபூ தாவூத், அஹ்மத் மற்றும் ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.
ருகானா என்பவர் தன் மனைவியை ஓர் இடத்தில் வைத்து மூன்று தலாக் என்று கூறிவிட்டார் அதற்காக அவர் மிகவும் வருந்தினார். அவளை நீ திரும்ப அழைத்துக் கொள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அஹ்மத் முஸ்னத் அபூ யஃலா
இந்தக் கருத்தில் பலவேறு அறிவிப்புகள் பல்வேறு நூல்களில் இடம் பெற்றுள்ளன. மூன்று தலாக் என்றோ முத்தலாக் என்றோ தலாக் தலாக் என்றோ ஒரே சமயத்தில் கூறினால் அது ஒரு தலாக்தான் அதன் பின் திரும்பவும் அவளுடன் வாழலாம் என்பதே சரியாகும்.
முன்னர் நாம் குறிப்பிட்டுள்ள வசனங்களை வரிசையாகக் கவனிக்கும்போதும் இதை நன்றாக அறியலாம். தலாக் என்பதை ஒவ்வொன்றாகத்தான் பயன்படுத்த வேண்டும். ஒரே நேரத்தில் பயன்படுத்தக் கூடாது என்பதையும் அறியலாம்.
ஒருவர் தன் மனைவியை ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்று கூறிய செய்தியைக் கேள்விப்பட்டு நபி(ஸல்) அவர்கள் கடும் கோபமுற்று ''நான் உங்களுக்கிடையில் வாழும்போதே அல்லாஹ்வின் வேதத்துடன் அவர் விளையாடுகிறாரா?' என்று கேட்டதற்கு, 'இறைத்தூதர் அவர்களே! நான் அவரைக்கொலை செய்துவிடவா? என்று ஒருவர் கேட்டார். (அந்த அளவுக்கு கடும் கோபமுற்றார்கள்)."" அறிவிப்பவர்: மஹ்மூத் இப்னு லபீத் நூல்: நஸயீ
ஒரே நேரத்தில் முத்தலாக் என்று கூறுவது எவ்வளவு கடுமையான குற்றம் என்பதை இதன் மூலம் அறியலாம். ஒருவன் இவ்வாறு கூறிவிட்டால் அது ஒரு தலாக் என்றே கருதப்படும் என்பதையும் இப்போது நாம் அறிந்துள்ளோம். முதல் தலாக் கூறிய பிறகு என்ன நிலை என்று முன்பு நாம் குறிப்பிட்டுள்ளோமே அதே நிலைதான் அப்போதும் ஏற்படும்.
மனைவி தன்னுடைய கணவனை குலஃ (விவாகரத்துச்) செய்தல்
தன்னுடைய கணவனைப் பிடிக்காத நிலையில் மனைவி அவனிடமிருந்து விலகி மறுவாழ்வை அமைத்துக் கொள்ள இஸ்லாம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்றுதான் குலஃ என்னும் மனைவி கணவனை விவாகரத்துச் செய்வதாகும்.
முதலில் குலஃ என்றால் என்ன என்பதைப் அறிந்து கொண்டு அதற்கான ஆதாரங்களைப் பார்ப்போம்.
ஒரு பெண்ணுக்கு கணவனைப் பிடிக்கவில்லையானல் அவள் அந்தப் பகுதியின் ஜமாஅத் தலைவரிடம் முறையிட வேண்டும். அங்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் ஆட்சியாளரிடம் முறையிடவேண்டும்.
கணவனை விவாகரத்துச் செய்பவள் திருமணத்தின்போது கணவரிடமிருந்து மஹர் ஜீவனாம்சம் வாங்கியதை குறைவின்றி கணவனிடம் ஒப்படைக்க வேண்டும்.
மஹர் எனும் ஜீவனாம்சத்தை திரும்பப் பெற்று உடனே அவளை விட்டுப் பிரிந்து விடுமாறு அந்தக் கணவனுக்கு தலைவர் அல்லது ஆட்சியாளர் கட்டளையிட வேண்டும். அந்தக் கட்டளைக்கு அவன் கட்டுப்பட மறுத்தாலும் அத்திருமணத்தை ரத்து செய்யும் அதிகாரம் தலைவருக்கு இருக்கிறது.
மஹர் எனும் ஜீவனாம்சமாக கொடுத்ததை விட அதிகப்படியாக கணவன் எதையும் கேட்க முடியாது; தலைவரும் அவ்வாறு அளிக்கும்படி பெண்ணிடம் கட்டளையிட முடியாது.
கணவனைப் பிடிக்காத மனைவி அதற்குரிய காரணத்தைக் தெளிவாகச் சொல்ல வேண்டியதில்லை.
கணவனே தலாக் கூறும்போது மூன்று மாதவிடாய் காலத்துக்குள் அவளைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை இருப்பதைப் போல் குலஃ செய்து பிரியும் போது திரும்ப அழைக்க முடியாது.
தலாக் விடப்படும்போது மூன்று மாதவிடாய்கள் வரை அவள் மறுமணம் செய்யக்கூடாது ஆனால் குலஃவில் பிரியும்போது ஒரேயொரு மாதவிடாய் காலம் வரை அவள் மறுமணம் செய்யலாகாது அதன் பிறகு அவள் மறுமணம் செய்யலாம்.
மேற்குறிப்பிட்டவை குலஃவின் விதிமுறைகள் இஸ்லாமியப் பெண்களில் பெரும்பாலோருக்கும் சமுதாயத்தலைவர்களுக்கும் இந்தச்சட்டங்கள் தெரிவதில்லை.
கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்ற போலித் தத்துவத்தில் அவர்கள் ஊறியிருப்பதால் பெண்கள் இன்று கொடுமைக்கு உள்ளாகின்றனர்.
குலஃ சட்டங்களுக்கான ஆதாரங்கள்:
ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்களின் மனைவி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, ''இறைத்தூதர் அவர்களே! என்னுடைய கணவரின் நன்னடத்தையையோ, நற்குணத்தையோ நான் குறைகூறவில்லை. ஆனாலும் இஸ்லாத்தில் இருந்து கொண்டே நான் நிராகரிப்பை வெறுக்கிறேன்" என்று கூறிய உடன், 'அப்படியானால் (அவர் உனக்கு மஹராக அளித்த) அவர் தோட்டத்தைத் திருப்பிக் கொடுத்து விடுகிறாயா?" என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டதற்கு அவர். 'சரி" என்றார். நபி(ஸல்) அவர்கள் அந்தக் கணவரிடம், 'தோட்டத்தைப் பெற்றுக் கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு!"" என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி நஸயீ
ஜமீலா என்ற அப்பெண் தன்னுடைய கணவரைப் பற்றி குறை ஏதும் கூறவில்லை. அவரின் நடத்தையையும், நற்பண்புகளையும் புகழ்ந்தே கூறியுள்ளார். தான் பிரிய விரும்புவதற்கு குறிப்பான எந்தக் காரணத்தையும் கூறவில்லை. இஸ்லாத்தில் இருந்து கொண்டே தப்பான வழியில் சென்று விடுவேனோ என்று அச்சமாக உள்ளத்தையே காரணம் காட்டியுள்ளார் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கிறது.
கணவனைப் பிடிக்காது பிரிந்து செல்ல விரும்பும் மனைவி தெளிவான காரணம் எதையும் கூறவேண்டியதில்லை எனக்குப்பிடிக்கவில்லை என்றாலே போதுமானது.
வாங்கிய மஹரைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்.
அதன் பின்னர் ஒரேயடியாக அவளை விடுவிக்கவேண்டும் என்ற செய்திகள் மேற்கண்ட ஹதீஸிலிருந்து வெளிப்படுகின்றன.
'தல்லிக்ஹா தக்லீகதன்" என்ற வாசகம் இந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அவளை விட்டுவிடு! (மறுபடியும் அவளுடன் சேரவேண்டும் என்று நினைக்காதே) என்பது இதன் பொருளாகும்.
ஆனால், இதில் இடம் பெற்றுள்ள 'தல்லிக்ஹா தக்லீகதன்" என்ற வாசகத்திற்கு 'அவளை தலாக் செய்துவிடு" என்று பொருள் கூறி தலைவரே திருமணத்தை ரத்து செய்ய முடியாது. கணவன் தலாக் கூறினால்தான் திருமண உறவு முறியும் என்று சிலர் தீர்ப்பளித்துள்ளனர். எனவே, இதை தெளிவாக விளக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இவர்களின் கூற்றுப்படி மேற்கண்ட ஹதீஸில் ஒரேயடியாக 'தலாக் விட்டு விடு" என்ற பதம் இடம் பெற்றிருந்தாலும் இவர்களின் இந்தத் தீர்ப்பு சரியானதன்று.
தலாக் என்பதற்கு இரண்டு பொருள் உள்ளன.
1. கணவனுக்கு மனைவியைப் பிடிக்காதபோது அவளை விவாகரத்து செய்வது.
2. தொடர்பை அறுத்துக் கொள்வது அவிழ்த்து விடுவது போன்ற பொதுவான பொருள்.
மார்க்கச் சட்டங்களில் தலாக் என்ற பதம் பயன்படுத்தப்பட்டால் முதலிலுள்ள பொருளே கொள்ள வேண்டும் இதில் மாற்றம் இல்லை. அவ்வாறு நாம் பொருள் கொள்வதற்கு வேறு ஆதாரங்கள் தடையாக இருந்தால் அதற்கு அகராதியில் இடம்பெறும் பொருளையே கொள்ள வேண்டும்.
அஸ் ஸலாஹ் என்ற பதத்திற்கு தொழுகை என்ற பொருளும் வணக்கம், பிரார்த்தனை, சாந்தி போன்ற பொதுவான பொருளும் உண்டு.
ஆனால் இஸ்லாமிய வழக்கில் அஸ் ஸலாத் என்பதற்கு தொழுகை என்ற பொருளே கொடுக்கப்படுகிறது. இருப்பினும் சில இடங்களில் அவ்வாறு பொருள் கொள்ள முடியாவிட்டால் பொதுவான பொருளும் கொள்ளப்படுவதுண்டு.
நபி (ஸல்) அவர்களின் தூதுத்துவத்திற்கு முந்தைய நாட்களில் கஃபாவில் இறைநிராகரிப்பாளர்களின் வணக்க முறையையும் 'ஸலாத்" என்றே அழைக்கப்படுகின்றது. இந்த நிலையில், 'கஃபாவில் அவர்களின் ஸலாத்" என்பதற்கு ருகூவு ஸஜ்தா மற்றும் சில செயல்களைக் கொண்டே தொழுகை என்ற பொருள் கொள்ள முடியாது. ஏனெனில் இறைமறுப்பாளர்களிடம் முஸ்லிம்களிடம் இருப்பதைப் போன்ற தொழுகை முறை இருக்கவில்லை. எனவே அவர்களின் வணக்கமுறை என்ற பொருளே இங்கு பொருத்தமாகும்.
ஏராளமான பதங்களுக்கு இவ்வாறான நிலைகளை குர்ஆன் ஹதீஸில் பரவலாகக் காணலாம்.
இந்த அடிப்படையில் அந்த ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள தலாக் எனும் பதத்தை ஆராய வேண்டும்.
தலாக் என்பது இரண்டு தடவைகளாகும். (திருக்குர்ஆன் 2:229)
அதன் பிறகு அவன் தலாக் விட்டால் அவளை இன்னொரு கணவன் மணம் முடித்து (தலாக் கூறாதவரை அவள் அவனுக்கு ஹலாலாக மாட்டாள்) (திருக்குர்ஆன் 2:230)
இந்த இரண்டு வசனங்களிலிருந்தும் தலாக் என்பது மூன்று நிலைகளில் கூறப்பட வேண்டும் முதலிரண்டு தடவை திரும்ப அழைக்கும் உரிமை கணவனுக்கு உண்டு. மூன்றாவது தடவை தலாக் கூறிவிட்டால் அந்த உரிமை இல்லை என்றும் இந்த வசனங்கள் அறிவிக்கின்றன.
தலாக் என்பதன் இலக்கணமே மூன்று நேரங்களில் கூறப்பட வேண்டும் என்று இறைவன் வரையறுத்துள்ளான்.
ஆனால் இந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ள பதத்திற்கு தலாக் விட்டுவிடு என்று பொருள் கொண்டால் ஒரே தலாக் என்பதாகத்தான் கருத்துக் கொள்ள முடிகிறது. இறைவன் வகுத்துள்ள மூன்று தலாக் எனும் இலக்கணத்திற்கு முரணாக நபி(ஸல்) அவர்கள் கூறமாட்டார்கள் என்பதால் அவளை ஒரேயடியாகப் பிரிந்து விடு என்ற அகராதியின் அடிப்படையில் பொருள் கொள்வதே சரியாகும்.
தலாக் விடப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் (அல்லது மூன்று மாதவிடாய்களிலிருந்து தூய்மை அடையும் காலம்) இத்தா இருப்பார்கள். (திருக்குர்ஆன் 2:238)
தலாக் விடப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் காலத்திற்கு முன் மறுமணம் செய்யலாகாது என்று இந்த வசனம் கூறுகிறது. குலஃ செய்த பெண்கள் ஒரு மாதவிடாய் முடிந்ததும் மறுமணம் செய்யலாம் என்று நபி(ஸல்) கூறினார்கள்.
எனவே தலாக் என்ற பொருளில் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பதத்தைப் பிரயோகம் செய்திருந்தால் மூன்று மாதவிடாய்கள் இத்தா இருக்குமாறே கூறியிருக்க வேண்டும். ஏனெனில் அல்லாஹ் அவ்வாறுதான் கட்டளையிடுகிறான் . ஒரு மாதவிடாய் என்று குறிப்பிட்டுள்ளதன் மூலம் அகராதியின் அடிப்படையில் பொருள் கொண்டே நபி(ஸல்) அவர்கள் இந்தப் பதத்தைப் பயண்படுத்தியுள்ளார்கள் என்பது உறுதியாகிறது.
ஸாபித் இப்னு கைஸ்(ரலி) அவர்கள் தம் மனைவியை அடித்தார் . அவரின் கை ஒடிந்துவிட்டது அவளின் பெயர் ஜமீலா பின்த் அப்துல்லாஹ். அவரின் சகோதரர் நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்டார். நபி(ஸல்) அவர்கள் ஸபீதுக்கு தூதனுப்பி அவள் உனக்குள்ள உரிமையை (அதாவது மஹரைப்) பெற்று ''அவள் வழியில் விட்டுவிடும்"" என்றார்கள். அவர் சரி என்றார்கள். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் ஒரு மாதவிடாய் வரை (மறுமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறு அவர் குடும்பத்தாருடன் சேர்ந்திருக்குமாறும் கட்டளையிட்டார்கள். அறிவிப்பவர்: ருபையி பின்து மு அவ்வித்(ரலி) நூல்: நஸயீ
''அவள் வழியில் அவளைவிட்டு விடும்"" என்ற நபி(ஸல்) கூறியதாக தெளிவாக இங்கே கூறப்படுகிறது. தலாக் என்ற பதம் பயன்படுத்தப் படவில்லை. அவரின் தலாக்கைப் பெறாமலேயே அவளின் குடும்பத்தாருடன் போய் சேர்ந்து கொள்ளுமாறு நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.
கணவன் தலாக் கூறினால் தான் 'குலஃ' ஏற்படும் என்றால் நபி(ஸல்) அவர்கள் அவரின் தலாக்கைப் பெறாமல் அப்பெண்ணை அவளின் குடும்பத்துடன் சேறுமாறு கூறியிருக்க மாட்டார்கள் . இதிலிருந்தும் அகராதியின் அடிப்படையில்தான் பொருள் கொண்டு நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்கள் என்பதை அறியலாம்.
அபூ தாவூத்தில் ஆயிஷா(ரலி) அறிவிக்கும் ஹதீஸில் தலாக் என்ற பதத்தை அதன் அகராதி அர்த்தத்திலேயே பயன்படுத்தியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
கணவனால் கொடுமைப்படுத்தப்படும் பெண் அவனிடமிருந்து விலக விரும்பும் நிலையில் அவன் மறுத்தால், அவன் தலாக் விடாமல் (மனைவியான) அவள் பிரியவே முடியாது. அப்படியானால் அவள் காலமெல்லாம் கொடுமையில்தான் வாழவேண்டுமா?
கொடுமைகள் நிகழும்போது அதைத் தடுக்க கடமைப்பட்ட ஆட்சியாளரும், ஜமாஅத் தலைவரும் அதை வேடிக்கை பார்க்க வேண்டுமா?
தீமைகளை முடிந்தால் கையால் தடுங்கள் என்று கூறும் இஸ்லாம் தீமையைத் தடுக்காதிருக்க வழிகாட்டுமா?
இப்படி எந்தக் கோணத்தில் பார்த்தாலும் 'குலஃ" என்பதற்கு கணவனின் சம்மதமோ, அவனுடைய தலாக்கோ தேவையில்லை என்பதைப் புரியலாம்.
திருமணத்தை இஸ்லாம் ஒரு ஒப்பந்தம் என்று கூறுகிறது . இதனை 4:121 வசனத்திலிருந்து விளங்க முடியும். ஆண்களுக்கு பெண்கள் மீதுள்ள உரிமைகளைப் போன்றது பெண்களுக்கும் ஆண்கள் மீது உள்ளது எனவும் குர்ஆன் கூறுகிறது. இதனை 2:228 வசனத்திலிருந்து விளங்கலாம்.
திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ளும் உரிமை கணவனுக்கு இருப்பது போன்றே மனைவிக்கும் உரிமை இருப்பதை இந்த வசனங்கள் குறிப்பிடுகின்றன.
கணவன் தலாக் விட்டால் தான் அவள் பிரிய முடியும் என்றால் பெண்ணுக்கு இந்த உரிமை வழங்கப்பட்டதில் என்ன அர்த்தமிருக்க முடியும்? இது போன்ற காரணங்களால் கணவன் தலாக் கூறினால் தான் அவளால் பிரிய முடியும் என்பதை ஏற்க முடியாது. இதற்கு மாற்றமான கருத்தை யார் சொன்னாலும் அதைத் தூக்கி எறிந்துவிட்டு இஸ்லாமிய கருத்தை எடுத்துக் கொள்வதே சிறந்த செயலாகும்.
ஆக பெண்கள் தன் கணவரிடமிருந்து பிரிவதாக ஜமாஅத்தில் முறையிட்டால் ஜமாஅத் தலைவர் அத்திருமணத்தை ரத்து செய்ய வேண்டும். ஆண் சார்பு நிலையிவிருந்து ஜமாஅத்தினர் விடுபட்டு நியாயத்தையும் அல்லாஹ்வின் தூதரின் வழிகாட்டுதலையும் செயல்படுத்த வேண்டும்.
இந்த உரிமையை மறுப்பதன் மூலம் அவர்கள் விபச்சாரம் போன்ற தகாத உறவுகளில் ஈடுபட்டால் அவர்களுக்கு நியாயத்தை மறுத்த மொத்த சமுதாயமும் அந்தக் குற்றத்தில் பங்கேற்க வேண்டியதாகும்.
மிக முக்கியமான ஒரு ஹதீஸை ஜமாஅத் தலைவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.
அப்துல்லாஹ்வின் மகன், ஸாபித் என்பவருக்கு மனைவியாக இருந்தார். அவர் அப்பெண்ணிற்கு ஒரு தோட்டத்தை மஹராக வழங்கி இருந்தார் .(அதுபற்றி வழக்கு வந்த போது) உமக்கு அவர் தந்துள்ள தோட்டத்தை மட்டும் கொடும் என்றதும் அப்பெண் சரி என்றார். உடனே நபி(ஸல்) அவர்கள் ''ஸாபித்தின் சார்பாக அவர்களே தோட்டத்தை பெற்றார்கள். நபி(ஸல்) அவர்களின் தீர்ப்பு ஸாபித்துக்கு தெரிந்தபோது 'இறைத்தூதரின் தீர்ப்பை ஏற்கிறேன்"" என்றார். அறிவிப்பவர்: அபூ ஸுபைர் நூல்: தராகுத்னீ
கணவனின் தலாக்கைப் பெறாமல் நபி(ஸல்) அவர்கள் மஹரைப் பெற்று ரத்துச் செய்கிறார்கள். இந்த செய்தி பிறகுதான் சம்பந்தப்பட்ட கணவருக்கே தெரிகிறது என்றால் ஜமாஅத் தலைவருக்குள்ள உரிமையையும் தெளிவாக விளங்க முடிறகிறது.
இச்சட்டத்தில் முறையாக நடந்து கொள்ளும் பக்குவத்தை அனைத்து ஜமாஅத் நிர்வாகத்திற்கு வல்ல இறைவன் அருள் புரிவானாக!