இஸ்லாத்தில் மாதங்கள் - அறிமுகம்

அல்லாஹ்வின் சட்டத்தில் மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும்.

வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளிலிருந்து இந்த சட்டம் தொடர்கிறது.

இவை சந்திரனை அடிப்படையாகக் கொண்ட சந்திர மாதங்களாகும்.

அவை: 
1. முஹர்ரம் 
2. ஸஃபர் 
3. ரபியுல் அவ்வல் 
4. ரபியுல் ஆகிர் 
5. ஜுமாதல் ஊலா 
6. ஜுமாதல் ஆகிரஹ் 
7. ரஜப் 
8. ஷஃபான்
9. ரமழான் 
10. ஷவ்வால் 
11. துல்கஃதஹ்
12. துல்ஹிஜ்ஜஹ்

இவற்றில் நான்கு மாதங்கள் யுத்தம் செய்வது தடை செய்யப்பட்ட மாதங்களாகும்.

அவை: 
1. முஹர்ரம்
7. ரஜப் 
11. துல்கஃதஹ்
12. துல்ஹிஜ்ஜஹ்

அவற்றில் துல்கஃதஹ், துல்ஹிஜ்ஜஹ், முஹர்ரம் ஆகிய மாதங்கள் ஒன்றன்பின் ஒன்றாக தொடர்ந்து வருகின்றவையாக இருக்கின்றன. 

யுத்தம் தடை செய்யப்படும் கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களை இஸ்லாத்துக்கு முன்னுள்ள ஜாஹிலிய்யஹ் கால மக்களும் மதித்தனர். ஆனாலும் அவர்கள் யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதங்களை முன்னுக்குப்பின் மாற்றி; அல்லாஹ்வின் சட்டத்தை மாற்றி அவர்களது வசதிக்கு ஏற்ப நடந்து கொண்டனர். இதன் மூலம் யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதத்தை யுத்தம் தடை செய்யப்படாத மாதமாகவும், யுத்தம் தடை செய்யப்படாத மாதத்தை யுத்தம் தடைசெய்யப்பட்ட மாதமாகவும் மாற்றிக் கொண்டனர். இதனை அல்லாஹ் அல்குர்ஆனில் கண்டித்துள்ளான். நபி ﷺ அவர்கள் ஒவ்வொரு மாதத்தையும் அதற்குரிய சரியான நிலைமைக்கு கொண்டு வந்தார்கள்.

இவ்வாறு அல்லாஹ்வின் சட்டங்களை மாற்றுவது "குப்ர்" ஆகும்.

சந்திர மாதங்களுடன்தான் எமது வணக்கங்கள் சம்பந்தப்படுகின்றன. உ+ம்: ஹஜ், ரமழான் நோன்பு, இத்தஹ், ஸகாத்.

"إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ" [التوبة : 36]  
{நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய பதிவில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்து மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும் - அவற்றில் நான்கு (மாதங்கள்) கண்ணியப்படுத்தப்பட்டவை; இது தான் நேரான மார்க்கமாகும். ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து அல்லது தடைசெய்யப்பட்டதை செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள். இன்னும், இணைவைப்பவர்கள் ஒருங்கிணைந்து உங்களுடன் போராடுவதைப்போன்று நீங்களும் ஒருங்கிணைந்து அவர்களுடன் போராடுங்கள்,  நிச்சயமாக அல்லாஹ், பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதையும் உறுதியாக அறிந்து  கொள்ளுங்கள்.} (அல்குர்ஆன் : 9:36)
"إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِّيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ" [التوبة : 37]  
{(யுத்தம் செய்யக்கூடாது என்று தடுக்கப்பட்ட இம்மாதங்களை அவர்கள் தங்கள் விருப்பப்படி) பிற்படுத்துவது குஃப்ரை (நிராகரிப்பை)யே அதிகப்படுத்துகிறது; இதனால் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகின்றனர். ஏனெனில் ஒரு வருடத்தில் அ(ம்மாதங்களில் யுத்தம் புரிவ)தை அனுமதிக்கப் பட்டதாகக் கொள்கிறார்கள்; மற்றொரு வருடத்தில் அதைத் தடுத்து விடுகின்றனர். இதற்கு காரணம் (தாங்கள் தடுத்துள்ள மாதங்களின் எண்ணிக்கையை) அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களின் எண்ணிக்கைக்குச் சரியாக்கி, அல்லாஹ் தடுத்திருக்கும் மாதங்களை தாங்கள் ஆகுமாக்கிக் கொள்வதற்காகத்தான். அவர்களின் (இத்)தீச்செயல்கள் அவர்களுக்கு (ஷைத்தானால்) அலங்கரிக்கப்பட்டுவிட்டன; அல்லாஹ், நிராகரிக்கும் கூட்டத்தை நேர் வழியில் செலுத்த மாட்டான்.}
(அல்குர்ஆன் : 9:37)

عن  أبي بكرة، عن النبي ﷺ قال:  "إن الزمان قد  استدار  كهيئته يوم خلق الله السماوات والأرض؛ السنة اثنا عشر شهرا منها أربعة حرم؛ ثلاث متواليات: ذو القعدة، وذو الحجة، والمحرم، ورجب مضر الذي بين جمادى وشعبان". (صحيح البخاري 4662)
 நபி ﷺ அவர்கள் (ஹஜ்ஜதுல் வதாவில் உரையாற்றிய போது) கூறினார்கள்:  
அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த நாளில் இருந்த (பழைய) நிலைக்கே காலம் திரும்பிவிட்டது. ஓர் ஆண்டு என்பது பன்னிரண்டு மாதங்கள் ஆகும். அவற்றில் நான்கு மாதங்கள் (யுத்தம் செய்வது விலக்கப்பட்ட) கண்ணியப்படுத்தபட்ட மாதங்களாகும். (அந்த நான்கு மாதங்களில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வருகின்றவையாகும். அவை: துல்கஃதஹ், துல்ஹிஜ்ஜஹ், முஹர்ரம் மற்றும் ஜுமாத(ல் ஆகிரஹ்வு)க்கும் ஷஅபானுக்கும் இடையிலுள்ள முளர் குலத்து (மக்கள் அதிகம் மதிக்கும்) 'ரஜப்' மாதம் ஆகும்.  (புகாரி 4662)


இஸ்லாத்தில் சிறப்புமிக்க நாள்கள், மாதங்கள் நேரங்கள் - கேள்வி பதில்

عشر ذي الحجة
1- வருடத்தில் சிறந்த நாட்கள் எவை?
துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்.

يوم النحر = عيد الأضحى 
2- வருடத்தில் சிறந்த நாள் எது? 
துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் பத்தாவது நாள் = யவ்முந் நஹ்ர் = ஹஜ் பெருநாள் தினம்.  
(ஹஜ்ஜின் பெரும்பாலான அமல்கள் இந்த நாளில் தான் நடைபெறும்)

يوم عرفة
3- துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் முதற் பத்து நாட்களில் பத்தாவது நாளைக்கு பிறகு சிறந்த நாள் எது?
அம்மாதத்தின் ஒன்பதாவது நாளாகிய அறபஹ் தினமாகும்.

يوم القر
4- வருடத்தின் சிறந்த நாளான துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் பத்தாவது நாளைக்குப் பிறகு வருடத்தில் சிறந்த நாள் எது? 
யவ்முல் கர் = துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் பதினோராவது நாள். 
(ஹாஜிகள் மினாவில் தங்கும் நாள்)

أيام التشريق
5- அய்யாமுத் தஷ்ரீக் எனும் நாட்கள் எவை? 
துல்ஹிஜ்ஜஹ் மாதத்தின் 11, 12, 13 ஆகிய நாட்கள்.
(11 = யவ்முல் கர், 12 = யவ்முந் நஃப்ரில் அவ்வல்,  13 = யவ்முந் நஃப்ரிஸ் ஸானி)
(يوم القر + يوم النفر الأول + يوم النفر الثاني)

يوم الجمعة
6- வாரத்தின் சிறந்த நாள் எது?
யவ்முல் ஜுமுஅஹ் = வெள்ளிக்கிழமை தினம்.

رمضان
7- வருடத்தின் 12 மாதங்களில் சிறந்த மாதம் எது?
றமளான் மாதம்

العشر الأواخر من رمضان
8- வருடத்தின் சிறந்த இரவுகள் எவை?
றமளான் மாதத்தின் கடைசிப் பத்து இரவுகள்.

ليلة القدر
9- வருடத்தின் சிறந்த இரவு எது?
லைலதுல் கத்ர் இரவு

الأشهر الحرم
10- யுத்தம் தடைசெய்யப்பட்ட சங்கைமிக்க மாதங்கள் எவை? 
முஹர்ரம் (1)
றஜப் (7)
துல்கஃதஹ் (11)
துல்ஹிஜ்ஜஹ் (12) ஆகிய நான்கு மாதங்கள்.
(محرم + رجب + ذو القعدة + ذو الحجة)

أشهر الحج
11- ஹஜ்ஜுடைய மாதங்கள் எவை?
ஷவ்வால் (10),
துல்கஃதஹ் (11),
துல்ஹிஜ்ஜஹ் (12) ஆகிய மூன்று மாதங்கள்.
(شوال + ذو القعدة + ذو الحجة) 

أيام البيض
12- ஒவ்வொரு மாதத்திலும் நோன்பு நோற்பதற்கு உகந்த நாட்களான அய்யாமுல் (b)பீழ் என அழைக்கப்படும் வெள்ளை நாட்கள் எவை?
ஒவ்வொரு சந்திர மாதத்தினதும் 13, 14, 15 ஆகிய நாட்கள்.

تاسوعاء + عاشوراء
13- நோன்பு நோற்பது ஸுன்னத்தாக்கப்பட்ட நாட்களான தாஸூஆ, ஆஷூரா என அழைக்கப்படும் நாட்கள் எவை?
முஹர்ரம் மாதத்தின் 9, 10 ஆகிய நாட்கள்.


-ஸுன்னஹ் அகாடமி
Previous Post Next Post