[عن أبي هريرة رضي الله عنه مرفوعا:] ... *ولا يجتمعُ في جوفِ عبدٍ الإيمانُ والحسدُ.*
أخرجه ابن حبان في صحيحه ٤٦٠٦ • وحسنه الألباني وشعيب الأرناؤوط
நபி ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானின் உள்ளத்தில் ஈமானும் பொறாமையும் ஒன்று சேர்ந்து இருக்க மாட்டாது. நூல்: இப்னு ஹிப்பான் 4606.
அல்பானி மற்றும் ஷுஐப் அல்-அர்ணாஊத் ஆகிய தற்கால ஹதீஸ் துறை ஆய்வாளர்கள் இதனை ஹஸன் தரத்தில் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்று கூறியுள்ளார்கள்.
விளக்கக் குறிப்புகள்:
பொறாமை என்பது ஒருவர் இன்னொருவருக்கு வழங்கப்பட்டிருக்கும் நிஃமத் - பாக்கியம் குறித்து வெறுப்படைவதாகும். இது ஆரம்ப கட்டப் பொறாமையாகும். அது அவனிடமிருந்து இல்லாமல் போக வேண்டும் என்று கருதுவது அதைவிட மோசமான பொறாமையாகும். அது அவனிடமிருந்து நீங்கி தனக்கு வர வேண்டும் என்று நினைப்பது இரண்டாவது கட்டத்தை விடவும் மோசமான பொறாமையாகும்.
ஒருவர் தனக்கு கிடைத்திருக்கும் நிஃமத்தின் மூலம் மற்றவர்களுக்கு உபகாரம் செய்கிறார் என்றால், அவரைப் போன்று தானும் இருக்க வேண்டும் என்று இன்னொருவர் ஆசைப்படுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட பொறாமையாகும்.
இந்த நபிமொழி பொறாமை மிகக் கெட்டது என்பதையும் அது ஒரு முஃமிடத்தில் இருக்கக்கூடாது என்பதையும் அறிவுறுத்துகிறது.
மற்றவர் மீது பொறாமை கொள்வது ஈமானுக்கு மாற்றமான செயல். பொறாமைப்படுபவன் சிறந்த முஃமினாக இருக்க முடியாது.
ஒருவனது உள்ளத்தில் பொறாமை இருக்கின்ற அளவுக்கு அவனுடைய ஈமான் மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும்.
ஈமானின் உறைவிடம் உள்ளமாக இருப்பதைப் போலவே பொறாமை, குரோதம், தற்பெருமை, ஆணவம் போன்ற உள நோய்களின் உறைவிடமும் உள்ளமாகும். இவ்விரு வேறுபட்ட பண்புகளும் ஒரே இடத்தில் ஒன்றாக இணைந்து காலம் கழிக்க முடியாது.
ஒரு மனிதனிடம் இருக்கும் ஈமான் அவனது செயல்பாடுகளில் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே, ஒருவனிடம் இருக்கும் துர்க்குணங்கள் அவனிடம் இருந்து விலகிச் செல்ல வேண்டுமென்றால் அவன் ஈமானை அதிகரிக்கும் விடயங்களில் ஈடுபட வேண்டும். அப்போது அவனது உள்ளத்தில் இருக்கும் உள நோய்களும் விரண்டோடிவிடும் விடும்.
ஒரு முஸ்லிம் மற்றவர்கள் விடயத்தில் உள்ளத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் விரும்புகிறது.
உள்ளத்தைப் பண்படுத்தும் செயல்பாடுகளில் நாம் கவனமெடுக்காவிட்டால் பொறாமை போன்ற உளநோய்கள் எம்மிடமிருக்கும் ஈமானை அழித்துக் கொண்டே செல்லும்.
உசாத்துணை:
- أعمال القلوب للإمام ابن تيمية
- شرح الأحاديث من موقع الدرر السنية
-ஸுன்னஹ் அகாடமி