ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்

بسم الله الرحمن الرحيم


ஹிஸ்னுல் முஃமின் மின் அத்காரி வஅத்இயதின் நபிய்யி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் - அபூ அப்திர் ரஹ்மான் அப்துல்லாஹ் இப்னு அஹ்மத் அல்இர்யானி (ஹபிழஹுல்லாஹ்)

தமிழாக்கம்: அபூ ஹுனைப் முஹம்மத் ஹிஷாம் இப்னு முஹம்மத் தௌபீக்
‎بسم الله الرحمن الرحيم

முன்னுரை:

அதிக கீர்த்தியும் அருள் பொருந்திய சிறப்பும் வாய்ந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் உரித்தாகட்டும். மேலும், வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாரும் இல்லை என்றும் அவன் தனித்தவன் இணைதுணையற்றவன் என்றும் நான் சாiட்சி பகருகின்றேன். இன்னும், நிச்சயமாக முஹம்மத் நபியவர்கள் அவனுடைய அடியாரும் திருத்தூதருமாவார்கள் என்றும் நான் சாட்சி பகருகின்றேன். அடுத்து,

(இறைவனை) ஞாபகித்தல் (அடியார்களுக்கான) பாதுகாப்பரண் என்ற அடிப்படையில் அது எடுத்தெறியப்பட்ட ஷைத்தானை விட்டும் பாதுகாக்கும் அரணாக அமைந்துள்ளது. மேலும், உலகத்தாரின் இரட்சகனான அல்லாஹ்வின் பால் நாடிச்செல்பவர்களுக்கான உயரிய படிக்கட்டுக்களாகவும் அமைந்துள்ளது. இன்னும், இறை நேசர்களின் வாழ்வாதாரமாகவும் விளங்குகின்றது. மற்றும் அல்லாஹ்வின் அடியார்களான விசுவாசிகளின் உயிர்நாடியாகவும் நல்லடியார்களின் சபைகளுக்கு அமைதியைத் தேடித்தரவள்ளதாகவும் இருக்கின்றது. (எனவே, இது போன்ற காரணிகளை மையமாக வைத்து) சங்கைமிக்க எங்கள் நபியின் (அன்றாட) திக்ருகளில் இருந்து (என்னால்) முடிந்த சரியான (சிலவற்றைச்) சுருக்கமாகத் தொகுத்துத் தந்துள்ளேன்.

ஒரு நாளின் இரவு பகலில் புரியப்படும் செயல்கள், துஆக்கள் மற்றும் திக்ருகள் குறித்து நன்கறிந்தவர்களிடத்தில் அறியப்பட்ட பல நூட்கள் உள்ளன. எனவே, நான் (எனது இந்த) பிரயோசனம் மிக்க சுருக்க நூலின் மூலம் (நான் மேலே குறிப்பிட்ட விடயங்களின் பால்) ஆசைவைக்கக் கூடியவர்களுக்கு இலகுபடுத்துதலை நாடியுள்ளேன். (அதன் காரணமாகவே திக்ர்) தொடர்பான வார்த்தைகளைக் கொண்டு மாத்திரம் சுருக்கிக் கொண்டு சுருக்கத்தின் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன். மேலும், இந்நூல் வணக்கத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கு ஒரு பிரதான இடமாக விளங்குவதும் (எமது சுருக்கத்திற்கான மற்றொரு காரணமாகும்.)

அத்தோடு (இந்நூல்) திக்ருகள் மற்றும் அவற்றுக்குச் செயல்வடிவம் கொடுத்தல் ஆகியவற்றை அறிமுகம் செய்து வைப்பதையும் நேர்வழியை நாடிச் செல்பவர்கள் மீட்சி பெறும் பிரதானமான (அம்சத்தை விளக்கும் திக்ருகளைத்) தெளிவுபடுத்துவதையும் நோக்காகக் கொண்டுள்ளது.

மேலும், இமாம் நவவி ரஹிமஹுல்லாஹ் அவர்களை (இந்நூலிற்குத்) தலைப்பிடும் பணியின் போது வார்த்தை அடிப்படையில் பின்துயர்ந்துள்ளேன். மற்றும், 'அல்அத்கார்' எனும் (இமாமவர்களின் நூலை) அடிப்படையாகக் கொண்டு ஒழுங்கமைத்துமுள்ளேன். (இமாம் நவவி அவர்களிடத்தில் காணப்பட்ட) பலமான ஒழுங்கமைப்பும் நுணுக்கமான விளக்கமும் தலைப்பிடுவதில் காணப்பட்ட அபார திறமையுமே (இத்தகைய பின்பற்றுதலுக்குக் காரணாகும்.) மேலும், பிரயோசனம் வழங்கும் நோக்கில் அடைப்புக்குறிக்குள் எங்களுடைய ஆசிரியர் 'முக்பில் இப்னு ஹாதி அல்வாதிஇ' ரஹிமஹுல்லாஹ் அவர்கள் தனது நூலான 'அல்ஜாமிஉஸ் ஸஹீஹ்' இல் (வழங்கிய) சில தலைப்புக்களையும் (இந்நூலில்) சேர்த்துள்ளேன்.

இன்னும், இச்சுருக்க நூல் சரியான தகவல்களை இனங்காட்டுவதிலும் நுணுக்கமாகத் தலைப்பிடப்பட்டிருப்பதிலும் அழகிய சுருக்க அமைப்பிலும் ஏனைய குறும் நூட்களிலும் பார்க்க உயர்வான இடத்தை வகிக்கின்றது. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். மேலும், அல்லாஹ்விடத்தில் இந்நூலைக் கொண்டும் இதன் நூலாசிரியரைக் கொண்டும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் பிரயோசனம் அளிப்பதைக் கேட்கின்றேன். எல்லாப் புகழும் அகிலத்தாரின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே உரித்தாகட்டும்.

1. திக்ரின் சிறப்பு குறிப்பு :
(இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுத் தாவாத் வல்அத்கார் எனும் பகுதியில் பாடம்: 65 (இல் காணலாம்.)

அல்லாஹ் கூறுகின்றான்: 'அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறும் ஆண்களும் நினைவு கூறும் பெண்களும் ஆகியோருக்கு அல்லாஹ் மன்னிப்பையும் மகத்தான கூலியையும் தயார் செய்து வைத்துள்ளான்.' (அல்அஹ்ஸாப்: 35)

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்: 'நம்பிக்கை கொண்டோரின் உள்ளங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் அமைதி பெறுகின்றன.

அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவு கூர்வதன் மூலம் உள்ளங்கள் அமைதி பெறுகின்றன.' (அர்ரஃத்: 28) இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: 'ஆகவே, என்னை நீங்கள் நினைவு கூறுங்கள். உங்களை நான் நினைவு கூறுகின்றேன்.' (அல்பகரா: 152)

மற்றும் கூறுகின்றான்: 'அல்லாஹ்வை நினைவு கூறுவது மிகப் பெரியதாகும்.' (அல்அன்கபூத்: 45)

1. ஹதீஸுல் குத்ஸியில் இடம்பெற்றுள்ளதாவது: 'அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்: எனது அடியான் என்னை நினைவு கூறுவதுடன் நான் (அவனிடத்தில்) உள்ளேன். அவன் என்னை நினைவு கூர்ந்தால் நான் அவனுடன் இருப்பேன். அவன் தனது உள்ளத்தில் என்னை ஞாபகித்தால் நானும் அவனை என் உள்ளத்தில் ஞாபகிப்பேன். மேலும், அவன் என்னை ஒரு கூட்டத்திற்கு மத்தியில் ஞாபகித்தால் நான் அவனை அவர்களை விட மிகச் சிறந்த ஒரு கூட்டத்திற்கு மத்தியில் ஞாபகிப்பேன்.'

குறிப்பு :
(இச்செய்தி) அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (7405), முஸ்லிம் (2675) ஆகிய கிரந்தங்களில் பதிவாகியுள்ளது.

மற்றோர் அறிவிப்பில், 'மேலும், அவன் என்னை ஞாபகிக்கும் தருணத்தில் நான் அவனுடன் இருப்பேன்' என்று இடம்பெற்றுள்ளது.

பிறிதோர் அறிவிப்பில், 'இன்னும், அவன் என்னை ஞாபகிக்கும் விதத்தில் நான் அவனுடன் இருப்பேன்' என்று இடம்பெற்றுள்ளது.

மேலும் ஓர் அறிவிப்பில், 'இன்னும், அவன் என்னை அழைத்தால் நான் அவனுடன் இருப்பேன்' என்று பதிவாகியுள்ளது.

2. (நபியவர்கள் கூறினார்கள்) : 'உங்களது செயல்களில் சிறந்ததையும் உங்களது நாயனிடத்தில் தூய்மைக்குரியதையும் உங்களது அந்தஸ்துக்களில் மிக உயர்வானதையும் தங்கம் வெள்ளி ஆகியவற்றைச் செலவிடுவதிலும் பார்க்க உங்களுக்கு மிகச் சிறந்ததையும் உங்களது விரோதியை நீங்கள் சந்தித்து நீங்கள் அவர்களது கழுத்துக்களைத் துண்டிப்பதும் அவர்கள் உங்களது கழுத்துக்களைத் துண்டிப்பதிலும் பார்க்க உங்களுக்குச் சிறந்ததையும் அறிவித்துத் தரட்டுமா? என (நபியவர்கள் வினவினார்கள்.) அதற்குத் தோழர்கள்: ஆம். என்று கூற, அல்லாஹுத்தஆலாவை ஞாபகிப்பதாகும் என பதிலளித்தார்கள்.'

குறிப்பு :
(இச்செய்தி) அபூத்தர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் திர்மிதி (3377) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும், அதன் இறுதிப்பகுதியில் (இடம்பெற்றுள்ளதாவது), முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ்வை ஞாபகிப்பதைவிட அவனுடைய வேதனையில் இருந்தும் பாதுகாக்கக்கூடியதாக வேறு எதுவும் இருக்க முடியாது.' மேலும், (இச்செய்தியை) எங்களது ஆசிரியரான முக்பில் இப்னு ஹாதி அல்வாதிஇ ரஹிமஹுல்லாஹ் அவர்களின் அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (1038) எனும் நூலில் ஸஹீஹ் எனும் தரத்தில் காணலாம். மேலும், அல்பானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஸஹீஹுத் திர்மிதி (2688) எனும் நூலிலும் ஸஹீஹ் இப்னு மாஜா (2790) எனும் நூலிலும் சரி கண்டுள்ளார்கள்.

3. (நபியவர்கள் கூறினார்கள்) : 'தனித்தவர்கள் முந்திவிட்டார்கள் (என நபியவர்கள் கூறிய போது, அவர்களை நோக்கித் தோழர்கள்), அல்லாஹ்வின் தூதரே! தனித்தவர்கள் என்போர் யாவர்? என வினவினார்கள். (அதற்கு நபியவர்கள்), அல்லாஹ்வை அதிகமாக ஞாபகிக்கும் ஆண்களும் பெண்களுமாவார்கள்' என பதிலளித்தார்கள்.

குறிப்பு :
(இச்செய்தி) அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2676) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

4. (நபியவர்கள் கூறினார்கள்) : 'தன்னுடைய இரட்சகனை ஞாபகிப்பவனுக்கும் ஞாபகிக்காதவனுக்கும் உதாரணம் உயிரோடு உள்ளவனுக்கும் மரணித்தவனுக்கும் போலுள்ள உதாரணமாகும்.'

குறிப்பு :
(இச்செய்தி) அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6407) எனும் நூலில் பதிவாகியுள்ளது.

5. (நபியவர்கள் கூறினார்கள்) : 'அல்லாஹ்வை ஞாபகிக்கின்ற வீட்டிற்கும் அல்லாஹ்வை ஞாபகிக்காத வீட்டிற்கும் உதாரணம் உயிருடன் இருப்பவருக்கும் மரணித்தவருக்கும் போலுள்ள உதாரணமாகும்.'

குறிப்பு :
(இச்செய்தி) அபூ மூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (779) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

6. (நபியவர்கள் கூறினார்கள்) : 'மேலும், நீங்கள் அல்லாஹ்வை ஞாபகிப்பதைக் கொண்டு உங்களை நான் பணிக்கின்றேன். நிச்சயமாக அதற்கு உதாரணம், ஒரு மனிதன் தன்னுடைய அடையாளங்களை வேகமாகப் பின்துயர்ந்தும் செல்லும் விரோதிகளை விட்டும் வெளியாகிப் பாதுகாப்பான ஓர் அரணில் பிரவேசித்து அவர்களை விட்டும் தன்னைப் பாதுகாத்துக் கொள்கின்றான். அதேபோன்றே அடியான், அல்லாஹ்வை ஞாபகிப்பதின் மூலம் அன்றி வேறு எதனைக் கொண்டும் ஷைத்தானைவிட்டும் (தன்னைப்) பாதுகாத்துக் கொள்ளமாட்டான்.'

குறிப்பு :
திர்மித் (2863), அஹ்மத் (4/130) (இந்நபிமொழி) அபுல் ஹாரிஸ் அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் ஹதீஸில் இருந்தும் ஒரு பகுதியாகும். (மற்றும்) அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (285), ஸஹீஹ் அல்ஜாமிஇ (1724) ஆகிய நூட்களிலும் காணலாம்.

2. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹு அக்பர் மற்றும் லாஇலாஹ இல்லல்லாஹ் (ஆகிய வார்த்தைகளின்) சிறப்பு.

7. அல்லாஹ்வுக்கு மிக விருப்பத்திற்குரிய வார்த்தைகள் நான்காகும். (அவை) சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் மற்றும் அல்லாஹு அக்பர் ஆகியனவாகும். (அவற்றில்) எதனைக் கொண்டு நீர் ஆரம்பித்தாலும் உமக்கு எவ்விதத் தீங்கும் ஏற்படப்போவதில்லை.

குறிப்பு: (இச்செய்தி) முஸ்லிம் (2137) எனும் கிரந்தத்தில் ஸம்ரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

8. சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், லாஇலாஹ இல்லல்லாஹ் மற்றும் அல்லாஹு அக்பர் என்று நான் கூறுவது, எதன் மீது சூரியன் உதயமாகிறதோ அதனைவிட எனக்கு மிக உவப்பானதாக இருக்கும்.

குறிப்பு: (இச்செய்தி) முஸ்லிம் (2695) எனும் கிரந்தத்தில் அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

9. ஆச்சரியப்படுகிறீர்களா?! ஆச்சரியப்படுகிறீர்களா?! ஐந்து விடயங்கள் தராசில் கனமானவையாக இருக்கும். (அவை) லாஇலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர், சுப்ஹானல்லாஹ் மற்றும் அல்ஹம்து லில்லாஹ் என்று கூறுவதும் தான் (உலகில்) விட்டுவிட்டுச் சென்ற ஸாலிஹான பிள்ளையுமாகும். (அவ்வாறு மரணித்தவர்) தனது பிள்ளையின் மூலம் நற்கூலியை ஆதரவு வைக்கக் கூடியவராக இருந்திருப்பார்.

குறிப்பு: (இச்செய்தி) அஹ்மத் (15107), இப்னு அபீஆஸிம் என்பவர் அபூஸுல்மா என்பவரைத் தொட்டும் சுன்னாஹ் (எனும் நூலில்) பக்கம்: 263, அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (1229)  ஆகிய கிரந்தங்களில் ஸஹீஹ் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது. மற்றும், அஸ்ஸஹீஹா (1204) (எனும் நூலிலும் காணலாம்.)

10. சுத்தம் ஈமானின் பாதியாகும். மேலும், அல்ஹம்துலில்லாஹ் தராசை நிரப்பக்கூடியதாக இருக்கும். இன்னும், சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் ஆகிய இருவார்த்தைகள் அல்லது வார்த்தை வானங்கள் மற்றும் பூமி ஆகியவற்றுக்கு மத்தியிலான இடைவெளியை நிரப்பக்கூடியதாக இருக்கும்.

குறிப்பு: (இச்செய்தி) முஸ்லிம் (223) எனும் கிரந்தத்தில் அபூமாலிக் அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

11. ரஹ்மானாகிய (அல்லாஹ்வுக்கு) மிக விருப்பமானதும் நாவிற்கு இலகுவானதும் தராசில் வலுவானதுமான இரு வார்த்தைகள் உள்ளன. அவை سبحان الله وبحمده உம் سبحان الله العظيم உம் ஆகும்.

குறிப்பு: (இச்செய்தி) புகாரி (7563), முஸ்லிம் (2694) ஆகிய கிரந்தங்களில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது.

‎3. لا حول ولا قوة إلا بالله (என்ற வார்த்தையின்) சிறப்பு
குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் கிரந்தத்தில் அத்தஃவாத் வல் அத்கார் எனும் தொகுப்பில் 79ம் இலக்க பாடத்தின் கீழ் காணலாம்.

12. சுவனத்தின் பொக்கிஷங்களில் ஒன்றை நான் உங்களுக்கு அறிவித்துத் தரட்டுமா? (என நபியவர்கள் வினவியபோது), அதற்கு நான்: ஆம். என்று பதிலளித்தேன். (அப்போது நபியவர்கள்): நீர் لا حول ولا قوة إلا بالله என்று கூறு (எனப் பணித்தார்கள்.)

குறிப்பு: (இச்செய்தி) அபூமூஸா அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6409), முஸ்லிம் (2704) ஆகிய கிரந்தங்களிலும் அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் ஸஹீஹ் எனும் தரத்தில் அஹ்மத் (20384), அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (268) ஆகிய கிரந்தங்களிலும் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஸ்ஸஹீஹா (2166), அஹ்மத் (10318) ஆகிய கிரந்தங்களிலும் ஹஸன் எனும் தரத்தில் அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (268), (1351) எனும் கிரந்தத்திலும் மற்றும், அஸ்ஸஹீஹா (1528) எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது.

4. இஸ்திக்பார் - பாவமன்னிப்புக் கேட்டல் - இன் சிறப்பு
குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுத் தஃவாத் வல் அத்கார் எனும் தொகுப்பில் பாட இலக்கம்: 82ல் காணலாம்.

நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் (பின்வருமாறு கூறியதாக அல்லாஹுத்தஆலா கூறுகின்றான்):
'இன்னும், உங்கள் இரட்சகனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனாக இருக்கிறான் என்று கூறினேன். (அவ்வாறு செய்தால்), அவன் உங்களுக்கு மழையைத் தொடராகப் பொழியச் செய்வான். செல்வங்களாலும், ஆண்மக்களாலும் உங்களுக்கு அவன் உதவி செய்வான். மேலும், உங்களுக்குத் தோட்டங்களை ஏற்படுத்துவான். உங்களுக்கு ஆறுகளையும் ஏற்படுத்துவான்.' (நூஹ்: 10 – 12)

13. தன்னுடைய பட்டோலையில் அதிகமான பாவமன்னிப்புக் கோரலைப் பெற்றுக் கொண்டவருக்கு நற்செய்தி உண்டாவதாக!

குறிப்பு: (இச்செய்தி) இப்னுமாஜா (3818) எனும் கிரந்தத்தில் அப்துல்லாஹ் இப்னு புஷ்ர் ரழியல்லாஹு அன்ஹு எனும் நபித்தோழரைத் தொட்டும் பதிவாகியுள்ளது. (மேலும்,) அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (எனும் நூலில்) (552) இச்செய்தி ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது. ஸஹீஹ் இப்னிமாஜா (3078) எனும் நூலிலும் இச்செய்தியைக் காணலாம்.

5. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும்.

குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (எனும் நூலில்) கிதாபுத் தஃவாத் வல் அத்கார் எனும் தொகுப்பில் 06ஆம் இலக்க பாடத்தில் காணலாம்.

14. பிரார்த்தனை ஒரு வணக்கமாகும். உங்களுடைய இரட்சகன் கூறுகின்றான்: 'என்னை நீங்கள் அழையுங்கள் நான் உங்களுக்கு பதிலளிக்கின்றேன்.'

குறிப்பு: (இச்செய்தி) அபூதாவுத் (1479) எனும் கிரந்தத்தில் நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு அன்ஹுமா எனும் நபித் தோழரைத் தொட்டும் பதிவாகியுள்ளது. (மேலும்,) அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (1159) எனும் கிரந்தத்தில் ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது.

6. பிரார்த்தனையானது மூன்றில் ஒரு விடயத்தில் தங்கியுள்ளது.

குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (எனும் நூலில்) கிதாபுத் தஃவாத் வல் அத்கார் எனும் தொகுப்பில் 14ஆம் இலக்க பாடத்தில் காணலாம்.

15. எந்த ஒரு முஸ்லிம் தனது பிரார்த்தனையின் போது தீமையையும் உறவு முறையைத் துண்டிப்பதையும் நாடவில்லையோ அவன் செய்த துஆவுக்கு அல்லாஹ் மூன்றில் ஒரு பதிலை அளிப்பான். ஒன்றில் அவனது பிரார்த்தனைக்கு (அவசரமாக பதிலளிக்கும் நோக்கில்) அவன் கேட்டவற்றை உடனடியாகக் கொடுப்பான். (அல்லது), அவனது பிரார்த்தனையை மறுமையில் அவனுக்குப் பிரயோசனம் அளிக்கும் நோக்கில் சேகரித்து வைப்பான். (அல்லது), அவனைவிட்டும் (அவன் பாதுகாப்புத் தேடிய தீங்கைப்) போன்ற ஒரு தீங்கைத் திருப்பிவிடுவான். (அதற்குத் தோழர்கள்): 'அப்படியென்றால் நாங்கள் அதிகரிப்போம்' எனக்கூற, நபியவர்கள்: 'அல்லாஹ் அதைவிட அதிகரிப்பவனாக உள்ளான்' என பதிலளித்தார்கள்.

குறிப்பு: (இச்செய்தி) அபூஸஈத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அஹ்மத் (10709) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. (மேலும்) அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (412) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்திலும் இச்செய்தி பதிவாகியுள்ளது. ஸஹீஹுத் தர்கீப் வத்தர்ஹீப் (1633) எனும் நூலிலும் இச்செய்தி இடம்பெற்றுள்ளது.

7. சூரியன் உதயமாகும் வரை பஜ்ர் தொழுகைக்குப் பின் திக்ர் செய்வதின் சிறப்பு
குறிப்பு: (இத்தலைப்பை) அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுத் தஃவாத் வல்அத்கார் எனும் தொகுப்பில் 68ஆம் இலக்க தலைப்பின் கீழ் காணலாம்.

16. பஜ்ருத் தொழுகைக்குப் பின் இருந்து சூரியன் உதயமாகும் வரை அல்லாஹுத்தஆலாவை ஞாபகிக்கும் ஒரு கூட்டத்துடன் நான் உட்காருவது இஸ்மாஈல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சந்ததியில் இருந்து நான்கு நபர்களை அடிமையில் இருந்து விடுதலை செய்வதைவிட எனக்கு மிக விருப்பமானதாகும். மேலும், அஸர் தொழுகைக்குப் பின் இருந்து சூரியன் மறையும் வரை அல்லாஹ்வை ஞாபகிக்கும் ஒரு கூட்டத்துடன் நான் உட்காருவது நான்கு நபர்களை அடிமையில் இருந்து விடுதலை செய்வதைவிட எனக்கு மிக விருப்பமானதாகும்.

குறிப்பு: (இச்செய்தி) அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் அபூதாவுத் (3667) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும், அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (106) எனும் கிரந்தத்தில் ஹஸன் எனும் தரத்தில் பதிவாகியுள்ளது. அஸ்ஸஹீஹா (2916) எனும் நூலிலும் இச்செய்தியைக் காணலாம்.

8. சபையில் திக்ரு செய்யாமல் இருப்பது குறித்த எச்சரிக்கை!
குறிப்பு: இத்தலைப்பை அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் எனும் நூலில் கிதாபுத் தஃவாத் வல்அத்கார் எனும் தலைப்பின் கீழ் உபதலைப்பு இல: 76ல் காணலாம்.

17. எந்த ஒரு கூட்டம் சபையில் இருந்து எழும்பும் போது அதிலே அல்லாஹ்வை ஞாபகிக்காத நிலையில் எழும்புகின்றதோ, அக்கூட்டம் இறந்த கழுதையின் சடலத்தைவிட்டும் எழும்புவதைப் போலன்றி வேறில்லை. (அவர்கள் கூலியின் நிமித்தம் பிரவேசிப்பவர்களாக இருந்தாலும்) அவர்களுக்கு நஷ்டம் உண்டாகும்.

மற்றோர் அறிவிப்பில்: ஒரு கூட்டம் சபையில் வீற்றிருக்கும் போது அதனில் உள்ளவர்கள் அங்கு அல்லஹ்வை ஞாகிக்காதவர்களாகவும் அவர்களது நபியின் மீது ஸலவாத்துச் சொல்லாதவர்களாகவும் இருப்பார்களேயானால் அவர்கள் மீது ஓர் அநியாயம் இருக்குமேயன்றி வேறில்லை. (அல்லாஹ்) நாடினால் அவர்களை வேதனை செய்வான். மேலும் (அவன்) நாடினால் அவர்களை மன்னிப்பான்.

பிறிதோர் அறிவிப்பில்: ஒரு கூட்டம் அல்லாஹ்வை ஞாபகிக்காத நிலையிலும் நபியின் மீது ஸலவாத்துச் சொல்லாத நிலையிலும் ஒன்று குழுமியிருந்தால் அதில் அங்கம் வகிப்பவர்கள் மீது மறுமை நாளில் ஒரு நஷ்டம் இருக்குமேயன்றி வேறில்லை. அவர்கள் கூலியைப் பெற்று சுவனம் நுழைந்திருந்தாலும் சரியே!

குறிப்பு: இச்செய்தியை அபூதாவுத் (4855) எனும் கிரந்தத்தில் அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், இரண்டாவது அறிவிப்பு திர்மிதி (3380) எனும் கிரந்தத்திலும் மூன்றாவது அறிவிப்பு அஹ்மத் (2/463) எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளன. இன்னும், அஸ்ஸஹீஹுல் முஸ்னத் (1328) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்திலும் அஸ்ஸஹீஹா (76, 77) எனும் கிரந்தத்திலும் இச்செய்தியைக் காணலாம்.

9. சபையில் (ஏற்பட்ட) தவறுகளுக்காக அமையும் பரிகார துஆ

குறிப்பு: இத்தலைப்பை அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் (எனும் நூலில்) கிதாபுத் தஃவாத் வல்அத்கார் எனும் தலைப்பின் கீழ் உபதலைப்பு இல: 75ல் காணலாம்.

‎18. سبحانك وبحمدك لا إله إلا أنت أستغفرك وأتوب إليك
பொருள்: (இறைவா!) நீ தூய்மையானவன். மேலும், உன்னுடைய புகழைக் கொண்டு (நான் உன்னைத் துதிக்கின்றேன்.) வணக்கத்திற்குரிய நாயன் உன்னைத் தவிர வேறு யாரும் இல்லை.) உன்னிடத்தில் நான் பாவமன்னிப்புக் கேட்கின்றேன். மேலும், உன்னிடத்தில் பாவமீட்சி பெறுகின்றேன்.

குறிப்பு: இமாம் நஸாயி அவர்களின் அமலுல் யவ்மி வல் லைலா (308) எனும் நூலில் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் இடம்பெற்றுள்ளதாவது: 'யார் நல்லதைக் கூறுகின்றாரோ அவருடைய நலவின் மீது ஒரு முத்திரை இடப்படும். மேலும், யார் தீயதைக் கூறுகின்றாரோ அவருக்கு அது குற்றப்பரிகாரமாக அமைந்துவிடும்.’ அஸ்ஸஹீஹ் அல்முஸ்னத் (1598) எனும் கிரந்தத்தில் ஸஹீஹ் எனும் தரத்தில் இச்செய்தி பதிவாகியுள்ளது. மேலும், இதனுடைய பூரண வடிவம் நூலின் கடைசிப்பகுதியில் இடம்பெற இருக்கின்றது.

பாடங்கள்
1.            ஒருவர் தனது தூக்கத்தை விட்டும் எழுந்தால் கூற வேண்டியவை.
‎ (19 – 1) الحمد لله الذي أحيانا بعدما أماتنا وإليه النشور
பொருள்: எங்களை மரணிக்கச் செய்ததின் பிறகு உயிர்ப்பித்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்! மேலும்,  அவன் பால் மீளுதல் இருக்கின்றது.

குறிப்பு: இச்செய்தி அபூதர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6325, 7395) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும், இச்செய்தி ஹுதைபா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (6314) எனும் கிரந்தத்திலும் அல்பரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2711) எனும் கிரந்தத்திலும் பதிவாகியுள்ளது.

‎  (20 – 1) لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير الحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله
பொருள்: (இரவில் தூக்கத்தில் புரலும் போது:) அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரிய நாயன் வேறுயாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு யாதொரு துணையும் இல்லை. அவனுக்கே ஆட்சி அதிகாரம் உள்ளது. இன்னும் அவனுக்கே புகழனைத்தும் உாியன. மேலும், அவனே வஸ்துக்கள் அனைத்தின் மீதும் ஆற்றல் படைத்தவன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியன. மேலும், அல்லாஹ் தூய்மையானவன். வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத்தவிர வேறுயாரும் இல்லை. அல்லாஹ் மிகப் பெரியவன். அல்லாஹ்வைக் கொண்டேயன்றி எவ்வித சக்தியும் ஆற்றலும் கிடையாது (என்ற கருத்தில் அமைந்த இந்த துஆவை ஓத வேண்டும்.)

குறிப்பு: இச்செய்தி உபாதத் இப்னு அஸ்ஸாமித் ரழியல்லாஹு அன்ஹு அவர்களைத் தொட்டும் புகாரி (1154) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. 'எனவே அவன்: இறைவா என்னை மன்னிப்பாயாக! என்று கூறினால் அல்லது, பிரார்த்தனை செய்தால் அவனுக்கு பதிலளிக்கப்படும். அவன் வுழூச் செய்து தொழுதால் அவனுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படும்.'

எனவே, இந்த ஹதீஸ் எவர்களின் செவியறைகளை எத்துகின்றதோ அவர்கள் இதனைக் கொண்டு அமல் செய்து சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், தனது நிய்யத்தை தன் இரட்சகனுக்காக தூய்மையாக்கிக் கொள்ள வேண்டும். (பத்ஹுல் பாரி)

இன்னும், மேற்குறித்த செய்தியில் இடம்பெற்றிருக்கும் تعار என்ற பதம் தூக்கத்தைவிட்டும் திடீர் என்று விழித்தெழுதலைக் குறிக்கும். அவ்விழித்தெழுதலானது பேச்சுடன் கலந்த விழிப்பாக இருக்கும். இதுவல்லாமல், ஆறுதல் அடைந்த கொட்டாவியுடனான விழிப்பு மற்றும் படுக்கையின் போது வெளிப்படும் சிணுக்கம் என்பது போன்ற சில விளக்கங்களும் அறிஞர்களினால் முன்வைக்கப்பட்டுள்ளன. (அந்நிஹாயா)

2. புத்தாடை அணிந்தவரைக் கண்டால் ஓதும் துஆ

21. புத்தாடை அணிந்தவர் பெண்ணாக இருந்தால்.
‎أبلي وأخلقي
பொருள்: நீ இதனை இத்துப்போகும் வரை அணிந்திடுவாய்! மேலும், நற்குணத்துடன் வாழ்ந்திடுவாய்! – என்று 3 விடுத்தங்கள் கூற வேண்டும்.

குறிப்பு: இச்செய்தி உம்மு ஹாலித் பின்த் ஹாலித் என்பவரைத் தொட்டும் புகாரி (5823, 3071) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது. மேலும், أبلي என்ற வார்த்தை பெண்பாலைக் குறிக்கும் ஏவல் வினையாகும். இதனடிப்படையில் முன்னிலையில் உள்ளவர் பெண்பாலுக்குரியவராக இருக்கும் போது அவரை நோக்கி அதனை இத்துப்போகும் வரை அணியுமாறும் நற்குணத்தை உடையவராக நடந்து கொள்ளுமாறும் பணிக்கப்படுகின்றது. மேலும், இவ்விரு வார்த்தைகளும் கருத்தை அடிப்படையாகக் கொண்டே பிரயோகிக்கப்பட்டுள்ளன. பொதுவாக அரேபியர்களைப் பொறுத்தளவில் அவர்கள் இவ்வார்த்தைகளின் மூலம் பிரார்த்தனை செய்தலை நாடுவார்கள். அப்பிரார்த்தனையானது முன்னிலையில் உள்ளவருக்கு நீண்ட ஆயுளை வேண்டக் கூடியதாக இருக்கின்றது. அதாவது, குறித்த ஆடையைப் பழைய நிலையை அடையும் வரை அணிந்திடவும் நற்குணத்துடன் கூடியதாக ஆயுளை நீடித்திடவும் பிரார்த்தனை செய்வதாக அமையும். அல்ஹலீல் என்பவர் கூறும் போது: 'இத்துப்போகும் வரை அணிந்திடுவாய்! நற்குணத்துடன் வாழ்ந்திடுவாய்! என்ற வார்த்தைகளின் கருத்தாவது: உன்னுடைய ஆடை கிழிந்தாலும் நீ அதனைச் சீர் செய்து கொண்டு வாழ்ந்திடு! மேலும், ஆடையை நற்குணமாக்கு என்பது: அதனுடைய இத்துப்போன அடையாளத்தை தைத்து இல்லாமல் செய்துவிடு! என்பதாகும். (பத்ஹுல் பாரி)

மேலும், இப்பிரார்த்தனையை முன்னிலையில் உள்ள ஆணுக்குப் பிரயோகிக்கும் போது: أبل وأخلق என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.

4. ஒருவர் தனது வீட்டை விட்டு வெளியேறும் போது கூற வேண்டியது.
‎اللهُمَّ أعُوْذ بِكَ أنْ أَضِلَّ أوْ أُضَلَّ أوْ أزِلَّ أوْ أزَلَّ أوْ أَظْلِمَ أوْ أُظْلَم أوْ أجْهَل أو يُجْهَل عَليَّ
பொருள்: அல்லாஹ்வே! நான் வழிதவறிப் போவதில் இருந்தும் அல்லது, நான் வழிகெடுக்கப்படுவதில் இருந்தும் அல்லது, நான் வழிசருகுவதில் இருந்தும் அல்லது, வழிசருகச் செய்யப்படுவதில் இருந்தும் அல்லது, நான் அநீதி இழைப்பதில் இருந்தும் அல்லது, நான் அநீதி இழைக்கப்படுவதில் இருந்தும் அல்லது, நான் பிறரிடம் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் அல்லது, என்னிடம் பிறர் அறியாத்தனமாக நடப்பதில் இருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகிறேன்.

இச்செய்தி அபூதாவுத் (5094) எனும் கிரந்தத்தில் உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களைத் தொட்டும் பதிவாகியுள்ளது. மேலும், ஸஹீஹுத் திர்மிதி (36667) எனும் கிரந்தத்திலும் இச்செய்தியைக் காணலாம்.

5. ஒருவர் தனது வீட்டினுள் பிரவேசிக்கும் போது கூற வேண்டியது.

24. "ஒருவர் தனது வீட்டிற்குள் நுழைய நாடி, நுழையும் போதும் உணவு பரிமாறும் போதும் அல்லாஹ்வை ஞாபகப்படுத்தினால், ஷைத்தான் தனது தோழர்களை நோக்கி இன்று உங்களுக்கு இராத்தரிப்பும் இராப்போசனமும் கிடையாது! என்பான். மேலும், அவர் அவ்வாறு நுழையும் போது அல்லாஹ்வை ஞாபகப்படுத்தாதிருந்தால், ஷைத்தான் தனது தோழர்களை நோக்கி இன்று நீங்கள் உங்களுக்கு இராத்தரிக்க ஓர் இடத்தைப் பெற்றுக் கொண்டு விட்டீர்கள்! என்பான். மேலும், அவர் தனது உணவு பரிமாறலின் போதும் வீட்டில் நுழையும் போதும் அல்லாஹ்வின் பெயரை ஞாபகப்படுத்தாத போது ஷைத்தான் தனது தோழர்களை நொக்கி நீங்கள் உங்களுக்குரிய இராத்தரிக்கும் இடத்தையும் இராப்போசனத்தையும் பெற்றுக் கொண்டு விட்டீர்கள்!" என்பான்.
இச்செய்தி ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் முஸ்லிம் (2018) எனும் கிரந்தத்தில் பதிவாகியுள்ளது.

6. இரவில் தூக்கத்தைவிட்டும் எழுந்தால் அல்லது, ஒருவர் தனது வீட்டைவிட்டும் வெளியேறினால் ஓத வேண்டியது.
‎25. إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ وَاخْتِلافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الأَلْبَابِ الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَىَ جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلاً سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا إِنَّكَ مَن تُدْخِلِ النَّارَ فَقَدْ أَخْزَيْتَهُ وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنصَارٍ رَّبَّنَا إِنَّنَا سَمِعْنَا مُنَادِيًا يُنَادِي لِلإِيمَانِ أَنْ آمِنُواْ بِرَبِّكُمْ فَآمَنَّا رَبَّنَا فَاغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَكَفِّرْ عَنَّا سَيِّئَاتِنَا وَتَوَفَّنَا مَعَ الأَبْرَارِ رَبَّنَا وَآتِنَا مَا وَعَدتَّنَا عَلَى رُسُلِكَ وَلاَ تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ إِنَّكَ لاَ تُخْلِفُ الْمِيعَادَ فَاسْتَجَابَ لَهُمْ رَبُّهُمْ أَنِّي لاَ أُضِيعُ عَمَلَ عَامِلٍ مِّنكُم مِّن ذَكَرٍ أَوْ أُنثَى بَعْضُكُم مِّن بَعْضٍ فَالَّذِينَ هَاجَرُواْ وَأُخْرِجُواْ مِن دِيَارِهِمْ وَأُوذُواْ فِي سَبِيلِي وَقَاتَلُواْ وَقُتِلُواْ لأُكَفِّرَنَّ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَلأُدْخِلَنَّهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ ثَوَابًا مِّن عِندِ اللَّهِ وَاللَّهُ عِندَهُ حُسْنُ الثَّوَابِ لاَ يَغُرَّنَّكَ تَقَلُّبُ الَّذِينَ كَفَرُواْ فِي الْبِلادِ مَتَاعٌ قَلِيلٌ ثُمَّ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَبِئْسَ الْمِهَادُ لَكِنِ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ لَهُمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا نُزُلاً مِّنْ عِندِ اللَّهِ وَمَا عِندَ اللَّهِ خَيْرٌ لِّلأَبْرَارِ وَإِنَّ مِنْ أَهْلِ الْكِتَابِ لَمَن يُؤْمِنُ بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْكُمْ وَمَا أُنزِلَ إِلَيْهِمْ خَاشِعِينَ لِلَّهِ لاَ يَشْتَرُونَ بِآيَاتِ اللَّهِ ثَمَنًا قَلِيلاً أُوْلَئِكَ لَهُمْ أَجْرُهُمْ عِندَ رَبِّهِمْ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ اصْبِرُواْ وَصَابِرُواْ وَرَابِطُواْ وَاتَّقُواْ اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
பொருள்: "நிச்சயமாக வானங்கள் மற்றும் பூமியைப் படைத்ததிலும் இரவு பகல் மாறிமாறி வருவதிலும் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன. அவர்கள் நின்ற நிலையிலும் அமர்ந்தவர்களாகவும் தங்களின் விலாப்புறங்களின் மீது (சாய்ந்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை நினைவு கூறுவார்கள். மேலும், வானங்கள் மற்றும் பூமியின் படைப்புப் பற்றிச் சிந்தித்து எங்கள் இரட்சகனே! நீ இவற்றை வீணாகப்படைக்கவில்லை நீ தூய்மையானவன். ஆகவே, நீ எங்களை நரக வேதனையிலிருந்து பாதுகாப்பாயாக! (என்றும் பிரார்த்திப்பார்கள்.) எங்கள் இரட்சகனே! நீ யாரை நரகத்தில் நுழைவிக்கின்றாயோ நிச்சயமாக நீ அவனை இழிவுபடுத்திவிட்டாய். அநியாயக்காரர்களுக்கு உதவி செய்பவர்கள் எவருமில்லை. உங்கள் இரட்சகனை நீங்கள் நம்பிக்கை கொள்ளுங்கள்! என்று ஈமானின் பால் அழைக்கும் ஓர் அழைப்பாளனின் அழைப்பை எங்கள் இரட்சகனே நிச்சயமாக நாம் செவியேற்று நம்பிக்கை கொண்டோம். எனவே, எங்கள் இரட்சகனே! எமது பாவங்களை எங்களுக்கு மன்னித்து, எமது தீமைகளை எம்மைவிட்டும் போக்கி நல்லவர்களுடன் எம்மை மரணிக்குச் செய்வாயாக! எங்கள் இரட்சகனே! உனது தூதர்களின் மூலம் எமக்கு நீ வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! மேலும், மறுமைநாளில் எங்களை நீ இழிவுபடுத்திவிடாதே! நிச்சயமாக நீர் வாக்குறுதிக்கு மாறுசெய்யமாட்டாய் (என்றும் பிரார்த்திப்பார்கள்.) உங்களில் ஆணாயினும் பெண்ணாயினும் (சரி) நற்செயல்கள் புரிவோரின் நற்செயலையும் நான் வீணாக்கமாட்டேன் என அவர்களின் இரட்சகன் அவர்களுக்குப் பதிலளித்தான். (ஏனெனில்,) உங்களில் சிலர் மற்றும் சிலரில் உள்ளவர்களே. ஹிஜ்ரத் செய்தோர், தமது வீடுகளைவிட்டும் வெளியேற்றப்பட்டோர், எனது பாதையில் துன்பத்திற்குள்ளாக்கப்பட்டோர், போரிட்டோர், (அதில்) கொல்லப்பட்டோர் ஆகியோரின் தீமைகளை அவர்களை விட்டும் நிச்சயமாக நான் அழிப்பேன். அவர்களைச் சுவனச் சோலைகளில் நிச்சயமாக நான் நுழைவிப்பேன். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். (இது) அல்லாஹ்விடமிருந்துள்ள நற்கூலியாகும். அல்லாஹ்விடமே அழகிய கூலி இருக்கின்றது. நிராகரித்தோர் நகரங்களில் (உல்லாசமாகச்) சுற்றித் திரிவது உம்மை ஏமாற்றிவிட வேண்டாம். (இது) சொற்ப இன்பம் தான் பின்னர் அவர்கள் ஒதுங்குமிடம் நரகமே! தங்குமிடத்தில் அது மிகக் கொட்டதாகும். எனினும், யார் தங்களது இரட்சகனை அஞ்சி நடக்கின்றார்களோ அவர்களுக்கு சுவனச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ் ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அல்லாஹ்விடமிருந்துள்ள விருந்துபசாரமாகும். அல்லாஹ்விடமிருப்பதே நல்லவர்களுக்கு மிகச் சிறந்ததாகும். நிச்சயமாக வேதமுடையோரில் அல்லாஹ்வையும் உங்களுக்கு இறக்கப்பட்டதையும் தங்களுக்கு இறக்கப்பட்டதையும் அல்லாஹ்வை அஞ்சியவர்களாக நம்பிக்கை கொள்வோரும் உள்ளனர். அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் அற்ப விலைக்கு விற்கமாட்டார்கள். இத்தகையோருக்குரிய கூலி அவர்களது இரட்சகனிடம் அவர்களுக்கு உண்டு. நிச்சயமாக அல்லாஹ் விசாரணை செய்வதில் தீவிரமானவன். நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் பொறுமையாக இருங்கள்! (எதிரிகளை மிஞ்சும் வண்ணம்) சகிப்புத் தன்மையைக் கடைபிடியுங்கள்! இன்னும், உறுதியாக இருங்கள்! நீங்கள் வெற்றிபெறும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளளுங்கள்!" (ஆலு இம்றான்: 190-200)
மேலும், இதற்கான சான்றை இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா அவர்களைத் தொட்டும் புகாரி (183) மற்றும் முஸ்லிம் (763) ஆகிய கிரந்தங்களில் காணலாம்.

- இன்ஷா அல்லாஹ் தொடரும்.
Previous Post Next Post