கழா கத்ர் - விதியை நம்புதல்

அல்லாஹ் தன் ஆழமான அறிவாற்றலால் ‌ அனைத்துப் படைப்பினங்களினதும்‌ விதிகளை நிர்ணயித்துள்ளான்‌, அவற்றை லவ்ஹுல்மஹ்‌ஃபூல்‌ எனும் பதிவேட்டில்‌ எழுதி, தன் நாட்டப்படி அவற்றை அமுல்படுத்துகிறான்‌. தனது ஆற்றலால் ‌அவற்றை தோற்றுவிக்கிறான்‌ என நாம்‌ உறுதியாக நம்பிக்கை கொள்ள வேண்டும்‌.

அல்லாஹ் கூறுகிறான் ‌”நாம்‌ ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக(குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்‌." (அல்குர்ஆன் 54:49)‌ 

அவனே எல்லாப் பொருட்களையும்‌ படைத்து, அவற்றை அதனதன்‌ அளவுப்‌ படிஅமைத்தான்‌.” (அல்குர்‌ஆன்‌ 25:02).

விதியைப்‌ பற்றி நம்பிக்கை கொள்ளும்‌ விடயத்தில்‌ பின்வரும்‌ விடயங்கள்‌ உள்ளடங்குகின்றன. அவை வருமாறு:

1.அல்லாஹ்வின் ‌அறிவாற்றல் பற்றி நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

அல்லாஹ்வின்‌ அறிவாற்றலுக்கு ஆரம்பமோ, முடிவோ கிடையாது. அவன்‌ அனைத்துப்‌ படைப்பினங்களினதும்‌ செயற்பாடுகளுடன்‌ சம்பந்தப்பட்ட கால நிர்ணயம்‌, சம்பாத்திய நிர்ணயம்‌ போன்றவற்றையும்‌, தன் ‌அடியார்களின்‌ செயற்பாடுகளுடன்‌ சம்பந்தப்பட்ட வணக்கவழிபாடுகள்‌, பாவகாரியங்கள்‌ போன்றவற்றையும்‌ நுணுக்கமாகவும்‌, விரிவாகவும்‌ அறிந்தவன்‌. அல்லாஹ்‌ கூறுகிறான்‌ :“அன்றியும்‌ அவனே ஒவ்வொரு பொருளையும்‌ நன்கறிபவனாக இருக்கிறான்‌."(அல்குர்‌ஆன்‌02:29)

“இவையாவும் வல்லமையில்‌ மிகைத்தோனும்‌, எல்லாம்‌ அறிந்தோனுமாகிய (இறைவனின்‌) ஏற்பாடாகும்‌.” (அல்குர்‌ஆன்‌06:96). 

தன்னை யார் ‌வழிபடுவார்‌, தனக்கு யார்‌ மாறு செய்வார்‌ என்பதையும்‌, யாருக்கு வாழ்வை நீடிக்க வேண்டும்‌, யாரின் வாழ்வை குறைக்க வேண்டுமென்பதையும்‌ நன்கறிந்தவன்‌.

2.லவ்ஹுல்மஹ்‌ஃபூலில்‌ அனைத்து விதிகளையும் ‌அல்லாஹ்‌ எழுதி வைத்துள்ளான்‌ என நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

அல்லாஹ் கூறுகிறான்‌: “பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச்‌ சம்பவமும்‌-அதனை நாம்‌ உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல்மஹ்‌ஃபூள்‌) ஏட்டில் ‌இல்லாமலில்லை; நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும்‌." (அல்குர்‌ஆன்‌57:2) 

அவன் மறைவான(யா)வற்றையும்‌ அறிந்தவன்‌; வானங்களிலோ, பூமியிலோ ஓர்‌ அணுவளவும் ‌அவனைவிட்டு மறையாது; இன்னும் அதைவிடச் சிறியதோ  சிறியதோ, இன்னும்‌ பெரியதோ ஆயினும்‌ தெளிவான (லவ்ஹுல்‌ மஹ்‌ஃபூல்‌) ஏட்டில் பதிவுசெய்யப்படாமல்‌ இல்லை என்று கூறுவீராக." (அல்குர்‌ஆன்‌34:03).

நபி (ஸல்) அவர்கள்‌ கூறினார்கள்‌: “அல்லாஹ்‌, வானங்களையும்‌ பூமியையும்‌ படைப்பதற்கு ஐம்பதாயிரம்‌ ஆண்டுகளுக்கு முன்பே, படைப்பினங்களின் விதிகளை எழுதி விட்டான்‌ (அப்போது) அவனது அரியணை(அர்ஷ்) ‌தண்ணீரின் மேல் ‌இருந்தது." (முஸ்லிம் 2653)

“முதன்‌ முதலில்‌ அல்லாஹ்‌ எழுதுகோலைப்‌ படைத்து, அதற்கு 'எழுது' என கட்டளையிட்டான்‌. 'இறைவா, நான் ‌எதை எழுதுவது?' எனக்கேட்க, 'யுகமுடிவு நாள் வரும் வரைக்குமான அனைத்தினதும் விதிகளை எழுது' எனக் கூறினான்‌." (அபூதாவூத் 4700, திர்மிதி 2155)

அல்லாஹ் தனது அறிவாற்றல் பற்றியும்‌, விதிகளை எழுதி வைத்துள்ளது குறித்தும் பின்வரும்‌ அல்குர்‌ஆன்‌ வசனத்தில்‌ குறிப்பிடுகிறான்‌ “நிச்சயமாக அல்லாஹ் வானத்திலும்‌, பூமியிலும்‌ உள்ளவற்றை நன்கறிகிறான்‌ என்பதை நீர் ‌அறியவில்லையா? நிச்சயமாக இவை(யெல்லாம்‌) ஒரு புத்தகத்தில்‌ (பதிவுசெய்யப்பட்டு) இருக்கின்றன. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிகவும்‌ சுலபமானது." (அல்குர்‌ஆன்‌ 22:70).

3.அமுலாக்கப்படும்‌ அல்லாஹ்வின் நாட்டத்தை நம்பிக்கை கொள்ள  வேண்டும்‌:

அல்லாஹ் நாடியவை நிச்சயம் நடந்தே தீரும்‌. அவன் நாடாதவைகள்‌ என்றும்‌ நடைபெறாது. அவன்‌ ஒன்றைக் கொடுக்க நினைத்தால்‌ அதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுக்கவேண்டுமென நினைத்தால்‌ அதை யாராலும் கொடுக்கவும்‌ முடியாது. அவனின் முடிவுகளை யாருக்கும் மாற்றிட முடியாது. அவனின் ஆட்சியில்‌ அவனுக்கு விருப்பமில்லாத எதுவும்‌ நடைபெறாது. தனது அருளால்‌ தான்‌
நாடியவர்களுக்கு நேர்வழிகாட்டுவான்‌. தனது நீதத்தால் தான்‌ நாடியவர்களை வழிகெடச்‌ செய்வான்‌. அவனது சட்டத்தில்‌ கையடிப்பவர்‌ எவருமில்லை. அல்லாஹ் கூறுகிறான்‌:”அல்லாஹ் நாடியிருந்தால்‌, தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும்‌, அத் தூதுவர்களுக்குப் பின்வந்த மக்கள்‌(தங்களுக்குள்‌) சண்டை செய்து கொண்டிருக்கமாட்டார்கள் ஆனால் அவர்கள்‌ வேறுபாடுகள் கொண்டனர்‌; அவர்களில்‌ ஈமான்‌ கொண்டோரும்‌ உள்ளனர்‌; அவர்களில்‌
நிராகரித்தோரும் ‌(காஃபிரானோரும்‌) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால்‌ அவர்கள்‌ (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்கமாட்டார்கள்‌; ஆனால்‌ அல்லாஹ்தான்‌ நாடியவற்றைச் செய்கின்றான்‌." (அல்குர்‌ஆன்‌02:253),

“உங்களில் நின்றும் யார்‌ நேர்வழியை விரும்புகிறாரோ, அவருக்கு (நல்லுபதேசமாகும்‌). ஆயினும்‌, அகிலங்களுக்கெல்லாம்‌ இறைவனாகிய அல்லாஹ்‌ நாடினாலன்றி நீங்கள்‌ (நல்லுபதேசம்‌ பெற) நாடமாட்டீர்கள்‌” (அல்குர்‌ஆன்‌ 81:28-29).

 4. அல்லாஹ்வே அனைத்துப்‌ படைப்பினங்களையும்‌ உருவாக்குகிறான்‌, படைக்கிறான்‌ என நம்பிக்கை கொள்ளவேண்டும்‌:

அல்லாஹ்‌ மாபெரும்‌ படைப்பாளன்‌. அவனைத்‌ தவிர இப்பிரபஞ்சத்தில்‌ இருக்கும் ‌அனைத்தும் படைப்பினங்கள்‌. ஒவ்வொரு பொருளினதும் தன்மைகள்‌, பண்புகள்‌, அசைவுகள்‌ போன்றன யாவும்‌ அவனால்‌ உருவாக்கப்படுபவை, படைக்கப்பட்டவை.
அல்லாஹ்‌ கூறுகிறான்‌: “அல்லாஹ்தான்‌ அனைத்துப்‌ பொருட்களையும்‌ படைப்பவன்‌; இன்னும்‌, அவனே எல்லாப் பொருட்களின் பாதுகாவலனுமாவான்‌." (அல்குர்‌ஆன்‌39:62), 

உங்களையும்‌, நீங்கள் செய்த(இ)வற்றையும்‌, அல்லாஹ்வே படைத்திருக்கின்றான்‌." (அல்குர்‌ஆன்‌37:96), 

அடியார்களின் செயற்பாடுகளைப்‌ பொறுத்தவரை அல்லாஹ் படைத்தவைகளும்‌ இருக்கின்றன. அவர்கள் சம்பாதித்துக்‌ கொள்பவைகளும் ‌இருக்கின்றன. அல்லாஹ் கூறுகிறான்‌: ”அது சம்பாதித்ததின்‌
நன்மை அதற்கே; அது சம்பாதித்த தீமையும்‌ அதற்கே!" (அல்குர்‌ஆன்‌ 02:286).

5.அல்லாஹ்வின் விருப்பமும்‌, நாட்டமும் வெவ்வேறானதென நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

சில சமயம் நுணுக்கமான காரணத்துக்காகவும்‌, உயரிய நோக்கத்திற்காகவும்‌ அல்லாஹ்தான் விரும்பாதவற்றை நாடுவான்‌. தான் நாடாதவற்றை விரும்புவான்‌. அல்லாஹ்வின் நாட்டத்தையும்‌, அவனது விருப்பத்தையும் ‌ஒருபோதும் சமனாக மதிப்பிட முடியாது. அல்லாஹ் கூறுகிறான்‌: மேலும் நாம் நாடியிருந்தால்‌, ஒவ்வோர்‌ ஆத்மாவுக்கும்‌
அதற்குரிய நேர்வழியை நாம்‌ கொடுத்திருப்போம்‌; ஆனால்‌ “நான் ‌நிச்சயமாக நரகத்தை ஜின்களையும் (தீய)மனினதர்களையும் ஆகிய யாவரையும் கொண்டு நிரப்புவேன்‌" என்று என்னிடமிருந்து (முன்னரே)வாக்கு வந்துள்ளது. (அல்குர்ஆன்‌ 32:13).

“(அவனை)நீங்கள் நிராகரித்தாலும்‌ (அவனுக்குக் குறையேதுமில்லை)-நிச்சயமாக அல்லாஹ் ‌உங்களிடம் ‌தேவையற்றவன் எனினும் தன்‌ அடியார்களின்(நன்றி மறக்கும்‌) நிராகரிப்பை குஃப்ரைக் கொண்டு அவன் திருப்தி கொள்வதில்லை; நீங்கள் நன்றி செலுத்துவீர்களாயின்‌, உங்களைப் பற்றி அவன் திருப்திகொள்வான்‌..."
(அல்குர்‌ஆன்‌ 39:07).

6.விதியும்‌, மார்க்கம் கூறுபவைகளும்‌ என்றும் முரணாகாது என நம்பிக்கை கொள்ள வேண்டும்‌:

அல்லாஹ் கூறுகிறான்‌: ”நிச்சயமாக உங்களுடைய முயற்சி பலவாகும்‌. எனவே எவர்‌ (தானதருமம்‌) கொடுத்து, (தன்‌ இறைவனிடம்‌) பயபக்தியுடன்‌ நடந்து, நல்லவற்றை (அவை நல்லவையென்று) உண்மையாக்குகின்றாரோ,அவருக்கு நாம் (சுவர்க்கத்தின் வழியை) இலேசாக்குவோம்‌. ஆனால் ‌எவன் ‌உலோபித்தனம் செய்து அல்லாஹ்விடமிருந்து தன்னைத் தேவையற்றவனாகக் கருதுகிறானோ, இன்னும்‌, நல்லவற்றை பொய்யாக்குகிறானோ, அவனுக்கு கஷ்டத்திற்குள்ள (நரகத்தின்‌) வழியைத்‌ தான்‌ இலேசாக்குவோம்‌.” (அல்குர்‌ஆன்‌ 92:04-10).

விதி என்பது படைப்பினங்களது அனைத்து விடயங்களையும் நிர்ணயித்தவனான அல்லாஹ் மாத்திரம்‌ அறியக் கூடிய வகையில்‌ மறைவாக இருக்கும்‌ ஒன்றாகும்‌. மார்க்கம் ‌என்பது படைப்பினங்கள் தமது வாழ்வை சீரான பாதையில் ‌எவ்வாறு செப்பனிட்டுக் கொள்ள வேண்டும் ‌எனும்‌ என அனைவரும்‌ அறிந்து கொள்ளும்‌ வகையில்‌ அனைவர்‌ மீதும்‌ கடமையாக்கப்பட்ட ஒன்றாகும்‌. அல்லாஹ்‌. அடியார்களின் விதிகளை நிர்ணயித்து, அவர்களை விட்டும்‌ அதனை மறைத்து வைத்துள்ளான்‌. அவர்களுக்கு சில விடயங்களை ஏவி, சிலதைத் தடுத்து. தனது ஏவல்களுக்குக் கட்டுப்படவும்‌, விலக்கல்களைத் தவிர்ந்து கொள்ளவும்‌ அவர்களை அவன்‌ தயார்படுத்தி, உதவியும்‌ புரிந்துள்ளான்‌. அந்த ஏவல்‌, விலக்கல்களை அமுல்படுத்துவதில்‌ ஏதும்‌ தடைகள்‌ வரும்போது அவர்களுக்கு சலுகையும்‌ வழங்கியுள்ளான்‌. எனவே ஏவல்களை விடுவதற்கோ, பாவங்களைச் செய்வதற்கோ யாரும்‌ அல்லாஹ்வின்‌ விதியைக்‌ காரணம்‌ காட்ட முடியாது.
அல்லாஹ்‌ கூறுகிறான்‌:“(அல்லாஹ்வுக்கு இணைவைக்கும்‌) முஷ்ரிக்குகள்‌ “அல்லாஹ்‌ நாடியிருந்தால்‌, நாங்களும்‌ எங்கள்‌ மூதாதையர்களும்‌ இணை வைத்திருக்கமாட்டோம்‌; நாங்கள் ‌எந்தப் பொருளையும்‌(எங்கள் விருப்பப்படி)
ஹராமாக்கியிருக்கவும் மாட்டோம்‌' என்று கூறுவார்கள் ‌- இப்படித்தான் ‌இவர்களுக்கு முன் ‌இருந்தவர்களும் நமது தண்டனையை அனுபவிக்கும் வரை பொய்ப்பித்துக்‌ கொண்டிருந்தார்கள்‌; (ஆகவே அவர்களை நோக்கி,) இதற்கு உங்களிடம்‌ ஏதாவது ஆதாரம் ‌உண்டா?இருந்தால் ‌அதை எமக்கு வெளிப்படுத்துங்கள்‌;(உங்களுடைய வீணான) எண்ணங்களைத் தவிர வேறெதையும் நீங்கள் பின்பற்றவில்லை; நீங்கள்‌ பொய்வாதமே புரிகின்றீர்கள்‌"என்று (நபியே!)நீர்கூறும்‌. “நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ்விடமேயுள்ளது; அவன் நாடியிருந்தால்‌ உங்கள் யாவரையும் ‌அவன்‌ நல்வழியில்‌ செலுத்தியிருப்பான” என்று நீர் கூறும்" (அல்குர்‌ஆன்‌ 6:1‌48-”149). ‌

மேற் குறிப்பிட்ட வசனத்தில் கவனிக்கத்தக்க மூன்று விடயங்கள்‌ இருக்கின்றன:

1.இவர்களின்‌ வாதம்‌ பொய்யானதாகும்‌.

2.பொய்யான வாதத்தை முன்வைத்ததன் காரணமாக அவர்களுக்கு அல்லாஹ்வின்‌ தண்டனை வந்திறங்கியது. விதி விடயத்தில்‌ அவர்கள் கூறுபவற்றுக்கு ஏதேனும்‌ ஆதாரம் வைத்திருந்தால்‌ அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்காது. அவர்களின்‌ வாதமும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும்.

அவர்களுக்கு வழங்கப்பட்ட வேதங்களை அவர்கள்‌ ஒரு போதும் சரியாக வாசித்து, ஆய்வுக் கண்கொண்டு விளங்கிக் கொள்ளவில்லை. அவ்வாறு விளங்கியிருந்தால்‌ அறிவியல் ரீதியாகப் பேசி அது அவர்களுக்கு சார்பான ஆதாரமாக அமைந்திருக்கும்‌. மாறாக வெறும்‌ அனுமானங்களையும்‌, ஊகங்களையும் வைத்தே அவர்கள் தமது வாதத்தை வைக்கின்றனர்‌. அதனால் நிரப்பமான அத்தாட்சி அல்லாஹ்வின் பக்கம்‌ வந்துவிட்டது.

'இத்தகைய விதி விடயத்தில்‌ இரு பிரிவினர்‌ வழிதவறிச் சென்றுள்ளனர்‌. அவர்கள்‌ வருமாறு:

அ. கத்ரிய்யாக்கள்‌:

இவர்கள்‌ மனிதர்களின்‌ செயற்பாடுகள்‌ மாத்திரமே உண்மையானது எனும்‌. கொள்கையைக் கொண்டவர்கள்‌. அல்லாஹ்வின் விதியை மறுப்பவர்கள்‌. இவர்கள்‌ இரு தரப்பினராக நோக்கப்படுகின்றனர்‌:

1.எல்லைமீறியவர்கள்‌(குலாத்‌): இக்கொள்கைக்கு இவர்களே முன்னோடிகள்‌. இவர்கள் ஸஹாபாக்களின்‌ இறுதிக் காலத்தில் தோற்றம் பெற்றார்கள்‌. காரியங்கள்‌ அனைத்தும் முன்னேற்பாடின்றி அவ்வப்போது தானாகவே நடைபெறுகின்றன
என்பது இவர்களது வாதம்‌. அதனால்‌ அல்லாஹ்வின்‌ அறிவு, எழுதப்பட்ட விதி, அவனின் நாட்டம் அவனின் ‌படைப்பு போன்ற அனைத்தையும் மறுத்தார்கள்‌. இவர்களுக்கு அந்நேரமே இப்னு அப்பாஸ்‌, இப்னு உமர்‌ போன்றோர் மறுப்பும்‌
தெரிவித்துள்ளனர்‌.

2.முஃதஸிலாக்கள் இவர்கள்‌ அல்லாஹ்வின் ‌‌அறிவு, எழுதப்பட்ட விதி ஆகிய இரண்டையும் ஏற்றுக்கொண்டு, அல்லாஹ்வின் நாட்டம்‌, அவனின் படைப்பு ஆகிய இரண்டையும்‌ மறுக்கின்றனர்‌. மனிதர்கள்‌ தமது செயல்களை அவர்களே படைத்துக் கொள்கின்றனர்‌ என்பதே இவர்களின்‌ முக்கிய வாதமாகும்‌.

ஆ. ஜபரிய்யாக்கள்‌:

இவர்கள்‌ அல்லாஹ்வின்‌ செயற்பாடுகள் மாத்திரமே உண்மையானது எனும்‌. கொள்கையைக் கொண்டவர்கள்‌. மனிதன் சுதந்திரமற்றவன்‌. அவனின்‌ அனைத்து செயல்களும்‌ அல்லாஹ்வின்‌ நாட்டப்படியே நடைபெறுகின்றது. மனிதனும்‌, ஜடங்களும் ‌ஒன்றே. ஜடப் பொருட்களை நாம் ‌எவ்வாறு பயன்படுத்துகிறோமோ அவ்வாறே இறைவனும் நம்மை செயல்படவைக்கிறான்‌ எனக் கூறுகின்றனர்‌.

இவர்களும்‌ இரு தரப்பினராக நோக்கப்படுகின்றனர்‌:

1. சூபிஸஸனாதிகாக்கள்‌: உலகில்‌ மனிதன்‌ ஜடப்பொருள்‌ போன்றே நடாத்தப்படுகிறான்‌. அவனுக்கென செயல் சுதந்திரம் கிடையாது என நம்புபவர்கள்‌.

2.அஷாஇராகள்: மனிதன் செய்கின்ற எதையும் ‌குற்றம் பிடிக்க முடியாதுஎ‌னும்‌ கொள்கையுடையவர்கள்‌. அதாவது எந்தவொரு தாக்கமும்‌ செலுத்தமுடியாத பெயரளிவலான சக்திதான்‌ மனிதனுக்கு இருப்பதாகக்‌ கூறுபவர்கள்‌.

மேற்கூறப்பட்ட இரு முக்கிய பிரிவினர்களின்‌ வாதங்களும்‌ அல்குர்‌ஆன்‌, ஸுன்னாவின்‌ அடிப்படையிலும்‌, நடைமுறை வாழ்விலும்‌ செல்லுபடியற்று போகின்றன.

1. விதியின் நான்கு படித்தரங்களில் சிலதையோ, அனைத்தையுமோ மறுப்பவர்களுக்கு, விதி என்று ஒன்று இருக்கின்றது என அதிகமான அல்குர்‌ஆன் வசனங்களும்‌, சரியான நபிமொழிகளும் நிரூபித்து, பதிலடி கொடுக்கின்றன. மனிதன்‌ ஒரு விடயத்தை செய்ய ஆரம்பிக்கும்‌ போது, அதை செய்ய முடியாமல்‌ ஏதோ ஒரு தடை ஏற்படுவதை நடைமுறை வாழ்வில்‌ அவர்களுக்கான பதிலடியாக நாம்‌ நோக்கலாம்‌.

2. விதியை மாத்திரம்‌ ஏற்றுக் கொள்பவர்களுக்கு, மனிதனுக்கு நாட்டம்‌, ஓர்செயலை செய்யும்திறன்‌, ஆற்றல் போன்றன அவனிடமே காணப்படுகிறது என அதிகமான அல்குர்‌ஆன்‌ வசனங்களும்‌, சரியான நபிமொழிகளும்‌ நிரூபித்து, பதிலடிகொடுக்கின்றன. மனிதன்‌ தனக்கு தேர்வுச்‌ சுதந்திரம்‌ இருக்கும்‌ விடயங்களையும்‌, நிர்ப்பந்தமாக்கப்படும் விடயங்களையும் நன்கு பிரித்து நோக்கி, எதை எப்படி செய்யவேண்டும்‌ எனும் திறன் கொண்டவன் ‌என்பதை நடைமுறை வாழ்வில்‌ அவர்களுக்கான பதிலடியாக நாம்‌ நோக்கலாம்‌. காரணங்களின்றி அல்லாஹ்வின்‌ எச்செயல்களும்‌ இருக்காது என்பதை உறுதிப்படுத்தும்‌ பல இறைவசனங்கள்‌, நபிமொழிகள்‌ உள்ளன.
Previous Post Next Post