ஹதீஸ் இலக்கங்கள் ஒன்றுக்கொன்று முரண்படுவது ஏன்?

சில ஹதீஸ் நூட்களில் ஹதீஸின் இலக்கங்கள் அதே ஹதீஸ் நூலின் இன்னொரு பிரதிக்கு முரண்படுவதை சில நேரம் நாம்  அவதானிக்கலாம்.

 குறிப்பாக ஸஹீஹ் முஸ்லிம் கிரந்தத்தில் இவ்வாறு ஏற்படுவதுண்டு.
உதாரணமாக இரண்டு அறிஞர்கள் ஸஹீஹ் முஸ்லிமுடைய ஹதீஸ்களைத் தொகுத்திருப்பார்கள். அதில் வரக்கூடிய ஒரு ஹதீஸ் இருவரும் தொகுத்த நூலில் வெவ்வேறு இலக்கங்களில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் காணலாம்.

ஹதீஸ்களைத் தொகுத்து பதிவு செய்யும் அறிஞர்கள் அந்த ஹதீஸ்களை எண்ணுகின்ற அமைப்பைப் பொறுத்தே ஹதீஸ் இலக்கங்கள் வித்தியாசப்படுகின்றன.

ஸஹீஹ் முஸ்லிமில் ஒரே ஹதீஸ் பல இடங்களில் வரும். எனவே, சில அறிஞர்கள் பல தடவைகள் வரக்கூடிய ஹதீஸை ஒரு முறை மாத்திரம் பதிவு செய்கின்றனர்.

இன்னும் சில அறிஞர்கள் அறிவிப்பாளர் வரிசையற்ற முஅல்லக் எனும் வகையைச் சேர்ந்த ஹதீஸ்களையும் இலக்கமிட்டு பதிவு செய்கின்றனர்.
இன்னும் சிலர் அவற்றை இலக்கமிட்டு சேர்ப்பதில்லை.

இன்னும் சில அறிஞர்கள் நபித்தோழர்களின் செய்தியாக வரக்கூடிய மவ்கூப் எனும் அறிவிப்புகளையும் தாபிஈன்களின் செய்தியாக வரக்கூடிய மக்தூஃ எனும் அறிவிப்புகளையும் இலக்கமிட்டு பதிவிடுகின்றனர். சிலர் அவற்றை இலக்கமில்லாமல் பதிவிடுகின்றனர்.

சில அறிஞர்கள் நபியவர்களின் செய்தியாக மட்டும் வரக்கூடிய மர்பூஃ எனும் அறிவிப்புக்களை மட்டும் பதிவிடுகின்றனர்.

எனவே ஒவ்வொறு அறிஞர்களும் எண்ணிய அமைப்பை வைத்தே ஹதீஸ்களின் இலக்கங்கள் வித்தியாசப்படுகின்றன.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

- அஸ்கி அல்கமி
Previous Post Next Post