شهر شعبان
ஷஃபான் என்பது அறபு, இஸ்லாமிய மாதங்களில் எட்டாவது சந்திர மாதமாகும். றஜபுக்கும் றமளானுக்கும் இடையில் இம்மாதம் இடம்பெறுகிறது.
ஷஃபான் என்ற சொல்லின் அடிப்படை மொழி அர்த்தம்: பிரிதல், ஒன்றுபடுதல் என்ற இரு எதிர்க் கருத்துக்களைக் கொண்டுள்ளது.
ஏன் இந்த மாதத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என்பதில் பல கருத்துக்கள் உள்ளன. இஸ்லாத்திற்கு முற்பட்ட அரேபியர்களுடைய காலத்தில் இம்மாதத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்ட போது, இம்மாதத்தில் தண்ணீர் தேடுவதற்காக வேண்டி மக்கள் பல பகுதிகளுக்கும் *பிரிந்து சென்றதைக்* கருத்தில் கொண்டு இம்மாதத்திற்கு இப்பெயர் வந்துள்ளதாக சிலர் கருதுகின்றனர். இஸ்லாத்திற்கு முன்னரும் கூட யுத்தம் தடை செய்யப்பட்டிருந்த இதற்கு முன்னுள்ள மாதமான றஜப் மாதத்தில் யுத்தநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள கோத்திரங்கள் ஷஃபான் மாதம் வந்ததும் யுத்தம் செய்வதற்காகப் பல்வேறு பகுதிகளுக்கும் *பிரிந்து செல்வார்கள்*; இதன் காரணமாக இப்பெயர் வந்துள்ளதாக வேறு சிலர் கருதுகின்றனர்.
இம்மாதத்தில் நோன்பு நோற்பது சிறப்புக்குரியது. ஏனெனில் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இமாதத்தில் அதிகமாக உபரியான நோன்புகளை நோற்றுள்ளார்கள். றமளானைத் தவிர ஏனைய மாதங்களை விடவும் அதிகமாக இம்மாதத்தில் நோன்பு நோற்று இருக்கிறார்கள்; இம்மாதத்தின் பெரும்பாலான நாட்களில் நோன்பு நோற்றுள்ளார்கள்.
பர்ளான - கட்டாயமான நோன்பு நோற்க வேண்டிய றமளான் மாதத்திற்கு முன்னுள்ள இம்மாதத்தில் நோன்பு நோற்பதானது கட்டாயமான தொழுகைகளுக்கு முன்னுள்ள றவாதிபான ஸுன்னத் தொழுகைகளைப் போன்றதாகும். அதாவது கட்டாயமான ஐவேளைத் தொழுகைகளுக்கு முன், பின் ஸுன்னத் தொழுகைகள் இருப்பதைப் போல றமளானுக்கு முன்னுள்ள மாதமான இம்மாதத்திலும், றமளானுக்குப் பின்னுள்ள ஷவ்வால் மாதத்திலும் ஸுன்னத்தான நோன்புகள் காணப்படுகின்றன. நபில் முத்லக் எனும் பொதுவான ஸுன்னத் தொழுகைகளைத் தொழுவதை விடவும் முன், பின் ஸுன்னத் தொழுகைகளைத் தொழுவது சிறப்புக்குரியது. அதே போன்று நபில் முத்லக் எனும் பொதுவான ஸுன்னத் நோன்புகளை நோற்பதை விடவும் றமளான் மாதத்தின் பிரதான நோன்புக்கு முன்னாலும் பின்னாலும் நோன்புகளை நோற்றுக் கொள்வது சிறப்பானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
"றமளானுக்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமான முஹர்ரம் மாதத்தில் நோற்கப்படும் நோன்பு, பர்ளான தொழுகைக்குப் பிறகு சிறந்த தொழுகை இரவுத் தொழுகை" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஷஃபான் மாதத்திலேயே ஏனைய மாதங்களை விட அதிகமாக நோன்பு நோற்று இருக்கிறார்கள். இதற்கு விளக்கம் சொல்ல முற்பட்ட இமாம் இப்னு றஜப் (றஹிமஹுல்லாஹ்) போன்ற அறிஞர்கள், தொழுகையில் நஃபில் முத்லக் தொழுவதற்கு இரவுத் தொழுகை சிறந்ததாக இருப்பதைப் போல, நோன்பில் நஃபில் முத்தலக் நோற்பதற்கு முஹர்ரம் மாதம் சிறந்தது என்றும், பர்ளான தொழுகைகளுக்கு முன், பின்னுள்ள றாதிபத்தான ஸுன்னத்தான தொழுகைகள் பர்ளான தொழுகைகளுடன் இணைக்கப்படுவதைப் போன்று றமளானுக்கு முன்னால் இருக்கக்கூடிய இந்த ஷஃபான் மாதத்தின் நோன்பானது பர்ளான நோன்பான றமளான் நோன்புடன் இணைத்துப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இந்த மாதம் நோன்பு நோற்பது சிறப்புக்குரியது. இது முஹர்ரம் மாதத்தில் நோன்பு நோற்பதை விட சிறந்தது. அந்த வகையில் தான் பர்ளான தொழுகைக்கு முன், பின் உள்ள ஸுன்னத்கள் இரவுத் தொழுகையை விடச் சிறந்ததாக இருக்கிறது என்று விளக்கம் கூறியுள்ளனர். இது அதிகமான அறிஞர்களின் நிலைப்பாடாகும்.
"இந்த மாதத்தில் மனிதர்கள் பராமுகமாக இருக்கின்றனர். ஆனால் இதில் அமல்கள் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்படுகின்றன" என்று ஒரு ஹதீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெற்றிருக்கும் ஒரு அறிவிப்பாளரான ஸாபித் இப்னு கைஸ் அபுல் குஸ்ன் என்பவரின் மனன சக்தியில் கருத்து வேறுபாடு உள்ளது. அதனால் சில அறிஞர்கள் அவர் தனித்து அறிவிக்கும் அந்த ஹதீஸை பலவீனப்படுத்துகின்றனர். நஸாஈயிலும் அஹ்மதிலும் இடம்பெற்றுள்ள அந்த ஹதீஸ் பின்வருமாறு: உஸாமஹ் இப்னு ஸைத் (றளியல்லாஹுஅன்ஹுமா) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில், அல்லாஹ்வின் தூதரே! ஏன் எல்லா மாதங்களையும் விட ஷஃபான் மாதத்தில் அதிகமாக நீங்கள் நோன்பு நோற்பதை பார்க்கிறேன்? என்று கேட்டார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: "றஜபுக்கும் றமளானுக்கும் இடையில் அம்மாதத்தை விட்டும் மனிதர்கள் பராமுகமாக இருக்கின்றனர். அதில் தான் உலகத்தாரின் இரட்சகனின் பக்கம் அமல்கள் உயர்த்தப்படுகின்றன; அதனால் நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல் உயர்த்தப்பட வேண்டும் என்று விரும்புகின்றேன்".
மேற்படி ஹதீஸ் ஆதாரபூர்வமாக இருந்தால் இது வருடாந்தம் அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுவதைக் குறிக்கும். புகாரியில் இடம்பெறும் ஒரு ஹதீஸில் நாளாந்தம் அல்லாஹ்விடத்தில் அமல்கள் உயர்த்தப்படுகின்றன; இரவில் செய்யும் அமல்கள் பகல் வருவதற்கு முன்னாலும் பகலில் செய்யப்படும் அமல்கள் இரவு வருவதற்கு முன்னாலும் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்படுகின்றன என்ற கருத்து இடம்பெற்றுள்ளது. அதேபோன்று முஸ்லிமில் இடம் பெறும் ஒரு ஹதீஸில் ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வியாழன் அமல்கள் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்படுகின்றன என்றும் திர்மிதியின் பலவீனமான ஒரு அறிவிப்பில், அதனால் தான் அந்த நாட்களில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு நோற்றார்கள் என்ற கருத்தும் இடம்பெற்றுள்ளது. இந்த அடிப்படையிலும் அமல்கள் உயர்த்தப்படக்கூடிய சந்தர்ப்பத்தில் நல்ல அமல்களில் ஈடுபடுவது விரும்பத்தக்கது என்று பல அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
குறிப்பு: அமல்கள் உயர்த்தப்படும் மூன்று சந்தர்ப்பங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. நான்காவது ஒரு சந்தர்ப்பமும் உள்ளது: ஒருவர் மரணித்ததற்குப் பிறகு அவருடைய முழு வாழ்க்கையிலும் செய்த அமல்கள் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்படும்.
ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதானது றமளானில் நோன்பு நோற்பதற்குப் பயிற்சியளிக்கிறது; றமளானுடைய நோன்பை இலகுபடுத்துகிறது. அந்த வகையில் இம்மாதம் றமளான் மாதத்தின் நுழைவாயிலாக இருக்கின்றது. றமளானில் நாம் அதிகம் அமல் செய்வதற்காக இம்மாதத்தில் அமல்களுக்கான கூடுதல் பயிற்சி எடுத்துக் கொள்வது நல்லது. சிலருக்கு றமளானில் முதன்முதலாக நீண்ட காலத்திற்குப் பிறகு அதிக அமல்கள் செய்யும் பொழுது சிரமமும் சோர்வும் ஏற்படக்கூடும். இதனால்தான் இமாம் இப்னு றஜப் போன்றவர்கள் றமளான் மாதத்தில் குர்ஆன் ஓதுவதற்காக ஷஃபான் மாதத்திலேயே குர்ஆனை ஓதி பயிற்சி பெற வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டிவிட்டு, முன்னோர்களான ஸலபுஸ் ஸாலிஹீன்கள் இம்மாதத்தில் அதிகமாக குர்ஆனை ஓதக்கூடியவர்களாக இருந்தார்கள் என்றும், இம்மாதத்தை குர்ஆன் ஓதக் கூடியவர்களின் மாதம் என்று அவர்கள் அழைத்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். மேலும், அவர் அதற்குச் சான்றாக லதாஇபுல் மஆரிப் என்ற தனது நூலில் பின்வரும் செய்திகளையும் குறிப்பிட்டுள்ளார்கள்:
- ஸலமதுப்னு குகைல் அவர்கள் கூறியதாவது, "ஷஃபான் மாதத்திற்கு குர்ராக்களின் மாதம் (குர்ஆன் ஓதுபவர்களின் மாதம்) என்று சொல்லப்பட்டு வந்தது".
- ஹபீப் இப்னு அபி ஸாபித் அவர்கள் கூறியதாவது, "ஷஃபான் மாதம் வந்துவிட்டால் இது குர்ஆன் ஓதுபவர்களின் மாதம் என்று கூறுவார்கள்".
- அம்ர் இப்னு கைஸ் அல்முலாஈ அவர்கள் ஷஃபான் மாதம் வந்து விட்டால், தன்னுடைய கடையை மூடிவிட்டு குர்ஆன் ஓதுவதில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார்கள்.
கடந்த றமளானில் விடுபட்ட நோன்புகளை களா செய்வதற்கான இறுதியான சந்தர்ப்பமாக இந்த மாதத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்த றமளான் வரும் வரையில் சென்ற றமளானில் விடுபட்ட நோன்புகளை களா செய்யாமல் இருப்பது நல்லதல்ல. எவ்வளவுதான் முக்கியமான பணிகள் இருந்தாலும் குறைந்தபட்சம் இந்த மாதத்திற்குள் அதனை களா செய்து விட வேண்டும்.
ஆஇஷஹ் றளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறினார்கள்: றமளானில் சில நோன்புகள் எனக்கு விடுபட்டு விடும் அவற்றை ஷஃபானிலே அன்றி என்னால் நிறைவேற்ற முடியாமல் இருக்கும். அது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பணிவிடையில் ஈடுபடுவதற்காகவேயாகும். (புகாரி 1950, முஸ்லிம் 1146)
நோய் போன்ற காரணங்களுக்காக யாருக்காவது அடுத்த றமளான் வருவதற்கு முன்னால் கடந்த றமளானின் நோன்புகளை நோற்பதற்கு முடியாமல் போனால் றமளான் முடிந்த பிறகு அவற்றை நோற்றுக்கொள்ள வேண்டும். இவ்வாறு நியாயமான காரணத்துக்காக பிற்படுத்துவது குற்றமில்லை. ஆனாலும், அவர் விடுபட்ட நாட்களுக்குரிய நோன்புகளை அவசியம் நோற்றுக்கொள்ள வேண்டும். எனினும், நியாயம் இல்லாமல் அடுத்த றமளான் வரையும் நோன்பை களா செய்யாமல் இருப்பது குற்றமாகும். எனினும் அவ்வாறு பிற்படுத்தினால் பித்யஹ் - உணவளித்து பரிகாரம் செய்ய வேண்டுமா? இல்லையா? என்பதில் அறிஞர்களுக்கு இடையில் கருத்து வேறுபாடு இருக்கிறது. காரணமின்றி அடுத்த றமளான் வரை களா நோன்பை நிறைவேற்றாதவர் விட்ட நோன்பை நோற்பது மற்றுமல்லாது பிஃத்யா-உணவளிக்க வேண்டும் என்றும் பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளனர். அதற்குக் காரணம் சில நபித்தோழர்கள் இவ்வாறு தீர்ப்பு வழங்கியுள்ளதும், அவர்களின் காலத்தில் அதற்கு மாற்றுக்கருத்து நிலவியதாக அறியப்படாததுமாகும். சில அறிஞர்கள், விட்ட நோன்பை களா செய்ய வேண்டும் என்பதைத் தவிர உணவளிக்குமாறு அல்லாஹ் கட்டாயமாக்கவில்லை என்று கூறுகின்றனர். அவ்வாறு உணவளிப்பது விரும்பத்தக்கது என்ற கருத்தில் நபித்தோழர்கள் பத்வா வழங்கியிருக்கலாம் என்று இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் கருதுகிறார்.
ஷஃபான் மாதத்தின் 15 வது இரவும் பகலும்:
ஷஃபான் மாதத்தின் 15வது இரவுக்கு அல்லது பகலுக்கு எந்த ஒரு சிறப்பும் எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இடம்பெறவில்லை.
ஒரு ஹதீஸில், "அல்லாஹ் ஷஃபான் மாதத்தின் நடுப்பகுதியின் இரவில் இணை வைப்பவரையும் மற்றவர்களுடன் பகைமை பாராட்டிக்கொண்டிருப்பவரையும் தவிரவுள்ள தன்னுடைய படைப்புகள் அனைவருக்கும் மன்னிப்பை வழங்குகின்றான்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசைகள் பலவீனமாக இருந்தாலும், இது பல வழிகளாலும் அறிவிக்கப்பட்டு இருப்பதால் இதனை சில அறிஞர்கள் ஆதாரபூர்வமானது என்று கருதுகின்றனர். இந்த ஹதீஸின் முக்கியமான அறிவிப்பாளர் வரிசைகள் குறித்து அவை பலவீனமானவை என்பதை இமாம் அபூஹாதம், இமாம் தாறகுத்னி போன்ற ஹதீஸ்களில் உள்ள குறைகளை துல்லியமாக ஆராயும் அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இதனை நாம் பலமானது என்று வைத்துக் கொண்டாலும் இதில் அந்த நாள் இரவில் விசேடமான தொழுகை தொழுவதற்கோ அல்லது அதன் பகலில் நோன்பு நோற்பதற்கோ எந்த ஒரு சான்றும் இல்லை.
ஷஃபான் மாதத்தில் 15வது இரவில் அல்லது பகலில் எந்த விஷேடமான அமலும்
செய்யப்படுவதற்கு எந்த ஒரு ஆதாரபூர்வமான ஹதீஸும் இல்லை.
இப்னு மாஜஹ்வில் ஒரு ஹதீஸில், "அதனுடைய இரவில் நின்று வணங்குங்கள் பகலில் நோன்பு பிடியுங்கள்" என்று இடம்பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் மிகவும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ பக்ர் இப்னு அபீ ஸப்றஹ் என்பவர் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யும் முற்கால ஹதீஸ் துறை அறிஞர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளார். இவரைப் பற்றிய முற்கால அறிஞர்களின் கருத்துக்களைத் தொகுத்து இமாம் இப்னு ஹஜர் (ஹி852) றஹிமஹுல்லாஹ் அவர்கள், "அறிஞர்கள் இவரை இட்டுக்கட்டக்கூடியவர் என விமர்சித்துள்ளனர்" என்று கூறுகிறார்கள்.
ஒவ்வொரு மாதமும் 13, 14, 15 ஆகிய வெள்ளை நாட்களில் நோன்பு பிடிப்பது நபிவழி என்பதனால் ஒருவர் அந்நாட்களில் நோன்பு நோற்றால் அது தவறில்லை அல்லது ஒருவர் வழமையாக திங்கள், வியாழன் நோன்பு நோற்றுவருகிறார்; இந்த மாதத்தின் 15வது நாள் திங்களாக அல்லது வியாழனாக அமைந்துவிட்டது என்பதனால் அவர் அந்நாட்களில் நோன்பு நோற்றால் அதுவும் தவறில்லை அல்லது ஷஃபான் மாதம் நோன்பு நோற்பதற்கு சிறப்பான மாதம் என்பதனால் ஒருவர் நோன்பு நோற்க நினைக்கிறார்; அவருக்கு 15வது நாள் தான் நோன்பு நோற்பதற்கு வசதி ஏற்படுகிறது என்றால் அவரும் அந்நாளில் நோன்பு நோற்பதில் தவறில்லை. ஆனால் ஷஃபான் மாதத்தில் அந்த நாளுக்கு மாத்திரம் தனிச்சிறப்பு இருக்கிறது என்று கருதி அந்த நாளில் நோன்பு நோற்பது கூடாது. இவ்வாறு செய்வதற்கு நபிவழியில் எந்த ஆதாரமும் இல்லை. நபித்தோழர்களும் இவ்வாறு செய்யவில்லை; அவர்களிடத்தில் இம்மாதத்தின் 15 வது நாள் விசேடமான நாளாக அறியப்பட்டிருந்தது என்பதற்கும் எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
-ஸுன்னஹ் அகாடமி