முஹம்மத் இப்னு தையிப் இப்னு முஹம்மத் இப்னு ஜப்பார் இப்னுல் காஸிம் அல் காலி அபூ பக்கர் அல் பாகிலானி எனப்படும் இவர் ஹிஜ்ரி 338 ஆம் ஆண்டு தொடக்கம் 402 ஆம் ஆண்டு வரை இவ்வுலகில் வாழ்ந்தார். இக்காலகட்டத்தில் வாழ்ந்த மிகப்பெரும் அறிஞர்களில் இவரும் ஒருவராக மதிக்கப்படுகின்றார்.
இவர் பல்துறைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்தார். ஹதீஸ் கலையில் இவருக்கு இருந்த அறிவினால் ஷெய்குஸ் ஸுன்னா என்று புனைப்பெயர் சூட்டப்பட்டார். மேலும், இவர் மிக்க பேச்சாற்றல் மிக்கவ ராகவும் விளங்கினார். அதனால் ‘லிஸானுல் உம்மா’ – சமூகத்தின் நாவு- என சிறப்புப் பெயர் சூட்டப்பட்டார். மேலும் வாதத் திறமைமிக்கவராகவும் காணப்பட்டார். இவருடைய வாதத்திறமைக்கு சான்றாகப் பின்வரும் ஒரு சம்பவத்தைக் குறிப்பிடலாம்.
ஒரு நாள் இமாமவர்களை ஒரு கிறிஸ்தவ துறவி சந்திக்கின்றார் (உரையாடல்).
துறவி : முஸ்லிம்களிடத்திலே இனவெறி இருக்கின்றது.
பாகிலானி : அது என்ன?
துறவி : நீங்களாகவே கிறிஸ்தவ அல்லது யூதப் பெண்களை திருமணம் செய்வதை உங்களுக்கு ஆகுமாக்கியுள்ளீர்கள். ஆனால், உங்களது பெண் பிள்ளைகளை மற்றவர்களுக்கு (பூத, கிறிஸ்தவர்கள்) திருமணம் செய்து கொடுப்பதைத் தடை செய்துள்ளீர்கள்.
பாகிலானி : நாங்கள் யூதப் பெண்களைத் திருமணம் செய்கின்றோம். ஏனெனில்றால், நாம் மூஸா(ர) அவர்களை நம்பிக்கை கொள்கின்றோம். மேலும், கிறிஸ்தவப் பெண்களைத் திருமணம் செய்கின்றோம். ஏனென்றால், நாம் ஈஸா(அலை) அவர்களை நம்பிக்கை கொள்கின்றோம். நீங்கள் எப்போது எமது தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை நம்புகின்றீர்களோ அப்போது எங்களது பெண் பிள்ளைகளை உங்களுக்கு நாம் திருமணம் செய்து வைப்போம்.
(நிராகரிப்பாளரின் வாதம் முறியடிக்கப்பட்டது.)
மேலும், இதேப் போன்று இமாமவர்கள் பேச்சிலும், நடத்தையிலும் நுட்பம் நிறைந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இதற்குச் சான்றாக பின்வரும் ஒரு சம்பவத்தைக் கூறலாம்.
ஈராக்கின் அரசன் இமாமவர்களை கிறிஸ்தவர்களுடன் வாதம் செய்வதற்கு ஹி. 371 ஆம் ஆண்டு கொன்ஸ்தாந்துநோபிளுக்கு அனுப்பி வைத்தான்.
இமாவர்களின் வருகையை அறிந்த ரோம் அரசன் அவனது பரிவாளங்களுக்கு கோட்டையின் தலைவாயிலை குட்டையாகத் திறந்து வைக்குமாறு ஏவினான். ஏனென்றால் இமாம் கோட்டைக்குள் நுழையும் போது தலையைக் குனிந்து மண்டியிட்டவராக வர வேண்டும் என்பதற்காக. அவ்வாறே கோட்டையின் கதவும் திறந்து வைக்கப்பட்டிருந்தது. இமாமவர்கள் கதவருகே வந்த போது சூழ்ச்சியை அறிந்து கொண்டு தலையைக் குனிந்து பின்பக்கம் திரும்பியவராக மன்னர் முன்னிலையில் (முகம் காட்டாமல் பின்பக்கமாக) நடந்து வந்தார். இதைப் பார்த்த மன்னன் இமாமவர்களின் நுட்பத்தை அறிந்து கொண்டான்.
இமாம் பாகிலானி(ரஹ்) அவர்கள் உள்ளே நுழைந்து அவர்களுக்கு முகமன் கூறினார். ஆனால், ஸலாம் கூறவில்லை.
(ஏனென்றால், யூத, கிறிஸ்தவர்களுக்கு ஸலாத்தை நாம் ஆரம்பிப்பதை நபியவர்கள் தடுத்துள்ளார்கள். அவர்கள் ஸலாம் கூறினால் நாம் பதில் கூறலாம்.)
பின்னர் அவர் ஒரு பெரிய துறவியின் பக்கம் திரும்பிப் பார்த்து, ‘நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் உங்கள் பிள்ளைகள் எல்லோரும் சுகமாக இருக்கின்றீர்களா?’ என்று கேட்டார்.
இதைக் கேட்ட ரோம அரசன் கோபப்பட்டவனாக, ‘எங்களுடைய துறவிகள் திருமணம் முடிக்கவோ, குழந்தைகள் பெறவோ மாட்டார்கள் என்பதை நீர் அறியமாட்டீரா?’ எனக் கேட்டான்.
அதற்கு பாகிலானி(ரஹ்) அவர்கள், ‘அல்லாஹு அக்பர்! உங்கள் துறவிகளை திருமணம் முடிப்பதையும், குழந்தை பெறுவதையும் விட்டும் தூய்மைப்படுத்திவிட்டு உங்கள் இறைவன் மர்யமைத் திருமணம் செய்து ஈஸாவைப் பெற்றான் என்று கூறுகின்றீர்களே! இது உங்களுக்கே முரணாகத் தெரியவில்லையா?’ என்று கூறினார். (இதைக் கேட்ட அரசனின் கோபமும் அதிகரித்தது.)
பின்னர் அரசன், ‘ஆயிஷா(ரலி) அவர்கள் செய்ததைப் பற்றி உங்கள் கருத்தென்ன? அவர் மீது அவதூறு சொல்லப்பட்டதே!’ எனக் கேட்டான்.
இமாம் பாகிலானி (ரஹ்) அவர்கள், ‘ஆயிஷா(ரலி) அவர்கள் குற்றம் செய்தால் (முனாபிகீன்கள் அவர்கள் மீது குற்றம் சாட்டினர்.) மர்யம் (அலை) அவர்களும் குற்றம் செய்தவராவார். (யூதர்கள் குற்றம் சாட்டினர்.) ஆனால் இருவரும் தூய்மையானவர்கள். என்றாலும், ஆயிஷா(ரலி) அவர்கள் திருமணம் செய்தார்கள், குழந்தை பெறவில்லை. மேலும், மர்யம்(அலை) அவர்கள் திருமணம் செய்யவில்லை. ஆனால், குழந்தை பெற்றார்கள். எனவே, இவர்கள் இருவரிலும் பாதிலான குற்றச்சாட்டுக்கு மிகவும் முதன்மையானவர் யார்? அவ்விருவரையும் அல்லாஹ் காப்பானாக! அவதூறுகளை ஆதாரமாகக் கொண்டு யாரையும் குறை கூற முடியாது.
(அரசனின் மடமை மடமையாக்கப்பட்டது.)
அரசன் : உமது நபி போர் செய்தாரா?
பாகிலானி(ரஹ்) : ஆம்.
அரசன் : அவர் நேருக்கு நேர் போர் செய்தாரா?
பாகிலானி(ரஹ்) : ஆம்.
அரசன் : அவர் வெற்றி பெற்றாரா?
பாகிலானி(ரஹ்) : ஆம்.
அரசன் : அவர் தோல்வியுற்றாரா?
பாகிலானி(ரஹ்) : ஆம்.
அரசன் : ஆச்சரியம்! ஒரு தூதராக இருந்து கொண்டு தோல்வியுற்றாரா?
பாகிலானி(ரஹ்) : ஒரு கடவுள் சிலுவையிலேயே அறையப்பட்டார் என்கின்றீர்கள். அப்படியிருக்கும் போது ஒரு நபி தோல்வியுறுவதைப் பற்றியாக அலட்டிக் கொள்கின்றீர்கள்? இந்தத் தோல்வியுடன்…
இக்கட்டுரையின் நோக்கம்:
இன்று எமது சமூகத்தில் இது போன்ற இமாம்களின் வரலாறுகளைத் தேடிப் படிப்பதை விட தற்காலத்தில் வாழ்கின்ற செல்வந்தர்கள், அறிவியல் மேதைகள், சாதனையாளர்கள் போன்ற பலரின் வரலாறுகளைக் கற்பதிலேயே அதிக ஆர்வம் செலுத்தப்படுகின்றது. அதற்காக இவர்களைப் பற்றி கற்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. இதிலே ஆர்வம் காட்டுவதைப் போன்று அதை விடவும் அதிகமாக எமது முன்னோர்களான இறைவழி நடந்த ஸஹாபாக்கள், இமாம்கள் போன்றவர்களைப் பற்றி கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும். அதுவே எமது மறுமை வாழ்க்கையை வெற்றி பெற்ற வாழ்க்கையாக மாற்றியமைக்கச் சிறந்த வழியாக அமையும்.
இன்று இமாம்களின் வரலாறுகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு புத்தகங்களாக வெளிவருகின்றன. அவற்றை வாங்கி ஆர்வத்துடன் படிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டாலும் இன்று இணையம் என்பது எல்லோர் கையிலும் சர்வ சாதாரணமாகக் காணப்படும் ஒரு நவீன தொழிநுட்பமாகும். அதன் மூலம் வரலாறுகளைத் தேடிப் படிப்பது ஒரு கடினமான காரியமல்ல. வீணாக இணையத்தில் நேரத்தைக் கழிப்பதை விட இஸ்லாத்தைத் தேடிப் படிப்பதிலும், அதற்காகப் பல வழிகளிலும் உயிர், பொருள் தியாகம் செய்த அல்லாஹ்வின் நல்லடியார்களைப் பற்றிக் கற்பது அதிக பயனுடையதாக அமையும். அது இம்மைக்கும் மறுமைக்கும் பெற்றியைப் பெற்றுத்தர இலகுவான வழியாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
எனவே, எமது முன்னோர்களிடமிருந்து அவர்களின் வாழ்க்கை வரலாறுகளைப் படிப்பதில் நல்ல படிப்பினை பெற்று எமது வாழ்வையும் சீராக அமைத்துக் கொள்ள முயற்சிப்போமாக! அதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் துணை புரிவானாக!.
- இஸ்மாயில் ஸலபி