அபூபக்கர் (ரழி) அவர்கள் மூதாட்டிக்கு பணிவிடை செய்த செய்தி ஆதாரப்பூர்வமானதா?

முழுமையாக படிக்கவும். 

அது பஜ்ருடைய நேரம். மஸ்ஜிதுந்நபவியில் கலீபா அபூபக்கர் (ரழி) சுபஹ் தொழுகையை தலைமைதாங்கி நடாத்திக் கொண்டிருக்கிறார். தொழுகை முடிந்ததும் பள்ளிவாயலிலிருந்து வெளியேறிய கலீபா தனது வீட்டிற்கு செல்லும் பாதைக்கு எதிரேயுள்ள பாதையில் இறங்கி வெகுதூரம் நடந்து செல்கிறார். 

இதை அவதானித்த உமருக்கு(ரழி) யோசனை; ஒவ்வொரு நாளும் சுபஹ் தொழுதகையோடு வீட்டுக்கு செல்லாமல் எங்கே போகிறார் அபூபக்கர்? ஒவ்வொருநாளும் போகிறாரே! இதை என்னவென்று பார்க்கவேண்டுமென்ற ஆர்வம் அவரை தூண்டுகிறது. 

ஒருநாள் அபூபக்கரை இரகசியமாக பின்தொடர்ந்து செல்வதாக தீர்மானிக்கிறார். வழக்கம்போல கலீபா தொழுகை முடிந்ததும் பாதையில் இறங்கி நடக்கத்தொடங்குறார். உமரும் அபூபக்கர் அவரை காணாதவகையில் அவரைப் பின்தொடர்ந்து சென்றுகொண்டிருக்கிறார். நீண்டதூர நடைப்பயணம். பாலைவனத்தை ஊடறுத்து மதீனாவின் கடைக்கோடிவரை நடந்து சென்ற கலீபா அபூபக்கர் அங்கிருந்த ஒரு குடிசையுள் நுழைகிறார். மோசமான நிலையிலிருந்த பழைய குடிசை அது.   

கலீபா வெளியேறி வரும்வரை உமர்(ரழி) அங்கே மறைந்து காத்துக்கொண்டிருக்கிறார். நீண்ட சில மணித்தியாலங்கள் காத்திருந்தும் அபூபக்கர் குடிசையிலிருந்து வெளியேறியதாக தெரியவில்லை. சூரிய வெளிச்சம் பரவி ளுஹாவுடைய நேரமாகிய பின்னர்தான் குடிசையிலிருந்து வெளியேறி மதீனாவை நோக்கி புறப்படுகிறார்.

அபூபக்கர் பார்வையிலிருந்து மறையும் வரை காத்திருந்த உமர்(ரழி) குடிசையை நெருங்கி கதவைத் தட்டுகிறார்.ஒரு பெண் கதவைத் திறக்கிறார். வயது முதிர்ந்த, கண்பார்வையற்ற மிக பலவீனமான ஒரு பெண். சிறுவர்கள் சிலர் அங்குமிங்கும் ஒடித்திரிகிறார்கள்.

உமர் (ரழி) அந்த மூதாட்டிக்கு ஸலாம் சொல்லிவிட்டு “உங்களுடைய நிலமைப் பற்றி கொஞ்சம் சொல்லமுடியுமா” என்று கேட்கிறார்.
அதற்கு அந்த மூதாட்டி “நான் ஒரு பார்வையற்ற பெண், என்னைப் பார்த்துக் கொள்வதற்கு யாருமில்லை.என்னோடு சில அநாதைகளும் இருக்கிறார்கள்.” என்று பதிலளிக்கிறார்.
உமர்(ரழி) கேட்கிறார்கள் “ ஒவ்வொருநாளும் வந்து உங்களை தரிசித்துவிட்டு போகிறாரே அவர் யார்?” “எனக்கு அவர் யாரென்று தெரியாது. அவர் ஒருபோதும் என்னிடம் தன்னுடைய பெயரை சொல்லியதேயில்லை.” என்று அந்த மூதாட்டி பதிலளிக்கிறார்.

உமர் தொடர்ந்து கேட்கிறார் “நல்லது, அவர் இங்கு என்ன செய்கிறார்?”
அதற்கு “அல்லாஹ் அவருக்கு நிரப்பமான கூலியை வழங்க வேண்டும்” என்று பிரார்த்தவாறே சொல்கிறார். “அவர் ஒவ்வொருநாள் காலையிலும் வந்து, என்னுடைய வீட்டை சுத்தம் செய்கிறார்; எங்களுடைய ஆடைகளை கழுவுகிறார்; கோதுமையை அரைத்து ரொட்டியை தயார் செய்கிறார்; எங்களுக்கான உணவை சமைத்து வைக்கிறார். இவையெல்லாவற்றையும் செய்து முடித்தபின் என்னிடம் எதுவும் கூறாமலேயே வெளியேறிவிடுவார்” என்று.

உமர்(ரழி) ஆச்சர்யத்தோடு கேட்கிறார்கள் “ஒவ்வொருநாளும் இதை செய்துவருகிறாரா?”
“ஒவ்வொருநாளும்.... அல்லாஹ் அவருக்கு அருள்பாளிக்க வேண்டும்.” என்கிறார் அந்த மூதாட்டி. இதற்காக அவருக்கு கூலி ஏதாவது கொடுக்கிறீர்களா? என்று உமர்(ரழி) கேட்டபோது, “எதுவுமே நாம் கொடுப்பதில்லை” என்று அவர் பதிலளிக்கிறார்.

உமர்(ரழி) அவர்களால் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை.
“அபூபக்கரே! உமக்கு பின்னால் வருகின்ற எல்லா கலீபாக்களையும் நீங்கள் களைப்படையச் செய்துவிட்டீர்களே”என்று கூறி அழுகிறார்கள்.

இந்த செய்தி ஆதாரபூர்வமானதா ஷேக் ?

பதில் - இந்த நிகழ்வை நம்பத்தகுந்த வரலாற்று ஆசிரியர்கள் எவரும் தமது எந்த  வரலாற்று மூலாதார நூல்களிலும் பதிவு செய்யவில்லை.

இது ஓர் அடிப்படை ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட கட்டுக்கதையாகும். இப்படி ஒரு கதையை உறுதிப்படுத்தாது ஒரு சில பேச்சாளர்கள் தமது உரைகளிலும் எழுத்துக்களிலும் பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் இப்படி ஒரு நிகழ்வை எந்த அறிஞரும் தமது எந்த நூலிலும் குறிப்பிடவில்லை என்பதே உண்மையாகும். 

இது போன்ற ஒரு சம்பவம் உமர் (ரழி) அவர்களோடு தொடர்புபடுத்தி வேறு விதமாக வந்துள்ளது. அதில் உமர் (ரழி) அவர்கள் ஒரு மூதாட்டியை பராமரித்து வந்ததாகவும் அபூ பக்ர் (ரழி) அவர்களை முந்திச்சென்று அந்த மூதாட்டிக்கு பணிவிடை புரிவதாகவும் மிக சுருக்கமாக வந்திருக்கின்றது. அதனை இமாம் இப்னு அஸாகிர் (ரஹ்) தமது (தாரிஹ் திமிஷ்க் 30/322) ல் எழுதியுள்ளார்கள். அதுவும் ஆதாரமற்ற, இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.

இது நபித்தோழர்களோடு சம்பத்தப்படுவதால் இதற்குரிய அறிவிப்பாளர் வரிசை தரமானதாக அமையப்பெற வேண்டும். நபித்தோழர்களோடு இணைத்து கதைகளை சொல்வது மிகப்பெரும் குற்றமாகும். 

அது போன்று வரலாற்று முதுசங்களில் பதியப்பட்டுள்ள சம்பவங்கள், நிகழ்வுகளுக்கும் ஆதாரங்கள் கூறப்பட வேண்டும்.
இல்லையேல் நினைத்தவர்கள் நினைத்ததை நினைத்த இமாம்களோடு இணைத்துச் சொல்லிவிடுவார்கள். இந்த உம்மத்தின் சிறப்பம்சமே ஆதாரங்களும் அதனை உறுதிப்படுத்தும் இஸ்னாதுகளுமே ஆகும். ஸஹீஹ் முஸ்லிமின் முன்னுரையில் (1/12) அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) கூறுகிறார்கள்: அறிவிப்பாளர் தொடர் என்பது மார்க்கத்தில் உள்ள விடயமாகும். அது இல்லையென்றால் நினைத்தவர்கள் நினைத்ததைக் கூறிவிடுவார்கள். 

முபாரிஸ் இப்னு தாஜுதீன் ரஷாதி. 
அல்மனார் சென்டர், துபாய், அமீரகம்.
Previous Post Next Post