“ஹிஜாமா” என்பது நபிவழிமுறையா?


கேள்வி : ஹிஜாமா என்பது நபிவழிமுறையா அல்லது நபியவர்களின் காலத்தில் காணப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்றா?

பதில் : ஹிஜாமா தொடர்பாக அறிஞர்கள் மத்தியில் இருவகையான கருத்துகள் நிலவுகின்றன;

முதலாவது கருத்து : ஹிஜாமா என்பது ஆகுமாக்கப்பட்ட உபாியான சுன்னாவாகும்.
“ஹிஜாமா செய்வது ஒவ்வொருவரின் மீதும் விரும்பத்தக்கதாகும்.” (அல்பதாவா அல்ஹின்திய்யா : 5/355)

இப்னு முப்லிஹ் (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : “ஹிஜாமாவைப் பொருத்தவரை அதனை செய்வது தொடர்பாகவும், அதன் சிறப்பு பற்றியும், அதனுடைய காலம் பற்றியும் அதிகமான பிரபல்யமான செய்திகள் உள்ளன. அவைகளில் ஒன்று நபியவர்களின் கூற்றாகவும் செயலாகவும் இருந்தது தான் 17, 19, 21 ஆம் தினங்களில் செய்வது.” (அல்ஆதாப் அஷ்ஷரஇய்யா : 3/87)

இக்கருத்துக்கு ஆதாரமாக ஹிஜாமா மற்றும் அதனால் நோய்நிவாரணம் உள்ளது போன்ற பொதுவாக வந்துள்ள ஹதீஸ்களை ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

இரண்டாவது கருத்து : ஹிஜாமா என்பது இஸ்லாமிய ஷரீஆ முறையிலான பித்தியேகமான நன்மை தரக்கூடிய சிகிச்சையல்ல. மாறாக அது ஆகுமாக்கப்பட்ட சிகிச்சை வழிமுறைகளில் ஒன்று மாத்திரமே.

அல்காஸானீ அல்ஹனபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : “ஹிஜாமா என்பது விரும்பத்தக்க விடயமாகும்” (பதாஇஉஸ் ஸனாஇஃ : 4/190)

அல்கத்தாபீ (றஹிமஹுல்லாஹ்) கூறினார்கள் : “ஹிஜாமா என்பது ஆகுமான விடயமாகும். அத்துடன் அதிலே பயன்கள் இருப்பதுடன் உடலுக்குரிய நல்லவிடயங்களும் அடங்கியுள்ளன.” (மஆலிமுஸ் ஸுனன் : 4/103 , ஷரஹு இப்னு பத்தால் : 9/404 , அந்நிஹாயா பீ கரீபில் ஹதீஸி : 2/5)

இவ்விரண்டாவது கருத்திலிருந்து பின்வரும் விடயங்களை ஆதாரமாக எடுக்கலாம்;

ஹிஜாமா என்பது இஸ்லாத்திற்கு முன்பு அரபிகள் அறிந்திருந்த ஒரு கிசிச்சை முறைகளில் ஒன்று மாத்திரமில்லாமல் வரலாற்று புத்தகங்களில் அறியப்பட்டதுபோன்று பிர்அவ்னுடைய காலம் போன்று அதற்கு முன்னைய சமூகங்களிலும் இச்சிகிச்சை முறை அறியப்பட்டிருந்தது. எனவே, இதற்கு இஸ்லாத்தில் என்று சிறப்பம்சம் கிடையாது. ஆகவே, ஹிஜாமா என்பது விரும்பத்தக்க ஒன்றாக இருப்பதுடன், மருத்துவத்திற்கான தேவை ஏற்படும்போது இதனை செய்யலாம்.
வழமையான விடயங்கள், வாழ்க்கையின் பொதுவான செயற்பாடுகளாக கருதப்படக்கூடிய விடயங்களை பண்பாடுகளின் சிறப்புக்களுடன் தொடர்புபடுத்தாமல் வழமையான விடயம் என்ற வட்டத்தில் இருக்கின்றவரை அவைகள் அடிப்படையிலேயே ஆகுமானதாகும். எனவே, அவைகள் தொடர்ந்தும் ஆகுமானது என்ற வட்டத்திலேயே இருந்துகொண்டிருக்கும்.
ஹிஜாமா செய்வதினால் பிரத்தியேகமான நன்மை கிடைக்கும் என்றோ, அல்லது அதனை செய்யாமல் விட்டுவிட்டால் தண்டனையோ, இழிவோ ஏற்படும் என்று நபியவர்களைத் தொட்டும் ஒருவிடயங்களும் வரவில்லை.
ஹிஜாமாவினால் வணக்கவழிபாடு என்பதற்கோ அல்லது அதன் மூலம் அல்லாஹுத்தஆலாவை நெருங்குவதற்கு என்றோ எந்த நிலைப்பாடுகளும் கிடையாது. மாறாக அது மனிதர்களின் வழமையான வாழ்க்கை விடயங்களைப்போன்ற ஒரு விடயமாகவே உள்ளது.
எனவே இதன் மூலம் விளங்குவது என்னவென்றால்; இரண்டாவது கருத்தே மிகவும் ஏற்றமான கருத்தாகும். ஏனெனில், ஹிஜாமா என்பது மருத்துவ வழிமுறைகளில் ஒன்றாக இருக்கின்றது. ஆதலால் அதன்பால் தேவையுடையவன் வணக்கவழிபாடு என்ற அடிப்படையில் இல்லாமல் மருத்துவம், சிகிச்சை என்ற அடிப்படையில் அதனை செய்வான்.

அஷ்ஷெய்க் இப்னு உஸைமீன் றஹிமஹுல்லாஹ் கூறினார்கள் : “ஹிஜாமா என்பது சுன்னாவல்ல அது ஒரு மருந்துவ கிசிச்சையாகும். எனவே, அதன்பால் மனிதர்கள் தேவையுடையவர்களாக இருந்தால் ஹிஜாமா செய்வார்கள். அதன்பால் தேவையில்லை என்று கருதக்கூடியவர்கள் ஹிஜாமா செய்யமாட்டார்கள்.” (மஜ்மூஉ பதாவா வ-ரஸாஇலில் உஸைமீன் : 23/96)

மேலும், ஹிஜாமாவின்பால் தேவையுடைய நோயாளிக்கு ஹிஜாமா சுன்னா என்று கூறுவதில் எந்தவித தடையும் கிடையாது. ஏனெனில் அவன் இரண்டு விடயங்களை ஒன்று சேர்ப்பவனாக இருப்பான்;

ஒன்று : மருத்துவம்
மற்றையது : ஹிஜாமாவின் மூலம் நோய்நிவாரணம் உள்ளது என அல்லாஹ்வின் தூதர் சுட்டிக்காட்டியதன் அடிப்படையில், அவன் ஹிஜாமாவை பிரத்தியேகமாக தேர்ந்தெடுத்தான்.
இமாம் அந்நப்ராவீ அல்மாலிகீ (றஹிமஹுல்லாஹ்) கூறுகிறார்கள் : “ஹிஜாமாவின்பால் தேவை ஏற்படுகின்ற போது ஹிஜாமா செய்துகொள்வது விரும்பத்தக்கதாகும்.” (அல்பவாகிஹ் அத்தவானீ : 2/338) , (அல்-அதவீ பீ ஹாஷியதிஹி : 2/493)

மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிஜாமாவின்பால் தேவையில்லாத சந்தர்ப்பங்களில் ஹிஜாமா செய்தார்கள் என்று ஹதீஸ்களில் கண்டுகொள்ளமுடியாது. மாறாக, நபியவர்கள் தனக்கு ஏற்பட்ட தலைவலி மற்றும் இதுபோன்ற வேறு நோய்களினால் பீடிக்கப்பட்டால் ஹிஜாமா செய்பவர்களாக இருந்துள்ளார்கள். எனவே, ஹிஜாமா என்பது அதன்பால் தேவை ஏற்படும் சந்தர்ப்பத்தில் செய்யப்படும் ஒன்றாக இருப்பதை இதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே!

அரபியில் : https://islamqa.info/ar/answers/269871
தமிழில் : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம் – சவுதி அரேபியா.

Previous Post Next Post