முடிந்தவரை பிறர் சீர்திருந்துவதையே விரும்பு..!

ஆட்சியாளரோ, பொதுமக்களோ யாராக இருந்தாலும் அவரது சீர்திருத்தத்தையே ஒரு முஸ்லிம் நாட வேண்டும்; ஒருவரிடம் காணப்படும் தவறுக்காக அவரை சபித்து பிரார்த்தனை செய்வதோ/ கேலி செய்து அவமானப்படுத்துவதோ/ கண்ணியத்தை சீர்குலைப்பதோ நபிவழியல்ல.! இன்னும் இது போன்ற செயல்களை அஹ்லுஸ் ஸுன்னாக்கள் வெறுத்துள்ளார்கள்.

அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அறிவித்தார். 

" துஃபைல் இப்னு அம்ர் அத்தவ்ஸீ (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் அவர்களின் தோழர்களும் நபி(ﷺ) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (எங்கள்) 'தவ்ஸ்' குலத்தார் மாறுசெய்து (இஸ்லாத்தை ஏற்க மறுத்து)விட்டார்கள். அவர்களுக்குக் தீங்கு நேரப் பிரார்த்தியுங்கள்' என்று கேட்டுக் கொண்டனர். அப்போது, 'தவ்ஸ் குலத்தார் அழியட்டும்' என்று கூறப்பட்டது. நபி(ﷺ) அவர்கள், 'இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக! அவர்களை (இஸ்லாத்திற்குக்) கொண்டு வருவாயாக!' என்று பிரார்த்தித்தார்கள்.

நூல் : ஸஹீஹ் புகாரி 2937.

இமாமுஸ் ஸுன்னா, அஹ்மத் பின் ஹன்பல் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் கூறியதாவது :
"ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு துஆ என்னிடம் இருக்குமேயானால், அந்த துஆவை ஆட்சியாளரின் சீர்திருத்தத்திற்காக கேட்பேன்" 

பார்க்க : மஜ்மூஃ ஃபதாவா 8/209

இமாம் நவவீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுவதாவது :

"மார்க்க அறிஞர்கள் மத்தியிலுள்ள ஒர் ஒருமித்த நிலைபாடு என்னவென்றால், (முஸ்லிம்) ஆட்சியாளரது (சீர்திருத்தத்திற்காக) ஜும்ஆ சொற்பொழிவின்போது துஆ செய்வது விரும்பத்ததாகும்; இதன் மூலம் அல்லாஹ் அவர்களை சீர்திருந்த செய்வான், மேலும் சத்தியத்தையும், நீதத்தையும் நிலைநாட்ட அவர்களுக்கு உதவி செய்வான்."

பார்க்க : அல்-மஜ்மூஃ 4/391

இமாம் இப்னு ஸலாஹ் (ரஹிமஹுல்லாஹ்) கூறுவதாவது :

• முஸ்லிம் தலைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
• சத்தியத்தின் மீது அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்.
• மேலும் அவர்கள் மென்மையான முறையில் அறிவுறுத்தப்பட வேண்டும்.
• அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்வதை தவிர்க்க வேண்டும். 
• அவர்களது நேர்வழிக்காக (தொடர்ந்து) துஆ செய்ய வேண்டும்.

பார்க்க : ஸியானத்து ஸஹீஹ் முஸ்லிம் 244


ஸுரூரிய்யாக்களிடம் கவனமாக இருங்கள்.!

மதிப்பிற்குரிய இமாம், அல்-அல்லாமா, அல்-முஹத்திஸ் : அஹ்மத் பின் யஹ்யா அந்-நஜ்மீ (ரஹிமஹுல்லாஹ்) கூறுவதாவது :

 "ஸுரூரிய்யா என்பது முஹம்மத் ஸுரூர் என்ற வழிகேடனின் கொள்கையை பின்பற்றும் ஓர் கூட்டமாகும்; இவர்கள் ஸுன்னாவில் சிலவற்றையும், பித்அத்துகளில் சிலவற்றையும் கொள்கைகளாக கொண்டிருப்பார்கள்.

அவர்களது சில முக்கிய கொள்கைகளாவன :

 1) (முஸ்லிம்) ஆட்சியாளர்களை விமர்சிப்பார்கள்; மேலும் தீமைக்கு வழிவகுக்கும் போக்கில் ஆட்சியாளர்களை பற்றி (பொதுவெளியில்) பேசுவார்கள்.

2) சிலபோது ஆட்சித் தலைவர்களை 'காஃபிர்' என்றுகூட தீர்ப்பளிப்பார்கள்; இவ்வாறான போக்கை அவர்களது (வெளி) வார்த்தைகளின் மூலமாக அறியமுடியாது; மாறாக அவர்களது செயல்பாடுகள் மூலம் நன்றாக அறியமுடியும்.

3) அறப்போரை நோக்கி மக்களை அழைப்பதாக தங்களை காட்டிக்கொள்வார்கள்; ஆனால் அதனை முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு எதிராக நிகழ்த்த வழிவகை தேடுவார்கள். 
(குறிப்பு : ஆட்சியாளரின் சில தவறுகளுக்காக, அவர்களை எதிர்த்து கிளர்ச்சி செய்வது/ கிளர்ச்சி செய்ய தூண்டுவது இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது; ஆட்சியாளரின் தவறை பொறுமையாக எடுத்துக்கூறி திருத்த முயற்சிப்பதே நபி ﷺ அவர்களது வழிகாட்டல் ஆகும்.)

4) ஸவூதி அரேபியாவில் இருக்கும் அறிஞர்களுக்கு உலக நடப்பு நிகழ்வுகளை பற்றிய அறிவு இல்லை என்று கூறுவார்கள்; அந்த அறிஞர்கள் தீமைக்கு எதிராக மார்க்கத் தீர்ப்பு அளிப்பதில்லை என அவர்களை விமர்சிப்பார்கள். 

(நூல் : அல்-ஃபதாவா அல்-ஜாலிய்யா அனில்-மனாஹிஜ் அத்-தாவிய்யா, பக்கம் 51-55)


முஸ்லிம் ஆட்சியாளரை அவரது தவறுகளுக்காக பொதுவெளியில் விமர்சிப்போருக்கானமறுப்பு..!

 - கண்ணியத்திற்குரிய இமாம், அஷ்ஷெய்க். உபைது பின் அப்துல்லாஹ் அல்-ஜாபிரீ (ரஹிமஹுல்லாஹ்)
https://youtu.be/7Je8tiek2DI?feature=shared

• (முஸ்லிம்) ஆட்சியாளர்களுக்கு எதிராக அவரது குற்றங்குறைகளை  பொதுவெளியிலும், மேடைகளிலும், கருத்தரங்குகளிலும், புத்தகங்களிலும், கேசட்டுகளிலும் பேசித் திரிபவர்களுக்கு செவி சாய்க்காதீர்கள்..!

• நிச்சயமாக இவர்கள் أهل الأهواء எனும் "மனோயிச்சைக்காரர்கள்", இன்னும் இவர்கள் "வழிக்கேட்டை நோக்கியும், பிரிவினையை நோக்கியும் அழைக்கும் அழைப்பாளர்கள்"..!

இத்தகையோர் உண்மையில் ஆட்சியாளருக்கு அறிவுரை கூறுவோராக இருந்திருந்தால், இவ்விடயத்தில் நபி ﷺ அவர்களது ஸுன்னாவை பின்பற்றியிருப்பார்கள்.

நபி ﷺ அவர்கள் கூறியதாவது :
"உங்களில் யாரேனும்  ஆட்சியாளரிடமிருந்து தாம் வெறுக்கும் செயலைக் கண்டால், அதை அவர் பகிரங்கப்படுத்த வேண்டாம்; மாறாக  ஆட்சியாளருக்கு தனிமையில் அறிவுரை கூற வேண்டும். அவர் அதனை ஏற்றுக்கொண்டால், அது நல்லது; அவர் அதனை  மறுத்தால், நீங்கள் உங்கள் கடமையை நிறைவேற்றிவிட்டீர்கள்."
(நூல் : முஸ்னத் அஹ்மத் 3/403 | கிதாபுஸ் ஸுன்னா, இப்னு அபீ ஆஸிம் 3/102 

(இமாம் அல்பானி அவர்கள் இச்செய்தியை ஸஹீஹ் என 
'ظلال الجنة في تخريج السنة  5/229'-
நூலில் கூறியுள்ளார்கள்).


தொகுப்பு : ரய்யான்
Previous Post Next Post