அர் ரஹீக் அல் மக்தூம் அறிமுகம்

பதிப்புரை:

தொடக்கத்திலும் இறுதியிலும் அகிலத்தாரின் இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!
அகிலத்தாருக்கு ஓர் அருட்கொடையாக வந்த இறுதி இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் இறையருளும் ஈடேற்றமும் உண்டாகுக!

உங்கள் கைகளில் தவழும் - இந்நூல் பற்றிய சுருக்கமான ஓர் அறிமுகத்தை தங்களுக்கு முன் சமர்ப்பிக்கின்றோம்.

ஹிஜ்ரி 1396 ஆம் ஆண்டு ரபீவுல் அவ்வல் மாதம் (1976 மார்ச்) பாகிஸ்தானில் நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு குறித்து உலகளாவிய மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில், ‘‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி'' என்ற பெயரில் மக்காவை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இஸ்லாமிய நிறுவனம் கீழ்கண்ட ஓர் அழகிய அறிவிப்பை வெளியிட்டது.

‘‘நபி (ஸல்) அவர்களின் தூய வாழ்க்கை வரலாற்றை இஸ்லாமிய அறிஞர்கள் ஆய்வு செய்து, கட்டுரைகள் எழுதி ராபிதாவிடம் சமர்பிக்க வேண்டும். அவற்றுள் முதல் தரமாக தேர்வு செய்யப்படும் முதல் ஐந்து ஆய்வுகளுக்கு மொத்தம் 1,50,000 ஸவூதி ரியால்கள் அன்பளிப்பாக வழங்கப்படும். மேலும், எழுதப்படும் ஆய்வுகள் பின்வரும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.''

1) ஆய்வுகள் முழுமையாக இருக்க வேண்டும். வரலாற்று நிகழ்வுகள், சம்பவங்கள் வரிசை கிரமமாக குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.

2) மிக அழகிய முறையில் தொகுக்கப்பட்டிருக்க வேண்டும். எங்கும் இதற்கு முன் அது பிரசுரமாகி இருக்கக் கூடாது.

3) இந்த ஆய்வுக்குச் சான்றாக, அடிப்படையாக எடுத்துக் கொள்ளப்பட்ட சிறிய பெரிய நூல்களின் பெயர்களைக் குறிப்பிட வேண்டும்.

4) ஆய்வாளர் தனது வாழ்க்கைக் குறிப்பையும், கல்வித் திறனையும், வேறு ஏதேனும் அவரது வெளியீடுகள் இருப்பின், அவற்றையும் தெளிவாகவும் விவரமாகவும் குறிப்பிட வேண்டும்.

5) அழகிய கையெழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். ‘தட்டச்சு' செய்து அனுப்புவது மிக ஏற்றமானது.

6) அரபி அல்லது அரபியல்லாத வழக்கிலுள்ள மொழிகளில் ஆய்வுகள் இருத்தல் வேண்டும்.

7) கட்டுரைகள் சமர்ப்பிக்க வேண்டிய காலம் ஹிஜ்ரி 1396 ரபிஉல் அவ்வல் முதல் ஹிஜ்ரி 1397 முஹர்ரம் வரை. (1976 மார்ச் முதல் 1977 ஜனவரி வரை.)

8) மக்காவிலுள்ள ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி'ம்ன் தலைமைச் செயலகத்துக்கு மூடப்பட்ட உறையில் ஆய்வுக் கோர்வைகள் பதிவுத் தபாலில் அனுப்பப்பட வேண்டும்.

9) இத்துறையில் நிபுணத்துவம் பெற்ற அறிஞர்களின் குழு ஒன்று கோர்வைகளை ஆய்வு செய்து தேர்வு செய்யும்.

இவ்வாறு மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பையும் அதன் நிபந்தனைகளையும் ராபிதா வெளியிட்டவுடன் அறிஞர் பெருமக்கள் பேராவலுடன் பெரும் முயற்சி எடுத்து ஆய்வுகளை கோர்வை செய்து ராபிதாவுக்கு அனுப்பினர்.

பல மொழிகளில் மொத்தம் 1182 ஆய்வுகள் அனுப்பப்பட்டன. அவற்றுள் 183 ஆய்வுகள் மட்டுமே நிபந்தனைக்குட்பட்டு இருந்ததால் அவை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

அவற்றை பரிசீலனை செய்ததில் ஐந்து ஆய்வுகள் முதல் தரம் வாய்ந்தவை என முடிவு செய்யப்பட்டு பரிசுக்காக தேர்வு செய்யப்பட்டன.

1) அறிஞர் ஸஃபிய்யுர் ரஹ்மான் (முபாரக்பூர், உ.பி., இந்தியா) அவர்களின் (அரபி) ஆய்வு முதல் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 50,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

2) கலாநிதி மாஜித் அலீ கான் (புது டெல்லி, இந்தியா) அவர்களின் (ஆங்கில) ஆய்வு இரண்டாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 40,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

3) கலாநிதி நாஸீர் அஹ்மது நாசிர் (பாகிஸ்தான்) அவர்களின் (உர்து) ஆய்வு மூன்றாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 30,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

4) பேராசியர் ஹாமித் மஹ்மூது (எகிப்து) அவர்களின் (அரபி) ஆய்வு நான்காம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 20,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

5) பேராசியர் அப்துஸ்ஸலாம் ஹாஷிம் (ஸவூதி) அவர்களின் (அரபி) ஆய்வு ஐந்தாம் பரிசு பெற்றது. பரிசுத் தொகையாக 10,000 ரியால்கள் வழங்கப்பட்டன.

ஹிஜ்ரி 1398, ஷஃபான் மாதத்தில் (1978-ஜூலை) கராச்சியில் நடைபெற்ற ‘‘ஆசிய இஸ்லாமிய மாநாட்டில்'' வெற்றி பெற்றவர்களின் பெயர்களை ராபிதா அறிவித்தது. மேலும், அதனை பல பத்திகைகளும் பிரசுரித்தன.

பரிசுகளை வழங்குவதற்காக சங்கைக்குரிய இளவரசர் ஸுஊது இப்னு அப்துல் முஹ்ஸின் அவர்கள் தலைமையில் மாபெரும் விழா ஒன்று மக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, வெற்றி பெற்றவர்களுக்கு ஹிஜ்ரி 1399, ரபீஉல் அவ்வல் பிறை 12 சனிக்கிழமை காலையில் பரிசுகளை வழங்கி இளவரசர் சிறப்பித்தார்.

நூலின் இப்பின்னணியை தெரிந்து கொண்டால் இது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நூல் என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம்.

இந்நூலுக்கு ஆசிரியர் வைத்த பெயர் ‘‘அர்ரஹீக்குல் மக்தூம்'' என்பதாகும். ‘‘முத்திரையிடப்பட்ட உயர்ந்த மதுபானம்'' என்பது அதன் அர்த்தம். அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைந்த உயர்ந்தோருக்கு இவ்வகை மது சுவர்க்கத்தில் வழங்கப்படும் என்று அல்குர்ஆனில் (83 : 25) கூறப்பட்டுள்ளது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு, படிப்பவருக்கு சுவையாகவும் இனிமையாகவும் இருக்கிறது என்பதால், நபியவர்களைப் பற்றிய தனது நூலுக்கு உவமை அடிப்படையில் இந்தப் பெயரை ஆசிரியர் சூட்டியுள்ளார். அதையே நாம் சுருக்கமாக இந்நூலின் தமிழாக்கத்திற்கு ‘‘ரஹீக்'' என்று பெயரிட்டுள்ளோம்.
தாருல் ஹுதாவின் ஊழியர்களான நாங்கள் இந்நூலைத் தமிழாக்கம் செய்து வெளியிடுவதில் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். அத்துடன் வாய்ப்பளித்த அல்லாஹ்வுக்கே அனைத்து புகழ்ச்சிகளையும் நன்றிகளையும் உரித்தாக்குகிறோம்.

இம்மொழியாக்கப் பணியில் பெரிதும் உதவியும் ஒத்துழைப்பும் நல்கிய சகோதரர்களையும் இந்நூல் வெளிவர உதவிய நண்பர்கள் அனைவரையும் உங்கள் துஆக்களில் இணைத்துக் கொள்ளுங்கள்.
அல்லாஹ் இவர்களுக்கும் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் என்றென்றும் நல்லருள் புரிவானாக! அல்லாஹ் நம் அனைவருக்கும் அவனது பொருத்தத்தை வழங்குவானாக!

இந்நூலில் குறைகள், தவறுகள் ஏதும் இருப்பின் அவற்றை மறுபதிப்பில் சரிசெய்து கொள்ள ஏதுவாக சுட்டிக் காட்டுமாறு வாசக அன்பர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். அதற்காக அல்லாஹ் தங்களுக்கு நற்கூலி வழங்குவானாக!

தாருல் ஹுதா மேன்மேலும் பல நல்ல நூல்களை மொழியாக்கம் செய்து வெளியிட வேண்டும் என அல்லாஹ்விடம் தாங்கள் மறவாமல் இறைஞ்ச வேண்டும் என்ற அன்பான கோரிக்கையை முன் வைக்கிறோம்.

அகிலத்தாரின் ஒரே இறைவன் அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், முஸ்லிம்கள் அனைவருக்கும் உண்டாகுக! ஆமீன்!!

குறிப்பு: இந்நூலின் ஆரம்பப் பகுதியில் நபி (ஸல்) பிறப்பதற்கு முந்திய வரலாற்றைப் பற்றி சற்று விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அது சில வாசகர்களுக்கு சடைவாகத் தோன்றினால், அவர்கள் நூலின் அடுத்த பகுதிக்குச் சென்று விடவும். அதில் தான் நபி (ஸல்) அவர்களின் பிறப்பிற்குப் பிந்திய வாழ்க்கை வரலாற்றைப் பற்றி மிக ஆதாரத்துடன் விவரிக்கப்பட்டுள்ளது.

உமர் ஷரீஃப் (குர்ஆன் மற்றும் நபிமொழி பணியாளன்)
தாருல் ஹுதா
சென்னை - 1.
ஜுமாதா அல் ஊலா 10, ஹிஜ்ரி 1425


தாருல் ஹுதாவின் அறிமுகம்:

எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! இறையருளும் ஈடேற்றமும் நபி முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின்பற்றும் அனைவருக்கும் மறுமை நாள் வரை தொடரட்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும்....

சமுதாயம் என்பது பல தனி மனிதர்கள் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு. முழுமையாக சீர்திருத்தம் பெற்ற மக்களை உயர் சமுதாயமாகவும், சீர்திருத்தம் பெறாதவர்களை தாழ்ந்த சமுதாயமாகவும் கருதுவது இயற்கை. ஆகவே, சமுதாயம் மேம்பட ஒவ்வொருவரும் தம்மை முழுமையாக சீர்திருத்திக் கொள்வதும், சமுதாயத்தைக் கெடுக்கும் அனைத்திலிருந்தும் தம்மை விடுவித்துக் கொள்வதும் மிக அவசியம்.

அதனால்தான் சமுதாயத்தில் ஊடுருவியுள்ள சீர்கேடுகளை கண்டும் காணாமலிருப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. மாறாக, நன்மையானவற்றை ஒருவருக்கொருவர் அறிவுறுத்திக் கொள்வதும் தீயவற்றிலிருந்து தடுப்பதும் சமுதாய மக்களுக்கு இருக்க வேண்டிய அவசியமான பண்பு என இஸ்லாம் இயம்புகிறது.

நம்பிக்கை கொண்ட ஆண்களும், நம்பிக்கை கொண்ட பெண்களும் (தங்களுக்குள்) ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாய் இருக்கின்றனர். அவர்கள், (ஒருவர் மற்றவரை) நன்மை செய்யும்படித் தூண்டியும், பாவம் செய்யாது தடுத்தும், தொழுகையைக் கடைப்பிடித்து, ஜகாத்து கொடுத்தும் வருவார்கள். அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து நடப்பார்கள். 
இத்தகையவர்களுக்கு அதிசீக்கிரத்தில் அல்லாஹ் அருள்புரிவான். நிச்சயமாக, அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 9 : 71)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் யாராவது ஒரு தவறைக் கண்டால் அதை தனது கரத்தால் மாற்றட்டும். அது இயலாவிட்டால் தனது நாவால் மாற்றட்டும். அதுவும் இயலாவிட்டால் உள்ளத்தால் (வெறுத்து விலகி விடட்டும்). இது ஈமானின் குறைந்தபட்ச அளவாகும். (ஸஹீஹுல் புகாரி)

மேலும் கூறினார்கள்: இறைநம்பிக்கையாளர்கள் தங்களிடையே நேசம் கொள்வதற்கும், கருணை காட்டுவதற்கும், அன்பு செலுத்துவதற்கும் எடுத்துக்காட்டு ஓர் உடலைப்போல. உடலில் ஏதேனும் ஓர் உறுப்பு பாதிக்கப்பட்டால் அனைத்து உறுப்புகளும் காய்ச்சல் மற்றும் தூக்கமின்மையால் முறையிடுகின்றன. (ஸஹீஹுல் புகாரி)

சமுதாயத்தின் இன்றைய நிலை:

சிறியோர் முதல் பெரியோர் வரை நம்மிடையே வாழும் பெரும்பாலானவர்கள் சரியான மார்க்க ஞானமின்றி, முறையான வழிகாட்டலின்றி இருக்கிற ஒரு சூழலை நாம் பார்க்கிறோம்.

ஒழுக்கப் பண்பாடுகளாலும் ஓரிறைக் கொள்கையாலும் மனித சமுதாயத்திற்கே வழிகாட்டும் ஒரு முன்னணி மார்க்கமாக இஸ்லாம் விளங்குகிறது. ஓரிறைக் கொள்கையை வலியுறுத்துவதுடன் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் மனித நேயத்தையும் ஒற்றுமையையும் இஸ்லாம் வலியுறுத்துகிறது.
ஆனால், இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் இறைக்கோட்பாடு, வணக்க வழிபாடுகள், ஒழுக்க மாண்புகள் ஆகிய அனைத்திலும் இஸ்லாமிய வழிகாட்டலுக்கு முரண்பட்டு நிற்கின்றனர்.
இந்நிலை தொடர்ந்தால் இம்மையிலும் மறுமையிலும் முஸ்லிம் சமுதாயத்தினர் இறைக் கோபத்திற்கு ஆளாகி விடுவார்கள். மேலும், இவ்வுலகில் மற்ற சமுதாயங்களுக்கிடையில் தங்களது மிளிரும் தனித் தன்மைகளையும் இழந்து விடுவார்கள்.

சீர் செய்யும் முறை:

‘‘லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் - அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் இல்லை, முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுடைய தூதர்'' என்ற இஸ்லாமின் அடிப்படையைக் கொண்டே இந்த சீர்திருத்தம் ஏற்பட முடியும். அதாவது, ஏக இறைவனாகிய அல்லாஹ் இறக்கிய மேன்மைமிகு குர்ஆனின் வழிகாட்டுதல் மற்றும் நபி (ஸல்) அவர்களின் சிறப்புமிகு வாழ்வியல் நெறி ஆகிய இரண்டினால் மட்டுமே மனித குலம் சீர்பெற முடியும்.

அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் வழிப்படுகின்றாரோ அவர் நிச்சயமாக மகத்தான பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். (அல்குர்ஆன் 33 : 71)

ஆகையால் இறையருளால் பெறப்பட்ட நற்பேறுகளை உயர்ந்த இப்பணிக்காக செலவிடுதல் நம்மில் ஒவ்வொருவருக்கும் கடமையாகும்.

தோற்றம்:

இந்த உயர்ந்த பணியை நிறைவேற்றி இறை பொருத்தத்தை அடைய வேண்டுமென்ற தூய எண்ணத்தில் தொடங்கப்பட்டதுதான் ‘தாருல் ஹுதா'.
அல்லாஹ்வின் அருளால் சமுதாய சீரமைப்புக்காக அயராது உழைக்கும் நல்லோர்களுடன் சேர்ந்து இத்தூய பணியை மென்மேலும் சிறப்பாக செய்ய வேண்டும் என்பதே இதன் இலட்சியமாகும்.

பணிகளும் தொண்டுகளும்:

அழைப்புப் பணி:
இதுவே இஸ்லாமின் அடிப்படையாகும். உலகில் இப்பணி இறைத்தூதர்கள் வாயிலாக நிலைநிறுத்தப்பட்டது. இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களுடைய சமுதாயத்தினர் அனைவன் மீதும் இப்பணி கடமையாக்கப்பட்டது. மேன்மைமிகு குர்ஆனும், சிறப்புமிகு நபிமொழியும் இதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன.

இதன்படி மனித சமுதாயத்திற்கு இயன்ற அளவு அனைத்து வழிகளிலும் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதும், அதன் உயர்வுகளை விளங்கச் செய்வதும், இஸ்லாமிய மார்க்கத்தை நோக்கி வரும் சந்தேகங்கள், எதிர்வரும் கேள்விகள் அனைத்திற்கும் தகுந்த சான்றுகளுடன் பதிலளித்து தெளிவுபடுத்துவதும் தாருல் ஹுதாவின் தலையாய பணிகளாகும்.

கல்விப் பணி:
இஸ்லாமை அறிய விரும்பும் சிறுவர், சிறுமியர், வாலிபர், முதியோர், ஆண்கள், பெண்கள் அனைவருக்கும் மேன்மைமிகு திருக்குர்ஆன், சிறப்புமிகு நபிமொழிகளை அவரவர் தகுதிக்கேற்ப கற்றுத் தருவது தாருல் ஹுதாவின் இரண்டாவது பணியாகும்.

நூல் வெளியிடுதல்:
மேன்மைமிகு குர்ஆன், சிறப்புமிகு நபிமொழி இரண்டையும் அடிப்படையாகக் கொண்டு சமுதாய பேரறிஞர்களால் அரபி மொழியில் எழுதப்பட்ட நூல்களை தமிழிலும் ஏனைய உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்து, அந்நூல்களை சலுகை விலையில் மக்களுக்கு வழங்குவது தாருல் ஹுதாவின் மூன்றாவது பணியாகும்.

உதவுதல்:
அல்லாஹு தஆலாவே அனைவரின் தேவைகள், துன்பங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்பவன். மிகப் பெரிய வள்ளலாகிய அல்லாஹ் தன் சார்பாக உலகில் ஏழை, எளியோர், நலிந்தோர் ஆகியோன் துயர் துடைக்கும் வள்ளல் பெருமக்களுக்கு பெரும் வெகுமதிகளை ஈருலகிலும் வழங்குவதாக வாக்களித்துள்ளான். பிறர் துன்பங்களில் பங்கெடுப்பது, பிறர் தேவைகளை நிறைவேற்ற இயன்றவரை உதவுவது முஸ்லிம்களுடைய அடிப்படை பண்புகளாகும்.

இந்த உன்னத பணிக்காக ‘பைதுல்மால்' (பொது நிதி) ஏற்பாடு செய்து இரக்கச் சிந்தையும், மார்க்கப்பற்றும் கொண்ட வள்ளல் பெருமக்களிடமிருந்து கடமையான, உபரியான தர்மங்களை பெற்று தேவையுடையோருக்கு உதவுவது தாருல் ஹுதாவின் நான்காவது பணியாகும்.

மேற்கூறிய பணிகளைத் தவிர, இஸ்லாம் முழுமையாக ஒவ்வொருவரின் வாழ்விலும் வரவேண்டும் என்பதற்காகவும், மனித சமுதாயங்களுக்குள் நல்லுறவும், அன்பும், கருணையும், சமூக புரிந்துணர்வும் ஏற்பட வேண்டும் என்பதற்காகவும் இயன்றவரை தொண்டாற்றி, அப்பணி செய்வோருடன் இணைந்து பங்காற்றி, அல்லாஹ்வுக்காக தன்னை ஈந்துகொள்வது தாருல் ஹுதாவின் குறிக்கோளாகும்.
இப்பணிகள் அனைத்தும் தொய்வின்றி தொடர்ந்து சிறப்பாக, திறம்பட நடைபெற, மேலும் அல்லாஹ்விடம் ஏற்கப்பட, தங்களின் பிரார்த்தனைகளில் நினைவுகூரும்படி அன்புடன் கேட்டுக்கொள்வதுடன், தங்களால் இயன்றவரை பங்குபெறுமாறும் அழைக்கிறோம்.

தாருல் ஹுதாவின் வெளியீடுகள்:

1. ‘‘அஹ்லுஸ்ஸுன்னத் வல்ஜமாஅத்தின் கொள்கை விளக்கம்’’ (ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் உஸைமீன்)
ஈமானுடைய அடிப்படைகளை மிகத் துல்லியமாக தக்க சான்றுகளுடன் விவரிக்கும் நூல்.

2. ‘‘முன்மாதி முஸ்லிம்’’ (ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது அலீ அல் ஹாஷிமி)
சிறந்த முஸ்லிமுக்குரிய அழகிய பண்புகளை சரியான ஆதாரங்களுடன் விவரிக்கும் நூல்.

3. ‘‘அலட்சியமாகக் கருதப்படும் ஆபத்தான குற்றங்கள்’‘ (ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)
ஓர் இறை நம்பிக்கையாளர் தவிர்த்துக் கொள்ள வேண்டிய பெரும் பாவங்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய நூல்.

4. ‘‘தடுக்கப்பட்டவைகள்’‘ (ஆசிரியர்: அஷ்ஷைக் முஹம்மது இப்னு ஸாலிஹ் அல் முனஜ்ஜித்)
செய்யக்கூடாது, தவிர்க்கப்பட வேண்டியது என்று அல்குர்ஆனிலும், ஆதாரப்பூர்வமான நபிமொழியிலும் வந்துள்ள அனைத்து விஷயங்களின் தொகுப்பு. வரிகள் வாரியாக அமைக்கப்பட்டுள்ளது இதன் தனிச் சிறப்பாகும்.

5. ‘‘அர்ரஹீக்குல் மக்தூம்’’ (ஆசிரியர்: அஷ்ஷைக் ஸஃபிய்யுர் ரஹ்மான், உ.பி., இந்தியா)
நபி முஹம்மது (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வமான வாழ்க்கை வரலாற்றுத் தொகுப்பு. ஹிஜ்ரி 1399 (கி.பி.1979), மக்கா முகர்ரமாவில் ‘‘நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு'' குறித்து நடைபெற்ற அகில உலக இஸ்லாமிய கல்வி திறனாய்வு போட்டியில் முதல் பரிசு வென்ற நூல்.

6. ‘‘தர்ஜமதுல் குர்ஆன் பி அல்தஃபில் பயான்’‘ (குர்ஆனின் இனிய, எளிய தமிழ் மொழிபெயர்ப்பு) (ஆசிரியர்: அல்லாமா ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி)
நேர்த்தியான மூன்று (டெம்மி, மீடியம், பாக்கெட்) வடிவமைப்பில் குர்ஆன் வசனங்களை தலைப்புகள் வாரியாக தெரிந்து கொள்வதற்கு வசதியான மிக விரிவான அட்டவணையுடன்.

இன்ஷா அல்லாஹ் அடுத்த வெளியீடுகள்:

1. ‘‘யாழுஸ் ஸாலிஹீன்’‘ (ஆசிரியர்: இமாம் நவவி அவர்கள்)
718 அரிய தலைப்புகளின் கீழ், ஆதாரப்பூர்வமான 1894 சிறப்புமிகு நபிமொழிகளின் தொகுப்பு. நமது வீடுகளிலும் இறை இல்லங்களிலும் அன்றாடம் படிப்பதற்கும் படித்து காண்பிப்பதற்கும் மிக அருமையான நூல்.

2. ‘‘நுழைவாயில்’‘ (ஆசிரியர்: அஷ்ஷைக் இப்றாஹீம் இப்னு முஹம்மது அல் பரீகான்.)
இஸ்லாமிய கொள்கைகளை மிக விரிவாக தக்க சான்றுகளுடன் விளக்கும் ஓர் ஆழமான நூல்.

3. ‘‘அண்ணல் நபியின் அழகிய துஆக்கள்’‘ (ஆசிரியர்: அஷ்ஷைக் அலாவுத்தீன் இப்னு யூஸுஃப்)
காலை, மாலை, இரவு, பகல், சுகம், துக்கம் என ஒவ்வொரு காலத்திலும் ஓதி பயனடைய வேண்டிய ஈமானிய புத்துணர்ச்சி அளிக்கும் ஆதாரப்பூர்வமான துஆக்களின் தொகுப்பு.


ஆசிரியன் வாழ்க்கைக் குறிப்பு:

பெயர்: ஸஃபியுர்ரஹ்மான் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஹம்மது அக்பர்.

உத்தர பிரதேச மாநிலம் ஆஜம் கட் மாவட்டத்திலுள்ள ‘முபாரக்பூர்' எனும் நகரத்திலிருந்து ஒரு மைல் தொலைவிலுள்ள ‘ஹுஸைனாபாத்' எனும் கிராமத்தில் 1942 ஆம் ஆண்டு ஆசிரியர் பிறந்தார்.

1948ஆம் ஆண்டு ‘தாருத்தஃலீம்' (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் அடிப்படை மற்றும் தொடக்கக் கல்வி கற்க சேர்ந்தார்.

1954ஆம் ஆண்டு ‘இஹ்யாவுல் உலூம்' (முபாரக்பூர்) என்ற இஸ்லாமிய மத்ரஸாவில் நடுநிலைக் கல்வி பயில சேர்ந்தார்.

1956ஆம் ஆண்டு ‘ஃபைஜ் ஆம்' (மவ்வு, உ.பி.) என்ற புகழ்பெற்ற இஸ்லாமிய கல்லூரியில் மேற்படிப்புக்காக சேர்ந்து 1961ஆம் ஆண்டு ஆலிம் மற்றும் முஃப்தி பட்டம் பெற்றார்.

மேலும் இந்திய அரசாங்கத்தின் கல்வித் துறையால் அங்கீகக்கப்பட்ட பல இஸ்லாமிய பட்டங்களையும் ஆசிரியர் பெற்றுள்ளார். அவை:
1959ஆம் ஆண்டு ‘‘மவ்லவி''.
1960ஆம் ஆண்டு ‘‘ஆலிம்''.
1972ஆம் ஆண்டு ‘‘ஃபாஜில் அதப்''.
1978ஆம் ஆண்டு ‘‘ஃபாஜில் தீனியாத்'' ஆகிய பட்டங்களாகும்.

அல்லாஹ்வின் அருளால் இஸ்லாமிய கல்விக்கூடங்களில் நடந்த தேர்வுகள், அரசாங்கத் தேர்வுகள் அனைத்திலும் ஆசிரியர் முதல் இடத்திலேயே வெற்றி பெற்றார்.

பணியாற்றிய பொறுப்புகளும் இடங்களும்:

1961 ஆம் ஆண்டு பட்டம் பெற்ற பின் இலாஹாபாத் மற்றும் நாக்பூர் ஆகிய நகரங்களில் கல்விப் பணியாற்றினார்.
1963லிருந்து 1965 வரை ‘ஃபைஜ் ஆம் மத்ரஸாவில்' ஆசிரியராக பணியாற்றினார்.
1966லிருந்து 1968 வரை ‘தாருல் ஹதீஸ்' (மவ்வு, உ.பி.) மத்ரஸாவில் மூன்றாண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்.
1969 லிருந்து 1971 வரை மத்திய பிரதேசத்தில் உள்ள ‘ஃபைஜுல் உலூம்' என்ற இஸ்லாமியக் கல்லூரியின் தலைவராக பணியாற்றி கல்லூரியை நிர்வகித்தல், பாடம் நடத்துதல் ஆகிய பணிகளுடன் சுற்றுப்புற கிராமங்களுக்குச் சென்று இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.
1972லிருந்து 1973 வரை முபாரக்பூல் உள்ள ‘தாருத்தஃலீம்' என்ற மத்ரஸாவில் ஆசிரியராக பணியாற்றினார்.
1974ல் வாரனாஸி நகரத்திலுள்ள ‘ஜாமிஆ ஸலஃபிய்யா' என்ற இஸ்லாமியக் கல்லூயில் ஆசிரியராக சேர்ந்தார். இந்நூல் எழுதிய பிறகு மதீனாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகம் அவரை அங்கு அழைத்துக் கொண்டது.

ஆசிரியர் அவர்கள் உருது மற்றும் அரபி மொழியில் மேலும் பல நூல்கள் எழுதியுள்ளார்.

மேலும் பனாரஸிலிருந்து வெளிவரும் ‘முஹத்திஸ்' என்ற மாத இதழின் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

அல்லாஹ் அவர்களுக்கு முழுமையான உடல் சுகத்தையும், மேன்மேலும் தங்களின் கல்வியால் சமுதாய மக்களுக்கு பயனளிக்கவும் நல்வாய்ப்பு அருள்வானாக! இம்மையிலும் மறுமையிலும் அவர்களுக்கு ஈடேற்றத்தையும் உயர் பதவிகளையும் வழங்குவானாக! ஆமீன்!!


ஆசிரியர் முன்னுரை:

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவன் தனது தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு நேர்வழி மற்றும் சத்திய மார்க்கத்தை வழங்கி, உலகிலுள்ள அனைத்து மார்க்கங்களையும் வெற்றி கொள்ளும்படி செய்தான். மேலும், சாட்சியாளராகவும், நற்செய்தி கூறுபவராகவும், அச்சமூட்டி எச்சரிப்பவராகவும், அல்லாஹ்வின் பக்கம் அவனது கட்டளையைக் கொண்டு அழைக்கும் அழைப்பாளராகவும், பிரகாசிக்கும் கலங்கரை விளக்காகவும் அவரை ஆக்கினான். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் அஞ்சி அவனை அதிகமதிகம் நினைவு கூர்பவர்களுக்கு அத்தூதரிடம் அழகிய முன்மாதிரியை அமைத்தான்.

அல்லாஹ்வே! அத்தூதர் மற்றும் அவர்களது உறவினர்கள், தோழர்கள் ஆகியோரை மறுமை நாள் வரை மனத்தூய்மையுடன் பின்பற்றுவோருக்கு உனது அருளையும் ஈடேற்றத்தையும், நலம் பொருந்திய வளங்களையும், அன்பையும், பொருத்தத்தையும் என்றென்றும் வழங்குவாயாக!

மிக மகிழ்ச்சிக்குரிய செய்தி யாதெனில்: ஹிஜ்ரி 1396, ரபிஉல் அவ்வல் மாதம் பாகிஸ்தானில் ‘‘ஸீரத்துன் நபி'' (நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு) குறித்து ஒரு மாநாடு நடைபெற்றது. எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக, அவர்களது ஆராய்ச்சியை மேம்படுத்துவதற்காக ‘ராபிததுல் ஆலமில் இஸ்லாமி' என்ற அமைப்பு அம்மாநாட்டில் ஒரு அகில உலக போட்டியை அறிவித்தது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மிக அழகிய ஓர் ஆய்வு கட்டுரையாக எழுதி அந்த அமைப்பிடம் சமர்ப்பிக்க வேண்டுமென்பதுதான் அந்த அறிவிப்பு. வாக்கியங்களால் வர்ணிக்க முடியாத அளவுக்கு சிறப்புமிக்கதாக இந்த அறிவிப்பை நான் கருதுகிறேன். நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு ஓர் ஆழமான ஊற்றாகும். இதிலேதான் இஸ்லாமிய உலகின் உயிரோட்டமும், முழு மனித சமுதாயத்தின் ஈடேற்றமும் இருக்கின்றன என்பதை ஆழமாக ஆராயும்போது தெரிந்து கொள்ளலாம்.
அந்த சிறப்புமிக்க போட்டியில் கலந்து, கட்டுரையை சமர்ப்பிக்கும் வாய்ப்பு கிட்டியதை நான் எனக்குக் கிடைத்த நற்பேறாகக் கருதுகிறேன். எனினும், முன்னோர் பின்னோன் தலைவரான நபி முஹம்மது (ஸல்) அவர்களின் வாழ்க்கையை பற்றி முழுமையாக என்னால் கூறி முடிக்க இயலாது. நபி (ஸல்) அவர்களை பின்பற்றி வாழ்ந்து ஈடேற்றம் பெற விழையும் சாதாரண அடியான் நான். நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக வாழ்ந்து, அவர்களின் சமுதாயத்தில் ஒருவனாக மரணித்து அவர்களது பரிந்துரையால் அல்லாஹ் என் பாவங்களை மன்னிக்க வேண்டும் என்பதே அடியேனின் லட்சியம்.

அடுத்து, கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என பல நிபந்தனைகளை ராபிதா அறிவித்திருந்தது. அது தவிர நானும் இந்த ஆய்வுக்காக எனக்கென பல நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டேன்.
அதாவது, சோர்வு ஏற்படுத்துமளவுக்கு நீளமாக இல்லாமலும், புரியமுடியாத வகையில் சுருக்கமாக இல்லாமலும் நடுநிலையாக இருக்க வேண்டும். நிகழ்வுகள் குறித்து பல மாறுபட்ட செய்திகள் இருந்து அவற்றிடையே ஒற்றுமை ஏற்படுத்த முடியவில்லையெனில், ஆழ்ந்த ஆய்வுக்குப் பின் எனது பார்வையில் மிக ஏற்றமானதாக நான் கருதுவதை மட்டும் இக்கட்டுரையில் குறிப்பிடுவேன். நான் தெரிவு செய்ததற்கான காரணங்களை பக்கங்கள் அதிகமாகிவிடும் என்பதற்காக எழுதவில்லை.
மூத்த அறிஞர்கள் அறிவிப்புகளை ஏற்றுக்கொண்டாலும் அல்லது மறுத்தாலும், அவர்களின் முடிவை அப்படியே நான் ஒப்புக் கொள்கிறேன். அவர்கள் சரியானது அழகானது பலவீனமானது என எப்படி முடிவு செய்தாலும் அதையே நானும் ஏற்றுக் கொள்கிறேன். காரணம், இதுகுறித்து மேலாய்வு செய்வதற்கு போதுமான நேரம் என்னிடம் இல்லை.

நான் கூறும் கருத்துகள் படிப்பவர்களுக்கு புதுமையாக இருக்கலாம் என நான் அஞ்சும் இடங்களில் அல்லது பெரும்பாலோன் கருத்து நான் கூறும் உண்மையான கருத்துக்கு மாற்றமாக இருக்குமிடங்களில் மட்டும் நான் தெரிவு செய்த கருத்துக்குரிய ஆதாரங்களை சுட்டிக் காட்டியுள்ளேன். அல்லாஹ்தான் நல்வாய்ப்பு வழங்க போதுமானவன்.

அல்லாஹ்வே! இம்மையிலும் மறுமையிலும் எனக்கு நலவை முடிவு செய்! நீதான் மன்னிப்பாளன், அன்பு செலுத்துபவன், அர்ஷின் அதிபதி, கண்ணியத்திற்குரியவன்!!

ஸஃபிய்யுர் ரஹ்மான்,
முபாரக்பூர், இந்தியா.
Previous Post Next Post