மரணித்தவரை மக்கள்‌ புகழ்தல்‌

இமாம் அல் அல்பானி தன்னுடைய ஜனாஸா சட்டங்களின் சுருக்கம் எனும் நூலில் கூறுகிறார:

 உண்மையான முஸ்லிமாக மரணித்தவருக்கு அயல்‌ ஊரிலுள்ள அவரையறிந்த முஸ்லிம்கள்‌ பலர்‌ அவரைப்பற்றி நல்லது கூறுவார்களேயானால்‌ அவரும்‌ சுவனவாசியே யாவார்‌. மரணித்தவரைப்‌ போற்றுபவர்கள்‌ குறைந்த பட்சம்‌ இரண்டு பேராயிருப்பினும்‌ சரியே!
இதற்கு ஆதாரமாகப்‌ பல நபிமொழிகள்‌ உள்ளன. அவற்றில்‌ மூன்று நபிமொழிகளை மட்டும்‌ இங்கு பார்ப்போம்‌.


௮. அனஸ்‌ (ரழி) அவர்கள்‌ அறிவிக்கிறார்கள்‌:

 ‘நபியவர்களுக்குப்‌ பக்கத்தில்‌ ஒரு ஜனாஸா ஊர்வவம்‌ சென்றது.      ஜனாஸாவோடு சென்றவர்களில்‌ சிலர்‌ மரணித்தவரைப்‌ பற்றி புகழ்ந்து  கூறினர்‌. அல்லாஹ்வுக்கும்‌ ரஸூலுக்கும்‌ மாறு செய்யாது அவர்களை நேசித்து வாழ்ந்தார்‌ என்றும்‌ கூறினார்கள்‌. இதனைக்‌ கேட்ட நபியவர்கள்‌ “உறுதியாகிவிட்டது, உறுதியாகிவிட்டது, உறுதியாகி விட்டது” என்று கூறினார்கள்‌.

    இன்னொரு ஜனாஸாவைத்‌ தாங்கிய ஊர்வலம்‌ சென்ற வேளை ஜனாஸாவுடன்‌ சென்ற சிலர்‌ மரணித்தவரைப்‌ பற்றி இகழ்ந்து கூறினார்கள்‌. அல்லாஹ்வுடைய மார்க்கத்தில்‌ கெட்டவன்‌ என்றும்‌ கூறினார்கள்‌. இதனைக்‌ கேட்ட நபியவர்கள்‌ “உறுதியாகிவிட்டது, உறுதியாகிவிட்டது, உறுதியாகிவிட்டது”எனக்‌ கூறினார்கள்‌.

    நபியவர்கள்‌ இவ்வாறு கூறியதைக்‌ கேட்டுக்‌ கொண்டிருந்த உமர்‌ (ரழி) அவர்கள்‌ இறைத்தூதர்‌ அவர்களே! என்‌ தாயும்‌, தந்தையும்‌ தங்களுக்கு அர்ப்பணமாவார்களாக! முன்‌ சென்ற ஜனாஸாவைப்‌ பலர்‌ புகழ்ந்து கூறினர்‌. நீங்கள்‌ உறுதியாகி விட்டது, உறுதியாகி விட்டது, உறுதியாகி விட்டது என்று கூறினீர்கள்‌. அடுத்ததாகச்‌ சென்ற ஜனாஸாவைப்‌ பலர்‌ இகழ்ந்து பேசினர்‌. அதற்கும்‌ உறுதியாகி விட்டது, உறுதியாகி விட்டது, உறுதியாகி விட்டது எனக்‌ கூறினீர்கள்‌. (என்ன உறுதியாகி விட்டது) எனக்‌ கேட்டார்கள்‌.

“யாரை நீங்கள்‌ புகழ்ந்து கூறினீர்களோ அவர்களுக்கு சுவனம்‌ உறுதியாகி விட்டது. யாரை நீங்கள்‌ இகழ்ந்து கூறினீர்களோ, அவருக்கு நரகம்‌ உறுதியாகி விட்டது. (வானில்‌ வானவர்கள்‌ அல்லாஹ்வுக்குச்‌ சாட்சிகளாக இருக்கின்றனர்‌). நீங்கள்‌ பூமியில்‌ அல்லாஹ்வுக்குச்‌ சாட்சிகளாக இருக்கின்றீர்கள்‌!

    மற்றொரு அறிவித்தலின்படி: நம்பிக்கையாளர்கள்‌ பூமியில்‌ அல்லாஹ்வுக்குச்‌ சாட்சிகளாக இருக்கின்றனர்‌. அல்லாஹ்வுக்குச்‌ சில வானவர்கள்‌ இருக்கின்றனர்‌. அவர்கள்‌ ஆதமுடைய மக்களின்‌ நாவினால்‌ பேசுவார்கள்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ விடையளித்தார்கள்‌.

(புகாரி, முஸ்லிம்‌, நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா, ஹாகிம்‌, அஹ்மத்‌)


ஆ. அபுல்‌ அஸ்‌அத்தைல்‌ (ரழி)அவர்கள்‌ அறிவிக்‌கிறார்கள்‌: 

நான்‌ ஒரு தடவை மதீனாவுக்கு வந்தேன்‌. அப்பொழுது மதீனாவில்‌ (விசித்திர) நோய்‌ ஒன்று பரவியிருந்தது. மதீனா வாசிகள்‌ வேகமாக மரணமடைந்து கொண்டிருந்தார்கள்‌.

    நான்‌ உமர்‌ (ரழி) அவர்களுக்குப்‌ பக்கத்தில்‌ அமர்ந்து கொண்டேன்‌. அப்பொழுது எங்களுக்கு அருகில்‌ ஒரு ஜனாஸா சென்றது. அந்த ஜனாஸாவுக்குரியவரைப்‌ பலர்‌ புகழ்ந்து கொண்டிருந்தார்கள்‌. இதனைக்‌ கேட்ட உமர்‌ (ரழி) அவர்கள்‌ உறுதியாகி விட்டதெனக்‌ கூறினார்கள்‌. அமீருல்‌ முஃமினீன்‌ அவர்களே! என்ன உறுதியாகி விட்டது? எனக்‌ கேட்டேன்‌. நான்‌ நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியது போன்றே கூறினேன்‌. அந்த ஜனாஸாவை யாராவது நான்கு பேர்‌ புகழ்ந்து கூறுவார்களாயின்‌ அவருக்கு சுவனம்‌ உறுதியாகி அதில்‌ அல்லாஹ்‌ நுழையச்‌ செய்வான்‌ என நபியவர்கள்‌ கூறினார்கள்‌. அப்போது நாங்கள்‌ ‘மூன்று பேர்‌ புகழ்ந்தால்‌?’ எனக்‌ கேட்டோம்‌. மூன்று பேராயினும்‌ சரியே! என்றார்கள்‌. இரண்டு பேர்‌ புகழ்ந்தால்‌? என மீண்டும்‌ கேட்டோம்‌. இருவராயினும்‌ சரியே! (சுவனம்‌ உறுதியாகி விடும்‌!) என்றார்கள்‌. ஒருவர்‌ புகழ்ந்தால்‌ என நாங்கள்‌ கேட்கவில்லை என உமர்‌ (ரழி) அவர்கள்‌ விடையளித்தார்கள்‌.

(புகாரி, நஸயீ, திர்மிதி, பைஹகி, தயாலிஸி, அஹ்மத்‌)


இ. எந்த முஸ்லிமாவது மரணித்தால்‌ அவன்‌ வீட்டுக்கு மிகச்‌ சமீபமாக உள்ள அண்டைவீட்டினர்‌ அவனைப்‌ புகழ்ந்து கூறுவார்களேயானால்‌ உங்கள்‌ வார்த்தையை நான்‌ ஏற்றுக்‌ கொண்டேன்‌. உங்கள்‌ பார்வைக்குப்‌ படாத அவர்‌ தவறுகளையும்‌ மன்னித்துவிட்டேன்‌ என அல்லாஹ்‌ கூறுகின்றான்‌ என நபி (ஸல்‌) அவர்கள்‌ கூறியுள்ளார்கள்‌.

(அஹ்மத்‌, ஹாகிம்‌)


விரிவுரை

இம்மூன்று நபிமொழிகளும்‌ நபித்தோழர்களுக்கு மட்டுமே பொருந்தும்‌. அவர்களுக்குப்‌ பின்‌ வந்தவர்‌களுக்கல்ல என்று சிலர்‌ கூறுவது ஏற்றுக்‌ கொள்ளப்படத்‌தக்கதல்ல. நபித்தோழர்கள்‌ சென்ற வழியில்‌ செல்லும்‌ எல்லா முஸ்லிம்களுக்கும்‌ பொருத்தமாகவேயிருக்கும்‌. ஒழுக்க சீலமுடைய நற்செயல்கள்‌ புரியும்‌ எல்லா முஸ்லிம்களுக்கும்‌ இந்தப்‌ பேறு கிடைக்கும்‌ என இமாம்‌ இப்னு ஹஜர்‌ (ரஹ்‌) அவர்கள்‌ “அல்பத்ஹு” என்ற ஏட்டில்‌ கூறியுள்ளார்கள்‌. நான்கு பேர்‌ உறுதிப்படுத்த வேண்டும்‌ என்ற நபிமொழி சரியானதே. எனினும்‌ உமர்‌ (ரழி) அவர்களின்‌ அறிவிப்பின்‌ படி இரண்டு பேர்‌ சாட்சியமளித்தாலும்‌ போதும்‌ என்பதே விளக்கமாகும்‌.

சில ஊர்களில்‌ ஜனாஸாவை அடக்கம்‌ செய்வதற்கு முன்‌ மண்ணறையின்‌ ஓரத்தில்‌ அந்த ஜனாஸாவை வைத்துக்‌ கொண்டு ஒருவர்‌ இந்த மையித்தைப்‌ பற்றி என்ன கூறுகின்றீர்கள்‌? என்று கேட்பார்‌. கூடியிருப்பவர்‌ “நல்லவர்‌; இவர்‌ நன்மைகள்‌ செய்வதைக்‌ கண்டோம்‌” என்று பதில்‌ கூறுவார்கள்‌. இவ்வாறு மூன்று முறை கேள்வி பதில்‌ நடக்கும்‌. இவ்வாறு கேள்வி கேட்பதும்‌ பதில்‌ கூறுவதும்‌ “பித்‌ அத்‌தாகும்‌”. இதனால்‌ எவ்விதப்‌ பயனும்‌ இல்லை.

இந்த நபிமொழிகளில்‌ கூறப்பட்ட புகழ்‌ வார்த்தைகள்‌ மக்கள்‌ உள்ளத்திலிருந்து இயல்பாக எழுந்து நாவினால்‌ வெளியாக வேண்டும்‌. இன்னொருவர்‌ சொல்லிக்‌ கொடுத்து சொல்லுவதல்ல. உள்ளத்திலிருந்து வெளியாகக்‌ கூடியவாறு மரணித்தவர்‌ நடத்தை இருந்தால்‌ அதனையே வானவர்கள்‌ மனிதர்களின்‌ நாவினால்‌ மொழிவார்கள்‌. இந்தப்‌ புகழ்‌ வார்த்தைகளையே அல்லாஹ்‌ ஏற்றுக்‌ கொண்டு சுவனம்‌ கொடுக்கின்றான்‌.
 
நாலு பேர்‌ என்ன, நாற்பது அல்லது நானூறு பேர்‌ சடங்குக்காக, முகஸ்துதிக்காக, மரணித்தவரின்‌ இன சனங்களின்‌ (உறவினர்களின்‌) திருப்திக்காக நல்லவர்‌ என்று கூறினாலும்‌ பயனில்லை. உதட்டளவில்‌ ஏற்படும்‌ வார்த்தையே தவிர அது உள்ளத்திலிருந்து வருவதல்ல. மரணிப்பதற்கு முன்னர்‌ அவர்‌ எவ்வாறு நடந்து கொண்டார்‌ என்பதை மக்கள்‌ அறிந்து கொண்டிருப்பார்கள்‌. அம்மக்களின்‌ உள்ளத்திலிருந்து நல்ல வார்த்தையோ, கெட்ட வார்த்தையோ வெளியாகும்‌. இதனை யாரும்‌ மறுக்க முடியாது.
Previous Post Next Post