இஸ்லாமிய ஷரீஆவில் அகீதாவும் சட்டமும் வெவ்வேறான தரத்திலேயே அணுகப்படும்

இஸ்லாமிய ஷரீவின் கட்டமைப்பானது 
அகாயித்: நம்பிக்கை கோட்பாடுகள்,
அஹ்காம்: சட்டங்கள்,
இபாதாத்: வணக்க வழிபாடுகள், 
முஆமலாத்: கொடுக்கல் வாங்கல் நடைமுறைகள்,
அக்லாக்: பண்பாடுகள்,
ஜினாயாத் (ஹுதூத்) : குற்றவியல் தண்டனைச் சட்டங்கள் போன்ற பல்வேறுபட்ட கூறுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
 
அவற்றில் அகாயித் கோட்பாடுகள் என்பவை விட்டுக் கொடுப்பில்லாத, தன்னில் மாற்றத்தை ஏற்காத
நிலையான கோட்பாடாகும்.

அல்லாஹ் ஒப்பற்ற ஒருவனே, அவனது அஸ்மா ஸிஃபாத், (அவனது அழகிய பெயர்கள், பண்புகள்), லவ்ஹ், மலாயிகா, சித்ரதுல் முன்தஹா, அல்கலம், மீஸான், ஸிராத், அர்ழுல் மஹ்ஷர், ஹவ்ழுல் கவ்ஸர், சொர்க்கம், நரகம், ஈஸா நபியின் வருகை, யஃஜூஜ், மஃஜூஜ், தஜ்ஜால், தாப்பத்துல் அர்ழ் , சூரியன் மேற்கில் இருந்து உதயமாகுதல், கப்ரில் முன்கர் நகீரின் கேள்விகள், கருவறையில் உயிர் ஊதப்படுதல், மறுமைக்கான சூர் ஊதப்படுதல் போன்ற பல்வேறுபட்ட அம்சங்கள் இதில் உள்ளடங்குகின்றன.

 அகீதா துறை சார்ந்த அறிஞர்கள் இந்த பகுதியை 
السمعيات/ الغيبيات கற்பனைகளைப் புகுத்தாது, வஹியில் வந்தவை போன்று நம்பிக்கை கொள்ள வேண்டிய பகுதிகள் என அழைக்கின்றனர்.

உலகில் வாழ்கின்ற அனைத்து பிரதேச மக்களும் உசூல் என்ற அடிப்படைக் கோட்பாட்டில் வாழ்வது என்பது இஸ்லாமிய ஷரீஆவின் கண்ணோட்டத்தில் அகீதா பகுதியிலும் இஜ்மாவாக எட்டப்பட்ட கடமைகளில் மாத்திரமே சாத்தியமாகும்.

கோட்பாடு சார்ந்த அம்சங்களோடு தொடர்பான 
குர்ஆன், ஹதீஸ்  வசனங்கள் தெளிவுபடுத்திய அகீதா கோட்பாடுகளை ஒருவர் தவறான வியாக்கியானம் செய்வதோ, மறுப்பதோ, முறைகற்பிப்பதோ மார்க்கம் அங்கீகரிக்காத ஒரு வழிமுறையாகும்.

அதனால் ஒரு முஸ்லிம் உலகின் எத்தேசத்தில் வாழ்ந்தாலும் அதில் மாற்றம், திரிபு, கருத்துப் பாழடிப்பு செய்யாது, முறை கற்பிக்காது, சந்தேகம் கொள்ளாது வாழ வேண்டும். வாழலாம். 

இறைத் தூதர்களின் பிரசாரமும் அகீதாவை முதன்மைப்படுத்தியதாவே இருந்ததை மறுக்க முடியாது. உதாரணமாக நூஹ் நபி லூத் நபி ஆகிய இருவரின் மனைவிரும் இறை மறுப்பாளர்களாக இருந்தமை, யூசுஃப் நபிக்கு தனது பெற்றோர் சுஜூத் செய்தமை போன்ற இறைத்தூதரின் ஷரீஆவில் மாற்றப்பட்ட சட்டங்களை குறிப்பிடலாம்.

அதனால்தான் அகீதா சார்ந்த பகுதியில் விட்டுக் கொடுப்புக் கிடையாது. 

ஒருவர் தான் வாழ்கின்ற பிரதேசத்தில் அகீதாவைக் கடைப்பிடித்து வாழ முடியாத நிலை ஏற்படுகின்ற போது ஹிஜ்ரத் பயணமே அதற்கான முடிவான தீர்வாகும். 

ஹிஜ்ரத் என்பது அகீதாவைக் - அல்லாஹ்வை தூயவனாக ஏற்றுக் கடைப்பிடிக்க முடியாத நிர்பந்த நிலையில் உள்ள ஒருவருக்கு கடுமையாக்கப்பட்ட ஒரு கடமையே அன்றி, கருத்து வேறுபாடான மஸாயில்களை நிறைவேற்ற முடியாத போது மேற்கொள்ளப்படும் பயணம் கிடையாது. 

ஹிஜ்ரத் சாத்தியமற்றதாகின்ற போது உள்ளத்தில் ஈமானை மறைத்து முஃமினாக தாராளமாக வாழ மார்க்கம் அனுமதி அளித்துள்ளது.

وَقَالَ رَجُلٌ مُّؤْمِنٌ ‌ۖ مِّنْ اٰلِ فِرْعَوْنَ يَكْتُمُ اِيْمَانَهٗۤ اَتَقْتُلُوْنَ رَجُلًا اَنْ يَّقُوْلَ رَبِّىَ اللّٰهُ وَقَدْ جَآءَكُمْ بِالْبَيِّنٰتِ مِنْ رَّبِّكُمْ ؕ وَاِنْ يَّكُ كَاذِبًا فَعَلَيْهِ كَذِبُهٗ ؕ وَاِنْ يَّكُ صَادِقًا يُّصِبْكُمْ بَعْضُ الَّذِىْ يَعِدُكُمْ ۚ اِنَّ اللّٰهَ لَا يَهْدِىْ مَنْ هُوَ مُسْرِفٌ كَذَّابٌ‏ [المؤمن/28]

 ஃபிர்அவ்னின் கிளையாரில் தம் ஈமானை மறைத்து வைத்திருந்த நம்பிக்கை கொண்டவர் ஒருவர் : “எனது இரட்சகன் அல்லாஹ்தான்!” என்று  கூறுவதற்காக ஒரு மனிதரை நீங்கள் கொன்று விடுவீர்களா? மேலும் அவர் மெய்யாகவே அவர் உங்கள் இறைவனிடமிருந்து தெளிவான அத்தாட்சிகளை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். எனவே அவர் பொய்யராக இருந்தால், அப்பொய் அவருக்கே (கேடு) ஆகும்; ஆனால் அவர் உண்மையாளராக இருந்தால், அவர் உங்களுக்கு வாக்களிக்கும் சில (வேதனைகள்) உங்களைப் பிடிக்கும். எனக் கூறினார் (முஃமின்-28) 

مَنْ كَفَرَ بِاللّٰهِ مِنْۢ بَعْدِ اِيْمَانِهٖۤ اِلَّا مَنْ اُكْرِهَ وَقَلْبُهٗ مُطْمَٮِٕنٌّۢ بِالْاِيْمَانِ وَلٰـكِنْ مَّنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِّنَ اللّٰهِ‌ۚ وَلَهُمْ عَذَابٌ عَظِيْمٌ‏ (النحل-106)

எவர் ஈமான் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கின்றாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்) - எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் (குஃப்ரைக் கூற/ செய்ய) நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (அவர் மீது அது குற்றமில்லை)(அந்நஹ்ல்-106) .

என்ற வசனம் ஈமானை மறைத்துக் கொண்டு நிர்பந்தமான நிலையில் வாழ்பவர்கள் முஃமின்கள் முஸ்லிம்கள் எனக்  குறிப்பிட்டிருப்பதைஇங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

மேற்படி சலுகையின் அடிப்படையில் வெளிப்படையில் கிரிஸ்தவர்களாகவும் ஈமானில் முஸ்லிம்களாகவும் பலர் வாழ்ந்தனர் என்பதை குர்ஆனும் இஸ்லாமிய சரித்திரமும் ஒப்புக் கொள்கின்ற நிலையில் நிர்பந்த நிலையில் சிலர் செய்கின்ற மார்க்க விரோத செயல்களை அவர்களின் வெளிப்படையைக் கவனித்து அவர்களை மார்க்கத்தில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பது அல்லாஹ் விரும்பாத முன்னெடுப்பாகும்

நபிமார்கள் அடிப்படையில் ஒன்று பட்டவர்கள்:
 
أَنَا أَوْلَى النَّاسِ بعِيسَى ابْنِ مَرْيَمَ، في الأُولَى وَالآخِرَةِ قالوا: كيفَ؟ يا رَسُولَ اللهِ، قالَ: الأنْبِيَاءُ إِخْوَةٌ مِن عَلَّاتٍ، وَأُمَّهَاتُهُمْ شَتَّى، وَدِينُهُمْ وَاحِدٌ، فليسَ بيْنَنَا نَبِيٌّ. - صحيح مسلم
நானே ஈஸா நபிக்கு மிகவும் நெருங்கிய உரிமைக்காரன். நபிமார்கள் தந்தை வழி வந்த சகோதரர்கள். அவர்களின் அன்னையரே பல்வேறுபட்டவர்கள். அவர்களின் - தீன்-  நம்பிக்கை கோட்பாடு ஒன்றே. இருந்தாலும் எங்களுக்குள் நபிமார்கள் வரவில்லை.(முஸ்லிம்- அறிவிப்பவர்:  அபூஹுரைரா ரழி)

மேற்படி நபி மொழி பற்றி விளக்கும் போது பின்வருமாறு கருத்து கூறப்படும் 
والمعنى: أنَّهم مُتَّفِقون فيما يَتعلَّقُ بالاعتقاديَّاتِ المُسمَّاةِ بأُصولِ الدِّياناتِ، كالتَّوحيدِ، والإيمانِ، مُختلِفون فيما يَتعلَّقُ بالعمَليَّاتِ، وهي الفِقهيَّاتُ، كما أنَّ أولادَ العَلَّاتِ أبوهمْ واحدٌ وإنْ كانت أُمَّهاتُهم شَتَّى.
நபிமார்களின் பெற்றோர் ஒருவழியினர் போல அவர்கள் முன்வைத்த அகீதாவும் ஒன்றாகும். அவர்களின் தாய்மார் வேறுபட்டவர்களைப் போல ஃபிக்ஹ் சட்டங்களும் வேறுபட்டதாகும் என்பது இதன் பொருளாகும். அந்த வகையில் அகீதா ஃபிக்ஹ் ஆகிய இரண்டும் வெவ்வேறான தரத்தில் உள்ளவை என்பதை விளக்குகின்றது.

மார்க்க விளக்கங்களில் தவறிழைப்போரின் தவறுகளை முகாலாஃபா, مخالفة பித்ஆ, بدعة
சாதாரண தவறு போன்ற நிலைப்பாடுகளில் எப்போது அணுக வேண்டும் போன்ற விளக்கங்கள் பின்வரும்
இணைப்பில் விரிவாகத் தரப்படுகின்றன.

https://www.alukah.net/sharia/0/36/%D8%A7%D9%84%D9%85%D8%B3%D8%A7%D8%A6%D9%84-%D8%A7%D9%84%D8%B9%D9%82%D8%AF%D9%8A%D8%A9-%D8%A7%D9%84%D8%AA%D9%8A-%D8%AA%D8%B9%D8%AF%D8%AF%D8%AA-%D9%81%D9%8A%D9%87%D8%A7-%D8%A2%D8%B1%D8%A7%D8%A1-%D8%A3%D9%87%D9%84-%D8%A7%D9%84%D8%B3%D9%86%D8%A9-%D9%88%D8%A7%D9%84%D8%AC%D9%85%D8%A7%D8%B9%D8%A9/

இறுதியாக:

தூய கலிமாவைக் கூறிய பலரை சாதாரண தவறுக்காக மார்க்கத்தை விட்டும் வெளியேறியவராக விமர்சிக்கும் போக்கு இஸ்லாமில்லை என்பதை அடிப்படைகளை மறந்து தவ்ஹீத் பேசுவோர், கண்ணை மூடிக் கொண்டு கப்ரு வணக்கத்தை ஆதரிக்கும் ஜாஹில்கள், தனது நிலைப்பாடே சரி என வாதிடுவோரைப் பிழைகண்டு கொண்டு, 
பிழையான, 
மர்ஜூஹான, 
பலவீனமான தமது ஷேக்குகளின் நிலைப்பாட்டைச் சரியாக்கி சமூகத்தில் திணிக்கும் இக்வானிய மகாஸிதிகள் என்போர் தமது நிலைப்பாடுகள் தொடர்பாக அடிக்கடி மீள் பரிசீலிக்க வேண்டும் என்பது பணிவான நமது வேண்டுதலாகும்.

- எம்.ஜே.எம். ரிஸ்வான் மதனி 
Previous Post Next Post