بسم الله الرحمن الرحيم
الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين
மேலப்பாளையத்தைச் சேர்ந்த அன்ஸாரி பாய் என்ற நபரைக் குறித்து ஓர் எச்சரிக்கை
இவரும் இவருக்கு பின் செல்லும் சில இளைஞர்களும் கூகுள் மீட்டில் மார்க்கச் சொற்பொழிவுகளையும், கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இவர்கள் மார்க்கத்தை சரியான முறையில் உலமாக்களிடத்தில் பயிலாமல் தஃவா என்ற பெயரில் மக்களுக்கு மத்தியில் மார்க்க அறிவின்றி பல வழிகேடான மற்றும் தவறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனர். இது குறித்து மக்களை எச்சரிப்பதற்காக இதனை வெளியிடுகின்றோம்.
முதலாவதாக நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், மார்க்கக் கல்வி என்பது கற்றுக்கொள்வதினால் மட்டுமே ஏற்படும்.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
إنما العلم بالتعلم
கல்வி என்பது கற்றுக் கொள்வதினால் மட்டுமே (ஏற்படும்).
[அஸ்-ஸில்ஸிலாஹ் அஸ்-ஸஹீஹாஹ் 342]
அதிலும் குறிப்பாக கல்வியை, குர்ஆன் ஸுன்னாஹ்வை ஸலஃபுஸ் ஸாலிஹீன்களின் புரிதலின் அடிப்படையில் சுமந்துள்ள உலமாக்களிடம் இருந்து மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாமல் வழிகெட்ட கொள்கைகளைச் சுமந்தவர்களிடம் அமர்ந்து படித்தவர்களிடமிருந்தோ அல்லது யாரிடமும் படிக்காமல் சுய புரிதல் மற்றும் சுய சிந்தனை அடிப்படையில் குர்ஆன் ஸுன்னாஹ்வை விளக்குபவர்களிடமிருந்தோ மார்க்கக் கல்வியைப் பெற்றுக்கொள்ள இயலாது.
உமர் இப்னுல் ஃகத்தாப் رضي الله عنه அவர்கள் கூறினார்கள்:
“சுயகருத்துகளை உடைய மக்கள் ஸுன்னாஹ்வின் எதிரிகள் ஆவர். அவர்கள் ஹதீஸ்களை மனனம் செய்ய இயலாது போயினர், அதை அவர்கள் விளங்காது அவர்களை விட்டும் சென்று விட்டது. (அறியாதவற்றைப் பற்றி) கேள்வி கேட்கப்பட்டால், “எங்களுக்கு தெரியாது” என்று கூற வெட்கித்தனர். எனவே, தங்களுடைய சுய கருத்துக்களைக் கொண்டு ஸுன்னாஹ்விற்கு முரண்பட்டனர். இவர்களை விட்டும் நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள்!”
[இ'லாமுல் முவக்கி'ஈன் 1/43]
இந்த அன்ஸாரி பாய் என்ற நபரைப் பொறுத்தவரையில், இவர் எந்த மார்க்க அறிஞரிடமும் அமர்ந்து மார்க்கத்தைப் படிக்கவில்லை. எனவே, இவரே மார்க்கத்தைப் பற்றி ஒரு தெளிவான ஞானமில்லாமல் இருக்க எவ்வாறு இவரால் மக்களுக்கு மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கவும், தஃஅவா பணி செய்யவும் இயலும்?!
இவர் அவ்வப்போது ‘தவறான புரிதல்’ என்ற தலைப்பில் தொடர் சொற்பொழிவுகளை நடத்துகின்றார். எனினும், இவருடைய சுய புரிதல் தான் சரி என்பதற்கு என்ன உத்தரவாதம்?
“இவர் யாரிடத்தில் கல்வியைப் பெற்றார்? யாரிடம் படித்தார்?” என்று இவருடைய மிக முக்கிய மாணவர்களில் ஒருவரிடம் கேட்டதற்கு, “என் உள்ளத்தில் சந்தேகம் என்னும் நோய் இல்லை!” என்று பதிலளிக்கின்றார். இதுவே எந்தளவிற்கு இவர்கள் கண்மூடித்தனமாக இவரைப் பின்பற்றுகின்றனர் என்பதற்கு தெளிவான உதாரணமாகும். இவரைப் பின்பற்றுபவர்கள் இதனை நன்றாக சிந்திக்கவும்.
பாவங்கள் செய்யக்கூடாது என்பதே இவரும் இவருடன் சேர்ந்து அழைப்புப் பணி செய்பவர்களின் ஒரே முழக்கமாக இருக்கின்றது. எனினும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் கல்வியில்லாமல் பேசும் மிகப்பெறும் பாவத்தை எந்தவொரு அச்சமும் இல்லாமல் அறியாமையினால் செய்து வருகின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான்:
قُلْ اِنَّمَا حَرَّمَ رَبِّىَ الْـفَوَاحِشَ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ وَ الْاِثْمَ وَالْبَـغْىَ بِغَيْرِ الْحَـقِّ وَاَنْ تُشْرِكُوْا بِاللّٰهِ مَا لَمْ يُنَزِّلْ بِهٖ سُلْطٰنًا وَّاَنْ تَقُوْلُوْا عَلَى اللّٰهِ مَا لَا تَعْلَمُوْنَ
“என்னுடைய இறைவன் (ஆகாதென்று) தடுத்திருப்பதெல்லாம் மானக்கேடான செயல்களை - அவற்றில் வெளிப்படையானதையும் மறைமுகமானதையும், (இதர) பாவத்தையும், உரிமையின்றி வரம்பு மீறுதலையும், அல்லாஹ்விற்கு நீங்கள் இணை வைப்பதையும் - அதற்கு எந்தவித ஆதாரத்தையும் அவன் இறக்கிவைக்காதிருக்க - இன்னும் நீங்கள் அறியாதவற்றை அல்லாஹ்வின் மீது கூறுவதையும் தான்” என்று (நபியே!) நீர் கூறுவீராக! [அல்குர்ஆன் 7:33]
ஆம், தாஃவா செய்வது என்பது அனைத்து முஸ்லிம்களின் மீதும் கடமையான ஒன்றாகும்.
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:
بلغوا عني ولو آية
“என்னிடமிருந்து ஒரு ஆயத் கிடைத்தாலும் எத்தி வையுங்கள்”.
[ஸஹீஹுல் புகாரி 3461]
எனினும், ஒவ்வொருவரும் தன் கல்வித் தகுதிக்கும் ஆற்றலுக்கும் ஏற்றவாரே அதனைச் செய்திட வேண்டும். ஒரு பாமர மனிதனைப் பொறுத்தவரை தவ்ஹீதின் அடிப்படைகள், தொழுகையின் முக்கியத்துவம், வட்டி போன்ற பெரும்பாவங்களை விட்டுவிடுதல் என மார்க்கத்தில் அறிஞர்கள், பொதுமக்கள் என வேறுபாடின்றி அனைவரும் அறிந்த வெளிரங்கமான விடையங்களைக் கொண்டும், மேலும் தான் நன்றாக அறிந்த குர்ஆன் ஆயத்துகள், ஹதீஸ்கள், உலமாக்களிடம் தான் நன்றாக செவிமெடுத்த அல்லது படித்த மார்க்க விடையங்களைக் கொண்டும் தன் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் மத்தியில் நன்மையை ஏவி தீமையை தடுத்திட வேண்டும். இதுவே ஒரு பாமர மனிதனுக்கு சாத்தியமானதாகும்.
ஆனால், வழக்கமாக மக்களைக் கூட்டி அவர்களுக்கு முன் பல மணி நேரங்கள் பேசுவது, பகிரங்கமாக பல தலைப்புகளில் வகுப்புகள் எடுப்பது, கேள்விகளுக்கு பதிலளிப்பது என்பன போன்ற காரியங்களை கல்வியில் தேர்ச்சி பெற்ற உலமாக்களும், அவர்களிடம் அமர்ந்து படித்த கல்வியிலும் ஒழுக்கத்திலும் முதிர்ச்சி அடைந்த மாணவர்களும், அழைப்பாளர்களும் மட்டுமே செய்திட வேண்டும். அவர்களால் மட்டுமே அதனை சரியாகச் செய்திடவும் இயலும். இவ்வாறான காரியங்களை தகுதியற்ற ஒரு பாமர மனிதன் எடுத்து செய்வாரெனில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் குறித்து கல்வியில்லாமல் பேசுவது, மக்களை வழிகெடுப்பது, மக்கள் மத்தியில் குழப்பங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்துவது போன்ற பெரும் பாவங்களில் விழுந்து விடுவதே நிதர்சனமாகும். இவ்வாறான நபர்கள் சீர்செய்வதை விட சீர்கெடுப்பதே அதிகமாக இருக்கும்.
உமர் இப்னு அப்தில் அஸீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
எவரொருவர் கல்வியறிவு இல்லாமல் அமல் செய்வாரோ, அவர் சீர்கெடுப்பது அவர் சீர்செய்வதை விட அதிகமாகும். [அஸ்ஸுஹ்த் லில் இமாம் அஹ்மத் 1/301]
மேற்குறிப்பிட்ட “என்னிடமிருந்து ஒரு ஆயத் கிடைத்தாலும் எத்தி வையுங்கள்” என்ற ஹதீஸின் சரியான விளக்கம் குறித்து வரக்கூடிய காலங்களில் விவரமாக வெளியிடப்படும். இன் ஷா அல்லாஹ்.
இவரும் இவருடன் இருப்பவர்களுக்கும், தப்லீக் ஜமா'அத்தினருக்கும் இந்த விடயத்தில் எந்தவொரு வித்தியாசமும் இல்லை. தப்லீக் ஜமா'அத்தைப் பொறுத்தவரை, படித்தவர்கள் படிக்காதவர்கள் என்றெல்லாம் வித்தியாசம் காண மாட்டார்கள். தங்களுடைய ஜமா’அத்தில் புதிதாக சேர்ந்தவர்களாக இருந்தாலும் முன்வந்து பேசச் சொல்வார்கள். எனவே, பேசக்கூடியவர் தனக்கு மனதில் படக்கூடியவற்றை சரி தவறு என்றெல்லாம் பார்க்காமல் பேசுவார். இன்னும் பலகீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக்கூட எத்தி வைப்பார். எனவே தானும் வழிதவறி, அறிவின்றி பிறரையும் வழிதவறச் செய்வார். இதே விடயத்தைத் தான் இவர்கள் வேறு ஒரு ரூபத்தில் கூகுள் மீட்டின் மூலமாக செய்து வருகின்றனர்.
இவருடைய தாஃஅவாவின் சாரம்சம் பாவங்கள் செய்யாமல் வாழ வேண்டும் என்பதாகும். எனினும் நபிமார்கள், சஹாபாக்கள் மற்றும் அவர்களைப் பின்தொடர்ந்த உலமாக்களின் தஃஅவாவானது தவ்ஹீத் மற்றும் சரியான அகீதாவை (கொள்கையைப்) பிரச்சாரம் செய்து, மக்கள் மத்தியில் வேரூன்றி இருக்கும் ஷிர்க், குஃப்ர் மற்றும் பித்அத் ஆன கொள்கைகளை அகற்ற முதன்மையாகப் பாடுபடுவதாகும்.
وَلَـقَدْ بَعَثْنَا فِىْ كُلِّ اُمَّةٍ رَّسُوْلًا اَنِ اعْبُدُوا اللّٰهَ وَاجْتَنِبُوا الطَّاغُوْتَ
ஓவ்வொரு சமூகத்திலும் திட்டமாக நாம் ஒரு தூதரை அனுப்பியிருக்கிறோம். (அத்தூதர் அச்சமூகத்தவரிடம்) அல்லாஹ்வையே வணங்குங்கள், (அல்லாஹ் அல்லாத வணங்கப்படும் அனைத்து ஷைத்தான்களாகிய) தாகூத்திலிருந்தும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள் (என்று கூறினார்கள்.)
[அல்குர்ஆன் 16:36]
பிறகு இதர பாவமான விடயங்களை விட்டும் எச்சரிப்பார்கள். மேலும் இதனை மக்களுடைய நிலைகளைக் கருத்தில் கொண்டு படிப்படியாக எத்தி வைப்பார்கள்.
ஆயிஷா رضي الله عنهاகூறினார்கள்:
إِنَّمَا نَزَلَ أَوَّلَ مَا نَزَلَ مِنْهُ سُورَةٌ مِنَ الْمُفَصَّلِ فِيهَا ذِكْرُ الْجَنَّةِ وَالنَّارِ حَتَّى إِذَا ثَابَ النَّاسُ إِلَى الإِسْلاَمِ نَزَلَ الْحَلاَلُ وَالْحَرَامُ،
முஃபஸ்ஸல்’ (எனும் ஓரளவு சிறிய) அத்தியாயங்களில் உள்ள ஒன்று தான் முதன்முதலில் இறங்கியது; அதில் சொர்க்கம் நரகம் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தது. அடுத்து மக்கள் இஸ்லாத்தை நோக்கித் திரும்பி (அதன் நம்பிக்கைள் மீது உறுதியான) போது ஹலால் ஹராம் (குறித்த ஆயத்துகள்) இறங்கின.
وَلَوْ نَزَلَ أَوَّلَ شَىْءٍ لاَ تَشْرَبُوا الْخَمْرَ. لَقَالُوا لاَ نَدَعُ الْخَمْرَ أَبَدًا. وَلَوْ نَزَلَ لاَ تَزْنُوا. لَقَالُوا لاَ نَدَعُ الزِّنَا أَبَدًا
எடுத்த எடுப்பிலேயே ‘‘நீங்கள் மது அருந்தாதீர்கள்” என்று இறங்கியிருந்தால், அவர்கள், ‘‘நாங்கள் ஒருபோதும் மதுவைக் கைவிடமாட்டோம்” என்று கூறியிருப்பார்கள் அல்லது, “(எடுத்த எடுப்பிலேயே) விபச்சாரம் செய்யாதீர்கள்” என்று இறங்கியிருந்தால், அவர்கள், ‘‘நாங்கள் ஒருபோதும் விபச்சாரத்தைக் கைவிடமாட்டோம்” என்று கூறியிருப்பார்கள். (ஆகவேதான் அல்லாஹ், படிப்படியாகச் சட்ட விதிகளைக் கூறும் ஆயத்துகளை இறக்கியருளினான்).
[ஸஹீஹுல் புகாரி 4993]
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களும் ஆரம்பக்கட்ட மக்கா வாழ்க்கையில் அவர்களுடைய தஃஅவத்தை தவ்ஹீதை நோக்கியும், ஷிர்க்கை விட்டு எச்சரிப்பதையும் நோக்கி மட்டுமே அமைத்தார்கள். ஹலால், ஹராம் தொடர்பான அநேக சட்டங்கள் மதீனாவிலே தவிர அவர்கள் மீது இறக்கப்படவில்லை.
இது ஏனென்றால், அல்லாஹ்விற்கு இணைவைப்பதை விட எந்த ஒரு பாவமும் பெரிதல்ல. மேலும் ஒருவரின் அகீதா சீராகினாலே தவிர அவரது வாழ்க்கை சீராகாது. இதுவே நிதர்சனமாக இருக்க, இவர்களில் சிலர் அகீதா என்ற வார்த்தைக்கு சரியான அர்த்தத்தை கூட விளங்காத நிலையில், அகீதாவைப் பற்றி தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர்.
எனினும், இவர்களுடைய தாஃஅவாவோ ஷிர்க்கை விட்டும், பித்ஃஅத்தை விட்டும் எச்சரிப்பதை நோக்கி இருக்காது. இதர பாவங்களைப் பற்றி மட்டுமே அதிகம் பேசிக் கொண்டிருப்பர். இதுவே நபிவழிக்கு முரணான ஒன்று என்பதற்கு தெளிவான ஆதாரமாகும்.
மேலும், இவர் மஸாயில்கள் - ஃபிக்ஹ் சட்டங்கள், ஹலால், ஹராம் - பேச தான் மார்க்க ஆதாரம் தேவை, அதற்கு தான் படித்திருக்க வேண்டும், மார்க்கம் பேச - வாழ்க்கையைப் பற்றி பேச - நம்மிடம் ஸாலிஹான வாழ்க்கை இருந்தால் போதும் என்று கூறுகின்றார். இது புதியதொரு அடிப்படையாகும், இவருக்கு முன் எந்த ஒரு மார்க்க அறிஞரும் இவ்வாறு பாகுபடுத்துவதை நாம் காண இயலாது.
இவருடைய நெருங்கிய மாணவர்களில் ஒருவர் “நாம் செய்யும் செயல் நம்மை அல்லாஹ்விற்கு நெருக்கம் ஆக்கினால் போதும்” என்று கூறுகின்றார். இதனடிப்படையில் உம்மத்திலுள்ள வழிகேடர்கள், ஏன் காஃபிர்கள் கூட அவர்கள் செய்யும் எந்த ஒன்றிற்கும் இது ஷிர்க், இது குஃப்ர், இது பித்’அத் என நம்மால் தீர்ப்பு வழங்க இயலாது. ஏனெனில், அவர்களின் பார்வையில் அதுவே ஸாலிஹான வாழ்க்கையும், அவர்களை அல்லாஹ்விற்கு நெருக்கமாக்குவதும் ஆகும். எனினும் உண்மையில் அத்தகையவர்கள் அல்லாஹ்விடம் இருந்து தூரமானவர்கள். நபி ﷺ அவர்களும், ஸஹாபாக்களும் காட்டித்தராத, மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லாத செயல்களை செய்த அத்தகையவர்களுக்கு அல்லாஹ்விடம் எந்தவொரு கூலியும் கிடையாது.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:
من عمل عملا ليس عليه أمرنا فهو رد
நம்முடைய கட்டளை இல்லாத ஒரு அமலை ஒருவர் செய்வாரெனில், அது நிராகரிக்கப்படும்.
[ஸஹீஹுல் புகாரி 2697]
மேலே கூறப்பட்டுள்ளவை சில உதாரணங்கள் மட்டுமே. இவரிடம் இன்னும் பல வழிகெட்ட மற்றும் தவறான கருத்துக்கள் உள்ளன. எனவே, பொது மக்களும், மார்க்கத்தை நேசிக்கும் வாலிபர்களும் இவரையும் இவரை நோக்கி அழைப்பவர்களையும் விட்டு எச்சரிக்கையாக இருக்குமாறு உபதேசம் செய்கின்றோம்.
மிகப்பெரும் தாபி’ஈன்களில் ஒருவரான அல்இமாம் முஹம்மது இப்ன் ஸீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள்:
இந்த கல்வியானது மார்க்கமாகும். எனவே, உங்களுடைய மார்க்கத்தை யாரிடமிருந்து எடுக்கின்றீர்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
[அத்தாரிமீ 424]
அல்லாஹ்வே மிக அறிந்தவன். மேலும், அவனே நம்மனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.
-ரய்யான்