பெற்றோர்களே பிள்ளைகள் விடயத்தில் நீதம் செலுத்தத்துங்கள்.


பெற்றோர், பிள்ளைகள் உறவு என்பது எந்தவொரு எதிர்பார்ப்போ, சுயநலமோ, உடன்படிக்கைகளோ அற்ற ஒர் உறவாகும். மற்ற உறவுகளைப் போன்று இடையில் கோர்க்கப்பட்டதல்ல. அது ஆரம்பத்திலிருந்தே அன்பாலும்,  அரவனைப்பாலும் கட்டப்பட்ட சங்கிலியாகும். இந்த உறவு தான் அவன் மரணிக்கும் வரை தனக்கான அடையாளத்தை ஏற்படுத்தி ஆறுதல் தரக்கூடிய ஒன்றாகும். எல்லாக் கவலைக்,  கஷ்டங்களின் போதும் ஒரு தடவையாவது கடந்து போகும் ஒர் உறவு என்றால் அது பெற்றோர், பிள்ளைகள் உறவுதான்.

ஒரு பெற்றோர் ஆறு,  ஏழு குழந்தைகளைப் பெற்று அன்பாகவும் பாசமாகவும் வளர்க்கின்றனர்.  தன்னுடைய வாழ்க்கையின் முழு நேரத்தையுமே தன் பிள்ளைகளுக்காகவே அர்ப்பணிக்கின்றனர்.   அவர்களுக்குத் தன் பிள்ளைகள் வளர்ந்து நிம்மதியாக வாழ்வதைப் பார்ப்பதில் தான் சந்தோசமே இருக்கின்றது.  அல்லாஹுத் தஆலா தன்னுடைய அன்பு எப்படிப் பட்டது என்பதை மனிதனுக்கு விளங்கப் படுத்துவதற்காகத் தாயின் அன்பைத்தான் உதாரணம் காட்டுகிறான். இப்படி அல்லாஹ் உதாரணம் கூறும் அளவுக்கு அன்பை அள்ளிக் கொட்டித் தீர்க்கக்கூடியவர்கள் தான்  பெற்றோர்கள். 

ஆனாலும் மனிதர்கள் என்ற அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைப் பெற்ற சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுகின்றனர்.  அவர்களுக்கு மத்தியில் தங்களுடைய அன்பை சிலரை விட சிலருக்கு அதிகமாகக் காட்டுகின்றனர். சிலரை உயர்த்தியும் சிலரைத் தாழ்த்தியும்  பேசுவார்கள். ஒரு பெண் பிள்ளையும் மற்றது ஆண்களாகவும்   இருந்தால் அந்தப் பெண்ணுக்குத் தான் முழுச் சொத்தும், அன்பும் என்று ஆகிவிடும். இரண்டு, மூன்று பெண் பிள்ளைகள் இருந்தால் இவர்களுக்கு மத்தியில் அறிவு, அழகு, அந்தஸ்த்து  என அன்பு பிரிந்து சென்றுவிடும். அவர்கள் திருமணம் முடித்த பின்னர் கணவர்மாரின் கண்ணியம் அந்தஸ்த்து அடிப்படையிலே அன்பு பிரிந்து சென்றுவிடும். பாவம் ஆண்பிள்ளைகளுக்கு அன்பு, அரவனைப்பு எல்லாம் ஒரு குறிப்பிட்ட வயதோடு மட்டுப் படுத்தப் பட்டுவிடும். சொத்து விடயத்திலும் எல்லாமே எங்கோ ஒர் மூலையில் தான் இருக்கும். ஆண்பிள்ளைகளைப் பொருத்தவரை எதையுமே வாய்விட்டுக் கேட்கவோ, சொல்லவோ மாட்டார்கள். குடும்பத்துக்காகப் பொறுமையாக இருந்து விடுவார்கள். 

இன்று பெண் பிள்ளைகளின் திருமணத்துக்கு  நகை, ஆடை, சாப்பாடு என அனைத்தையுமே அள்ளி, அள்ளிக் கொட்டுவார்கள். ஆண் பிள்ளைகளின் திருமணம் அன்பளிப்பு விடயத்தில் அதிகமான வித்தியாசம் இருக்கும். அன்பளிப்பு என்று வந்தாலே இன்று பெண் பிள்ளைகளைத்தான் முதன்மைப் படுத்தப்படுகிறார்கள்.  ஆண், பெண் இருவரினதும் சொத்துப் பங்கு பற்றி அல்லாஹ் அவனது திருமறையில் தெளிவாகவே  கூறிவிட்டான். அவ்வாறு இருந்தும் இந்த விடயத்திலே அதிக பெற்றோர் இத் தவறை விடுகின்றனர். காரணம் பெண்கள் இயலாதவர்கள். என்றும் ஆண்களுக்கு சம்பாரித்துக் கொள்ளலாம் என்ற என்னத்தில் தான் இவ்வாறு நடந்து கொள்கின்றனர். ஆனால் இஸ்லாம் பெண்ணுக்கு ஒன்று கொடுத்தால் அதே போன்று ஆணுக்கும் கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றது. அன்பளிப்பு விடயத்தில் நீதமாக நடக்க வேண்டும் என்பதற்கான நபியவர்களின் வலியுறுத்தல் எப்படியுள்ளதென்றால்

நுஃமான் பின் பஷிர் அவர்கள் கூறியதாவது:                     என்னை என் தந்தையார் (பஷீர் பின் சஅத் (ரலி) அவர்கள்) அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு சென்று, நான் எனது இந்த மகனுக்கு ஓர் அடிமையை அன்பளிப்புச் செய்திருக்கின்றேன் என்று சொன்னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் பிள்ளைகள் அத்தனை பேருக்கும் இதைப் போன்றே அன்பளிப்புச் செய்துள்ளீரா? என்று கேட்டார்கள். என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால் அதை (உங்கள் அன்பளிப்பைத்) திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள். ஸஹீஹ் புகாரி : 2586. 

 அதே போன்று தான்  பெற்றெடுக்கும் பிள்ளைகள் விடயத்தை எடுத்துக் கொண்டால் பெண்பிள்ளைகளின் பிள்ளை மீது அதிக அன்பும், அக்கறையும் இருக்கும். ஆண்பிள்ளைகளின் பிள்ளைகள் மீது அன்பு காட்டுவதை மட்டுப்படுத்தியே வைத்திருப்பார்கள். இது எல்லா இடங்களிலும் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே சில இடங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது. பிள்ளைகள் மத்தியில் நீதமான முறையில் நடப்பதை நபி ஸல் அவர்கள் காலத்தில் நடந்த சம்பவங்கள் வலியுறுத்துவதைக் காணலாம். 

நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். 

என் தாயார் என் தந்தையிடம் அவரின் செல்வத்திலிருந்து எனக்கு சிறிது அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். பிறகு, அவருக்கு (இதுவரை கொடுக்காமலிருந்து விட்டோமே என்ற வருத்தம் மனதில்) தோன்றி எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், 'நீ நபி(ஸல்) அவர்களை சாட்சியாக்காவரை நான் திருப்தி கொள்ள மாட்டேன்' என்று கூறினார்கள். எனவே, என் தந்தை நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்து இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, 'இவனுடைய தாயாரான (அம்ர்) பின்த்து ரவாஹா இவனுக்கு சிறிது அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள்' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா?' என்று கேட்டார்கள். என் தந்தை, 'ஆம் (உண்டு)' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள்' என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன். 

இன்னோர் அறிவிப்பில், 'நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்கமாட்டேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என வந்துள்ளது. ஸஹீஹ் புகாரி : 2650.

அல்லாஹ் நம் பெற்றோரையும் பெற்றோர்களாகிய எம்மையும் ஷைத்தானின் இந்தத் தூண்டுதலில் இருந்து பாதுகாக்க வேண்டும். இது தவறு என்று சில பெற்றோர்கள் உணர்ந்து கொண்டால் அவர்கள் அதைத் திறுத்திக் கொள்ள முயற்சி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் இதனை அறிந்த பிள்ளைகள் தம் பெற்றோரிடம் மெதுவாக எடுத்துக் கூறவேண்டும். 

நிச்சயமாக எந்தப் பெற்றோரும் இந்தத் தவறை அவர்கள் உணர்ந்து செய்வதில்லை. அவர்கள் அறியாமலே ஒருத்தர் பக்கம் சாடப்படுகின்றனர். அன்பு செலுத்துவதிலும் நீதம் செலுத்துவதிலும் அல்லாஹ்வைத்தவிர வேறு யாராலும் நீதியாக நடக்க முடியாது. இது பெற்றோரைக் குறை காண்பதற்கான பதிவல்ல. பிள்ளையைத் தன் வயிற்றில் சுமக்கும் போது சொல்ல முடியாதளவு கஷ்டங்களைச் சுமப்பது மட்டுமல்லாது வளர்க்கும் போதும் இருவரும் மிகவுமே சிரமப்பட்டு விட்டு இடையில் ஷைத்தானின் தூண்டுதல்களால் இப்படிப் பாரபட்சமாக நடந்து விட்டு அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளிகளாக நிற்பதை எந்தப் பிள்ளையாளும் தாங்கிக் கொள்ள முடியாத ஒரு விடயமே. நாம் ஒவ்வொருவரும்  பெற்றோர்களே  எம்மைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்தப் பதிவு. அல்லாஹ் நம்மனைவரையும் கண்ணியமான முறையில் சுவனம் நுழைய அருள்புரிய வேண்டும்.

ஆக்கம்:

உம்மு உபாதா (உஸைமீனிய்யா)


Previous Post Next Post