சவுதி அரேபியாவை நாம் ஏன் நேசிக்க வேண்டும்?

1. அகிலத்தின் அருட்கொடை இறுதித் தூதர்முகம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறந்த மண், அல்லாஹ்வின் பேச்சாகிய அல்குர்ஆன் இறங்கிய பூமி, எங்கிருந்துதான் உலகம் முழுவதற்கும் இஸ்லாம் பரவியது. 

மக்கா மதீனா என இரு புனித தலங்களை உள்ளடக்கிய ஒரே நாடு சவூதி அரேபியா. 

2. சிலை வழிபாடு, கப்ரு வழிபாடு, என இணைவைப்பின் அடிச்சுவடுகளே இல்லாத ஏகத்துவ பூமி , அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் வணக்க வழிபாடுகளை இங்கு செய்ய முடியாது.

3. அல்லாஹ்வை மட்டும் வணங்கி வழிபடுவதற்காக மூலை  முடுக்குகளில் எல்லாம் பள்ளிவாசல்கள் நிறைந்த நாடு, பித் அத்கள் இல்லாத நாடு.
  
4.இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டம் குர்ஆன் சுன்னா அடிப்படையில்  நிறுவப்பட்டது.

5.மதுபான கடைகளோ, மதுபான உற்பத்தி ஆலைகளோ இல்லாத நாடு

6.நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை, பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அடிப்படை மார்க்க கல்வி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.முஸ்லிம் அல்லாத மாணவ மாணவிகளுக்கு இஸ்லாமிய கலாச்சாரம் குறித்த பாடங்கள் பயிற்று விக்கப்படுகிறது. 

7.உலகின் மற்ற நாடுகளோடு ஒப்பிடுகையில் ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் சாலை மறியல்கள் கலவரங்கள் இல்லாத நாடு.

8.உலகின் பல்வேறு பாகங்களில் இருந்து வாழ்வாதாரத்தை தேடி வரும் பல்வேறு மதங்கள் மொழிகள் பேசக்கூடிய மக்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கும் நாடு. தங்களுடைய சொந்த நாடுகளில் நடக்கும் பிரச்சனைகளோடு ஒப்பிடகையில் சவுதி அரேபியாவில் மன நிம்மதியும் மன அமைதியும் கிடைப்பதாக மாற்று மதத்தவர்களே பாராட்டும் நாடு .

9.முஸ்லிம் அல்லாத எவருக்கும் இங்கு குடியுரிமை கிடையாது.

10. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி,அரசியல்  அமைப்புகள் இயக்கங்கள் என பிளவுகளும் பிரிவுகளும் இல்லாமல் நாடு , மொழி , இன வேறுபாடுகள் இல்லாமல் மனித நேயயத்தோடும் மக்கள் ஒற்றுமையோடும் வாழும் நாடு
 
11. கொலை,  கொள்ளை,  கற்பழிப்பு,  திருட்டு, பெண்களுக்கு  எதிரான வன்கொடுமைகள், மனித உரிமை மீறல்கள் போன்ற குற்ற செயல்கள் மிக மிக குறைவாக நடைபெறும் நாடு.
 
12.உலக நாடுகளின் அழுத்தங்கள் எதிர்ப்புகள் இருந்தபோதிலும் இஸ்லாமிய குற்றவியல் சட்டங்கள் எவ்வித சமரசமும் இல்லாமல் இன்று வரை நடைமுறைபடுத்தப் படும் ஒரே நாடு சவூதி அரேபியா. 

13.பல்வேறு மொழி பேசக் கூடிய முஸ்லிம் அல்லாதவர்களை இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்காகவும் முஸ்லிம்களிடத்தில் காணப்படும் ஷிர்க் , பித் அத் , அனாச்சாரங்கள் , மூட நம்பிக்கைகள் களையப்பட்டு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் போதிக்கப்பதற்காக  நூற்றுக்கணக்கான இஸ்லாமிய அழைப்புமையங்களை கொண்ட ஒரே நாடு சவூதி அரேபியா

14. இந்த மகத்தான பணியின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் இஸ்லாத்தை தங்களின் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளனர். 

15.அல்லாஹ்வின் பேச்சாகிய அல்குர்ஆன் உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் இலவசமாக மன்னர் ஃபஹத் அச்சகத்தின் மூலம் இலவசமாக விநியோகம் செய்யும் ஒரே நாடு சவூதி அரேபியா. 

16. ஹதீஸை பாதுகாப்பதற்கும்   பரப்புவதற்கும் தனி கவனம் செலுத்தப்படும் ஒரே நாடு சவுதி அரேபியா. 

17. 25 -க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகங்களில் முறைப்படுத்தப்பட்ட இஸ்லாமிய பாடத்திட்டங்களின் மூலம் உலகின் பல பாகங்களிலிருந்து உள்நாட்டு வெளிநாட்டு மாணவ மாணவிகள்  இஸ்லாத்தை அதன் தூய வடிவில் கற்று இளநிலை முதுநிலை பட்டங்களை பெற்று உலக நாடுகளில் இஸ்லாத்தை பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்கள் படிக்கின்ற காலங்களில் உணவு, உறைவிடம் உதவித்தொகை தங்களின் சொந்த நாடுகளுக்கு சென்று வருவதற்கான பயண உதவித்தொகைகள் அனைத்தும் சவுதி அரேபியா அரசாங்கத்தின் மூலம் இலவசமாக இன்று வரை வழங்கப்பட்டு வருகிறது. 

18.ராபிதத்துல் ஆலமுல்  இஸ்லாமிய்யா , தனியார் அறக்கட்டளைகள், நிறுவனங்கள் , தனிநபர்கள் , என பலவகையிலும்  மதீனாவில் படித்து பட்டம் பெற்ற மார்க்க அறிஞர்கள், இதர பல்கலைகழகங்களில் படித்து பட்டம் பெற்றவர்கள் , இதர அழைப்பாளர்கள் , கல்லூரியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் என   பலருக்கும் உலகில் உள்ள பல அழைப்பாளர்களுக்கும்  மார்கத்தை பிரச்சாரம் செய்வதற்காக மாதாந்திர ஊக்கத்தொகைகள்,ஊதியம் ,  உதவிகளை செய்து வரும் ஒரே நாடு சவூதி அரேபியா
 
19.உலகின் பல பாகங்களில் வாழும் முஸ்லிம்களுக்கு இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பிரச்சாரம் செய்வதற்காக பல்வேறு மொழிகளில் குர்ஆன் சுன்னா  அடிப்படையில் மூத்த அறிஞர்களால் எழுதப்பட்ட  புத்தகங்கள், குறுந்தகடுகள் , மடக்கோலைகள்  உலகின் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு தஃவா  நிலையங்களின் மூலம் இலவசமாக விநியோகம் செய்யும் ஒரே நாடு சவுதி அரேபியா.

20. உலகின் பல பாகங்களில் அரசாங்கத்தின் மூலமாகவும் தனியார் நிறுவனங்களின் மூலமாகவும் தனிநபர்களின் மூலமாகவும் பள்ளிவாசல்கள், பல்கலைக்கழகங்கள், நூலகங்கள் ,மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், ......  என்று பலராலும் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது 

இன்ஷா அல்லாஹ்  தொடரும்….. 

இப்படி இந்த நாட்டின் மூலம் உலகமும் உலக முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் எண்ணில் அடங்காத நன்மைகளை அடைந்துள்ளார்கள்.   

இன்றைக்கு ஏகத்துவ கொள்கையை  ஏற்றிருப்பவர்கள்,  பிரச்சாரம் செய்பவர்கள்,  சவுதி அரேபியாவின்அறிஞர்கள் அல்லது இங்குள்ள பல்கலைக்கழகங்களில் படித்து பட்டம்பெற்றவர்கள் ,  அல்லது இங்கு அச்சிடப்பட்ட புத்தகங்கள் இப்படி ஏதாவது ஒன்றின் மூலம் ஏகத்துவ கொள்கை அவர்களுக்கு கிடைத்திருக்கும் என்று நம்மால் உறுதியாக கூற முடியும். அப்படி இருந்தும் இந்த நாட்டின் மூலம் எந்த நன்மைகளையும் அடையாதவர்களைப் போன்று மனசாட்சி இல்லாமல் நன்றி கெட்டத்தனமாக இந்த நாடு உலகுக்கு கொடுத்த நன்மைகள் எதுவும் கண்ணுக்குத் தெரியாமல் அகக்கண் குருடர்களாக இந்த நாட்டை குறித்து அவதூறுகளையும், பொய்யான குற்றச்சாட்டுகளையும் எப்படித்தான் பேசவும் எழுதவும் இவர்களால் முடிகின்றதோ? 

இங்குள்ள ஆட்சியாளர்கள் சஹாபாக்கள் ஆட்சி செய்ததை போன்று ஆட்சி செய்கின்றார்கள் என்று நாம் கூறவில்லை அது போன்று இங்கு மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் எதுவுமே நடைபெறவில்லை என்றும் நாம் வாதிடவில்லை . தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பதிலும் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.  ஆனால் தவறுகளை யார் எப்படி சுட்டிக்காட்ட வேண்டும் ? எப்படி சுட்டிக் காட்ட வேண்டும் ? இது குறித்து மார்க்கத்தின் நிலைப்பாடு என்ன? மோசமான ஆட்சியாளர்கள் குறித்து வரும் நபி மொழிகள் அதில் பொது மக்களுக்கு சொல்லப்பட்ட உபதேசங்கள்  என்ன ?  எதுவுமே அறியாததை போன்று சிலர் இங்குள்ள ஆட்சியாளர்களை தமிழில் எழுதி விமர்சனம் செய்கின்றார்கள்.  இது ஆட்சியாளர்களை சென்றடையப்போவதுமில்லை. இதனால் பத்து பைசாவுக்கு பயனில்லை. மக்களுக்கு மத்தியில் ஃபித்னாவை பரப்பியவர்களா கவே  கருதப்படுவார்கள். 

 இன்ஷா அல்லாஹ் இவர்களால் வைக்கப்படும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் குர்ஆன் சுன்னா  அடிப்படையில் மறுப்புகள் வழங்கப்படும்.


s. யாஸிர் ஃபிர்தௌஸி 
இஸ்லாமிய அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம் 
சவூதி அரேபியா .
Previous Post Next Post