ஒவ்வொரு நாளும் கட்டியெழுப்பப்படும் உறவு... திருமண நாளில் மட்டுமல்ல

பலர், திருமண வாழ்க்கை வெற்றிகரமாக அமைவது 'சரியான துணையைத் தேர்ந்தெடுப்பதில்' மட்டுமே தங்கியுள்ளது என்று நினைக்கிறார்கள்.

சரியான துணையைத் தேர்ந்தெடுப்பது குடும்ப நிலைத்தன்மைக்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதில் சந்தேகமில்லை. ஆனால், உண்மை என்னவென்றால், ஒரு வெற்றிகரமான திருமணம் என்பது முழுமையாகப் பிறப்பதில்லை; மாறாக, அது ஒவ்வொரு நாளும், எடுக்கப்படும் ஒவ்வொரு முடிவிலும், கடந்துவரும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தான் கட்டியெழுப்பப்படுகிறது.

அதனால்தான், திருமணத்திற்குப் பிறகு கேட்கப்பட வேண்டிய மிக முக்கியமான கேள்வி இதுவல்ல: "நான் சரியான நபரைத் தான் தேர்ந்தெடுத்தேனா?"

மாறாக: "இன்னும் இருபது வருடங்களுக்குப் பிறகு நான் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கையை, ஒவ்வொரு நாளும் நான் கட்டியெழுப்புகிறேனா?" என்பதுதான்.

● சிறிய விடயங்கள் குவிதல்

மனித உறவுகள் பொதுவாக ஏதோ ஒரு பெரிய தவறினால் மட்டும் உடைந்து போவதில்லை...
மாறாக, தம்பதியினர் அலட்சியப்படுத்தும் சிறிய விடயங்களின் தேக்கத்தால் தான் அது வெடிக்கிறது:

 *மன்னிப்புக் கேட்கப்படாத ஒரு கடினமான சொல்.
 *தாமதமான கவனிப்பு (அன்பு).
 *கூறப்படாத ஒரு நன்றி.
 *ஒத்திவைக்கப்பட்ட ஒரு உரையாடல்.
 *பெரியதாகும் வரை அலட்சியப்படுத்தப்பட்ட ஒரு பிரச்சினை.

அதனால்தான், ஒரு குடும்பத்தின் பலம் என்பது அதில் பிரச்சினைகளே இல்லை என்பதைக் கொண்டு அளவிடப்படுவதில்லை; மாறாக, இதயங்களின் அன்பை இழக்காமல் அந்தப் பிரச்சினைகளைக் கையாளும் திறனைக் கொண்டுதான் அளவிடப்படுகிறது.

● அன்பும் கருணையும்

திருக்குர்ஆன் இந்த அர்த்தத்தை ஒரு அழகான வார்த்தையில் சுருக்கமாகக் கூறுகிறது. தம்பதியினருக்கு இடையிலான உறவை வல்ல அல்லாஹ் இவ்வாறு விவரிக்கிறான்:

"மேலும், உங்களுக்குள் அன்பையும் (மவத்தா), கருணையையும் (ரஹ்மா) ஏற்படுத்தினான்." (அல்குர்ஆன்)

○ அன்பு (மவத்தா) என்பது வெறும் தற்காலிக உணர்வு அல்ல; அது தொடர்ச்சியான செயல்கள், இனிமையான வார்த்தைகள் மற்றும் நிலையான அக்கறை ஆகும்.

 ○ கருணை (ரஹ்மா) என்பது வெறும் பரிதாபம் மட்டுமல்ல; அது தவறுகளை மன்னிக்கும் திறன், குறைகளைப் பொறுத்துக் கொள்ளும் குணம், மற்றும் துணையை எப்போதும் குற்றம் குறை காணும் கண்ணோட்டத்தில் பார்க்காமல் இன்முகத்தோடு பார்க்கும் பக்குவம் ஆகும்.

● சுய சீர்திருத்தம் மற்றும் உரையாடல்

பல தம்பதியினர் செய்யும் தவறு என்னவென்றால், அவர்கள் தங்களைச் சீர்திருத்துவதப்பதை விட, தங்கள் துணையைச் சீர்திருத்துவதிலே அதிக கவனம் செலுத்துகிறார்கள். ஒவ்வொருவரும் மற்றவர் முதலில் மாற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஆனால், "இந்த உறவுக்காக நான் என்ன செய்ய முடியும்?" என்று ஒவ்வொருவரும் தங்களைத் தாங்களே கேட்கத் தொடங்கும் போதுதான் உண்மையான திருமண வாழ்க்கை மேம்படத் தொடங்குகிறது.

மனிதனால் மற்றவருடைய உள்ளத்தை மாற்ற முடியாது... ஆனால் அவனது அணுகுமுறை, வார்த்தைகள், பழகும் விதம் மற்றும் அவன் செய்யும் நன்மைகளை மாற்ற முடியும்.

குடும்ப உறவை பாதுகாக்கும் மிகச் சிறந்த விடயங்களில் ஒன்று, *உரையாடல்* எப்போதும் உயிர்ப்புடன் இருப்பதாகும். நீண்ட மௌனம் பிரச்சினைகளைத் தீர்ப்பதில்லை, மாறாக அது தம்பதியினருக்கு இடையே ஒரு இடைவெளியை உருவாக்குகிறது; அதை அவர்கள் பல வருடங்களுக்குப் பிறகுதான் உணர்கிறார்கள்.

எனவே, சிறந்த முறையில் செவிமடுப்பது (நன்கு கேட்பது) அன்பின் மிக உயர்ந்த வடிவங்களில் ஒன்றாகும். ஏனென்றால், மனிதனுக்கு எப்போதும் தீர்வுகளைத் தரும் ஒருவர் தேவைப்படுவதில்லை, மாறாகத் தன்னை உணர்ந்து புரிந்து கொள்ளும் ஒருவரே தேவைப்படுகிறார்.

● நன்றியுணர்வின் முக்கியத்துவம்
அதேபோல், *நன்றியுணர்வு (Gratitude)* என்பது திருமண உறவை புத்துயிர் பெறச் செய்யும் மிக முக்கியமான மதிப்புகளில் ஒன்றாகும். மனித மனம் தன் உழைப்பு மதிக்கப்படுவதையும், தன் தியாகங்கள் அங்கீகரிக்கப்படுவதையும், ஒரு உண்மையான நன்றி வார்த்தையைக் கேட்பதையும் விரும்புகிறது.

எத்தனையோ வீடுகளில் சில எளிய வார்த்தைகளால் அன்பு அதிகரித்துள்ளது, எத்தனையோ வீடுகளில் நல்ல விடயங்கள் வழக்கமான ஒன்றாக மாறி, நன்றி கூறப்படாததால் அன்பு குறைந்து போயுள்ளது.

நமது நபி (ஸல்) அவர்களின் அழகிய வழிகாட்டுதல்களில் ஒன்று, அவர்கள் தங்களது குடும்பத்தாரை கண்ணியப்படுத்துபவர்களாகவும், அவர்களிடம் மென்மையாக நடப்பவர்களாகவும், புன்னகைப்பவர்களாகவும், அவர்களின் வீட்டு வேலைகளில் பங்கெடுப்பவர்களாகவும் இருந்தார்கள்.

 ஆயிஷா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் தங்கள் குடும்பத்தின் பணிகளில் (உதவியாக) இருப்பார்கள், தொழுகைக்கான நேரம் வந்துவிட்டால் தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள்."

இது ஒரு மனிதனின் பெருந்தன்மை அவனது வீட்டிற்குள் பணிவாக இருப்பதற்குத் தடையாக இருக்காது என்பதையும், குடும்பத்தாரிடம் அழகிய முறையில் நடப்பது ஒரு முஃமின் தன் இறைவனை நெருங்குவதற்கான ஒரு இபாதத் (வணக்கம்) என்பதையும் காட்டுகிறது.

● இறுதி இலக்கு

திருமணம் வாழ்க்கையைப் பற்றிக் கூறப்படும் மிக அழகான விடயம் என்னவென்றால்: *தம்பதியினர் இருவரும் யார் தவறு செய்தார்கள் என்று நிரூபிக்கப் போட்டியிடும் எதிரிகள் அல்ல...*

மாறாக, அவர்கள் இருவரும் இணைந்து ஒரு குடும்பத்தை கட்டியெழுப்பவும், ஒரு நல்ல தலைமுறையை உருவாக்கவும், இறைவனை நோக்கி ஒன்றாகப் பயணிக்கவும் உதவும் கூட்டாளிகள் (Partners) ஆவர்.

பொதுவான இலக்கு இறைவனின் பொருத்தமாக (رضا الله) மாறிவிட்டால், பல கருத்து வேறுபாடுகள் எளிதாகிவிடும், பல பிரச்சினைகள் சிறியதாகிவிடும். ஏனென்றால், உண்மையான வெற்றி என்பது விவாதத்தில் ஒருவர் மற்றவரை வெல்வது அல்ல, மாறாகக் குடும்பம் முழுவதும் பிரிவினைக்கான காரணங்களை வென்றெடுப்பதுதான் என்பதை இருவருமே உணர்ந்திருப்பார்கள்.

எனவே, மகிழ்ச்சியான வீடுகள் என்பது பிரச்சினைகளே இல்லாத வீடுகள் அல்ல... மாறாக, அன்பால் நிறைந்த வீடுகள் ஆகும், அங்கே பிரச்சினைகள் வெறும் கடந்து போகும் மேகங்கள் மட்டுமே, அவை ஒருபோதும் குடும்பத்தின் அடையாளமாக மாறுவதில்லை.

- கலாநிதி. அப்துல் கரீம் பக்கார்-
தமிழில்: Azhan Haneefa 
29/06/2026
Previous Post Next Post