குர்ஆன் அல்லாஹ்வின் கலாம்.

சங்கைமிக்க குர்ஆன் அல்லாஹ்வின் கலாம் ஆகும். அவனிடமிருந்து அருளப்பட்டது; அது படைக்கப்பட்டது அல்ல. அவனிடமிருந்து துவங்கி அவன் பக்கமே திரும்பும். இன்னும் குர்ஆன் என்பது ஓர் அற்புதமாகும். மறுமை நாள் வரை அல்லாஹ்வால் பாதுகாக்கப்பட்டதுமாகும். 
                                                
 இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: 

 நிச்சயமாக குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தையாகும். அது அவனிடமிருந்து துவங்கியது; அதனை ‌எவ்வாறு என்று கூற முடியாது. பின்னர் அல்லாஹ் அதனை அவனது தூதருக்கு வஹியாக அருளினான். அதனை நம்பிக்கையாளர்கள் உண்மை என்று நம்பினார்கள். இன்னும் குர்ஆன் உண்மையாகவே அல்லாஹ்வின் வார்த்தை என்பதையும் உறுதியாக நம்பினார்கள். அது மனிதனின் வார்த்தையைப் போன்று படைக்கப்பட்டதல்ல. இதனை யார் செவிமடுத்து மனிதனின் கூற்று என்று வாதிடுவானோ அவன் நிராகரித்துவிட்டான். அத்தகையவனை அல்லாஹ் இழிவுபடுத்தி குறை கூறி "ஸகர்" எனும் நரகத்தின் மூலம் எச்சரிக்கை செய்கிறான். 
                                                
 اِنْ هٰذَاۤ اِلَّا قَوْلُ الْبَشَرِ سَاُصْلِيْهِ سَقَرَ 

 “இது மனிதனின் சொல்லல்லாமலும் வேறில்லை” (என்றும் கூறினான்.) 

 அவனை நான் “ஸகர்” (என்னும்) நரகில் புகச் செய்வேன். 

 (அல்குர்ஆன் : 74:25,26) 
                                                
 குர்ஆன் மனிதனை படைத்தவனின் வார்த்தை என்பதை உறுதியாக அறிந்து கொள்கிறோம். நிச்சயமாக மனித வார்த்தைக்கு ஒப்பானதல்ல. 

 நூல்: ஷரஹ் தஹாவியா - 165. 
                                                
 குர்ஆனைக் குறித்து முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய நம்பிக்கையைக் குறித்து இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள். இந்த விஷயம் தொடர்பாக பல்வேறு பிரிவினர்கள் வழி தவறிச் சென்றுள்ளார்கள். இமாம் இப்னு அபுல் இஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள், பேசுதல் என்பது அல்லாஹ்வின் முழுமையான பண்புகளில் ஒன்றாகும். பேசுவதற்கு ஆற்றல் இல்லாமல் இருப்பது என்பது குறைபாடாகும், காளைக் கன்றை வணங்குபவர்கள் நிராகரிப்பில் இருந்தும் கூட முஃதஸிலாக்களை விட அல்லாஹ்வை நன்கு அறிந்திருந்தார்கள். எனவே தான் அவர்கள் மூஸா(அலை) அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக உம்முடைய ரப்பு பேசவில்லை என்று கூறவில்லை. 
                                                
 وَاتَّخَذَ قَوْمُ مُوْسٰى مِنْ بَعْدِهٖ مِنْ حُلِيِّهِمْ عِجْلًا جَسَدًا لَّهٗ خُوَارٌ‌  اَلَمْ يَرَوْا اَنَّهٗ لَا يُكَلِّمُهُمْ وَلَا يَهْدِيْهِمْ سَبِيْلًا ۘ اِتَّخَذُوْهُ وَكَانُوْا ظٰلِمِيْنَ 

 மூஸாவின் சமூகத்தார் அவர் (சென்ற) பின் தங்கள் நகைகளைக் கொண்டு ஒரு காளைக் கன்றின் சிலையை(ச் செய்து அதைத் தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள்; அதற்கு (மாட்டின் சப்தத்தைப் போல் வெறும்) சப்தமிருந்தது; நிச்சயமாக அது அவர்களிடம் பேசவும் மாட்டாது, இன்னும் அவர்களுக்கு (நேர்) வழி காட்டவும் செய்யாது என்பதை அவர்கள் கவனித்திருக்க வேண்டாமா, அவர்கள் அதனையே (தெய்வமாக) ஆக்கிக் கொண்டார்கள் - இன்னும் அவர்கள் (தமக்குத் தாமே) அநியாயம் செய்து கொண்டார்கள். 

 (அல்குர்ஆன் : 7:148) 
                                                
 காளைக் கன்றை வணங்குபவர்கள் நிராகரிப்பில் இருந்தும் கூட முஃதஸிலாக்களை விட அல்லாஹ்வை நன்கு அறிந்திருந்தார்கள் எனவே தான் அவர்கள் மூஸா (அலை) அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக உம்முடைய ரப்பு பேசவில்லை என்று கூறவில்லை. 
                                                
 اَفَلَا يَرَوْنَ اَلَّا يَرْجِعُ اِلَيْهِمْ قَوْلًا ۙ وَّلَا يَمْلِكُ لَهُمْ ضَرًّا وَّلَا نَفْعًا 

 அவர்களுக்கு அது மறுபடி எதுவும் சொல்லவில்லை என்பதையும்; அவர்களுக்காக நன்மையையோ, தீமையையோ செய்யச் சக்தியற்றது என்பதையும் அவர்கள் பார்க்க வில்லையா? 

 (அல்குர்ஆன் : 20:89) 
                                                
 பதிலளிக்காமலும் பேச இயலாமலும் இருப்பது என்பது குறைபாடாகும். இதன் மூலம் காளைக் கன்றிற்கு இறைத்தன்மை இல்லை என்பதை அறிய முடிகிறது என்றும் இமாம் இப்னு அபுல் இஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள். 
                                                
 ஏழு கிராஅத்து முறையில் தேர்ச்சிப் பெற்ற அறிஞரான அபூ அம்ரு பின் அலா அவர்களிடம்.... 
                                                
 وَكَلَّمَ اللّٰهُ مُوْسٰى تَكْلِيْمًا  ‌

 இன்னும் மூஸாவுடன் அல்லாஹ் பேசியும் இருக்கின்றான். 

 (அல்குர்ஆன் : 4:164) 
                                                
 என்ற வசனத்தில் அல்லாஹ் மூஸாவிடம் பேசினான் என்பதை, அல்லாஹ்விடம் மூஸா அவர்கள் பேசினார் என்று பொருள் கொள்ளும் விதத்தில் அகர குறியீட்டின் மூலம் வாசிப்பதைக் குறித்து கேள்வி கேட்டபோது....‌. 
                                                
 وَلَمَّا جَآءَ مُوْسٰى لِمِيْقَاتِنَا وَكَلَّمَهٗ رَبُّهٗ ۙ قَالَ رَبِّ اَرِنِىْۤ اَنْظُرْ اِلَيْكَ‌  قَالَ لَنْ تَرٰٮنِىْ وَلٰـكِنِ انْظُرْ اِلَى الْجَـبَلِ فَاِنِ اسْتَقَرَّ مَكَانَهٗ فَسَوْفَ تَرٰٮنِىْ‌  فَلَمَّا تَجَلّٰى رَبُّهٗ لِلْجَبَلِ جَعَلَهٗ دَكًّا وَّخَرَّ مُوْسٰى صَعِقًا‌  فَلَمَّاۤ اَفَاقَ قَالَ سُبْحٰنَكَ تُبْتُ اِلَيْكَ وَاَنَا اَوَّلُ الْمُؤْمِنِيْنَ 

 நாம் குறித்த காலத்தில் (குறிப்பிட்ட இடத்தில்) மூஸா வந்த போது, அவருடைய இறைவன் அவருடன் பேசினான்; அப்போது மூஸா: “என் இறைவனே! நான் உன்னைப் பார்க்க வேண்டும்; எனக்கு உன்னைக் காண்பிப்பாயாக! என்று வேண்டினார். அதற்கு அவன், “மூஸாவே! நீர் என்னை ஒருக்காலும் பார்க்க முடியாது, எனினும் நீர் இந்த மலையைப் பார்த்துக் கொண்டிரும். அது தன் இடத்தில் நிலைத்திருந்தால், அப்போது நீர் என்னைப் பார்ப்பீர்!” என்று கூறினான். ஆகவே அவருடைய இறைவன் அம்மலை மீது தன்னுடைய பேரொளியைத் தோற்றுவித்த போது, அவன் அம்மலையை நொறுக்கித் தூளாக்கி விட்டான்; அப்போது மூஸா மூர்ச்சையாகிக் கீழே விழுந்து விட்டார். அவர் தெளிவடைந்ததும், “(இறைவா!) நீ மிகவும் பரிசுத்தமானவன்; நான் உன்னிடம் மன்னிப்பு கோருகிறேன். ஈமான் கொண்டவர்களில் நான் முதன்மையானவனாக இருக்கிறேன்” என்று கூறினார். 

 (அல்குர்ஆன் : 7:143) 
                                                
 இந்த வசனத்தை என்ன செய்வது என்று கேட்டார்கள் அப்போது அந்த முஃதஸிலா வாயடைந்து போனான். 

 நூல்: ஷரஹ் தஹாவியா - 167 
                                                
 அஷ்ஷைகு முஹம்மது அஹ்மது அல் அதவி அவர்கள் கூறினார்கள்: 

 அல்லாஹ்விற்கு பேசுகின்ற ஆற்றல் இல்லையென நினைப்பவன் முட்டாளாகத்தான் இருப்பான். அவன் உண்மையில் இறைவனுக்குரிய தகுதியை அறியவில்லை. பேச்சின் மூலம் தனது ஏவல், விலக்கல்களை விவரிக்க இயலாதவன் எப்படி வணக்கத்திற்கு தகுதியானவனாக ஆகமுடியும்? 

 நூல்: அத் தவ்ஹீத் - 35,36. 
                                                

 - உஸ்தாத். M. பஷீர் ஃபிர்தௌஸி. 
                                                
Previous Post Next Post