ஹதீஸ்களின் பெயரால்... இப்படியும் சில ஹதீஸ்கள்



ஆசிரியர்: மு.ஆ. முகம்மது முகைதீன் உலவி, 

வெளியீடு: தைமிய்யா பப்ளிகேஷன்ஸ், மதுரை.


உள்ளடக்கம்:

பதிப்புரை
முன்னுரை
1. மக்காவை விட மதீனா சிறந்ததா?
2. ஹஜ்ஜுக்கு நடந்து சென்றால் அதிக நன்மையா?
3. விபச்சாரம் செய்தால்...!
4. குதிரைக் கறி உண்ணக்கூடாதா?
5. உலகத்தில் பற்றற்று வாழ்வது?
6. தொழுகையில் கையை உயர்த்தலாமா?
7. கோழி ஆடாகுமா?
8. ஜும்ஆ ஹஜ்ஜாகுமா?
9. மறைவுறுப்பைப் பார்த்தால்..!
10. தலைப்பாகையுடன் தொழுதால்...!
11. செய்தி கூறும்போது தும்மலாமா?
12. பெண்களின் பேச்சைக் கேட்கலாமா?
13. பெண்ணுக்கு மாறு செய்வது?
14. தலாக் கூறவே கூடாது?
15. இரண்டா? நான்கா?
16. உண்ணும் முன்பும் பின்பும் ஓதுதல்?
17. உளுச் செய்த பிறகு 97வது அத்தியாயம் ஓதுதல்?
18. வெள்ளியன்று...?
19. ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும்போது...?
20. வெள்ளிக்கிழமை தோறும்...
21. அங்கே யாசீன் அத்தியாயம் ஓதினால்...
22. சபையில் இருந்து எழும்போது...
23. தொழுது கொண்டே தான் இருக்க வேண்டுமா?
24. சுப்ஹு தொழுகையில் 94 மற்றும் 105 வது அத்தியாயங்களை ஓதுதல்?
25. கடலில் பயணம் செய்யலாமா?
26. உலமாக்களை பின்பற்றத் தான் வேண்டுமா?
27. மிம்பரில் இருக்கும்போது பேசலாமா?
28. விபச்சாரக் குழந்தைகள்
29. நபி(ஸல்) அவர்களை நேரில் காண வேண்டுமா?
30. நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமா?
31. கோபம் ஏற்பட்டால்...?
32. மழைக் காலங்களில் தான் மனிதனின் உள்ளம்?
33. அரபி மொழி பேசுபவன் ஃபார்ஸி மொழிபேசக்கூடாது?
34. பட்டு மெத்தையில் அமரலாமா?
35. இகாமத் வாசகம் ஒரு தடவை மட்டும் கூறினால் குற்றமா?
36. அசுத்த இடம் ஸஜ்தா செய்தால் சுத்தமாகுமா?
37. திருமணத்திற்கு முன் ஹஜ் செய்தால்?
38. குழந்தைக்கு முஹம்மது என பெயரிடாவிட்டால்..
39. பெண்கள் விளையாட்டு பொருட்கள்?
40. அழகு, பணம், பாரம்பரியம் இவற்றிற்காக திருமணம் செய்யலாம்?
41. அழகிய முகம் இருப்பின்...
42. புறம்பேசுவது?
43. மஃரிபுக்குப் பின் உபரித் தொழுகை...!
44. தானியங்களில் ஸகாத் மதிப்பீடு அளவு என்ன?
45. அறிவாளி ஆகவேண்டுமா?
46. பாவமன்னிப்புக் கட்டாயமானதல்ல!
47. சிலந்தியாக மாற்றப்பட்ட ஷைத்தான்?
48. இடைத்தரகர் இல்லை!?
49. அரபு மக்களை வெறுக்கலாமா?
50. ஃபார்ஸி மொழி சிறந்ததா?
51. அரபி தான் சொர்க்க மொழியா?
52. வியாபாரியும் விவசாயியும் கெட்டவர்களா?
53. நபி(ஸல்) நேரில் சந்தித்த நன்மை பெற...
54. முஹம்மதும் முஹம்மதின் தந்தையும் சொர்க்கம் செல்வர்?
55. நபி(ஸல்) இறுதி நபியா? இல்லையா?
56. பிரகாசிக்கும் இருள்?
57. நபி(ஸல்) அவர்கள் ஏழு துணிகளால் கபனிடப்பட்டார்களா?
58. ஸஹர் நேரம் எதுவரை?
59. வெள்ளை நிறச் சேவலை உண்ணாதீர்?
60. பாவிகளுடன் சேர்ந்துண்ணல்!?
61. இரமளானில் ஏற்படும் கடும் சப்தம்?
62. ரமளான் என்று கூறக்கூடாதா?
63. குளிப்பு கடமையானவன் கடல் நீரில் குளிக்கலாமா?
64. குளிப்புக் கடமையானவன் குளியலறையில் குளிக்கலாமா?
65. அஸர் தொழுகையை தாமதிக்கத்தான் வேண்டுமா?
66. ரக்அத்களில் ஓதாமல் ருகூஉ, ஸஜ்தா முறையாக இருந்தால் மட்டும் போதுமா?
67. காதுகள் வரை கையை உயர்த்துவது பித்அத்தா?
68. லுஹர், அஸரில் ஓத வேண்டாமா?
69. தொழ வைப்பவர் அழகாக இருக்க வேண்டுமா?
70. தொழு நோய்க்கான காரணம்?
71. பார்வையின் கூர்மைக்கு...
72. ஆண்கள் கெட்டுப் போக பெண்களே காரணம்?
73. ஆண்கள் நரகம் செல்ல காரணம் பெண்களே!
74. இறைவனின் விரோதிகள் பெண்களாவர்?
75. மஹருக்கு அளவுண்டா?
எச்சரிக்கை!


பதிப்புரை:

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் தற்போது ஹதீஸ் நூற்களின் தமிழாக்கங்கள் வெளிவரும் காலம் இது. பல்வேறு தலைப்புகளிலும் இஸ்லாமிய நூற்கள் வெளிவந்து, இஸ்லாமியச் சிந்தனையை தமிழ் பேசும் மக்களுக்கு பெரும் பயன் அளிக்கும் காலமும் கூட.

இந்த வகையில் கடந்த மாதம் எமது முதல் வெளியீடாக ''நபி(ஸல்) போதித்த நற்பண்புகள்'' என்ற நூலை முதல் வெளியீடாக முன் வைத்தோம். தற்போது இரண்டாம் வெளியீடாக ''இப்படியும் சில ஹதீஸ்கள்'' நூலை உங்கள் முன் வைத்துள்ளோம்.

போலியான ஹதீஸ்(?)களையும் கூட நம்பி செயல்படும் அறிஞர்கள் உண்டு. இதனால் இஸ்லாமியச் சட்டங்களில் கேலிக் கூத்தானவை-முட்டாள்தனமானவைகள் கூட நுழைந்துவிட்டன. யூதர்களின் சதியின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி இது எனலாம்.

ஆனாலும் ஆயிரக்கணக்கான ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டு, புனையப்பட்டு உள்ளன. அவை அனைத்தையும் இங்கே குறிப்பிடுவதானால் பல வால்யூம்கள் தான் அச்சிட வேண்டியது வரும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். இதனால் சில ஹதீஸ்கள் மட்டும் உங்கள் பார்வைக்கு!

இவற்றைப் புரிந்து கொண்டாலே ஹதீஸ்களின் பெயரால்... கூறப்படும் சில தவறான செய்திகள் விஷயத்தில் உஷாராக இருக்கலாம். ஒரு சிலர் வரம்பு மீறி, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் உள்ளதால், ஹதீஸ்களே வேண்டாம், குர்ஆன் மட்டுமே போதும் என்பர். இதுவும் தவறான நம்பிக்கையாகும்.

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அடையாளம் கண்டு, திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிவழிப்படி செயல்பட முனைவோமாக!

- தைமிய்யா பப்ளிகேஷன்ஸ், மதுரை.


முன்னுரை:

புகழ் அனைத்தும் அல்லாஹ்விற்கே!

குர்ஆனும், ஹதீஸும் தான் தம் வாழ்க்கையின் வழிகாட்டி. அதைப்பின்பற்ற தவறியது தான், நாம் வழிகேட்டில் போய்விட காரணமானது என்பதைப் புரிந்து கொண்டனர் முஸ்லிம்கள்.

குர்ஆனும், ஹதீஸும் அரபியில் உள்ளதால் அதைத் தமிழில் தரவேண்டியது அரபு மொழி அறிந்த அறிஞர்கள் மீதுள்ள கடமையாகின்றது. குர்ஆன் 50 வருடங்களுக்கு முன்பே தமிழில் தரப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது தான் ஹதீஸ்கள் முழுமையாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு வருகின்றது.

யூத, கிருத்துவர்கள், அவர்களது கைக்கூலிகள் தூய்மையான இஸ்லாத்தை களங்கப்படுத்த வேண்டும் என்று எண்ணி இஸ்லாத்தில் இல்லாத, அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத பல செய்திகளை பரப்பினர். குர்ஆனில் தங்களது கைசரக்கை அவர்களால் நுழைக்கமுடியவில்லை. காரணம் அது முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் ஹதீஸ்களோ அப்படி பாதுகாக்கப்படவில்லை. இது இஸ்லாத்தை களங்கப்படுத்த எண்ணியோருக்கு பெரும் வாய்ப்பாக அமைந்துவிட்டது. தங்கள் இஷ்டத்திற்கு ''ஹதீஸ்களின் பெயரால்'' பல விஷயங்களை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக பரப்பிவிட்டு விட்டார்கள்.

இதன் விளைவு ஹதீஸ் கலை அறிஞர்கள் ஹதீஸை தங்களின் நூல்களில் பதிவு செய்யும்போதே ஹதீஸின் தரத்தையும் எழுதினர்.

இது இட்டுக்கட்டப்பட்டது.
இது புனையப்பட்டது.
இது பலவீனமானது

என்றெல்லாம் அடையாளம் காட்டினர். ஆனால் முஸ்லிம்கள் அந்த இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான செய்திகளை தங்களையும் அறியாமல் செயல்படுத்தி விட்டனர். ஹதீஸை மட்டும் போதித்து விட்டு, ஹதீஸில் உள்ள புனையப்பட்டவைகளை போதிக்கத் தவறியதினால் மவ்லவிகளும் கூட தரமிழந்த ஹதீஸ்களை ஹதீஸின் பெயரால் மக்களுக்கு போதித்து வருகின்றனர்.

ஹதீஸ்களை மொழி பெயர்ப்பு செய்யும் போதே அதன் தரத்தையும் தற்போது மொழி பெயர்ப்பவர்கள் குறிப் பிட்டாலும், ஹதீஸ்களின் பெயரால் இட்டுக்கட்டப் பட்டதையும் தனி நூற்களாக தந்தால் தமிழ் முஸ்லிம்கள் விழிப்புடன் இருப்பர். இதுபோன்ற ஹதீஸ்களை கூறுவோரிடம் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வர்; என்பதால் தான் யிஹதீஸ்களின் பெயரால்... இப்படியும் சில ஹதீஸ்கள்'' என்ற நூலைத் தொகுத்துள்ளேன்.

இந்நூல் வெளிவர ஆலோசனை வழங்கிய குவைத் சகோதரர்கள் மவ்லவி ளு.மு.சம்சுதீன் மற்றும் மு.தாஜுத்தீன் ஆ.யு., ஆகியோருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் ஹதீஸ்களை நன்கறிந்து, உண்மையில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள ஸஹீஹான ஹதீஸையே பின்பற்றி வாழ வல்ல அல்லாஹ் அருள்புவானாக!

இவன்,
மு.ஆ. முகம்மது முகைதீன்
14-02-2005
நல்லூர், மதுரை.


1. மக்காவை விட மதீனா சிறந்ததா?

மர்வான் இப்னு ஹகம் அவர்கள் மக்காவில் உரையாற்றிக் கொண்டிருந்தார்கள். அப்போது மக்காவைப் பற்றியும் அதன் சிறப்பையும் கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது மிம்பருக்கு அருகில் இருந்து ராபிவு இப்னு ஹதீஜ் அவர்கள், யிநீர் மக்காவையும், அதன் சிறப்பையும் கூறினீர். அது நீர் கூறியபடியே உள்ளது தான். ஆனால் நீர் மதீனாவைப் பற்றி கூறுவதை உம்மிடம் நான் கேட்கவில்லையே. (ஏன் கூறத்தவறினீர்?) 'மக்காவை விட மதீனாவே மிகச் சிறந்தது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பதை நான் கேட்டதற்கு சாட்சி கூறுகிறேன்'' என்று கூறினார்கள்.

இப்படி ஒரு சம்பவம் நடந்ததாக புகாரீ அவர்கள் தனது 'தாகுல் கபீர்' எனும் நூலிலும், தப்ரானி அவர்கள் தனது கபீலும், முபழ்ழலுல் ஜுன்தி அவர்கள் 'பழாயிலுல் மதீனா' எனும் நூலிலும் பதிவு செய்துள்ளார்கள்.

இதில் மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியது 'மக்காவை விட மதீனாவே மிகச் சிறந்தது' என்ற வாசகத்தைத் தான்.

இச்சம்பவத்தை அறிவிக்கும் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் முஹம்மது இப்னு அப்துர் ரஹ்மான் அல் ஆமி என்பவர் சரியானவர் அல்லர்.

'இவர் பலமானவர் அல்ல' என்று அபூஹாதம் அவர்களும், 'இவரது பல அறிவிப்புகள் பாதுகாக்கப்படாதவை' என்று இப்னு அதீ அவர்களும் கூறுகிறார்கள்.

'மக்காவை விட மதீனாவே மிகச் சிறந்தது' என்ற வாசகமும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு மாற்றமாக உள்ளது. மதீனாவுக்கு என்று தனிச்சிறப்புகள் உண்டு என்பதை நாம் மறுக்கவில்லை. அதற்கென தனிச்சிறப்புகள் உண்டு என்பதற்கு பின்வரும் ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன.
ஐர், ஸவ்ர் ஆகிய இரண்டு மலைகளுக்கிடையே உள்ள மதீனா சிறப்புமிக்க பகுதியாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அலீ(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

'இறைவா! மக்காவில் நீ ஏற்படுத்திய அபிவிருத்தி போன்று இரண்டு மடங்குகளை மதீனாவிலும் ஏற்படுத்துவாயாக!' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

'மதீனாவின் இரண்டு எல்லைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அதன் புற்பூண்டுகளை (தேவையில்லாமல்) வெட்டி எறிவதையும், அதன் வேட்டைப் பிராணிகள் கொல்லப்படுவதையும், நான் ஹராமாக ஆக்குகிறேன். மதீனா மாநகரம் தான் அவர்களுக்கு சிறந்தது. இதை அவர்கள் அறியக் கூடாதா? யாரேனும் மதீனாவை வெறுத்து அதை விட்டும் சென்றால் அல்லாஹ் அவரை விட சிறந்தவரை அதற்குப் பகரமாக தங்க வைத்து விடுவான். யாரேனும் பசிக் கொடுமையையும், சிரமத்தையும் தாங்கிக் கொண்டு உறுதியாக மதீனாவிலேயே இருந்தால் கியாம நாளில் அவனுக்கு நான் பரிந்துரை செய்பவனாக ஆவேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஸஃது(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸ்கள் மதீனாவின் சிறப்புக்களை அறிவிப்பதில் இருந்தே மதீனாவின் சிறப்புக்கள் உயர்ந்தவை என்பது தெளிவானாலும் அதே சமயம் மக்காவின் சிறப்புகள் என்பது அதையும் விட மிகச் சிறந்த ஒன்றாகும். இதை பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம் விளங்கலாம்.

'மற்ற இடங்களில் ஆயிரம் தொழுகைகளைத் தொழுவதை விட எனது இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது சிறந்தது. ஆனால் மஸ்ஜிதுல் ஹராம் (கஃபா ஆலயம்) தவிர. மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது, எனது இந்தப் பள்ளியில் தொழும் 100 தொழுகைகளை விடவும் சிறந்தது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) அறிவிக் கின்றார்கள். நூல்கள்: அஹ்மத், இப்னுஹிப்பான்

'மஸ்ஜிதுல் ஹராம் தவிர, எனது இந்தப் பள்ளியில் ஒரு தொழுகை தொழுவது மற்ற இடங்களில் தொழும் 1000 தொழுகைகளை விடவும் மேலானது' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

'இந்த ஊரை (மக்காவை) வானங்கள், பூமியைப் படைத்ததில் இருந்தே அல்லாஹ் கண்ணியப்படுத்திவிட்டான். அல்லாஹ்வே கண்ணியப்படுத்தி விட்டதால் கியாமநாள் வரையிலும் இது கண்ணியமிக்கதாகும்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

இந்த ஹதீஸ்கள் மதீனாவை விட மக்காவுக்கு மிக சிறப்பு உண்டு என்பதை அறிவிப்பதால் மதீனா, மக்காவை விட சிறந்த ஊர் என்பது மிகைப்படுத்தப்பட்டதாகும்.

மேலும் 'ஊர்களின் தாய்', 'உம்முல்குரா' என்று அல்லாஹ் மக்காவை குறிப்பிடுகிறான்.

இது, தாய் கிராமத்தை (மக்கா)வையும், அதைச் சுற்றி யுள்ளவர்களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். பாக்கியம் பெற்றதும், தனக்கு முன் சென்றவற்றை உண்மைப் படுத்தக் கூடியதுமாகும். மறுமையை நம்புவோர் இதை நம்புகின்றனர். அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாகவும் உள்ளனர். அல்குர்ஆன் 6:92

மேலும் மக்காவில் கஃபா, ஹஜருல் அஸ்வத், மகாமே இப்ராஹீம், ஜம்ஜம் நீர் ஊற்று, ஸபா, மர்வா மலைக்குன்று போன்ற மாண்புமிகு தலங்களும் உண்டு.

இதுபோன்ற எண்ணிலடங்கா சிறப்புகள் மக்காவிற்கு உண்டு. மதீனாவிற்கு என சிறப்புகள் உண்டு என்றாலும், 'மக்காவை விட மதீனாவே மிகச் சிறந்தது' என்ற வாசகம் தவறானது. எனவே மேற்கண்ட செய்தி நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப் பட்டதாகும்.


2. ஹஜ்ஜுக்கு நடந்து சென்றால் அதிக நன்மையா?

''வாகனத்தில் ஏறி ஹஜ் செய்யச் சென்றவருக்கு அவரது வாகனம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் 70 நன்மைகள் உண்டு. (ஆனால் ஹஜ் செய்ய) நடந்து செல்பவருக்கோ அவர் வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் 700 நன்மைகள் உண்டு.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். தப்ரானீ அவர்கள் தன் கபீல் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் யஹ்யா இப்னு சுலைம், முகம்மது இப்னு முஸ்லிம் இருவரும் சரியானவர் களல்லர். 'இவ்விருவரும் பலவீனர்கள்' என இமாம் அஹ்மத் குறிப்பிடுகிறார்கள். இந்த இருவரும் ஒருமுறை தங்களுக்கு இப்றாஹீம் இப்னு மைஸிரா அறிவித்ததாகவும், மற்றொரு முறை இஸ்மாயீல் இப்னு உமையா அறிவித்ததாகவும் கூறி, அறிவிப்பவர்கள் வரிசையைக் குழப்பக் கூடியவர்களாக உள்ளனர்.

மேலும் இதே முஹம்மது இப்னு முஸ்லிம் வழியாக கீழ்க்கண்ட ஹதீஸை இப்னு அதீ அவர்கள் தன் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

'ஒருவர் வாகனத்தில் சென்று ஹஜ் செய்தால் அவருக்கு ஒவ்வொரு எட்டுக்கும் ஒரு நன்மை உண்டு. ஒருவர் நடந்து சென்று ஹஜ் செய்தால் அவருக்கு ஹரமின் நன்மைகளிலிருந்து ஒவ்வொரு அடிக்கும் 70 நன்மையுண்டு' என்று நபி(ஸல்) கூறினார்கள். ஹரமின் நன்மைகள் என்றால் என்ன? என்று ஒருவர் கேட்டார். 'அதன் ஒரு நன்மை ஒரு லட்சம் நன்மைக்குச் சமமாகும்' என்று பதில் கூறினார்கள்.

இந்த ஹதீஸில் அப்துல்லா இப்னு முஹம்மது அல்குத்தாமீ என்பவரும் இடம் பெறுகிறார். இவரும் சரியானவரல்ல என்று இப்னு அதீ அவர்களே கூறவும் செய்கிறார்கள்.

ஒருமுறை நபி(ஸல்) அவர்களிடம் மதீனாவிலிருந்து ஒரு கூட்டமும், ஹுதைல் பகுதியிலிருந்து ஒரு கூட்டமும் வந்தனர். 'இறைத்தூதர் அவர்களே! மக்களெல்லாம் வாகனத்தின் மீது ஏறி (ஹஜ் செய்யச் செல்லும் நிலையில் நாங்களோ மக்காவிற்கு நடந்தே செல்கின்றோம்' என்று கூறினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'நடந்து செல்பவருக்கு 30 ஹஜ் செய்த கூலி உண்டு' என்று கூறினார்கள்.

இதை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்பதாக தப்ரானீ அவர்கள் தனது அவ்ஸத்தில் பதிவு செய்துள்ளார்கள்.

இதில் இடம்பெறும் முஹம்மத் என்பவர் பொய்யர்; ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர் என்று ஹைதமீ அவர்கள் கூறுகிறார்கள். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

ஹஜ் செய்ய வாகனத்தில் செல்வதை விட, நடந்து செல்வதை நபி(ஸல்) அவர்கள் சிறப்பித்துக் கூறியதாக எந்த ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸும் இல்லை. மேலும் அதற்கு என தனிச்சிறப்பு இருந்திருந்தால், நபித்தோழர் பலர் ஹஜ் செய்துள்ளனர். அவர்கள் நடந்து செல்வதை தேர்ந்தெடுத்திருப்பார்கள். இப்படி சிறப்பு கருதி நபித்தோழர் எவரும் நடந்து சென்று ஹஜ் செய்ததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியையும் நாம் அறியவில்லை.

மேலும் நடந்து சென்று ஹஜ் செய்வதில் சிறப்பு உள்ளது என்று இருக்குமானால் இதை நபி(ஸல்) அவர்களும் செய்திருப் பார்கள். ஆனால் நபி(ஸல்) அவர்களோ வாகனத்தில் சென்று தான் ஹஜ் செய்துள்ளனர் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மூலம் அறியமுடிகிறது.

''நான் நபி(ஸல்) அவர்களின் ஒட்டகத்தில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து அரபாவிலிருந்து மினா வரை சென்றேன். ஜம்ரதுல் அகபாவில் கல்லெறியும் வரை அவர்கள் தல்பியா கூறிக் கொண்டேயிருந்தார்கள்'' என ஃபழ்லு இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ

நாங்கள் கடைசி ஹஜ்ஜின் போது நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். அப்போது பிலால்(ரலி), உஸாமா(ரலி) ஆகிய இருவல் ஒருவர் நபி(ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டார். மற்றொருவர் அவர்கள் மீது வெயில் படாமல் தனது ஆடையை உயர்த்திப் பிடித்துக் கொண்டார் என்று உம்முல் ஹுஸைன்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்

நான் அரபாவில் நபி(ஸல்) அவர்களின் பின்னே ஒட்டகத்தில் அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். அவர்களின் ஒட்டகம் அவர்களை குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்துவிட்டது. ஒரு கையால் அதை எடுத்தார்கள் என உஸாமா இப்னு ஸைத்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: நஸயீ

நபி(ஸல்) அவர்கள் மினாவில் ஹஜ் பெருநாள் தினத்தில் தமது அள்பா எனும் ஒட்டகத்தின் மீதமர்ந்து (குத்பா) உரை நிகழ்த்தியதை நான் பார்த்திருக்கிறேன் என ஹிர்மாஸ் இப்னு ஸியாத்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: அஹ்மத், அபூதாவூத்

வாகனத்தில் அமர்ந்து நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியை களை நிறைவேற்றியுள்ளனர் என்பது மட்டுமல்ல நபித்தோழர்களும் வாகனத்தில் சென்றே ஹஜ் செய்துள்ளனர்.

ஒரு மனிதர் இஹ்ராம் கட்டியிருக்கும்போது அவரது வாகனம் அவரைக் கீழே தள்ளியது. உடனே அவர் இறந்துவிட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் தண்ணீராலும், இலந்தை இலையாலும் அவரைக் குளிப்பாட்டுங்கள். அவரது இரு ஆடைகளில் அவரை கபனிடுங்கள். அவரது முகத்தையோ, தலைமுடியையோ மூடவேண்டாம். ஏனெனில் கியாமத் நாளில் தல்பியா கூறியவராக எழுப்பப்படுவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா

ஹஸ்அம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒட்டகையின் முதுகில் அமர இயலாத வயதுடையவராக இருக்கும்போது, அவருக்கு ஹஜ் எனும் அல்லாஹ்வின் கடமை ஏற்பட்டுவிட்டது என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'அவருக்காக நீ ஹஜ் செய்' என்று அவரிடம் கூறினார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, திர்மிதி

எனவே நடந்து சென்று ஹஜ் செய்தால் தனி நன்மையுண்டு என்பதாக வரும் மேற்கண்டவைகள் அறிவிப்பாளர் தொடரில் உள்ள குறைபாடுகளால் மட்டும் சரியானதாக இல்லை என்பதல்ல! ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் நிலைக்கும் மாற்றமாக உள்ளது.


3. விபச்சாரம் செய்தால்...!

'விபச்சாரம் செய்வது ஏழ்மையை ஏற்படுத்தும்' என்று நபி(ஸல்) கூறியதாக அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

முஸ்னதுஷ்ஷிஹாப் எனும் தனது நூலில் களாயீ அவர்கள் இதைப் பதிவு செய்துள்ளார். இந்த ஹதீஸில் இடம்பெறும் லைஸ் இப்னு அபீசுலைம் என்பவர் பலவீனமானவர். மேலும் மாளீ இப்னு முஹம்மது என்பவர் யாரென்றே அறியப்படாதவர்.

இமாம் சுயூத்தி அவர்களும் இதே ஹதீஸை தன் ஜாமிஇல் பதிவு செய்துவிட்டு இது பலவீனமானதே என்று உறுதிப் படுத்துகிறார்கள். பைஹகீ இமாம் அவர்களும் தனது நூலில் பதிவு செய்துவிட்டு, இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் மாளீ இப்னு முஹம்மது என்பவரை ஹதீஸ் கலையில் மறுக்கத் தக்கவர் என்று கூறுகிறார்கள்.

இதுபோல் இப்னு அபீஹாதம் அவர்கள் தனது இலல்' எனும் நூலில் இந்த ஹதீஸ் பற்றி ''என் தந்தை (அபீஹாதம்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், இது தவறான ஹதீஸ். இப்படி ஒரு ஹதீஸை நான் அறியவில்லை'' என்று குறிப்பிட்டார்கள் என பதிவு செய்துள்ளார்கள்.

விபச்சாரம் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். விபச்சாரம் செய்தால் ஆறு விளைவுகள் ஏற்படும். மூன்று இவ்வுலகத்திலும், மற்ற மூன்று மறுமையிலும் நிகழும். உலகத்தில் ஏற்படும் மூன்று நிலைகள் 1. சந்தோசம் போய்விடும், 2.ஏழ்மை ஏற்படும், 3. அபிவிருத்தி குறையும். மறுமையில் ஏற்படும் மூன்று நிலைகள் 1. இறைவனின் கோபத்தை ஏற்படுத்தும், 2. கேள்வி கணக்கு கடுமையாகும், 3. நிரந்தர வேதனையுண்டு என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹுதைபா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இதை இப்னு அதீ, அபூ நயீம் ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இதில் இடம்பெறும் அஹ்மஷ் என்பவர் மனன சக்தி குறைவானவர்; மறுக்கத்தக்கவர் என இப்னு அதீ அவர்கள் கூறுகிறார்கள். அஹ்மஷ் வழியாக வரும் இது அபூர்வமானதாகும். மேலும் இதில் வரும் மஸ்லமா என்பவர் பலவீனமானவர் என்று அபூநயீம் குறிப்பிடுகிறார்கள்.

'இட்டுக்கட்டியவைகள்' ( மவ்ளூஆத்) எனும் நூலில் இமாம் இப்னுல் ஜவ்ஸீ பதிவு செய்துள்ளார்கள். இந்த ஹதீஸுக்கு எவ்வித அடிப்படையும் இல்லை என இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள். இமாம் பைஹகீ அவர்கள் தனது ஷுஃபுல் ஈமானில் இதைப் பதிவு செய்துவிட்டு, 'இதில் இடம்பெறும் மஸ்லமா ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர்; அபூ அப்துர்ரஹ்மான் அல்கூபீ என்பவர் யாரென்றே அறியப்படாதவர்' என்று குறிப்பிடுகிறார்கள்.

விபச்சாரம் செய்வதை உங்களுக்கு எச்சரிக்கிறேன். விபச்சாரம் செய்வதினால் ஆறு விளைவுகள் உண்டு. மூன்று இவ்வுலகத்திலும் மூன்று மறுமையிலும் ஏற்படும். முக அழகு போய்விடுதல், உணவில் அபிவிருத்தி குறைதல், மரணம் சீக்கிரம் வருதல் இம்மூன்றும் உலகத்தில் வருபவையாகும். இறைவனின் கோபம், கேள்வி கணக்கு கடுமை அல்லாஹ் நாடினாலே தவிர நிரந்தர நரகம் ஆகிய மூன்றும் மறுமையில் நிகழ்பவையாகும். என்று நபி(ஸல்) கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இதுவும் இட்டுக்கட்டப்பட்டதே! இதில் இடம் பெறும் கஃபு இப்னு அம்ரு இப்னு ஜஃபர் என்பார் சரியானவரல்ல என கதீப் கூறுகிறார்கள். இதை இமாம் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது ' மவ்ளூஆத்' எனும் நூலிலும் குறிப்பிடுகிறார்கள்.

விபச்சாரம் செய்வதை எச்சரிக்கிறேன். அதனால் நான்கு விளைவுகள் ஏற்படும். 1.முக அழகு போய்விடும், 2.உணவு பஞ்சம் ஏற்படும், 3.இறைவனின் கோபம் ஏற்படும், 4. நிரந்தரமான நரகம் உண்டு. என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) கூறுகிறார்கள்.

இதை தப்ரானீ தனது அஸ்வத்திலும் இப்னு ஜவ்ஸீ அவர்கள்  மவ்ளூஆத்திலும் பதிவு செய்துள்ளனர். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் வழியாக அம்ரு இப்னு ஜமீஉ என்பவரைத் தவிர எவரும் அறிவிக்கவில்லை என தப்ரானீ கூறுகிறார்கள். இந்த அம்ரு இப்னு ஜமீஉ என்பவர் பெரும் பொய்யர் என இப்னுல் ஜவ்ஸீ கூறுகிறார்கள். தப்ரானியின் அவ்ஸத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸின் அறிவிப்பாளல் ஒருவரான அம்ரு இப்னு ஜமீஉ என்பவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர் என்று ஹைஸமீ தனது மஜ்மஉவில் கூறுகிறார்கள்.

பொதுவாக விபச்சாரம் செய்வது என்பது இஸ்லாத்தின் பார்வையில் கடும் குற்றம் தான். திருமணம் செய்யாதவர் விபச்சாரம் செய்தால் கசையடி கொடுக்க வேண்டும். திருமணம் செய்தவர் விபச்சாரம் செய்தால் கல்லால் எறிந்து கொல்லப்படவேண்டும் எனக் கூறப்படும் அளவுக்கு மாபெரும் கொடிய குற்றம் தான். எனினும் இதற்காக நபி(ஸல்) அவர்கள் கூறாத ஒன்றை கூறியதாக கூறப்படுவதையே பொய் என்கிறோம் என்பதை நினைவில் கொள்க!


4. குதிரைக் கறி உண்ணக்கூடாதா?

''குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகியவற்றின் இறைச்சியை உண்பது ஹலால் (அனுமதிக்கப்பட) இல்லை.''

இதை நபி(ஸல்) அவர்களிடமிருந்து தான் கேட்டதாக காலித் பின் வலீத் (ரலி) அறிவிக்கிறார்கள். இது அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, தஹாவீயின் ஷரஹுல் மஆனி, பைஹகீ, அஹ்மத், தப்ரானீ ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

'இதை அறிவிக்கும் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றிருக்கும் ஸாலிஹ் இப்னு யஹ்யா என்பவர் குறைபாடு டையவராக இருக்கிறார்' என இமாம் புகாரீ குறிப்பிடுகிறார்கள். தஹபீ, இப்னுஹஜர் ஆகியோரும் இவரை பலவீனமானவர்கள் பட்டியலில் சேர்க்கிறார்கள்.

இவர் பற்றிய அறிமுகம் ஏதும் கிடைக்கவில்லை. மேலும் இவரது தந்தை பற்றிய அறிமுகமும் கிடைக்கவில்லை. இவரது பாட்டனார் மிக்தாம் இப்னு மஹ்தீகர்பு என்பவரைத் தவிர. இவரோ, இவரது தந்தையோ அறியப்படாத நபர்களாக உள்ளனர் என மூஸா இப்னு ஹாரூன் என்பார் கூறுகிறார். இவர் தன் தந்தை யஹ்யா மூலமே தவிர வேறு எவர் மூலமும் ஹதீஸ்களை அறிவிப்பதில்லை என, மீஸானில் தஹபீ குறிப்பிடுகிறார்கள்.

தன் பாட்டனாரிடம் தானே கேட்டது போன்றும், தன் தந்தை தன் பாட்டனாரிடம் கேட்டு தனக்கு தன் தந்தை கூறியது போன்றும் இவர் வழியாக இந்த ஹதீஸ் அறிவிக்கப்படுகிறது. இப்படி அறிவிப்பாளர் வரிசையிலும் குளறுபடி உள்ளது.

மேலும் இந்த ஹதீஸை நபி(ஸல்) அவர்கள் கைபர் போர் சமயத்தில் கூறியதாக காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. ஆனால் இந்த நபித்தோழர் அவர்களோ கைபர் போர் சமயத்தில் முஸ்லிமாகவில்லை. மக்கா வெற்றி கொண்ட வருடத்தில் தான் முஸ்லிமானவர் என்பது குறிப் பிடத்தக்கது. இதை இப்னு ஹஜர் அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

மேலும் இது போன்ற ஒரு ஹதீஸை ஜாபிர்(ரலி) அவர்கள் வேறு கூறுகிறார்கள். காலித் (ரலி) அவர்கள் தான் கைபர் போர் சமயத்தில் முஸ்லிமாகவில்லை. ஆனால் ஜாபிர்(ரலி) அவர்கள் அப்படியில்லையே; எனவே ஜாபிர் (ரலி) அவர்களின் ஹதீஸை வைத்து காலித்(ரலி) அவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸை 'ஹஸன்' என்ற அந்தஸ்த்திற்கு உயர்த்தலாமே என்று சிலர் கூறுவர்.

ஆனால் ஜாபிர்(ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸும் பலவீனமானது தான். இதில் இடம் பெறும் இக்மா பின் அம்மார் என்பார், யஹ்யா இப்னு அபீகதீர் வழியாக அறிவிக்கும் எந்த ஹதீஸும் சரியானதல்ல. இதை யஹ்யா இப்னு ஸயீத் அல் குத்தான் கூறுகிறார்கள். யஹ்யா வழியாக இக்மா அறிவிக்கும் ஹதீஸ் 'இழ்திராப்' ஆகும் என புகாரீ கூறுகிறார்கள். எனவே ஜாபிர்(ரலி) அவர்கள் பெயரால் அறிவிக்கப்படும் ஹதீஸும் சரியானதல்ல என்பதால் அந்த ஹதீஸை வைத்துக் கொண்டு இந்த ஹதீஸை 'ஹஸன்' ஆக ஆக்க முடியாது.

மேலும் இந்த ஜாபிர்(ரலி) அவர்கள் இதே கருத்துக்கு மாற்றமாக வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸை அறிவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் மேற்கண்ட ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு மாற்றமாக உள்ளதாலும் இது பலவீனமான ஹதீஸாகும். ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் இதோ

கைபர் போன் போது நபி(ஸல்) அவர்கள் வீட்டுக் கழுதை (உண்ண) தடை செய்தார்கள். குதிரை இறைச்சியை (உண்ண) அனுமதித்தார்கள். அறிவிப்பவர்: ஜாபிர்(ரலி), நூல்கள்: புகாரீ, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் குதிரைக் கறியை உண்ணத் தந்தார்கள். கழுதையின் கறியை உண்ண தடை செய்தார்கள். நூல்: திர்மிதீ

நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் பயணம் செய்துள்ளோம். அப்போது நாங்கள் குதிரைக் கறியை உண்ணக் கூடியவர்களாகவும், அதன் பாலைக் குடிப்பவர்களாகவும் இருந்தோம். நூல்: தாரகுத்னீ

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் நாங்கள் மதீனாவில் இருந்த போது குதிரையை அறுப்போம். அதை உண்போம் என அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

குதிரைக் கறியை உண்ணலாம் என இந்த ஹதீஸ்கள் கூறுகின்றன. ஆனால் மேற்கண்ட ஹதீஸோ அதை ஹராம் எனக் கூறுகிறது. ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு மாற்றமாக இருப்பதாலும், இதன் அறிவிப்பாளர் வரிசை சரியில்லாததாலும் இது பலவீனமான ஹதீஸாகும் என்பதை நினைவில் கொள்க!

இந்தத் தவறான ஹதீஸை வைத்துத் தான் ஹனபீ மத்ஹபில் குதிரைக் கறி உண்ணலாகாது என்கின்றனர். ஒரு தவறான ஹதீஸை வைத்து நாம் அமல் செய்யலாகாது.


5. உலகத்தில் பற்றற்று வாழ்வது?

''உலகத்தில் பற்றற்று வாழ்வது உள்ளத்தையும், உடலையும் நலத்துடன் இருக்கச் செய்யும்.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை உகைலீ, இப்னு அதீ, தப்ரானீ ஆகியோர் தங்களின் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

இது பலவீனமான ஹதீஸாகும். இதில் நான்காவது அறிவிப்பாளராக இடம்பெறும். இஷ்அஸு இப்னுபுராசு என்பவர் பலவீனமான நபராகும். இவரது ஹதீஸ் ஏற்கப்படத்தக்கதல்ல என இமாம் புகாரீ கூறுகிறார்கள். 'ஹதீஸ் கலை மேதைகளால் கைவிடப்பட்டவர்' என இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் மூன்றாவது அறிவிப்பாளராக இடம்பெறும் அலீ இப்னு ஸைது என்ற இப்னு ஜத்ஆன் என்பவரும் பலவீனராவார்.

''உலகத்தை விரும்பி வாழ்வது, கவலையையும் கைசேதத்தையும் அதிகக்கும்.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக தாவூஸ் என்பார் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழரல்லர். இது முர்ஸலாகும். இதை இப்னு அபீ துன்யா என்பார் தன் நூலில் பதிவு செய்துள்ளார்.

இதில் இடம்பெறும் முஹம்மத் இப்னு முஸ்லிம் என்ற அறிவிப்பாளர் மனன சக்தி குறைபாடுடையவர் என்பதாலும் இது பலவீனமானதாகும்.

இதே ஹதீஸை இதே இப்னு அபீ துன்யா அவர்கள் வேறு ஒரு அறிவிப்பாளர் வழியாகவும் இதை பதிவு செய்துள்ளார்கள். அதில் இடம்பெறும் இப்ராஹீம் இப்னு அஸ்அஸு என்பவரும் மனன சக்தி குறைந்தவராவார்.

இதே ஹதீஸை கழாஇ அவர்கள் தனது நூலில் வேறு அறிவிப்பாளர் வரிசையுடன் பதிவு செய்துள்ளார்கள். ஆனாலும் அதிலும் பலவீனர்களே இடம்பெறுகின்றனர். அஹ்மத் இப்னு ஃபர்ஜு என்பவர் பலவீனமானவர்.

மேலும் பக்ரு இப்னு குனைஸ் என்பவரும் பலவீனர். இவரை பலவீனர் பட்டியலில் இமாம் தஹபீ குறிப்பிடுகிறார்கள். இவர் கைவிடப்பட்டவர் என தாரகுத்னீ அவர்கள் கூறுகிறார்கள்.

மேற்கண்ட ஹதீஸ்கள் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள கோளாறுகளினால் மட்டும் குறையுடையது என்று கூறிடவில்லை. அது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு மாற்றமாகவும் உள்ளது. திருமறைக்குர்ஆனும் இந்த பற்றற்ற வாழ்க்கையை ஆதக்கவில்லை.

இதுபோன்ற தவறான-பலவீனமான ஹதீஸ்களை வைத்து சிலர் துறவி வேஷம் போட்டுத் திரிகின்றனர். திருமணம் போன்ற அய சுன்னத்தை-நபிவழியைப் பின்பற்றத் தவறிவிடுகின்றனர். காடு களிலும், மலைகளிலும், குகைகளிலும் போய் தனிமையில் அமர்ந்து கொண்டு இறைவனை அடையப் போவதாகக் கூறி, பிறகு தங்களையே கடவுளாகக் கருதிக் கொண்டவர்களும் உண்டு. இப்படி பலர் வழிதவறிப் போகக் காரணம் இந்த பலவீனமான ஹதீஸ் தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

...துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது கடமையாக்கவில்லை.. (அல்குர்ஆன் 57:27)

நபி(ஸல்) அவர்களுடன் நாங்களும் சிறுபடையாக போருக்குச் சென்றோம். அப்போது தண்ணீரும், கீரைகளும் வளர்ந்திருக்கின்ற ஒரு குகை வழியாகச் செல்லும் போது நான் இவ்வுலகத் தொடர்புகளை விட்டு முற்றிலும் விலகி, அந்தக் குகையில் தங்கப் போகிறேன் எனத் தனக்குத்தானே ஒரு மனிதர் எண்ணிக் கொண்டு, அதற்காக நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், யூதர்களை போன்றோ, கிறித்தவர்களைப் போன்றோ (மனைவி, மக்களுடன் வாழாமல் குகைகளிலும், தேவாலயங்களிலும் தனித்து தங்கி வாழுமாறு) நான் அனுப்பி வைக்கப்படவில்லை. மாறாக தெளிவான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளேன் எனக் கூறி நபி(ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி மறுத்துவிட்டனர். (இங்கே ஹதீஸின் கருத்தே தரப் பட்டுள்ளது) இதை அபூஉமாமா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: அஹ்மத்

எங்களைத் திருமணம் செய்யும்படி ஏவியதுடன், திருமணம் செய்யாதிருப்பதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சத்தார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: இப்னுஹிப்பான்

நபி(ஸல்) அவர்களது மனைவிகளிடம் மூன்று பேர் வந்து, நபி(ஸல்) அவர்களின் வணக்க முறை பற்றிக் கேட்டு அறிந்ததும், 'இனி நான் தூங்காமல் வணக்கம் புரிவேன்' என ஒருவரும், 'நான் தொடர்ந்து நோன்பு வைப்பேன்' என ஒருவரும், நான் திருமணம் செய்ய மாட்டேன் என ஒருவரும் கூறினர். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் அம்மூவரையும் அழைத்து, நான் ஒரு நாள் நோன்பு வைத்து மறுநாள் விட்டு விடுகிறேன். தூங்கவும் செய்கிறேன். வணக்கமும் புரிகிறேன். திருமணமும் செய்துள்ளேன் என்று கூறி விட்டு, 'இவை என் வழிமுறை. இதைப் புறக்கணிப்பவன் என்னைச் சேர்ந்தவனல்ல' என்றும் கூறினார்கள். இதை அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

இங்கே நாம் எடுத்துக்காட்டியுள்ள வசனம் மற்றும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களுக்கு மாற்றமாகவே ஆரம்பத்தில் உள்ள பலவீனமான ஹதீஸ்கள் உள்ளன.
திருமணம் செய்தால், நாம் மனைவி-மக்கள் என்ற குடும்ப வட்டத்தில் சிக்கி இறைவனை மறந்துவிடவேண்டி வரும் என்று கூறி வாழ்வோர் தவறான வாழ்க்கையே வாழ்கின்றனர்.

உலக வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளும் களமாகும் என்பதையே ஒரு மூமின் புரிந்து கொண்டால், இதுபோன்ற தவறான ஹதீஸ்கள் கூறப்பட்டதும், இது தவறானவை என்று உடனே விளங்கிவிடும்.


6. தொழுகையில் கையை உயர்த்தலாமா?

''தொழுகையில் தன் இருகைகளையும் ஒருவர் உயர்த்தினால் அவருக்குத் தொழுகையே கிடையாது. (அதாவது அவரது தொழுகை வீணாகிவிடும்.)''

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதை இப்னு தாஹிர் அவர்கள் தனது, 'தத்கிரத்துல் மவ்ளுஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இந்தச் செய்தியை அறிவிப்பவர்களில் ஒருவராக இடம்பெறும் 'மஃமூன் இப்னு அஹ்மத் அல்ஹர்வீ என்பவர் ஹதீஸை இட்டுக் கட்டக்கூடிய மாபெரும் பொய்யர்' என்று இப்னு தாஹிர் அவர்களே குறிப்பிடவும் செய்கிறார்கள்.

மேலும் பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் மாற்றமாகவும் இது உள்ளது.

''நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நிற்கும்போது தனது இரண்டு தோள்புஜங்கள் வரை இரு கைகளையும் உயர்த்துவார்கள். ருகூவுக்கு தக்பீர் கூறும் போதும் இதே போல் செய்வார்கள். ருகூவிலிருந்து எழும்போதும் இவ்வாறு செய்வார்கள்'' என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

தொழுகையில் இருக்கும்போதே ருகூவிற்கு முன்பும் பின்பும் கைகளை உயர்த்தவேண்டும் என்று ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ் அறிவிக்கிறது. ஆனால் மேலே நாம் குறிப்பிட்ட செய்தியோ, இதற்கு மாற்றமாக உள்ளது. இதிலிருந்து இது இட்டுக்கப்பட்ட ஒன்று தான் என்பதைப் புரியலாம்.


7. கோழி ஆடாகுமா?

''கோழி எனது சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்குரிய ஆடாகும். ஜும்ஆ எனது சமுதாயத்தில் உள்ள ஏழைகளுக்குரிய ஹஜ்ஜாகும்.''

இந்த ஹதீஸை இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக இப்னு ஹிப்பானில் உள்ளது. இதைப் பதிவு செய்துள்ள இப்னு ஹிப்பான் அவர்களே, ''எந்த அடிப்படையும் இல்லாத மோசமானது இது மேலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் வரும் ஹிஷாம் இப்னு உபைதுல்லா என்பவர் ஆதாரமாக கொள்ளத் தக்கவர் அல்ல'' எனக் கூறுகிறார்கள்.

'இந்த ஹதீஸ் பொய்யானது. இதில் இடம்பெறும் மஹ்மஷ் என்ற அறிவிப்பாளர் ஹதீஸை இட்டுக்கட்டுபவர்' என தாரகுத்னீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். இந்த செய்திகளை  மவ்ளூஆத் எனும் தனது நூலில் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

ஆடு, மாடு, ஒட்டகம் இவைகளை குர்பானி கொடுக்க அனுமதி உள்ளது. ஒரு ஏழை தனக்கு ஆடு வாங்க வசதி இல்லை என்பதால் ஹஜ் பெருநாள் அன்று ஒரு கோழி வாங்கி அறுத்தால் ஆட்டை அறுத்து குர்பானி கொடுத்த நன்மை கிடைக்குமா? கிடைக்கும் என்பதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கிறது. இப்படி ஒரு தவறான கருத்தைத் தரும் செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறி இருப்பார்களா? எனவே இந்த ஹதீஸ் இட்டுக்கப்பட்ட ஒன்றே!


8. ஜும்ஆ ஹஜ்ஜாகுமா?

''ஜும்ஆ ஏழைகளுக்குரிய ஹஜ்ஜாகும்.''
இதை இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிப்பதாக இப்னு அஸாகிர், களாயீ, இப்னுல் ஸன்ஜவியா, ஹாஸ் இப்னு அபீ உஸாமா ஆகியோர் கூறுகிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் ஈஸா இப்னு இப்ராஹிமுல் ஹாஷிம் என்பவரும், முகாதில் என்பவரும் பலவீனமானவர்கள் என முறையே ஹாபிழ் இராகி அவர்களும், இமாம் ஸஹாவீ அவர்களும் கூறுகிறார்கள்.

மேலும் இமாம் புகாரீ, இமாம் நஸயீ ஆகியோரும் ஈஸா இப்னு இப்ராஹிம் என்பவரைப் பற்றி கூறும்போது 'ஹதீஸ் கலையில் ஏற்றுக் கொள்ளப்படத் தகாதவர்' என்று கூறுகிறார்கள். இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என இமாம் ஸஆனீ அவர்கள் தனது 'அல் அஹாதீஸில்  மவ்ளூஆத்' நூலில் இதைப் பதிவு செய்துள்ளார்கள்.

ஜும்ஆ என்பது ஏழை, பணக்காரன் என வித்தியாசம் இன்றி அனைவர் மீதும் உள்ள கடமையாகும். இதை 62:9 வசனம் அறிவிக்கிறது.

ஆனால் ஹஜ்ஜோ வசதியானவர்கள் மீது மட்டுமே கடமை என்பதை 3:97 வசனம் அறிவிக்கிறது. இந்த ஹதீஸில் உள்ள வாசகம் ஏழைகள் தாங்களும் ஹஜ் செய்ய வேண்டும் என்று எண்ணுவதை, முயற்சிப்பதை தடை செய்கிறது. இதுபோல் மக்காவில் ஹஜ் செய்ய வந்த நமக்கு ஜும்ஆ கடமை இல்லை. ஜும்ஆ தான் ஏழைகளுக்குரிய ஹஜ்தானே! அந்த நன்மையை அவர்களே அடையட்டும். நாம் வேறு ஏன் ஜும்ஆ தொழ வேண்டும்? என்று ஹஜ் செய்து வந்துள்ள பணக்காரர்கள் எண்ணவும் காரணமாகிவிடுகிறது. இப்படி முன்னுக்குப் பின் முரணான வகையில் உள்ள ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கமாட்டார்கள். இது யூதர்களின் கைவரிசையால் ஹதீஸ் என்ற பெயரால் இட்டுக்கட்டப்பட்டது என்பதே தெளிவு.

'அல்ஜும்ஆ ஹஜ்ஜுல் புகராஉ (ஜும்ஆ ஏழைகளின் ஹஜ்)' என்ற இந்த ஹதீஸை ஷாபி மத்ஹபைப் பின்பற்றுவோர் தொழும் பள்ளியில் ஜும்ஆ அன்று இமாம் மிம்பரில் ஏறியதும் பள்ளியில் முஅத்தின் (மோதினார்) எழுந்து கைத்தடியை பிடித்த வண்ணம் கூறுவார். பின்பு அந்த கைத்தடியை இமாமிடம் தர, அதன் பின்பே அவர் குத்பா நிகழ்த்துவார்.

இதில் வேடிக்கை என்னவென்றால் இதை அபூஹுரைரா(ரலி) அறிவிப்பதாகவும், இது புகாரீ, முஸ்லிமில் உள்ளதாகவும் கூறுவார். இது பச்சைப் பொய்யாகும்.

மேற்கண்ட இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸையே ஷாபி மத்ஹபினர் கூறிச் செய்கின்றனர். 'இப்படி இட்டுக்கட்டப்பட்ட பலவீனமான ஹதீஸ்கள் தான் மக்களிடம் சட்டமாக்கப்பட்டுள்ளன' என்பதை மக்கள் உணர்ந்து ஸஹீஹான ஹதீஸ்படி நடக்க முன் வர வேண்டும்.


9. மறைவுறுப்பை பார்த்தால்...!

''உங்களில் ஒருவர் தன் மனைவியிடமோ, அடிமைப் பெண்ணிடமோ உடலுறவு கொண்டால் அவளின் மறைவுறுப்பைப் பார்க்கவேண்டாம். ஏனெனில் அப்படிப் பார்ப்பது (கண்ணை) குருடாக்கிவிடும்.''

இதை இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக இப்னு அதீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். அந்த ஹதீஸை ' மவ்ளூஆத்' (இட்டுக்கட்டப்பட்டவைகள்) எனும் தமது நூலில் இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவராக இடம் பெறும் பகிய்யா என்பவர் பொய்யர்களில் ஒருவர். மேலும் ஒருவரிடம் கேட்காமலேயே அவரிடம் கேட்டதாக அறிவிப்பவர் என இப்னு ஹிப்பான்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

உடலுறவு கொள்ளும் ஒருவர் தன் மனைவியின் மறைவுறுப்பை பார்க்காமல் இருக்க இயலாது. அப்படிப் பார்த்தால் அது கண்ணை குருடாக்கிவிடும் என்று கூறுவதைப் பார்த்தால் ஆண்களில் 99% பேர் குருடர்களாகத் தான் ஆகி இருக்க வேண்டும். மேலும் இன்றைய மருத்துவர்கள் இஸ்லாத்தைக் கேலிக்குரியதாகத் தான் பார்ப்பார்கள். எத்தனையோ டாக்டர்கள், பெண் மருத்துவர்கள், பிரசவம் பார்க்கும்போது ஒரு பெண்ணின் மறைவுறுப்பை பார்க்கவே செய்வார்கள். இவர்களுக்கெல்லாம் கண் குருடாகி விட்டதா? தவறான கருத்தைப் பிரதிபலிக்கும் எந்த செய்தியையும் நபி(ஸல்) அவர்கள் கூறவே மாட்டார்கள். எனவே அறிவிப்பாளர் வரிசையில் மட்டும் இது கோளாறு உடையதல்ல. அறிவுப்பூர்வமாகவும் கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஹதீஸேயாகும்.

மனைவியின் மறைவுறுப்பைப் பார்க்கக்கூடாது என்ற இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ், பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் முரண்படுகிறது.

நானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளிப்போம். எனக்கு (கொஞ்சம் தண்ணீர்) வையுங்கள். எனக்கு (கொஞ்சம் தண்ணீர்) வையுங்கள் என்று நான் சொல்லும் அளவுக்கு நபி(ஸல்) அவர்கள் என்னிடம் போட்டி போடுவார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

கணவனும் மனைவியும் ஒரே இடத்தில், ஒரே பாத்திரத்தில் இருந்து இருவரும் சேர்ந்து தண்ணீர் அள்ளி குளிக்கும்போது ஒருவருக்கொருவர் தங்களின் மறைவுப் பகுதியைப் பார்க்க வேண்டியதே ஏற்படும். அப்படிப் பார்த்த நபி(ஸல்) அவர்களுக்கோ, ஆயிஷா(ரலி) அவர்களுக்கோ கண்ணில் குறை ஏதும் ஏற்படவில்லை. மேலும் இந்த ஹதீஸையே ஆயிஷா(ரலி) அவர்கள் மறைவுறுப்பை பார்க்கலாம் என்பதற்கு ஆதாரமாகக் கொண்டுள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவம் தெளிவுபடுத்துகிறது.

ஒருவர் தன் மனைவியின் மறைவுறுப்பைப் பார்க்கலாமா? என நான் அதாஉ அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இதே விஷயத்தை நானும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்டபோது அவர்கள், தானும் நபி(ஸல்) அவர்களும் ஒரே பாத்திரத்தில் குளித்த ஹதீஸை கூறிவிட்டு, 'இந்த ஹதீஸே ஒரு பெண் தன் கணவனின் மறைவுறுப்பைப் பார்ப்பதும், கணவன் மனைவியின் மறைவுறுப்பைக் காண்பதும் கூடும் என்பதற்கு ஆதாரமாகும்' என்று ஆயிஷா(ரலி) கூறியதாக அதாஉ அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: இப்னு ஹிப்பான்

எனவே மறைவுறுப்பைப் பார்ப்பதால் கண் குருடாகிவிடும் என்றுள்ள ஹதீஸ் பொய்யான ஹதீஸாகும்.


10. தலைப்பாகையுடன் தொழுதால்...!

''தலைப்பாகை அணிந்து ஒரு (ரக்அத்) தொழுவது, தலைப்பாகை அணியாமல் 25 (ரக்அத்) தொழுவதற்குப் பகரமாகும். தலைப்பாகை அணிந்து ஒரு ஜும்ஆ தொழுவது, தலைப்பாகை அணியாமல் 70 ஜும்ஆ தொழுவதற்குப் பகரமாகும். மலக்குகள் ஜும்ஆவில் தலைப்பாகை அணிந்தே கலந்து கொள்வார்கள். அன்று தலைப்பாகை அணிந்து கொள்பவருக்கு சூரியன் மறையும் வரை துஆச் செய்வார்கள்.''

தலைப்பாகை அணிந்திருந்த அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களிடம் நான் சென்றேன். அது சமயம் அவர்கள் என்னிடம், மகனே! தலைப்பாகை அணிந்து கொள்வதை விரும்பிக் கொள். மகனே! தலைப்பாகை அணிந்து கொள்! நீ கண்ணியம் பெறுவாய்! உயர்வு அடைவாய்; மதிப்பு பெறுவாய் என்று கூறிவிட்டு, மேற்கண்ட செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும் கூறினார்கள்.

இதை அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களின் மகன் ஸாலிம் எனக்கு அறிவித்தார் என மஹ்தீ இப்னு மைமூன் அறிவிக்கின்றார். இதை இப்னு நஜ்ஜார் அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸ் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் 'லிசானுல் மீஸான்' எனும் தமது நூலில் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என்றும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள சிலர் யாரென்றே அறியப்படாதவர்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள். மேலும் இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்களும் இதை இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என அறிவிக்கின்றார்கள்.

''தலைப்பாகை அணிந்து இரண்டு ரக்அத் தொழுவது, தலைப்பாகை இல்லாமல் 70 ரக்அத் தொழுவதை விட சிறந்தது.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இந்த ஹதீஸை இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்கள் தமது 'அல்ஜாமிஉஸ் ஸகீர்' எனும் நூலில் கொண்டு வந்து 'இது இட்டுக்கட்டப்பட்டது' என அடையாளம் காட்டுகிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் தாக் இப்னு அப்துற்றஹ்மான் என்பவர் சரியானவர் அல்ல என இமாம் நஸயீ (ரஹ்) அவர்கள் கூறியதாக தஹபீ(ரஹ்) அவர்கள் தனது 'லுஅபாஃ' எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹதீஸ் சரியல்ல என இமாம் ஸஹாவீ(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

''தலைப்பாகை அணிந்து தொழுவது, 10 ஆயிரம் நன்மைகள் செய்வதற்குப் பகரமாகும்.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். அதையும் சுயூத்தி(ரஹ்) அவர்கள் தனது 'அஹாதீதில்  மவ்ளூஆத்' எனும் நூலில் கொண்டு வந்து இட்டுக்கட்டப்பட்டது என அடையாளம் காட்டுகிறார்கள். இமாம் ஸஹாவீ, இமாம் மனூஃபீ, இமாம் இப்னு ஹஜர் ஆகியோரும் இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்றே குறிப்பிடுகின்றனர்.
மேற்கண்ட ஹதீஸ்களின் கருத்தும் நன்கு சிந்தித்தால் தவறு என்பது விளங்கும். தலைப்பாகை, தொப்பி இல்லாமல் பல சமயம் நபி(ஸல்) அவர்கள் தொழுதுள்ளதற்கு நிறைய ஹதீஸ்கள் உள்ளன. தலைப்பாகை அணிந்து தொழுவதால் அதிக நன்மை கிடைக்கும் என்றிருந்தால் நபி(ஸல்) அவர்கள் எப்போதும் தலைப்பாகை அணிந்தே தொழுதிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் தலையைத் திறந்த நிலையில் தொழுததில் இருந்தே இந்த செய்திகளை யாரோ இட்டுக்கட்டியிருக்கிறார்கள் என்பது தெளிவாகும்.

தலையைத் திறந்த நிலையில் தொழுவது நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே உள்ள தனிச்சலுகை என்று கூட சிலர் வாதிடலாம். ஆனால் நபித்தோழர்கள் பலர் தலையை திறந்த நிலையில் தொழுததாக ஹதீஸ்கள் உள்ளனவே. இந்த ஹதீஸ்கள் உண்மை என்றிருந்தால் ஹதீஸ்களை அப்படியே பின்பற்றி வாழ்ந்த ஸஹாபிகள் தலைப்பாகை அணியாமல் தொழுதது மூலம் சுன்னத்திற்கு மாற்றம் செய்திருப்பார்களா? எனவே மேற்கண்ட ஹதீஸ்களும் இட்டுக்கட்டப்பட்டவைகளே!


11. செய்தி கூறும் போது தும்மலாமா?

''ஒருவன் ஒரு செய்தியைச் சொல்லும்போது (அவனோ அல்லது வேறு யாரோ) தும்மினால் அச்செய்தி உண்மையாகும்.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இச்செய்தியை அபூயஃலா, தப்ரானீ ஆகியோர் பதிவு செய்துள்ளனர். இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரலி) அவர்கள் தனது  மவ்ளூஆத் என்ற நூலில் இதைக் கொண்டு வந்து இட்டுக்கட்டப்பட்டது என்று அடையாளம் காட்டுகிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஆவியா என்பவர் முற்றிலும் பலவீனமானவர் என இப்னுமுயீன், அபூஹாதம், நஸயீ ஆகியோர் அறிவிக்கின்றார்கள். பைஹகீ அவர்கள் தனது நூலில் பதிவு செய்துவிட்டு 'ஏற்றுக் கொள்ளப் படத்தக்கதல்ல' என்றும் கூறுகிறார்கள்.

எந்தப் பேச்சின் போது தும்மப்படுமோ அந்தப் பேச்சே மிக உண்மையானது.

இச்செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள். தப்ரானீ அவர்கள் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள். இந்த ஹதீஸை ஹாபிழ் ஹைதமீ அவர்கள் தனது நூலில் பதிவு செய்து, 'தவறான ஹதீஸ்' என குறிப்பிடுகிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் உமாரா இப்னு ஸாதான் என்பவர், தாபித் என்பவன் வழியாக அனஸ்(ரலி) கூறியதாக ஏற்றுக் கொள்ளத்தகாத நிறைய ஹதீஸை அறிவித்துள்ளார் என இமாம் அஹ்மத்(ரஹ்) கூறுகிறார்கள். இந்த ஹதீஸும் தாபித் வழியாக உமாரா அறிவிப்பதாகும்.

மேற்கண்ட இரண்டு ஹதீஸ்களும் உண்மையானது தான் என ஒருவன் சொன்னால் நாம் இந்நூலில் எடுத்துக்காட்டும் போலி ஹதீஸ்களும் சரி, இன்னும் பல எண்ணற்ற போலி ஹதீஸ்களும் சரி அனைத்தும் சொல்லப்படும் போது, ஒருவன் தும்மிவிட்டால் அவைகளும் நல்லதாகிவிடும். கொலை செய்த ஒருவன் நான் கொலையாளி அல்ல எனச் சொல்லும் போது எவரேனும் தும்மிவிட்டால் அவன் கொலையாளி இல்லை என்று சொல்ல முடியுமா? இப்படி ஒவ்வொன்றாக யோசித்துப் பாருங்கள். என்ன நிலை ஏற்படும்? இது போன்ற தவறான கருத்தைப் பிரதிபலிக்கும் ஒன்றை நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பார்களா?

தும்மினால் செய்யப்போகும் காரியம், நினைக்கும் காரியம் நடக்காது என்று முஸ்லிமல்லாதவர்கள் சொல்வார்கள். அவர்களுக்கு மாற்றமாக நாம் எதையாவது சொல்ல வேண்டும் என்று எண்ணி மேற்கண்ட விஷயத்தை இட்டுக்கட்டி விட்டார்கள் போல் தெரிகிறது.


12. பெண்ணின் பேச்சைக் கேட்கலாமா?

''பெண்களுக்கு கட்டுப்பட்டு (அவர்களது பேச்சைக் கேட்டு) நடப்பது கைசேதத்திற்குரியதாகும்.''

இது ஸைத் இப்னு ஸாபித்(ரலி) அவர்கள் மூலம் அறிவிக்கப் படும் ஹதீஸாகும். இதை இப்னு அதி அவர்கள் தன் நூலில் பதிவு செய்துள்ளார். இந்த ஹதீஸில் இடம்பெறும் 'அன்பஸா இப்னு அப்துர்ரஹ்மான்' என்பவர் சரியானவரல்ல என்பதால் அது பலவீனமான ஹதீஸாகும்.

இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டி கூறுபவர் என இமாம் அபூஹாதம் கூறுகிறார்கள்.

'இது சரியான ஹதீஸ் அல்ல. இந்த அன்பஸா என்பவரும் சரியானவரல்ல' என்று இந்த ஹதீஸை பதிவு செய்துள்ள இப்னு அதீயே கூறுவதாக இமாம் இப்னுல் ஜவ்ஸீ தன் ' மவ்ளூஆத்' எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இதேபோல் ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுவதாக ஒரு ஹதீஸை உகைலீ, இப்னு அதீ, இப்னு அஸாகீர் ஆகியோர் தங்கள் நூலில் பதிவு செய்துள்ளனர்.

இந்த ஹதீஸும் கூட பலவீனமானது தான். காரணம், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் முஹம்மது இப்னு சுலைமான் இப்னு அபூகரீமா என்பவர் தான்.

இவருக்கு முந்தைய அறிவிப்பாளராக இடம்பெறும் ஹிஸாம் இப்னு உர்வா மூலம் கூறும் இவர், சில ஹதீஸ்கள் தவறானதாக இருக்கும். 'அதுபோன்ற அடிப்படையற்ற ஹதீஸ் தான் இது' என்று உகைலீ அவர்கள் கூறுகிறார்கள்.

ஹிஸாம் மூலம் இவர் அறிவிக்கும் இந்த ஹதீஸ் பலவீனமானதே! இதே ஹதீஸை ஹிஷாம் மூலம் காலித் இப்னு வலீத் அல்மக்ஸுமீ என்பவரும் அறிவிக்கிறார். இவர் மேற்கூறிய முஹம்மது இப்னு சுலைமான் இப்னு அபூகமாவை விட மிகவும் பலவீனமானவர் என்று இப்னு அதீ கூறுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்கு முதன் முதலாக வஹீ வந்தபோது, திடுக்குற்றவர்களாக, பயந்தவர்களாக, தமது வீட்டிற்கு வந்து, அன்னை கதீஜா(ரலி) அவர்களிடம் வந்து நடந்த செய்திகளைக் கூறுகிறார்கள். உடனே கதீஜா(ரலி) அவர்கள் வரகா இப்னு நவ்பல்(ரலி) அவர்களிடம் அழைத்துச் சென்று நடந்தவற்றைக் கூறினார்கள். அப்போது வரகா இப்னு நவ்பல்(ரலி) அவர்கள் ''நபி(ஸல்) அவர்கள் ஒரு இறைத்தூதர்'' என்ற செய்தியை கூறினார்கள். இது ஆயிஷா(ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரீயில் உள்ளது. எனவே பெண்களின் பேச்சைக் கேட்டு நடக்கலாம் என்பதற்கு இது ஆதாரப்பூர்வமாக உள்ளது.


13. பெண்ணுக்கு மாறு செய்வது?

''பெண்களுக்கு மாறு செய்யுங்கள். அவர்களுக்கு மாறு செய்வதில் பரக்கத் உண்டு. பெண்களிடம் ஆலோசனை செய்யுங்கள். அதே சமயம் (அவர்களின் ஆலோசனைக்கு) மாறு செய்யுங்கள்''

என்று உமர்(ரலி) அவர்கள் கூறுவதாக ஒரு செய்தியும் இடம் பெறுகின்றது. இந்தச் செய்தியும் கூட சரியானதல்ல இதில் இடம்பெறும் ஹப்ஸ் இப்னு உதுமான் இப்னு உபைதுல்லா என்பவர் யாரென்றே அறியப்படாதவர். மேலும் அபூ உகைல் என்ற யஹ்யா இப்னு முத்தவக்கில் அல் உமரீ என்பவரும் பலவீனமானவராவார்.

பெண்களும் ஆலோசனை பெறப்படத்தக்கவர்களே! அவர்களிடம் ஆலோசித்து காரியம் ஆற்றுவதில் எவ்விதத் தவறுமில்லை.

ஒவ்வொரு பெண்களும் (அவர்களின் குடும்பத்திற்கு) பொறுப்பானவர்கள். அவர்களின் பொறுப்பு பற்றியும் விசாரிக்கப் படும் என்பது நபிமொழி (நூல்:புகாரீ). 

இந்த ஹதீஸிலிருந்து பெண்களுக்கு பொறுப்புண்டு என்பதைப் புரியலாம். அவர்கள் பொறுப்புடையவர்கள் என்பதிலிருந்தே ஆலோசனை செய்யப்படத் தகுதியுள்ளவர்களே என்பது தெளிவாகும். இந்த அடிப்படையிலும் கூட பெண்கள் பேச்சை கேட்கக்கூடாது என்பதும் அவர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்பதும் தவறு என்பதை விளங்கலாம். இதன் மூலமும் மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது எனப் புரியலாம்.


14. தலாக் கூறவே கூடாது?

''நீங்கள் திருமணம் செய்யுங்கள். தலாக் (விவாகரத்து) சொல்லாதீர்கள். ஏனென்றால் தலாக் சொல்வது மூலம் அர்ஷ் நடுங்குகிறது.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அலீ(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் அம்ரு இப்னு ஜமீஉ என்பவன் பெரும் பொய்யன்; ஏற்றுக் கொள்ளத்தகாத பல ஹதீஸ்களையும் அறிவிப்பவன் என கதீப்(ரஹ்) தெரிவிக்கிறார்கள். இதையே இமாம் சுயூத்தி(ரஹ்) அவர்களும் உறுதிப்படுத்துகிறார்கள்.

இங்கே இடம்பெறும் மற்றொருவரான ஜுவைபர் என்பவரும் முற்றிலும் பலவீனமானவர். இப்னு ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் 'இச்செய்தி சரியானதல்ல' என்று கூறுகிறார்கள். ஸஆனி(ரஹ்) அவர்கள் தனது ' மவ்ளூஆத்' எனும் நூலில் இதைப் பதிவு செய்து, இட்டுக்கட்டப்பட்டது என அடையாளம் காட்டுகிறார்கள்.

மேலும் இந்தச் செய்தி பல சரியான ஹதீஸ்களுக்கும் குர்ஆன் வசனங்களுக்கும் முரண்படுகிறது. திருமறையின் 2:227, 232, 236, 237, 241, 33:49, 38:6, 65:1 ஆகிய வசனங்கள் தலாக் சம்பந்தமான சட்டங்களை சொல்வதில் இருந்தே, தலாக் விடவும் செய்யலாம் என்பது தெளிவாகும்.

இந்தச் செய்தி சில நபித்தோழர்களின் வாழ்க்கையையும் தவறு என்று சொல்கிறது. ஆம்! நபி(ஸல்) அவர்களால் வளர்க்கப்பட்ட ஸைத்(ரலி) அவர்கள், ஸைனப்(ரலி) அவர்களை திருமணம் செய்திருந்து, பின்னர் தலாக் விட்டுவிட்டார்கள் என்ற சம்பவம் உள்ளது. மேலும் சில நபித்தோழர்கள் தங்கள் மனைவி தங்களுக்கு உடன்பட்டு வராததால் விவாகரத்து செய்துள்ளனர். இது உண்மை என்று இருக்குமானால் நபித்தோழர்கள் தலாக் சொல்லி இருப்பார்களா?

மேலும் தனக்குப் பிடிக்காத அல்லது தன்னைப் பிடிக்காத கணவனிடமிருந்து தன்னை உயிருடன் தற்காத்துக் கொள்ள இந்த தலாக் உதவி செய்கிறது. பெண்ணுரிமையை இஸ்லாம் வழங்குவதைக் கண்ட எரிச்சலுற்ற சில கயவர்கள் இஸ்லாமும் பெண்களை அடிமைப்படுத்தவே செய்கிறது. அதனால் தான் விவாகரத்தை கூடாது என்கிறது என்று சொல்வதற்காகவும் கூட இந்தச் செய்தியை இட்டுக்கட்டியிருக்க வேண்டும்.


15. இரண்டா? நான்கா?

''நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவிற்கு முன் நான்கு ரக்அத்தும், அதன் பின் நான்கு ரக்அத்தும், அந்த ரக்அத்துகளுக்கிடையே பிரிக்காமல் (ஒரே ஸலாமுடன்) தொழுவார்கள்.''

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறியதாக இது இப்னுமாஜா வில் இடம்பெற்றுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் தொடரில் இடம்பெறும் முபஷ்ஷிர் இப்னு பைது என்பவர் இட்டுக்கட்டக் கூடியவர். மேலும் ஹஜ்ஜாஜ் இப்னு அர்தாத், அதிய்யா அல்கூபீ ஆகிய இருவரும் பலவீனர்கள் என லைலஈ அவர்கள் குறிப்பிடு கிறார்கள். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

'இது தவறான ஹதீஸ்' என நவவீ அவர்களும் குறிப்பிடுகிறார்கள். மேலும் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரண்படவும் செய்கிறது என்பதாலும் இது பலவீனமான ஹதீஸாகும்.

பொதுவாக ஜும்ஆவிற்கு பள்ளிக்கு வருபவர் இமாம் குத்பா உரை நிகழ்த்திக் கொண்டிருந்தாலும் இரண்டு ரக்அத் தொழ வேண்டும். ஜும்ஆ முடிந்ததும் பள்ளியில் இருந்தால் நான்கு ரக்அத்தும் வீட்டிற்கு உடனே சென்றுவிட்டால் அங்கே இரண்டு ரக்அத்தும் தொழ வேண்டும். இதைப் பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

ஜும்ஆ தினத்தில் நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் பள்ளிக்குள் நுழைந்தார். நீர் தொழுது விட்டீரா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்றார். இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். இதை ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

''இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது எவரேனும் வந்தால் சுருக்கமாக அவர் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும்'' என்று நபி(ஸல்) கூறியதாக ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

''உங்களில் ஒருவர் ஜும்ஆ தொழுதால் அதன்பின் அவர் நான்கு ரக்அத்கள் தொழட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ, அபூதாவூத், இப்னுமாஜா

நபி(ஸல்) அவர்கள் ஜும்ஆவிற்கு பிறகு வீட்டிற்கு சென்று இரண்டு ரக்அத்கள் தொழுவார்கள் என இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அறிவிக்கும் செயலுக்கு மாற்றமாகவும் மேலே கூறிய இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களின் ஹதீஸ்(?) அமைந்துள்ளதைக் காணலாம்.


16. உண்பதற்கு முன்பும் பின்பும் ஓதுதல்?

''உணவில் பரக்கத் (அபிவிருத்தி) என்பது, அதற்கு முன் ஒ;ச் செய்வதில் இருக்கிறது '' என தவ்ராத்தில் உள்ளது. இதை நான் நபி(ஸல்) அவர்களிடம் கூறினேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், ''உண்பதில் பரக்கத், அதற்கு முன்பும் பின்பும் ஒளுச் செய்வதில் உள்ளது '' என்று கூறினார்கள்.

இதை ஸல்மான்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக தயாலிஸி அவர்கள் தனது முஸ்னத்தில் பதிவு செய்துள்ளனர். அபூதாவூத், திர்மிதீ, ஹாகிம், அஹ்மத் ஆகிய நூல்களிலும் இது உள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் கைஸ் இப்னு ரபீஉ என்பவர் பலவீனமானவர் என்று அபூதாவூத் கூறுகின்றார்கள். இவர் வழியாகவே தவிர (வேறு வழிகளில்) இந்த ஹதீஸை நாம் அறியவில்லை. இவர் ஹதீஸ் துறையில் பலவீனப் படுத்தப்பட்ட வராவார் என்று திர்மிதீ அவர்கள் கூறுகிறார்கள். தஹபீ, ஹாகிம் ஆகியோரும் இக்கருத்தையே குறிப்பிடுகிறார்கள். முன்திரீ அவர்கள் இவரை ''நல்லவர்'' என்று கூறினாலும், ''இவர் மனனசக்தி குறைந்தவர் தான்'' என்று குறிப்பிடத் தவறவில்லை.

சுவைத் இப்னு நுஃமான் (ரலி) அவர்கள் கைபர் யுத்தம் நடந்த வருடம் நபி(ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றார்கள். கைபரை அடுத்துள்ள ஸஹ்பாஃ என்ற இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர் பயண உணவைக் கொண்டு வருமாறு கூறினார்கள். அப்போது, மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. அதைக் குழைக்கும்படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி(ஸல்) அவர்களும், நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃரிபுத் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். புதிதாக ஒளுச் செய்யாமலேயே தொழுதார்கள். நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸ், எதையும் சாப்பிட்ட பின்பு ஒளூச் செய்யத் தேவையில்லை என்று அறிவிக்கின்றன. ஆனால் நாம் மேலே குறிப்பிட்டுள்ள செய்தியோ, சாப்பிட்ட பின்பு ஒளூச் செய்ய வேண்டும் என்று கூறுகிறது. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரணாக உள்ளதில் இருந்தே அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகத் தான் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வரலாம்.

ஒட்டகத்தின் இறைச்சியை சாப்பிட்டால் ஒளு செய்ய வேண்டுமா? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது, அதற்காக ஒளுச் செய்யுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள். ஆட்டு இறைச்சியை சாப்பிட்ட பின்பு ஒளூச் செய்ய வேண்டுமா? என்று கேட்கப்பட்டதற்கு அதற்காக ஒளூச் செய்ய வேண்டாம் என்று கூறினார்கள் என பரா இப்னு ஆஸிப்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா

ஒளூவுடன் சாப்பிடுபவர் ஒட்டக இறைச்சியை உண்டால் மட்டுமே ஒளூச் செய்ய வேண்டும் என்று இந்த ஹதீஸ் அறிவிக்கின்றது. மற்ற உணவுகள் உண்பதால் உண்ட பின்பு ஒளூச் செய்ய வேண்டியதில்லை என்பதைப் புரியலாம்.

உண்பதற்கு முன் ஒளூ அவசியம் என்று இருக்குமானால் உண்ட பின்பு ஒளூச் செய்யத் தேவையில்லை என்று தான் முடிவுக்கு வரவேண்டும். சாப்பிடும் முன் செய்த ஒளூ முறிந்தால் மட்டுமே சாப்பிட்ட பின்பு செய்தல் அவசியம் என்று இருக்க வேண்டும். எதையும் சாப்பிட்டால் ஒளூ முறியும் என்று இருக்குமானால் உண்ணும் முன் ஒளூச் செய்ய வேண்டியதில்லை. இது தான் சரியாகும்.

சாப்பிட்டால் ஒளூ முறியும் என்று வரும்போது சாப்பிடும் முன் ஒளூச் செய்வது என்பது அர்த்தமற்றதாகி விடுகின்றது. அர்த்தமற்ற செயலை நபி(ஸல்) அவர்கள் செய்யும்படி வற்புறுத்தி இருப்பார்களா? என்று யோசிக்க வேண்டும். இந்த அடிப்படையில் கூட உண்ணும் முன் ஒளூச் செய்வதில் பரக்கத் உண்டு என்று கூறுவது பொய் என்று புரியலாம்.

நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் உண்ணவோ, உறங்கவோ விரும்பினால் ஒளூச் செய்து கொள்வார்கள் என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

நபி(ஸல்) அவர்கள் குளிப்புக் கடமையான நிலையில் உறங்க விரும்பினால் ஒளூச் செய்து கொள்வார்கள். உண்ணவோ, பருகவோ விரும்பினால் தம் இருகைகளையும் கழுவி விட்டே உண்பார்கள் என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: அஹ்மத், நஸயீ

இந்த ஹதீஸ்கள் குளிப்புக் கடமையானவர் உண்ண விரும்பினால் கைகளை கழுவினால் போதும். ஆனாலும் ஒளூச் செய்வதே சிறப்பு என்று கூறுகின்றன. குளிப்புக் கடமையானவர் கூட உண்ணும் முன் ஒளூச் செய்வது சிறப்பு என்று தான் கூறப்படுகின்றது.

எனவே, உண்பதற்கு முன்னும்-பின்னும் ஒளூச் செய்ய வேண்டும் என்று வரும் ஹதீஸ் சரியானதல்ல. அதே சமயம் ஒட்டகக் கறியை உண்ட பின்பு ஒளூச் செய்ய வேண்டும். குளிப்புக் கடமையானவர் உண்ணும் முன் ஒளூச் செய்து கொள்வது சிறப்பாகும் என்பது மட்டுமே நபிவழி.


17. உளுச் செய்த பிறகு 97வது அத்தியாயம் ஓதுதல்?

''ஒளூச் செய்த பிறகு இன்னா அன்ஸல்னாகு.. என்று துவங்கும் 97வது அத்தியாயம் ஓதவேண்டும்.''

இப்படிப்பட்ட செய்தி ஒன்று பரவலாக நபி(ஸல்) அவர்களின் கூற்றாகப் பேசப்பட்டும், இதை செயல்படுத்தப் பட்டும் வருகிறது. இதை ஸகாவீ அவர்கள், எந்த அடிப்படையுமில்லாத செய்தி இது என்று கூறுகிறார்கள். இது பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்திக்கும் மாற்றமாக உள்ளது.

உங்களில் எவரேனும் ஒளூச் செய்து முடித்த பின் ''அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு லாஷரீக லஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு'' என்று கூறினால் சுவர்க்கத்தின் எட்டு வாயில்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உக்பா இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்

ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு மாற்றமாக இது இருப்பதில் இருந்தே 97வது அத்தியாயத்தை ஓதவேண்டும் என்பது இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய் என்பதை விளங்கலாம்.


18. வெள்ளியன்று...?

''ஜும்ஆ நாளில் ஒருவர் நோன்பு வைத்தவராகவும், நோயாளியை நோய் விசாரித்தவராகவும், (பசித்த) ஏழைக்கு உணவளித்தவ ராகவும், ஜனாஸாவை பின்பற்றியவராகவும் இருந்தால் அவரை நாற்பது வருடங்களின் குற்றங்கள் அடையாது.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இப்னு அதீ அவர்கள் தனது அல்காமில் எனும் நூலில் பாகம்-2, பக்கம்-122ல் பதிவு செய்துள்ளார்கள். இப்னுல் ஜவ்ஸி அவர்களும் தனது அல் மவ்ளூஆத் எனும் நூலில் பாகம்-2, பக்கம்-107ல் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் கீழ்க்கண்டோர் இடம் பெறுகின்றனர்.
அ) இஸ்மாயில் இப்னு இப்ராஹீம்
ஆ) கலீல் இப்னு முர்ரா
இ) அம்ரு இப்னு ஹம்ஸா அல்பஸரீ
இவர்கள் சரியானவர்களல்லர், பலவீனர்கள் என்று இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

''ஜும்ஆ நாளில் நோன்பாளியாக, நோயாளியை விசாரித்தவராக, ஜனாஸாவில் கலந்து கொண்டவராக, ஏதேனும் தர்மம் செய்தவராக ஒருவர் இருந்தால் அவருக்கு சுவர்க்கம் கடமையாக்கப்பட்டு விட்டது.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது. இதிலும் கூட அப்துல் அஜீஸ் இப்னு அப்துல்லா அல்உவைஸி, இப்னு லுஹைஆ ஆகியோர் இடம் பெறுவதால் இதுவும் பலவீனமானதாகும். அப்துல் அஜீஸ் அவர்களை தஹபீ அவர்கள் தனது 'அல்லுஅபாஉ' எனும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக நோய் விசாரிக்கவோ, ஏழைக்கு உணவளிக்கவோ, நபிலான நோன்பு நோற்கவோ, ஜனாஸாவில் கலந்து கொண்டு அதைப் பின் தொடர்ந்து செல்வதோ மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டுத் தான் உள்ளது. இதற்கு நிறைய ஹதீஸ்களில் ஆதாரம் உண்டு. குறிப்பாக இந்த ஹதீஸ்கள் உள்ள விஷயங்கள் அனைத்தையும் ஒரே நாளில் செய்வதால் சுவர்க்கம் உண்டு என்பதை ஆதாரப்பூர்வமான பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

இன்று உங்களில் நோன்பாளியாக இருப்பவர் யார்? என நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அபூபக்கர்(ரலி) அவர்கள், நான் என்று கூறினார்கள். இன்று உங்களில் நோயாளியை விசாரித்தவர் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, நான் என்று அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள். இன்று உங்களில் ஜனாஸாவில் கலந்து கொண்டவர் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, நான் என்று அபூபக்கர்(ரலி) கூறினார்கள். இன்று ஏழைக்கு உணவளித்தவர் யார்? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, நான் என அபூபக்கர்(ரலி) அவர்கள் கூறினார்கள். 'ஒருவரிடம் ஒரே நாளில் இந்த நற்செயல்கள் சேர்ந்தால் அவர் சுவர்க்கத்தில் நுழையாதிருப்பதில்லை' என்று அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதை அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் வெள்ளியான இன்று என்று கூறவில்லை. இந்த நற்செயல்களை என்றைக்கும் எவர் செய்தாலும் சுவர்க்கம் உண்டு என்பதையே இந்த மூலம் ஹதீஸ் விளங்க முடிகிறது.

'இன்று' என்று நபி(ஸல்) அவர்கள் கூறிக் கேட்ட போது, அன்று வெள்ளிக்கிழமையாக ஏன் இருக்கக்கூடாது? என்று சிலர் கூறி, மேற்கண்ட பலவீனமான ஹதீஸை 'ஹஸன்' என்ற அந்தஸ்திற்கு கொண்டு வர முயற்சிக்கலாம். ஆனால் அன்று வெள்ளி தான் என்பதற்கு அபூபக்கர்(ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸில் எவ்விதக் குறிப்பும் இல்லை. அன்று வெள்ளி தான் என்று கூறுவோராலும் ஆதாரத்தைக் காட்ட இயலாது.

மேலும், வெள்ளியன்று மட்டும் நோன்பு வைக்க பொதுவாகத் தடையும் உள்ளது.

''வெள்ளிக்கிழமைக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ நோன்பு வைப்பவர் தவிர மற்றவர் வெள்ளிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ

இந்த வகையிலும் கூட மேற்குறிப்பிட்டுள்ள செய்தி தவறானது என்பது தெளிவாகிறது.


19. 'ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறும்போது...?

''ஹய்ய அலல் ஃபலாஹ் என்று முஅத்தின் கூறுவதைக் கேட்டால் அல்லாஹும்மஜ்அலனா முஃப்லிஹீன (இறைவா! எங்களை வெற்றியாளர்களாக ஆக்கி வைப்பாயாக!)'' என்று கூறவேண்டும்.

இதை முஆவியா இப்னு அபீஸுப்யான்(ரலி) அறிவிக் கிறார்கள். இதை இப்னுஸுன்னி அவர்கள், 'அமலுல் யவ்மி வல்லைலத்' எனும் தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் நஸ்ர் இப்னு தரீஃப் என்பவரால் இது தவறான செய்தியாகிவிடுகிறது. 'இவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர்' என நஸயீ அவர்களும் மற்றவர்களும் கூறுகிறார்கள். 'ஹதீஸை இட்டுக்கட்டுவதில் பிரபல்ய மான நபர்களில் ஒருவர் தான் இவர்' என யஹ்யா இப்னுமுயீன் கூறுகிறார்கள்.

இதுபோல் இதன் அறிவிப்பாளல் இடம் பெறும் அப்துல்லா இப்னுவாகித் என்பவரும் முற்றிலும் பலவீனராகும். இவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர் என்றும், இவர் பற்றிய நல்ல கருத்தை எவரும் கூறவில்லை என்றும் இமாம் புகாரீ கூறுகிறார். இவர் சரியானவர் அல்லர் என நஸயீ கூறுகிறார்கள். ஜரீர் அவர்கள் 'இவரை பலவீனர்' என்று குறிப்பிடுகிறார்கள்.

இது பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் மாற்றமாக உள்ளது.

அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று முஅத்தின் கூறும்போது, உங்களில் ஒருவர் அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றும், பின்பு அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால், அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு என்றும், பின்பு அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹு என்று (முஅத்தின்) கூறும்போது அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் என்றும், பின்பு ஹய்ய அலஸ்ஸலாத் என்று (முஅத்தின்) கூறும்போது, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்றும், ஹய்ய அலல் ஃபலாஹ் என்று கூறும்போது, லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்றும், பின்பு அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று கூறும்போது அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்றும், லாயிலாஹ இல்லல்லாஹு என்று கூறும்போது லாயிலாஹ இல்லல்லாஹு என்றும் (இவைகளை) மனதிற்குள் கூறினால் அவர் சுவர்க்கம் நுழைவார் என உமர்(ரலி) கூறினார்கள். நூல்: முஸ்லிம்

ஆதாரப்பூர்வமான ஹதீஸில் 'லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்' என்று தான் 'ஹய்ய அலல் ஃபலாஹ்' என்று கூறப்படும்போது கூறவேண்டும் என குறிப்பிடப்படுவதால் மேற்கூறிய செய்தி இட்டுக்கட்டப்பட்ட ஒன்றே என்பதை விளங்கலாம்.


20. வெள்ளிக்கிழமை தோறும்...

''ஒருவர் தன் பெற்றோர் இருவரது கப்ரை அல்லது அவ்விருவர்களில் ஒருவரது கப்ரை ஒவ்வொரு (ஜும்ஆ) வெள்ளிக்கிழமைகளிலும் ஸியாரத் செய்வதால் அவரது குற்றங்கள் மன்னிக்கப்படும். நன்மை எழுதப்படும்.''

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதை தப்ரானீ அவர்கள் தனது ஸகீர், அவ்ஸத் நூல்களில் பதிவு செய்துள்ளார்கள்.

இந்த ஒரு அறிவிப்பாளர் தொடரில் மட்டுமே அபூ ஹுரைரா(ரலி) அறிவிப்பதாக இந்த ஹதீஸ் உள்ளது என்று தப்ரானீ அவர்கள் குறிப்பிடவும் செய்கிறார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் யஹ்யா இப்னு அல்அலாஉ அல்பஜலீ என்பவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப் பட்டவராவார்.

இந்த யஹ்யா பொய்யர் என வகீஉ அவர்கள் கூறுகிறார்கள். இவர் பொய்யர்; இட்டுக்கட்டுபவர் என இமாம் அஹ்மத் கூறுகிறார்கள்.

இவரது பல அறிவிப்புகள் பலவீனமானது என்பது தெளிவான தாகும். மேலும் இவர் மூலம் வரும் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப் பட்டவைகளே என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

யஹ்யாவுக்கு இச்செய்தியை அறிவித்த அப்துல் கரீம் உமைய்யா அவர்களும் பலவீனராவார். இதை இமாம் சுயூத்தி கூறுகிறார்கள்.

அப்துல் கரீம் அவர்களை பலவீனர் எனக் கூறும் அதே சமயம் இந்த யஹ்யாவை இன்னார் என தெரியவில்லை எனவும் சுயூத்தி கூறுகிறார்கள். ஆனால் சுயூத்தி அவர்களின் இக்கூற்று சரியல்ல!

காரணம், யஹ்யா என்பது இன்னார் என்பது புந்தது தான். அவர் பொய்யர் என்பதும் தெளிவு.

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் உள்ள குறைபாடு களால் மட்டும் குறை காணவில்லை. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் கூட மாற்றமாகவே உள்ளது.

''கப்ருகளை ஸியாரத் செய்ய நான் தடை செய்திருந்தேன். முஹம்மது (ஆகிய நான்) தன் தாயான் கப்ரை ஸியாரத் செய்ய அனுமதிக்கப்பட்டார். எனவே நீங்களும் ஸியாரத் செய்யுங்கள். (அது) மறுமையை நினைவுபடுத்தும்'' என்று (ஸல்) அவர்கள் கூறியதாக புரைதா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

இந்த ஹதீஸில் உள்ள ஸியாரத் செய்யுங்கள், அது மறுமையை நினைவுபடுத்தும் என்ற வார்த்தையை கவனிக்கும்போது, (நபி) அவர்கள் பொதுவாக ஸியாரத் செய்யுங்கள் என்று கூறுகிறார்களே தவிர, குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் ஸியாரத் செய்யுங்கள் என்று கூறவில்லை என்பதைப் புரியலாம்.
மேலும் இந்த ஹதீஸில் 'மறுமையை நினைவுபடுத்தும்'என்றும், மற்றொரு ஹதீஸில் 'மரணத்தை நினைவுபடுத்தும்' என்று தான் நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்களே தவிர, 'பாவங்கள் மன்னிக்கப் படும் நன்மைகள் எழுதப்படும்' என்றெல்லாம் கூறவில்லை என்பதையும் புரியலாம்.

வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருக்கலாமல்லவா? என்றால் அதுவும் இல்லை. எனவே இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும்.


21. அங்கே யாசீன் அத்தியாயம் ஓதினால்...

''ஒருவர் தன் பெற்றோர் இருவன் கப்ரையும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஸியாரத் செய்து அவ்விருவரும் (அடக்கமாகி) உள்ள இடத்தில் யாசீன் அத்தியாயத்தை ஓதினால் அந்த ஒவ்வொரு ஆயத்தின் எண்ணிக்கை அளவுக்கு அல்லது அதன் எழுத்துக்களின் எண்ணிக்கை அளவுக்குக் குற்றங்கள் மன்னிக்கப்படும்''

என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதை இப்னுஅதீ, அபூநயீம் தங்கள் நூல்களிலும், அப்துல்கனீ அல் முகத்தஸு அவர்கள் தனது சுனன்-லும் பதிவு செய்துள்ளனர்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அம்ரு இப்னு ஸியாரத் என்பவர் சரியானவரல்லர்; 'இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர்' என தாரகுத்னீ அவர்கள் கூறுகிறார்கள். இப்னுல் ஜவ்ஸீ அவர்களும் இந்த ஹதீஸை (இட்டுக்கட்டப்பட்டவைகள் என்ற பெயருடைய) தனது 'அல் மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

கப்ரை வெள்ளிக்கிழமை (ஜும்ஆ) அன்று ஸியாரத் செய்தால் குற்றங்கள் மன்னிக்கப்படும் என்ற வாசகம் தவறானதே என்பதை விளங்கினோம்.

இந்த ஹதீஸிலோ, யாசீன் ஓதினால் என்று உள்ளது. இவ்வாறு கப்ரு சென்று யாசீன் ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த ஒரு ஹதீஸும் இல்லை. மாறாக கப்ரை ஸியாரத் செய்யச் சென்றால் சில வாசகங்களை சொல்லும்படி தான் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் உள்ள அடக்கஸ்தலங்களை கடந்து சென்றபோது அவற்றை நேராக நோக்கி, ''அஸ்ஸலாமு அலைக்கும் யா அஹ்லல் குபூர், யஃபிருல்லாஹுலனா வலகும் அன்தும் ஸலபுனா வநுஹ்னுபில் அஸர்'' எனக் கூறினார்கள் என்று புரைதா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் அடக்கத்தலத்திற்கு வந்து, ''அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன இன்ஷா அல்லாஹு பிகுமுல் லாஹிகூன்'' என்று கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

''அஸ்ஸலாமு அலைக்கும் அஹ்லத்தியார் மினல் முஃமினீன வல்முஸ்லிமீன வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லலாஹிகூன். நஸ்அலுல்லாஹலனா வலகுமுல் ஆஃபியத்த'' என்று கூறும்படி அடக்கத்தலங்களுக்கு செல்வோருக்கு நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தருவார்கள் என புரைதா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், இப்னுமாஜா

இந்த ஸஹீஹான ஹதீஸ்களுக்கு மாற்றமாக மேற்கூறிய ஹதீஸ் யாசீன் ஓதும்படி கூறுவதிலிருந்து இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்(?) எனப் புரியலாம்.


22. சபையில் இருந்து எழும்போது...

''நபி(ஸல்) அவர்கள் ஏதாவது ஒரு சபையில் இருந்து எழுந்து விட நாடினால், அஸ்தஃபிருல்லாஹ் (இறைவனிடம்) மன்னிப்புக் கோருகிறேன்) என்று 10 முதல் 15 தடவை கூறுவார்கள்''

இதை அபூஉமாமா(ரலி) அவர்கள் கூறியதாக பஹ்வீ, இப்னுஸன்னீ, இப்னு அதீ போன்றோர் தங்களது நூல்களில் பதிவு செய்துள்ளனர். இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஜஃபர் சரியானவரல்ல என்பதால் இந்தச் செய்தி பலவீனமான தாகும். இவர் பொய்யர் என்று ஷுஃபா கூறுகிறார்கள்.

இவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர் என்று இமாம் புகாரீ கூறுகிறார்கள். இவரது ஹதீஸ்கள் பலவீனமானவை என்பது தெளிவானது என்று இப்னு அதீ அவர்களும் கூறுகிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் சபையில் இருந்து எழும்போது 20 தடவை அஸ்தஃபிருல்லாஹ் கூறுபவர்களாக இருந்தனர்

என்று அப்துல்லா இப்னு நாஸிஹ் அல்ஹள்ரமீ அவர்கள் கூறியதாக இப்னுஸன்னீ அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதை அறிவிக்கும் அப்துல்லா இப்னு நாஸிஹ் அவர்கள் நபித்தோழர் அல்ல என்று அபூநயீம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த வகையில் இச்செய்தி முர்ஸலாகும்.

நஸ்ர் இப்னு குஸைமா என்பவர் இதன் அறிவிப்பாளர் வரிசைத் தொடரில் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக் குறிப்பு ஏதும் கிடைக்கவில்லை என்பதாலும் இச்செய்தி பலவீன மானதாகும்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு சபையிலிருந்து எழும்போது இறுதி யில், ஸுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லா அன்த்த அஸ்தஃபிருக்க வஅதூபு இலைக என்று கூறுபவர்களாக இருந்தனர். அப்போது ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன்பு சொல்லாத ஒரு சொற்றொடரை நீங்கள் கூறினீர்களே! எனச் சொல்ல அது அந்த சபையில் நிகழ்ந்தவற்றிற்கு பகாரமாகிவிடுகிறது எனக் கூறினார்கள் என்று அபூபர்ஸா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: அபூதாவூத், ஹாகிம்

சபையில் இருந்து எழும்போது இதனைத்தான் கூற வேண்டும் என்று தெளிவாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க இதற்கு மாற்றமாக மேலே குறிப்பிட்ட செய்திகள் இருப்பதில் இருந்தே, அவைகள் இட்டுக்கட்டப்பட்டவைகள் தான் என்பதில் சந்தேகமில்லை.


23. தொழுது கொண்டே தான் இருக்க வேண்டுமா?

''ஒரு அடியான் தொழுகையில் இருக்கும்போது இறைவனின் இரு கண்களுக்கிடையே இருக்கிறான். தொழுகையை முடித்து திரும்பினால் ஆதமின் மகனே! நீ யார் பக்கம் திரும்புகிறாய்? என்னை விட உனக்கு சிறந்தவன் பக்கமா (திரும்பி விட்டாய்) ஆதமின் மகனே! உன் தொழுகையின் பக்கம் (மீண்டும்) நீ வா! நீ எவர் பக்கம் திரும்புகிறாயோ அவரை விட நான் உனக்குச் சிறந்தவன்.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். இச்செய்தியை உகைலி அவர்கள் தன் 'அழ்ழுஅஃபா' என்ற நூலிலும் பஸ்ஸார் அவர்கள் தனது முஸ்னத் விலும் பதிவு செய்துள்ளனர்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் இப்ராஹீம் இப்னு யஸீத் அல்கூபி என்பவர் சரியானவர் அல்ல என்று இப்னு முயீன் கூறுகிறார்கள். ஹதீஸ் கலையில் கைவிடப்பட்டவர் இவர் என அஹ்மத், புகாரீ, நஸயீ ஆகியோர் கூறுகிறார்கள்.

இதுபோன்ற ஹதீஸ்களை வைத்துத் தான் சிலர் குடும்பத்தை மறந்து, உறவை மறந்து, சமூக வாழ்வை மறந்து சதா நேரமும் தொழுகிறோம் என்ற பெயல் இருந்து முற்றிலும் வழிகெட்டுப் போய் விடுகின்றனர். மலையின் குகைகளிலும், மரத்தடிகளிலும் தியானம் என்ற பெயல் வழிகெட்டுப் போனவர்கள் இது போன்ற ஹதீஸ்களின் பெயரால் உள்ள செய்திகளை வைத்துத்தான்.

நபி(ஸல்) அவர்களது மனைவியர் ஒருவரிடம் மூன்று பேர் வந்து, நபி(ஸல்) அவர்களின் வணக்கம் பற்றி கேட்டு அறிந்ததும், இனி நான் தூங்காமல் வணக்கம் புரிவேன் என ஒருவரும், நான் தொடர்ந்து நோன்பு வைப்பேன் என ஒருவரும், நான் திருமணமே செய்ய மாட்டேன் என ஒருவரும் கூறினர். இதை அறிந்த நபி(ஸல்) அவர்கள் அம்மூவரையும் அழைத்து, நான் ஒரு நாள் நோன்பு வைத்து மறுநாள் விட்டு விடுகிறேன். தூங்கவும் செய்கிறேன். வணக்கமும் புரிகிறேன், திருமணமும் செய்துள்ளேன்; என்று கூறிவிட்டு இவை என் வழிமுறை. இதைப் புறக்கணிப்பவன் என்னைச் சேர்ந்தவன் அல்லன் என்று கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

நபி(ஸல்) அவர்களுடன் நாங்கள் சிறுபடையுடன் போருக்குச் சென்றோம். அப்போது தண்ணீரும், கீரைகளும் வளர்ந்திருக்கின்ற ஒரு குகை வழியே செல்லும்போது, 'நான் இவ்வுலகத் தொடர்புகளை விட்டு முற்றிலும் நீங்கி, அந்தக் குகையில் தங்கப் போகிறேன்' என தனக்குத்தானே ஒரு மனிதர் எண்ணிக் கொண்டு, அதற்காக நபி(ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் யூதர்களைப் போன்றோ, கிருத்தவர்களைப் போன்றோ (மனைவி, மக்களுடன் வாழாமல்) குகைகளிலும் தேவாலயங்களிலும் தனித்து தங்கி விடுமாறு நான் அனுப்பி வைக்கப்படவில்லை. மாறாக தெளிவான மார்க்கத்தைக் கொண்டு அனுப்பப்பட்டுள்ளேன் எனக் கூறி, நபி(ஸல்) அவர்கள் அவருக்கு மறுப்புத் தெரிவித்துவிட்டனர் என்று அபூஉமாமா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: அஹ்மத்

தொடர்ந்து தொழுது கொண்டே இருந்தால் இறைவனின் அன்பு கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அது மிகவும் தவறாகும். ஐங்காலத் தொழுகையைத் தொழுவது தான் கட்டாயக் கடமையாகும். உபரியான தொழுகைகளைப் பொறுத்தவரை இதர கடமைகளை நிறைவேற்றுவதற்கு இடையூறாக இல்லாத நேரத்தில் தான் உபரி வணக்கங்கள் செய்ய வேண்டும். உபரி வணக்கங்களை செய்கிறோம் என்ற பெயல் மனைவி மக்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை புறக்கணிக்கத் தூண்டியதும் இதுபோன்ற செய்திகள் தான்.

ஒரே ஒளுவில் 40 வருடம் அந்த இமாம் தொழுதார், இந்த இமாம் இரவெல்லாம் நின்று கொண்டே குர்ஆனை ஒரே இரவில் ஓதி முடித்தார் என்று கதைகள் கூறப்பட இந்த செய்தி தான் காரணமாக அமைந்தது.

எனவே, மேற்கூறிய அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிப்ப தாக கூறப்படும் இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பதே உண்மையாகும்.


24. சுப்ஹுத் தொழுகையில் 94 மற்றும் 105 வது அத்தியாயங்களை ஓதுதல்?

''சுப்ஹுத் தொழுகையில் அலம் நஷ்ரஹ்...என்று துவங்கும் 94வது அத்தியாயத்தையும், அலம் தர கைஃப...என்று துவங்கும் 105வது அத்தியாயத்தையும் ஒருவன் ஓதினால் அவன் நஷ்டமடைய மாட்டான்.”

இப்படியும் ஒரு செய்தியை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக பரவலாக கூறப்பட்டும், செயல்படுத்தப்பட்டும் வருகிறது. ஆனால் ஸகாவீ அவர்கள் தனது நூலில் 200ம் பக்கத்தில் இது எவ்வித அடிப்படையுமற்றது என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் இது ஆதாரப்பூர்வமான பின்வரும் ஹதீஸ்களுக்கும் மாற்றமாகவே உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் லுஹல், 'வல்லைலி இதா யஹ்ஷா' என்று துவங்கும் 92வது அத்தியாயத்தை ஓதுவார்கள். அஸலும் அது போன்ற சூராவை ஓதுவார்கள். சுப்ஹில் அதைவிட மிக நீண்ட சூராக்களை ஓதுவார்கள் என ஜாபிர் இப்னு ஸமுரா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம், அஹ்மத்

பஜ்ரின் இரண்டு ரக்அத்திலோ அல்லது அதன் இரண்டின் ஒன்றிலோ 60 முதல் 100 வசனங்கள் வரை ஓதுவார்கள் என அபூபர்ஸா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம் (789)

இதுபோன்ற இன்னும் பல ஹதீஸ்களில் சுப்ஹுத் தொழுகையில் ஓதிய சூராக்கள் பற்றிக் குறிப்பிடப்படுகிறது. ஆனால் 94வது, 105வது அத்தியாயங்கள் பற்றி கூறப்படவேயில்லை.

சுப்ஹின் பர்ளு தான் அது. இந்த ஹதீஸில் கூறப்பட்டதோ பஜ்ரின் சுன்னத் தொழுகை பற்றியது என்று கூட சிலர் கூறலாம். ஆனால் அந்த வாதமும் வைக்க இயலாது என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது.

பஜ்ரின் சுன்னத் தொழுகையில் முதல் ரக்அத்தில் பகராவின் 'கூலூ ஆமன்னாபில்லாஹி வமா உன்சில இலைனா' என்ற வசனத்தையும் இரண்டாம் ரக்அத்தில் 'ஆமன்னா பில்லாஹி வஷ்ஹத் பி அன்னா முஸ்லிமூன்' என்ற வசனத்தையும் நபி(ஸல்) அவர்கள் ஓதி வந்தனர் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக் கின்றார்கள். நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் பஜ்ரின் சுன்னத்தில் 'குல்யா அய்யுஹல் காபிரூன, குல்ஹுவல்லாஹு அஹத்' ஆகிய அத்தியாயங்களை ஓதி வந்தனர் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜா, நஸயீ

ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸிலும் 94, 105வது அத்தியாயங் களைப் பற்றிக் கூறப்படாததால் மேற்கண்ட செய்தி இட்டுக் கட்டப்பட்டதே என்பது தெளிவாகும்.


25. கடலில் பயணம் செய்யலாமா?

''ஹஜ் செய்பவர் அல்லது உம்ரா செய்பவர் அல்லது இறைவழியில் போர் புபவர் ஆகியோர் தவிர வேறு எவரும் கடலில் பயணம் செய்யக்கூடாது. ஏனென்றால் கடலின் கீழ்(நரக) நெருப்பு உள்ளது.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) அறிவிக்கின்றார்கள். இது அபூதாவூத் நூலில் உள்ளது. கதீப் அவர்கள் தனது தல்கீஸ் நூலிலும், பைஹகீ அவர்கள் தனது நூலிலும் பதிவு செய்துள்ளனர்.

இதில் இடம்பெறும் புஷ்ர் அபூஅப்துல்லா என்பவரும் பஷீர் இப்னு முஸ்லிம் என்பவரும் யாரென்றே அறியப் படாதவர்கள் என இப்னுஹஜர் அவர்கள் தனது 'தக்ரீப்' நூலில் கூறுகிறார்கள். 'மீஸான்' எனும் நூலில் கூட அவ்வாறு தான் குறிப்பிடப் பட்டுள்ளது.

மேலும் இந்த ஹதீஸில் இழ்திரால் உள்ளது. அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) வழியாக பஷீர் அறிவிப்பதாகவும், அவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது என தனக்கு செய்தி கிடைத்தது என்பதாகவும், அவர்கள் வழியாக ஒரு மனிதர் அறிவிப்பதாகவும் அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி உள்ளது. இதை முன்திர் அவர்கள் தனது 'முஸ்தஸரீஸ்ஸுனன்' எனும் தனது நூலில் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸ் சரியல்ல என்று புகாரீ அவர்கள் கூறுகிறார்கள். பைஹகீ அவர்களும் இவ்வாறே கூறுகிறார்கள். இப்னுல் முல்கீன் அவர்கள் தனது 'குலாபா' நூலில் அனைத்து இமாம்களும் இதை பலவீனமானது என்று கூறுகின்றனர் என்று குறிப்பிடுகிறார்கள். கதாபீ அவர்கள், இதை ஹதீஸ் கலை அறிஞர்கள் இதன் அறிவிப்பாளர் வரிசைகளை பலவீனப்படுத்தியுள்ளனர் என்று கூறுகிறார்கள். அபூதாவூத் அவர்கள் இந்த (புஷ்ர், பஷீர்) இருவரும் யாரென அறியப்படாதவர்கள் என்று கூறுகிறார்கள்.

''ஹஜ் செய்பவர் அல்லது உம்ரா செய்பவர் அல்லது இறைவழியில் போர் புபவர் தவிர (மற்றவர்) கடலில் பயணம் செய்யக்கூடாது''

என்ற வாசகம் மட்டும் ஹாஸ் இப்னு அலீ உஸாமா அவர்களின் ஸவாயித் நூலிலும் உள்ளது.

இதுவும் சரியானதல்ல. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் கலீல் இப்னு ஸகய்யா என்பவர் சரியானவரல்லர் என்பதால் இது பலவீனமான செய்தியாகும்.

இப்னு அவ்ன், ஹபீப் இப்னு ஷஹீத் ஆகிய இருவர் வழியாக இவர் நிறைய தவறான ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என இப்னுஸ் ஸக்னு கூறுகிறார்கள்.
நம்பகமானவர்கள் வழியாக பல தவறான ஹதீஸ்களை அறிவிப்பவர் இவர் என்று உகைலீ கூறுகிறார்கள். இவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர் என தக்ரீபில் இப்னு ஹஜர் கூறுகிறார்கள்.

ஆதாரப்பூர்வமான செய்திக்கும் கூட இது மாற்றமாக உள்ளது என்பதாலும் இது சரியான செய்தியில்லை.
''அல்லாஹ்வின் தூதரே! குறைந்த அளவு தண்ணீரை எடுத்துக் கொண்டு நாங்கள் கடலில் பிரயாணம் செய்கிறோம். நாங்கள் அந்தத் தண்ணீரை ஒளூச் செய்யப் பயன்படுத்தினால் தாகத்தால் சிரமப்படுவோம். எனவே கடல் நீரால் ஒளூச் செய்யலாமா?'' என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். 'கடல் நீர் சுத்தப் படுத்த ஏற்றதாகும். அதில் செத்தவைகளும் (உண்ண அனுமதிக்கப் பட்டதாகும்)' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல்கள்: அஹ்மத், அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா, திர்மிதீ, இப்னுகுஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம், தாரகுத்னீ, பைஹகீ

வர்த்தக ரீதியான பிரயாணங்களை நபித்தோழர் பலர் கப்பலில் மேற்கொண்டுள்ளனர் என்பதற்கு இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டதே!


26. உலமாக்களை பின்பற்றத்தான் வேண்டும்!

''உலமாக்களை பின்பற்றுங்கள்; நிச்சயமாக அவர்கள் உலகத்தின் ஒளியாவர். மறுமையின் விளக்குகளாவர்''
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். 'முஸ்னதுல் பிர்தவ்ஸ்' எனும் நூலில் இமாம் தைலமீ அவர்களும், 'அல்ஜாமிஉஸ்ஸகீர்' எனும் நூலில் சுயூத்தி அவர்களும் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளனர்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் காஸிம் இப்னு இப்ராஹிம் அல்முல்தீ என்பவர் இடம் பெறுகிறார். 'இவர் பொய்யர்' என தாரகுத்னீ அவர்கள் கூறுகிறார்கள்.

மேலும் இது திருமறை வசனங்களுக்கும் ஆதாரப் பூர்வமான ஹதீஸ்களுக்கும் மாற்றமாக உள்ளது

(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர்(களாக்கிக் கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள். நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன் 7:3)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் (இறைத்) தூதருக்கும் கட்டுப்படுங்கள். (மற்றவர்களைப் பின்பற்றி) உங்கள் செயல்களை பாழாக்கி விடாதீர்கள். (அல்குர்ஆன் 47:33)

இவை அல்லாஹ்வின் வரையறையாகும். எவர் அல்லாஹ்வுக் கும், அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறாரோ அவரை சுவனபதிகளில் பிரவேசிக்கச் செய்வான். (அல்குர்ஆன் 4:15)

யார் அல்லாஹ்வுக்கும், (அவனது) தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அருளைப் பெற்ற நபிமார்கள், ஸித்திகீன்கள், (சத்தியவான்கள்) உயிர் தியாகிகள், நற்கருமங்களுடையவர்கள் ஆகியவர்களுடன் இருப்பார்கள். இவர்கள் தாம் மிக்க அழகான தோழர்கள் ஆவார்கள். அல்குர்ஆன் 4:69

உமர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் தவ்ராத்தின் ஒரு பகுதியை கொண்டு வந்தார்கள். இறைத்தூதர் அவர்களே! இது தவ்ராத்தின் ஒரு பகுதியாகும் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் பேசாதிருந்தார்கள். உமர்(ரலி) அவர்களோ இதைப் படிக்க ஆரம்பித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் முகமோ (கோபத்தால்) மாறத் துவங்கியது.

அப்போது அபூபக்கர்(ரலி) அவர்கள் உன்னை கஷ்டங்கள் அடையட்டும். நபி(ஸல்) அவர்கள் முகத்தைப் பார்க்கவில்லையா? என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களின் முகத்தைப் பார்த்த உமர்(ரலி) அவர்கள், 'அல்லாஹ்வுடைய கோபத்தை விட்டும், அவனின் தூதன் கோபத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாது காப்புத் தேடுகிறேன். அல்லாஹ்வை இறைவனாகவும், இஸ்லாத்தை மார்க்கமாகவும், முஹம்மத்(ஸல்) அவர்களை நபியாகவும் நாம் ஒப்புக் கொண்டோம்' என்று கூறினார்கள்.

அப்போது நபி(ஸல்) அவர்கள், 'இந்த முஹம்மதின் உயிரை கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! மூஸா, உங்களிடையே வந்து என்னை விட்டு விட்டு அவரை நீங்கள் பின்பற்றினால், நீங்கள் நேர்வழியை விட்டும் போய் விடுவீர்கள். மூஸா (இவ்வுலகில்) உயிருடன் இருந்திருந்து, என்னை நபியாக அவர் அடைந்தால், அவர் என்னைத் தான் நிச்சயம் பின்பற்றி இருப்பார்' என்று கூறினார்கள். இதை ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: தாரமீ

மேலும் (நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். இன்னும் எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 59:7)

உங்களிடையே இரண்டை விட்டுச் செல்கிறேன். அந்த இரண்டையும் பின்பற்றும் வரை வழி தவறவே மாட்டீர்கள். 1) இறைமறை வேதம், 2) எனது வழிமுறை என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அல்முஅத்தா

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், நபிமொழிகள் நபி(ஸல்) அவர்களை பின்பற்றுவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. ஆனால் இதற்கு நேர் விரோதமாக உலமாக்களை பின்பற்றுங்கள் என்று மேலே குறிப்பிட்ட செய்தி கூறுகின்றது.

உலமாக்களை பின்பற்ற வேண்டும் என்று மட்டும் கூறப்பட வில்லை. அவர்கள் 'உலக ஒளி, மறுமை விளக்கு' என்று கூறப்படு கின்றது. இந்த வாசகமே, உலமாக்களால் தான் இட்டுக் கட்டப்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணத் தூண்டுகிறது.

குர்ஆன்-ஹதீஸ் அடிப்படையில் எவர் எந்தச் செய்தியை கூறினாலும் அதை ஏற்று நடப்பது தான் ஒரு முஸ்லிமின் வேலை. கூறுபவர் உலமாவாகத்தான் இருக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. கூறப்படும் செய்தி குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் மாற்றமானதாக இருப்பின் அதைப் புறக்கணிக்கவும் வேண்டும். அதைக் கூறியவர் எவ்வளவு பெயவராக இருந்தாலும் சரியே!

இது போன்ற ஹதீஸ்களைக் கூறி 'எங்களைப் பின்பற்றுங்கள்' என்று இவர்கள் கூறியதால் முஸ்லிம்கள் உலமாக்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டு விட்டார்கள்.

இவர்கள் பலவீனமான ஹதீஸையும் சட்டமாக்கலாம் என்று எண்ணியுள்ளதால் பலவீனமானது என்று சுட்டிக்காட்டினாலும் ஏற்பதில்லை.

உலமாக்கள் என்ற பெயல் போலிகளும் இஸ்லாத்தைத் தவறான முறையில் சித்தரிக்கும் நபர்களும் உண்டு என்று புரிந்து கொண்டாலும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகத்தான் இருக்க முடியும் என்ற முடிவுக்கு வரலாம்.


27. மிம்பரில் இமாம் இருக்கும் போது பேசலாமா?

''உங்களில் ஒருவர் மிம்பரில் இமாம் இருக்கும் நிலையில் பள்ளியினுள் நுழைந்தால் இமாம் அதிலிருந்து இறங்கும் வரை தொழக்கூடாது; பேசக்கூடாது.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதை தப்ரானீ அவர்கள் தன் கபீல் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் அய்யூப் இப்னு நுஹைக் என்பார் இடம் பெறுகிறார்.

இவரைப் பற்றி என் தந்தை (அபூஹாதம்) அவர்கள், இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர் என்று கூறக் கேட்டுள்ளேன் என்று இப்னு அபீஹாதம் அவர்கள், தனது 'அல்ஜர்உ வத்தஹ்தீல்' நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர். இவரை அனைவரும் பலவீனர் என்கின்றனர் என தன், 'அல்மஜ்மஉ'வில் இமாம் ஹைதமீ குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஹதீஸ் பலவீனமானது என்று இமாம் இப்னு ஹஜர் அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார்கள்.

''ஜும்ஆ நாளன்று தொழுகைக்காக இமாம் வந்து விட்டால் பேசுவதை விட்டுவிடவேண்டும்.''

இந்தக் கருத்தில் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி பைஹகீயில் இடம்பெற்றுள்ளது. இதுவும் பலவீனமானது தான்.

ஆதாரப்பூர்வமான பின்வரும் ஹதீஸ்களுக்கும் இது முரண்பாடாக உள்ளது.

இமாம் உரை நிகழ்த்திக் கொண்டிருக்கும்போது உங்களில் எவரேனும் வந்தால் அவர் சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என்று நபி(ஸல்) கூறியதாக ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

ஜும்ஆ நாளன்று நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது ஒருவர் பள்ளிக்குள் நுழைந்தார். நீர் தொழுது விட்டீரா? என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் இல்லை என்று கூறினார். இரண்டு ரக்அத்கள் தொழுவீராக! என்று நபி(ஸல்) அவர்கள் அவரிடம் கூறினார்கள். இதை ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

இமாம் மிம்பரில் உட்கார்ந்து இருக்கும்போது மட்டுமின்றி, உரை நிகழ்த்தும்போது கூட தொழலாம் என்று ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸ் கூறுகின்றது. இதற்கு மாற்றமாக மேற்குறிப்பிட்ட ஹதீஸ் உள்ளது என்பதைப் புரியலாம்.

'தொழக்கூடாது' என்பதற்கு, தொழலாம் என்று ஆதாரப் பூர்வமான ஹதீஸ் மூலம் கூறினாலும் பேசக்கூடாது என்பது சரி தானே; அதற்கு பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் ஆதாரமாக உள்ளதல்லவா!
'ஜும்ஆ நாளன்று இமாம் குத்பா நடத்தும் வேளையில் (பேசும்) உமது தோழரை பேசாதே என்று நீ கூறினால், நீயும் தவறிழைத்து விட்டாய்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக புகாரீ, முஸ்லிமில் உள்ள ஹதீஸ்படி 'பேசக்கூடாது' என்ற வாசகம் சரியானது தான் என்று சிலர் கூறலாம்.

ஒரு ஹதீஸ் பலவீனமானது என்று கூறும்போது அந்த ஹதீஸின் மற்றொரு வாசகம் சரி என்று கூறுவது சரியல்ல அது மட்டுமல்ல அந்த ஹதீஸில் மிம்பரில் இருக்கும்போதே பேசுவதை விட வேண்டும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆதாரப்பூர்வமான ஹதீஸிலோ இமாம் குத்பா நடத்தும் வேளையில் என்று கூறப்படுகிறது. எனவே இமாம் குத்பா நடத்தும்போது தான் பேசக்கூடாது. இதற்கு பின்வரும் உமர்(ரலி) அவர்கள் காலத்தில் நடந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது.

''உமர்(ரலி) அவர்கள் மிம்பரில் அமர்ந்திருக்கும்போது பாங்கு கூறுபவர் தன் பாங்கை நிறுத்தும்வரை மக்கள் பேசிக் கொண்டிருப்பார்கள். மிம்பரில் (உமர்(ரலி) அவர்கள் எழுந்து நின்றுவிட்டாலோ அவர்கள் தனது இரண்டு குத்பாக்களையும் முடிக்கும் வரை மக்கள் பேசமாட்டார்கள்.'' இதை தஃலபா இப்னு அபீமாலிக் கூறுகின்றார்கள். நூல்: அல்முஅத்தா

எனவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானதாகும்.


28. விபச்சாரக் குழந்தைகள்

''விபச்சாரத்தின் மூலம் பிறந்த குழந்தைகள் மறுமையில் குரங்குகள், பன்றிகள் உருவில் (எழுப்பி) ஒன்று சேர்க்கப் படுவார்கள்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அம்ரு(ரலி) அறிவித்தார்கள். இச்செய்தியை உகைலீ அவர்கள் தனது அல் 'லுஅபாஃ' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதில் இடம் பெறும் ஸைது இப்னு இயாழ் என்பவர் சரியானவரல்ல இவரைப் பற்றி பின்வரும் செய்தி, இவரை பலவீனர் என அடையாளம் காட்டுகிறது.

ஒருவர் ஒரு ஹதீஸை அய்யூப் அவர்களிடம் கூறினார். அதை நிராகத்த அய்யூப் அவர்கள், இச்செய்தியை உனக்கு கூறியவர் யார்? என்று கேட்டார். முஹம்மது இப்னு வாஸிஉ (தான் அறிவித்தார்) என்று அவர் பதில் கூறினார். விடு அவர் சரியானவரே. அடுத்து எவர் மூலம் அறிவித்தீர்? என்று அய்யூப் அவர்கள் கேட்டதற்கு, ஜைது இப்னு இயாழ் என்று கூறினார். நீ (முஹம்மது இப்னு வாஸிஉ வரை நிறுத்திக் கொண்டு அதற்கு மேல் ஜைது இப்னு இயாழையும் கூறி) அதிகப்படுத்தாதே! என்று அய்யூப் அவர்கள் கூறினார்கள் என ஸலாம் இப்னு அபீ முதீஇ என்பவர் கூறுகின்றார்.

எனவே ஜைது இப்னு இயாழ் பலவீனர் என்பதாலும் இது பலவீனமான ஹதீஸாகிறது. மேலும் இதில் இடம்பெறும் ஈஸா இப்னு குத்தானுல் ருக்காஷி என்பவரும் சரியானவரல்ல இவரை இப்னு ஹிப்பான் போன்றோர் சரி கண்டாலும், இவன் ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்று இப்னு அப்துல்பர் அவர்கள் ஈஸாவைப் பற்றி குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஹதீஸை தனது 'அல் மவ்ளூஆத்' எனும் நூலில் இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் எழுதிவிட்டு, 'இது இட்டுக் கட்டப்பட்டது. எவ்வித அடிப்படையுமற்றது' என்று குறிப்பிடுகிறார்கள். சுயூத்தி அவர்களும் அதையே தனது நூலில் எழுதுகிறார்கள்.

இது ஆதாரப்பூர்வமான திருமறை வசனங்களுக்கும் மாறுபட்டுள்ளது.

எவன் வழிகேட்டில் செல்கின்றானோ அவன் தனக்கே கேடு செய்து கொண்டான். எந்த ஆத்மாவின் பாவச் சுமையையும் வேறொரு ஆத்மா சுமக்காது. (அல்குர்ஆன் 17:15)

(மறுமை நாளில் தன் சுமையைத் தவிர) ஒரு ஆத்மா மற்றொரு ஆத்மாவின் சுமையை சுமக்கமாது. கடினமான சுமையைச் சுமக்கும் ஆத்மா அதைச் சுமக்க (மற்றொன்றை) அழைத்தால் அது நெருங்கிய உறவினராக இருந்தாலும் அதிலிருக்கும் எதையும் சுமக்கப்படாது. (அல்குர்ஆன் 35:18)

அதே கருத்திலேயே 37:7, 53:38 வசனங்களும் அறிவிக்கின்றது. இவ்வசனங்கள், எவன் பாவச்சுமையையும் எவரும் அதுவும் அவர் எவ்வளவு நெருங்கிய உறவினர்களாக இருப்பினும் சுமக்க மாட்டார்கள் என்று தெளிவாக அறிவிக்கின்றன.

பெற்றோர் செய்த குற்றத்திற்காக பெற்றெடுக்கப்பட்ட குழந்தைகள் குற்றவாளிகளாக்கப்பட்டு குரங்குகளாக, பன்றிகளாக மாற்றப்படுவர் என்று கூறுவது; மேலே நாம் குறிப்பிட்டுள்ள வசனங்களுக்கு முரண்பாடாகவே அமையும்.

எனவே திருமறையின் வசனங்களுக்கு முரண்பாடாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கமாட்டார்கள் என்று முடிவு செய்து, இதை பலவீனமானது, ஏன்? இட்டுக்கட்டப்பட்டது என்றே கூறலாம்.


29. நபி(ஸல்) அவர்களை நேரில் காண வேண்டுமா?

''ஒருவர் ஜும்ஆ இரவில் குளித்து இரண்டு ரக்அத் தொழுது அந்த இரண்டு ரக்அத்களிலும் 'குல்ஹுவல்லாஹு அஹத்..' (112வது அத்தியாயம்) என்ற சூராவை 1000 தடவை ஓதி தொழுதுவிட்டு பின்பு தூங்கினால் நபி(ஸல்) அவர்களைக் காண்பார்.''

இச்செய்தியை இப்னுஷிஹாப் அவர்கள் கூறியதாக இப்னுல் ஜவ்ஸி அவர்கள் தனது 'அல் மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள முஹம்மது இப்னு உகாஷா என்பவர் பின்வருமாறு மேலும் கூறுகிறார்.

ஒவ்வொரு ஜும்ஆ இரவும் நான் குளித்து, இரண்டு ரக்அத்கள் தொழுவேன். நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டும் என்று சூராவை ஓதினேன். ஏறத்தாழ இரண்டு வருடம் இவ்வாறு செய்தேன். ஒரு நாள் குளிரான இரவு அன்று நான் குளித்துவிட்டு, 'குல்ஹுவல்லாஹு அஹது' எனும் சூராவை 1000 தடவை ஓதி இரண்டு ரக்அத் தொழுதேன்; பின்பு படுத்துவிட்டேன். எனக்கு ஸ்கலிதம் ஏற்பட்டது. இரண்டாம் முறையாக எழுந்து குளித்தேன். குல்ஹுவல்லாஹு சூராவை 1000 தடவை ஓதி இரண்டு ரக்அத் தொழுதேன். ஸஹர் நேரம் வந்த நிலையில் அந்த இரண்டு ரக்அத்களையும் முடித்து விட்டு நான் சுவற்றில் சாய்ந்திருந்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்கள் மீது இரண்டு போர்வை இருந்தது.

மேலும், முஹம்மது (இப்னு உகாஷா)வே! அல்லாஹ் உமக்கு ஆயுளை நீட்டி வைப்பானாக என்று நபி(ஸல்) கூறி என்னை (வாழ்த்துவதில்) முந்திக் கொண்டார்கள்.

இதுவும் இப்னுல் ஜவ்ஸி அவர்களின் அல் மவ்ளூஆத் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.

இச்செய்தியை அறிவிக்கும் இப்னு உகாஷா பெரும் பொய்யன் என்பதால் இச்செய்தியும், மேலே குறிப்பிட்டுள்ள இப்னு ஷிஹாப் அவர்களது பெயரால் அறிவிக்கப்படும் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இவன் இடம் பெறுவதால் அச்செய்தியும் 'பொய், இட்டுக்கட்டப்பட்டது என்பதை புரியலாம். இவன் பொய்யன்' என தாரகுத்னீ அவர்களும் கூறுகிறார்கள்.

மேலும் இச்செய்தி குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸும் கூறும் முக்கியமான நிகழ்வுக்கு மாற்றமாகவும் உள்ளது. ஆம்! மனித வாழ்வில் பிறப்பு எப்படி உண்மையோ அது போல் இறப்பு எனும் நிகழ்வு உண்டு.

நீங்கள் எங்கிருந்த போதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும். நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டையில் இருந்த போதிலும் சரியே. (அல்குர்ஆன் 4:78)

இவ்வசனம் மனிதனுக்கு கண்டிப்பாக மரணம் உண்டு என்பதைத் தெளிவாகவே அறிவிக்கிறது. ஆனால் மேற்கண்ட செய்தியோ நபி(ஸல்) அவர்களை அன்றும் உயிருடன் உள்ளனர் என்ற கருத்தைத் தெரிவிக்கின்றது. நபி(ஸல்) அவர்களும் கூட மரணிப்பவர்கள் தான் என்பதை பின்வரும் வசனம் தெளிவாகவே கூறுகிறது.

நிச்சயமாக நீரும் மரணிப்பவர் நிச்சயமாக அவர்களும் மரணிப்பவர்களே! (அல்குர்ஆன் 39:30)

மேலும் நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள். ஆனால் மக்களோ, உமர்(ரலி) அவர்கள் உட்பட நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை என்று கூறிக் கொண்டிருந்தனர். அங்கே வந்த அபூபக்கர்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களின் முகத்தை திறந்து, நெற்றியில் முத்தமிட்டு விட்டு, நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்ட செய்தியை மிம்பரில் ஏறி மக்களிடம் தெரிவிக்கிறார்கள். அப்போது அவர்கள், ''ஒருவன் அல்லாஹ்வை வணங்கி இருந்தால் அல்லாஹ் தான் உயிருடன் இருப்பவன். அவன் மரணிப்பதில்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் வணங்கி இருந்தால் அவர்கள் இறந்துவிட்டார்கள்'' என்று குறிப்பிடுகிறார்கள். இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் புகாரீ, நஸயீ, இப்னுமாஜா, பைஹகீ, அஹ்மத் ஆகிய நூல்களில் இடம்பெற்றுள்ளது.

இங்கே அபூபக்கர்(ரலி) அவர்களின் அறிவுரையை கவனத்தில் கொள்ள வேண்டும். ஒருவனை வணங்குவதாக இருந்தால் அவன் இறப்பெய்யாதவனாக இருக்க வேண்டும். அதாவது கடவுள் மட்டுமே இறப்பை அடையாதவன். நபி(ஸல்) அவர்கள், மனிதரே! அவர்களுக்கு மரணம் உண்டு. அவர்கள் தற்போது மரணித்து விட்டார்கள் என்ற கருத்தைத் தான் அபூபக்கர்(ரலி) அவர்களின் கூற்று விளக்குகிறது.

நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பது உண்மை எனத் தெரியும்போது, மரணத்தை தழுவிய அவர்கள் எப்படி நேரில் வருவார்கள்? அதுவும் பொய்யை நம்பச் செய்ய வேண்டும் என்ற உந்துதலில், போர்வை அணிந்து வந்தார்கள் என்றும் பொய் கூறப்பட்டுள்ளது.

எனவே மரணித்தவர் வரப்போவதில்லை. வரமுடியாத நிலையில் உள்ள ஒருவரை வருவார்கள் என்று கூறுவது சரியல்ல. இது குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் மாற்றமாக உள்ளது என்பதால் இச்செய்தி இட்டுக் கட்டப்பட்டது தான் என எந்த ஒரு முஸ்லிமும் முடிவுக்கு வரவேண்டும்.


30. நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமா?

''ஒரு மூமின் வெள்ளிக்கிழமை இரவு இரண்டு ரக்அத் தொழுது அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு... சூராவை 25 தடவை ஓதிவிட்டு, பின்பு ஸலாம் கொடுத்துவிட்டு 'ஸல்லல்லாஹு அலா முஹம்மதின் நபிய்யில் உம்மிய்யி' என்று ஆயிரம் தடவை கூறினால் அன்றைய இரவில் கனவில் என்னை நிச்சயமாக காண்பான். மறுவாரம் வெள்ளி வரும் முன் கனவில் என்னைக் காண்பான். என்னை ஒரு வாரம் பார்த்துவிட்டால் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கும் ஒரு செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது 'அல் மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே அறியப்படாதவர்கள் அறிமுகமற்ற பலர் இடம் பெறுவதிலிருந்தே இது பலவீனமான செய்தி தான் என்பது புலனாகும்.

நபி(ஸல்) அவர்களை கனவில் நாம் காண முடியுமா? காண முடியும் என்பதற்கு சிலர் கீழ்க்கண்ட ஹதீஸ்களை ஆதாரமாக வைக்கின்றனர்.

''யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

யார் என்னைக் காண்கிறானோ அவன் உண்மையையே கண்டான் என்று நபி(ஸல்) கூறியதாக அபூகதாதா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்

இந்த ஹதீஸ்கள் மேலெழுந்த வாயாகப் பார்க்கும் போது நபி(ஸல்) அவர்களை கனவில் காண முடியும் என்று தெரிந்தாலும், உண்மையில் நபி(ஸல்) அவர்களை கனவில் காண வேண்டுமானால் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கனவில் காண்பவர் நபி(ஸல்) அவர்களைத் தான் கண்டு கொண்டார் என்றும் அல்லது இதுவரை நேரில் காணாதவர், கனவின் மூலம் கண்டால் இனி நேலும் காண்பார் என்றும் தான் முடிவுக்கு வரவேண்டும். 'இந்த முடிவு தான் மேற்கொள்ள வேண்டும்' என்பதை பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

'யார் என்னை கனவில் காண்கிறாரோ அவர் (நேலும்) விழிப்பிலும் என்னைக் காண்பார். ஏனென்றால் ஷைத்தான் என் வடிவத்தில் வரமாட்டான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

கனவில் கண்டால் நேலும் காண்பார் என்றால், நேரில் காண்பது அவர்கள் உயிருடன் உள்ள காலத்திலேயே பொருந்தும். தெளிவான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் மூலம் அவர்கள் உயிருடன் வசிக்காத காலத்தில் உள்ள நம்மைப் போன்றவர்களால் நபி(ஸல்) அவர்களைக் காண முடியாது என்பது தெளிவாகிறது.

இந்த ஆதாரப்பூர்வமான நிலைக்கும் மாற்றமாக உள்ளதாலும் மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டது தான் என்பது புரியும்.


31. கோபம் ஏற்பட்டால்...?

''நிச்சயமாக கோபம் (கொள்வது என்பது) ஷைத்தான் (குணங்களில்) நின்றுமுள்ளதாகும். நிச்சயமாக ஷைத்தான் நெருப்பில் இருந்தே படைக்கப்பட்டுள்ளான். தண்ணீரால் தான் நெருப்பு அணையும். எனவே உங்களில் ஒருவருக்கு கோபம் ஏற்பட்டால் ஒ;ச் செய்து கொள்ளட்டும்.''

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக கூறப்படும் இச்செய்தி அஹ்மத், அபூதாவூத், இப்னு அஸாகீர் ஆகிய நூல்களிலும் புகாரீ அவர்களின் தாஹ் நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் யாரென்றே அறியப்படாத இருவர் இடம்பெறுகின்றனர். எனவே இது சரியில்லாத ஹதீஸாகும். இது போன்றே மற்றொரு செய்தி முஆவியா(ரலி) அவர்கள் அறிவிப்பதாக வருகிறது.

''கோபம் ஷைத்தானின் நின்றுமுள்ளதாகும். ஷைத்தான் நெருப்பிலானவன். தண்ணீர் தான் நெருப்பை அணைக்கும். எனவே உங்களில் எவருக்கேனும் கோபம் வந்தால் அவர் குளிக்கட்டும்.''
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறி, தான் கேட்டதாக முஆவியா(ரலி) அவர்கள் அறிவித்ததாக அபூநயீம், இப்னு அஸாகீர் ஆகியோர் தங்களின் நூல்களில் பதிவு செய்துள்ளனர்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் யாசீன் இப்னு அப்துல்லா இப்னு உர்வா இடம் பெறுகிறார். இவரைப் பற்றி அறிமுகம் ஏதும் இல்லை. அப்துல் மஜீத் இப்னு அப்துல் அஜீஸ் என்பவரும் இடம் பெறுகிறார். அவரைப் பற்றி இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடும் போது, 'இவர் உண்மையாளர் தான். எனினும் தவறு செய்பவர் எனக் கூறுகிறார்கள். இவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப் பட்டவர்' என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள். எனவே இச்செய்தியும் கூட சரியற்றதாகும்.

அப்படியானால் 'கோபம் கொள்ளலாமா?' என்று சிலருக்கு எண்ணத் தோன்றும். அது சரியல்ல. கோபம் கொள்வதில் தவறில்லை என்ற கருத்தில் இச்செய்தியை விமர்சிக்கவில்லை. கோபம் கொள்ளக்கூடாது என்பதற்கு பின்வரும் ஆதாரப் பூர்வமான பல ஹதீஸ்கள் உண்டு.

எனக்கு போதனை செய்யுங்கள் என்று ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டபோது, கோபம் கொள்ளாதே! என்றனர். பல முறை அவர் கேட்டபோதும், 'கோபம் கொள்ளாதே' என்றே கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

தாக்கும் திறன் அடிப்படையில் வீரனை எடை போடப்படு வதில்லை. வீரன் என்பவன் கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

கோபத்தை தவிர்க்க வேண்டும் என்பதை ஆதாரப் பூர்வமான ஹதீஸ்கள் அறிவிப்பதால் கோபத்தை கைவிட வேண்டும். அதே சமயம் கோபத்தை கைவிடக் கூறும் வழிமுறை தான் சரியல்ல என்பதே இங்கே விமர்சிக்கப்படுகிறது.

கோபம் ஏற்பட்டால் ஒளூச் செய்ய வேண்டும் என்றும் குளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டு வரும் செய்திகள் சரியல்ல என்பதே இங்கே கவனிக்கப்பட வேண்டிய நிலை. கோபம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்தி விளக்குகிறது.

''ஒருவர் நின்று கொண்டிருக்கும்போது கோபம் வந்தால் உட்கார்ந்து விடட்டும், கோபம் போய்விட்டால் ச. இல்லையேல் படுத்துவிடட்டும்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூதர்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்கள்: அஹ்மத், திர்மிதீ

எனவே, மேலே குறிப்பிட்டுள்ள ஒளூ அல்லது குளிக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ள செய்திகள் ஹதீஸ்கள் அல்ல ஹதீஸ்கள் பெயரால் திணிக்கப்பட்டவையே.


32. மழைக்காலங்களில் தான் மனிதனின் உள்ளம்...?

''மனிதனின் உள்ளங்கள் மழைக்காலங்களில் தான் மிருதுவாக ஆகும். ஏனெனில் (முதல் மனிதரான) ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து தான் அல்லாஹ் படைத்தான். மண், மழைக்காலத்தில் தான் மிருதுவாக இருக்கும்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் என அபூநயீம் அவர்கள் தனது 'அல்ஹுயா' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் உமர் இப்னு யஹ்யா என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர். இப்னுஹஜர் அவர்கள் இவரைப் பற்றி குறிப்பிடும் போது இந்த அம்ரு இப்னு யஹ்யா என்பவர் உமர் இப்னு யஹ்யா இப்னு உமர் இப்னு அபீஸல்மா இப்னு அப்துர் ரஹ்மான் இப்னு அவ்பு என்பவராகத்தான் இருக்க வேண்டும். இவரை தாரகுத்னீ அவர்கள் பலவீனப்படுத்திக் கூறுகின்றனர் என்று கூறுகிறார்கள்.

மேலும் இது அறிவுக்கே ஏற்றுக் கொள்ளாத விஷயமாகும். சாதாரண நிலையில் உள்ளவன் கூட இது பொய். இட்டுக்கட்டப்பட்டது தான் என்று விளங்கி விடுவான். இஸ்லாம் அறிவார்ந்த மார்க்கம் என்ற கூற்றை பொய்ப்படுத்த எண்ணியவன் தான் இதை இட்டுக்கட்டி இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை.


33. அரபி மொழி பேசுபவன் ஃபார்ஸி மொழி பேசக்கூடாது?

''உங்களில் எவரேனும் அரபியில் அழகாக பேசினால் அவர் பார்ஸி மொழியில் பேசிட வேண்டாம். மீறி பேசினால் அது நயவஞ்சகத் தன்மையை ஏற்படுத்திவிடும்.''

இப்னு உமர்(ரலி) அறிவிப்பதாக இச்செய்தி ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் நான்காவது அறிவிப்பாளர் உமர் இப்னு ஹாரூன் என்பவர் சரியானவரல்ல! இவரை இப்னு முயீன் பலவீனர் என்று கூறுவதாகவும், இதர ஹதீஸ் கலையினர் இவரை கைவிட்டு விட்டதாகவும் தஹபீ அவர்கள் கூறுகிறார்கள்.

அரபி மொழி மீது மோகம் கொண்டு, அதே சமயம் ஃபார்ஸி மொழியில் கோபம் கொண்டவனால் தான் இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டிருக்க வேண்டும்.

தற்போது எப்படி தமிழ் மொழி மீது பற்று கொண்டு இந்தி மொழி பேசுபவன் மீது வெறுப்புடன் சிலர் உள்ளனரோ, அது போல் அரபி மொழி மீது மோகத்துடன் இருந்த ஒரு கூட்டம் தான் இச்செய்தியை இட்டுக் கட்டிக் கூறியிருக்க வேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை.


34. பட்டு மெத்தையில் அமரலாமா?

''நபி(ஸல்) அவர்கள் பட்டு விரிப்பில் அமர்ந்திருந்தனர்.''

இதை ஸைலஈ அவர்கள் தன் நூலான 'நஸ்புர் ரஃயா'வில் குறிப்பிடுகிறார்கள். ஹனபீ மத்ஹபு நூலான 'ஹிதாயா'விலும் கூட இதுபோன்றே கூறப்பட்டுள்ளது. பட்டு விரிப்பில் அமரலாம் என ஹனபீ மத்ஹபு கூறவும் செய்கிறது. ஆனால் எந்த அடிப்படையுமற்ற செய்தியாகும் இது.

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் மாற்றமாகத் தான் உள்ளது.

தங்கம், வெள்ளி பாத்திரங்களில் உண்பதையும், குடிப்பதையும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குத் தடை விதித்திருந்தனர். பட்டு ஆடை அணிவதையும், அதன் மேல் அமர்வதையும் தடை செய்திருந்தனர் என ஹுதைஃபா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

பட்டு ஆடையில் அமர்வதை தடை செய்துள்ளதாக வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு மாற்றமாகவே இச்செய்தி அமைந்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் மட்டுமே தனியே சலுகை அளிக்கப்பட்டு இருந்தனர் என்று எவரேனும் கூறினால் அதற்கும் ஆதாரம் காட்டவேண்டும்.

நபிவழிக்கு மாற்றமாகத் தான் மத்ஹபுகள் உள்ளன என்பதற்கு இந்த பட்டு விரிப்பில் அமரலாம் என்ற ஹனபீ மத்ஹபின் கூற்று, சான்றாக உள்ளது.

பட்டு மெத்தையிலோ, விரிப்பிலோ அமரலாம் என்ற கருத்தில் உள்ள மேற்கண்ட செய்தி எவ்வித அடிப்படையுமற்ற செய்தியுமாகும்.


35. இகாமத் வாசகம் ஒரு தடவை மட்டும் கூறினால் குற்றமா?

''இகாமத் வாசகத்தை ஒற்றையாக ஒருவர் கூறினால் அவர் என்னைச் சார்ந்தவல்லை.''

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்ற இச்செய்தியை இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் தனது  மவ்ளூஆத் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இரண்டாம் அறிவிப்பாள ராக ழஹ்ஹாக் இப்னு மஸாஹிம் இடம் பெறுகிறார். மூன்றாம் அறிவிப்பாளராக ஜுவைபிர் இடம் பெறுகின்றார். மேலும் யாரென்றே அறியப்படாத சிலரும் இடம் பெற்றுள்ளனர்.

இரண்டாம் அறிவிப்பாளர் ழஹ்ஹாக் என்பவர், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் எதையும் செவியுறவில்லை என அபூ ஸர்ஆ கூறுகிறார்கள். மஷாஷ் அவர்களிடம் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் ழஹ்ஹாக் எதையும் கேட்டுள்ளாரா? என்று கேட்ட போது, அவரை அவர் ஒரு போதும் பார்த்ததே இல்லை என்று பதில் கூறினார்கள்.

ழஹ்ஹாக் என்பவரிடமிருந்து கேட்டதாக மூன்றாம் அறிவிப்பாளர் ஜுவைபிர் அறிவிப்பவை, மோசமானவை என இப்னு முயீன் கூறுகின்றார்கள். மேலும் பின்வரும் ஹதீஸுக்கும் மாற்றமாகவும் உள்ளது.

''நபி(ஸல்) அவர்கள் பாங்கை இரண்டிரண்டாகவும் இகாமத்தை ஒவ்வொன்றாகவும் கூறும்படி பிலால்(ரலி) அவர்களுக்கு கட்டளையிட்டார்கள்'' என அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பாங்கு இரண்டிரண்டாகவும் இகாமத் ஒவ்வொன்றாகவும் என இருந்தது. 'கத்காமதிஸ்ஸலாத், கத் காமதிஸ்ஸலாத்' என்று நீ (இரண்டு தடவை) கூறுவதைத் தவிர என்று இப்னு உமர்((ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: நஸயீ

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் இகாமத் வாசகம் ஒரு முறை கூறியதாக வந்துள்ளபோது, ஒரு முறை கூறினால், அவன் என்னைச் சேர்ந்தவன் அல்லன் என நபி(ஸல்) அவர்கள் கூறுவார்களா? எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை நினைவில் கொள்க!


36. அசுத்த இடம் ஸஜ்தா செய்தால் சுத்தமாகுமா?

''நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் அவர்களின் உறவுக்கார் (களான பேரர்)கள் ஹஸன், ஹுஸைன் இருவரும் மலம் கழித்தார்கள். அப்போது நான், 'இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொழுமிடத்தில் உங்களின் உறவுக்கார சிறுவர்கள் ஹஸன்-ஹுஸைன் மல-ஜலம் கழிக்கிறார்களே' என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) ''அவர்கள் சிகப்பு நிறப்பெண்ணே! என் சமுதாயத்தில் உள்ள ஒருவர் தனது நெற்றியை பூமியில் வைத்தால் அந்த ஸஜ்தா மூலம் ஏழு பூமி வரை அல்லாஹ் தூய்மையாக்கிவிடுவான். எனவே அந்த இடம் அசுத்தத்தை ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்கள்.''

இதை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்து, இப்னு ஹிப்பான், தப்ரானீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் நான்காவதாக இடம் பெறும் பஸீக் இப்னு ஹஸ்ஸான் என்பவர் பொய் கூறுபவராவார். இச்செய்தியை இப்னு ஹிப்பான் அவர்கள் தன் மஜ்ரூஹீன் எனும் நூலில் பதிவு செய்து விட்டு, இவர் நல்லவர்களின் பெயர்களைப் பயன்படுத்தி இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை கூறும் நபராவார் என்றும் குறிப்பிடுறார்கள்.

இப்னு அதீ அவர்கள் 'இவன் ஹதீஸ்கள் நிராகப்பட வேண்டியவை என்றும், தாரகுத்னீ அவர்கள் இவன் ஹதீஸ்கள் ஒதுக்கப்பட வேண்டியவை' என்றும் கூறுகிறார்கள்.

இதே ஹதீஸ் வேறு அறிவிப்பாளர் வரிசையுடன் தப்ரானீயில் இடம் பெறுகிறது. இதை அறிவிக்கும் ஆயிஷா(ரலி) அவர்களை இதன் இரண்டாவது அறிவிப்பாளரான முஅப்பத் என்பவர் சந்திக்கவே இல்லை. இதனால் தொடர்பு அறுந்தவை (முன்கதிஹ்) எனும் அந்தஸ்த்தை அடைந்து பலவீன ஹதீஸாகிறது.
இது மட்டுமல்ல. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் முரண்பட்டு இருக்கிறது.

கிராமப்புற அரபி ஒருவர் மதீனா நகர் பள்ளிவாசலில் சிறுநீர் கழித்தார். (இதைக் கண்டதும்) அங்கிருந்த சிலர் அவரை அடிக்க நெருங்கினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு விடுங்கள். (அவர் சிறுநீர் கழிப்பதை) தடுக்காதீர்கள் என்று கூறினார்கள். அவர் (சிறுநீர் கழித்து) முடித்ததும், ஒரு வாளி தண்ணீர் வரவழைத்து அந்த இடத்தில் ஊற்றினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

தொழுமிடத்தில் சிறுநீர் கழித்ததால் கழுவியுள்ளனர். ஆனால் மேற்கண்ட செய்தி உண்மையானால், கழுவ வேண்டியதில்லை. தொழும்போது தானாகவே சுத்தமாகி விடும் தானே! ஆனால் கழுவி உள்ளனர் எனும் போது மேற்கண்ட செய்தி 'ஹதீஸ்களின் பெயரால்' உருவாக்கப்பட்டுள்ளது எனப் புரியலாம்.


37. திருமணத்திற்கு முன் ஹஜ் செய்தால்...?

''ஹஜ் செய்வது திருமணத்திற்கு முன்பு தான்.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இது சுயூத்தி அவர்களின் 'அல்ஜாமிஉஸ்ஸகீர்' எனும் நூலில் பதிவாகியுள்ளது. 'முஸ்னதுல் பிர்தவ்ஸ்' எனும் நூலில் தைலமீ அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.

இதில் கியாஸ் இப்னு இப்ராஹீம் என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் கலையினரால் கைவிடப்பட்டவர் என தஹபீ கூறுகிறார்கள். மைசிரா இப்னு அப்துர்ரப் என்பவரும் இடம் பெறுகிறார். இவர் பெரும் பொய்யர் என தஹபீ கூறுகிறார். மோசமான பொய்யர் என கியாஸ் பற்றி இப்னு முயீன் கூறுகிறார். இதையே அபூதாவூத் அவர்களும் கூறுகிறார்கள்.

''ஹஜ் செய்யும் முன் ஒருவர் திருமணம் செய்து விட்டால் அவர் குற்றம் செய்யத் துவங்கியவராவார்”

என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இதை இப்னு அதீ அவர்கள் பதிவு செய்துள்ளனர்.

இதன் அறிவிப்பாளர்களில் ஆறாவது நபராக இடம் பெறும் முஹம்மத் இப்னு அய்யூப் நிறைய இட்டுக்கட்டி அறிவிப்பவர் என்று இப்னுல் ஜவ்ஸி கூறுகிறார்கள். இதை சுயூத்தி அவர்களும் தன் நூலில் உறுதிப்படுத்துகிறார்கள். '7வது அறிவிப்பாளரான அஹ்மத் இப்னு ஜும்ஹுர் பொய் கூறுபவன்' என சுயூத்தி கூறுகிறார்கள். மேலும் ரஜாஉ இப்னுரூஹ் என்பவர் பற்றிய குறிப்பையும் நான் காணவில்லை என சுயூத்தி கூறுகிறார்கள்.

ஹஜ் என்பது தொழுகை, நோன்பு போன்ற கடமை தான். அதிலும் வசதி உள்ளவர்கள் மீதுள்ள கட்டாயக் கடமையாகும். இதுபற்றி குர்ஆனும், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் கூறுகின்றன.

அல்லாஹ்வுக்காக இந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது, மனிதர்களில் அதன்பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். (அல்குர்ஆன் 3:98)

மனிதர்களே! அல்லாஹ் உங்கள் மீது ஹஜ்ஜைக் கடமையாக்கி யுள்ளான். எனவே நீங்கள் ஹஜ் செய்யுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு ஆற்றிய உரையின் போது குறிப்பிட்டார்கள் என்று அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், நஸயீ

இந்த வசனமும் ஹதீஸும் பொதுவாக ஹஜ் கடமை என்று தான் கூறுகிறதே தவிர, திருமணத்திற்கு முன்பே செய்ய வேண்டும் என்று கூறவில்லை. இதிலிருந்தும் மேற்கூறிய செய்திகள் பொய் என்பதைப் புரியலாம்.

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர பெண்கள் பயணம் மேற்கொள்ளக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் தமது சொற்பொழிவில் குறிப்பிட்டார்கள். அப்போது ஒருவர் எழுந்து அல்லாஹ்வின் தூதரே! என் மனைவி ஹஜ் செய்வதற்காக புறப்பட்டுவிட்டார். நான் இன்னன்ன போர்களில் ஈடுபடுத்தப்பட்டு விட்டேன் என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் நீர் புறப்பட்டுச் சென்று உம் மனைவியுடன் ஹஜ் செய்வீராக! என்று கூறினார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், அஹ்மத்

திருமணத்திற்கு பின்பே ஹஜ் செய்யச் சென்றுள்ளனர் என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது. எண்ணற்ற நபித் தோழர்களும் தோழியரும் திருமணம் செய்த பிறகு ஹஜ் செய்யச் சென்றுள்ளனர் என்பதை பல ஹதீஸ்கள் தெளிவாகவே அறிவிக்கின்றன. நபி(ஸல்) அவர்களும், இதர நபித்தோழர்களும் ஹஜ் செய்ய செல்லும் போது தங்களது மனைவியரை அழைத்துச் சென்றனர் என்பதையும் பல ஹதீஸ்கள் விளக்குகின்றன.

எனவே திருமணத்திற்கு முன்பே ஹஜ் செய்யச் செல்ல வேண்டும். அப்படி மீறி செய்தால் குற்றம் என்றெல்லாம் வரும் மேற்கண்ட செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவையே!


38. குழந்தைக்கு முஹம்மது என பெயரிடா விட்டால்...?

''ஒருவருக்கு மூன்று குழந்தைகள் இருந்து, அவர்களில் ஒருவருக்கேனும் முஹம்மத் என்று பெயரிடாவிட்டால் அவர் மடையரே!''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு அது தப்ரானீ (கபீர்)யில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ள முஸ்அப் இப்னு ஸயீத் என்பார் சரியானவரல்ல என்பதால் இந்த ஹதீஸும் சரியானதாக இல்லை.

இந்த முஸ்அப் இப்னு ஸயீத், நம்பகமானவர் வழியாக பல தவறான ஹதீஸ்களை அறிவிப்பவர் என்று இப்னு அதீ அவர்கள் கூறுகின்றார்கள்.

இதே ஹதீஸ் வேறு அறிவிப்பாளர் வரிசையில் வாஸிலா இப்னு அஸ்கஉ(ரலி) வழியாகவும் மற்றும் ஜஃபர் இப்னு முஹம்மத் அவர்கள் தன் பாட்டனார் வழியாகவும் அப்துல் மலிக் இப்னு ஹாரூன் இப்னு அன்திரா அவர்கள் தன் பாட்டனார் வழியாகவும் அறிவிப்பதாக இடம்பெற்றுள்ளது. இப்னு புகைர் அவர்கள் இந்த ஹதீஸ்களை தனது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

வாஸிலா அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில், உமர் இப்னு மூஸா அல்வஜீஹி என்ற இட்டுக்கட்டிக் கூறுபவர் இடம் பெறுவதால் அந்த ஹதீஸ் பலவீனப்பட்டுப் போகிறது.

ஜஃபர் இப்னு முஹம்மத் அவர்கள் தனது பாட்டனார் வழியாக அறிவிக்கும் ஹதீஸில், அப்துல்லா இப்னு தாஹிர் அர்ராஸீ என்பவர் இடம் பெறுகிறார். இவரை இப்னுல் ஜவ்ஸீ, தஹபீ ஆகியோர் குறை கூறுகிறார்கள். இந்த ஹதீஸும் பலவீனமானதாகிறது.

தனது பாட்டனார் வழியாக அறிவிக்கும் அப்துல் மலிக் இப்னு ஹாரூன் என்பவரே பொய்யர்; இட்டுக்கட்டுபவர் என்பதால் அந்த ஹதீஸும் பலவீனமானதாகிறது.

பல நபித்தோழர்களுக்கு மூன்று ஆண் குழந்தைகளுக்கு மேல் உள்ளது. ஆனால் அவர்களில் எவரும் முஹம்மத் என்று பெயரிட்டதாக எந்த ஹதீஸும் இல்லை. நபி(ஸல்) அவர்களின் சொல்லை மிக உயர்வாக மதித்து பின்பற்றி வாழ்ந்த நபித் தோழர்களின் ஒவ்வொரு குடும்பத்திலும் முஹம்மத் என்று பெயரிடப்பட்டுள்ளவர்கள் இருந்தார்களா என்றால் அதுவும் இல்லை. இந்த அடிப்படையிலும் 'முஹம்மத் என்று தன் குழந்தைகளில் எவருக்கேனும் ஒருவருக்கு பெயரிடாதவர் மடையரே' என்று வரும் செய்தி இட்டுக்கட்டப்பட்டதே!

நபிமார்களின் பெயர்களால் பெயடுங்கள். அல்லாஹ்வுக்கு மிகப் பிரியமான பெயர் அப்துல்லா. அப்துற்றஹ்மான் என்பதாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூவஹ்பு(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: அபூதாவூத்

இது ஆதாரப்பூர்வமான ஹதீஸாகும். இது போன்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களாக, முஹம்மத் என்று பெயரிடக் கூறும் ஹதீஸ்கள் உள்ளதா என்றால் அதுவும் இல்லை. எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டதே என்பதில் சந்தேகமில்லை.


39. பெண்கள் விளையாட்டுப் பொருட்கள்?

''பெண் விளையாட்டுப் பொருளாவாள். நீங்கள் இஷ்டப்படி நடந்து கொள்ளுங்கள்''

என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்னுலுஹைஆ என்பவர் பலவீனமானவராவார். மேலும் இதில் இடம் பெற்றுள்ள அஹ்வஸ் என்பவரும் அம்ரு இப்னு ஆஸ்(ரலி) அவர்களுக்குமிடையே அறிவிப்பாளர் வரிசை விடுபட்டுள்ளது.

''பெண் விளையாட்டுப் பொருளாவாள். அவளை விளையாட்டுப் பொருளாக உபயோகிப்பவர் அழகாக வைத்துக் கொள்ளட்டும். ''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூபக்கர் இப்னு ஹஸ்ம் என்பார் கூறுகிறார். இதை ஹாரீஸ் இப்னு அலீ உஸாமா அவர்கள் தனது முஸ்னதில் பதிவு செய்துள்ளனர்.

இதை அறிவிக்கும் அபூபக்கர் இப்னு ஹஸ்ம் இவர்கள் நபித்தோழரல்ல ஹிஜ்ரி 120-ல் இறந்தவர். இந்த வகையில் இது முர்ஸலாகும். மேலும் ஸுஹைர் இப்னு முஹம்மத் அல்குராஸானீ அஷ்ஷாமீ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனராவார். மேலும் அஹ்மத் இப்னு யஸீத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பற்றிய அறிமுகம் ஏதுமில்லை. எனவே இதுவும் பலவீனமான செய்தியே!

இதை பெண்களை கேவலப்படுத்த வேண்டும் என்றும் இஸ்லாத்தை இழிவு படுத்த வேண்டும் என்றும் எண்ணுவோர் தான் இட்டுக்கட்டியிருக்க வேண்டும்.


40. அழகு, பணம், பாரம்பரியம் இவற்றிற்காக திருமணம் செய்யலாம்?

''ஒரு பெண்ணை அவளின் கண்ணியத்திற்காக ஒருவன் திருமணம் செய்தால் அவனுக்கு அல்லாஹ் இழிவைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்த மாட்டான். அவளின் பணத் திற்காக அவளை திருமணம் செய்தால் அவனுக்கு அல்லாஹ் வறுமையைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்தமாட்டான். அவளின் அழகுக்காக அவளை திருமணம் செய்தால் அவனுக்கு கைசேதத்தைத் தவிர (வேறு எதையும்) அதிகப்படுத்துவதில்லை. ஒருவன் ஒரு பெண்ணை திருமணம் செய்கிறான். அவன் தன் பார்வையை (பிற அன்னியப் பெண்களைப் பார்ப்பதை விட்டும்) தாழ்த்திக் கொள்ளவும் அல்லது தன் மர்மஸ்தானத்தை பாதுகாக்கவும் அல்லது தன் உறவினரை சேர்த்து வாழவுமே தவிர வேறு எதற்கும் அவளை திருமணம் செய்யவில்லை என்றால், அல்லாஹ் அவனுக்கு அவளின் விஷயத்தில் பரக்கத் செய்கிறான். அவளுக்கும் அவன் விஷயத்தில் பரக்கத் செய்கிறான்.''
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்து தப்ரானி அவர்களின் அல் அவ்ஸத் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் குளறுபடி உள்ளதால் இது பலவீனமான செய்தியாகும். இரண்டாம் அறிவிப்பாளரான இப்றாஹீம் இப்னு அபீ அப்லா அவர்கள் வழியாக அப்துஸ்ஸலாம் இப்னு அப்துல் குத்தூஸ் மட்டுமே இச்செய்தியை அறிவிக்கிறார். ஆனால் இந்த அப்துஸ்ஸலாம் இப்னு அப்துல் குத்தூஸ் சரியானவரல்லர்.

இவர் பலவீனமானவர் என அபூஹாதம் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இவரது தந்தை அப்துல் குத்தூஸ் சரியானவரல்ல. இவரையும் விட இவரது மகன் அப்துஸ்ஸலாம் மிக மோசமானவர் என அபூதாவூத் குறிப்பிடுகிறார்கள்.

இவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிவிப்பவர் என்றும், இவர் இப்றாஹீம் இப்னு அபீ அப்லா வழியாகவே இவர் அறிவிப்பார் என்றும் அழ்ழுஅபாஉ எனும் நூலில் இப்னு ஹிப்பான் கூறுகிறார்கள். ஹைதமீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறுகிறார்கள். முன்திரீ அவர்கள் தனது அத்தர்கீப் நூலில் பலவீனர் என்றே குறிப்பிடுகிறார்கள்.

''நீங்கள் பெண்களை அவர்களின் அழகுக்காக திருமணம் செய்யாதீர்கள். அவர்களின் அழகே அவர்களை நாசப்படுத்தவும் கூடும். மேலும் அவர்களின் செல்வங்களுக்காகவும் அவர்களை திருமணம் செய்யாதீர்கள். அவர்களின் செல்வங்களே அவர்களை வழிகெடுக்கவும் கூடும். எனினும் அவர்களை மார்க்கத்திற்காக திருமணம் செய்யுங்கள். மார்க்கம் அறிந்த கருப்பு நிற காதறுந்த ஒரு அடிமைப் பெண்ணே (இதர பெண்களை விட திருமணம் செய்ய) மிகச் சிறந்தவர்.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இப்னுமாஜா, பைஹகீ ஆகிய நூல்களில் இது இடம் பெற்றுள்ளது.

இதில் இஃப்ரீகீ என்பவர் இடம்பெறுகிறார். இவரது பெயர் அப்துற்றஹ்மான் இப்னு ஸியாத் இப்னு அஷ்ஷுஅபான் என்பதாகும். 'இவர் பலவீனமானவர்' என தனது 'அஸ்ஸவாயித்' எனும் நூலில் பூஸி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே இதுவும் பலவீனமான ஹதீஸ் தான்.

ஹதீஸ்களின் பெயரால் உள்ள மேற்கண்ட இரண்டு செய்திகளுமே நடைமுறையில் சாத்தியப்படாத-இல்லாத ஒன்றையே அறிவிக்கின்றன.

கண்ணியம் கருதி, குடும்ப பாரம்பரியத்திற்காக திருமணம் செய்யும் ஒருவனுக்கு இழிவு தான் மிஞ்சும் என்று முதல் ஹதீஸ் கூறுகிறது. கண்ணியமான குடும்பத்தில் இருந்து திருமணம் செய்யும் அனைவரும் இழிவான நிலைக்குத் தான் ஆளாகி உள்ளார்களா? நிச்சயமாக இல்லை. இந்த ஹதீஸ்படி இழிந்த நிலைக்குத் தானே ஆகி இருக்க வேண்டும். இல்லை என்றால் ஹதீஸின் கருத்து பொய் என்று தானே ஆகும். நபி(ஸல்) அவர்கள் நடைமுறையில் காணமுடியாத-பொருந்தாத செய்தியைச் சொல்லி இருப்பார்களா? சொல்லியிருக்கமாட்டார்கள். இதிலிருந்தே இச்செய்தி பொய் என்பது புரியும்.

இதுபோல் அவளிடம் உள்ள வசதி கருதி ஒரு பெண்ணை திருமணம் செய்தால் அவன் ஏழையாகத்தான் ஆவான் என்கிறது அந்த ஹதீஸ். இப்படி எவராவது திருமணம் செய்ததால் தான் ஏழ்மைக்கு ஆளானார்களா? என்றால், அப்படி ஒருவரை காண்பதும் அதே! இதன் மூலமும் நபி(ஸல்) அவர்கள் இதை கூறியிருக்க மாட்டார்கள் என்பதை அறியலாம்.

இதுபோல் தான் அழகும்; அழகியைத் திருமணம் செய்த அனைவருமே கைசேதம் அடைந்ததில்லை என்பதை எவரும் மறுக்கமாட்டார்கள். இதனாலும் இது பொய் என்பது தெளிவாகும்.

இவ்வாறே இரண்டாவதாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ள பலவீனமான செய்தியைப் பாருங்கள்.

''அழகுக்காக திருமணம் செய்தால் அழகு அழியவும் கூடும். வசதியுள்ள பெண்களை திருமணம் செய்தால் அவர்கள் அதன் மூலம் வழி கெடவும் கூடும் என்று அச்செய்தி கூறுகிறது.''

அழகுள்ள பெண்கள் அனைவரும் தங்களின் அழகினாலேயே நாசமடைந்தவர்களுமல்ல. வசதிமிக்க பெண்கள் அனைவரும் அவர்களின் செல்வத்தினாலேயே வழிகெட்டவர்களுமல்ல. இது தான் உண்மை நிலை. இதிலிருந்து இரண்டாவது செய்தி புனையப்பட்டதே என்பது புரியும்.

மேலும் ஆதாரப்பூர்வமான செய்திக்கும் இது முரணாக உள்ளது. ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் பாருங்கள்.

''ஒரு பெண் அவளது செல்வம், குடும்பப் பாரம்பரியம், அழகு, மார்க்கக் கல்வி ஆகிய நான்குக்காக திருமணம் செய்யப்படுகிறாள். எனினும் நீ மார்க்கப் பற்றுள்ள மங்கையையே மணமுடித்து வெற்றி பெறு'' என்று நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், இப்னுமாஜா, நஸயீ, அபூதாவூத்

இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸை நன்கு சிந்திக்க வேண்டும். இந்த ஹதீஸில் நபி(ஸல்) அவர்கள் நான்கு காரியங்களுக்காக அதாவது பணம், பாரம்பரியம், அழகு, மார்க்கக் கல்வி ஆகியவற்றிற்காகவே ஒரு பெண் திருமணம் செய்யப்படுகிறாள் என்று கூறிவிட்டு, 'மார்க்கம் அறிந்தவளை நீ திருமணம் செய்! வெற்றி பெறுவாய்' என்று கூறுகிறார்களே தவிர மற்ற மூன்றையும் கருத்தில் கொள்வதை அறவே கூடாது என்று கூறவில்லை.

ஒரு பெண்ணை அழகுக்காகவும் திருமணம் செய்யலாம்; செல்வ நிலையில் உள்ளவள் என்பதற்காகவும் திருமணம் செய்யலாம். குடும்பப் பாரம்பரியம் கருதியும் திருமணம் செய்யலாம். இதில் எப்படி வேண்டுமானாலும் திருமணம் செய்தாலும் மார்க்கக் கல்வி அறிந்தவளையே திருமணம் செய்வதே சிறப்பு என்பதே இந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸின் நிலை.

அழகு என்று திருமணம் செய்யும்போதே மார்க்கக் கல்வி உள்ளதா? என்று பார்க்க வேண்டும். பாரம்பரியம் கருதி, வசதி கருதி திருமணம் செய்யும் போதே மார்க்க அறிவு உள்ளதா? என்று தெரிந்து கொள்ளவும் வேண்டும். இது தான் வாழ்க்கையை வெற்றியாக்கும் என்பதையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் விளக்குகிறது.

அழகு, பாரம்பரியம், செல்வம் இவற்றை கருத்திலே கொள்வதையே மேற்கண்ட பலவீனமான செய்திகள் தடை செய்கின்றன. ஆதாரப்பூர்வமான ஹதீஸின் கருத்துக்கே இது மாற்றமாகும்.

வசதி உள்ளவன் வசதியான குடும்பப் பெண்ணை திருமணம் செய்யவே விரும்புவான். ஒரு சிலர் விதிவிலக்கு பெற்றிருக்கலாம். இது போல் பாரம்பரியமிக்க குடும்பத்தைச் சார்ந்தவன் தனக்கு இணையான நிலையில் உள்ளவளையே திருமணம் முடிக்க எண்ணுவான். இது கூடாது என்று கூறினால் திருமணம் எனும் வாழ்க்கை ஒப்பந்தம் இடையிலேயே சில சமயம் முறிந்துவிடும்.

எனவே மேற்கண்ட இரண்டு செய்திகளுமே புனையப்பட்ட பொய்ச் செய்திகளாகும்.


41. அழகிய முகம் இருப்பின்...

''நிச்சயமாக அல்லாஹ் அழகிய-கவர்ச்சியான முகம் உள்ளவர்களை வேதனை செய்யமாட்டான்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அனஸ்(ரலி) அவர்கள் அறிவிப்பதாக தைலமீ அவர்கள் தன் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அப்துல் மாலிக் இப்னு முஹம்மத் அர்ருக்காஷீ என்பவர் உண்மையானவர். எனினும் இவர் பக்தாத் எனும் ஊருக்கு வந்தபோது அறிவிப்பாளர் வரிசையிலும் ஹதீஸின் வார்த்தையிலும் குளறுபடி செய்யத் துவங்கினார். இவர் பற்றிய குறிப்பு 'தஹ்தீபுத்தஹ்தீபு' எனும் நூலில் உள்ளது. இந்த ஹதீஸும் அவர் செய்த குளறுபடிகளுக்குப் பின்னால் தான் இருக்க வேண்டும். மேலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் பலர் யாரென்றே அறியப்படாதவர்களாக உள்ளனர். இவர்களும் இட்டுக்கட்டி இருக்கக்கூடும்.

''அழகிய, கவர்ச்சியான முகங்களை, பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் அழகிய முகத்தை நெருப்பில் போட்டு வேதனை செய்ய வெட்கமடைகிறான்.''

இதுவும் நபி(ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்டது தான். இதை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் அல் மவ்ளூஆத் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் ஹஸன் இப்னு அலிஇப்னு ஜகய்யா அல் அத்வீ என்பவர் சரியானவரல்லர் என்று இப்னுல் ஜவ்ஸீ கூறுகிறார்கள். இவர் இட்டுக்கட்டிக் கூறுவதில் பிரபலமானவர்களில் ஒருவர் என்று சுயூத்தி அவர்கள் கூறுகிறார்கள். 'இந்த மோசமான செய்தியை இட்டுக்கட்டியவன் மீது இறைவனின் சாபம் உண்டாகும்' என இந்தச் செய்தி பற்றி கூறும்போது அஷ்ஷைக் கா அவர்கள் கூறுகிறார்கள்.

இச்செய்தி வேறு அறிவிப்பாளர் வரிசையிலும் வருகிறது. இதில் இப்றாஹீம் இப்னு சுலைமான் அஸ்ஸியாத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் சரியானவரல்லர் என இப்னு அதீ அவர்கள் கூறுகிறார்கள். மேலும் முஹம்மத் இப்னு தல்ஹா அல்கரூகி, முஹம்மது இப்னு அப்துல்லா இப்னு அபீபுர்தா அல்காழீ ஆகிய இருவரும் யாரென்றே அறியப்படாதவர்கள். மேலும் லாஹிக் இப்னு ஹுஸைன் என்பவரும் மோசமானவர். 'இவர் பெரும் பொய்யர்' என இத்ரீஸ் ஹாபிழ் கூறுகிறார்கள்.

மேற்கண்ட இரண்டு செய்திகளும் அறிவிப்பாளர் வரிசை காரணமாக மட்டும் குறையுடையது அல்ல. மாறாக குர்ஆனின் வசனங்களுக்கும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளுக்கும் மாற்றமாக உள்ளதாலும் இவைகள் இட்டுக்கட்டப் பட்டவையேயாகும்.

இவ்வுலகில் மனிதன் மேற்கொள்ளும் வாழ்க்கைக்கு ஏற்பத் தான் மறுமை வாழ்வின் சூழ்நிலையும் அமையும். இறைவனுக்கு மிக விருப்பமான காரியங்களை செய்து வாழ்ந்து மரணித்தால் அவன் சுவர்க்கத்தில் நுழைவான். இறைவனுக்கு மாறு செய்து, அவனுக்கு கோபத்தை ஏற்படுத்தும் செயல்களை ஒருவன் செய்தால் அவன் நரகில் நுழைவான் என்பது தான் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கையாகும்.

அல்லாஹ் ஒவ்வொரு ஆத்மாவுக்கு அது சம்பாதித்ததற்கான கூலி கொடுப்பதற்காகவே (அவர்களை அல்லாஹ் இவ்வாறு செய்வான்) நிச்சயமாக அல்லாஹ் கேள்வி கணக்கு கேட்பதில் மிகவும் தீவிரமானவன். (அல்குர்ஆன் 14:57)

உங்களிடம் இருப்பவை தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது, என்றென்றும்) நிலைத்திருக்கும். எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம். (அல்குர்ஆன் 16:96)

(மூமின்களே!) மறுமையில் நீங்கள் விரும்பியபடியோ, அல்லது வேதத்தையுடையவர்கள் விரும்பியபடியோ நடந்துவிடுவதில்லை. எவன் தீமை செய்கிறானோ அவன் அதற்குரிய தண்டனை வழங்கப்படுவான். இன்னும் அவன் (அங்கு) அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும் (தனக்குப்) பாதுகாவலனாகவோ, துணை செய்பவனாகவோ காணமாட்டான்.

ஆகவே, ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, யார் யார் ஈமான் கொண்டவர்களோ, நற்கருமங்கள் செய்கிறார்களோ அவர்கள் சுவனபதியில் நுழைவார்கள். இன்னும் அவர்கள் இம்மியேனும் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 4:123, 124)

எவர் ஒருவர் ஒரு நன்மை செய்கிறாரோ அவருக்கு அதுபோல் பத்து மடங்கு நன்மை உண்டு. எவர் ஒரு தீமை செய்கிறாரோ அதைப் போன்ற அளவுடைய கூலியை கொடுக்கப்படுவார். அவர்கள் அநியாயம் செய்யப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 6:160)

எவர் ஒரு அணுவளவு நன்மை செய்திருந்தாலும், அத(ற்குரிய பல)னை அவர் கண்டு கொள்வார். மேலும் எவர் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தாலும் அத(தற்குரிய பல)னையும் அவன் கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99:8)

இவ்வசனங்கள் அனைத்தும், தீமைகளுக்கேற்பவே ஒருவன் தண்டிக்கப்படுவான் என்பதை விளக்குகின்றன. அவனவன் செய்த பலனை அவனவன் அடைந்தே தீருவான். அது அணுவளவேனும் இருப்பினும் சரியே என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். இறைவனின் இந்தக் கூற்றுக்கு மாற்றமான மேற்கண்ட செய்திகள் இருப்பதிலிருந்தே அவை இட்டுக்கட்டப்பட்டவையே என்பது புரியும்.

நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடம்பையோ, தோற்றத் தையோ காண்பதில்லை. மாறாக அவன் உங்களின் இதயங்களையும், செயல்களையும் பார்க்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லிமில் ஹதீஸ் ஒன்று உள்ளது. இந்த ஹதீஸுக்கும் இது மாற்றமாகவே உள்ளது.

அல்லாஹ் உள்ளத்தை-செயலைப் பார்க்கிறானே தவிர, உருவத்தை-தோற்றத்தைக் காண்பதில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளது ஆதாரப்பூர்வமாக உள்ளதாலும், இதற்கு மாற்றமான கருத்தையே - அழகிய முகம் உள்ளவர்களை கண்டு தண்டிக்கப் படுவதில்லை என்ற கருத்தையே - கூறுவதாலும் மேற்கண்ட இரண்டு செய்திகளும் இட்டுக்கட்டுப்பட்ட செய்திகளே என்பது மேலும் புலனாகும்.

மேலும் அழகிய முகம் உடையோரை தண்டிக்க மாட்டான் என்று கூறுவதால் அழகிய முகம் உடையோர் எந்த தவறு செய்தாலும் மன்னிக்கப்படுவர் என்று தெரிய வருகிறது. அப்படியானால் அவர்கள் இஷ்டப்படி வாழலாம் என்று ஆகிவிடும். இது சாத்தியப்படுமா? அல்லாஹ் தனக்கு இணை வைப்போரை தண்டிப்பான். மன்னிக்கவே மாட்டான் என்று கூறுகிறான். அழகிய முகம் உடையோர் இணை வைத்தாலும் தண்டிக்கப் பட மாட்டார்கள் என்று தான், இந்த செய்திகள் உண்மை என்று கூறினால் எண்ணத் தோன்றும். இது மட்டும் விதிவிலக்குப் பெற்ற சட்டம் என்று கூறினால் இதற்கு எந்த முகாந்திரத்தையும் இந்த செய்திகளில் பெற முடியவில்லை.

இவ்வாறு அனைத்து வகை குற்றங்களான விபச்சாரம்-போதைப் பொருள் உண்ணுதல் இன்னும் பல சட்டங்களை மீறுதல் போன்ற தவறான செயல்களைச் செய்தால் தண்டனை ஏது மிருக்காது என்றாகிவிடும். இதுவும் சாத்தியப்படாத ஒன்றே! இந்த வகையில் இவைகள் பொய்யான செய்தியே என்பது விளங்கும்.

இந்த செய்தி உண்மையாக இருப்பின் முஸ்லிம்கள் மட்டுமே அழகிய முகம் உடையவர்களாக இருக்க வேண்டும். காபிர்கள் விகாரமுடையோராக இருக்க வேண்டும். இருக்கிறதா? இல்லை என்பதிலிருந்தும் இவை பொய் என்பது உறுதியாகும். நல்ல-தீய முடிவை அழகிய-அசிங்கமான முகங்களுக்கேற்ப முடிவு செய்யப்படுவதில்லை. மாறாக நல்ல-தீய முடிவுக்கேற்பவே முகம் மாறும் என்று குர்ஆன் கூறுகிறது.

அந்த நாளில் மனிதன் மிரண்டு ஓடுவான். தன் சகோதரனை விட்டும், தன் தாயை விட்டும், தன் மக்களை விட்டும் அன்று ஒவ்வொரு மனிதனுக்கும் அவனவன் (அவல) நிலையே போது மானதாயிருக்கும். அந்நாளில் சில முகங்கள் இலங்கிக் கொண்டிருக் கும். சித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். ஆனால் அந்நாளில் (வேறு) சில முகங்கள் அவற்றின் மீது புழுதி படிந் திருக்கும். அவற்றைக் கருமை இருள் மூடியிருக்கும். அவர்கள் தாம் நிராகத்தவர்கள். (அல்குர்ஆன் 80:34-42)

இவ்வசனங்கள் அனைத்தும் கூறும் கருத்துக்கு மாற்றமாக மேற்கண்ட இரண்டு செய்திகளும் உள்ளத்தால் அவை மேலும் பலவீனப்படுவதோடு மட்டுமில்லாமல், அவை இட்டுக்கட்டப் பட்டவைகளாகவும் ஆகின்றது.


42. புறம் பேசுவது...?

''புறம் பேசுவது, ஒளூவையும், தொழுகையையும் முறித்துவிடும்.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதை அபூநயீம் அவர்கள் தன் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் இஸ்மாயில் இப்னு யஹ்யா இப்னு அப்துல்லாஹ் என்கிற அபூ யஹ்யா அத்தைமீ என்பவர் பெரும் பொய்யராவார்.

இவரைப் பற்றி தாரகுத்னீ அவர்கள் குறிப்பிடும் போது, இவர் மாலிக், தவ்ரீ இன்னும் பலர் வழியாக பொய் கூறுபவர் என்று கூறுகிறார்கள்.

இவர் மாலிக், மஸ்வூது, இப்னு அபீதிஹ்பு ஆகியோர் வழியாக பல இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்துள்ளார் என்று ஹாகிம் குறிப்பிடுகிறார்கள்.

'ஹதீஸை இட்டுக்கட்டுபவர் இவர்' என கதீப் அவர்களும், இச்செய்தியில் பலவீனம் உண்டு என இப்னுமஃகூலா அவர்களும் கூறுகிறார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:-
''இரண்டு நபர்கள் லுஹரையோ, அல்லது அஸரையோ தொழுதனர். அந்த இரண்டு பேருமே நோன்பு வைத்திருந்தனர். நபி(ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது, (அவ்விருவரும் அழைத்து) 'நீங்கள் இருவரும் மீண்டும் ஒ;ச் செய்து மீண்டும் தொழுங்கள். உங்களின் நோன்பையும் வீணடித்துவிட்டீர்கள். அதை வேறொரு நாளில் மீண்டும் நிறைவேற்றுங்கள்' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன்? என அவ்விருவரும் கேட்டனர். இன்ன மனிதரைப் பற்றி நீங்கள் இருவரும் புறம் பேசினீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.''

இச்சம்பவத்தை பைஹகீ அவர்கள் தனது ஷுஃபுல் ஈமான் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். இது மிஷ்காதுல் மஸாபீஹ் நூலில் 4783 எண்ணிட்ட ஹதீஸாகவும் இடம்பெற்றுள்ளது.

இச்செய்தியும் கூட எந்த அடிப்படையும், முறையான அறிவிப்பாளர் வரிசையுமின்றி பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இதுவும் பொய்ச் செய்தி தான்.

புறம்பேசுதல் என்பது இஸ்லாத்தின் பார்வையில் குற்றமாகும். பிறரது குற்றங்குறைகள் பற்றி பேசிடக் கூடாது என்று இஸ்லாம் கூறுகிறது.

மூமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து தவிர்ந்து கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். மேலும் உங்களில் சிலர் சிலரைப் பற்றி புறம் பேசவேண்டாம். உங்களது எவரேனும் தமது இறந்த சகோதரன் மாமிசத்தை உண்ண விரும்புவாரா? (இல்லை). அதை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன்; மிகக் கிருபை செய்பவன். (அல்குர்ஆன் 49:12)

நபி(ஸல்) அவர்கள் மிம்பரில் ஏறி குரலை உயர்த்தி, நாவால் (மட்டும்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு, உள்ளத்தில் ஈமான் நுழையாத கூட்டத்தினரே! முஸ்லிம்களுக்குத் தொல்லை தராதீர்கள்; அவர்களை குறை கூறாதீர்கள். அவர்களின் குறைகளைத் தேடி அலையாதீர்கள்; யார் தமது சகோதரன் குறைகளைத் தேடி அலைகிறாரோ அவரது குறையை இறைவன் தேடுவான். யாருடைய குறையை அல்லாஹ் தேடத் துவங்கி விட்டானோ அவர் தமது வீட்டின் நடுப்பகுதியில் இருந்தாலும் அவரை அல்லாஹ் இழிவுபடுத்திவிடுவான் என்று கூறினார்கள். இதை இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நூல்: திர்மிதீ

புறம் பேசுதல் என்பது யாது? என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் 'உமது சகோதரர் வெறுக்கக்கூடிய ஒன்றை நீர் பேசுவதே புறம்' என்றார்கள். நான் கூறுவது அவரிடம் உண்மையிலேயே இருந்தால்...? எனக் கேள்வி கேட்டவர் கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'நீ கூறக்கூடியது அவரிடம் இருந்தால் தான் நீர் புறம் பேசியவராவீர். அவரிடம் அக்குறை இல்லையெனில் நீர் அவதூறு கூறியவராவீர்' என்று விளக்கினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: திர்மிதீ

புறம் பேசுதல் சம்பந்தமாக பல ஹதீஸ்கள் வருகிறது. புறம் பேசுதலை தடை செய்கிறது. ஆனால் புறம் பேசினால் ஒ; முறியுமா? நோன்பு வீணாகுமா? என்றால் அதற்கு எந்தவொரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் வரவில்லை. எனவே மேற்கண்ட செய்தியும் சம்பவமும் பொய்; இட்டுக்கட்டப்பட்டது என்பதே சரியாகும்.


43. மஃரிபுக்குப் பின் உபரித் தொழுகை...!

''மஃரிபுக்கும், இஷாவுக்கும் இடையே இருபது ரக்அத்கள் ஒருவர் தொழுவதால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்து இப்னுமாஜாவில் இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் யஃகூப் இப்னு வலீத் என்பவர் சரியானவரல்லர். இவரை பலவீனப்படுத்திக் கூறுவதில் அறிஞர்கள் ஒன்றுபட்டுள்ளனர் என்று பூஸிரீ அவர்கள் அஸ்ஸவாயித்தில் குறிப்பிடுகிறார்கள். இவர் பெரும் பொய்யர்களில் ஒருவர், ஹதீஸ்களை இட்டுக்கட்டுபவர் என இமாம் அஹ்மத் கூறுகிறார்கள். மேலும் இப்னுமுயீன், அபூஹாதம் ஆகியோரும் இவர் பற்றி குறை கூறுகிறார்கள்.

''ஒருவர் மஃரிபு தொழுகைக்குப் பின் எதையும் பேசும் முன் ஆறு ரக்அத்கள் தொழுதால் அவருக்கு அதற்காக ஐம்பது வருட பாவங்கள் மன்னிக்கப்படும்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லா இப்னு உமர்(ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு கியாமுல்லைலி என்னும் நூலில் இப்னு நஸர் பதிவு செய்துள்ளார்கள்.

இப்னு அபீஹாதம் அவர்கள் அல்இலல் எனும் தமது நூலில் இதைக் குறிப்பிட்டு விட்டு, இதில் இடம் பெற்றுள்ள முஹம்மத் இப்னு கஸ்வான் அத்திமிஷ்கீ என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று அபூஸர்ஆ அவர்கள் கூறியதையும் குறிப்பிடுகிறார்கள்.
''ஒருவர் மஃரிபுக்கு பின் ஆறு ரக்அத்கள் தொழுது அவற்றிற்கிடையே எதுவும் பேசாதிருப்பாரானால் அவரது அத்தொழுகை பனிரெண்டு வருடத்திற்கு வணக்கம் செய்ததற்கு நிகராக்கப்படும்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இது திர்மிதீ, இப்னுமாஜா, இப்னுநஸ்ர், இப்னு ஸாகைன், முக்லிஸ், அஸ்கரீ, இப்னு ஸம்ஊன், அல்வாயில் ஆகியோரால் அவரவர்களது நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற் அறிவிப்பாளர் வரிசையில் உமர் இப்னு அபீஹஸ்அம் என்பவர் இடம் பெறுகிறார். இவர் தவறான ஹதீஸ்களை அறிவிப்பவர் என இமாம் புகாரீ கூறுகிறார்கள். இவர் வழியாக மட்டுமே இதை நாம் அறிகிறோம் என இமாம் திர்மிதீ கூறுகிறார்கள். இவர் மூலம் இரண்டு தவறான ஹதீஸ்கள் உண்டு. இதில் இதுவும் ஒன்று என்று தஹபீ கூறுகிறார்கள்.

மஃரிபுக்குப் பின் அவ்வாபீன் என்றொரு தொழுகை தொழப்படுவதுண்டு. அதற்கு இதையே ஆதாரமாகக் கொள்கின் றனர். இது பலவீனமான ஹதீஸ் என்பதால் இதை வைத்து அமல் செய்யக்கூடாது. மேலும் இந்த ஆறு ரக்அத்தோ, இருபது ரக்அத்தோ மஃரிபுக்குப் பின் தொழுவது பற்றி வரக்கூடிய அனைத்துமே பலவீனமான செய்திகளாகவே உள்ளன.

மேலும் மேற்கண்ட மூன்று செய்திகளுமே பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு மாற்றமாகவே உள்ளன.

இரவிலும், பகலிலும் நபி(ஸல்) அவர்கள் பத்து ரக்அத்கள் தொழுததை நான் கவனித்துள்ளேன். லுஹருக்கு முன் இரண்டு ரக்அத்கள், லுஹருக்கு பின் இரண்டு ரக்அத்கள், மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்கள், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்கள், பஜருக்கு முன் இரண்டு ரக்அத்கள் (ஆக பத்து ரக்அத்கள்) என ஹப்ஸா(ரலி) அவர்கள் தன்னிடம் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மிதீ

மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்திலும், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்திலும், குல்யா அய்யுஹல் காஃபிரூன, குல்ஹுவல்லாஹு அஹத் ஆகிய அத்தியாயங்களை நபி(ஸல்) அவர்கள் ஓதியதை என்னால் கணக்கிட்டுச் சொல்ல முடியாது என இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், அஹ்மத், இப்னுமாஜா

எனவே மஃரிபுக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவதே நபிவழி. அதற்கு மாற்றமாக அறிவிக்கப்படும் இருபது ரக்அத், ஆறு ரக்அத் பற்றிய ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவைகளே!


44. தானியங்களில் ஸகாத் மதிப்பீடு அளவு என்ன?

''(தானிய வகைகளில்) அவை குறைவாக இருப்பினும், அதிகமாக இருப்பினும் அவை வானத்து மழை நீர் மூலம் விளைந்து வந்திருப்பின் பத்து சதவீதமும், தண்ணீரை சுமந்து அல்லது இறைத்து நீர் பாய்ச்சி கிடைத்திருப்பின் ஐந்து சதவீதமும் ஸகாத் உண்டு ''
என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதன் அறிவிப்பாளர் பின்வருமாறு;-
1. நபித்தோழர் ஒருவர் (பெயர் குறிப்பிடாமல் ஒரு மனிதர் என்றே உள்ளது)
2. அபான் இப்னு அபீ இயாஷ்
3. அபூஹனீபா
4. அபூமுதீஉ அல்பஸ்கீ
இந்த நான்காவது அறிவிப்பாளரான அபூமுதீஉவின் பெயர் அல்ஹகம் இப்னு அப்துல்லாஹ் என்பதாகும். இவர் இட்டுக் கட்டுபவர் என ஜவ்ஸீல்கானீ என்பவர் கூறுகிறார்கள்.

இந்த செய்தியை தனது நஸ்புர்ராயா எனும் நூலில் ஸைலஈ அவர்கள் பதிவு செய்து விட்டு, அபூஹனீபா வழியாக அறிவிக்கும் அபூமுதீஉல் வல்கீ என்பவன் கூற்றையே ஹனபீ மத்ஹபினர் ஆதாரம் பிடிக்கிறார்கள் என இப்னுல் ஜவ்ஸி கூறியதாகவும் குறிப்பிடுகிறார்கள.

இப்னு முயீன், அஹ்மத், அபூதாவூத் ஆகியோரும் இந்த அபூமுதீஉ அல்பல்கீ என்பவரை குறையாகவே குறிப்பிடுகிறார்கள். மேலும் இதில் இடம்பெறும் அபான் இப்னு அபீ இயாஷ் என்பவரும் சரியானவரல்ல. இவரை ஷுஃபா போன்றோர் பலவீனப்படுத்திக் கூறுகிறார்கள்.

இந்த ஹதீஸின் கருத்து, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலும் உள்ளதே. அப்படியானால் இது ஹஸன் எனும் நிலைக்கு வந்து விடுமே என்று சிலர் கூறி பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் கூறலாம்.

மழை மற்றும் ஊற்றுகள் விளைவித்தவைகளிலும், நிலத்தடி நீரை மட்டும் உறிஞ்சி விளைபவற்றிலும் பத்து சதவீதமும், நீர் பாய்ச்சி விளைவிக்கப்பட்டவற்றில் ஐந்து சதவீதமும் (ஸகாத்தை) நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்தினார்கள் என்று இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, நஸயீ, திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா

மழைநீரில் விளைந்ததற்கு 10% எனவும் நீர் பாய்ச்சி விளையச் செய்பவற்றில் 5% எனவும் ஸகாத் கடமை தான் என்பதில் சந்தேகமில்லை. மேற்கண்ட செய்தி அக்கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திக்கு முரண்படவுமில்லை என்பதிலும் சந்தேகமில்லை.

ஆனால் இச்செய்தியில் இடம் பெற்றுள்ள அவை அதிகமாக இருப்பினும் குறைவாக இருப்பினும் என்ற வாசகம் தான் பிரச்சனைக்குரியதே! இந்த வாசகப்படி விளையும் பொருட்களில் இன்ன அளவு இருந்தால் தான் ஸகாத் கடமை என்றில்லை. எவ்வளவு விளைகிறதோ அது குறைவாக இருப்பினும் ஸகாத் கடமை என்று விளங்க முடிகிறது.

அதேசமயம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களோ விளையும் பொருட்களிலும் அளவை நிர்ணயிக்கிறது.

ஐந்து ஒட்டகங்களுக்கு குறைவானவற்றில் ஸகாத் இல்லை. ஐந்து ஊகியாவுக்கு குறைவான (வெள்ளியில்) ஸகாத் இல்லை. ஐந்து வஸக்கை விட குறைவான (தானியத்)தில் ஸகாத் இல்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஸயீத் அல்குத்ரீ(ரலி) அபூஹுரைரா(ரலி), இப்னு உமர்(ரலி), ஜாபிர்(ரலி), அப்துல்லாஹ் இப்னு அம்ரு(ரலி) ஆகியோர் அறிவிக்கின்றனர். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், திர்மிதி

இந்த ஹதீஸ் தானிய வகைகளில் ஐந்து வஸக் இருந்தால் தான் ஸகாத் கடமை என்பதை அறிவிக்கிறது. வஸக் என்றால் 60 ஸாஉவாகும். ஒரு ஸாஉ என்பது 51மூ3 ராத்தல் ஆகும். ஆக 300ஸாஉ(5வஸக்) இருந்தாலே ஜகாத் கடமை என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகிறது.

ஆனால் இந்த செய்தியோ குறைவாக இருப்பினும் ஸகாத் கடமை என்கிறது.

எனவே இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது தான் என்பதில் சந்தேகமில்லை. இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி தான் ஹனபீ மத்ஹபுக்கு ஆதாரமாக உள்ளது என்பதையும், இந்தச் செய்தியை ஒதுக்கிவிட்டு 5 வஸக் அளவை குறிப்பிடும் ஹதீஸையே அபூ ஹனீபா அவர்களின் மாணவர் முஹம்மத் அவர்கள் ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்பதையும் நினைவில் கொள்க!


45. அறிவாளி ஆகவேண்டுமா?

''அல்லாஹ்விற்காக நாற்பது நாட்கள் ஒருவர் ஒதுக்கினால் அவன் நாவில் அறிவின் ஊற்றுகள் வெளிப்படும்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஅய்யூப் அல் அன்சாரீ(ரலி) அறிவிக்கின்ற இச்செய்தி அபூநயீமின் அல்ஹில்யா எனும் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இரண்டாவது அறிவிப்பாளர் மக்ஹுல் என்பவர், நபித்தோழர் அபூஅய்யூப் அன்சாரீ(ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என இப்னுல் ஜவ்ஸீ கூறுகின்றார்கள். மூன்றாவது அறிவிப்பாளர் ஹஜ்ஜாஜ் என்பவர் சரியில்லாதவர். மேலும் ஐந்தாவது அறிவிப்பாளர் முஹம்மது இப்னு இஸ்மாயீல் என்பவர் யார் என்றே அறியப்படாதவர். சுயூத்தி அவர்கள் இச்செய்தியை கடுமையாகச் சாடுகின்றார்கள். இதிலிருந்து இச்செய்தி தவறானது என்பதை விளங்கலாம்.

இந்தத் தவறான செய்தியை ஆதாரமாகக் கொண்டு சிலர், அல்லாஹ்வின் பாதையில் நாற்பது நாள் வாருங்கள் என்று அழைக்கின்றார்கள். இதற்கு ஒரு ஜில்லா என்று பெயரும் வைத்துள்ளனர். அன்றாடம் உழைத்தால் தான் குடும்பத்தை பாதுகாக்க முடியும் என்ற நிலையில் உள்ளவர்களைக் கூட வார்த்தை ஜாலங்களால் மயக்கி, தங்கள் கற்பனை பயணத்திற்கு அழைத்துச் செல்கின்றார்கள்.

இதனால் பார்க்கும் வேலை போய், செய்யும் தொழில் நசிந்து தன் குடும்பத்தை பசி, பட்டினி என்று போட்டு விட்டு அலையும் முஸ்லிம்கள் உண்டு. இதை பின்வரும் ஹதீஸ் கண்டிக்கிறது.

தான் பொறுப்பில் உள்ள நபர்களை ஒருவன் கவனிக்காமல் இருப்பதே, அவன் பாவி என்பதற்காகச் சான்றாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நூல்: அபூதாவூத்

எனவே ஒருவன் மார்க்க அறிவுபெற அல்லது சாதாரண அறிவு பெற அல்லது மெஞ்ஞானம் என்ற பெயல் போலி அறிவு பெற நாற்பது நாட்கள் ஒதுக்க வேண்டும் என்ற நம்பிக்கை கொள்ள,மேற்கண்ட செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.


46. பாவமன்னிப்புக் கட்டாயமானதல்ல!

''அல்லாஹ் தன்னை கவனித்துக் கொண்டிருக்கின்றான் என்பதை உணர்ந்தவராக பாவச் செயலை ஒருவர் செய்தால், அவர் பாவமன்னிப்புக் கேட்காவிட்டாலும் அவரை அல்லாஹ் மன்னிப்பான்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி தப்ரானீ (அவ்ஸத்)ல் உள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் இப்றாஹீம் இப்னு ஹிராஸா என்பவர் பொய்யர் என அபூதாவூத் கூறுகின்றார்கள். இவரைப் பொய்யர் என மேலும் பல அறிஞர்களும் கூறுகின்றனர். எனவே இது பலவீனமான ஹதீஸாகும்.

நாம் செய்யும் பாவச் செயலை அல்லாஹ் கவனித்துக் கொண்டிருக்கின்றான் என்பதே உண்மையாகும். இதில் எவரும் மாற்றுக் கருத்துக் கொள்ளமாட்டார். இந்த வகையில் பாவம் செய்யும் ஒரு முஸ்லிம், பாவம் மன்னிக்கப்பட்டவனாக ஆகிவிடுகின்றான். இதையே மேற்கண்ட செய்தி கூறுகிறது. ஆனால் முஸ்லிம் ஒருவன் மறுமையில் பாவியாக-குற்றவாளியாக நிற்பான். அவனின் குற்றச் செயலுக்கு ஏற்ப நரகம் செல்வான் என ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகின்றன.

அதுமட்டுமல்ல பாவமன்னிப்புக் கோர வேண்டியதில்லை. அது கட்டாயமும் இல்லை என்றும் இந்தச் செய்தி கூறுகிறது.

(ஈமான் கொண்ட) விசுவாசிகளே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள். (அல்குர்ஆன் 66:8)

இதன் மூலம் பாவமன்னிப்புக் கோருங்கள் என அல்லாஹ் கட்டளையிடுகிறான். நபி(ஸல்) அவர்களும் கூட ஒரு நாளையில் 100 தடவைக்கு மேல் பாவமன்னிப்புக் கோரி உள்ளார்கள். அவர்கள் முன்-பின் பாவங்கள் அனைத்து மன்னிக்கப்பட்டவர்கள். அவர்களே பாவமன்னிப்புக் கோரி உள்ள போது, குற்றச் செயல் புரியும் நாம் பாவமன்னிப்பு கோயே ஆகவேண்டும் என்பதைப் புரியலாம்.

அல்லாஹ்வின் ஆணைக்கு மாற்றமாக இந்தச் செய்தி உள்ளதால் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி எனப் புரியலாம்.


47. சிலந்தியாக மாற்றப்பட்ட ஷைத்தான்?

''சிலந்திப்பூச்சி ஷைத்தானாகும். அல்லாஹ்தான் ஷைத்தானை (சிலந்திப் பூச்சியாக) உருமாற்றினான். எனவே அதைக் கொல்லுங்கள்!''

இவ்வாறு நபி(ஸல்) கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி இப்னு அதீயின் அல்காமில் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் மஸ்லமா என்பவன் அனைத்துச் செய்திகளும் கோளாறுகள் உடையவையே என இதை பதிவு செய்த இப்னு அதீ அவர்களே குறிப்பிடுகின்றார்கள்.

''அல்லாஹ் எதை உருமாற்றினானோ, அதற்கு வம்சாவழியோ, குழந்தைகளோ விட்டு வைக்கவில்லை'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னுமஸ்வூத்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், அஹ்மத்

உருமாற்றம் செய்யப்பட்ட எந்த உயினத்திற்கும் வாசில்லை என்று நபி(ஸல்) அவர்கள் கூறும்போது சிலந்திப் பூச்சி உருமாற்றம் செய்யப்பட்டிருக்குமானால் அதற்கு வாசு இருக்க வாய்ப்பில்லை என்றாகிவிடுகிறது. சிலந்திப்பூச்சியை உருமாற்றம் செய்ததாக எந்த ஒரு ஆதாரக் குறிப்பும் இல்லை. அப்படியே உருமாற்றம் செய்தது உண்மை தான் என்பதை ஏற்றுக் கொண்டாலும் மாற்றப்பட்ட சிலந்தியோடு அது ஒழிந்து விடுகிறது. அதனால் வாசுச் சிலந்தி யைத் தரும் வாய்ப்பில்லை என்பதால் மேற்கண்ட செய்தி பொய் என விளங்கலாம்.

ஆனால் சிலந்திப் பூச்சியைக் கொல்லக்கூடாது என்று கூறுவோரும் உண்டு. அதற்குப் பின்வரும் செய்தியை ஆதாரமாகக் கூறுவார்கள்.

''நபி(ஸல்) அவர்கள் ஹிஜ்ரத் செய்தபோது, ஸவ்ர் எனும் குகையில் ஒளிந்தார்கள். எதிரிகள் குகையின் பக்கம் வந்தனர். அப்போது ஒரு சிலந்திப்பூச்சி, குகை வாயிலில் வலை பின்னியது. சிலந்தி வலை அறுபடாமல் உள்ளதைக் கண்ட எதிரிகள் உள்ளே எவரும் இல்லை என்று கருதி திரும்பிச் சென்றனர். இதனால் தன்னைப் பாதுகாத்த சிலந்தியைக் கொல்லக்கூடாது என நபி(ஸல்) கூறினார்கள்.''

இருப்பினும் இந்தச் செய்திக்கும் ஆதாரம் இல்லை. இதுவும் கற்பனையே. எனவே சிலந்தியைக் கொல்லவோ, கொல்லாமல் இருப்பதோ என்ற ஆணை எதுவும் நபி(ஸல்) அவர்களால் பிறப்பிக்கப்படவில்லை என்பதே உண்மை!


48. இடைத்தரகர் இல்லை!?

''ஒரு கூட்டத்திற்கு ஷைகாக இருப்பவர், ஒரு உம்மத்திற்கு அனுப்பப்பட்ட நபியைப் போன்றவராவார்.''

இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி இப்னு ஹிப்பானில் உள்ளது. இதில் இடம் பெறும் அப்துல்லா இப்னு உமர் இப்னு காஸிம் என்பவர் பலவீனர் என இப்னுஹிப்பான் அவர்களே கூறுகின்றார்கள். இவர் தான் மாலிக்(ரஹ்) அவர்களிடம் கேட்டதாகக் கூறுகின்றனர். ஆனால் இவர் அவரிடம் எதையும் கேட்டதில்லை எனவும் இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள். ஹாபிழ் இப்னுஹஜர் அவர்களும் தமது (தஹ்தீபுத் தஹ்தீப்) நூலில் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று குறிப்பிடுகிறார்கள்.

பிற சமுதாயத்திலிருந்து வந்து இஸ்லாமியச் சமுதாயத்தினர் வந்து சேர்ந்த நோய்களில் ஷேகு-முரீது என்பதும் ஒன்றாகும். இறைவனின் ஏஜெண்ட் என ஒருவனை மக்கள் நம்புவர். அந்த நம்பப்படும் ஏஜெண்டையே ஷேகு என்று அழைப்பர்.

இந்த ஷேகு தன்னை ஏற்க வருவோருக்கு தீட்சை வழங்குவார். தீட்சை பெறும் நபர்கள் முரீது என்று அழைக்கப்படுவர். இந்த ஷேகுகள் தங்களின் முரீதுகளுக்கு-சீடர்களுக்கு போதிக்கும் போதனையில் குர்ஆன்-ஹதீஸை நீங்கள் விளங்கவே முடியாது. வெளிப் பொருளைத் தான் நீங்கள் அறியலாம். உள்பொருளை நாங்களே விளங்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று கூறுவர். இதை நம்பும் சீடர்கள் குர்ஆனையும்-ஹதீஸையும் திறந்தே பார்க்க மாட்டார்கள்.

ஷேகுகளின் காலில் விழுவர். ஷேகுகளுக்கு மறைவான ஞானம் உண்டு என நம்புவர். ஷேகுக்கு தெரியாமல் எதையும் செய்ய மாட்டார்கள். மறுமையில் தங்களை ஷேகுகள் சொர்க்கத்தில் சேர்ப்பார்கள். ஷேகுகள் தொழாமல், நோன்பு வைக்காமல் இருப் பதையோ, பெண்களிடம் தனித்து இருப்பதையோ குறையாகக் கருதமாட்டார்கள். இறுதியில் ஷேகுகளை கடவுளாக-கடவுளின் அவதாரமாக-கடவுளின் குணங்களைப் பெற்றவராக-கடவுளின் ஏஜெண்டாக கருதும் மனநிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

யாரேனும் ஷேகு பற்றியும், அது பித்தலாட்டம் என்பது பற்றியும் தெரிய ஆரம்பித்து, வெளியேறிவிடக் கூடாது என்ற நோக்கில் கூறப்பட்டது தான் மேற்கண்ட பொய்ச்செய்தி.

ஷேகு என்ற அரபிச் சொல்லுக்கு 'முதியவர்', 'அறிஞர்' என்ற அளவில் தான் பொருள் கொள்ள முடியுமே தவிர, குரு என்று பொருள் கொள்ள முடியாது. ஒருவேளை குரு என்றே கூறினாலும் ஒரு குருவை நபிக்குச் சமமாக கருதமுடியுமா? நபி எனும் அந்தஸ்த்தை அல்லாஹ் நாடியவர் மட்டுமே அடைய முடியும். அதுவும் நபி(ஸல்) அவர்களுடன் முடிந்துவிட்டது.

போலிச் செய்தியை உருவாக்கி, ஷேகு என்பவரை நபியாக்கி புதிய சித்தாந்தம் ஒன்றை இவர்கள் உருவாக்கியதைத் தவிர வேறு எந்தப் பயனும் இந்தச் செய்தியால் உருவாகவில்லை என்பதை உணர்ந்து, மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதையும் உள்ளத்தில் நிலை பெறச் செய்வோமாக!


49. அரபு மக்களை வெறுக்கலாமா?

''குறைஷிகளை நேசிப்பது ஈமானாகும். அவர்களை வெறுப்பது இறை மறுப்பாகும். அரேபியரை நேசிப்பது ஈமானாகும். அவர்களை வெறுப்பது இறைமறுப்பாகும். அரபிகளை விரும்பினால் அவன் என்னை விரும்பியவனாவான். அரபிகளை வெறுப்பவன் என்னை வெறுத்தவன் ஆவான்.''

நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இதை அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். உகைலீ அவர்கள், அழ்ழுஃஹபா எனும் நூலிலும், தப்ரானீ அவர்கள் தனது 'அல்அவ்ஸத்' எனும் நூலிலும் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் மஹ்கல் இப்னு மாலிக், ஹைஸம் இப்னு ஜம்மாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இதில் மஹ்கல் என்பவர் பலவீனர் என இமாம் தஹபீ கூறுகின்றார்கள். மேலும் ஹைஸம் என்பவர் ஹதீஸ் துறை அறிஞர்களால் கைவிடப்பட்டவர் என்று தஹபீ அவர்களும், நஸயீ அவர்களும் கூறுகின்றார்கள்.

அனஸ்(ரலி) அறிவிப்பதாக ஸாபித் என்பவர் வழியாக ஹைஸம் மட்டும் தான் கூறுகிறார் என தப்ரானீ கூறுகின்றார்கள். ஹைஸமின் ஹதீஸ்கள் சரியானவை அல்ல என உகைலீ அவர்கள் கூறுகின் றார்கள். இவர் பலவீனமானவர் என இப்னு முயீன் கூறுகின்றார்கள்.

அரபியை விட அரபி அல்லாதவனோ, அரபி அல்லாதவனை விட அரபு மொழி பேசுபவனோ சிறந்தவன் இல்லை என நபி(ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது, பிரகடனப்படுத்திய ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் இது மாற்றமாக உள்ளது. எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறுவதே சரியாகும்.

''அரபிகளை விரும்புவது ஈமானாகும். அவர்களை கோபப்படுத்துவது நயவஞ்சகமாகும்.''

இது நபி(ஸல்) அவர்களின் பெயரால் ஹாகிமில் பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்த ஹதீஸிலும் மஹ்கல் இப்னு மாலிக், ஹைஸம் இப்னு ஜம்மாஸ் ஆகிய இரு பலவீனர்களே இடம் பெற்றுள்ளனர்.

முனாஃபிக் தனம் (நயவஞ்சகம்) எனும் குணாதிசயம் ஈமான் கொண்டுவிட்டதாக நடிக்கும் இறை மறுப்பாளர்களிடமே இருக்கும். இந்த முனாஃபிக் தனம், அரபு மொழி பேசிய மக்களிடமும் இருந்ததாக ஹதீஸ்களில் காண்கிறோம். முனாஃபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் இப்னு உபை இப்னு சலூல் என்பவன் அரபி மொழி பேசிய அரபி தான். அரபு மொழி பேசுபவனை வெறுப்பதும், கோபப்படுத்துவதும் தான் முனாஃபிக் என்றால் அரபு மொழி பேசுபவனே முனாஃபிக் என்று எப்படிக் கூறமுடியும்? முனாஃபிக் தன்மைக்கும், மொழிக்கும் சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

இது மட்டுமல்ல முனாஃபிக் யார்? என்பதை பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸும் தெளிவுபடுத்துகிறது.

''முனாஃபிக் (நயவஞ்சகனின்) அடையாளம் மூன்றாகும். பேசினால் பொய் பேசுவான். வாக்குறுதி தந்தால் மாறுபடுவான். நம்பினால் மோசடி செய்வான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டவை என்பது விளங்கும்.


50. பார்சி மொழி சிறந்ததா?

''அல்லாஹ்வின் அர்ஷைச் சுற்றியுள்ள (தூய்மை மிகுந்த வான)வர்களின் மொழி பார்சி மொழியாகும். அல்லாஹ் இலகுவான விஷயத்தை சொல்ல நாடினால் பார்சி மொழியில் வஹீ அறிவிப்பான். கஷ்டமான விஷயத்தைச் சொல்ல நாடினால் அரபி மொழியில் வஹீ அறிவிப்பான்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இந்த ஹதீஸில் ஜஹ்பர் இப்னு ஜுபைர் அல்ஹனபீ என்பவர் இடம் பெறுகின்றார். இவரைப் பற்றி குன்துர் அவர்கள் கூறும்போது ஸீபஈ என்பவர் கழுதை ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் நீங்கள் எங்கே செல்கிறீர்கள்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஜஹ்பர் இப்னு ஜுபைர் என்பவன் நபி(ஸல்) அவர்கள் மீது 400 ஹதீஸ்களை இட்டுக் கட்டியுள் ளானாம். அவனிடம் சண்டையிடப் போகிறேன் என்று கூறினார்கள் எனக் குறிப்பிடுகிறார்கள்.

'இந்த நபன் ஹதீஸ் எறியப்பட வேண்டும்' என அபூஸர்ஆ கூறுகின்றார்கள். 'இவன் ஹதீஸை எடுத்துக் கொள்ளவே கூடாது' என இமாம் நஸயீ, தாரகுத்னீ ஆகியோர் கூறுகின்றார்கள். 'இவன் இட்டுக்கட்டுபவன்' என இப்னுஹிப்பான் கூறுகின்றார்கள்.

இதேபோல் அஹ்மத், யஹ்கூப், இப்னு சுஃப்யான், இப்னு அதீ அபூநயீம், இப்னுல் மத்யனீ, அபூதாவூத், அலீ இப்னு ஜுன்துப், யஹ்யா ஆகியோரும் இந்த நபரைக் கடுமையாக விமர்சிக்கிறார்கள். எனவே இந்த ஹதீஸ் பலவீனமான-இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

ஒவ்வொரு தூதரையும் அவன் சமூகத்தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களுக்குரிய மொழியிலேயே நாம் அனுப்பி வைத்தோம். (அல்குர்ஆன் 14:4)

அதாவது எல்லா மொழி பேசும் நபர்களுக்கும் அந்த அந்த மொழி பேசும் நபிமார்கள் தூதர்களாக வந்துள்ளனர் என்பதையே இந்த வசனம் கூறுகின்றது. இந்த வகையில் அரபி மொழி பேசிய மக்களிடம் அரபி மொழி பேசிய நபி(ஸல்) அவர்கள் இறைத் தூதராக அனுப்பப்பட்டார்கள். இதனால் அரபு மொழியிலேயே இறைச் செய்தி வந்திருக்க வேண்டும்.

நபி(ஸல்) அவர்களோடு இறைத்தூதர் பொறுப்பு முற்றுப் பெறுவதாலும், அவர்களே எல்லா மொழி பேசும் மக்களுக்கும் பொதுவான இறைத்தூதர் என்பதாலும் உலகம் முழுதும் உள்ள குர்ஆன் மூலமொழியான அரபி மொழியிலேயே உள்ளது. பார்சி மொழியில் இறங்கி இருந்தால் பார்சி மொழி வசனம் எங்கே என்ற கேள்வி எழும். இதிலிருந்தே மேற்கண்ட செய்தி பொய் என்று விளங்கலாம்.

அரபி மொழியில் குர்ஆன் உள்ளதால் அரபிமொழிக்குத் தனிச் சிறப்பு என்பதும் கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.
எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்ட பொய் என்பது ஊர்ஜிதமாகிறது.


51. அரபி தான் சொர்க்க மொழியா?

''அல்லாஹ்விற்கு கோபமான மொழி பார்சியாகும். பார்சி மொழி ஷைத்தானின் மொழியாகும். சொர்க்க மொழி அரபியாகும்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். இந்த ஹதீஸில் இப்னு ஸியாத் என்பவர் இடம் பெறுகின்றார்.

'இவன் தஜ்ஜால் போல் பொய் கூறும் கிழவன். இவனைப் பற்றி குறை கூறாமல் எந்த நூலும் எழுதக்கூடாது' என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள். 'இவனது ஹதீஸ் நிராகக்கப்பட வேண்டும்' என்று இப்னு அதீ கூறுகின்றார்கள்.

பார்சி மொழியைப் பிடிக்காத ஒரு அரேபியன் இதை இட்டுக் கட்டியிருக்க வேண்டும். அல்லாஹ்விடம் உருவத்தாலோ, மொழியாலோ, அன்பையோ, கோபத்தையோ ஒருவன் அடைந்து கொள்ள முடியாது என்பதே நிலை.

அல்லாஹ்விடம் உங்களில் சிறந்தவர், உங்களில் இறையச்ச முடையவர்கள் தான். (அல்குர்ஆன் 49:13)

இறையச்ச உணர்வு உள்ளவன் மட்டுமே இறையன்பைப் பெற முடியும் என திருக்குர்ஆன் கூறும்போது, அரபிமொழி பேசியவன் சிறந்தவன் என்றும், அம்மொழி சொர்க்க மொழி என்றும் கூறுவது அபத்தமாகும்.

சொர்க்கத்தில் உலகம் தோன்றியது முதல் அழியும் வரை இருந்த மக்களில் பலர் இருப்பர். அவர்களில் பல்வேறு மொழி பேசும் மக்களும் இருப்பர். அவரவர் தெரிந்த மொழியில் தங்களுக்கிடையே பேசிக் கொள்வர் என்பது தான் சரியாக இருக்க முடியும். அரபு மொழியே பொது மொழி என எந்த ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. எனவே அரபி சொர்க்கவாசிகளின் மொழி என்பதும் அபத்தமேயாகும்.

மூஸாவிற்கு வேதத்தைக் கொடுத்தோம். அவ்வேதத்தில் பனூ இஸ்ரவேலர்களுக்கு நேர்வழியை வைத்துள்ளோம். (அல்குர்ஆன் 3:4)

அரபும், பார்ஸியும் அல்லாத மொழியில் வழங்கப்பட்ட தவ்ராத் வேதம் இறங்கிய மொழி மோசம் என்று கூறமுடியுமா? இதர நபிமார்கள் பேசிய மொழிகளைத் தான் மோசம் என்று கூற முடியுமா? எனவே மொழிக்கு என தனிச்சிறப்பு ஏதும் இல்லை என்பது உண்மை!

ஆகையால் மேற்கண்ட செய்தி, இட்டுக்கட்டப்பட்ட பொய்ச் செய்தி என்பது உறுதியாகின்றது.


52. வியாபாரியும் விவசாயியும் கெட்டவர்களா?

''மனிதர்களில் கெட்டவர்கள் வியாபாரியும், விவசாயியும் தான்.''

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி ' மவ்ளூஆத்' எனும் தனது நூலில் இப்னுல் ஜவ்ஸீ பதிவு செய்துள்ளார்.

இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் யாரென்றே தெரியாத பலர் இடம் பெறுகின்றனர். இது நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என இப்னுல் ஜவ்ஸீ, சுயூத்தி ஆகியோர் குறிப்பிடுகின்றார்கள்.

''ஒரு முஸ்லிம் மரத்தை நட்டு அல்லது (ஏதேனும் பயிரை) விவசாயம் செய்து, அதிலிருந்து பறவையோ, மனிதனோ, விலங்கினமோ சாப்பிட்டுவிட்டால் அது அவன் செய்த தர்மமாக (கணக்கிடல்) ஆகும்'' என நபி(ஸல்) கூறினார்கள் என அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

''நிலம் வைத்திருப்பவர், அதில் விவசாயம் செய்யட்டும்'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் விவசாயம் செய்வது பற்றி நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். விவசாயிகளாக பல நபித்தோழர்கள் இருந்துள்ளனர். இதுபோல் நபி(ஸல்) அவர்களே வியாபாரம் செய்துள்ளார்கள். நபித்தோழர்களில் பலர் வியாபாரி களாக, பெரும் வணிகராக இருந்துள்ளனர். சொர்க்கவாதி என அடையாளம் காட்டப்பட்ட அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃபு (ரலி) அவர்களும் கூட ஒரு பெரும் வணிகரே!

எனவே மேற்கண்ட செய்தியில் அறிவிப்பாளர் வரிசைக் குளறுபடிகளும், ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு முரண்பாடும் உள்ளது. எனவே இது பலவீனமான செய்தியாகிறது. இது பலவீனமான செய்தி என்பதை விட நபி(ஸல்) அவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று கூறுவதே சரியாகும்.


53. நபி(ஸல்) அவர்களை நேரில் சந்தித்த நன்மை பெற...

''நான் இறந்தப் பின் ஒருவர் ஹஜ் செய்ய வந்து, என் கப்ரை ஸியாரத் செய்தால், அவர் என்னை உயிருடன் (நேரில்) சந்தித்தவர் போலாவார்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி, தப்ரானீ(கபீர், அவ்ஸத், ஸகீர்) மற்றும் தாரகுத்னீ, பைஹகீ, இப்னு அதீ(காமில்) ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் லைஸ் இப்னு அபூசுலைம் என்பவர் மூளை குழம்பியவர் ஆவார். நான்காவது அறிவிப்பாளர் ஹப்ஸ் இப்னு சுலைமான் என்பவர் பெரும் பொய்யர் என்று இந்த ஹதீஸை பதிவு செய்துள்ள இப்னு அதீ அவர்கள் கூறுகின்றார்கள். ஹப்ஸ் ஹதீஸை இட்டுக்கட்டும் நபர் என இப்னுல் கராஸ் கூறுகின்றார்கள். மேலும் இவர் பலவீனர் என தப்ரானீ, பைஹகீ ஆகியோரும் கூறுகின்றார்கள். எனவே இது ஆதாரமற்ற செய்தியாகும்.

ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு சிலர் ஹஜ்ஜுக்குச் சென்றுவிட்டு மதீனா செல்கின்றார்கள். மதீனாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்கின்றார்கள். இது ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கு மாற்றமாக வும் உள்ளது.

மூன்று பள்ளிவாசலுக்கே தவிர வேறு எங்கும் (நன்மையை நாடி) பயணம் புறப்படக்கூடாது. 1) மஸ்ஜிதுல் ஹராம் 2) எனது இந்தப் பள்ளிவாசல் 3) மஸ்ஜிதுல் அக்ஸா என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், நஸயீ

நன்மை கிடைக்கும் என்ற பெயலும் நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்தால் அவர்களை நேரில் சந்தித்த நன்மை கிடைக்கும் என்ற பெயலும் இதுபோன்ற பயணம் மேற்கொள்வது கூடாது என்பதையே ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகின்றது.

ஹஜ்ஜு செய்துவிட்டு, மதீனா பள்ளியில் தொழுதால் அதிக நன்மை உண்டு என்ற பெயல் தான் மதீனா செல்ல வேண்டுமே தவிர மதீனாவில் நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஜியாரத் செய்ய பயணித்தல் என்ற பெயல் பயணம் செல்வது கூடாது.


54. முஹம்மதும், முஹம்மதின் தந்தையும் சொர்க்கம் செல்வர்?

''ஒருவருக்கு குழந்தை பிறந்து, அதற்கு பரக்கத்தை நாடி அவர் முஹம்மத் என்று பெயரிட்டால் அவரும், அவன் குழந்தையும் சொர்க்கத்தில் இருப்பார்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூஉமாமா(ரலி) அறிவிக்கும் இச்செய்தி, இப்னு புகைர் அவர்களின் 'ஃபழ்லு இஸ்முஹு அஹ்மத், முஹம்மத்' எனும் நூலில் உள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஹாமித் இப்னு முஹம்மத் என்பவர் ஏழாவது அறிவிப்பாளராக இடம்பெறுகின்றார். இவர் இஸ்ஹாக் இப்னு யஸார் வழியாக இதை அறிவிக்கின்றார். இஸ்ஹாக் வழியாக ஹாமித் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பார் என்று தஹபீ கூறுகின்றார்கள். இப்னு கையூம் அவர்கள் இது தவறான செய்தி என்று கூறுகின்றார்கள்.

பெயடுவதன் நோக்கம், மனிதர்கள் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளத்தான். இதையும் இச்செய்தி பாழ்படுத்து கிறது. எல்லோரும் முஹம்மத் என்ற பெயல் இருந்தால், எப்படி அறிமுகம் செய்து கொள்வது? இதிலிருந்து இது பொய்ச் செய்தி எனஅறியலாம்.

முஹம்மத் என பெயர் உள்ளவரும், அவருக்கு வைத்த அவன் தந்தையும் முஹம்மத் என்ற பெயருக்காகவே சொர்க்கம் செல்வார் என்றும் இச்செய்தி கூறுகிறது. இதனால் முஹம்மத் என்று பெயருள்ளவர் எந்த நற்செயலும் செய்ய வேண்டியதில்லை. ஏன்? அவன் தந்தையும் கூட நற்செயல் செய்ய வேண்டியதில்லை என்றாகிவிடுகின்றது.

ஈமான் கொண்டு நற்செயல் செய்கிறவர்கள் தான் சொர்க்க வாசிகளாவர். அவர்கள் அதிலே நிரந்தரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 2:82)

குருடனும், பார்வை உள்ளவனும் சமமாகமாட்டார்கள். (அவ்வாறே ஈமான் கொண்டு) நற்செயல் செய்தோரும், தீயோரும் (சமமாக மாட்டார்கள்). மிகக் குறைவாகவே நீங்கள் சிந்திக்கிறீர்கள். (அல்குர்ஆன் 40:58)

'நிச்சயமாக அல்லாஹ் உங்களின் உடலையோ, உடையையோ பார்ப்பதில்லை. உங்களின் உள்ளங்களையும், செயல்களையுமே பார்க்கிறான்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

நற்செயல் செய்தால் தான் சொர்க்கம் கிடைக்கும் என்று வசனங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறும் போது முஹம்மத் என்று பெயர் உள்ளதாலேயே சுவர்க்கம் செல்லலாம் என்பது எவ்வளவு பெரிய முரண்!

நபி(ஸல்) அவர்களின் பெயர் முஹம்மத் ஆகும். ஆனால் அவர்களுக்கு பெயரிட்டு மகிழ்ந்த அவன் தாயோ, பெரிய தந்தையோ, பாட்டனாரோ ஏன்? பிறக்கும் முன் இறந்த தந்தையோ சொர்க்கவாசிகள் அல்லர் என்பது தான் உண்மையாகும்.

எனவே மேற்கண்ட செய்தி புனைந்த செய்தி என்பதே உண்மை.


55. நபி(ஸல்) இறுதி நபியா? இல்லையா?

''நான் நபிமார்களில் இறுதியானவன். எனக்குப் பின் எந்த நபியும் இல்லை. அல்லாஹ் நாடினாலே தவிர.''
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அறிவிக்கும் செய்தியை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் தனது  மவ்ளூஆத் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் மூன்றாவது அறிவிப்பாள ராக முஹம்மது இப்னு ஸயீத் அஷ்ஷாமீ என்பவர் இடம் பெறுகின்றார். இவர் 'ஸனாதிகா' கொள்கையுடையவராக இருந்த தால் இவரை அபூஜஹ்ஃபர் கொலை செய்தார்கள் என்றும் இவர் இட்டுக் கட்டப்பட்ட செய்திகளை அறிவிப்பவர் என்றும் இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் கூறுகின்றார்கள். 'இவர், ஸனாதிகா கொள்கை காரணமாக சிலுவையில் அறையப்பட்டார்' என இமாம் புகாரீ கூறுகின்றார்கள். இவரது ஹதீஸ்கள் புறக்கணிக்கப்பட வேண்டியவை என அபூஸர்ஆ கூறுகின்றார்கள்.

நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நபி கிடையாது என்பது இஸ்லாமியக் கொள்கை இந்தக் கொள்கையை உறுதிப்படுத்தும வசனங்களும், ஹதீஸ்களும் ஏராளமாய் உள்ளன.

...எனினும் முஹம்மத் அல்லாஹ்வின் தூதராகவும் நபிமார் களின் இறுதியானவராகவும் உள்ளார். (அல்குர்ஆன் 33:40)

''என் சமுதாயத்தில் சில கூட்டத்தினர் இணை வைப்பவர் களுடன் சேருவார்கள். சிலைகளையும் கூட வணங்குவார்கள். மேலும் என் சமுதாயத்தில் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். இவர்கள் அனைவரும் தன்னை நபி என்றே வாதிடுவார்கள். இந்த நிலை ஏற்படும் வரை மறுமை நாள் வராது. நான் தான் இறுதி நபி. எனக்குப் பின் நபி கிடையாது'' என்று நபி(ஸல்) கூறியதாக ஸவ்பான்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ

''பனூ இஸ்ரவேலர்களிடமிருந்து தொடர்ந்து நபிமார்கள் வருபவர்களாக இருந்தார்கள். ஒரு நபி இறந்துவிட்டால் அதற்குப் பகரமாக இன்னொரு நபி வருவார். ஆனால் எனக்குப் பின்னால் எந்த நபியும் கிடையாது'' என நபி(ஸல்) கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

இந்த வசனம் மற்றும் ஹதீஸ்கள் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் நபியே கிடையாது என்று தெரிளிவாக அறிவிக்கின்றன. ஆனால் மேற்கண்ட செய்தியில் 'அல்லாஹ் நாடினாலே தவிர' என்ற வார்த்தை திட்டமிட்டு புனைந்ததாகும்.

இதனால் தான் சிலர் தங்களை நபி என்று வாதிட்டனர். ஆனால் இவர்களின் வாதம் எடுபடாமல் போனது என்பதே உண்மை. காதியானி மதத்தைச் சேர்ந்தோரும் இதையே ஆதார மாகக் கொண்டுள்ளனர்.

ஆனால் நபி(ஸல்) அவர்கள் தான் இறுதி நபி என்பதில் எள்முனை அளவிற்கும் சந்தேகமில்லை. எனவே மேற்கண்ட செய்தி ''புனைந்தது. இட்டுக்கட்டப்பட்டது'' என்பதே உண்மையாகும்.


56. பிரகாசிக்கும் இருள்?

''நபி(ஸல்) அவர்கள், வெளிச்சத்தில் பார்ப்பதைப் போல் இருளிலும் (இருக்கும் பொருட்களைத் தெளிவாகப்) பார்ப்பார்கள்.''

இவ்வாறு ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை இமாம் பைஹகீ தனது 'தலாயிலுன்னுபுவா' நூலில் பதிவு செய்துள்ளார்கள். இப்னு அதீ அவர்களின் நூலிலும் உள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் பலவீனம் உள்ளது என இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே கூறவும் செய்கின்றார்கள். இதில் ஐந்தாவது அறிவிப்பாளராக அப்துல்லா இப்னு முகீரா இடம் பெறுகின்றார். 'இவர் அடிப்படையற்ற செய்திகளை அறிவிப்பவர்' என உகைலீ கூறுகின்றார்கள். 'இவன் ஹதீஸ்கள் மறுக்கப்பட வேண்டியவை' என இப்னுயூனுஸ் கூறுகின்றார்கள். 'இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது' என தஹபீ கூறுகின்றார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஆறாவது அறிவிப்பாளராக முஅல்லா இப்னுஹிலால் என்பவர் இடம் பெறுகின்றார். இவன் ஹதீஸ்கள் கைவிடப் படவேண்டியவை என இமாம் புகாரீ கூறுகின்றார்கள். இவர் பொய்யர்களில் பிரபல்யமானவர் என இமாம் முயீன் கூறுகின்றார்கள். இவர் இட்டுக்கட்டிக் கூறுபவர் என இமாம் நஸயீ கூறுகின்றார்கள். இதுபோலவே தாரகுத்னீ கூறுகின்றார்கள். இவர் நம்பிக்கையான நபர்களின் பெயரைப் பயன்படுத்தி இட்டுகட்டப்பட்ட செய்திகளைக் கூறுபவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.

மேற்கண்ட செய்தி போலவே இப்னு அஸாகிர் நூலிலும் வேறு அறிவிப்பாளர் வரிசையுடன் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது. அதிலும் குளறுபடி நிறைந்த, முகவயற்ற அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இந்தச் செய்தியில் நபி(ஸல்) அவர்கள் இருட்டுப் பகுதியில் சென்றால் அந்த இடமே பிரகாசித்து விடும் என்பது போல் கூறப்படுகின்றது. ஆனால் இதற்கு நேர் மாற்றமான செய்தியை பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகின்றது.

நான் ஒரு நாள் இரவு வெளியே சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் தனியே நடந்து சென்று கொண்டிருந்தார்கள். (சந்திர ஒளியினால் ஏற்பட்ட அவர்களின் பிம்ப) நிழலின் பின்னால் நான் நடந்து சென்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் திரும்பி என்னைப் பார்த்து விட்டு, இது யார்? என்று கேட்டார்கள். நான் அபூதர் என்றேன். இதை அபூதர்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

தன் அருகே இருளில் நடந்து வந்த தன் தோழர் அபூதர்(ரலி) அவர்களை இருளின் காரணமாக யார் எனத் தெரியாமல் யார் அது என்று கேட்ட பிறகே விளங்கியுள்ளார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகிறது. 'இருள் ஒளியாகும், அந்த ஒளியில் பார்ப்பார்கள்' என்பது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பது உறுதியாகின்றது.


57. நபி(ஸல்) அவர்கள் ஏழு துணிகளால் கபனிடப்பட்டார்களா?

''நபி(ஸல்) அவர்களுக்கு ஏழு துணிகளால் கபனிடப்பட்டது.''

இச்செய்தியில் அலீ(ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு அஹ்மத், இப்னு அபீ ஷைபா, இப்னு அதீ, பஸ்ஸார் ஆகிய நூற்களில் உள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் மூன்றாவது அறிவிப்பாளராக அப்துல்லா இப்னு முஹம்மது இப்னு அகீல் என்பவர் இடம் பெறுகிறார். இவன் ஹதீஸ்கள் புறக்கணிக்கப்பட வேண்டும் என இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) கூறுகிறார்கள். இவன் ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது என்று இப்னுமுயீன் கூறுகின்றார்கள். நான்கு நபர்களின் ஹதீஸ்கள் கைவிடப்பட வேண்டியவை. இந்த நான்கில் இவரும் ஒருவர் தான் என இப்னு உயைனா கூறுகிறார்கள்.

ஹதீஸ்களை அறிவிப்பதில் இப்னு அகீல் உங்களுக்கு விருப்பமானவரா? ஆஸிம் இப்னு உபைதுல்லாஹ்வா? என்று இப்னு முயீன் அவர்களிடம் நான் கேட்டேன். இருவரையும் நான் விரும்புவதில்லை என்று பதில் கூறினார்கள் என இமாம் முஸ்லிம் கூறுகின்றார்கள்.

''இவர், அறிவிப்பாளர் வரிசைகளை முரண்பட்டுக் கூறுவார்'' என அபூஸர்ஆ கூறுகிறார்கள். 'இவரால் அறிவிக்கப்படுபவற்றில் பெரும்பாலானவை நூதனமாக இருக்கும்' என ஜீர்ஜானி கூறுகின்றார்கள். 'இவர் நினைவாற்றல் இல்லாதவர்' என கதீப் கூறுகின்றார்கள். 'இவர் பலவீனர்' என அபூஹாதம், இமாம் நஸயீ கூறுகின்றார்கள்.

இப்படி இதன் மூன்றாம் அறிவிப்பாளர் ஹதீஸ் துறையினரால் கடுமையாக விமர்சிக்கப்படுவதால் இது பலவீனமாவதோடு, ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் முரண்படுகிறது.

நபி(ஸல்) அவர்கள் எமன் நாட்டைச் சேர்ந்த மிருதுவான மூன்று துணிகளால் கபனிடப்பட்டார்கள். அதில் சட்டையோ, தலைப்பாகையோ இல்லை என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், நஸயீ

எனவே ஏழு துணிகளால் கபனிடப்பட்டதாக வரும் செய்தி சரியானதல்ல.


58. ஸஹர் நேரம் எதுவரை?

''நபி(ஸல்) அவர்களுடன் எந்த நேரத்தில் ஸஹர் செய்வீர்கள் என ஹுதைபா(ரலி) அவர்களிடம் கேட்டோம். சூரியன் உதிப்பதற்கு முன் காலை வேளையில் என்று பதில் கூறினார்கள்.''

ஸர்இப்னு ஜைஸ் அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி நஸயீ நூலில் இடம்பெறுகிறது.

இதன் இரண்டாவது அறிவிப்பாளராக இடம்பெறும் ஆஸிம் இப்னு பஹ்தலா என்பவர் பற்றி இப்னு ஸஹ்து அவர்கள் கூறும்போது 'இவர் நல்லவர் தான். ஆனாலும் ஹதீஸில் அதிகம் தவறு செய்பவர்' என்று குறிப்பிடுகிறார்கள். யஹ்கூப் இப்னு சுப்யான் அவர்களோ இவன் ஹதீஸ்கள் குளறுபடி உள்ளவை என்று கூறுகிறார்கள். 'இவர் ஞாபக சக்தியில் மோசமானவர்' என அபூஸர்ஆ கூறுகின்றார்கள். இவன் ஹதீஸ்களில் புறக்கணிக்கப்பட வேண்டியவை உள்ளன என இப்னு கராஸ் கூறுகின்றார்கள். 'இவர் தன் வாழ்நாளின் இறுதியில் மூளை குழம்பியவர்' என ஹம்மாத் இப்னு ஸலமா கூறுகின்றார்கள். இவன் மனன சக்தி குறைவானது என தாரகுத்னீ கூறுகின்றார்கள்.

இவர் பற்றி விமர்சனம் சரியில்லாததாலும், ஆதாரப் பூர்வமான குர்ஆன் வசனத்திற்கும் நபிமொழிக்கும் மாற்றமாக உள்ளதாலும் இச்செய்தி பலவீனப்பட்டு விடுகிறது.

பஜ்ரில் வெள்ளைக் கயிறு கருப்புக் கயிறை விட்டும் (இரவை விட்டும் அதிகாலை கிழக்கின் வெள்ளை) உங்களுக்கு தெளிவாகும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். (அல்குர்ஆன் 2:187)

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ஸஹர் செய்வோம். பிறகு (பஜ்ர்) தொழுகைக்குச் செல்வோம் என ஸைத் இப்னு ஸாபித் (ரலி) கூறினார்கள். இரண்டுக்கும் மத்தியில் எவ்வளவு நேரமிருக்கும்? எனக் கேட்டேன். நான் ஐம்பது வசனங்கள் (ஓதும் அளவு) என்று பதில் கூறினார்கள். இதை அனஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, திர்மிதீ

ஸஹர் என்பது பஜ்ருத் தொழுகைக்கும் முன்பு என்றிருக்கும்போது பஜ்ருக்குப் பின் என்று கூறுவது பொய் என விளங்கலாம்.


59. வெள்ளை நிறச் சேவலை உண்ணாதீர்?

''வெள்ளைச் சேவலுக்கு நீங்கள் கண்ணியம் அளியுங்கள். ஏனெனில் அது எனக்குத் தோழனாகும். அல்லாஹ்வின் பகைவனுக்கும் (ஷைத்தானுக்கும்) பகைவனாகும். வெள்ளைச் சேவல் இருக்கும் எந்த வீட்டையும் ஷைத்தானோ சூனியம் செய்பவனோ நெருங்கமாட்டார்கள்.''

இது நபி(ஸல்) அவர்களால் கூறப்பட்டு, அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கப்பட்டு 'பைஸல்' எனும் தனது நூலில் ஹாஸிமீ பதிவு செய்துள்ளார்கள்.

இதன் நான்காவது அறிவிப்பாளர் முஅல்லல் இப்னு புகைல் அவர்களும், ஐந்தாவது அறிவிப்பாளர் ஷுஃப்பாம் என்பவரும் யாரென்றே அறியப்படாதவர்கள் மூன்றாவது அறிவிப்பாளர் முஹம்மது இப்னு முஹ்ஸின் என்பவன் தந்தை பெயர் இஸ்ஹாக் என்பதாகும். இவன் தாத்தா பெயர் தான் முஹ்ஸின். இருப்பினும் தாத்தா(பாட்டனார்) பெயலேயே இணைத்து அழைக்கப்படுகிறார். இந்த முஹம்மது இப்னு முஹ்ஸின் என்பவர் இட்டுக்கட்டுபவர் என தாரகுத்னீ கூறுகிறார்கள். 'இந்த நபர் பொய்யர்' என ஹைஸமீ கூறுகின்றார்கள்.

இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி மூலம், வெள்ளைச் சேவலை அறுத்து உண்ணக் கூடாது என்பது போல் புரிய முடிகிறது. இது இட்டுக்கட்டக் கூடிய நபரால் புனைந்த செய்தி என்பதால், இதை நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் இது முரண்பட்டும் உள்ளது.

மிருகங்களில் விஷப்பற்கள் உள்ளதை உண்ணவும், பறவையில் கூய நகம் உள்ளதை உண்ணவும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள் என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள். நூல்: முஸ்லிம்

சேவல் என்பது கோழி இனமாகும். கோழி பறவை இனம் என்பதால் கூய நகம் இருந்தால் மட்டுமே சாப்பிடக்கூடாது. கூய நகம் இருந்து தன் காலால் மிதித்து உண்ணும் பழக்கம் உள்ளதல்ல கோழி. எனவே கோழியையும் அதன் ஆண் இனமான சேவலையும் உண்ணத் தடையில்லை. கோழியை நபி(ஸல்) அவர்கள் சாப்பிட்டுள்ளதாக ஹதீஸ் கூறுகிறது.

''நான் அபூமூஸா(ரலி) அவர்களிடம் வந்தேன். அவர் கோழி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது, அவர் 'நீயும் இதை சாப்பிடு!' நபி(ஸல்) அவர்கள் கோழியைச் சாப்பிடுவதை நான் பார்த்துள்ளேன்'' என்று கூறினார்கள் என ஸஹ்தமில் ஜர்மிய்யீ என்பவர் கூறுகிறார்கள். நூல்: திர்மிதீ

கோழி வகை உண்ணலாம் என்பதிலிருந்தும், வெள்ளைச் சேவலை மட்டும் உண்ணக்கூடாது என்ற விதிவிலக்கு ஆதாரப்பூர்வ மான ஹதீஸ்களில் இல்லை என்பதாலும் மேற்கண்ட செய்தி பொய் என விளங்கலாம்.


60. பாவிகளுடன் சேர்ந்துண்ணல்!?

''பாவங்கள் மன்னிக்கப்பட்ட ஒருவனுடன் சேர்ந்து (அமர்ந்து) ஒருவன் சாப்பிட்டால் அவனும் மன்னிக்கப்படுவான்.''

இச்செய்தியை அறிவிப்பாளர் வரிசையின்றி சில நூற்களில் பதிவாகியுள்ளது. இதை உறுதிப்படுத்த பின்வரும் துணைச் செய்தியும் உள்ளது.

ஒரு நல்லடியார் நபி(ஸல்) அவர்களைத் தன் கனவில் கண்டார். ''இறைத்தூதர் அவர்களே! (மேற்கண்டவாறு) நீங்கள் கூறினீர்களா?'' என்று கேட்டார். நான் இப்படிக் கூறவே இல்லை. ஆனாலும் இப்போது இதைக் கூறுகிறேன் என்று பதில் கூறினார்கள்.

நாஸிருத்தீன் அல்பானீ அவர்கள் தன், 'அல்அஹாதீஸுல் ளயீஃபா, வல் மவ்ளூஆ' எனும் நூலில் 315வது ஹதீஸாக பதிவு செய்துள்ளார்கள். இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என இப்னு ஹஜர், இப்னுல் கய்யிம் ஆகியோர் குறிப்பிடுகின்றார்கள்.

அதாவது இச்செய்தியின் கருத்து குற்றவாளிகளுடன் பாவிகளுடன் சேர்ந்து உண்பது கூடாது என்பது தான். இது சாத்தியமாகுமா?

இறை மறுப்பாளர்களுக்கு உதாரணமாக நூஹின் மனைவியையும், லூத்தின் மனைவியையும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இந்த இருவரும் நம் நல்ல அடியார்களில் இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். ஆனாலும் இந்த இருவரும் தங்களின் கணவருக்கு மோசம் செய்தனர். (அல்குர்ஆன் 66:10)

நபிமார்களின் மனைவியர் இறைமறுப்பாளர்களாக-பாவிகளாக-குற்றம் செய்பவர்களாக இருந்துள்ளனர். இவர்களுடன் இருந்தபோது நபிமார்கள் அவர்களுடன் சேர்ந்துண்ணும் நிலை ஏற்பட்டிருக்கும். குற்றமற்றவர்களுடன் சேர்ந்துண்ண வேண்டும் என்றிருக்குமானால் இவர்களுக்கும் அது பொருந்தும் தானே!

முந்தைய நபிமார்களுக்கு இது கடமையில்லாமல் இருந்தி ருக்கலாம். நமக்கு இது கடமையாக இருக்கலாமே என்ற கேள்வி எழலாம். இதற்கு பின்வரும் வசனம் பதிலாக அமைகிறது.

நீர் அறியாத ஒன்றை எனக்கு இணை வைக்க உன்னை (உன் பெற்றோர்) நிர்ப்பந்தம் செய்தால், அந்த இருவருக்கும் கட்டுப் படாதே! (ஆனால் மற்ற காரியங்களில்) அவர்களுடன் இவ்வுலகில் நல்லவிதமாக இரு! (அல்குர்ஆன் 31:15)

பெற்றோர் இணை வைப்போராக, இணை வைக்கத் தூண்டுவோராக - குற்றம் செய்பவர்களாக இருந்தால் அதில் மட்டும் அவர்களுக்கு கட்டுப்படாதே! இதர காரியங்களில் (உண்பது உட்பட) இணைந்து இணக்கமாக வாழ் என இவ்வசனம் கூறுகிறது.

'குற்றவாளிகளாக உள்ள பெற்றோருக்கு உணவளித்தாலும், சேர்த்துண்ணாதே' என்று கூறியிருக்க வேண்டும். குற்றவாளியின் குற்றத்தில் பங்கேற்கக்கூடாது என்பது தான் கடமையே தவிர, குற்றவாளியுடன் பழகவே கூடாது என்று இஸ்லாம் கூறவே இல்லை.

மேலும் ஒருவனை குற்றவாளி என்றோ, குற்றமற்றவன் என்றோ நாம் புரிந்து கொள்ள முடியாது. இன்று குற்றம் செய்பவன் நாளை நல்லவனாக ஆகலாம். நல்லவன், குற்றவாளியாக மாறலாம். நம் கண் முன் குற்றவாளி போல் தெரிந்தவன் அல்லாஹ்விடம் உயர்ந்தவனாக ஆகிவிடலாம். குற்றவாளி, குற்றமற்றவன் என்பதை அறிந்தவன் அல்லாஹ் மட்டும் தான். இதையும் கூட ஒருவன் நிலை பற்றி மறுமையில் தான் நாம் தெரிந்து கொள்ள முடியும்.

எனவே பாவங்கள் செய்யாதவன் என எவரைக் கூற முடியும்? இதிலிருந்தும் கூட இச்செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பது புரியும். இச்செய்தியை கனவில் உறுதிப்படுத்திய நல்லடியார் யார்? விபரம் இல்லை. நபி(ஸல்) அவர்களை நேரில் கண்டவர் மட்டுமே கனவிலும் காணமுடியும் என்பது சட்டம். நபி(ஸல்) அவர்களை கனவில் ஒரு நல்லடியார் கண்டதாக கூறுவதும் பொய்!

நிறைவு செய்யப்பட்ட இஸ்லாத்தில் குறைவு இருந்தது போலவும், இந்தக் குறையை பின்னர் நபி(ஸல்) அவர்கள் சரி செய்தது போலவும் இந்தக் கனவின் கருத்து அமைகிறது. இது நபி(ஸல்) அவர்களை குறைவுபடுத்துவதாகவே அமைகிறது. எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பதில் சந்தேகமில்லை.


61. ரமளானில் ஏற்படும் கடும் சப்தம்?

''ரமளான் மாதத்தில் (கடுமையான) சப்தம் ஏற்படும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். 'இறைத்தூதர் அவர்களே! அது ஏற்படுவது, ரமலானின் ஆரம்பத்திலா? நடுவிலா? கடைசியிலா?' என்று நபித்தோழர்கள் கேட்டார்கள். '(அது) ரமலான் மாதத்தில் நடுப்பகுதியில் நடக்கும். வெள்ளிக்கிழமை இரவு ரமலானின் பாதி இரவாக இருக்கும்போது, வானத்திலிருந்து (கடும்) சப்தம் ஏற்படும். இதன் மூலம் 70,000 பேர் மூர்ச்சையாகிவிடுவார்கள். 70 ஆயிரம் பேர் பூமிக்குள் சொருகப்படுவார்கள். 70 ஆயிரம் பேர் குருடராவார்கள். 70 ஆயிரம் பேர் செவிடராவார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும், 'இறைத்தூதர் அவர்களே! உங்களின் சமுதாயத்தில் உள்ளவர்கள் பாதுகாப்பு பெறுவோர் அது சமயம் எப்படி நடந்து கொள்வர்?' என்று மக்கள் கேட்டார்கள். 'அது சமயம் தன் வீட்டிலிருந்து கொண்டு ஸஜ்தா செய்து பாதுகாப்புத் தேடி, அல்லாஹு அக்பர் என சப்தமிட்டுக் கூறும் நபர் தான் பாதுகாப்புப் பெறுவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். பிறகு மற்றொரு சப்தம் ஏற்படும். அது ஷைத்தானின் அலறல் ஆகும் என்றும் கூறினார்கள்.

பைரூஸ் அத்தைலம் என்பவரால் அறிவிக்கப்படும் இச்செய்தி இப்னுல் ஜவ்ஸீ அவர்களின் ' மவ்ளூஆத்' நூலில் உள்ளது.

இச்செய்தியை அறிவிக்கும் பைரூஸ் அத்தைலம் என்பவர் நபி(ஸல்) அவர்களை பார்த்ததில்லை. ஆனால் அவர் நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார். இதுபோல் இரண்டாவது அறிவிப்பாளராக இடம்பெறும் உபைதா இப்னு அபூ லுபாபா என்பவர், இந்த பைரூஸ் அத்தைலமீயைப் பார்த்ததில்லை.

நான்காவது அறிவிப்பாளர் இஸ்மாயீல் இப்னு அயாஸ் அவர்களும், ஐந்தாவது அறிவிப்பாளர் அப்துல் வஹ்ஹாப் இப்னு ழஹ்ஹாக் என்பவரும் பலவீனர்களாவர். 'அப்துல் வஹாப் என்பவர் இஸ்மாயீல் என்பவரிடமிருந்து புதுமையான செய்திகளை அறிவிப்பவராவார்' என அபூஅஹ்மத் கூறுகின்றார்கள்.

அறிவிப்பாளர்களின் வரிசையில் பெரும் பலவீனம் இருப்ப தோடு, இந்த ஹதீஸ் இதுவரை நடந்துவிட்டதற்கு ஆதாரமாகவும் இல்லை. நபி(ஸல்) அவர்கள் கூறியிருப்பது உண்மையானால் 1450 ஆண்டுகள் கடந்துவிட்டது. 15ம் நாள் இரவு வெள்ளிக்கிழமை எனவும் வந்துள்ளது. ஆனால் 'இப்படி ஒரு பூகம்பம்-இடி முழக்கம்-பெரு சப்தம் ஏற்பட்டு 70,000 பேர் இறந்தும் 70,000 பேர் பூமிக்குள் உள்ளிழுக்கப்பட்டும், 70,000 பேர் குருடாகியும் 70,000 பேர் செவிடாகியும் போயினர்' என்ற எந்தக் குறிப்பும் இல்லை. இதுமாதியான சம்பவம் நடந்திருக்குமானால் வரலாற்றுக் குறிப்பு களாக பதிவு செய்யப்பட்டிருக்கும். 'ஒரு வேளை இனி நடக்கலாம் தானே. இதுவரை நடக்கவில்லை என்பதால் நடக்கவே நடக்காது என்றாகிவிடாது தானே' என்ற கேள்வி எழக்கூடும். ஆனால் ரமலான் மாதம் அருள் நிறைந்த மாதம் என ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகின்றது.

'ரமளான் (மாதம்) வந்தால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப் படுகின்றன. நரகவாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர்' என்று நபி(ஸல்) கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

ரமளான் மாதம் அருள் நிறைந்த மாதம் என இன்னும் பல ஹதீஸ்கள் அறிவிக்கின்றன. ஆனால் 'அது ஆபத்தான மாதம். அது எப்போது நடக்கும்? இப்போது நடந்துவிடுமோ' என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தி கவலையடையச் செய்யும் மாதம் என்பது போல் மேற்கண்ட செய்தி கூறுகிறது.

இந்த காரணத்திற்காகவும், அறிவிப்பாளர் வரிசை பலவீனமாக உள்ளதாலும் இச்செய்தியும் பலவீனமான செய்தியாக உள்ளது.


62. ரமளான் என்று கூறக்கூடாதா?

''ரமளான் என்று கூறாதீர்கள். ரமலான் என்பது அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாகும். எனவே நீங்கள் ஷஹ்ரு ரமலான் (ரமலான் மாதம்) என்று கூறுங்கள்.''

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு இச்செய்தி இப்னு அதீ, இப்னுல் ஜவ்ஸீ ஆகியோன் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் மூன்றாம் நபராக இடம்பெறும் அபூமிஹ்ஷர் என்பவர் ஹதீஸ்களை அறிவிப்பதில் உறுதியானவர் அல்ல என இப்னு முயீன் கூறுகிறார்கள். இப்னுல் ஜவ்ஸீ, தஹபீ, சுயூத்தி, ஷவ்கானீ போன்றோர் இவரை இட்டுக்கட்டும் நபர்களின் பட்டியலில் சேர்க்கிறார்கள்.

இந்த அபூ மிஹ்ஷர் சரியில்லாத நபராக உள்ளதால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். மேலும் அல்லாஹ்வின் பெயர்களில் ஒன்றாக ரமலான் என்பதும் ஒன்று என குர்ஆனிலோ, ஆதாரப்பூர்வமான நபிமொழியிலோ இல்லை. மேலும் இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாகவும் உள்ளது.

''ரமளான் வந்தால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் மூடப்படுகின்றன. ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றன'' என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

''ஒருவர் ரமளான் நோன்பு நோற்று பின்பு ஷவ்வாலில் ஆறு நோன்பை நோற்றால் அவர் வருடம் முழுதும் நோன்பு நோற்றவர் போலாவார்'' என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபூ அய்யூப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்கள் இங்கு ரமளான் மாதம் என்று கூறாமல் ரமலான் என்று கூறியுள்ளதால் ரமளான் என்று கூறலாம் என்று அறியமுடிகிறது. எனவே மேற்கண்ட செய்தி பொய்யானது என்பது உறுதியாகிறது.


63. குளிப்புக் கடமையானவன் கடல் நீரில் குளிக்கலாமா?

குளிப்புக் கடமைக்கு கடல்நீர் பயன்படாது. அதிலிருந்து உ;ச் செய்யவும் கூடாது. ஏனெனில் கடலுக்குக் கீழ் நெருப்புள்ளது. அதன் கீழே இன்னொரு கடல் உண்டு. இப்படி ஏழு கடல், ஒரு நெருப்பு உண்டு.

இச்செய்தி அப்துல்லா இப்னு அம்ரூ(ரலி) அறிவிப்பதாக முஸ்னத் அப்துர்ரஸாக், பைஹகீ, தைலமீ ஆகிய நூற்களில் பதிவாகியுள்ளது.

இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மது இப்னு முஹாஜிர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் இட்டுக்கட்டும் நபர் என இமாம் தஹபீ, இமாம் ஷவ்கானீ, இமாம் சுயூத்தி ஆகியோர் குறிப்பிடுகின்றார்கள்.

எனவே இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். மேலும் பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்திக்கும் முரணாக உள்ளது.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! நாங்கள் கடலில் பயணம் செய்கிறோம். அப்போது குறைந்த தண்ணீரையே கொண்டு செல்கிறோம். அதன் மூலம் ஒளூச் செய்தால் (குடி தண்ணீர் காலியாகி) நாங்கள் தாகத்துடன் இருக்க வேண்டியது வரும். எனவே நாங்கள் கடல் நீரில் உளூச் செய்து கொள்ளலாமா? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், கடல் நீர் தூய்மைப்படுத்தக் கூடியதாகும். அதில் வசிப்பவை செத்திருந்தாலும் உண்ண அனுமதிக்கப்பட்டதாகும் என்று கூறினார்கள். இதை அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

கடல்நீரில் ஒளூச் செய்யலாம், குளிப்புக் கடமையானவர் குளிக்கலாம் என்பதையே இந்த ஹதீஸ் கூறுகிறது.

எனவே மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப்பட்டவை என்பதில் சந்தேகமே இல்லை.


64. குளிப்புக் கடமையானவன் குளியலறையில் குளிக்கலாமா?

''குளிப்புக் கடமைக்காக குளிக்க, இரண்டு வகை தண்ணீர் பயன்படாது. அவை கடல் நீரும், குளியலறை நீரும் ஆகும் ''

நபி(ஸல்) கூறியதாக அபூஹுரைரா(ரலி) அறிவிக்கின்றார்கள்.

இந்த செய்தி இப்னு அபீஷைபாவில் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மது இப்னு முஹாஜிர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ்களை இட்டுக்கட்டும் நபராவார். இதனால் தான் இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் தனது ' மவ்ளூஆத்' (இட்டுக்கட்டப் பட்டவை) நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

மேலும் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கும் இது முரண்படும் வகையில் அமைந்துள்ளது என்பதாலும் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் தம் சகோத ஜைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களுக்குரிய தண்ணீர் தொட்டியில் அமர்ந்து குளிப்பார்கள். இரத்தத்தின் சிவப்பு நிறம் தண்ணீன் மேல் படரும் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். நூல்: இப்னுமாஜா

தண்ணீர் தொட்டி என்பது வீட்டின் தனி அறையினுள் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை அறியலாம்.

'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தனிமையில் நிர்வாணமாக குளிக்கலாமா?' என்று நான் கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'மனிதர்களிடம் வெட்கத்துடன் நடந்து கொள்வதை விட அல்லாஹ்விடம் வெட்க உணர்வுடன் நடந்து கொள்ள அல்லாஹ் தகுதிமிக்கவன் ஆவான்' என்று கூறினார்கள். இதை பஹ்ஸ் இப்னு ஹகீம் அறிவிக்கின்றார்கள். நூல்கள்: திர்மிதீ, அபூதாவூத்

மனிதர்களிடம் வெட்கப்பட்டு தனி அறையில் குளிக்க ஆசைப்படுவது போல் அப்படி தனியே குளிக்கும் போதும் நிர்வாணமாக குளிக்கக்கூடாது என்பதிலும் கவனம் இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள போதிக்கிறார்கள். கேட்பவரும் கூட தனிமையில் குளிக்கும் போது நிர்வாணமாக குளிக்கலாமா? என்றே கேட்கிறார். தனிமை என்பது தனி அறை என்பதையே புரிய முடிகிறது. எனவே தனியே அமைந்துள்ள குளியலறையில் குளிக்கலாம் என்ற ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு முரணாக மேற்கண்ட செய்தி அமைந்துள்ளதை அறிக!


65. அஸர் தொழுகையை தாமதிக்கத்தான் வேண்டுமா?

''அஸர் தொழுகைக்கு, பாங்கு கூறும் நபர் பாங்கு கூறினார். இமாமத் செய்ய அவசரப்பட்டார். அப்போது அங்கிருந்த அப்துல்லாஹ் இப்னு ராபிஉ அவர்கள், 'உனக்கு நாசம் உண்டாகட்டும்! அஸர் தொழுகையைப் பிற்படுத்துங்கள்' என நபித்தோழர்களுக்கு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள் என என் தந்தை கூறினார் என்று கூறினார்.''

அப்துல் வாஹித் என்பவர் அறிவிக்கும் இச்செய்தி தாரகுத்னீ, தாகுல் கபீர், ஸகீர் (புகாரீ), மஜ்ரூஹீன், தத்கிரதுல்  மவ்ளூஆத் ஆகிய நூற்களில் உள்ளது.
இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல் வாஹித் பொய்யர் எனக் கூறும் ஹதீஸ் துறை அறிஞர்கள் இவரது ஹதீஸ்களை நிராகத்துள்ளனர்.

மேலும் இவர் அப்துல்லாஹ் இப்னு ராபிஉ அவர்களைப் பார்த்ததே இல்லை. எனவே அவரிடமிருந்து இச்செய்தியைக் கேட்கும் வாய்ப்பில்லை என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறுகின்றார்கள். 'இவர் சியாவாசிகள் வழியாக இட்டுக்கட்டப் பட்ட செய்திகளை அறிவிப்பவர்' என இமாம் இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.

ஆதாரப்பூர்வமான பின்வரும் ஹதீஸ்கள் கூறும் செய்திக்கும் இது முரணாக உள்ளது.

''நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் அஸர் தொழுவோம். பின்பு ஒட்டகத்தை அறுப்போம். அதைப் பத்து பங்கு வைப்போம். பிறகு அதை சமைப்போம். சூரியன் மறையும் முன் சமைத்த இறைச்சியை உண்போம்'' என ரபீஉ இப்னு கதீஜ் (ரலி) கூறுகின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

''நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுவார்கள். சூரியன் (வெளிச்சம்) எனது அறைக்குள்ளே இருக்கும்'' என ஆயிஷா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

''நபி(ஸல்) அவர்கள் அஸர் தொழுகையை தொழுவார்கள். அப்போது சூரியன் உயர்ந்து பிரகாசமாக இருக்கும். அவாலி வரை ஒருவர் செல்வார். அப்போதும் சூரியன் உயர்ந்தே இருக்கும். அவாலி என்பது மதீனாவிலிருந்து நான்கு மைல் அளவில் இருக்கும்'' என அனஸ்(ரலி) கூறுகின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

நாங்கள் (தொழுகை முடிந்து) திரும்பிய போது, அனஸ்(ரலி) அவர்கள், ''இது (நேரம் பிற்படுத்தித் தொழுவது) முனாபிக்குகளின் தொழுகையாகும். சூரியன் ஷைத்தானின் இரண்டு கொம்புக்கும் மத்தியில் வரும் வரை (அதாவது மறையும் வரை) எதிர்பார்த்து அமர்ந்திருப்பான். பிறகு எழுந்து நான்கு வசனங்களை மட்டும் ஓதி (முடிப்பான்) அல்லாஹ்வை குறைந்த அளவிலேயே நினைவு கூர்வான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவும் கூறினார்கள். இதை இஸ்மாயீல் என்பார் கூறுகின்றார். நூல்: முஸ்லிம்

அஸர் தொழுகையை முற்படுத்தியே தொழ வேண்டும். கால தாமதம் செய்யக்கூடாது என சரியான ஹதீஸ்கள் கூறுகின்றன. இந்த வகையிலும் அஸர் தொழுகையை தாமதிக்க வேண்டும் எனக் கூறும் செய்தி, இட்டுக்கட்டப்பட்டது என்பதைப் புரியலாம்.


66. ரக்அத்களில் ஓதாமல், ருகூஉ, ஸஜ்தா முறையாக இருந்தால் மட்டும் போதுமா?

''உமர்(ரலி) அவர்கள், மக்களுக்கு மஹ்பு தொழ வைத்தார்கள். அப்போது அவர்கள் 'ஓதவே இல்லை. (தொழுது முடித்ததும்) நீங்கள் ஓதவே இல்லையே' என்று கேட்கப்பட்டது. ருகூஉ, ஸஜ்தா எப்படி இருந்தது? என்று உமர்(ரலி) கேட்டார்கள். நன்றாக இருந்தது என மக்கள் கூறியதும், அப்படியானால் குற்றமில்லை'' என பதில் கூறினார்கள்.

அபூ ஸலமா இப்னு அப்துர்ரஹ்மான் (ரஹ்) அறிவிக்கும் இச்செய்தி 'இலல், தல்கீசுல் அபாத்தீல்' ஆகிய நூற்களில் உள்ளது.

இதில் ஆறாவது அறிவிப்பாளராக இடம் பெறும் முஹம்மது இப்னு முஹாஜிர் என்பவர் ஹதீஸ்களை இட்டுக் கட்டும் நபர் என இமாம் தஹபீ கூறுகின்றார்கள்.

''பாத்திஹா சூரா ஓதாதவனுக்கு தொழுகை கூடாது'' என நபி(ஸல்) அவர்கள் கூறியதாக உபாதா இப்னு ஸாமித் (ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம், நஸயீ, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜா

ஆதாரப்பூர்வமான இந்த ஹதீஸோ, பாத்திஹா சூராவையேனும் ஓதியாக வேண்டும் என்கிறது. ஆனால் மேற்கண்ட செய்தியோ ஓதாமல் இருந்தாலும் பரவாயில்லை என்கிறது.

ஆதாரப்பூர்வமான செய்திக்கும் முரண்பட்டும், அறிவிப்பாளர் இட்டுக் கட்டும் நபராகவும் உள்ளதால் இதை இட்டுக்கட்டப் பட்டவை என்பதைப் புரியலாம்.


67. காதுகள் வரை கையை உயர்த்துவது பித்அத்தா?

''நீங்கள் உங்களின் கைகளை தொழுகையில் இப்படி உயர்த்துகிறீர்களா? என இப்னு உமர்(ரலி) கேட்டார்கள். (இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும்) ஹம்மாத் என்பவர் தன் கைகளை காதுகள் வரை உயர்த்திக் காட்டினார். அல்லாஹ்வின் மீதாணையாக இது பித்அத்தாகும். நபி(ஸல்) அவர்கள் இதை விட அதிகமாக ஒரு போதும் உயர்த்தியதில்லை'' என்று இப்னுஉமர்(ரலி) கூறினார்கள். அந்த அளவை ஹம்மாத் தனது மார்பு வரை சுட்டிக்காட்டினார்.

பிஷ்ர் இப்னு ஹர்பு கூறியதாக இச்செய்தி 'இலல்', 'முக்தஸர் இலல்' ஆகிய நூற்களில் உள்ளது.

இதன் முதல் அறிவிப்பாளராக இடம்பெறும் முஷ்ர் இப்னு ஹர்பு என்பவர் பலவீனர் என இமாம் இப்னு முயீன், அபூஹாதம், அபூஸர்ஆ ஆகியோர் கூறுகின்றனர். இவர் பலமானவர் அல்ல என்று இமாம் அஹ்மத் கூறுகின்றார்கள். எனவே இது பலவீனமான செய்தியாகும்.

மேற்கண்ட செய்தி தொழுகையில் தக்பீர் கூறும்போது, கைகளை மார்பு வரை தான் உயர்த்த வேண்டும் என்றும், காதுகள் வரை உயர்த்துவது பித்அத் என்றும் கூறுகிறது. ஆனால் ஆதாரப்பூர்வமான பின்வரும் ஹதீஸோ காதுகள் வரை உயர்த்தலாம் என்று கூறுகிறது.

''நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறியபோது தனது கைகளை காதுகள் வரை உயர்த்துவார்கள்'' என மாலிக் இப்னுல் ஹுவைஸ்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

எனவே மேற்கண்ட செய்தி பலவீனமானதாகும்.


68. லுஹர், அஸரில் ஓத வேண்டாமா?

''லுஹர், அஸர் தொழுகையில் ஓதவேண்டியதில்லை. (ஏனெனில்) நபி(ஸல்) அவர்கள் ஓதினால் தான் நாமும் ஓதவேண்டும். அவர்கள் மௌனமாக இருந்தால் நாமும் மவுனமாகவே இருக்க வேண்டும்.''

''லுஹர் தொழுகையில் ஓத வேண்டியதில்லை. ஓத வேண்டும் என்றிருந்தால் நபி(ஸல்) அவர்கள் (ஓதி) நமக்கு கேட்கச் செய்திருப்பார்கள்.''

இந்த இரண்டு செய்திகளையும் இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிப்பதாக இமாம் இப்னுல் ஜவ்ஸீ(ரஹ்) அவர்கள் தனது இலல் நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் முஹம்மத் இப்னு முஹாஜீர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் இட்டுக்கட்டுபவர் என இமாம் தஹபீ கூறுகிறார்கள். இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸீ அவர்களும் கூறுகிறார்கள். எனவே இந்த ஹதீஸ் சரியானதல்ல. மேலும் பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கும் முரணாகவும் உள்ளது.

நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர் தொழுகைகளில் முதல் இரண்டு ரக்அத்களில் உம்முல் குர்ஆனையும் (பாத்திஹா சூராவையும்) வேறு இரண்டு சூராக்களையும் ஓதுவார்கள். சில சமயம் வசனங்களை (சப்தமிட்டு ஓதி) எங்களுக்கு கேட்கும்படி செய்வார்கள். லுஹரின் முதல் ரக்அத்தை சிறிது நீட்டுபவர்களாக இருந்தார்கள் என அபூகதாதா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: புகாரீ

நபி(ஸல்) அவர்கள் லுஹர், அஸர் தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் சூரா பாத்திஹாவும் வேறு ஒரு சூராவும் ஓதுவார்கள். சில சமயம் வசனங்களை (சற்று சப்தமாக ஓதி) எங்களை கேட்கும்படிச் செய்வார்கள். பிந்திய இரண்டு ரக்அத்களில் சூரா பாத்திஹா மட்டும் ஓதுவார்கள் என அபூகதாதா(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

லுஹர், அஸரில் சூராக்கள் ஓத வேண்டும் என ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூற மேற்கண்ட செய்திகளோ வேண்டாம் எனக் கூறுகிறது. எனவே மேற்கண்ட செய்திகள் புனையப்பட்டவை என்பதைப் புரியலாம்.


69. தொழ வைப்பவர் அழகாக இருக்க வேண்டுமா?

''அவர்களில் அழகிய முகம் உள்ளவரே (தனது) கூட்டத்தினருக்கு இமாமத் செய்ய வேண்டும்.''

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவித்ததாக இச்செய்தி தைலமீ, இப்னு அதீ, இப்னுல் ஜவ்ஸீ ஆகியோர் தங்கள் நூற்களில் பதிவு செய்துள்ளனர்.

இந்தச் செய்தியின் நான்காவது அறிவிப்பாளராக இடம் பெறும் முஹம்மது இப்னு மர்வான் பலமானவர் அல்லர் என யஹ்யா கூறுகிறார்கள். இவர் பொய்யர் என்றும், இதன் அறிவிப்பாளர் வரிசை இருள் நிறைந்தது என்றும் தஹபீ கூறுகின்றார்கள். மேலும் இவரைப் பற்றி முல்லா அலீகாரீ, சுயூத்தி, இப்னுல் ஜவ்ஸீ, ஷவ்கானீ போன்றோர் கடுமையாக விமர்சனம் செய்கிறார்கள்.

மேலும் ஆறாவது அறிவிப்பாளராக இடம் பெறும் ஹழ்ரமீ என்பவர் யாரென்றே அறிமுகம், விபரக்குறிப்பு இல்லாதவர் ஆவார். எனவே இந்த செய்தி பலவீனமான செய்தியாக உள்ளது. ஆதாரப்பூர்வமான ஹதீஸுக்கும் முரணாகவும் உள்ளது.

அவர்களில் நல்ல முறையில் ஓதுபவரே (தனது) கூட்டத்திற்கு இமாமத் செய்யட்டும். ஓதுதலில் அனைவரும் சமமான நிலையில் இருந்தால் அவர்களில் ஹிஜ்ரத் செய்வதில் முந்தியவர்கள் இமாமத் செய்யட்டும்; ஹிஜ்ரத் செய்ததில் சமமானவர்களாக இருந்தால் நபிவழியை அறிந்தவர் இமாமத் செய்யட்டும். நபிமொழியை அறிந்ததில் சமமானவர்களாக இருந்தால் அவர்களில் வயதில் மூத்தவர் இமாமத் செய்யட்டும் என்று நபி(ஸல்) கூறினார்கள் என அபூமஸ்வூத்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: முஸ்லிம்

நபி(ஸல்) அவர்களின் நிபந்தனையைக் குறிப்பிட்டு வரும் ஹதீஸில் அழகிய முகம் உள்ளவர் தான் இமாமத் செய்யலாம் என்ற கட்டளை ஏதும் இல்லை என்பதாலும், அறிவிப்பாளர் வரிசை சரியில்லாததாலும் இது இட்டுக்கட்டி கூறுபவர்களால் உருவானது என்று புரியலாம்.


70. தொழு நோய்க்கான காரணம்?

''நான் சூரியனால் நீரை சூடாக்கி வைத்திருந்தேன். என்னிடம் வந்த நபி(ஸல்) அவர்கள், சிவந்தவளே! நீ இவ்வாறு செய்யாதே! ஏனெனில் அது தொழு நோயை உண்டாக்கும் என்று கூறினார்கள்.''

ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இச்செய்தியை தாரகுத்னீ, இப்னு அதீ, அபூநயீம், பைஹகீ ஆகியோர் பதிவு செய்துள்ளார்கள்.

இதன் நான்காவது அறிவிப்பாளர் காலித் இப்னு இஸ்மாயீல் என்பவர் இட்டுக்கட்டக்கூடியவர் என இப்னுஅதீ கூறுகின்றார்கள். இவரைப் போலவே வஹ்பு இப்னு வஹபு என்பவரும் அறிவிக்கின்றார். 'இவரோ, காலித் இப்னு இஸ்மாயீலை விடவும் மோசமானவர்' என இப்னு அதீ கூறுகின்றார்கள். அதுபோலவே ஹைஸம் இப்னு அதீ என்பவர் வழியாக அறிவிக்கப்படுகிறது. 'அவர் பொய்யர்' என இமாம் யஹ்யா இப்னு முயீன் கூறியதாக தாரகுத்னீ கூறுகின்றார்கள்.

மேலும் இதே ஹதீஸ் முஹம்மது இப்னு மர்வானுஸ்ஸஹ்தீ என்பவர் வழியாகவும் அறிவிக்கப்பட்டு தாரகுத்னீயின் அவ்ஸத் நூலில் உள்ளது. இவரும் ஹதீஸ் துறையினரால் நிராகக்கப் பட்டவர் ஆவார். மேற்கண்ட செய்தியை இமாம் மாலிக் (ரஹ்) அறிவிப்பதாக அபூமுஹம்மத் அல்ஜுவைனி என்பவரும் இப்னுஸ் ஸப்பாஹ் என்பவரும் கூறுகின்றார்கள். ஆனால் இமாம் மாலிக் கூறுவதாக கூறுவதை இமாம் பைஹகீ மறுக்கின்றார்கள்.

''சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் ஒளூச் செய்வதையும், அதில் குளிப்பதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இப்படிச் செய்தால் தொழுநோயை உண்டாக்கும் என்றும் கூறினார்கள்.''
இதை ஆயிஷா(ரலி) கூறியதாக தாரகுத்னீயில் உள்ளது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஐந்தாவதாக இடம் பெறும் அம்ரு இப்னு முஹம்மத் என்பவன் ஹதீஸ் மறுக்கத் தக்கது என பதிவு செய்துள்ள தாரகுத்னீ அவர்களே குறிப்பிடுகின்றார்கள். இவர் இட்டுக்கட்டும் நபர் என இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.

இதே ஹதீஸ் அபூதாவூத், திர்மிதீயிலும் உள்ளதாக முஹம்மது இப்னு முயீன் அத்திமிஷ்கீ கூறுகின்றார்கள். ஆனால் அந்த நூற்களில் இப்படி ஒரு ஹதீஸே இல்லை.

''உமர்(ரலி) அவர்கள் சூரியனால் சூடாக்கப்பட்டத் தண்ணீரை(ப் பயன்படுத்துவதை) வெறுத்தார்கள். ஏனெனில் அது தொழுநோயை உண்டாக்கும் என்று கூறினார்கள்.''

இச்செய்தியை ஜாபிர்(ரலி) கூறுவதாக இமாம் ஷாஃபீ பதிவு செய்துள்ளார்கள். இதன் மூன்றாவது அறிவிப்பாளர் சதகத்து இப்னு அப்துல்லாஹ் என்பவர், ஹதீஸ் துறை அறிஞர்கள் அனைவராலும் 'பலவீனர்' என்று குறை கூறப்படுகிறார். மேலும் நான்காவது அறிவிப்பாளர் இப்றாஹீம் இப்னு அபூயஹ்யா என்பவர் இட்டுக்கட்டும் நபர் என இமாம் நஸயீ கூறுகின்றார்கள். நாங்கள் இவரை குராபா (முற்காலத்தின் பொய் கூறும் கோயபல்ஸ்) என்று பெயரிட்டிருந்தோம் என இப்றாஹீம் இப்னு ஸஹ்த் கூறுகின்றார்கள். மேலும் இவர் கத்யா, முஹதஸியிய்யா, ராபிஸிய்யா, போன்ற கொள்கையை ஏற்றவராவார். இதனால் இவரிடம் நிறைய பித்அத்கள் இருந்தன என்று அஜலீ கூறுகின்றார்கள்.

''ஒருவர் சூரியனால் சூடாக்கப்பட்ட தண்ணீரில் குளித்து அதனால் நோய் ஏற்பட்டால் அவர் தன்னைத் தவிர யாரையும் குறை கூறவேண்டாம்.''

இப்னு அப்பாஸ்(ரலி) கூறியதாக இது உள்ளது. இதன் முதல் அறிவிப்பாளர் ழஹ்ஹாக், இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களை சந்தித்ததே இல்லை. மேலும் மூன்றாவது அறிவிப்பாளர் உமர் இப்னு சுப்ஹு என்பவர் பொய்யர் ஆவார்.

இதே கருத்து அனஸ்(ரலி) கூறியதாக உகைலீ அவர்கள் பதிவு செய்துள்ளார்கள். இதில் இடம்பெறும் ஸலவாத்துல் கூபீ என்பவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.

மேலும் இமாம் தாரகுத்னீ அவர்கள் 'அஃப்ராத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். அதில் இடம்பெறும் ஜகய்யா பொய்யர் என்று ஹதீஸ் துறையினர் குறிப்பிடுகின்றார்கள். இப்னு ஜவ்ஸீ அவர்கள் தனது ' மவ்ளூஆத்' எனும் நூலில் பதிவு செய்துள்ளார்கள். பைஹகீ அவர்கள் தனது 'மஹ்பா' எனும் நூலில் பதிவு செய்து விட்டு, இதை ஏற்க முடியாது என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தலைப்பில் வரும் எந்த ஹதீஸும் சரியானதாக இல்லை. இது மட்டுமல்ல. கிராமப்புறங்களில் சூரியனால் சூடேற்றப்பட்ட நீர்நிலைகளில் குடிக்கவும், குளிக்கவும் செய்கிறார்கள். ஆனால் அவர்கள் அனைவருக்கும் தொழு நோய் ஏற்பட்டதாக குறிப்பு எதுவும் இல்லை.

நடைமுறையில் நிகழாத ஒன்றை கற்பனையாக்கி கூறும் கற்பனை வாதியல்ல நபி(ஸல்) அவர்கள். எனவே மேற்கண்ட செய்திகள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டதே ஆகும்.


71. பார்வையின் கூர்மைக்கு...

''அழகான பெண்களின் முகத்தையும், பசுமையானதையும் பார்ப்பது பார்வையை கூர்மையாக்கும்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி, அபூநயிமீன் 'அல்ஹில்யா'வில் இடம் பெற்றுள்ளது. இப்னு ஜவ்ஸீ அவர்களின் ' மவ்ளூஆத்' எனும் நூலிலும் உள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் இப்றாஹீம் இப்னு ஹுபைப் என்பவர் பலவீனமான நபர்களிடமிருந்து ஹதீஸ்களை அறிவிப்பவர் என தாரகுத்னீ கூறுகின்றார்கள். இந்த செய்தி ஷனாதிகாவைச் சேர்ந்த வழிகெட்ட நபர்களால் இட்டுக்கட்டப்பட்டது என இப்னு கையூம் கூறுகின்றார்கள்.

(நபியே!) இறை நம்பிக்கை உள்ள ஆண்களிடம் அவர்கள் தங்களின் பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றும் தங்களின் மறைவுறுப்பைப் பேணிக் கொள்ள வேண்டும் என்றும் இது அவர்களுக்கு பசுத்தமாகும் என்றும் கூறுவீராக! நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 24:30)

வழிகளில் நீங்கள் அமர்வதை எச்சரிக்கின்றேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும், இறைத்தூதர் அவர்களே! நாங்கள் முக்கியப் பேச்சுகள் பேசிட அமர்வது தேவையாகின்றது என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நீங்கள் அப்படித் தங்கினால் வழிக்குரிய உரிமைகளை வழங்கி விடுங்கள்' என்று கூறினார்கள். வழியின் உரிமை என்ன? என்று கேட்டோம். ''பார்வையைத் தாழ்த்திக் கொள்ளல், தீங்கு தரும் பொருட்களை அகற்றுதல், ஸலாமிற்குப் பதில் கூறுதல், நன்மையை ஏவுதல், தீமையைத் தடுத்தல்'' என்று கூறினார்கள். இதை அபூஸயீத்(ரலி) அறிவிக்கின்றார்கள். நூல்: அஹ்மத்

மேற்கண்ட வசனமும் ஹதீஸும் அந்நியப் பெண்களை பார்ப்பதை விட்டும் பார்வையைத் தவிர்க்க வேண்டும் என அறிவிக்கின்றன. ஆனால் மேற்கண்ட இட்டுக்கட்டப்பட்ட செய்தியோ பெண்களைப் பாருங்கள்; பார்வை கூர்மை ஆகும் என்கின்றது. ஆதாரப்பூர்வமான செயதிக்கும் மேற்கண்ட செய்தி முரணாக உள்ளதைப் புரிய முடிகிறது.

அழகான பெண்களை மனைவியரைத் திருமணம் செய்த எத்தனையோ ஆண்கள் பார்வையை இழந்தவர்களாக, பார்வைக் குறை ஏற்பட்டவர்களாக உள்ளதைப் பார்க்கலாம். இதிலிருந்தும் மேற்கண்ட செய்தி பொய் என விளங்கலாம்.

மேலும் இச்செய்தியில் பசுமையைப் பார்ப்பதும் பார்வையை கூர்மையாக்கும் என்று உள்ளது. மதீனா விவசாயம் நிறைந்த பகுதியாகும். பசுமைக்கு பஞ்சமில்லை. ஆனாலும் அங்கு அப்துல்லா இப்னு உம்மி மக்தூம் போன்ற கண் குருடாக இருந்த நபித்தோழர்கள் இருந்துள்ளனர் என்பதிலிருந்தும் இது பொய் என விளங்கலாம்.


72. ஆண்கள் கெட்டுப் போக, பெண்களே காரணம்

''பெண்கள் சொல்லை கேட்டவன் தொலைந்தான்''
இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஆயிஷா(ரலி) அறிவிக்கும் இச்செய்தி, இப்னு அதீ, அபூநயீம், ஹாகிம் நூற்களில் பதிவாகியுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் பகார் இப்னு அப்துல் அஜீஸ் என்பவர் பலவீனமானவர் என இப்னு அதீ கூறுகின்றார்கள். இவர் கணக்கிலேயே எடுத்துக் கொள்ளப்படத் தகாதவர் என்று இப்னு முயீன் கூறுகின்றார்கள்.

இது பலவீனமான செய்தியாகும். மேலும் இது, நபிவழிக்கும் மாற்றமான செய்தியாகவும் உள்ளது.

ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட போது இறை மறுப்பாளர்களான மக்காவாசிகளின் நிபந்தனைப்படி உம்ரா செய்யாமல் திரும்பும் நிலை நபி(ஸல்) அவர்களுக்கு ஏற்படுகிறது. உடனே நபி(ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்துவிட்டு அங்கேயே தலையைச் சிரையுங்கள் என நபித்தோழர்களிடம் கூறினார்கள். இந்த உடன்படிக்கை குறித்து, கவலையுடன் இருந்த நபித்தோழர்கள் கவலை காரணமாக எதையும் செய்யாமல் இருந்தார்கள்.

இதனால் நபி(ஸல்) அவர்கள் தன் மனைவி உம்முஸலமா(ரலி) இருந்த கூடாரத்திற்குச் சென்று, நடந்ததை தன் மனைவியிடம் கூறுகின்றார்கள். அப்போது உம்மு சலமா(ரலி) அவர்கள் நீங்கள் அங்கே சென்று எவருடனும் பேசாமல் தலையைச் சிரைத்து, குர்பானி கொடுங்கள் என்று கூறினார்கள். நபி(ஸல்) அவர்களும் அப்படியே செய்தார்கள். இதைப் பார்த்த நபித்தோழர்களும் தலையை சிரைத்துக் குர்பானி கொடுத்தார்கள். நூல்: புகாரீ(ஹதீஸின் கருத்து)

இந்த ஹதீஸ் நபி(ஸல்) அவர்கள் தன் மனைவி உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் ஆலோசனை செய்துள்ளனர் என்பதை விளங்கிடச் செய்கிறது. பெண்களிடமும் கேட்கலாம். நல்ல செய்தி இருப்பின் ஏற்கலாம் என்பதற்கு நிறையச் சான்றுகள் உள்ளன.

எனவே மேற்கண்ட செய்தி, பொய்யானது என்பதை அறிக!


73. ஆண்கள் நரகம் செல்லக் காரணம் பெண்களே!

''பெண்கள் மட்டும் இல்லாமல் இருந்தால் ஆண்கள் (அனைவரும்) சொர்க்கம் சென்றிருப்பார்கள்.''

இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் கூறியதாக அனஸ்(ரலி) அவர்கள் அறிவித்து, இப்னு அதீயின் 'அல்காமில்' நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் பிஷ்ர் இப்னு ஹுஸைன் என்பவர் பெரும் பொய்யர் என இப்னு இராக் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த செய்தியைப் படிக்கும் போது பெண்கள் எவரும் சொர்க்கம் செல்லமாட்டார்கள். ஆண்களையும் செல்லவிட மாட்டார்கள் என்பது போல் புரிய முடிகிறது. ஆனால் பெண் களிலும் நல்லவர்கள் உள்ளனர். சொர்க்கம் செல்வர் என குர்ஆன் மூலம் புரிய முடிகிறது.

அல்லாஹ், ஈமான் கொண்டவர்களுக்கு உதாரணமாக பிர்அவ்னின் மனைவியையும், இம்ரானின் மகள் மர்யம் அவர்களையும் கூறுகின்றான். (பார்க்க அல்குர்ஆன் 66:10,11) அதாவது பிர்அவ்னின் மனைவியும் மர்யம் அவர்களும் மூமின் களுக்கு உதாரணமாவார்கள். அவர்களின் வாழ்வைக் கருத்தில் கொண்டு, படிப்பினை பெற வேண்டும் என்று கூறுகின்றான்.

ஆண்களில் நல்லவர்-கெட்டவர் உள்ளது போலவே பெண்களிலும் நல்லவர்-கெட்டவர் உண்டு என்ற அளவில் தான் நம்பிக்கை இருக்க வேண்டுமே தவிர, அனைத்து பெண்களும் மோசமானவர்கள்; ஆண்களை வழிகெடுத்து நரகிற்கு அழைத்துச் செல்பவர்கள் என நம்புதல் கூடாது.

பெண்கள் அனைவரும் கெட்டவர்கள் எனில் அவர்களை நரகில் போடவே இறைவன் விரும்புவான். ஆனால் அல்லாஹ் பெண்களை உயிருடன் புதைத்தது பற்றியும், இதற்கு நீதி வழங்குவேன் என்றும் 16:58, 81:8 ஆகிய வசனங்கள் மூலம் அறிவிக்கின்றார்கள்.

நரகம் செல்ல உள்ள பெண்கள் தானே, வாழ்ந்தால் என்ன? செத்தால் என்ன? என இறைவன் எண்ணி இருந்திடவில்லை. மாறாக அவர்கள் வாழப் பிறந்தவர்கள், அவர்கள் வாழ்வதைக் கெடுத்த கொலைகார ஆண்கள் தண்டிக்கப்படுவார்கள் எனக் குறிப்பிடு கிறான்.

எனவே மேற்கண்ட செய்தி பொய்யானது, இட்டுக்கட்டப் பட்டது என்பதை அறிவோமாக!


74. இறைவனின் விரோதிகள் பெண்களாவர்?

''பெண்கள் மட்டும் இல்லாமல் இருந்தால் அல்லாஹ்வை சரியான முறையில் வணங்கப்பட்டிருக்கும்.''

இவ்வாறு நபி(ஸல்) கூறியதாக உமர்(ரலி) அவர்கள் அறிவிக்கும் இச்செய்தி இப்னு அதீயின் அல்காமில் நூலில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

இச்செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் இடம்பெறும் நான்காம் அறிவிப்பாளர் அப்துர்ரஹீம் இப்னு ஸைத் அல்அம்மீ என்பவன் ஹதீஸ்கள் நிராகக்கப்பட வேண்டியவை என அபூஹாதம் கூறுகின்றார்கள். மோசமான பெரும் பொய்யர் என இவரை முப்னு முயீன் கடுமையாக விமர்சிக்கிறார்கள். புகா இமாம் உட்பட பலரும் விமர்சிக்கிறார்கள். இதைப் பதிவு செய்த இப்னு அதீ அவர்களும் இது புறக்கணிக்கப்பட வேண்டிய செய்தி என்று கூறுகின்றார்கள்.

இந்த ஹதீஸ், பெண்கள் இறைவனை வணங்குவதை விட்டும் தடுக்கக் கூடியவர்கள். அதாவது இறைவனின் விரோதிகள் பெண்கள் தான் என்பது போல் கூறுகின்றது. இது ஆதாரப்பூர்வ மான கொள்கைக்கு முரணான செய்தியாகவும் உள்ளது.

நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும் சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமை யையும் வெறுப்பையும் உருவாக்கி அல்லாஹ்வின் நினைவில் இருந்தும், தொழுகையில் இருந்தும் உங்களைத் தடுத்து விட்டான். எனவே அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா? (அல்குர்ஆன் 5:91)

மனிதர்களை வழிகெடுக்கும் ஷைத்தான் தான் இறைவனின் எதிரி என்று இந்த வசனம் கூறுகிறது. ஆனால் பெண்கள் தான் வழிகெடுக்கும் கூட்டம் என்பது போல் மேற்கண்ட செய்தி கூறுகின்றது. இதிலிருந்தும் மேற்கண்ட செய்தி இட்டுக்கட்டப் பட்டது என விளங்கலாம்.


75. மஹருக்கு அளவுண்டா?

''பத்து வெள்ளி நாணயங்களுக்கும் குறைவாக மஹர் கிடையாது.''

இதை நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஜாபிர்(ரலி) அவர்களால் அறிவிக்கப்பட்டு பைஹகீ, தாரகுத்னீ, இப்னு அதீ ஆகிய நூற்களில் இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ஐந்தாவதாக முபஷ்ஷிர் இப்னு உபைத் எனும் பொய்யர் இடம் பெறுகிறார். இவன் ஹதீஸ்கள் இட்டுக்கட்டப்பட்டவைகளாகவும், பொய்யானவை களாகவும் இருக்கும் என இமாம் அஹ்மத்(ரஹ்) கூறுகின்றார்கள்.

'இவர் ஹதீஸ்களில் முற்றிலும் வெறுக்கப்பட்ட பலவீனர்' என அபூஹாதம் கூறுகின்றார்கள். ஹதீஸ் துறையில் இவர் புறந்தள்ளப்பட்டவர் என தாரகுத்னீ கூறுகின்றார்கள். நல்லவர் களின் பெயரைப் பயன்படுத்தி இட்டுகட்டும் நபர் இவர். இவன் ஹதீஸ்களை, புதுமை ஹதீஸ்கள் எனும் வரிசையில் தான் சேர்க்க வேண்டும் என இப்னு ஹிப்பான் கூறுகின்றார்கள்.

''இவர் அறிவிக்கும் செய்திகள் பொய்யானவை. அசத்தியமானவை, இட்டுக்கட்டப்பட்டவை'' என இமாம் அஹ்மத் கூறியதாக இப்னு அதீ கூறுகின்றார்கள். 'இவர் ஹதீஸ் துறை யினரால் வெறுக்கப்பட்டவர்' என இமாம் புகாரீ கூறுகின்றார்கள். இப்படி பலரால் சாடப்பட்டவர் இடம் பெறுவதால் இது பலவீனமான செய்தியாகிறது.

மஹர் என்பது திருமணம் செய்து கொள்ள உள்ள பெண்ணால் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். பெண்ணின் பொறுப்பாளர் மஹர் பற்றி பேசினாலும், அந்த மஹரை ஏற்றுக் கொள்ளவும், மறுக்கவும் உரிமை கொண்டவள் பெண் தான். இதுபோல் வாங்கிய மஹரை தானே வைத்துக் கொள்ளவோ, அல்லது கணவனுக்குத் திரும்பத் தந்திடவோ உரிமையும் பெற்றவள், பெண் தான் என்பது இஸ்லாமியச் சட்டமாகும்.

குறைந்த பட்சம் மஹர் இது தான் என நிர்ணயம் செய்யும் உரிமை எவருக்கும் இல்லை. பத்து வெள்ளி நாணயங்களுக்கு குறைவாக தரப்படும் மஹரை வைத்து திருமணம் செய்தல் கூடாது என்பது போல் மேற்கண்ட செய்தி கூறுகின்றது. அதற்கு குறைவான மஹர் இருந்து, அதை அந்தப் பெண் ஏற்றுக் கொண்டால் அதுவே மஹர் என பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகிறது.

ஒரு பெண் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதர் அவர்களே! என்னை உங்களிடத்தில் ஒப்படைத்துவிட்டேன். (அதாவது என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்) என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணின் பக்கம் திரும்பி அப்பெண்ணை மேலும் கீழும் எனப் பார்த்துவிட்டு தலை கவிழ்ந்து கொண்டார்கள்.

தனது கருத்து விஷயமாக எந்த முடிவும் எடுக்கப்படாததைப் பார்த்த அப்பெண் அமர்ந்து கொண்டார். அப்போது ஒரு நபித்தோழர் ஒருவர் எழுந்து, 'இறைத்தூதர் அவர்களே, இப்பெண் ணிடம் உங்களுக்கு எவ்விதத் தேவையும் இல்லையெனில் எனக்குத் திருமணம் செய்து வையுங்கள்' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'உன்னிடம் (மஹர் தர) என்ன உள்ளது?' என்று கேட்டார்கள்.

உடனே அவர், 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக! என்னிடம் எதுவுமில்லை இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். 'உன் குடும்பத்தாரிடம் சென்று ஏதாவது உள்ளதா? என்று பார்த்துவா' என்று நபி(ஸல்) கூறினார்கள். போய் வந்த அவர், 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக எதையும் நான் பெற்றுக் கொள்ளவில்லை' என்று கூறினார். 'இரும்பு மோதிரம் உள்ளதா?'என நபி(ஸல்) கேட்டார்கள். அவர் சென்று திரும்ப வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இரும்பு மோதிரம் கூட இல்லை. ஆனாலும் இந்த வேட்டி தான் உள்ளது' என்றார். இதை அறிவிக்கும் ஸஹ்ல் (ரலி) அவர்கள் அவரிடம் மேலாடை கூட இல்லை என்று குறிப்பிடுகிறார்கள்.

'இந்த வேட்டியில் பாதியை அப்பெண்ணுக்குத் தருகிறேன்' என்று அவர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'உனது இந்த வேட்டியை வைத்து என்ன செய்ய முடியும். இதை நீ அணிந்தால் அப்பெண்ணின் உடலில் எதுவும் இருக்காது. அப்பெண் அணிந்து கொண்டால் உனது உடலில் எதுவும் இருக்காது' என்று கூறினார்கள். இதைக் கேட்ட அவரும் அமர்ந்துவிட்டார். சபை(யின் நேரம்) அதிகத்தது. (முடிவு எதுவும் ஏற்படவில்லை என்பதால்) அவர் எழுந்து சென்று விட்டார். அவரை அழைத்து வரும்படி நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர் அழைத்து வரப்பட்டார்.

அவர் வந்ததும், 'குர்ஆனில் ஏதேனும் உம்மிடம் மனனமாக உள்ளதா?'எனக் கேட்டார்கள். 'இன்னின்ன அத்தியாயங்கள் எனக்குத் தெரியும்' என அவர் எண்ணிக் காட்டினார். 'இவற்றை மனப்பாடமாக நீர் ஓதுவீரா?' என்று கேட்டார்கள். அவர் ஆம் என்றார். 'குர்ஆனில் நீர் தெரிந்து வைத்துள்ள இவைகளுக்குப் பகரமாக இப்பெண்ணை மணம் முடித்துத் தந்தேன்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இது ஸஹ்ல்(ரலி) அவர்களால் அறிவிக்கப்படுகிறது. நூல்கள்: புகாரீ, முஸ்லிம்

வெறுமென குர்ஆன் வசனங்களை மஹராக்கி, அந்த மஹரையும் அந்தப் பெண் மறுப்பேதும் தெரிவிக்காத நிலையில் நபி(ஸல்) அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளார்கள் என ஆதாரப்பூர்வமான ஹதீஸ் கூறுகின்றது. எனவே குறைந்த பட்சம் பத்து வெள்ளி நாணயங்களாவது மஹராக இருந்தாக வேண்டும் என்ற மேற்கண்ட செய்தி பொய் எனப் புரியலாம்.


எச்சரிக்கை!

ஹதீஸ்களின் பெயரால் யூதர்கள் இட்டுக்கட்டி உள்ளனர் என்பதை உணர்ந்து செயல்பட முன்வர வேண்டும்.

இதற்காக ஹதீஸ்களே வேண்டாம் என்ற கொள்கை கொண்டு அலைவது நரகிலேயே போய்ச் சேர்க்கும் என்பதையும் நினைவில் கொள்க!
Previous Post Next Post