நபி கடுகடுத்தார்

-இஸ்மாயில் ஸலபி

முஹம்மது நபி, இயல்பிலேயே மென்மையானவர். இலகிய குணமுடையவர். அவர் ஒருமுறை கடுகடுத்தார். முகம் சுழித்தார். அதற்காக அவர் அல்லாஹ்வால் கண்டிக்கப்பட்டார். அவர் யாருக்காக, ஏன் கண்டிக்கப்பட்டார் தெரியுமா? வாருங்கள் தெரிந்து கொள்வோம்.

முஹம்மது நபி வாழ்ந்த சமூகத்தில் சாதி வேறுபாடு ஆழமாக வேரூன்றிக் காணப்பட்டது. சிலர் தம்மை உயர்சாதி என்று கூறிக்கொண்டு பெரும் அடக்குமு¬ணீறயைக் கையாண்டு வந்தனர். முஹம்மது நபி, ஒருவனே தேவன் என்று போதித்ததைக் கூட அவர்களில் சிலரால் ஜீரணிக்க முடிந்தது. ஆனால் ஒன்றே குலம் என்கிறாரே… உயர்சாதியான எம்மையும் இந்தக் கீழ் சாதிகளையும் சரிசமமாக ஆக்கப் பார்க்கின்றாரே என்பதைத் தான் அவர்களால் ஜீரணிக்க முடியாதிருந்தது.

முஹம்மதே, நீங்கள் கூறுவதை நாம் ஏற்கலாம். ஆனால் இந்தக் கீழ்சாதிகளுடன் சரிசமமாக எம்மால் இருக்க முடியாது. எமக்கென தனியாகவும் அவர்களுக்கு வேறாகவும் நீங்கள் மார்க்கம் சொன்னால் நீங்கள் கூறுவதை நாம் ஏற்கலாம் என்று கூறினர். முஹம்மது நபியவர்கள் கூட இவர்கள் கூறுவது போல் செய்து அவர்கள் சத்தியத்தை ஏற்ற பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களது மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி சமத்துவத்தை உருவாக்கினால் என்ன… என்று யோசிக்க ஆரம்பித்தார்கள்.

இவ்வாறு உயர்சாதியினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது கண்பார்வை இல்லாத ஒரு மாற்றுத் திறனாளியான அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம் என்று சொல்லப்படக்கூடிய ஒருவர் அந்த வழியில் வந்தார். முஹம்மது நபியின் குரலைக் கேட்ட அவர் ஆர்வத்துடன் வந்து முஹம்மது நபியுடன் பேச ஆரம்பித்தார்.
அவரோ பார்வை அற்றவர். சூழ்நிலையை அவரால் புரிய முடியாது. முஹம்மது நபி யாருடன் உரையாடிக் கொண்டிருக்கிறார் என்பதும் அவருக்குத் தெரியாது. எனவே அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை, குறையும் இல்லை. இந்த சந்தர்ப்பத்தில் தான் முஹம்மது நபி, முகம் சுளித்தார். இந்த மனிதர் இப்போது வந்து பேசிக் கொண்டிருக்கிறாரே! இவர் என்னுடன் எப்போது வேண்டுமானாலும் பேசலாமே… என்று அவர் பேச்சைப் புறக்கணித்தார்.

முஹம்மது நபி முகம் சுளித்தது அவருக்குத் தெரியாது. ஆனால் அல்லாஹ்வுக்குத் தெரியும் அல்லவா? உடனே முஹம்மது நபியைக் கண்டித்து திருமறை வசனங்கள் அருளப்பட்டன. பொதுவாக குர்ஆன் வசனங்கள் முஹம்மது நபியைப் பார்த்து அல்லாஹ் நேரிடையாகப் பேசுபவையாகவே அமைந்திருக்கும். ஆனால்
முஹம்மது நபியைக் கண்டிக்கும் இந்த வசனங்கள் அவரைப் பார்த்துப் பேசுவதாக அமையாமல் மக்களைப் பார்த்து செய்தியைச் சொல்கிறது. முஹம்மது நபியைப் படர்க்கையாக வைத்து அல்லாஹ் பேசுகின்றான்.

தன்னிடம் பார்வை அற்ற அவர் வந்தபோது இவர் கடுகடுத்தார். அவரைப் புறக்கணித்தார். வந்த இவர் தூயவராக இருக்கலாம். நீர் கூறுவதைக் கேட்டு தன்னைத் திருத்திக் கொள்பவராக இருக்கலாம். ஆனால் மார்க்கப் போதனைத் தேவை இல்லை என நினைக்கும் இந்த உயர்சாதிக்காரர்களைத் தேடிச் சென்று நீர் மார்க்கம் சொல்கிறீர். சாதிவெறி பிடித்த இவர்கள் திருந்தாவிட்டால் உம் மீது எந்தக் குற்றமும் இல்லை.இதோ உம்மிடம் மார்க்கம் கேட்க ஓடோடி வந்த இந்தப் பார்வை அற்றவர், இறைவனை அஞ்சும் சுபாவம் உள்ளவர். அவரை நீர் அலட்சியம் செய்கிறீர். இது தவறு. திருக்குர்ஆன் ஒரு அறிவுரை. விரும்பியவர் அதில் இருந்து படிப்பினை பெறட்டும் என ஒரு அத்தியாயம் இறங்கியது.

சாதாரண ஒரு பார்வை அற்றவருக்காக முஹம்மது நபி கண்டிக்கப்பட்டார். இந்நிகழ்வுக்குப் பின்னர் முஹம்மது நபி இவரை அதிகம் கண்ணியப்படுத்த ஆரம்பித்தார்கள். முஹம்மது நபி போர்க்களங்களுக்குச் செல்லும் போது மதீனா பள்ளியில் தனது இடத்தில் இருந்து தொழுகை நடத்தும் முக்கிய பொறுப்பை
முஹம்மது நபி இந்த பார்வையற்ற ஸஹாபியிடம் அளிப்பார்கள். அந்த அளவுக்கு அவருக்கு மதிப்பளித்தார்கள். இந்த நிகழ்ச்சியின் மூலம் இஸ்லாத்தில் சாதி வேறுபாடு அடியோடுஅழிக்கப்பட்டது. அல்லாஹ்வின் முன்னிலையில் இறைத்தூதரும் தாழ்த்தப்பட்ட ஒரு மனிதரும் சரிசமமாகப் பார்க்கப்படுவார் என்ற நீதி கூறப்பட்டது.

முஹம்மது நபி, உயர் பண்பு உறுதி செய்யப்பட்டது. இவருக்காக தன்னை கண்டித்தானே என அவரைப் பழிவாங்க அவர் முற்படவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக திருக்குர்ஆன், முஹம்மது நபியின் நூல் அல்ல, அது இறைவேதம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

திருக்குர்ஆனில் 80வது அத்தியாயம் ‘அபஸ’ (கடுகடுத்தார்) என்பதாகும். அதுதான் இந்த சம்பவம் குறித்துக் கூறும் குர்ஆனின் வசனங்களாகும். நாமும் சாதி வேறுபாடு பார்க்காமல் மனிதர்களை சரிசமமாக மதித்து வாழக் கற்றுக் கொள்ள வேண்டும். பிற சமூகத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு நாம் நமஉரிமை வழங்கி நமது உடன்பிறப்புக்களாக மதித்து அவர்களுடன் இணைந்து வாழ வேண்டும்.
Previous Post Next Post