ஆட்சியாளர்களின் கண்ணியத்தை சீர்குலைத்து, அவர்களைத் திட்டுவதும், அவர்களின் குறைகளை பொதுவெளியில்பேசுவதும் மிகப்பெரிய தவறாகும்; மேலும் இது வெறுக்கத்தக்க பாவமாகும்.
இதுபோன்ற செயற்பாடுகள் கிளர்ச்சியின் ஆரம்பப் புள்ளியாக இருப்பதால் மார்க்கம் இதனை தடை செய்கிறது; மேலும் இவ்வாறு செய்பவரை கண்டித்தும் உள்ளது.
அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அறிவிப்பதாவது :
உங்களது ஆட்சியாளர்களை (அவர்களின் தவறுகளுக்காக) ஏசிப் பேசாதீர்கள்.
அவர்களிடம் நேர்மையற்ற முறையில் நடந்துகொள்ளாதீர்கள்.
மேலும் அவர்களை வெறுக்காதீர்கள். இறையச்சத்துடனும், பொறுமையோடும் இருங்கள் - நிச்சயமாக (உங்களது) விடயம் மிக சமீபமாகவே இருக்கிறது" - என்று நபி ﷺ அவர்களது மூத்த தோழர்களில் பலரும் எங்களிடம் அறிவுறுத்தியுள்ளார்கள்.
(பார்க்க :
1) இமாம் இப்னு அபீ ஆஸிம் رحمه الله அவர்களதுكتاب السنة 2/488
2) ஹாபிழ், இமாம் அபுல் காஸிம் அல்-அஸ்பஹானீ رحمه الله அவர்களது
3/68 الترغيب والترهيب)
யஹ்யா பின் யமான் கூறினார் :
ஸுஃப்யான் அஸ்-ஸவ்ரீ (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் அனஸ் பின் மாலிக் (ரலியல்லாஹு அன்ஹு) கூறியதாக கைஸ் பின் வஹ்ப் அவர்களை தொட்டும் அறிவிப்பதாவது :
“நபி ﷺ அவர்களது ஸஹாபாக்களில் மூத்தவர்கள் பலரும் ஆட்சியாளரது குற்றங்குறைகளை பேசித்திரிவதை விட்டும் எங்களை தடுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள்".
(பார்க்க : இமாம் இப்னு அப்தில் பர் رحمه الله அவர்களதுالتمهيد 21/287)
இதே செய்தியை இமாம் பைஹகீ رحمه الله அவர்களும் தனது الجامع لشعب الإيمان 13/186-202 என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
எனவே, ஆட்சியாளரது குற்றங்குறைகளை பேசித் திரிவது தடைசெய்யப்பட்ட காரியம் என்பதில் மூத்த ஸஹாபாக்களுக்கு மத்தியில் ஏகோபித்த நிலைபாடுள்ளது என்பதை இந்த அறிவிப்பின் வாயிலாக அறியமுடிகிறது.
இமாம் பர்பஹாரீ رحمه الله கூறுவதாவது :
"ஆட்சியாளருக்கு எதிராக துஆ செய்பவனை நீ கண்டால், அவன் ஒரு "மனோயிச்சைவாதி" என்பதை அறிந்துகொள்..!"
(பார்க்க : طبقات الحنابلة 2/36)
ஆட்சியாளரது குற்றங்குறைகளை (பொதுவெளியில்) பேசித் திரிவதானது, படிப்படியாக நல்லவிடயங்களில் அவர்களுக்கு கீழ்ப்படிவதை விட்டும் நம்மை தடுத்துவிடும்; இன்னும் இது குழப்பத்திற்கும், தீங்குகளுக்கும் வழிவகுக்கும்; இறுதியாக, ஆட்சியாளருக்கு எதிராக கிளர்ச்சி செய்யும் அளவிற்கு கொண்டுசென்றுவிடும்.!
அபூதர்தா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் கூறியதாவது :
"ஒரு மனிதனது நயவஞ்சகத்தனத்தின் முதற்படி என்னவென்றால், அவன் தன் ஆட்சியாளரை (அவரது தவறுக்காக) ஏசிப்பேசி கடிந்துகொள்வதுதான்."
பார்க்க : இமாம் இப்னு அப்தில் பர் رحمه الله அவர்களதுالتمهيد 21/287)
இமாம் ஷவ்கானீ رحمه الله கூறியதாவது :
"சில விடயங்களில் ஆட்சியாளரிடம் தவறு ஏற்படும்போது, அது விடயத்தில் (தனிமையில்) ஆட்சியாளரை அறிவுறுத்திவிட்டு, மக்களுக்கு முன்பு அவரை ஏசிப் பேசாமல் இருப்பதே ஒருவருக்கு விரும்பத்தக்கதாகும்."
(பார்க்க : السيل الجرار 4/556)
கொடுங்கோல் மன்னன் ஹஜ்ஜாஜ் செய்யும் அட்டுழியங்கள் பற்றி இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் ஒருவர் முறையிட்டபோது, அதற்கு இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பதிலளித்ததாவது :
"ஷைத்தானுக்கு உதவியாளனாக நீ இருக்காதே.!"
(பார்க்க : التاريخ الكبير 8/104)
சத்தியத்தை தேடும் ஒருவருக்கு நாம் மேற்குறிப்பிட்ட ஆதாரங்கள் போதுமானதாகும்; எனவே இது விடயத்தில் ஸஹாபாக்கள் எதில் நின்றுகொண்டார்களோ, அதில் நாமும் நின்றுகொள்ள வேண்டும்.! எல்லைமீறி செயல்பட்டு மக்களை குழப்பத்திற்கு ஆளாக்கக்கூடாது.
யாரேனும் ஸலஃபு மன்ஹஜுக்கு எதிராக தன் மனோயிச்சை அடிப்படையில் செயல்பட்டால், அவரது உள்ளம் வெறுப்பால் நிறைந்துள்ளது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.!
அல்லாஹ் அனைவரையும் நேர்வழிப்படுத்துவானாக...
தொகுப்பு : Rayyan