இஸ்லாத்தில் குடும்ப இயல்

ஆசிரியர் : பேராசிரியர் M. ஜமாலுத்தீன் (M.A.) (M.Phil.)

வெளியீடு : ஃபுர்கான் பப்ளிகேஷன்ஸ் ட்ரஸ்ட்.


இஸ்லாத்தில் குடும்பவியல்

உள்ளடக்கம்:

1. இஸ்லாம் ஒரு குடும்பஇயல் நெறி.

2. உறுதிமிக்க உடன்படிக்கை.

3. திருமணமும் ஓர் அடிப்படைத் தேவையே.

4.குடும்பத்தின் பணிப்பங்கீடு.

5. கணவனின் கண்ணியம்.

6. குழந்தைகள் இறையருள்செல்வங்கள்.

7. நல்லொழுக்கத்தின் நாற்றங்கால்.

8. சந்ததிகளைச் சந்தியில் நிறுத்தாதீர்.

9. திருமறை நிழலில் முற்றிய தளிர்கள்.

10. பெற்றோர் உறவைப் பேணித் தொடர்க!.

11. உறவுக்குக் கைகொடு உயர்வுக்கு வித்திடு.

12. குடும்பப்பாத்தியில் அநாதை நாற்றுகள்.

13. பக்கத்து இல்லங்கள்... தூரத்துஉள்ளங்கள்...

14. விருந்துகொடுப்பவரும் கொள்பவரும்.

15. நிறைவாக....... நிம்மதியாக....



இஸ்லாம் ஒரு குடும்பஇயல் நெறி

இது விஞ்ஞான யுகம். வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் நவநாகரிகம் வளர்ந்தோங்கிக் கொண்டே செல்கின்றது. இந்த நாகரிக மாற்றம் காரணமாக மனித வாழ்க்கை பெரிதும் பாதிப்புகளுக்கு ஆளாகி வருகிறது. தொழில் வளர்ச்சியும், நுகர்பொருள் கலாச்சாரமும் மேல்நாடுகளில் மிதமிஞ்சிய முக்கியத்துவத்தைப் பெற்றுத் திகழ்கின்றன. இதன் விளைவாகத் தனிமனித நலனும் லாப நோக்குமே முதன்மையாகிவிட்டன.

சமூக நீதி என்பது இன்றைக்குப் பின்னுக்குத் தள்ளப்பட்டு விட்டது. சமூகம் என்று வருகிறபோது குடும்பம் அதில் சிறப்பிடம் வகிக்கிறது, சமூகத்தின் அடிப்படை அமைப்பு குடும்பமேயாகும். சமுதாய அமைப்பின் தொட்டில் குடும்பம் எனலாம்.

இன்று மேனாடுகளில் தலைவிரித்தாடும் தனிமனித நலனும் லாப நோக்கும் குடும்ப இயல் என்னும் அடிப்படை அமைப்பைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. இதன் விளைவாக வருங்காலத்தில் குடும்பம் என்ற அமைப்பு நிலைத்திருக்குமா? இருக்காதா? என்ற சந்தேகங்கள் தலையெடுக்கத் தொடங்கிவிட்டன.

குடும்பக் கட்டுமானத்தின் இன்றியமையாத அங்கமாகிய திருமணம் என்பதெல்லாம் காலத்துக்கு ஒவ்வாத காரியங்கள் என அறிவு ஜீவி'கள் சிந்திக்கத் தலைப்பட்டு விட்டனர். ஓர் ஆணும், ஒரு பெண்ணும் கணவன் மனைவியாகக் கூடிவாழ்வதுதான் இல்லறமாகிய குடும்பமாகும் என்னும் சித்தாந்தத்திற்கு இப்போது ஆபத்து வந்து விட்டது. ஓர் ஆண் இன்னொரு ஆணுடன் கூடிக்கலந்து வாழ்க்கை நடத்துவதும் ஒரு பெண் இன்னொரு பெண்ணுடன் சேர்ந்து குடும்பம் நடத்துவதும் இல்லற அமைப்பேயாகும் என்றெல்லாம் நவீனக்கோட்பாடுகள் பிதற்றப்படுகின்றன. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண்கள் ஒரு பெண்ணோடு கூடி வாழ்தலையும் ஏன் குடும்பம் எனச் சொல்லக்கூடாது? என்ற விபரீத வினாக்களுக்கெல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல் இன்று குடும்பம் என்னும் சமுதாய அமைப்பு சிதைவுப்பட்டு நிற்றலைக் காண்கிறோம்.

இக்காரணங்களினால் இன்று மோனாடுகளில் குடும்பம் என்னும் உன்னத அமைப்பு ஆட்டம் கண்டு கிடக்கிறது. குடும்ப அமைப்புப் பற்றி யாரும் பொருட்படுத்தத் தேவையில்லை என்னும் மனோபாவம் மேனாடுகளில் நவநாகரிக ஆண்-பெண்களிடம் மேலோங்கிக் காணப் படுகின்றது. போகிற போக்கில் தோன்றுகிறபோது தோன்றுகிறவர்களுடன் இன்ப நுகர்ச்சியை நடத்தி முடித்துவிட்டு அதன் பின்விளைவு பற்றி அலட்டிக் கொள்ளாமல் இருப்பது தான் கட்டுப்பாடற்ற சுதந்திர வாழ்க்கை என்ற எண்ணம் வேகமாகப் பரவி வருகின்றது.

இதனால் பள்ளிப் பருவத்திலேயே சின்னஞ் சிறுமிகள் பல முறை கருக்கலைப்புக்கு ஆளாகின்றனர், இதையும் மீறிப் பிறக்கின்ற குழந்தைகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. இத்தகைய விபரீத உறவு காரணமாகப் பிறக்கும் குழந்தைகளின் பராமரிப்புக்காக ஆண்டுக்கு 29மில்லியன் டாலர் தொகையை அமெரிக்க அரசு செலவிட்டு வருகின்றது.

பொருள் வளத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் மேம்பட்ட நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி போன்ற நாடுகளில் குடும்ப அமைப்புச் சிதைந்து வரும் அதேவேளயில், விபச்சாரமும் வன்முறைக் கலாச்சாரமும் அதன் தீய விளைவுகளும் பெருகி வரக் காண்கிறோம்.

திருமணம், வீடு, குடும்பம் என்பனவெல்லாம் பெண்களை நிரந்தரமாக அடிமைத் தனத்தில் வைத்திருக்கும் ஒரு சாபமேயன்றி வேறில்லை'' என்று மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற கம்யூனிசத் தலைவர்கள் ஒங்கி முழங்கினர். இதே கருத்தைத்தான் தமிழ்நாட்டின் ஈ.வெ.ரா. பெரியாரும் கொண்டிருந்தார்.

உலகம் போற்றும் இந்த மகான்கள்' எடுத்துரைத்த கருத்துக்கேற்ப மனிதர்கள் வாழத் தலைப்பட்டமையினால் மேனாடுகளில் குடும்ப அமைப்பு நசிந்துகொண்டே வருகிறது. இது மட்டுமின்றி, பெண்ணுரிமை பேசுவோராலும் இன்று புதிய ஆபத்துக்கள் புறப்பட்டு வருகின்றன.

பெண்ணுரிமை வேண்டும், பெண் விடுதலை வேண்டும் என முழங்குவோர் ஆங்காங்கே உலக அரங்குகளில் கூடிப் பேசுவதையும் கேட்க முடிகின்றது. கெய்ரோ, பெய்ஜிங் போன்ற இடங்களில் சமீப காலங்களில் பெண் விடுதலை மாநாடுகள் கூட்டப்பட்டன.

கருக்கலைப்புச் சுதந்திரம், செக்ஸ் சதந்திரம், ஆண் பெண் பாலியல் நட்புரிமை, மதுபானம் போன்ற போதைப் பொருள்களை நுகரும் சுதந்திரம் முதலியவை எங்களுக்கு வேண்டும். இத்தகைய எங்களது உரிமைகளில் தலையிடுகின்ற அதிகாரம் எவருக்கும் இருக்கக் கூடாது என்றெல்லாம் இந்த விடுதலை விரும்பிகள் கோஷங்களை முன் வைத்துள்ளனர்.

'கண்டதே காட்சி கொண்டதே கோலம்" என்ற மிருக வாழ்க்கைத் தரத்திற்கு மனிதன் தாழ்ந்து கொண்டிருப்பதை இதுபோன்ற நிகழ்ச்சிகள் நிரூபித்து நிற்கின்றன. குடும்ப அமைப்பின் சிதைவுக்கும் கலாச்சாரச் சீரழிவிற்கும் சில அரசுகள் கூடத் துணைபோயுள்ளன. ஒரினச் சேர்க்கை யாளர்கள் இணைந்து வாழ்வதும் குடும்பமே' என்று கூறுமளவுக்குச் சில மேனாடுகளில் அரசு அங்கீகாரங்கள் கூட வழங்கப்பட்டுள்ளன. இதுபோன்ற எல்லாவகையான வழிகேடுகளுக்கும் வாசல் திறந்து விட்டு, குடும்பம் - சமூகம் என்னும் அமைப்புக்களைச் சீர்குலைய வைத்துவிட்டது மேனாட்டு நவ நாகரிகம். இப்போது இதனால் ஏற்பட்டுள்ள தீமைகளை மெல்ல உணரத் தலைப்பட்டுள்ளனர் இவர்கள்.

அரசாங்கமே மதுபானக் கடைகளையும் நடத்திக் கொண்டு குடியின் தீமையையும் பிரச்சாரம் செய்கிறதன்றோ? இதுபோல் எல்லாச் சமூகக் கேடுகளையும் அங்கீகரித்துவிட்டு, அவற்றினால் உருவாகும் தீமைகளுக்கு எதிராகவும் மேனாட்டினர் பிரச்சாரம் செய்யத் தொடங்கியுள்ளனர்.

மிதமிஞ்சிய பொருள் வேட்கை, மிதமிஞ்சிய இன்ப நுகர்ச்சி இவைகளை மட்டுமே தலையாய நோக்கமாகக் கொண்ட மக்களால் குடும்பம் என்னும் அடிப்படை அமைப்பு சிதைந்து வருதல் கண்கூடு. இந்நிலை இப்படியே நீடிக்குமானால் வருங்காலத்தில் குடும்பம் என்னும் சமுதாயக் கட்டுமானம் இல்லாமலே போய்விடக்கூடும். குடும்ப அமைப்பு நின்று நிலைபெற்றிருந்தால் தான் வருங்காலச் சமுதாயம் உருப்படும் என்ற உண்மை இப்போதுதான் சிலருடைய புத்திக்கு உறைக்கத் தொடங்யிருக்கின்றது.

இதன் காரணமாக 1994-ஆம் ஆண்டினை சர்வதேசக் குடும்பநல ஆண்டு என உலகச் சுகாதார அமைப்பு அறிவிப்புச் செய்தது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் மே மாதம் பதினைந்தாம் நாள் சர்வதேசக் குடும்ப நாள் என அனுஷ்டிக்கப்படுகிறது. குடும்ப அமைப்பில்தான் உலகின் வருங்காலம் தங்கியுள்ளது என்பது தான் இந்நாளில் எடுத்துரைக்கப் படுகின்ற கொள்கை முழக்க வாசகமாகும்.

குடும்பம் என்பது ஒரே கூரையினால் இணைக்கப்பட்ட இதயங்களின் இணைப்பேயாகும். அன்பு, பரிவு, பாசம், ஒருங்கிணைப்பு, பாதுகாப்புணர்வு, சகிப்புத் தன்மை முதலிய நல்லியல்புகளெல்லாம் குடும்ப அமைப்பிலிருந்தே பூத்துக் குலுங்கி, சமுதாய வாழ்விற்கு மணமூட்டுகின்றன. இத்தகைய நல்லியல்புகளின் உறைவிடமான குடும்ப இயல் பற்றி இஸ்லாம் கூறுவது என்ன?

மனிதன் இயல்பிலேயே நூறுபேரோடு கூடிவாழும் இயல்பினையுடையவன். பொதுவாக எந்த மனிதனும் தனித்து வாழ்வதை அவ்வளவாக விரும்புவதில்லை. இதுமட்டுமின்றி மனிதனுக்குப் பலவகையான தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளைத் தனி ஒருவராகவே யாராலும் நிறைவேற்றிக் கொள்ள முடியாது. ஒருவரோடு ஒருவர் சேர்ந்து வாழ்வதன் வாயிலாக மனிதனுடைய தேவைகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த வகையில் மனிதனை, குடும்ப அமைப்பிலும் சமுதாயச் சசூழ் நிலையிலும் வாழ்வதற்கேற்ற வகையிலேயே இறைவன் படைத்துள்ளான்.

கணவன் மனைவி, பெற்றோர் பிள்ளைகள், உற்றார் உறவினர் ஆகிய பலதரப்பினரும் ஒருவருக்கொருவர் கொண்டும் கொடுத்தும் மகிழ்ச்சியாக வாழும் வாழ்க்கையே குடும்ப வாழ்க்கையாகும். குடும்பம் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வரையறையை வகுத்துக் கூறியுள்ளது.

குடும்ப அமைப்பு, மூவகை உறவுநிலைகளைக் கொண்டு இயங்குவதாக இஸ்லாம் இயம்புகின்றது. ஒன்று இரத்தக் கலப்பில் ஏற்படும் வம்சாவளி உறவு முறையாகும். மற்றொரு உறவுநிலை, திருமணத் தொடர்பினால் ஏற்படுவது, மூன்றாவது பால் குடியினால் ஏற்படுவது. இந்த மூன்று வகையிலுமல்லாத வேறு எந்த விதமான நிலையிலும் மனித உறவுகள் குடும்பமாக உருவாவதை இஸ்லாம் விரும்பவில்லை.

தத்தெடுத்துக் கொள்ளுதல், பரஸ்பர ஒப்பந்தங்களின் அடிப்படையில் அன்னியரைக் குடும்ப உறவுபோல ஆக்கிக் கொள்ளுதல், பாலுறவுக்காகவும் வேறு தேவைகளுக்காகவும் நிக்காஹ்'' அல்லாத முறையில் சின்ன வீடு'' வைத்துக் கொள்ளுதல் முதலிய எதுவாயிருப்பினும் அவை இஸ்லாமியக் குடும்பக் கட்டுமானத்திற்குள் அடங்குவது கிடையாது.

மேலும் அவன் (அல்லாஹ்) தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு (இரத்தக் கலப்பின் அடிப்படையிலான) வம்சாவளியையும், (திருமண உறவின் அடிப்படையில்) சம்பந்தங்களையும் ஏற்படுத்துகின்றான். அல்குர்ஆன் 25:54

இருவகை இயல்பிலான குடும்ப உறவு பற்றித் திருமறை குர்ஆன் இங்ஙனம் எடுத்துரைத்துள்ளது.

உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள்,,, உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய் மார்களும். உங்கள் பால்குடிச்சகோதரர்களும்,,, ஆவர், அல்குர்ஆன் 4:23

பால்குடி உறவு பற்றி இவ்வாறு திருக்குர்ஆன் கூறுகின்றது, இரத்தபந்தம், திருமண உறவு. பால்குடி உறவு ஆகிய உறவுகளே உறுதியானவை, கட்டுக்குலையாதவை, குடும்பத் தொடர்பு அற்றுப்போகாமல் வழிவழித் தொடர்ந்து வருபவை.

இயற்கையோடு இயைந்ததும், தக்க முகாந்தி ரங்களோடு கூடியதும், ஒருவருக்கொருவர் பாதுகாப்பு அரணாக நின்று நிலவக் கூடியதும் இத்தகைய உறவு நிலைகளேயாகும். இவை அல்லாத ஏனைய தொடர்புகள் ஒரு மனிதனுடைய சோதனையான காலகட்டத்தில் காணாமல் போய்விடக்கூடியவை.

உடன் பிறவாச் சகோதரி ஏற்பாடுகளும், வளர்ப்பு மகன் போன்ற செயற்கைப்பந்தங்களும் அஸ்திவாரமில்லாத கட்டிடத்தைப் போன்று ஆட்டம் காணக்கூடியன. துன்பங்கள் சசூழும்போது இத்தகைய செயற்கை உறவுகள் சிலந்தி வலை போன்று இருக்குமிடம் தெரியாமல் சிதறி மறைந்து விடுகின்றன. ஆனால் வம்சாவளி, பால்குடி, திருமணத் தொடர்பானது இரும்புச்சங்கிலிபோல் சந்ததி தோறும் தொடர்ந்து உறுதி பெறுகிறது.

துன்பங்களும் துயரங்களும் நெருக்குகிறபோது ஒரு மனிதனை அரண் போலிருந்து காப்பாற்றுவது அவனுடைய குடும்பஅமைப்பேயாகும். நபிமார்கள் வாழ்க்கையிலும் இத்தகைய குடும்ப அரவணைப்பினைக் காணமுடிகின்றது. நபிமார்கள் ஏகத்துவத்தை எடுத்துரைத்தபோது குடும்பத்திலிருந்தே எதிர்ப்புகளும் கிளம்பின. குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பு கண்டு நபிமார்கள் கவலை அடைந்ததும் உண்டு.

நபி(ஸல்) அவர்கள் முதல் முதலாக இறைத்தூதினை எடுத்துரைத்து ஏகத்துவப் பிரச்சாரம் செய்தபோது அவர்களின் குடும்பத்தினர் சிலருடைய எதிர்ப்பைச் சந்திக்க நேர்ந்தது. இருப்பினும் மிக முக்கியமான குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பினால் நபி(ஸல்) அவர்களுடைய ஏகத்துவப் பிரச்சாரம் எங்ஙனம் வலுவடைந்தது என்பதை அன்னாரின் வரலாறு தெரிவிக்கின்றது.

இறைவன் நபி(ஸல்) அவர்களைத் தன் தூதராகத் தேர்ந்தெடுத்தான். அவர்கள் வாயிலாக ஏகத்துவத்தை மக்களுக்கு எடுத்துரைக்கச் செய்தான். முதன் முதலாகத் தூதுச் செய்தியைப் பெற்றுக் கொண்ட நபி(ஸல்) அவர்கள் நடுநடுங்கிப் போனார்கள். அப்போது நபிகளாருக்குப் பக்கத்துணையாயிருந்து அவர்களுக்கு ஆறுதல் கூறி, ஊக்கப்படுத்தி, அவர்களை உறுதிப்படுத்தியவர் அன்னை கதீஜா அவர்களேயாவார்.

வீட்டுக்கு உள்ளே நபி(ஸல்) அவர்களின் அருமைத் துணைவியார் கதீஜா நாயகியின் அரவணைப்பு இருந்தது போல, சமுதாய அரங்கில் நபி(ஸல்) அவர்களுக்கு ஒரு அரண்போன்ற பாதுகாப்பினை நல்கியவர் அபூதாலிபு ஆவார். இங்ஙனம் நபி(ஸல்) அவர்களின் துணைவியாரும் பெரிய தந்தையும் நபிகளாரின் ஏகத்துவப் பிரச்சாரத்திற்கு உற்ற துணையாயிருந்து ஆற்றிய பங்கு அளவிடற் கரியதாகும்.

அபூபக்கர்(ரலி) போன்ற ஆருயிர்த் தோழர்கள் நபி(ஸல்) அவர்களுக்காக உடல், பொருள், உயிரையும் கொடுப்பதற்குத் தயாராக இருந்தார்கள். என்றாலும் நபி(ஸல்) அவர்களின் 50ஆம் வயதில் அபூதாலிபும் கதீஜா நாயகியும் அடுத்தடுத்துக் காலமாகிவிட்டபோது, நபி(ஸல்) அவர்கள் ஆறாத்துயரில் ஆழ்ந்து போனார்கள். இந்த வம்சாவளி உறவையும் திருமண உறவையும் இழந்தபோது நபி(ஸல்) அவர்கள் இரு சிறகிழந்த பறவை போன்று கையற்று நின்று கவலைப்பட்டார்கள். துக்கம் மிகுந்த துயர் மிகு ஆண்டு (ஆமுல் ஹுஸ்ன்) என வரலாற்று ஆசிரியர்கள் இதனைக் குறிப்பிடுகின்றனர்.

ஓர் இலட்சியக் குடும்பம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கும் இங்கே ஒரு படிப்பினை இருக்கிறது. வாழ்க்கைப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வெற்றி காண்பதற்கு, குடும்பத்தினரின் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் இருக்குமானால், ஒருவருக்கு அது போன்ற பேறு வேறு எதுவுமில்லை எனலாம். வெளியாரின் ஆதரவும் ஒத்தாசையும் எத்துணை அளவு வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் ஒரு மனிதன் உண்டு உறையும் குடும்பத்துக்குள்ளே அவனுக்கு உடன்படாதவர்கள் இருப்பார்களானால், அதுவும் அவனுக்கு இன்னொரு பிரச்சனையாகி விடுகின்றது. அதே வேளையில் முக்கியக் குடும்ப உறுப்பினர்களின் அரவணைப்பு வாய்க்கப் பெறுமாயின் எவ்வளவு பெரிய புறஎதிர்ப்பையும் அவனால் சமாளித்துக் கொள்ள முடியும்.

நபி(ஸல்) அவர்களுடைய ஆரம்பகால ஏகத்துவப் பணிக்கு எத்தனையோ மாபெரும் எதிர்ப்புகள் கிளம்பி வந்தன. எனினும் நபிகளாரின் திருப்பணி மக்கத்து மண்ணில் மங்கிப் போகாமல் நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டே இருந்தது. நபி(ஸல்)அவர்களுக்கு வாய்த்த குடும்ப அரவணைப்பும் இதற்கு ஒரு முக்கியக் காரணமாகும். அதிலும் வேறு எவருடைய ஆதரவைக் காட்டிலும், வாழ்க்கைத் துணைவியாகிய மனைவியின் ஆதரவுக்குப் பிரத்தியேகமான மகிமை இருக்கவே செய்கிறது.. நபிகளாரின் வாழ்வே இதற்குச் சான்றாகும்.

நபி(ஸல்) அவர்களுக்கு முதன்முதலாக ஓதுவீராக'' என்ற இறைச் செய்தி கிடைத்த போது அவர்கள் அஞ்சிப் பயந்து ஒடோடி வீட்டிற்கு வந்தார்கள். அருமைத் துணைவியார் கதீஜா நாயகியிடம், தமக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ எனத் தாம் உறுதியாக அஞ்சுவதாக எடுத்துரைத்தார்கள். அப்போது கதீஜா நாயகி அவர்கள் ஒரு பொறுப்புள்ள இல்லத்தரசியாக எப்படி நடந்து கொணடார்கள் என்பது கவனிக்கத்தக்கதாகும்.

இஸ்லாத்தின் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளை ஓர் ஆண்மகன் எதிர்கொள்ளும்போது, அவனுடைய துணைவி அந்த வேளையில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு இச்சம்பவம் ஓர் அழகிய முன் மாதிரியாகும்.

நபி(ஸல்) அவர்கள் பேதலித்து நின்றபோது கதீஜா நாயகி அவர்கள், சாதாரணக் குடும்பங்களில் நடப்பது போன்று தம் கணவரைக் கேலி பேசவில்லை. அவநம்பிக்கை ஊட்டி அதைரியப் படுத்தவில்லை. மாறாக நபிகளாரைத் தேற்றினார்கள், தைரியப்படுத்தி உற்சாக மூட்டினார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்தமாட்டான்; ஏனெனில் தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள்; சிரமப்படுவோரின் சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள்; வறியவர்களுக்காக உழைக்கிறீர்கள்; விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள்; உண்மையான சோதனைகளில் ஆட்பட்டோருக்கு உதவி புரிகின்றீர்கள்;'' என்று கதீஜா நாயகி அவர்கள் நபிகளாரை ஆறுதல் படுத்தினார்கள். இப்படிப்பட்ட நற்குணத்தின் நாயகரான தங்களுக்கு எந்தக் கெடுதலும் நேர்ந்துவிடாது என எடுத்துரைத்துத் திடப்படுத்தினார்கள்.

சோதனையான காலகட்டங்களில் ஒரு குடும்பத்தலைவி கணவருக்குப் பக்கத்துணையாக இப்படித்தான் நடந்து கொள்ளுதல் வேண்டும். இந்தச் சம்பவம் திருக்குர்ஆனின் முதல் திருவசன வெளிப் பாட்டோடு தொடர்புடையதாகும். இறைத்தூதர் என்னும் அந்தஸ்தைப் பெற்றவுடன் நபிகளாரின் குடும்ப வாழ்வில் நிகழ்ந்த முக்கியமான இச்சம்பவம் நல்லதொரு குடும்ப அமைப்பு எப்படி இருக்கவேண்டும் என்பதையும் உணர்த்தி நிற்கிறது.

ஆன்மீகத் துறைக்கு மட்டுமே மதங்கள் ஏற்றவை, லௌகீக வாழ்விற்கு மதங்கள் ஒத்துவருவதில்லை'' எனப் பலரும் பேசித்திரிகின்றனர். வேறு எந்த மதத்திற்கு வேண்டுமானாலும் இந்த அளவுகோல் பொருந்தக்கூடும். ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை ஆன்மீகம் என்றும் லௌகீகம் என்றும் பாகுபாடு எதுவும் கிடையாது.

மனித வாழ்வின் ஆன்மீகம், லௌகீகம் உள்ளிட்ட தேவைகள் , என்னவெல்லாம் இருக்கின்றனவோ, அவை அனைத்தையும் உள்ளடக்கிய வாழ்வியல் நெறியே இஸ்லாமாகும். குடும்பம், சமுதாயம், அரசியல், பொருளாதாரம் போன்ற லௌகீக வாழ்க்கை முறைகளை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு இஸ்லாம் திட்டவட்டமான வழிகாட்டுதல்களை வழங்கி யிருக்கின்றது.

இந்த லௌகீகத் தடங்களில் மனிதன் கால்பதித்து நடக்கும் போதுதான் அவனது ஆன்மீகத் தடாகத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்கும் என இயம்புகிறது இஸ்லாம். இந்த வகையில் ஒரு குடும்ப அமைப்பு எப்படி இருத்தல் வேண்டும் என்பதையும், திருக்குர்ஆனும் நபிவழியும் நமக்கு நன்கு உணர்த்திக் காட்டியுள்ளன.

மதம் என்பது தனி மனிதனோடு சம்பந்தப்பட்டது; குடும்ப வாழ்க்கையோடும், கூட்டு வாழ்க்கையோடும் மதத்தைச் சம்பந்தப்படுத்தக் கூடாது' என்ற மதச் சார்பின்மைப் பேச்சுக்கு இஸ்லாத்தில் இடம் கிடையாது. தனிமனித வாழ்க்கையில் எந்த அளவுக்கு இஸ்லாமிய ஒழுக்கங்கள் பின்பற்றப்படுகின்றனவோ, அந்த அளவுக்குக் குடும்பவாழ்விலும், கூட்டுவாழ்விலும் இறைச் சட்டத்தையும் நபிவழியையும் பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகும்.

இஸ்லாத்தின் பல்வேறு கடமைகளைப் பார்ப்போமானால், அவை கூட்டாகச் செயல்படுத்துவதற்கென்றே விதிக்கப்பட்டதனைத் தெரியலாம். தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்ற அடிப்படைக் கடமைகள் மட்டுமின்றி இன்னபிற கட்டளைகள் கூட, குடும்ப அமைப்பிலும் சமுதாய அரங்கிலும் செயல்படத் தகுந்தனவாகவே காணக்கிடக்கின்றன.

இந்தப் பின்னணியில் நோக்கும் போது இஸ்லாம் குடும்பவியல் அடிப்படையிலான ஒரு மார்க்கமாகவே திகழ்கின்றது. குடும்பவியலின் ஆதாரசுருதியாக அமைந்திருப்பது திருமணமேயாகும்.

ஆண்டவனது அருளை அபரிமிதமாகப் பெற வேண்டுமானால், திருமண பந்தங்களையெல்லாம் மறந்துவிட்டு, துறவு வாழ்க்கையைத் தேடிக்கொள்ளுமாறு பல மதங்கள் கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் துறவறத்தைச் சிபாரிசு செய்யவில்லை. மாறாக இல்லற வாழ்க்கையை வலியுறுத்திப் பேசுகின்றது.

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய விரும்பி மனிதர்கள் துறவுத்தனத்தைத் தாங்களாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்டனர். அதனை நாம் ஒருபோதும் அவர்களுக்குக் கடமையாக ஆக்கவில்லை. அப்படியிருந்தும், துறவு மேற்கொண்ட அவர்கள், அதனை எந்த அளவுக்குப் பேணி ஒழுக வேண்டுமோ அந்த அளவுக்கு அதனைப் பேணுவதும் இல்லை (அல்குர்ஆன் 57:27) என்று இறைமறை இயம்புகின்றது.

அந்தக் காலத்து விசுவாமித்திர முனிவரிலிருந்து இந்தக் காலத்து பிரேமானந்தா முனிவர் வரை எத்தனையோ துறவிகள் இத் துறவறத்தை எந்த அளவுக்குக் கேலிக் குரியதாக ஆக்கியிருக்கின்றார்கள் என்பதை நாம் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

துறவு வாழ்க்கை விதிக்கப்பட்டுள்ள கிறித்துவப் பாதிரிமார்கள், அவர்களுடைய நீண்ட, நெடிய வெள்ளை அங்கிகளுக்குள்ளே நடத்தும் களியாட்டலீலைகள் உலகறிந்த ரகசியங்களாகும்.

மனிதனுக்குப் பசி, தாகம் எழுவது எப்படியோ அதுபோலவே உடல்சுகமும், புலனின்பமும் இயல்பான ஒன்றாகும். இதனை வலிந்து அடக்குதலை இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை.

உஸ்மான் பின் மழ்வூன்(ரலி) என்று ஒரு நபித்தோழர் இருந்தார். இவர் நபி(ஸல்) அவர்களை அணுகி, குடும்ப வாழ்க்கையில் தாம் ஈடுபடாமல் துறவறம் மேற்கொள்ளப் போவதாகக் கூறி, அதற்கு அனுமதி கோரினார். நபி(ஸல்) அவர்கள் இந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டார்கள்.

நபி(ஸல்) அவர்கள், அவருக்கு அனுமதி வழங்கயிருந்தால் நாங்கள் ஆண்மை நீக்கம் செய்திருப்போம் என்று ஸஃது பின் அபீ வக்காஸ்(ரலி) அறிவிக்கும் நபிமொழி புகாரி, முஸ்லிம், அஹ்மத் நூல்களில் இடம் பெற்றள்ளது.

அனஸ்(ரலி) வாயிலாகத் தெரியவரும் பின்வரும் நபிமொழியும் புகாரி, முஸ்லிம், அஹ்மத் போன்ற நூல்களில் இடம் பெற்றுள்ளது.

நபித்தோழர்களில் சிலர் நான் மணமுடிக்க மாட்டேன் என்றும், வேறு சிலர் நான் உறங்காமல் தொழுது கொண்டிருப்பேன் என்றும் மேலும் சிலர் நான் விடாமல் நோன்பு நோற்பேன் என்றும் பேசிக்கொண்டனர். இந்தச் செய்தி நபி(ஸல்) அவர்களுக்குத் தெரிய வந்தபோது; நான் நோன்பும் வைக்கிறேன், அதைவிட்டு விடவும் செய்கிறேன்; நான் தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; பெண்களை மணமுடிக்கவும் செய்கிறேன். யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.

முக்கிய வழிபாட்டுக் கடமைகளான நோன்பிற்கும் தொழுகைக்கும் இஸ்லாம் எந்த இடத்தை வழங்கியுள்ளதோ, அதே இடத்தை மணவாழ்க்கைக்கும் தந்து நிற்கின்றது இந்த நபிமொழி.

நான் உண்ணமால் நோன்பிருக்கிறேன், உண்ணவும் செய்கிறேன்: உறங்காமல் விழித்திருக்கிறேன்: உறங்கவும் செய்கிறேன்' என்ற கூற்றிலிருந்து உணவும் உறக்கமும் ஒரு மனிதனுக்கு எப்படி இன்றியமையாது தேவைப் படுகின்றனவோ அது போலவே மணவாழ்வும் மனிதனுக்கு ஒரு அவசியத் தேவையாகும் என்பதையும் இந்த நபிமொழி நன்கு உணர்த்துகின்றது.

அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் இரவு முழுவதும் தொழுவதாகக் கேள்விப் பட்டபோது, நபி(ஸல்) அவர்கள் அவரைத் தடுத்தார்கள். நீ உனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உண்டு என்று உணர்த்திக் காட்டினார்கள்.

இந்தக் கருத்துப்பட அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி புகாரி, முஸ்லிம், திர்மிதீ, நஸயீ நூல்களில் இடம் பெற்றள்ளது.

அடியான் என்ற வகையில் ஆண்டவனுக்கு வழிபாடுகளைச் செலுத்துவதோடு, கணவன் என்ற வகையில் மனைவிக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புக்களையும் ஒரு மனிதன் செவ்வனே நிறைவேற்றியாக வேண்டும். நபி(ஸல்) அவர்கள் இதனை வற்புறுத்திக் கூறியுள்ளமை, இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

மேற்கூறிய நபிமொழிகள் ஒரு முக்கியமான செய்தியை நமக்கு உணர்த்திக் காட்டியுள்ளன. மனிதனுக்குப் பசி, தாகம், உறக்கம் எப்படியோ அதுபோலவே உடல் சுகமும் புலனின்பமும் இயல்பான ஒன்றாகும். ஒரு பாலினர் மற்றொரு பாலினரிடம் கொண்டிருக்கும் இந்த ஈர்ப்பு உயிரியல் இயற்கைக்கு உட்பட்டது. பிற உணர்வுகள் அனைத்தையும் விடவும் மனிதனிடம் மேலோங்கித் திகழக்கூடியது இதுவாகும். இந்த உணர்வு மனிதனுடைய ஐம்புலன்களுக்கும் ஒருங்கே இன்பமளித்து, அவனது எண்ணம், சொல், செயல்களையெல்லாம் இனிமைப் படுத்துகின்றது.

மனிதனுடைய மகிழ்ச்சி, துக்கம், போன்ற பிற உணர்வுகளையெல்லாம் ஆட்டிப்படைக்கின்ற அளவுக்கு ஒரு வலுவான ஆற்றலாக இப்பாலுணர்வுச் சங்கதி புதைந்து கிடக்கின்றது. இந்த உணர்வு நிறைவேறும்போது மனிதன் மகிழ்கிறான், சாந்தமடைகிறான். அவனுடைய பிற செயல்பாடுகள் சீரடைகின்றன. இந்த உணர்வு நிறைவேறாத நிராசையாகும்போது மனிதன் கோபம் கொள்கிறான். ஆவேசப்படுகிறான். அவனுடைய பிற இயக்கங்களை இது மிகவும் பாதிக்கின்றது. இதன் காரணமாகவே வரலாற்றில் பல சாம்ராஜ்ஜியங்கள் சரிந்திருக்கின்றன. போர்க்களப் பேரழிவுகள் தொடங்கி, இக்காலத்துக் குத்து வெட்டுக் கொலைகள் வரை பலவற்றிலும் இந்த உணர்வு முக்கிய இடம் வகிப்பதைக் காண்கின்றோம்.

சொல்லப்போனால், படைப்பினங்களின் மணி முடியாகத் திகழும் மனிதனுக்கு இறைவன் அருளியிருக்கும் எண்ணற்ற அருட்கொடைகளுள் இந்தப் பாலுணர்வும் ஒன்றாகும். மனிதன் பருவமெய்தியதிலிருந்து அவன் முதுமையடைந்து மரணிப்பது வரை இப்பாலுணர்வு ஏதோ ஒரு ரூபத்தில் அவனிடம் பொருந்தியே இருக்கின்றது. ஏனைய உயிரினங்களுக்குப் பாலுணர்வு உண்டு என்றாலும் அவை இவ்வுணர்வினை ஆண்டு முழுவதும் பயன்படுத்துவது கிடையாது. ஒரு குறிப்பிட்ட பருவ காலத்தில் மட்டுமே பயன்படுத்தி விட்டு ஓய்வெடுத்துக் கொள்கின்றன. ஆனால் மனிதனுடைய பாலுணர்வு இயக்கமோ ஆண்டு முழுவதும் எல்லாப் பருவகாலங்களிலும் செயல்படுத்தத் தக்க வகையில் அமைந்திருக்கின்றது.

ஆக, இப்பாலுணர்வு என்பது மனிதனுடைய பிறப்போடு ஒட்டியது. மக்கள் பிறப்பை அருளுவதும் எங்கும் பரந்து நிற்பதும் இதுவாகும், ஆண்டவனது படைப்புகக்களில் ஆண்,பெண் என்ற தத்துவத்தின் வித்தாகவும், அவற்றின் வாழ்வுக்கும் வளத்துக்கும் சத்தாகவும் இது அமைந்திருக்கின்றது.

ஆண்மையும் பெண்மையும் ஒன்றில் ஒன்று ஈர்க்கப்படும் இப்பாலுணர்வு இல்லையேல் மனித இனமும் இனப்பெருக்கமும் நில்லாது நிலையாது போயிருக்கும். இனப்பெருக்கத்தின் முன்னோடியாகத் திகழும் இப்பாலுணர்வுக்குத் திருமணம்' என ஒரு நெறியமைத்து அதற்குச் சில ஒழுங்கு முறைகளை விதித்துள்ளது இஸ்லாம், குடும்ப இயலின் நுழைவாயிலான இத்திருமணம் மனிதனுடைய செயல்பாடுகளில் சிறப்பான ஒரு இடத்தை வகிக்கின்றது, எனவே இஸ்லாமும் இதுபற்றிச் சிறப்பாகப் பேசியுள்ளது.



உறுதிமிக்க உடன்படிக்கை

திருமணத்தின் இன்றியமையாமை குறித்துத் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் பெரிதும் பேசியுள்ளன. உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்குத் திருமணம் செய்து வைப்பீராக (24:32) என்று திருமறை குர்ஆன் கட்டளையிடுகின்றது. நான் திருமணம் செய்து கொள்கிறேன். எனவே யார் எனது வழிமுறையைப் புறக்கணிக்கின்றாரோ அவர் என்னைச் சேர்ந்தவர் அல்லர் என்பது நபிமொழியாகும்.

ஏன் திருமணம் புரிதல் வேண்டும்? அது மனிதனுடைய உணர்ச்சிக்கு வடிகாலாகவும், அவனுடைய நல்லொழுக்கத்திற்கு உத்தரவாதமாகவும் அவனுடைய புலனிச்சைகளை நெறிப்படுத்துவதாகவும் அமைகின்றது. இந்த வகையில் திருமணம் என்பது வெறுமனே செக்ஸுக்குரிய லைசன்ஸ் மட்டுமன்று. இதையும் கடந்து வாழ்க்கையின் பிற தேவைகளையும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளத்தக்க உறவாக இது மலர்கின்றது.

கணவன்-மனைவியாகக் கூடி வாழும் இந்த உறவுப் பகிர்தலை இஸ்லாம் ஓர் உறுதியான உடன்படிக்கை'' என்றே இயம்புகின்றது.

உங்களிடமிருந்து (உங்கள் மனைவியாகிய) அவள் உறுதியான உடன்படிக்கை பெற்று, ஒருவர் மற்றவருடன் கலந்து விட்டீர்களே, என்பது இறைவசனமாகும். (அல்குர்ஆன் 4:21)

திருமணத்தைக் குறிக்கும் அரபிச் சொல் நிக்காஹ்'' என்பதாகும். நிக்காஹ் என்ற இச்சொல்லின் அகராதிப் பொருள் திருமண ஒப்பந்தம் செய்தல், மனைவியுடன் உடலுறவு கொள்ளல் போன்ற பொருள்களை உள்ளடக்கியிருக்கின்றது.

எனவே ஓர் ஆணும் ஒரு பெண்ணும் கணவன் மனைவியாக ஒத்திசைந்து வாழ்வதற்காகச் செய்து கொள்ளும் உறுதியான உடன்படிக்கையே இதுவாகும், இந்த உடன்படிக்கையைச் செய்து கொள்ளும் கணவன் ஒருவன், மனைவியல்லாத வேறு எந்தப் பெண்ணுடனும் தவறான உறவை ஏற்படுத்திக் கொள்ளக்கூடாது. அதுபோலவே இந்த உடன்படிக்கைக்கு உட்பட்டிருக்கும் மனைவியானவள், கணவனைத் தவிர வேறு எந்த ஆடவனுடனும் தவறான தொடர்பினை வைத்துக் கொள்ளுதல் தகாது. அந்த அளவுக்கு உடன்படிக்கை மேற்கொள்ளும் இரு தரப்பினரும் தங்களது வாக்குறுதியில் உறுதியாகவும் திடமாகவும் இருந்து கொள்ளுதல் வேண்டும். எனவேதான் இத்திருமண உறவை உறுதியான உடன்படிக்கை என்று திருமறை பறைசாற்றுகின்றது.

இந்த உடன்படிக்கைக்கு உட்பட்டு, கணவனும், மனiவியும் ஒருவரில் ஒருவர் கலந்துறைந்து வாழும்போது அவர்களை அறியாமலே அவர்களிடத்தில் அன்பும் பரிவும் பாசமும் ஊற்றெடுக்கின்றன.

தனக்காக மட்டும் வாழாமல் தன் துணைக்காகவும் விட்டுக் கொடுக்கின்றனர். ஒருவருக்கொருவர் தியாகம் செய்கின்றனர், இப்படி ஒருவர் மற்றொருவர் மூலம் சுகம் அனுபவித்து ஒருவர் மற்றொருவருக்காகத் தியாகம் செய்து நல்லதொரு குடும்பத்தை உருவாக்குகின்றனர். ஒருவரோடொருவர் ஒன்றிணைதலின் மூலம் ஒருவருக்காக ஒருவர் என வாழத் தலைப்படுகின்றனர்.

நேற்றுவரை குடும்பப் பொறுப்பின்றி, பெற்றோருக்குக் கட்டுப்படாமல் தான் தோன்றித்தனமாக திரிந்திருப்பான் ஒருவன். அவனுக்கு ஒரு கால்கட்டினைப்' போட்டு விட்டால் போதும். நேற்று எப்படி இருந்தானோ அதற்கு நேர் மாற்றமாக இன்று ஆகிப்போகின்றான். குடும்பத் தேவைக்காக மட்டும் வீட்டை விட்டு வெளியேறுகின்றான். தேவையின்றி ஊர் சுற்றுவதைத் தவிர்க்கின்றான். எந்நேரமும் மனைவியிடம் அன்பைப் பொழிந்து தள்ளுகின்றான். மனைவியோடு இல்லற வாழ்க்கையில் உறைந்திருப்பதுவே அவனுக்கு மாபெரும் ஆறுதலைக் கொடுக்கின்றது.

இதுபோலத்தான் பெண்ணின் நிலையும் இருக்கக் காண்கின்றோம். நேற்று வரை, பெற்றோர்களோடும் உடன் பிறந்தவர்களோடும் வாழ்ந்தபோது சகிப்புத் தன்மையோ விட்டுக் கொடுக்கும் சுபாவமோ இல்லாமல் வளர்ந் திருப்பாள். ஒரு கணவனுக்கு வாழ்கைப்பட்டு இவள் எப்படித்தான் காலம் தள்ளப்போகிறாளோ என்று பெற்றோரும் உற்றாரும் கவலைப்பட்டிருப்பார்கள். 
ஆனால் இன்று திருமணம் ஆகிவிட்ட பின்பு அவளது நிலை அடியோடு மாறிப் போகின்றது. 

தன்னுடைய சுக துக்கங்களை இரண்டாம் பட்சமாக ஆக்கிவிட்டு, தன் கணவனின் மகிழ்ச்சி கண்டு தான் மகிழ்கிறாள். அவன் துயரம் கண்டு தான் துடிக்கிறாள். இந்த ரசவாத வித்தையை ஏற்படுத்தியது எது? அதுதான் இரு பொருள் தந்து நிற்கும் நிக்காஹ்'' ஆகும்.

இதைத்தான் திருமறை குர்ஆன் அழகாக எடுத்துரைக்கின்றது.

நீங்கள் ஆறுதல் பெறுவதற்குரிய துணையை உங்களிலிருந்தே உங்களுக்காக அவன் படைத்திருப்பதும்; உங்களுக்கிடையே உவப்பையும் கிருபையையும் உள்ளடக்கியிருப்பதும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும். அல்குர்ஆன் 30:21

இத்தகைய திருமண உறவின் வாயிலாகக் கட்டப்படும் குடும்பம் என்ற கூட்டுக்குள்ளே கணவனும் மனைவியும் ஜோடிப் புறாக்களாக இணைந்து வாழ்ந்து, நன்மக்களை ஈன்றெடுத்து, குடும்பப் பொறுப்பினை ஆற்றுகின்றனர். இதன் வாயிலாகத்தான் ஒரு நல்ல சமூக அமைப்பு வடிவம் பெறுகின்றது.

பருவமடைந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் திருமணம் என்ற உறுதியான ஒப்பந்தத்தின் மூலம்தான் தங்களது புலனின்பத்தை நுகர வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இந்த ஒப்பந்தத்தைச் செய்து கொள்ளாமல், கணவன், மனைவி உறவு முறையல்லாத வேறு தொடர்பின் வாயிலாக் ஓர் ஆணோ பெண்ணோ புலனின்பம் நுகருவதைப் பெரும்பாவம் என்றே கூறுகிறது இஸ்லாம். எனவேதான், திருமணத்தை ஒரு சமுதாயக் கடமையாக மட்டும் பேசாமல், அதனை ஒரு மார்க்கக் கட்டளையாகவும் இஸ்லாம் விதித்துள்ளது.

திருமணம் முடித்த இருவர் கொள்ளும் உடலுறவுக்கு இறைவனிடமிருந்து வெகுமதி அளிக்கப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நமது உடல் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்குக் கூட வெகுமதி அளிக்கப்படுவோமா? என்று நபித்தோழர்கள் வினவினார்கள்.

தகாத உறவிற்காகத் தண்டனை அளிக்கப்படுகிறதல்லவா? என நபி(ஸல்) அவர்கள் திருப்பிக் கேட்டார்கள்.

நபித்தோழர்கள் ஆம் தண்டனை வழங்கப்படுகிறது' என்று பதிலுரைத்தார்கள்.

அது போலவே நெறிதவறாமல் நேர்மையான வழியில் ஆசைகளை நிறைவேற்ற விழையும்போது, அதற்கான வெகுமதி வழங்கப்படுகின்றது என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அறிவிப்பவர்: அபூதர்(ரலி) நூல்: முஸ்லிம்

எனவே திருமணம் என்பது மனிதனைத் தவறான நெறியிலிருந்து காக்கின்ற ஒரு கடிவாளமாகவும்; அவனுக்கு இறையருளை ஈட்டித் தரும் ஒரு நன்னெறியாகவும் விளங்கக் காண்கின்றோம். 

இளைஞர்களுக்குத் திருமணத்தைக் கட்டளையிடும் நபி(ஸல்) அவர்களின் திருமொழி இதோ:
இளைஞர்களே! உங்களில் திருமணத்தின் பொறுப்பைச் சுமக்கும் சக்தி படைத்தவர்கள் மணம் புரிந்து கொள்ளட்டும். ஏனெனில் திருமணம் பார்வையைத் தாழ்த்துகிறது, வெட்கத்தலத்தைப் பாதுகாக்கிறது. அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் பின் யஸீத் நூல்: புகாரி.

மூன்று நபர்களுக்கு உதவி செய்வது அல்லாஹ்வுக்குப் பொறுப்பாகிறது.
1. இறைவழியில் அறப்போர் செய்பவர்.
2. விடுதலையை விரும்பி நஷ்டஈட்டிற்கு எழுதிக் கொடுத்த அடிமை
3. பத்தினித் தன்மையை நாடித் திருமணம் செய்தவர்.
திர்மிதீ, இப்னுஹிப்பான், ஹாகிம் ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ள இந்த நபி மொழியினை அபூஹுரைரா (ரலி) அறிவித்துள்ளார்கள்.

திருமணத்தின் முக்கிய நோக்கங்கள் இங்குச் சிறப்பாக வெளிப்படுத்தப் பட்டுள்ளன. கணவன் மனைவியாக உடன்பட்டு உண்மை அன்போடும் பரஸ்பர நம்பிக்கையாடும் வாழும்போது குடும்பத்திலும், சமுதாயத்திலும் சாந்தி தவழ்கின்றது. இந்த உடன் படிக்கைக்கு வெளியே மனிதர்களுடைய பாலியல் உறவுகள் கிளை பரப்பும்போது, அதன் காரணமாகச் சமுதாயம் வியாதியைத்தான் வரவழைத்துக் கொள்கின்றது.

கற்பு நெறி என்பது பெண்களுக்கு மட்டும் உரியதன்று; அது ஆண்களுக்கும் உரியதே என்பதை இஸ்லாம் திறம்பட எடுத்தியம்புகின்றது. மேற்கண்ட நபிமொழி விளக்கங்களுக்கு அடிப்படையான திருமறை குர்ஆன் வசனம் இதோ:

(நபியே) இறைநம்பிக்கை கொண்ட ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக! அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும், தங்கள் வெட்கத் தலத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்(24:30). ஒரு சமுதாயம் பரிசுத்தமாகவும் ஆரோக்கியமாக வும் திகழ வேண்டுமானால் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குரிய வழிமுறைகள் இங்கு எடுத்துரைக்கப் பட்டுள்ளன.

கற்பு நிலை என்று சொல்ல வந்தால் இரு கட்சிக்கும் அதைப் பொதுவில் வைப்போம்'' என்று இந்த நூற்றாண்டில் பாரதியார் பாடினார். ஆண் கற்பு பற்றி எவருமே எண்ணிப் பார்த்திராத காலத்தில் திருமறை குர்ஆன் இதனைக் கட்டளையிட்டுள்ளது. இந்த மறை நெறியிலிருந்து சறுகிப்போன காரணத்தினால் இன்றைய உலகை எய்ட்ஸ் போன்ற உயிர்க்கொல்லி நோய்கள் கவ்விப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. இந்த நோயிலிருந்து தப்பிப்பதற்காக ஆணுறைக்குள்ளே புகுந்து கொண்டு எப்படியேனும் ஆட்டம் போடச் சொல்கின்றன அரசின் விளம்பர வாசகங்கள். ஆனால் இஸ்லாம் சொல்கிற தீர்வு என்ன? மனிதன் காம இச்சையைக் கட்டுபடுத்திக் கொள்ளப் பார்வையைத் தாழ்த்தி, வெட்கத் தலங்களைக் காத்துக் கற்பொழுக்கத்துடன் நடந்து கொண்டால் மட்டுமே சமுதாயம் உருப்படும் என்கிறது.

இதற்காகவே திருமணம் என்ற ஒப்பந்தத்தை வகுத்தளித்து இந்த ஒப்பந்தத்தை எப்படி நிகழ்த்துதல் வேண்டும் என்பதற்கும் இஸ்லாம் தெளிவான வழிகாட்டுதல்களைக் கூறியுள்ளது. இஸ்லாம் கூறும் இத்திருமண முறையானது மற்றவர்களின் திருமண முறையிலிருந்து வித்தியாசமானதாகவும், புரட்சிகர மானதாகவும், நடை முறைப்படுத்த எளிதானதாகவும், சிக்கனமானதாகவும் அமைந்துள்ளது. சமுதாயத்தில் விபச்சாரமும் ஒழுக்கக் கேடும் தோன்றுவதற்கு எந்தெந்த வாயில்கள் உள்ளனவோ அவை அனைத்தையும் அடைக்கின்ற சாதனமாகவும் அமைந்திருக்கின்றது.

குடும்பங்களையும் சமுதாயத்தையும் சீரழித்துச் சின்னாபின்னப்படுத்துகின்ற விபச்சாரம் தலையெடுப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. பெண்ணைப் பிடிக்கவில்லை, வலுக்கட்டாயமாக இந்தப் பெண்ணை என் தலைமீது கட்டி வைத்து விட்டார்கள்'' என்று சொல்லி ஆண்மகன் வேலி தாண்டிப் போகிறான். இது போலவே, எனக்குப் பிடிக்காத மணமகனுக்குப் பெற்றோர் வற்புறுத்தி வாழ்க்கைப்படுத்தி வைத்து விட்டார்கள்'' என்று அங்கலாய்த்திடும் பெண்கள் சிலரும், பிடித்தவனோடு கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக் கொள்கின்றனர். எனவேதான், இஸ்லாம் மணமகனும், மணமகளும், திருமணத்திற்கு முன்னரே ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக் கட்டடையிடுகின்றது.

முகீரா பின் ஷுஅபா(ரலி) அவர்கள், ஒரு பெண்ணை மணம் பேசினார். அவரிடம் நபி(ஸல்) அவர்கள் அப்பெண்ணைப் பார்த்துக் கொள்; ஏனெனில் அவ்வாறு பார்ப்பது உங்கள் இருவருக்குமிடையே அன்பை ஏற்படுத்த ஏற்றதாக இருக்கும் எனக் கூறினார்கள். முகீரா(ரலி) அவர்களே அறிவித்திடும் இந்த நபிமொழி அஹ்மத், திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா முதலிய நூல்களில் இடம் பெற்றுள்ளது.

இதுபோலவே பெண்ணின் சம்மதம் பெற்ற பின்னரே திருமணம் நிகழ்த்தப்பட வேண்டும் என்பதிலும் இஸ்லாம் கண்டிப்பான நிபந்தனை விதித்துள்ளது. கன்ஸா பின்த் கிதாம்(ரலி) என்ற பெண்மணியை, இப்பெண்ணின் சம்மதம் பெறாமலே இவருடைய தந்தை மணமுடித்து வைத்து விட்டார். இதை விரும்பாத அப்பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இதைத் தெரிவித்தபோது, இத்திருமணத்தை நபி(ஸல்) அவர்கள் ரத்து செய்தார்கள். இந்த நபிமொழி புகாரி, அஹ்மத், அபூதாவூத் போன்ற பல நூல்களில் இடம் பெற்றுள்ளது.

எனவே, மணமுடிக்கக் காத்திருக்கும் ஆணும் பெண்ணும், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்ட பின்னர், முழு சம்மதத்துடன் மணம் செய்து கொள்வார்களாயின், அங்குக் குடும்பத்தில் அமைதி நிலவும், பிணக்குகள் குறையும், தடம் புரளும் வாய்ப்புகள் தடை செய்யப்படும்.

நல்லதொரு குடும்ப அமைப்பினை வார்த்தெடுப்பதற்காக இஸ்லாம் கூறிடும் திருமண முன் நிபந்தனைகள் ஒவ்வொன்றும் மனித சமுதாயத்தில் கண்ணும் கருத்துமாகப் பின்பற்றபடுமானால், குடும்பம் அமைதிப் பூங்காவாகத் திகழும் என்பதில் ஐயமில்லை.

மணம் முடிக்கக் காத்திருக்கும் ஆணுக்கோ பெண்ணுக்கோ இல்வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது இன்று பலவிதமான அளவுகோல்கள் கவனத்தில் கொள்ளப்படுகின்றன. பணம், பதவி, குலம், கோத்திரம், அழகு, பகட்டு, படாடோபம் இவைகளை முன்னிறுத்தி இந்த உலகத்துப் பலாபலன்களின் அடிப்படையிலேயே துணைவர்களைப் பெரிதும் தேர்ந்தெடுக்கின்றனர். இறையச்சமும் நன்னடத்தையும் கொண்ட மணமகனையோ, மணமகளையோ தேர்ந்தெடுப்பதில் பெற்றோர்கள் அதிகக் கவனம் எடுத்துக் கொள்வதில்லை. உலக வாழ்வின் சுகபோகங்களை மட்டுமே பெரிதாகக் கருதித் திருமணத் துணைகளைத் தேர்ந்தெடுத்ததன் விளைவுதான் என்ன?
குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாசமாகவும் நேசமாகவும் இருப்பர், திடீரென வீட்டிற்குப் புதிய மருமகள் வருகிறாள். குடும்ப உறவுகள் சீர்கெடத் தொடங்குகின்றன. மாமியார் மருமகள் விரிசலில் தொடங்கி, பலவகையான குடும்பப் பிணக்குகள் ஏற்படுகின்றன. குடும்பம் இரண்டு படுகின்றது. இதுபோலவே புதிய மருமகன் வரவால் முதுகொடிந்து போன மாமனார்களும் நொடிந்து போன குடும்பங்களும் ஏராளம் ஏராளம் இருக்கக் காண்கிறோம்.எனவேதான், மணமகளைத் தேர்வு செய்யும் போது நன்னடத்தையுடைய பெண்ணைத் தேர்வு செய்து வெற்றியடைந்து கொள்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் அருளிச் சென்றார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

பெண்ணையோ ஆணையோ தேர்வு செய்யும்போது நன்னடத்தையை மிக முக்கியமாகக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும். அப்போதுதான் இவ்வுலக வாழ்விலும், மறுவுலக வார்ழ்விலும் வெற்றியைப் பெற முடியும். நன்னடத்தையற்ற துணைவியைத் தேர்ந்தெடுப்பதனால் திருமண வாழ்வு தோல்வியையே தழுவும் என்பதையும் இதனால் உணர முடிகின்றது. அதுமட்டுமின்றி, முழுக் குடும்பத்தினரின் நிம்மதியும் இதனால் பறிபோகின்றது. கணவன் அல்லது மனைவியின் தன்மானம், சுயமரியாதை முதலியவற்றிற்கும் இது இழுக்கினை ஏற்படுத்துகின்றது. இறையச்சமும் நன்னடத்தையும் உள்ள துணையைத் தேர்ந்தெடுத்திருப் போமானால் இத்தீய விளைவுகளைத் தடுத்திருக்கலாமன்றோ?

கணவனை இழந்த விதவைப் பெண்கள் மறுமணம் செய்து கொள்வதைப் பல்வேறு மதங்கள் தடை செய்துள்ளன. இந்தத் தடை காரணமாக மாற்று மதத்தைச் சேர்ந்த இளம் வயது விதவைப் பெண்கள் பலர் மறுமணம் மறுக்கப்பட்ட நிலையில், தங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த இயலாமல் தவறான வழிகளை மேற்கொண்டு விடுகின்றனர். விபச்சாரத்தை உருவாக்கும் சமூகக் காரணங்களில் இதுவும் ஒன்றாகும். இஸ்லாம் இதற்கு அழகிய தீர்வினை வழங்குகின்றது.

கணவனை இழந்த விதவைப் பெண்களுக்கு மறுமணம் செய்திடும் உரிமையை இஸ்லாம் 1420 ஆண்டுகளுக்கு முன்னரே வழங்கியிருக்கின்றது, வேறு எந்த மதவாதிகளோ, சமுதாயச் சீர்தித்தவாதிகளோ இதுபற்றிச் சிந்தித்துக்கூடப் பார்த்திராத காலகட்டத்தில், நபி(ஸல்) அவர்கள் விதவை மணத்தைச் செயல்படுத்திக் காட்டியிருக்கின்றார்கள், விதவை மணம் குறித்த நபிமொழி ஒன்று இதோ:
கன்னிப் பெண்ணாயினும் , விதவையாயினும் திருமணத்திற்காகச் சம்மதம் பெறுவது மிகவும் அவசியமாகும். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

நிம்மதியும் மகிழ்ச்சியும் பூத்துக் குலுங்குவதே இனிய குடும்பமாகும். இந்த மகிழ்ச்சிக்கு ஊறுவிளைவிக்கின்ற நெருஞ்சிமுள்ளாக ஒழுக்கக்கேடு அமைந்து விடுகின்றது. எனவேதான் ஒழுக்கக் கேட்டிற்குக் கொஞ்சமும் இடமளித்து விடாத வகையில் இஸ்லாம் திருமண முறைகளை வழிவகுத்துக் கூறகின்றது.

ஆணும் பெண்ணும் முழு மனதோடு சம்மதித்துக்கொண்டு, அவர்களாகவே இரகசியமாகத் திருமணம் செய்து கொள்ள முடியுமா என்றால், இஸ்லாம் இதனைத் தடை செய்கின்றது. இந்த இரகசியத் திருமணத்தைச் செய்துவிட்டுக் கணவன் ஒருவன் மனைவியை வஞ்சகமாக எளிதில் ஏமாற்றி விட முடியும், இப்படி நட்டாற்றில் விடப்பட்ட பெண்கள் வேறு வழி ஏதும் தெரியாமல் சமூக விரோதிகளின் பிடியில் சிக்கி விபச்சாரத்தின் பால் சென்று விடுவதையும் காண்கிறோம். எனவே மணமகளின் பொறுப்பாளர் ஒருவர் முன்னிலையில்தான் திருமணம் நிறைவேற்றப் பட வேண்டும் என இஸ்லாம் இயம்புகின்றது.

பொறுப்பாளர் இன்றித் திருமணம் கிடையாது என்பது நபிமொழியாகும் அறிவிப்பவர்: அபூ மூஸா(ரலி) நூல்: திர்மிதீ, இப்னு மாஜா

திருமணத்திற்குப் பின் குடும்ப உறவில் ஏதேனும் பிணக்கு உருவாகுமானல் அதனைச் சீர்செய்திட இப்பொறுப்பாளர்கள் பணி பெரிதும் துணை நிற்கும்.

பெண்ணினத்தின் சாபக்கேடாகத் திகழம் ஒரு மாபெரும் குடும்பப் பிரச்சனையாகவும் சமூகக்கேடாகவும் வரதட்சணை என்னும் இன்னொரு கொடுமை உலவி வருகின்றது. வரதட்சணைக் கொடுமை காரணமாகவே கருவிலேயும், பிறந்த பின்னரும் பெண் சிசுக்கள் கொல்லப்படுகின்ற கோரத்தைக் காண்கின்றோம். வரதட்சணை கொடுக்க வழியில்லாத ஏழைப்பெண்கள் முதிர் கன்னிகளாகி மன அழுத்த நோய்களுக்கு ஆளாகிப் போகின்றனர். இன்னும் சிலர் திருமண வாழ்வு வழங்கப்படாத காரணத்தினால் தவறான வழிகளில் ஈடுபட்டுப் பொங்கிவரும் உணர்வலைகளுக்குத் தவறான வடிகால்களைத் தேடிக் கொள்கின்றனர். வேறு சிலரோ தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்கின்றனர்.

திருமணமாகும் முன்னர் மட்டுமின்றி, திருமணமான பின்னரும் இந்த வரதட்சணை காரணமாக மணப் பெண்ணுக்குப் புகுந்த வீட்டில் இழைக்கப்படும் கொடுமைகளை நாம் அன்றாடம் கண்டும், கேட்டும் வருகின்றோம். குடும்பங்களில் எரிமலைகள், சசூறாவளிகள், பூகம்பங்கள், கொந்தளிப்புக்களை ஏற்படுத்தும் இந்த வரதட்சணைப் பிசாசுக்கு இஸ்லாத்தில் மட்டுமே தீர்வு காண முடியும்.

பெண்ணிடமிருந்து வரதட்சணை வாங்காதே என்று மனிதச் சட்டங்கள் சொல்கின்றன,. ஆனால் இஸ்லாமோ, பெண்களுக்கு அவர்களின் தொகையை மனமுவந்து வழங்கிவிடுங்கள் என்று கட்டளை போடுகின்றது. அல் குர்ஆன் 4:4

மணமகனிடமிருந்து மணமகள் ஒருத்தி எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கோரிப் பெறுகின்ற உரிமையை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது. வரதட்சணை கொடுப்பதற்கு வழியில்லாத நிலையில் வறுமையைக் காரணம் காட்டிப் பெண்கள் திருமண வாய்ப்பினை இழந்து போகக் கூடாது என்பதற்காக இஸ்லாம் மஹர்'' என்னும் மணக் கொடையை ஆண்களுக்குக் கட்டாயக் கடமையாக விதித்துள்ளது.

இவ்வாறாகத் திருமணநடைமுறையை இஸ்லாம் அறிவுபூர்வமாகவும் எளிமையானதாகவும் ஆக்கியுள்ளது. திருமணங்களைக் குறைந்த செலவில் நடத்திக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். லட்சக் கணக்கிலும், கோடிக் கணக்கிலும் செலவு செய்து படாடோபமாகத் திருமணம் செய்வதை வீண் விரயம் எனக் கண்டிக்கிறது இஸ்லாம் குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிகம் பரக்கத் - அபிவிருத்தி நிறைந்ததாகும் என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: அஹ்மத்

எந்தச் சமுதாயத்தில் திருமணம் ஒரு பளுவான காரியமாக ஆக்கப்படு கின்றதோ அந்தச் சமுதாயத்தில் விபச்சாரம் தாரளமயமான ஒரு செயலாக ஆகிவிடும். எனவே, அப்படிப்பட்ட ஒரு சமுதாயத் தீங்கு தலையெடுத்து விடக் கூடாது என்பதில் இஸ்லாம் கண்ணும் கருத்துமாக இருக்கின்றது.

குடும்ப இயலையும், சமுதாய இயலையும் சீர்படுத்துவதற்கும், செம்மைப் படுத்துவதற்கும் இஸ்லாம் மட்டுமே அருமருந்து தருகின்றது. நல்லதொரு அழகிய அமைதியான குடும்பம் பூத்துக் குலுங்குவதற்காக இஸ்லாம் விதையூன்றி உரமும், நீரும் வார்க்கின்றது. அது மட்டுமின்றி, குடும்ப விருட்சத்தை அரித்துச் சிதைத்திடும் எல்லாவிதமான நச்சுப்பூச்சிகளைக் களைவதற்கும் அருமையான வழிமுறைகளை இஸ்லாம் அன்றே இனம் காட்டியுள்ளது.

இங்ஙனம் இஸ்லாம் வகுத்துக் காட்டும் குடும்ப அமைப்பின் நுழைவாயிலான திருமண முறைகள் மனித இயல்புக்கு முற்றிலும் ஏற்ற வகையிலும் சிரமம் இன்றி நடைமுறைப் படுத்தத் தக்கதாகவும் அமைந்திருக்கின்றன. ஆனால் மனிதர்கள் அவர்களாகவே ஏற்படுத்திக் கொண்ட புதிய புதிய சிரமங்களின் காரணமாகவே இன்று பல்வேறு சடங்கு சம்பிரதாயங்கள் மிகப்பெரும் சுமைகளாகத் திருமணங்களில் புகுந்து கொண்டன. எனவே, இன்று திருமணம் என்பது, அதுவும் பெண் வீட்டார் நிலை என்பது ஒரு மலையைப் பெயர்ப்பது போன்ற காரியமாக ஆகிவிட்டது. இத்தகைய ஒரு பளுவை இஸ்லாம் ஒருபோதும் மனிதன் மீது சுமத்தவே இல்லை.

தீங்கு வந்து உங்களை அடைவதெல்லாம் அது உங்கள் கரங்கள் சம்பாதித்த காரணத்தால்தான் (42:30) என்ற திருமறை வரிகளுக்கேற்ப, மனிதன் தனது செயல் களாலேயே திருமண முறைகளைக் கடினமானதாக ஆக்கிக் கொண்டு விட்டான்.

எனவே, இஸ்லாமியத் திருமணம் மிக மிக எளிதானதாகும். திருமணத்தின் பயனாகப் புலனின்பம் நெறிப்படுத்தப்படுகிறது. நல்லொழுக்கம் நிலை நாட்டபடு கின்றது. கணவன் மனைவியருக்கிடையே பரிவும் பாசமும் பரிமளிக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக மனிதஇனம் அபிவிருத்தி செய்யப்படுகின்றது. இன விருத்தி என்னும் நன்மக்கள் பேற்றுக்குத் திருமணம் நேரிய பாதையை அமைத்துக் கொடுக்கின்றது.

திருமண உறவின் மூலமாக அன்றி, பிற முறைகளில் இன விருத்தி செய்யப்படுமானால், அதன் காரணமாக, ஒழுக்கக் கேடுகள் மலியும்; கட்டறுத்த புலனின்ப வெறி தாண்டவமாடும்; கணவன் மனைவியரிடையே நிலவும் உறவுகள் சீர்கெடும்; தாய், தந்தை, பிள்ளைகள் என்கிற குடும்பப் பிணைப்புகள் தகர்த்தெறியப்படும்; சமுதாய அரங்கின் அடித்தளமாகச் செயல்படும் குடும்பம் என்னும் அமைப்பே ஆட்டம் கண்டு விடும். குழந்தைகளைப் படியெடுக்கும் குளோனிங் போன்ற நவீன கண்டு பிடிப்புகளால் இத்தகைய அபாயங்கள் நேரும் வாய்ப்புகள் உள்ளன.

இஸ்லாம் சொல்லித்தருவது போன்ற மிக எளிமமையான திருமண முறைகள் உலகில் வேறு எந்தச் சித்தாந்தங்களிலும் சொல்லப்பட்டது கிடையாது. இஸ்லாமியத் திருமணம் எளிமையானது அதே வேளையில் அத்திருமணம் வாயிலாக கணவன் மனைவி கொள்ளும் உறவு வலுவானதாகும். இத்திருமண ஒப்பந்தத்தை உறுதியான உடன்படிக்கை என்று திருமறை குர்ஆன் திடப்படுத்தியுள்ளது (4:21) என்றாலும் இந்த உடன்படிக்கையைத் தொடர்ந்திட முடியாத அசாதாரண நிலை ஏற்படுமாயின் அதற்குரிய தீர்வு என்ன என்பதற்கும் உலகியல் நடைமுறைகளுக்கு ஏற்ற வகையில் இஸ்லாம் வழி வகை செய்துள்ளது.

திருமண முறையும் குடும்ப அமைப்பும் மேலை நாடுகளில் ஒரு விதமாகவும் கீழை நாடுகளில் இன்னொரு விதமாகவும் அமைந்திருக்கக் காண்கிறோம். அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் திருமண உறவு பற்றி யாரும் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ளுவதில்லை. காலையில் திருமணம், மாலையில் விவாகரத்து என்பதெல்லாம் அந்த மக்களிடம் சகஜமாகப் போய் விட்டன. கணவன் எத்தனைப் பெண்களுடனும் எப்படி வேண்டுமானாலும் பழகிக் கொள்ளலாம். மனைவி எத்தனை ஆண்களுடன் வேண்டுமானாலும் உறவு கொண்டாடிக் கொள்ளலாம். இவையெல்லாம் நாகரிக முதிர்ச்சியின் அடையாளங்கள் என மேனாட்டார் கருதுகின்றனர்

இதே வேளையில் இந்தியா போன்ற கீழை நாடுகளின் நிலையோ வேறு மாதிரியாக இருக்கின்றது. கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்; திருமணம் சொர்க்கத்தில நிச்சயிக்கப்படுகிறது, அது ஒரு தெய்வீக பந்தம்; கணவனும் மனைவியுமாக அப்படியே வாழ்ந்து முடித்து விடவேண்டும்; கணவன் மரணம டைந்து விட்டால் இளவயது மனைவியாக இருந்தாலும் அவள் மறுமணம் செய்து கொள்ளுதல் கூடாது, கணவனுடைய சிதையிலேயே அவளை உடன்கட்டை ஏற்றிச் சகாடிக்க வேண்டும், அப்படியே அவள் உயிர்வாழ்ந்தால் கூட உலகின் சுகபோகங்களை விட்டும் அவள் ஒதுங்கியிருத்தல் வேண்டும், அவள் சமுதாயத்தினால் ஒரு தீய சகுனமாகக் கருதப்பட்டு; விரும்பத்தகாத நடைபிண மாகவே நடத்தப்படுவாள். மண விலக்கு, மறுமணம் என்பதெல்லாம் இந்த மக்களுக்குப் புத்தம் புதிய சமாச்சாரங்களாகவே இருந்து வருகின்றன.

ஆனால் இஸ்லாம் மேனாட்டுச் சித்தாந்தங்கள் போன்று ஒரேயடியாக நெகிழ்த்து விட்ட நிலையையோ, கீழை நாட்டுச் சித்தாந்தங்கள் போன்று ஒரேயடியாக இறுக்கிப் பிடிக்கின்ற நிலையையோ மேற்கொள்ளவில்லை, மாறாக 1420 ஆண்டுகளுக்கு முன்பே இஸ்லாம் வகுத்துள்ள குடும்பவியலில் ஒரு சமன்பாடு மிக்க நடுநிலைப் போக்கு ஒளிவிடக் காண்கிறோம்.

ஆண் பெண் திருமண உறவை ஓர் இறுக்கமான ஒப்பந்தம் என்றும், இதனை நிறைவேற்றுவதில் ஒவ்வொருவரும் இறைவளை அஞ்சி நடந்து கொள்ள வேண்டும் என்றும் இறைமறை கட்டளையிடுகின்றது, அதே நேரத்தில ஒரு கணவனோ, மனைவியோ தம் துணையுடன் தொடர்ந்து வாழ முடியாத அளவுக்குத் தீராத் துன்பங்களுக்கும் முடிவில்லா மனஉளைச்சல்களுக்கும் ஆளாகின்றனர் என்றிருக்கு மாயின், அவர்கள் ஒருவரை விட்டும் ஒருவர் பிரிந்து மண விலக்குப் பெற்றுக் கொண்டு சுமுகமான முறையில் விலகிச் செல்வதற்கும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது.

திருமணத்தினால் கணவன் மனைவியருக்குக் கிடைக்க வேண்டிய பரஸ்பர அன்பும் பரிவும் பாசமும் நிம்மதியும் பாழ்பட்டு, குடும்பத்தின் கட்டுக்கோப்பு குலைந்துவிடும் நிலை ஏற்படுமாயின் பல்வேறு சமாதான ஏற்பாடுகளும் செய்யப்படுதல் வேண்டும், திருமணத்திற்குப் பொறுப்பாளராக இருந்தவரும், சாட்சிகளாகச் செயல்பட்டவர்களும், பிறரும் இந்தத் திருமண உடன்படிக்கையைத் தக்கவைப்பதற்காகப் பல வழிகளிலும் முனைந்து பாடுபடுவர்.

அந்தத் தம்பதியர் பிரிந்து வாழ்வதால் மட்டுமே அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும் என்ற தவிர்க்க முடியாத நிலை ஏற்படும்போது, ஆகக் கடைசி பட்சமாகத் திருமண உடன்படிக்கையிலிருந்து அத்தம்பதியினர் விலகிக் கொள்கின்றனர்.

அல்லாஹ்வின்பால், அனுமதியளிக்கப்பட்டுள்ள எல்லாக் காரியங்களிலும் மிக மிக வெறுக்கத் தக்கதாயிருப்பது தலாக் என்னும் மணவிலக்கேயாகும். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: அபூதாவூத்

கணவன் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் சரி அவனையே கட்டிக்கொண்டு காலமெல்லாம் மனைவி கஷ்டப்படவேண்டும் என்றோ, மனைவியின் மாபெரும் குறைகளை எல்லாம் கணவன் தாங்கிக்கொணடு துன்பமுற வேண்டும் என்றோ இஸ்லாம் வலியுறுத்திடவில்லை, சுமக்கவியலாத துன்பங்களை யும் நெருக்கடிகளையும் தன் அடியார்கள் மீது சுமத்தி அவர்களை வாட்டி வதைக்க வேண்டும் என்று இறைவன் விரும்புவதில்லை. எனவே சில நிபந்தனைகளுக்குட் பட்டு கணவனோ மனைவியோ விவாக பந்தத்திலிருந்து விடுபட்டுக் கொள்வதற்காக இஸ்லாம் வழிவகைகளை வரையறுத்துக் கூறியுள்ளது.

மனித குலம் அபிவிருத்திச் செய்யப்படுவதற்குத் திருமணம் நேரிய பாதையை அமைத்துத் தருகின்றது.
தனக்குப் பின் தன்னுடைய வாரிசுகளை இந்த உலகத்திற்கு விட்டுச் செல்வதற்கு மனிதன் மிகவும் ஆசைப்படுகின்றான். அத்தகைய சந்ததியினரைப் பெற்றிருக்கவில்லை என்றால் மனிதனுக்கு அதுபோலக் கவலையளிப்பது வேறு எதுவும் இல்லை எனலாம். திருமணம் முடித்தத் தம்பதிகளிடம், மணம் முடித்த மறு ஆண்டிலேயே சமுதாயம் சந்ததிகளை எதிர்பார்த்து விசாரணைகளைத் தொடுப்பதை நாம் அன்றாடம் சந்தித்து வருகின்றோம். திருமறை குர்ஆனும் திருமணம் வாயிலாக மனித இனம் பல்கிப் பெருகுதலை எடுத்தோதுகின்றது.

மனிதர்களே! உங்கள் இரட்சகனை அஞ்சிக் கொள்ளுங்கள். அவன் உங்கள் யாவரையும் ஒரே மனிதரிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர், இவ்விருவரிலிருந்து அனேக ஆண்களையும் பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தத்தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். அல்குர்ஆன் 4:1

திருமணம் நிகழும் நேரங்களிலும், சமுதாயச் சொற்பொழிவுகளிலும் இந்த இறைவசனம் நீங்காது இடம் பெறுதலுண்டு. குடும்ப, சமுதாய உறவு நிலைகள் குறித்து இங்கு இறைவன் மிக ஆழமான கருத்துக்களைப் பதித்து வைத்துள்ள மையே இதற்குக் காரணமாகும்.

இன்றைய பரந்து விரிந்த மனித சமுதாயம் என்னும் மாபெரும் விருட்சத்தின் முதல் வித்துக்கள் பற்றி இம்மறைவசனம் பறைசாற்றுகின்றது. ஆதம் - ஹவ்வா என்னும் ஆதிப் பெற்றோரின் சந்ததியர்களே உலக மக்கள் அனைவருமாவர். இந்த முதல் குடும்ப மலர் தூவிய மகரந்தங்களே முழு மனித சமுதாயமுமாகும். குடும்பம் சமுதாயத்திற்கு ஆணிவேராகத் திகழுவதையும், சமுதாய வலை குடும்ப இழைகளால் பின்னப்படுவதையும், இறைவன் இவ்வசனத்தில அழகாகவும், தெளிவாகவும் உணர்த்திக் காட்டுகின்றான்.

திருமணத்தின் தலையாய நோக்கமாகிய இனவிருத்தியைக் கூறுவதோடு, குடும்ப உறுப்பினர்களும், சமுதாயத்தவர்களும் தங்களுக்குள் பரஸ்பரம் ஒருவருக் கொருவர் உதவிக் கொள்ளுதல் வேண்டும் என்பது பற்றியும் இங்கு இறைவன் எடுத்துரைத்துள்ளான்.

மனித சமுதாயத்தின் உயிர் நாடியான இயக்கமே, பரஸ்பரம் உதவிக் கொள்ளுவதில்தான் உறைந்திருக்கின்றது. சொல்லப் போனால் திருமணம் என்பதும், இதன் வாயிலாக உருவாகும் குடும்பம் என்பதும் இத்தகைய பரஸ்பர உதவிக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சமுதாயத் தேவையே ஆகும், எந்தத் தனி மனிதனாலும் தன்னுடைய சுகபோகங்களையும், வாழ்க்கைத் தேவைகளையும் தானே தனி மனிதனாக நின்று நிறைவேற்றிக் கொள்ள முடிவதில்லை. தம்முடைய உடல் பொருள் உயிர்த் தாகங்களைத் தணித்துக் கொள்ளுவதற்காக தம்மையொத்த பிற மனிதர்களிடம் ஒருவரோடு ஒருவர் உறவு பாராட்டி; கொண்டும், கொடுத்தும் வாழ்வதற்கேற்ற நிலையில் தான் மனித சமுதாயத்தை இறைவன் படைத்துள்ளான்.

அப்படிப் பரஸ்பரத் தேவைகளைக் கோரும் போது மனிதன் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் மேலே கண்ட இறைவசனம் விடை தருகின்றது. தனக்குரிய துணைவனை அல்லது துணைவியைத் தேர்ந்தெடுத்தல் என்பது மனிதத் தேவைகளுள் பிரத்தியேகமான இடத்தை வகிக்கின்றது. அப்படித் தேர்ந்தெடுத்து, கணவன் மனைவியாகத் திருமணம் செய்து கொள்ளுதல் தொடங்கி, பிற குடும்ப, சமுதாயத் தேவைகள் அனைத்தையும் இறைவனைக் கொண்டே கேட்டுப் பெற்றுக் கொள்ளுதல் வேண்டும் எனவும் இவ் இறைவசனம் வலியுறுத்திக் கூறுகின்றது

இரத்தக் கலப்புடைய குடும்ப உறவினர்களிடம் எப்படிப் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் தெளிவுபடுத்தியுள்ளது. இறைக்கட்டளைக்கு மாற்றமாக நடந்து கொள்ளுமளவுக்கு ஒருவரது குடும்பப் பாசம் மிகைத்து விடக்கூடாது, இவ்விஷயத்தில் மன உறுதியோடு இறைவனை அஞ்சி நடந்து கொள்ளுதல் வேண்டும். மீறிச் செயல்படுவோரை இறைவன் கண்காணித்தவண்ணம் இருக்கின்றான் என்றெல்லாம் இவ்வசனத்தில் எச்சரிக்கையும் விடப்படுகின்றது.


திருமணமும் ஓர் அடிப்படைத் தேவையே

குடும்பம் என்ற ஒன்று மனிதனுக்கு மிகவும் அத்தியாவசியமாகத் தேவைப் படுவதாகும். உணவு, உடை, உறையுள் அல்லது தங்குமிடம் ஆகிய மூன்றும் மனிதனுடைய அடிப்படைத் தேவைகளாக எங்ஙனம் அமைந்துள்ளனவேர் அதுபோலவே குடும்பம் என்னும் அமைப்புக்குள்ளே வாழ வேண்டியதும் மனிதனுடைய அத்தியாவசியத் தேவை என்றே சொல்லலாம்.

எனவே தான், அடிப்படை மனிதத் தேவைகளான உணவு, உடை, உறையுள் ஆகிய இம்மூன்றோடும் ஆண், பெண் குடும்ப வாழ்க்கையைத் தொடர்புபடுத்தித் இறைவேதமான அல்குர்ஆன் அழகிய உவமைகளுடன் இதனை நமக்கு விளக்கியுரைத்துள்ளது.

மனித வாழ்வின் முதல் அடிப்படைத் தேவையான உணவுக்கு வருவோம். மனிதனுடைய வயிற்றுப் பசிக்கு உணவு தேவைப்படுவது போலவே, அவனது இன்ப நுகர்வுக்கும் தேவைகள் இருக்கின்றன. இத்தேவைகளும் நிறைவு செய்யப்படுதல் வேண்டும். எனவேதான் திருமறை குர்ஆன் குடும்ப அமைப்பின் முக்கியப்பங்குதாரராகிய மனைவியைப் பற்றிக் குறிப்பிடும்போது, உங்கள் மனைவியர் உங்களுக்கு விளை நிலங்கள் ஆவார்கள் (2:223) என உவமித்துக் கூறியுள்ளது.

இஸ்லாம் பெண்ணுக்கு எத்தகைய உயர்வையளித்துள்ளது என்பதும், இதிலிருந்து தெரிய வருகிறது. மனிதன் என்னதான் கம்ப்யூட்டர் யுகத்தோடு கட்டிப் புரண்டு கொண்டிருந்தாலும், அவனது வயிற்றுப்பசி தணிப்பதற்கு உழவுத்தொழி லைச் சார்ந்துதான் ஆக வேண்டும். உழவுத் தொழிலுக்கு நிலைக்களமாக இருப்பது நிலம். இந்த நிலமும் நிலம் கொண்ட நீரும் இன்ன பிற தாதுக்களும் இல்லையேல் உணவு உற்பத்தி நிகழவியலாது. பெண்ணை விளைநிலத்திற்கு உவமைப்படுத்தியதன் வாயிலாக, மனித வாழ்க்கைக்கு, பெண் எந்த அளவுக்கு அச்சாணியாகத் திகழ்கிறாள் என்பதைத் தெரிய முடிகிறது.

இத்தகைய உயர்வும் உன்னதமும் ஆக்கத் திறனும் கொண்ட பெண்ணினத்தை எப்படிப் பேணிப் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்பதையும் இந்த வசனத்திலிருந்து விளங்கிக் கொள்கிறோம். விளைநிலத்தைப் பண்படுத்தி, விதையூன்றி உரமிட்டு, நீர் வார்த்து, எப்படிக் கண்ணும் கருத்துமாகப் பராமரிக்கிறோமோ அதுபோலப் பெண்ணினத்தையும் பராமரித்திடுதல் வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக விளைச்சல் நிலத்தை வேலியிட்டுக் காவலிட்டுப் பாதுகாக்க வேண்டியது எவ்வளவு முக்கியமோ, அதுபோன்று பெண்களின் அழகும் அலங்காரமும் பிற ஆடவர்களின் கழுகுப் பார்வையிலிருந்து பாதுகாக்கப்படல் வேண்டும் என்பதையும் இவ்வசனம் குறிப்பாக உணர்த்தி நிற்கின்றது.

கணவன்,  மனைவியராகிய இல்வாழ்க்கை விளை நிலத்திலிருந்துதான் குடும்பப் பயிர் செழித்து வளர முடியும். பெண்ணை விளைநிலம் என்று திருமறை குர்ஆன் குறிப்பிட்டுள்ளமை இங்குச் சிந்திப்பதற்குரியது.  ஹர்ஸுன்' என்ற இறைமொழிக்கு விளைநிலம் எனப்பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஏர் கொண்டு உழுவதற்குரிய நிலம் எனவும் இச்சொல் விரிந்த நிலையில் பொருள் பயக்கின்றது.

ஏரைக் கொண்டு நிலத்தைக் கிளறி விதையூன்றுவதன் முலம் ஒரு போகம், இருபோகம், முப்போகம் எனப் பல போகங்களை அறுவடை செய்து மகிழ்கிறான் விவசாயி. அதுபோல் ஆண்கள் மனைவியரிடம் விரும்பவுது போல் சுகம் அனுபவித்து மக்கள் செல்வங்களை அறுவடை செய்து கொள்கின்றனர்.

இப்படிப்பட்ட பல்வேறு குடும்ப விவசாயங்களின் அமோக விளைச்சல்களி னால் சமுதாயப் பயிர் செழித் தோங்கி வளர்கின்றது. ஆக, சமுதாயப் பயிர் செழிக்கும் விளை நிலங்களாகத் திகழ்பவர்கள் பெண்களே என்பதைத் திருமறை குர்ஆன் தீர்க்கமாக இயம்பியுள்ளது.

மனிதனுடைய உயிர்வாழ்வுக்கு முதல் தேவை உணவு எனக் கண்டோம். மனிதனைப் போலவே விலங்கினங் களுக்கும், ஏனைய உயிரினங்களுக்கும் உணவு அடிப்படைத் தேவையாக இருக்கின்றது. ஆனால் வேறு எந்த உயிரினத்துக்கும் இல்லாத, மனித இனத்துக்கு மட்டுமே உரிய இன்னொரு அவசியத் தேவையாக உடை இருக்கக் காண்கிறோம்.

குடும்ப அமைப்பிற்கு இந்த உடையை உவமையாகப் போர்த்துகின்றான் இறைவன்
(பெண்களாகிய) அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் (ஆண்களாகிய) நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். அல்குர்ஆன் 2:187

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் எந்த அளவுக்குப் பரஸ்பர நம்பிக்கையுடனும் புரிதலுணர்வுடனும் பகிர்வுடனும் நடந்து கொள்ள வேண்டும் என்பதனை இதைவிட நாகரிகமாகவும் சிறப்பாகவும் வேறு எப்படியும் கூற முடியாது.

ஆள்பாதி, ஆடை பாதி; ஆடையில்லா மனிதன் அரை மனிதன்; ஆடையின் மகிமை அணிபவரைப் பொறுத்தது என்றெல்லாம் பழமொழிகள் வழங்கப் படுகின்றன. கணவனுக்கு மனைவியும், மனைவிக்குக் கணவனும் ஆடை போன்றவர்கள் எனும்போது, இந்த ஆடையை அணிந்து கொள்ளும் போதுதான் அவர்கள் முழுமை பெறுகிறார்கள் என்பதையும் புரிந்து கொள்கிறோம்.

மனிதனுடைய உடலோடு ஆடை எப்படி ஒட்டி உறவாடுகிறதோ அதுபோல, கணவன் மனைவியருடைய ஒட்டுறுவு உடலளவிலும் உள்ளத்தளவிலும் ஒருங்கினணந்து அமைதல் வேண்டும். மனிதனின் மானத்தை மறைப்பது ஆடை; அவனுக்கு அழகையும் அந்தஸ்தையும் தருவது ஆடை; தட்ப வெப்ப நிலைகளின் பாதிப்பிலிருந்து மனிதனைக் காப்பது ஆடை.

கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இந்த ஆடை போன்றுதான் நடந்து கொள்ள வேண்டும் என்பதை இவ்வசனம் சுட்டிக் காட்டுகிறது. குடும்பமாக இணைந்து வாழும் போது ஒருவருடைய குறைகளை மற்றொருவர் வெளிப்படுத்தாமல் மறைத்துக் கொள்ளுதல் வேண்டும்.

ஆடை எப்படி அணிபவருக்கு அழகையும், கண்ணியத்தையும் தருகிறதோ அதுபோல் கணவனது கண்ணியத்தை மனைவியும் மனைவியின் மகிமைகளைக் கணவனும் மிகுவித்துக் காட்டுதல் வேண்டும். குளிரின் நடுக்கத்திலிருந்து ஆடை மனிதனைக் காப்பது போல, குடும்பத்தில் துன்பங்களும், துயரங்களும் சசூழும் போது கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் அரவணைத்துப் பாதுகாப்பதில் முனைந்திடுதல் வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் முதல் இறைவெளிப்பாட்டினைப் பெற்று அஞ்சி நடுங்கியபோது, அவர்களது அருமைத் துணைவியார் கதீஜா நாயகி அவர்கள் பெருமானாருக்குக் கம்பளி ஆடை போர்த்தி ஆறுதல் படுத்தினார்கள். தாமே ஒரு பெண்ணாடையாக இருந்து பெருமானாரை அரவணைத்தது மட்டுமன்றி, பெருமானாரின் பேரியல்புகளுக்குப் பொன்னாடை சசூட்டுவது போல அவர்களைப் போற்றிக் காத்து நின்றார்கள்.

ஒருவருக்கொருவர் ஆடை என்ற இத்திருமறை உவமையின் வாயிலாகக் கணவனும் மனைவியும் சம அந்தஸ்துக்குரியவர்கள் என்பதும் காட்டப்படுகின்றது. ஆண், பெண் ஆகியோருக்கிடையே உயர்வு தாழ்வு என்பது கிடையாது, இருந்த போதிலும் அவரவரின் உடல்கூறு இயல்புகளைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் அவரவருக்கென சில பிரத்தியேகமான பொறுபுக்களை முதன்மைப் படுத்திக் கூறியுள்ளது.

கணவன், மனைவி குடும்ப உறவுக்குள் நிலவும் சின்னச் சின்ன குற்றங்களை மறைத்துக் கொண்டு ஒரு முன் மாதிரிக் குடும்பமாகத் தங்களை வார்த்தெடுத்துக் கொள்பவர்களே நல்ல குடும்ப அமைப்புக்குரியவராவார். தனி மனிதனுடைய மானத்தை மறைப்பதோடு அவனை அலங்கரித்துக் காட்டுகின்ற பணியையும் ஆடை செய்வது போல, குடும்ப உறுப்பினர்களின் நடத்தை அமைதல் வேண்டும்.

ஆனால் சில குடும்பங்களில் என்ன நிகழ்கின்றது? கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் சின்னச் சின்ன குறைகளைக் கூடச் சகித்துக் கொள்ள முடியா தவர்களாகி விடுகின்றனர். இவற்றைப் பட்டவர்த்தனமாக்கிப் பகிரங்கப்படுத்திக் குடும்பச் சச்சரவுகளை வீதிக்குக் கொண்டு வந்து விடுகின்றனர். இதன் காரணமாகப் பாதிக்கப்படுவது தங்களது குடும்ப கவுரவமே என்பதைக் கூட எண்ணிப் பார்க்காமல் நடந்து கொள்கின்றனர்.

இப்படி அவர்களை நாலுபேர் மத்தியில் கேவலப்படுத்திச் சந்தி சிரிக்கச் செய்வதற்காக ஷைத்தான் திட்டமிட்டு சசூழ்ச்சி செய்து கொண்டே இருக்கின்றான். எனவே தக்வா' என்னும் இறையச்சமும் நல்லொழுக்கமும் உள்ளவர்களாக மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதைச் சொல்ல வந்த இடத்திலும் திருமறை குர்ஆன் ஆடை' உவமானத்தைப் பின்வருமாறு எடுத்தாளக் காண்கிறோம்.

ஆதமுடைய மக்களே! மெய்யாகவே நாம் உங்களுக்காக உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளளோம். ஆயினும் தக்வா(பயபக்தி) எனும் ஆடையே மேலானது. இது அல்லாஹ்வுடைய அடையாளங்களில் உள்ளதாகும். (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவார்களாக!

ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும் அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும் களைந்து சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல, அவன் உங்களை  (ஏமாற்றிச்) சோதனைக் குள்ளாக்க வேண்டாம். அல்குர்ஆன் 7:26,27

ஆதித் தந்தை ஆதமும் அன்னை ஹவ்வாவும் ஒருவருக்கொருவர் ஆடையாக' இருந்து நல்லதொரு குடும்பம் நடத்திய வேளையில் ஷைத்தான் அங்கே முள்ளாக முளைத்து, அவர்களுடைய தக்வா என்னும் ஆடையைக் கிழித்து, அவர்களைப் பெரும் சோதனையில் ஆழ்த்தினான். ஷைத்தானின் சசூழ்ச்சியால் உங்கள் ஆரம்பப் பெற்றோரின் குடுப்பத்திற்கு ஏற்பட்ட இதுபோன்ற நிலை உங்கள் குடும்பத்திற்கும் ஏற்பட்டு விடக் கூடாது என்று இறைவன் இவ்விடத்தில் எச்சரிக்கை விடுக்கின்றான்.

கணவன் மனைவியரடங்கிய குடும்ப அமைப்பை உணவு தரும் விளைநிலத்திற்கும் மானம் காக்கும் ஆடைக்கும் இறைவன் உவமைப்படுத்திப் பேசியதைக் கண்டோம். மனித வாழ்வின் மூன்றாவது அத்தியாவசியத் தேவையாகிய உறையுள் என்னும் தங்குமிடத்தோடும் தொடர்புபடுத்திக் குடும்ப உறவைத் திருமறை குர்ஆன் பேசியிருக்கின்றது.

மனித வாழ்வுக்குத் தங்குமிடம் அல்லது வீடு மிகவும் அவசியமாகும், மனிதன் தன் குடும்ப வாழ்க்கைக்கான உணவு , உடை, போன்ற தேவைகளைத் தேடுவதற்காக வீட்டை விட்டு வெளியேறிப் பல்வேறு சிரமங்களை மேற்கொள்கிறான். இங்ஙனம் தேடிப்பெறுவதற்காகச் சமுதாய அரங்கில் அவனுக்கு ஏற்பட்ட அலுப்பையும் களைப்பையும் போக்கிக் கொள்வதற்காக வீடு நோக்கி விரைகின்றான். கவலைகளையெல்லாம் விட்டு விடுகின்ற இடம் இதுவாகையால் இவ்விடம் வீடு எனப்பட்டது. விடு என்னும் வேர்ச்சொல்லிருந்து பிறந்த சொல்லே வீடு' ஆகும்.

வீட்டினுள்ளே குடும்பத் தலைவன் அமைதியையும் அரவணைப்பையும் எதிர்நோக்கிக் காலெடுத்து வைக்கிறான்.

அல்லாஹ் உங்களுக்கு உங்கள் வீடுகளை அமைதியளித்திடும் இடங்களாக ஆக்கினான் (16:80) எனத் திருமறை குர்ஆன் எடுத்துரைக்கின்றது.

மனிதன் அமைதி பெறுமிடம் எதுவோ அதுவே வீடாகும். மேலே கண்ட இறைவசனத்தில் ஸகனன்' என்னும் அரபிச் சொல் அமைதி தருமிடம் என்ற பொருளைத் தந்துள்ளது. திருமறை குர்ஆனில் வேறு சில இடங்களில் இந்த   ஸகனன்' என்னும் சொல்லடியாகப் பிறந்த மஸாகின்' என்னும் அரபிச் சொல் வீடு என்னும் பொருளிலேயே எடுத்தாளப்பட்டுள்ளது.

எனவே மனிதன் எங்கே தங்கியிருந்து, அங்கிருந்து பரிவையும் பாசத்தையும் மன அமைதியையும் பெறுகின்றானோ அந்த இடமே மனிதனுக்குரிய அமைதித் தளமாகிய வீடாகும். இத்தகைய பரிவு, பாசம், மன அமைதி அனைத்தையும் குடும்பத் தலைவியாகிய மனைவியோடு உறைந்திருந்து மனிதன் பெறுகிறான் என்பதையும் திருமறை பகர்ந்து நிற்கின்றது.

கணவனும் மனைவியும் கொள்கின்ற குடும்ப உறவினைக் கூடல் என்றும் தமிழில் வழங்குவர். இந்தப் பொருளைத் தருகின்ற விதத்திலும் ஸகனன்' என்னும் சொல்லின் பல்வேறு வடிவங்கள் திருமறை குர்ஆனில் எடுத்தாளப்பட்டுள்ளன.

(இறைவனாகிய) அவன் உங்களிலிருந்தே உங்களுக்காக மனைவியரைப் படைத்தான். நீங்கள் அவர்களிடம் தங்கியிருந்து அமைதி பெறுகிறீர்கள். உங்களுக்கிடையே காதலையும், கருணையையும் உண்டாக்கியிருப்பது அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளதாகும் அல்குர்ஆன் 30:21

திருமறையின் 7:189 ஆம் வசனமும் இதே பாங்கில் தொடங்கி மேலும் இவ்வாறு தொடர்கிறது

அவன் அவளிடம் தங்கியிருந்து அமைதி பெறுகிறான். அவர்களின் ஒன்றிணைப்பால் அவள் இலேசான கர்ப்பவதியானாள். பின்பு அதைச் சுமந்து நடமாடிக் கொண்டிருந்தாள். பின்பு அது பளுவாகவே அவர்களிருவரும் தம் இறைவனிடம், (இறைவா!) நீ எங்களுக்கு நல்ல(குழந்)தைக் கொடுத்தால், நிச்சயமாக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருப்போம்'' என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தனர்.

நன்மக்களைப் பெறுதல் என்னும் குடும்ப வாழ்க்கையின் பயனையும் இந்த வசனம் எடுத்துக் காட்டியுள்ளது.

ஆக மனித வாழ்க்கையின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக அமைந்துள்ள உறையுள் அல்லது தங்குமிடம் என்பது குடும்ப வாழ்க்கையோடு எங்ஙனம் பின்னிப் பிணைந்து கிடக்கிறது  என்பதை இவற்றால் அறிய முடிகின்றது.

இவ்வாறாக மனிதனுடைய மூன்று அடிப்படைத் தேவைகளான உணவு தரும் விளைநிலம், மானம் காக்கும் உடை, மன அமைதி நல்கும் உறைவிடம் ஆகிய மூன்றினோடும் ஆண் பெண் உறவைத் தொடர்புபடுத்தி, குடும்ப அமைப்பின் இன்றியமையாமையை இறைவன் இயம்பியுள்ளான்.


குடும்பத்தின் பணிப்பங்கீடு

இஸ்லாம் பெண்ணினத்தைப் பெருமைப்படுத்திப் பேசியுள்ளது. ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகக் குடும்பம் என்னும் அமைப்பினுள் சேர்ந்து வாழும் போது ஒவ்வொருவரும் ஆற்றவேண்டிய தலையாய பொறுப்புக்களையும் இஸ்லாம் இயம்பியுள்ளது.

குடும்பம் என்பது வெறுமனே கணவனையும் மனைவியையும்  மட்டும் கொண்டதன்று. பச்சிளம் குழந்தைகள், சிறுவர், சிறுமியர், பருவவயதினர், தள்ளாத முதியவர்கள் எனப் பலதரப்பினரும் குடும்பத்தின் அங்கத்தினர்களாயிருக்கின்றனர். இவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பான தங்குமிடத்தை அமைத்துக் கொடுப்பதும் இவர்களுக்குரிய உணவு, உடை, கல்வி, சுகாதாரம்,  மருத்துவம் போன்ற தேவைகளை வழங்குவதும் குடும்பத் தலைவனுடைய முக்கியக் கடமையாகும்.

இதற்காகக் குடும்பத் தலைவன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று சமுதாய அரங்கில் பல்வேறு தொழில் புரிகிறான். இரவு பகலாகக் கண் துஞ்சாமல் மெய் வருத்தம் பாராமல் குடும்பத்தினருக்காத் தன்னையே தியாகம் செய்வதுபோல உழைத்துப் பாடுபடுகிறான். கடல் கடந்து,  நாடுகள் கடந்து சென்று பல்வேறு சிரமங்களை மேற்கொள்கின்றான். இப்படிப் பல்வேறு தட்பவெப்ப நிலைகளுக்கும் சுற்றுச் சசூழல்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் ஆண் மகனுடைய உடல்வாகின் தகவமைப்பு இயல்பிலேயே திடகாத்திரமாகப் படைக்கப்பட்டிருக்கிறது.

எனவேதான் குடும்பத்தினருக்காப் பொருளீட்டிச் செலவு செய்திடும் பொறுப்பை இஸ்லாம் கணவனுக்கு வழங்கியுள்ளது.

திருமறை குர்ஆனின் 4:34ஆம் வசனத்தில் ஆண்கள் தம் பொருளிலிருந்து பெண்களுக்குச் செலவு செய்து அவர்களை நிர்வகிக்கக் கடமைப்பட்டுள்ளனர் என இறைவன் இயம்பியுள்ளான்.

வினையே ஆடவர்க்கு உயிரே, மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே'' எனப் பழந்தமிழ் இலக்கிய நூலாகிய குறுந்தொகையும் இதனை வரையறுத்துள்ளது. திரைகடலோடியாயினும் திரவியம் தேடுகின்ற பொறுப்பு ஆண் மகனுக்கு உரிய உயிர்ப் பண்பாகும். பெண்கள் வீட்டில் தங்கியிருந்து உயிர் நேசத்துக்குரிய கணவனுக்கு உதவி புரிதல் வேண்டும் என்பது அன்றைய விதியாகும்.

மனைவிக்காகவும் குடும்பத்தினருக்காகவும் அரும்பாடு பட்டுப் பணம் சம்பாதிக்கிறான் கணவன். இதற்குக் கைம்மாறாக மனைவி செய்ய வேண்டியது யாது? வீட்டு வேலைகளைச் செவ்வனே செய்து கணவனது உடைமைகளைப் பாதுகாப்பதும், குழந்தைகள் முதியோர்களைப் பராமரிப்பதும் மனைவிக்குரிய முக்கியமான பொறுப்புக்களாகின்றன.

பெண் என்பவள் மென்மையானவள். மென்மையான மிருதுவான இயல்பு பெண்களுக்கே உரியது. இதன் காரணமாக இவர்களிடம் பாசஉணர்வு மிகுந்திருக்கும் சகிப்புத் தன்மை, இளகிய மனம், எளிதில் உணர்ச்சி வசப்படுதல், பிறர் துன்பம் கண்டு துடிதுடித்துப் போகும் அன்புள்ளம் இவையெல்லாம் குடும்பம் என்னும் கூட்டிற்குள் கொடிகட்டிப் பறக்கும் தாய்மைப் பண்புகளாகும்.

எனவேதான் தவிர்கக முடியாத நிலையில், பெண் பணியாற்ற வேண்டிய நிர்ப்பந்தம் எழுமானால் அவர்களுக்கு அவர்களுடைய இந்தப் பெண்மை இயல்பு களுக்கேற்ற பணிகளை வழங்கி வந்தனர். மருத்துவ மனையில் நோயாளிகளைப் பராமரித்தல், பள்ளிக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தல் போன்ற  பணிகளுக்குப் பெண்களையே பெரிதும் தேர்ந்தெடுத்தனர். காரணம், பரிவுகாட்டிப் பாசமூட்டி அன்பு செலுத்திக் கடமையாற்ற வேண்டிய களங்கள் இவைகளாகும்.

கணவனை இழந்த நிலையிலோ, குடும்ப வருமானத்திற்கு வேறு எந்த வழியுமில்லாது போனாலோ, பெண்கள் பணியாற்றித்தான் குடும்பம் நடத்திட வேண்டும் என்ற நிர்ப்பந்தம் எழுகிறபோது பெண்கள் அதற்குரிய ஒழுக்கங்களோடு அவர்களுக்குரிய இயல்பான பணிகளைப் புரிதலை யாரும் தவறு காணவியலாது.

ஆனால் கணவனுடைய வருமானம் போதிய அளவுக்கு இருந்த போதிலுங்கூட, மென்மேலும் வாழ்க்கை வசதிகளையும் ஆடம்பரப் பொருட்களையும் வாங்கிக் குவிக்க வேண்டும் என்பதற்காக, மனைவியும் பொருளீட்ட வீட்டை விட்டு வெளியேறுகின்றாள். சந்தைப் பொருளாதாரம், நுகர் பொருள் கலாச்சாரம், எல்லா ஆடம்பரங்களையும் அனுபவிக்கத் தூண்டுகின்ற  நவீன விளம்பர நச்சரிப்புகள், இவை காரணமாகப் பெண்மையின் மென்மை பற்றியோ கற்பின் மகிமை பற்றியோஇறைநம்பிக்கை கொண்ட யாரும் அலட்டிக் கொள்வதில்லை.

புலர் காலைப்பொழுதிலே வீட்டை விட்டு வெளியேறும் மனைவி பணியாற்றி முடித்து விட்டுப் பின்னிரவு நேரத்தில் இல்லம் திரும்புகிறாள். பல ஆடவர்களுக்கு மத்தியில் சிரித்துப் பேசிப் பணியாற்றுகின்றாள். இதனால் மனைவியின் இரண்டாவது வருமானம் வந்த வேகத்திலேயே கணவன் மனைவியருக்கிடையே இருந்த முதன்மையான பரஸ்பர நம்பிக்கையும் ரம்மியமும் காணமால் போய் விடுகின்றன. குடும்பக் கட்டுமானத்தில் விழும் முதல் விரிசல் இதுவாகும்.

பெண்களுக்கான சிறந்த இடம் வீடுதான், அன்றிச் சமூக வட்டாரமல்ல'' என்கிறார் பெண்ணுரிமை இயக்கத்தின் தீவிர ஆதரவாளர் பேராசிரியர் சி.இ.எம். ஜோட்.

பெண்கள் தங்கள் வீடுகளையும் குழந்தைகளையும் பராமரித்துக் கொள்வதில் தான் குடும்ப நிம்மதி நிறைந்திருக்கிறது. இதனால் வாழ்க்கைத் தரத்தின் வசதிகள் சற்றுக் குறைந்திருந்தாலுங்கூட இந்த உலகம் மிகவும் மகிழ்ச்சிகரமான இடமாக அமையும்'' என்றும் கூறுகிறார் ஜோட்.

வரலாற்றில் அழிவும் சிதைவும் மிகுந்த காலமெல்லாம், எப்பொழுது பெண்கள் வீட்டை விட்டு வெளியேறினார்களோ அந்தக் காலங்களாகவே இருந்து வந்துள்ளன'' என்கிறார் பேராசிரியர் அர்னால்டு டாயின்பி.

திருமறை குர்ஆன் கீழ்வருமாறு எடுத்துரைக்கிறது:

நீங்கள் உங்கள் வீடுகளிலேயே தங்கியிருங்கள். முன்னர் அஞ்ஞான காலத்தில் (பெண்கள் வெளியே) திரிந்து கொண்டிருந்ததைப் போல நீங்கள் திரியாதீர். உறுதியுடன் முறைப்படி தொழுது கொள்ளுங்கள். ஜகாத்தும் கொடுத்து வாருங்கள். வீட்டுக்குரியவர்களே உங்களை விட்டும் அசுத்தங்களை நீக்கி, உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்கிடவே அல்லாஹ் நாடுகிறான் அல்குர்ஆன் 33:33

நபி(ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிச் சொல்லப்பட்ட இறைவசனம் இதுவாகும். இருந்தபோதிலும் ஒவ்வொரு இஸ்லாமியப் பெண்ணும் மேற்கொள்ள வேண்டிய ஒழுங்கு முறைகள் இதில் சொல்லப் பட்டிருக்கின்றன. பெண்கள் இல்லத்தில் தங்கியிருந்து பொறுப்பாற்ற வேண்டியவர்கள். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி வீதிகளில் சுற்றித் திரிவதென்பது அறியாமைக் காலத்துச் சீரழிவிற்கு அடையாளமாகும். இந்தச் சீரழிவுக் கலாச்சாரம் பரவுமானால், பெண்களுடைய நல்லொழுக்கத்திற்கு மாசு கற்பிக்கப்படும். இவைகளிலிருந்து விலகியிருந்து பெண்கள் தங்கள் பரிசுத்த நிலையைப் பேணிக் காத்துக் கொள்ள விரும்புவார்களாயின், அவர்களுக்கு உகந்த இடம் வீடுகளேயாகும் என்று இறைவன் இயம்புகின்றான்.

ஆனால் இன்று பெண்ணுரிமை, பெண் விடுதலை என்ற பெயர்களில் அங்கிங்கெனாதபடி எங்கும் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டு, ஆண்களோடு கலந்துறவாடுகின்ற நிலையை உருவாக்கி விட்டனர். பெண்மையின் பேரியல்புகள் சிதைக்கப்பட்டுவிட்டன. குடும்ப வாழ்க்கை என்னும் அழகிய அமைப்புக்குள்ளே இருந்து துணைவ னோடும் குழந்தைகளோடும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டிய பெண்களை வீட்டை விட்டு வெளியே தள்ளி இன்று சமுதாய வீதிக்கு இழுத்து வந்து விட்டனர்.

இராணுவத்துறை, காவல்துறை, விமானத்துறை என்று கரடுமுரடான வேலைகளில் பெண்களை நியமித்துப் பெரும் புரட்சி செய்கின்றனர். எல்லா இடங்களிலும் பெண்மையை ஏலத்தில் விட்டு, அவளை ஒரு கவர்ச்சிப் பொருளாக ஆக்கி, பெண்ணினத்தின் பெருமைகளையெல்லாம் துகிலுரிகின்ற துச்சாதனத்தனம் பெருகிப்போனதைக் காண்கிறோம்.

பசுமாடு ஒரு வீட்டுப் பிராணி. இது வீடுகளில் வளர்க்கப்படும்போது அதனால் மனித சமுதாயம் பயன் பெறுகிறது, இதைப் பலவந்தமாகக் கொண்டு போய்க் காட்டினுள்ளே பிடித்துத் தள்ளினால் என்ன நிகழும்? கொடிய விலங்குகளின் கோரப் பற்களுக்கிடையே சிக்கி, அவற்றின் அகோரப் பசிக்கு இரையாகிப் போகும். இது போலத்தான் பெண்ணினமும்.

பெண்கள் வீட்டிலிருந்து குடும்பத்தைப் பராமரிப்பார்களானால், அதனால் அவர்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமான மனித சமுதாயமும் பெரும் பயன்பெறும். அதை விடுத்து, அவர்களை வீட்டிலிருந்து வெளியேற்றிச் சமுதாயச் சந்தைக்கு கொண்டு வருவோமானால் பெண்மையின் பேரியல்புகள் சீரழிக்கப்பட்டுவிடும். இன்று பெண்களும் ஆண்களும் கலந்து பணியாற்றும் இடங்களிலெல்லாம் இந்தச் சீரழிவைத்தான் காண்கிறோம். மேலதிகாரிகளின் கழுகுப் பார்வைக்கும் காமப் பசிக்கும் விமர்சனப் பேச்சுக்களுக்கும் இரையாகி, வெட்கத்தை விட்டு வெளியில் சொல்வதற்குக் கூடப் பயந்து வாழ்கிறது பெண்ணினம்.

செத்துப் போன பெருச்சாளியைக் காகங்கள் வீதியில் இழுத்துப் போட்டுக் குத்திக் கிழித்து நாறடிப்பது போல, இன்று பெண்மையின் மென்மை இயல்புகள் மரத்துப் போகுமளவிற்குச் சாகடிக்கப்பட்ட நிலையில் பெண்ணித்தை வீதிக்குக் கொண்டு வந்து வேடிக்கைப் பொருளாக்கி விட்டனர். இதன் காரணமாக வீசுகின்ற முடை நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் சமுதாயம் மூக்கைப் பிடித்துக் கொண்டு திணறுகிறது.

ஆனால் இஸ்லாமோ பெண்மையின் மென்மைத் தன்மைக்கு உரிய மரியாதை வழங்குகின்றது. இது மட்டுமல்லாமல் பெண்களுக்கே உரிய உடல்கூறு இயல்புகளையும் இஸ்லாம் கருதிப் பார்க்கின்றது. மாதவிடாய், கருத்தரித்தல், பிள்ளை பெறுதல், பாலூட்டல் போன்றவைiயும் இவை தொடர்பான நெடிய உபாதைகளும் பெண்களுக்கு மட்டுமே உரியன. ஆனால் ஆண் மகனோ இதற்கு நேர் மாறாக, இந்த உபாதைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவனாக உலவித் திரிகின்றான்.

இப்படி இரு பாலருக்குமிடையே பலதரப்பட்ட குணாம்சங்கள், தனித்தன்மைகள், செயல்பாடுகள், கடமைகள் ஆகியன வித்தியாசப்படுகின்றன. இவற்றையெல்லாம் கருத்திலிருத்தியே அவரவருக்கும் உரிய குடும்பப் பொறுப்புகளை இஸ்லாம் மனித இயல்புக்கு ஏற்ற முறையில் எடுத்தியம்பியுள்ளது.

குடும்பத்தில் ஆண் பொருளீட்டுவதால் அவன் உயர்ந்தவனாகி விடுவதில்லை. பெண் வீட்டைப் பராமரிப்பதால் அவள் தாழ்ந்தவளாகி விடுவதுமில்லை. அவரவரும் தத்தமக்குரிய பொறுப்பைப் பகிர்ந்து ஏற்றுக் கொள்கின்றனர். இந்தப் பகிர்வில்தான் சுகம் இருக்கிறது. எப்படிக் கணவனும் மனைவியும் உடலாலும் உள்ளத்தாலும் ஒருவருக்கொருவர் சுகபோகங்களைப் பகிர்ந்து கொள்கின்றனரோ அதுபோலக் குடும்பச் சுமைகளையும் அவரவருக்கேற்ற வகையில் பகிர்ந்து கொள்கின்றனர். ஒருவருக்காக ஒருவர் என்ற நினைப்புடன் ஒருவரோடு ஒருவர் இப்படிப் பகிர்ந்து கொள்வதின் காரணமாக, குடும்பத்தில் மன நிம்மதி செழிக்கிறது. ஒட்டு மொத்தமான மனித வாழ்வும் சாந்தி பெறுகிறது.

பெண்கள் வீட்டை விட்டு வெளியேறிச் சென்று பொருளீட்டப் புறப்படுவதால் அவர்களுடைய பெண்மைக்குப் பங்கம் ஏற்படுவது மட்டுமன்று, குடும்ப நிம்மதியும் குலைகிறது. மேலும் குழந்தை வளர்ப்பு என்னும் தாய்மைப் பண்பு தரம் தாழ்ந்து போகிறது. ஆயாக்கள், வேலக்காரர்களின் பராமரிப்பில் குழந்தைகள் ஒப்படைக்கப்பட்டு அவர்கள் சிறு வயதிலேயே ஒழுக்கக் கேடுகளுக்கு ஆளாகிப் போகின்றனர். கணவனும் மனைவியும் அலுவலகம் சென்று விட்டுத் தாமதமாக வீடு திரும்புமிடங்களில் ஆண் பெண் பருவ வயதினர் கண்காணிப்பாரற்று எளிதில் கெட்டுப் போகின்றனர்.

குழந்தைகளைக் காப்பகத்தில் விடுவதும், வயதானவர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு அடைப்பதும் இன்றைய நாகரீக முதிர்ச்சியின் அடையாளங்களாகி விட்டன. இக்குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஊட்ட வேண்டிய குடும்பப் பாசம் மறுக்கப்படுகின்றது. கூலிக்கு மாரடிக்கும் கூடாரங்களில் இவர்கள் அடைக்கப்படுவதால், பிள்ளைகளுக்குத் தாய்ப்பாசம் என்பதே அற்றுப் போய்விடுகிறது.

விரக்தியின் விளிம்பில் வளரும் சிறுவர்கள் போதைப் பொருள்களை நாடி வேறு உலகில்' சஞ்சாரம் செய்து, இழந்துபோன இந்தக் குடும்பப் பாசத்தை ஈடுகட்ட முயல்கின்றனர்.

மனைவியும் பொருளீட்டச் செல்லும் குடும்பத்தில் ஆயாவுக்கு, வீட்டு வேலைக்காரர்களுக்கு, குழந்தைகள் காப்பகத்திற்கு, முதியோர் இல்லத்திற்கு, படிக்கும் பிள்ளைகளின் விடுதிச் செலவுக்கு என்று இன்ன பிற வகைகளுக்குச் செலவிடுவதைக் கூட்டிக் கழித்துக் கணக்கிடுவோமானால் அந்தக் குடும்பம் பெற்றுக் கொண்ட பலன்கள் கொஞ்சமாக இருக்கும், இழந்த சுகங்கள்தாம் மிகுதியாக இருக்கும்.

எல்லாவற்றுக்கும் மேலாக என்ன விலை கொடுத்தாலும் பெற்றுக் கொள்ள முடியாத குடும்ப அமைதி குலைந்து போயிருக்கும்.

வாழ்கின்ற தாயிடமிருந்து வளர்கின்ற குழந்தை ஒன்று தாய்ப்பாசத்தையும் அரவணைப்பையும் எதிர்பார்த்து ஏங்கித் தவமிருக்கிறது. தாயோ வேலை பார்ப்பதற்காகத் தந்தையுடன் வெளியேறி விடுகின்றாள். இந்த நிலையில் அந்த குழந்தையின் கண்ணீரைக் கவிஞர் சுப்ரமணிய ராஜு என்பவர் கவிதையாக வடிக்கிறார் பாருங்கள்.

அம்மாவும் ஆபீஸ் போகிறாள்
அப்பாவின் ஸ்கூட்டரின் பின்னே
வீட்டிலே பாட்டி உண்டு
கட்டிலில் படுத்திருப்பாள்
ஊட்டிவிட ஆளில்லை உடல் முழுக்கச் சோறாச்சு
மாலையில் திரும்பி வருவாள்
ஆபீஸின் அலுப்பை ஊட்ட.
நாக்கின் ருசியெல்லாம்
ஞாயிறில் மட்டுமே உண்டு
நாளைக்கு நானும் போவேன்
வேலைக்குப் போகாத
வெறும் மனைவி எனக்குப் போதும்.

வெறும் மனைவி' என்னும் தலைப்பில் அமைந்த இந்தக் கவிதை அலுவலகம் செல்லும் தாய் ஒருத்தியின் குடும்ப அவலங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டுகிறதன்றோ? வாழ்வின் இளமைப் பருவத்திலிருக்கும்  தளிர் ஒன்றும் அந்திமக் காலத்திலிருக்கும் முதிர்ந்த சருகு ஒன்றும் கேட்பாரின்றி நாதியற்றுக் கிடக்கின்றன. சரியாக உணவை உட்கொள்ளத் தெரியாத பிஞ்சு மழலை, சோற்றையெல்லாம் உடம்பில் பூசிக்கொண்டு சோறூட்டும் தாயன்பிற்காகப் பரிதவிக்கின்றதாம்.

மாலையில் வீடு திரும்பும் தாய் வேலை செய்த அலுப்பைத்தான் ஊட்டுகிறாளே ஒழிய அன்பை ஊட்டுவதற்கு அவளுக்கு அவகாசமில்லை. எனவே,  நான் பெரியவனாகித் திருமணம் புரிகிறபோது, எனக்கு வீட்டிலிருந்து குடும்பம் நடத்துகிற, அலுவலகம் போகாத, வெறும் மனைவிமட்டுமே போதும் என எண்ணுகிறதாம் அக்குழந்தை.

இன்று பெண்ணுரிமை பேசி, பெண்களை வீட்டை விட்டு வீதிக்கும் அலுவலகத்திற்கும் இழுத்து வந்தவர்கள் இந்தப் பெண்ணினத்தின் விடுதலைக்காக எதைத்தான் சாதித்தார்கள்? குடும்பக் கடமைகளோடு அலுவலகப் பணி என்னும் விலங்குகளையும் பெண்ணின் தளிர்க்கரங்களில் பூட்டி வேடிக்கைப் பார்கின்றனர்.

அந்திமாலை நேரத்திற்கும் விடிகாலைப் பொழுதிற்குமிடையே பெண்கள் சமையலறையில் பாத்திரங்களோடு கிடந்து புரள்கின்றனர். இதற்கிடையே கணவனுக்கு ஆற்ற வேண்டிய இல்லறக் கடமைகளையும் இவர்கள் நிறைவேற்றியாக வேண்டும்.

இல்லறக் கிரிக்கெட்டில் சமையலறைக்கும் படுக்கையறைக்கும் ரன் எடுத்தே ரணமாகிப்போனவள்'' என்று மனைவியைப் பற்றிக் கவிஞர் வைரமுத்து பாடுகிறார்.

சமையலறைக்கும் படுக்கையறைக்கும் ஒடிக் கொண்டிருப்பவளை அலுவலக அறைகளுக்கும் ஒடச் செய்து இச்சமுதாயம் பெண் விடுதலையைப் பிடுங்கிக் கொண்டதுதான் மிச்சமாகும்.

நாட்டு நிர்வாகத்தை அரசியல் என்கிறோம். அரசியல் நிர்வாகம் சீராகவும் செம்மையாகவும் செயல்படுவதற்காக நிதி, கல்வி, உள்துறை, பாதுகாப்பு, தொழில்துறை முதலிய பல்வேறு துறைகளை ஏற்படுத்தி  ஒவ்வொரு துறைக்கும் ஒவ்வொரு அமைச்சரை நியமித்துக் கொள்கின்றனர். துறைகளை அவரவருக்கு எனத் தனித்தனியாக ஒதுக்காமல், எல்லாத் துறைகளையும் எல்லா அமைச்சர்களும் நிர்வகித்துக் கொள்ள வேண்டும் என்று யாரும் கூறுவதில்லை. காரணம், அவரவரும் அவரவர் துறைச் செயல்பாடுகளுக்குப் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளனர். எனவே அமைச்சகப் பொறுப்புக்கள் தனித்தனியாகப் பங்கிடப்படுகின்றன.

இதுபோலவே குடும்ப இயல் சீராகச் செயல்படுவதற்காகவும் கணவன், மனைவி ஆகியோருக்கிடையேயான குடும்பப் பொறுப்புக்களை இருவரும் பங்கிட்டுக் கவனித்துக் கொள்கின்றனர். குடும்பத்தினரைப் பசி, பட்டினியிலிருந்து காப்பாற்றி நல்ல முறையில்  வாழ வைப்பதற்காகக் கணவன் பொருளீட்டச் செல்கிறான். அவன் கொண்டுவரும் பொருளிலிருந்து குடும்பத்தினருக்கு உணவூட்டிக் குடும்பத்தைப் பராமரிக்கிறாள் மனைவி. இங்ஙனம் பொருளீட்டுதல், உணவூட்டுதல் ஆகிய இரு பெரும் குடும்பப் பொறுப்புக்களை, குடும்பத்தின் இரு பெரும் பங்குதாரர்களாகிய கணவனும் மனைவியும் தங்களுக்குள் பிரித்துக் கொள்கின்றனர். இது காலம் காலமாக எழுதப்படாத ஒரு விதியாகச் சமுதாயத்தில் நிலவி வந்திருக்கிறது.

இடையே தொழில் புரட்சி யுகம் ஏற்பட்டது. பொதுவுடைமைவாதிகள் பெண்மையையும் பொதுவுடைமையாக்கப் பாடுப்பட்டனர். கல்விக் கூடங்களிலும், தொழில கங்களிலும் பாலின வேறுபாடின்றி இரு பாலரும் கலந்துறவாட வேண்டும், அப்போதுதான் பெண்ணுரிமை நிலைநாட்டப்படும் என்று பேசலாயினர். பெண்களைக் குடும்பப் பராமரிப்பு என்னும் வீட்டு நிர்வாகத்தோடு முடக்கிவிடுதல் கூடாது என முழங்கினர்.

வீட்டு வேலை பெண்களை நசுக்குகிறது, கழுத்தை நெரிக்கிறது, வளர்ச்சியைத் தடுக்கிறது, சமையல் கட்டு, குழந்தைப் பராமரிப்பு ஆகியவற்றோடு சங்கிலியால் பிணைக்கப்பட்ட பெண்களின் வேலையின் தன்மை காட்டுமிராண்டித்தனமானது, விளை பயனற்றது, அல்பத்தன மானது, மன உளைச்சலைத் தருவது, சோர்வடையச் செய்வது'' என்றெல்லாம் ஒப்பாரி வைக்கிறார் லெனின். பெண்ணினத்திற்கு இழைக்கப்படும் இக்கொடுமைகளிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றெல்லாம் லெனினோடு சேர்ந்து ஏங்கல்ஸ் முதலியோரும் பொதுவுடைமைக் குரல் கொடுத்தனர்.

இந்தப் பொதுவுடைமைவாதிகள் பெண்ணியல்பு, கற்புநெறி போன்ற பெண்மையின் உயர் மதிப்புக்களைப் பற்றியும் குடும்பம் என்னும் அருமையான சமுதாய அமைப்பைப் பற்றியும் கொஞ்சமும் கவலைப்படுவதில்லை. இவை பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வது காட்டுமிராண்டித் தனமானது, பிற்போக்கானது என்பது இந்த முற்போக்கு' வாதிகளின் கருத்தாகும். இவர்களுடைய கைங்கரியத்தால் ஆண்-பெண் வேறுபாடின்றி, பெண்களும் பொது அரங்குகளில் இடம் பிடிக்கத் தொடங்கினர். இதன் காரணமாக இன்று குடும்பங்கள் சிதறுகின்றன, சீரழிகின்றன. பெண்ணின் பெருமைகள் இன்று பேரழிவின் விளிம்பைத் தொட்டுக் கொண்டு வருகின்றன.

சான்றாகச் சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றைக் காண்போம். பெயர், ஊர் கூற விரும்பாத வாசகி ஒருவர் 14.09.1997ஆம் நாளிட்ட தினமணிகதிர்' பத்திரிக்கைக்கு ஓரு கேள்வி எழுதிப் பதில் வேண்டுகிறார். காலம் உங்கள் கையில்' என்னும் பகுதியில் இடம் பெற்றுள்ள அக்கேள்வியும் அதற்குரிய பதிலும் இதோ:

கேள்வி: உத்தியோகம் காரணமாக நானும் கணவரும் பிரிந்திருக்கிறோம். அவர் ஓர் ஊரிலும் நான் ஓர் ஊரிலும் இருக்கிறோம். எனது மகனும் மகளும் எனது பெற்றோருடன் வேறொரு ஊரில் இருக்கிறார்கள். இவ்விதம் குடும்பமே சிதறிக் கிடக்கிறது. இதனால் பல பிரச்சனைகளும் அடிக்கடி ஏற்படுகின்றன. எங்கள் குடும்பம் எப்போது ஒன்று சேரும்? விரைவில் பதில் அளிக்கும் படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.  எனது பெயர் ஊர் குறிப்பிட வேண்டாம்.

பதில்: உங்கள், உங்கள் குழந்தைகள் ஆகியோரின் எதிர்கால நலன்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டி உடனடியாக உங்கள் வேலையை ராஜினாமா செய்து விட்டு உங்கள் கணவரை விட்டுப் பிரியாது, உங்கள் குழந்தைகளையும் உடன் வைத்துக்கொண்டு ஒரே குடும்பமாக இருக்கவும். அதனையும் விரைவில் செய்யுங்கள். நீங்கள் அவரைப் பிரிந்தால், உங்கள் எதிர்கால வாழ்க்கை விபரீதமாகப் பாதிக்கபடக்கூடும். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை மட்டும் வைத்துக் கொண்டு, நீங்கள் எதை இழக்கக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளனவோ, அதனைக் திரும்பப் பெறமுடியாது. எனவே உத்தியோகத்தை விடுவதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். தக்க தருணத்தில் சரியான முடிவு எடுக்க இறைவன் அருள் புரிய வேண்டும்.

(இஸ்லாத்திற்கும் ஜோதிடத்திற்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாதாகையால் இக்கேள்வி பதிலில் இடம்பெற்றிருந்த ஜோதிடம் தொடர்பான வாசகங்கள் மட்டும் தவிர்க்கப் பட்டுள்ளன)

கணவன் மனைவி, குழந்தைகள் ஆகியோர் வெவ்வேறு ஊரில் சிதறிக் கிடக்கின்றனர். காரணம், வெளியூரில் தங்கிப் பணிபுரிகிறாள் மனைவி. இந்நிலையில் குடும்பம் உருப்பட வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்? மனைவி தன் வேலையை உதறிவிட்டு  வீட்டிலிருந்து கணவனோடும், குழந்தைகளோடும் குடித்தனம் நடத்துவதைப் தவிர வேறு வழியே இல்லை. தான் சம்பாதிக்கும் வருமானத்தை மனைவி பிரதானமாகக் கருதுவாளானால், அவளுக்கு இருக்கும் குடும்பப் பிடிமானங்கள் கழன்று அவள் நிர்க்கதியாகப் போய்விடுவாள்.

பெண்கள் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிப்பதால் அவர்கள் நசுக்கப்படுகின்றனர். கழுத்து நெரிக்கப்படுகின்றனர், மதிப்பிழக்கின்றனர், மன உளைச்சல் பெறுகின்றனர் என்றெல்லாம் லெனின் போன்றோர் பிதற்றுகின்றனரே. இப்போது இக்கேள்வி பதிலைப் பார்க்கும் போது இப்பெண் மதிப்பிழந்தது எதனால்? மன உளைச்சல் பெற்றது எதனால்? என்பதைக் தெளிவாகத் தெரிய வருகிறோம். வீட்டு வேலை, குடும்பப் பராமரிப்புக்களிலிருந்து அப்பாற்பட்டு வாழ்வதால் இப்பெண் மன நிம்மதியின்றி பரிதவித்துப் பாடதபாடு படுகிறாள் என்பதை நம்மால் விளங்க முடிகின்றது.

எனவேதான், பெண்களை வீடடிலிருந்து நிர்வாகம் செய்யப் பணிக்கிறது இஸ்லாம். குடும்பம் உறையும் வீடு என்பது ஒரு சக்கரம் போன்றது. இச்சக்கரத்தின் அச்சாணி போல் திகழ்பவள் மனைவி ஆவாள். வீட்டிலிருந்து குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய இந்த அச்சாணி இடம் பெயருமானால் குடும்ப வண்டி குடைசாய்ந்து போகும் என்பதற்கு மேலே கண்ட சான்று ஒன்றே போதுமானது.

பெண்கள் இல்லங்களில் தங்கியிருந்து கணவனுடைய உடைமைகளையும் குழந்தைகளையும் செம்மையான முறையில் பராமரித்திடுதல் வேண்டும். கணவன் வீட்டில் இருக்கும்போது அப்பெண்கள் எப்படி நடந்து கொள்வார்களோ, அதுபோலவே கணவன் இல்லாத நேரங்களிலும் நம்பிக்கையுடனும் நாணயத்துடனும் நடந்து, பாதுகாக்கப்பட வேண்டியவற்றைப் பேணிப் பாதுகாத்து வரவேண்டியது மனைவியின் தலையாய கடமையாகும் என்று திருக்குர்ஆன் இயம்புகிறது.

நல்லொழுக்கமுடைய பெண்கள் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும் பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன் மார்கள் வீட்டில்) இல்லாத காலங்களில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு பேணிக்காத்து வருவார்கள். அல்குர்ஆன்4:34

கணவன் வீட்டில் இல்லாத நேரங்களில் கற்பொழுக்கத்துடனும், நாணயத் துடனும் நடந்து அவனது உடைமைகளையும், கண்ணும் கருத்துமாகக் காத்துவருபவளே நல்ல மனைவியாவாள். இப்படி நடந்து கொள்வதில் தான் ஒரு மனைவியுடைய நல்லொழுக்கமும் அடங்கியிருக்கிறது என்பதை இவ்வசனம் திறம்பட உணர்த்துகின்றது.

நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

ஒரு பெண் ஐவேளைத் தொழுகையைத் தொழுதும் ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றும் வருகின்றாள்.  மேலும் தன் வெட்கத்தலத்தைப் பாதுகாத்துக் கொண்டு, தன் கணவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கின்றாள் எனில், அவள் சொர்க்கத்தின் வாயில்களில் எந்த வாயிலை விரும்புகின்றாளோ அதன் வழியாகச் சுவனத்துக்குள் நுழையட்டும். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி)   நூல்: அஹ்மத்

அபூஹுரைரா(ரலி) அறிவிக்கும் மற்றொரு நபிமொழியாவது:

எந்தப் பெண் அனைவரையும் விடச் சிறந்தவள்? என்று நபி(ஸல்) அவர்களிடம் வினவப்பட்டது.
நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: எந்தப் பெண் தன் கணவன் தன்னைப் பார்க்கும்போது, அவனை மகிழ்விப்பாளோ, அவன் கட்டளைளயிட்டால் அவனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பாளோ, தன் விஷயத்திலும், தன்னுடைய பொருளிலும் தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ள மாட்டாளோ, அத்தகையவளே அனைவரையும் விடச் சிறந்தவள். நூல்: நஸயீ

இந்த நபிமொழிகள் மேலே கண்ட இறைவசனத்திற்கு இன்னமும் விளக்கம் தருகின்ற வகையில் அமைந்துள்ளன. எனவே பெண்ணின் தலையாய பண்பு யாது எனில், அவள் வீட்டிலிருந்து குடும்பத்தை நிர்வகிப்பதுவேயாகும். இந்தக் குடும்ப நிர்வாகம் பற்றி ஒவ்வொரு பெண்ணும் விசாரிக்கப் பெறுவாள் எனவும் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

ஒரு பெண் தனது கணவன், வீடு மற்றும் மக்கள் ஆகியோருக்கு பொறுப்பாவாள். அவள் அது பற்றி விசாரிக்கப்படுவாள் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

இப்படிப்பட்ட மகத்தான குடும்பப் பொறுப்பைப் பழுதின்றி, பரிபூரணமாக நிறைவேற்றும்போது, ஜிஹாதில், அறப்போரில் ஈடுபட்டதற்குரிய மாபெரும் நன்மையை ஒரு குடும்பத் தலைவி பெற்றுக் கொள்கிறாள். இக்கருத்துப் பொதிந்த நபிமொழியில் இருந்து, மனைவியின் வீட்டு நிர்வாகப் பொறுப்பு எவ்வளவு சிறப்பான பணி என்பதை நம்மால் உணர முடிகின்றது. இதனை எடுத்துரைக்கும் நீண்ட நபிமொழி இதோ:

ஒரு முறை ரஸுலுல்லாஹி(ஸல்) அவர்கள் தம் தோழர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும் போது, புகழ் பெற்ற ஸஹாபியான மஆத் பின் ஜபலின் இரண்டாம் முறையிலான சகோதரரி அஸ்மா பின்த் யஸீத் என்பார் அங்கே சென்றார்கள்.
அஸ்மா(ரலி), இறைத்தூதர்(ஸல்) அவர்களை அழைத்து இறைத்தூதரே! பெண்கள் கூட்டமொன்று என்னை உங்களிடம் அனுப்பியுள்ளது. அல்லாஹ்வின் மீது ஆணையாக அவர்கள் எதனை என்னிடம் கூறினார்களோ அதனையே நான் உங்களிடம் கூறப்போகின்றேன். அதாவது அல்லாஹ் உங்களை, ஆண்களுக்கும் பெண்களுக்குமாகவே தூதராக அனுப்பியுள்ளான். நாங்கள் உங்களால்  போதிக்கப்பட்டுள்ள நம்பிக்கையை ஏற்றுக் கொண்டுள்ளோம். நீங்கள் எதைச் செய்யக் கண்டோமோ அதையே நாங்களும் செய்கிறோம். அதுபோலவே நீங்கள் எதைச் சொல்லக் கேட்டோமோ அதனையே நாங்களும் சொல்லுகின்றோம். ஆனால் நாங்களோ பர்தாவை அணிந்து வீடுகளிலிருக்கும்படி பணிக்கப்பட்டிருக்கிறோம். இன்னும் எங்களது கடமைகள் கணவருக்குத் தொண்டு செய்வதைக் கொண்டும் பிள்ளைகளைப் பராமரித்து வளர்ப்பது கொண்டும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
இறைத்தூதர் அவர்களே!! ஆண்களோ எங்களைப் பல விஷயங்களில் மிகைத்து விடுகிறார்கள். ஜும்ஆ, கூட்டுத் தொழுகைகளில் அவர்கள் (கட்டாயமாகப்) பங்கெடுக்கிறார்கள். ஜனாஸாத் தொழுகை, ஜிஹாத் ஆகியவற்றிலும் அவர்களே கலந்து கொள்கிறார்கள். அவர்கள் ஜிஹாதிற்காக வெளிக்கிளம்பி விடுகின்ற சந்தர்ப்பங்களில் பெண்களாகிய நாங்கள் அவர்களுடைய இல்லங்களையும் பிள்ளை களையும் பாதுகாத்துக் கொள்கின்றோம். எனவே அவர்கள் ஜிஹாதில் ஈடுபடுவதற்காகக் கிடைக்கும் நன்மையில் எங்களுக்கும் பங்குண்டா? எனக் கேட்டார்கள்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இப்பேச்சை மிகவும் கவனமாகவும் பொறுமையாகவும் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அஸ்மா தனது சொற்பொழிவை முடித்தவுடன், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தனது தோழர்கள் பக்கமாகத் திரும்பி, உங்களில் எவரேனும் இதுபோன்றதொரு, அழகான சொற்பொழிவைக் கேட்டதுண்டா? மேலும் இந்த மார்க்கத்தின் உண்மையைத் தேடி உங்களில் எவரும் இத்தகைய ஆவலையும் ஆர்வத்தையும் காட்டியதுண்டா?'' எனக் கேட்டார்கள்.
அதற்கு அங்கிருந்தோர் எல்லலோரும் ஒரே குரலில் அல்லாஹ்வின் தூதரே! இப்பொழுது கேட்டது போன்ற ஒரு சொற்பொழிவை எங்கள் வாழ்நாளில் ஒருபோதும் கேட்டதில்லை'' எனப் பதிலளித்தார்கள்.
அதன் பின்னர், இறைத்தூர்(ஸல்) அவர்கள் அஸ்மாவுக்குப் பின்வருமாறு பதிலளித்தார்கள்.
அஸ்மாவே! எனக்குத் துணை புரிவீராக! இன்னும் உம்மை இரகசியத்தூது அனுப்பிய பெண்களுக்கு எனது பதிலையும் எடுத்துரைப்பீராக!
அவர்களுடைய இல்லங்களை உரிய முறையில் பாதுகாத்துக் கொள்வதற்கு ஈடாக நீர் இப்பொழுது மேலே எடுத்துக் காட்டிய நற்செயல்கள் செய்ததற்கான கூலியையும், வெகுமதியையும் உங்கள் கணவர்கள் பெற்றுக் கொள்வதைப் போன்றே நீங்களும் பெற்றுக் கொள்வீர்கள். அறிவிப்பவர்: அஸ்மா பின்த் யஸீத்(ரலி) நூல்: திர்மிதீ

இஸ்லாத்தை மேலோங்கச் செய்யும் கடமைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கு மிடையே வெளித்தோற்றத்தில் வேறுபாடுகள் இருப்பது போலத் தென்பட்டாலும் அவற்றுக்குரிய வெகுமதிகள் இரு பாலருக்கும் சமமாகவே அளிக்கப்படுகின்றன என்பதை இதன் வாயிலாக உணரமுடிகின்றது.
உங்களில் ஆணோ, பெண்ணோ (நற்செயல் புரிந்தாலும்)  எவர் செய்த செயலையும் நிச்சயமாக (அல்லாஹ்வாகிய நான்) வீணாக்க மாட்டேன். (ஆணாகவோ, பெண்ணாகவோ இருந்த போதிலும்) ஒருவர் மற்றொருவரில் உள்ளவர்தாம். அல்குர்ஆன்3:195

இத்திருமறை வசனமும் இதனை உறுதிப்படுத்துகின்றது


கணவனின் கண்ணியம்

இல்வாழ்க்கையைச் சீராக நடத்தி இஸ்லாத்தை மேலோங்கச் செய்யும் கடமைகளில் ஆணுக்கும் பெண்ணுக்கும் சரிசமமான பங்கினை இறைவன்வழங்கியுள்ளான். குடும்ப வாழ்க்கையில் கணவனுக்கு மனைவி மீது எந்த அளவு உரிமைகள் இருக்கின்றனவோ, அதுபோல மனைவிக்கும் கணவன் மீது உரிமைகள் உள்ளன.

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்: உங்கள் மனைவியருக்கு உங்கள் மீது சில உரிமைகள் உள்ளன. உங்கள் படுக்கையை மற்றவர்களுக்காக விரிக்காமலிருப்பதும், நீங்கள் விரும்பாதவர்களை உங்கள் வீடுகளில் அனுமதிக்காமலிருப்பதும், உங்களுக்கு அவர்களிடம் உள்ள உரிமையாகும். அவர்களுக்கு உணவளிப்பதிலும், உடையளிப்பதிலும் சிறப்பாக நடந்து கொள்வது அவர்களுக்கு உங்கள் மீது உள்ள உரிமையாகும். அறிவிப்பவர்: அம்ரு இப்னுல் அஹ்வஸ்(ரலி), நூல்: திர்மிதீ

தன் கணவன் தன்னைப் பார்க்கும்போது அவனை மகிழ்வித்து, அவன் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து நடந்து, தன் விஷயத்திலும் தனது பொருளிலும், கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும் மேற்கொள்ளாது நடப்பவள் எவளோ அவளே சிறந்த பெண்ணாவாள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: நஸயீ.

கணவனின் அனுமதியின்றி ஒரு மனைவி கடமையல்லாத நோன்பினை நோற்பதையும், வெளியில் செல்லுவதையும் நபி(ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

கணவனின் அனுமதியின்றி ஒரு மனைவி வெளியிலே சென்றுவிடின். அவள் வீடு திரும்பும் வரை வானவர்கள் அவளைச் சபிக்கின்றனர் என நபி(ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளனர். அறிவிப்பவர்: அனஸ்(ரலி), நூல்: தாரிக்குல் பக்தாத்

இதுபோலவே கணவன், மனைவிக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் யாவை? என்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் நமக்கு வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்.

நீங்கள் உண்ணும்போது, அவளையும் உண்ணச் செய்யுங்கள் உடை வாங்கும்போது அவளுக்கும் உடை வாங்கிக் கொடுங்கள். அவள் முகத்தில் அடிக்காதீர், அவளைச் சபிக்காதீர், அவளுடன் தொடர்பை விட்டு விட நேர்ந்தால் வீட்டில் மட்டும் தொடர்பை துண்டித்துக் கொள்ளுங்கள். இவையே உம் மனைவிக்கு இருக்கும் உரிமைகளாகும். அறிவிப்பவர்: ஹகீம் பின் முஆவியா(ரலி), நூல்: அபூதாவூத்

நீங்கள் ஒர் உணவுக் கவளத்தை உங்கள் மனைவியின் வாயில் ஊட்டுவதும் உங்களுடைய நற்செயலில் ஒன்றாகக் கருதப்படும். அறிவிப்பவர்: ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

இவ்வாறு குடும்பம் என்ற கூட்டு வாழ்க்கையில் கணவனுக்குரிய உரிமைகளையும் மனைவிக்குரிய உரிமைகளையும் இஸ்லாம் விரிவாக எடுத்துரைத்துள்ளது. கணவனும் மனைவியும் ஒருவருக்கொருவர் இப்படி உரிமைகளைப் பகிர்ந்து கொள்ளும்போது குடும்ப நிர்வாக அமைப்புக்கு யார் தலைமை ஏற்பது என்ற வினா எழுவது இயல்பே.

அரசியல் நிர்வாக அமைப்பில் சம அந்தஸ்துடைய அமைச்சர்கள் பலர் ஒருங்கு கூடிப் பணிபுரிந்தாலுங்கூட, அவர்களுக்குள்ளே ஒருவரை மட்டும் முதன்மை அமைச்சராக அல்லது பிரதம அமைச்சராகத் தேர்ந்தெடுத்து, ஒரு தலைமையின் கீழ் செயல்படுவதைக் காண்கின்றோம். இது மட்டுமின்றி, எந்த ஒரு நிறுவனமும் சீராகச் செயல்பட வேண்டுமானால் அங்கு ஒரு தலைமைப் பொறுப்பாளர் கண்டிப்பாக இருத்தல் வேண்டும்.

இது போலவே குடும்ப நிர்வாக அமைப்பில் கணவனும் மனைவியும் சம பங்குதாரர்களாக இருந்த போதிலும் குடும்ப நிர்வாகத்தைச் சீராகவும், செம்மையாகவும் செலுத்திட, குடும்பத் தலைமை தேவைப்படுகின்றது. இந்தத் தலைமைப் பொறுப்பிற்குத் தகுதியானவர் யார்?

இஸ்லாம் குடும்பத் தலைமைப் பொறுப்பினைக் கணவனுக்கே அளிக்கின்றது. (ஆண்களுக்கு) முறைப்படி பெண்கள் மீதுள்ள உரிமைகளைப் போன்றே பெண்களுக்கும் (ஆண்கள் மீது) உண்டு. எனினும் ஆண்களுக்குப் பெண்கள் மீது ஒரு படி உயர்வு உண்டு. அல்லாஹ் வல்லமையும் ஞானமும் மிக்கவனாக இருக்கின்றான்' எனத் திருமறை குர்ஆன் இதனை எடுத்தியம்பியுள்ளது (2:222)

பெண்களுக்கு உடல் கூறு அடிப்படையில் இயல்பாக இருக்கும் பலகீனங்கள், எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை, எதையும் மிகைப்படுத்திப் பார்க்கும் பண்பு, முதலியன காரணமாக அவர்கள் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியற்றவர்களாக ஆகிவிடுகின்றார்கள். பெண்களிடம் ஆடவரைச் காட்டிலும் அன்பும் மென்மையும், கருணையும் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆண்களிடமோ, ஆண்மையும், வீரமும் உறுதியும் பெண்களைக் காட்டிலும் மிகுந்து காணப்படுகின்றன.

நிர்வாகப் பொறுப்பை ஏற்று நடத்துவதற்கு வீரமும், உறுதியும், திட சிந்தனையும், முடிவெடுக்கும் திராணியும்; அன்பையும் , கருணையையும் காட்டிலும் முக்கியமாகவும், முதன்மையாகவும் தேவைப்படுகின்றன. எனவே, குடும்பத் தலைமைப் பொறுப்பினை இஸ்லாம் கணவர்களிடம் ஒப்படைக்கின்றது.

குடும்ப நிர்வாகத்திற்குத் தலைமை தாங்கும் கணவனே பெண்களுக்குச் செலவு செய்திடல் வேண்டும்.

பெண்களின் நிர்வாகிகளாக ஆண்களே இருக்கின்றனர். ஏனெனில் அவர்களில் ஒருவரைவிட மற்றவரை அல்லாஹ் மேன்மையாக்கி வைத்திருக்கின்றான். அன்றி (ஆண்களாகிய) அவர்கள் தங்கள் பெண்களுக்காகப் பொருளைச் செலவு செய்கின்றார்கள். அல்குர்ஆன்4:34

மனைவிக்கு உடை, உணவு வாங்கிக் கொடுப்பது உட்பட அனைத்துச் செலவுகளையும் கணவனே ஏற்று நடத்துதல் வேண்டும் என முந்திய நபிமொழிகளில் நபி(ஸல்) அவர்களும் வலியுறுத்தியுள்ளார்கள். இஸ்லாம் இப்படிக் கட்டளையிட்டிருக்க, சில குடும்பங்களில் இதற்கு நேர் மாற்றமான நடைமுறைகள் நிலவக் காண்கின்றோம்.

கணவன் தான் ஈட்டிய பொருள் அனைத்தையும், பைசா பாக்கியில்லாமல் அப்படியே கொண்டு வந்து மனைவியிடம் ஒப்படைத்து விடுகின்றான். பஸ் செலவுக்கும், டீ செலவுக்கும் அன்றாடம் மனைவியிடமிருந்து, பாக்கெட் மணி' வாங்கிச் செல்லும் அவல நிலைக்குக் கணவன் ஆகிவிடுகிறான். இது போன்ற நிலையை ஒருபோதும் இஸ்லாம் விரும்பவில்லை.

குடும்பச் செலவினங்களை மனைவி ஏற்றுக்கொண்டு, குடும்பத்தின் வரவு செலவுக் கணக்குகளிலிருந்து, கணவனைச் சாதுரியமாகக் தூரப்படுத்தி விடுகின்றாள். இதனால் கணவன் குடும்பக் கவலைகளிலிருந்து, தான் விடுபட்டு விட்டதாகக் கருதி, பெருமூச்சு விடுகின்றான். ஒரு கணவன் என்னும் ஸ்தானத்திலிருந்து, குடும்பத்தி னருக்குச் செலவிட வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழிக்கின்றான். தனது நிர்வாகப் பொறுப்பை மனைவியிடம் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டு, இவன் சுதந்திரப் பறவையாகச் சுற்றித் திரிகின்றான்.

தங்களது காரியங்களைப் பெண்களிடம் ஒப்படைத்தவர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: அபூபக்ரா(ரலி), நூல்: நஸயீ

குடும்ப வருவாய் அனைத்தையும் தன் கையகப்படுத்திக் கொண்ட மனைவியானவள், கணவனுக்குத் தெரியாமல் தன் மனம்போன போக்கில் எல்லாம் செலவிட முனைகின்றாள். மனைவியுடைய சொந்தப் பொருளாயிருந்தால் கூட, தன் கணவனுக்கு விருப்பமில்லாத எந்தப் போக்கையும், ஒரு மனைவி மேற்கொள்ளக் கூடாது என்று நபி(ஸல்) சொல்லியிருக்கும் போது, இங்குக் கணவனுடைய பொருளை வாங்கியே அவன் விரும்பாத செலவினங்களை மனைவி மேற் கொள்ளுகின்றாள்.

இயல்பாகவே பெண்களிடம் ஆடம்பர மோகமும், உலக இன்பங்களில் நாட்டமும் ஆண்களை விட அதிகமாகக் காண்ப்படுகின்றன. ஆண்மகன் ஒருவன் எளிய ஓரிரு ஆடைகளைக் கொண்டு திருப்தியடைந்து கொள்வான். ஆனால் பெண்கள் அப்படியல்லர். ஆடை அணிகலன்களிலும், உலகின் பகட்டார்வங்களிலும் பெண்கள் அதிகமாக ஈர்க்கப்படுகின்றனர்.

நபி(ஸல்) அவர்களின் திருமனைவியர்களே இத்தகைய பலவீனங்களுக்கு ஆட்பட்டிருந்தனர் என்றால், இக்காலத்துப் பெண்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

நபியே! உம்முடைய மனைவிகளிடம், நீங்கள் இவ்வுல வாழ்க்கையையும், இதன் அலங்காரத்தையும் நாடுவீர்களானால், வாருங்கள்! நான் உங்களுக்கு வாழ்க்கைக்கு உரியதைக் கொடுத்து அழகிய முறையில் உங்களை விடுதலை செய்கின்றேன்'' (என்று கூறுவீராக) எனத் தம் மனைவியரிடம் கூறுமாறு நபிக்குக் கட்டளையிட்டான் இறைவன். அல்குர்ஆன் 33:28

இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர்களாகிய அந்த உத்தமப் பெண்களை முன்னிறுத்தி, பெண்ணியல்பின் நிலைப்பாடு எத்தகையது என்பதை இவ்வசனம் வாயிலாக இறைவன் உணர்த்திக் காட்டியுள்ளான். பெண்கள் தலைமைப் பொறுப்பிற்கு உகந்தவர்களாக இல்லாது போனதற்கு இத்தகைய பெண்ணியல்பும் ஒரு காரணமாகும்.

இதையெல்லாம் மீறிப் பெண்களிடம் குடும்ப நிர்வாகப் பொறுப்பை ஒப்படைக்கும் ஆண்கள் தமக்குத் தாமே துன்பங்களைத் தேடிக் கொள்கின்றனர். கணவனுடைய குறிப்பிட்ட வருவாயைக் கொண்டு, திட்டமிட்டுச் செலவிடத் தெரியாமல், பகட்டார்வங்களில் மயங்கிப் பெண்கள் அகலக்கால் வைக்கின்றனர். இதனைச் சரிக்கட்டுவதற்காகக் கணவனைக் கடன்காரர்களாக மாற்றுகின்றனர்.

பல கணவர்கள் இன்று லஞ்ச ஊழல்களில் சிக்கித் தவிக்கின்றமைக்கு மனைவியரின் ஆடம்பர நச்சரிப்புக்களே அடிப்படைக் காரணமாக இருந்திடக் காண்கின்றோம். கணவனது குடும்ப நிர்வாகத் தலைமைக்குக் கட்டுப்பட்டு, கணவனுக்கு உதவிடும் இறைநம்பிக்கையுள்ள நல்ல மனைவியே ஒருவனுக்கு வாய்த்திடும் பெரும் பேறாக அமைகின்றாள்.

ஸஃப்வான்(ரலி) அறிவித்திடும் நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று இதனை எடுத்துரைத்துள்ளது.

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் பயணத்திலிருந்தோம். தங்கத்தையும், வெள்ளியையும் பதுக்கி வைப்பவர்கள்'' எனத் தொடங்கும் வசனம் இறங்கியது. எங்களில் சிலர், தங்கத்தையும் வெள்ளியையும் சேகரித்து வைப்பது தொடர்பாக இந்த வசனம் இறங்கியுள்ளது. இதிலிருந்து அதனைச் சேகரிப்பது விரும்பத்தக்கதன்று எனத் தெரிய வருகின்றது. அப்படியானால் எந்தச் செல்வம் நல்லது என்று நமக்குத் தெரிந்து விட்டால், அதனைச் சேகரிக்க நாம் முயற்சி செய்யலாமே!'' என்று கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அனைத்தையும் விடச் சிறந்த சேமிப்புப் பொருள்கள் இறைவனை நினைவு கூரும் நாவு, இறைவனுக்கு நன்றி செலுத்தும் உணர்வால் நிரம்பிய உள்ளம், இறைவழியில் நடந்திடத் தன் கணவனுக்கு உதவிடும் இறை நம்பிக்கையுள்ள நல்ல மனைவி ஆகியனவே'' என்றார்கள். நூல்: திர்மிதீ

பொன்னையும், பொருளையும் விரும்புவது மனித இயல்பு. அதிலும் இக்காலத்துப் பெண்கள் ஆண்களை விடவும், பொன் வெள்ளியின் மீது பெரிதும் மோகம் கொள்கின்றனர். இந்த மோகத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தங்கள் கணவர்களை இம்சை செய்யும் மனைவியரும் உள்ளனர். ஆனால் இவையெல்லாம் உண்மையான சேமிப்பாக மனிதனுக்கு நாளை மறுமையில் உதவி செய்திடாது. இறைவனை நினைத்து அவனுக்கு நன்றி பாராட்டி, எண்ணம், சொல், செயலால் ஏக இறைவனுக்குக் கட்டுப்பட்டு வாழ்வதுவே மனிதனுக்குப் பயனளிப்பதாகும். இப்படி ஒரு மனிதன் வாழ வேண்டுமானால் அவனுக்கு வாய்த்த மனைவியின் உதவி ஒத்தாசை மிகவும் முக்கியமாகும்.

இறைவழியில் செம்மையாக நடந்திடத் தன் கணவனுக்கு உதவி செய்திடும் மனைவி கிடைப்பது போன்று வேறு ஒரு பெரிய பேறு எதுவுமே இருக்க முடியாது எனலாம்.

இவ்வுலகம் (மனிதர்களுக்குக் கிடைத்த) பாக்கியமாகும். உலக பாக்கியங்களுள் மிகவும் சிறந்தது நல்லொழுக்க முள்ள மனைவியை அடைவதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ்பின்அம்ருபின்ஆஸ்(ரலி) நூல்: முஸ்லிம்

குடும்ப நிர்வாகத்தில் தலைமை ஏற்று ஒழுகும் கணவன் ஒருவன், இறை நெறிக்கு மாற்றமான முறையில் நடக்க முனையும் போது, அவனை நெறிப்படுத்திட மனைவி கடமைப்பட்டுள்ளாள். இவ்வாறு கணவனை நெறிப்படுத்தும் மனைவியும், மனைவியை நெறிப்படுத்தும் கணவனுமாகக் குடும்பம் அமைந்து விடுமானால் அந்த இல்லம் சாந்தி நிலையமாகத் திகழும் என்பதில் சந்தேகம் இல்லை.

என்னதான் நல்லொழுக்கமும் இறையச்சமும் உள்ள மனைவியராக இருந்தாலும், மனிதப் பிறவி என்ற அடிப்படையில் அவர்களிடம் சில குறைபாடுகள் இருக்கவே செய்யும். கணவனும் இதற்கு விதிவிலக்கல்லன். எனவே குடும்பத் தலைமைப் பொறுப்பு தன்னிடம் இருக்கின்றது என்ற காரணத்திற்காக, மனைவியிடம் காணப்படும் சின்னஞ்சிறு குறைகளைக் கணவன் பெரிது படுத்தி அதனைப் பிரச்சனையாக்குதல் கூடாது.

இப்படிச் செய்யும்போது குடும்ப அமைதி குலைந்து போகும். எனவே மனைவியருடன் கண்ணியமான முறையிலும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ள வேண்டியது கணவனின் தலையாய கடமையாகும். கணவன் மனைவியரிடையே பிரச்சனைகள் ஏற்பட்டுக் குடும்ப அமைதி சிதைந்து விடக்கூடாது என்பதற்காக இஸ்லாம் முன்னெச்சரிக்கையாகவே சில நிபந்தனைகளை விதித்துள்ளது.

திருமணத்திற்கு முன்பே ஆண்மகன், தான் மணமுடிக்கப் போகும் பெண்ணைப் பார்த்துக் கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. இதனைப் பலரும் ஒரு பாவச் செயலாகக் கருதி இதனடிப்படையில் செயல்படத் தயங்குகின்றனர். இந்த மனிதத் தயக்கங்கள் காரணமாகவும் பின்னர் குடும்பத்தில் சச்சரவுகளும் பிணக்குகளும் தலையெடுக்கத் தொடங்குகின்றன.

இதுபோலவே உளப்பூர்வமான சம்மதத்தைப் பெற்ற பின்னர்தான் மணமகனுடன் மணப்பெண்ணைச் சேர்த்து வைக்க வேண்டும் என்றும் நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இந்தக் கட்டளை இன்று ஒரு வெற்றுச் சடங்காகத் தரம் தாழ்ந்துவிட்டது. பல திருமண ஒப்பந்தங்களில் எப்படிப் போலி மஹர் பதிவு செய்யப்படுகின்றதோ, அது போலவே மணப்பெண்ணின் சம்மதம் என்பதும் ஒரு பாவனை போல் ஆகிவிட்டது.

நிக்காஹ் நடைபெறவிருக்கும் தருணத்தில் கூலிக்கு வக்கீலாக அமர்த்தப்பட்டிருக்கும் ஹஜரத் ஒருவர், பெண்ணின் சம்மதத்தைப் பெற்று விட்டீர்களா? என்று சம்பிரதாயத்துக்காக வினவுவார். ஆம் சம்மதம் பெறப்பட்டது' என்று ஒப்புக்காகப் பெண் வீட்டாரும் பதில் தருவர். அத்தோடு விஷயம் முடிந்து போகும்.

கன்னிப் பெண்ணாயின் மௌனம் வாயிலாகவே தன் சம்மதத்தை உணர்த்திக் காட்டலாம் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் மணப் பெண்ணிடம் மனப்பூர்வமான சம்மதத்தைப் பெறவேண்டும் என்பதில் இந்தச் சமுதாயம் அக்கறை காட்டுவதில்லை. பெண்ணினத்திற்கு இஸ்லாம் வழங்கியிருக்கும் இந்த மகத்தான உரிமையைப் பெண்களும் அறிந்திருக்கவில்லை. அறிந்த சிலரும்இதனைத் துணிவுடன் நிலைநாட்டிச் செயல்படுத்தத் துணிச்சல் இல்லாதவர்களாகவே இருந்து வருகின்றனர். இதன் காரணமாகவும் பிற்காலத்தில் குடும்பப் பிணக்குகள் உருவெடுக்கின்றன.

பலாத்காரமாக ஓர் ஆடவனின் கையில் கன்னிப் பெண் ஒருத்தி ஒப்படைக்கப்படுகிறாள் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லையே தவிர, பல திருமணங்களில் நடப்பது என்னவோ இதுவாகத்தான் இருக்கின்றது. இதன் விளைவாக இனிதாக அமைய வேண்டிய பல இல்லற வாழ்க்கைகள் இன்னல் மிக்கனவாக அமைந்து விடுகின்றன.

உள்;ர ஒருவரை ஒருவர் விரும்பாத நிலையில் ஒரு பெண்ணை ஓர் ஆணின் தலையில் கட்டி விடுகின்றனர். அவளை உரிமையாக்கிக் கொண்டவன் ,பல விதங்களிலும் அவளுக்குக் கொடுமை இழைக்கின்றான். தொட்டதற் கெல்லாம் மனைவியிடம் குறை கண்டு கொண்டே இருப்பான். வேண்டாதபெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம் என்பதற்கேற்ப மனைவியிடம் நடந்து கொள்கின்றான்.

கணவனுடைய இம்சை பொறுக்க மாட்டாமல், தாமாகவே இவனிடமிருந்து விடுதலை பெற்றுச் செல்லுமளவுக்கு மனைவிக்குப் பல்வேறு நிர்ப்பந்தங்களை இவன் ஏற்படுத்துகின்றான். இப்படி ஒரு பெண்ணைச் சித்திரவதைசெய்து அடக்கு முறைகளுக்கு ஆளாக்கி, அவளைத் தடுத்து வைத்துத் துன்பப்படுத்துதல் கூடாது என்று திருமறை குர்ஆன் கட்டளையிடுகின்றது.

இவ்வாறாகத் துன்பப்பட்டுக் கண்ணீர்க் கடலில் மிதக்கும் பல பெண்களை நாம் குடும்பங்களில் காண முடிகின்றது. கணவனே முன் வந்து இழைக்கும் கொடுமைகளும் உள்ளன. சில குடும்பங்களில் கணவன் நற்பண்புகளுடன் மனைவியோடு நளினமாக நடந்து கொண்டாலும், கணவனின் பெற்றோர்களும் நாத்தனார்களும் மருமகளுக்கு மனிதாபிமானமற்ற முறையில் கொடுமை இழைத்தலையும் காண்கின்றோம். மனைவியிடம் நல்லவிதமாக நடந்து கொள்ளும் தம் மகனுக்குத் தூபம் போட்டு, அவனைத் தூண்டிவிட்டு, பல்வேறு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்தி மனைவிக்குக் கொடுமை புரியத் தூண்டுகின்ற வன்னெஞ்சம் படைத்த பெற்றோர்களும் சமுதாயத்தில் வலம் வருகின்றனர்.

பகிரங்கமான மானக்கேடான செயலைச் செய்தாலன்றி, ஒருவர் மனiவியை அவளுடைய சின்னஞ்சிறிய குறைகளுக்காக நோவினை செய்தல் கூடாது. மாறாக பெண்ணிடம் கனிவுடனும் கண்ணியத்துடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். ஒரு சில அம்சங்களில் அவர்களிடம் குறைபாடுகள் தென்பட்டாலும் அதற்காக அவர்களை வெறுத்து ஒதுக்குதல் கூடாது. இதனைத் திருமறை பின்வருமாறு எடுத்தரைக்கின்றது.

நம்பிக்கைக் கொண்டோர்களே! பெண்களை நீங்கள் (அவர்கள் மனப் பொருத்தமில்லாத நிலையில்) பலவந்தப்படுத்தி அனந்தரமாகக் கொள்வது உங்களுக்குக் கூடாது. பகிரங்கமான கெட்ட செயலை அவர்கள் செய்தாலொழிய, பெண்களுக்கு நீங்கள் கொடுத்ததிலிருந்து சிலவற்றை எடுத்துக் கொள்ளும் பொருட்டு அவர்களுக்குத் (துன்பம் கொடுத்து) தடுத்து வைக்காதீர். இன்னும் அவர்களுடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களை வெறுத்தால் (அது சரியல்ல ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கக் கூடும். அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம். அல்குர்ஆன் 4:19

இத் திருமறை வசனத்தின் அடிப்படையில் அமைந்துள்ள நாயக வாக்கியத்தையும் எண்ணிப் பார்க்கின்றோம்.

இறை நம்பிக்கையுடைய கணவன் ஒருவன் தன் இறை நம்பிக்கையுடைய மனைவியை வெறுக்க வேண்டாம். அவளுடைய ஒரு குணம் அவனுக்குப் பிடிக்கவில்லை என்றால், அவளுடைய வேறு குணங்கள் அவனுக்குத் திருப்தியளிக்கக் கூடும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: முஸ்லிம்

பெண்களிடத்தில் இயல்பிலேயே சில குறைபாடுகள் அமைந்திருக்கின்றன. உதாரணமாக எளிதில் உணர்ச்சி வசப்படும் தன்மை பெண்களுக்கு உரிய பண்பாகும். இதனைப் பல்வேறு சந்தர்ப்பங்களில் கணவன் ஒரு குறைபாடாகக் கருதக்கூடும். ஆனால் இந்த உணர்ச்சி வசப்படும் தன்மை இருக்கிற காரணத்தினால் தான் அவள் ஒரு தாயாகச் செயல்பட முடிகின்றது. பல இன்னல்களுக்கிடையேயும் குழந்தையைத் தன் வயிற்றிலே சுமந்து கொள்வதிலிருந்து, அதனைப் பெற்று வளர்த்துப் பாலூட்டிச் சீராட்டிப் பேணுவது வரை, ஒவ்வொரு கட்டங்களிலும் அவள் பெறுகின்ற உணர்ச்சி வெளிப்பாடுகள் சொல்லில் அடங்குவனவன்று.

மனைவியிடம் கணவன் ஒன்றை வெறுக்கக்கூடும்; ஆனால் அதில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை ஏற்படுத்தி விடலாம்' என்று திருமறை வசனம் இதனை நயமாக உணர்த்திக் காட்டுகின்றது. மனைவியின் பலகீனமாகக் கணவன் எதைக் கருதுகின்றானோ அதுவே குடும்பப் பாசத்திற்குப் பலம் சேர்ப்பதாக அமைந்து விடுகின்றது.

இதுபோலவே கணவன் மனைவி உறவு நிலைகளிலும் சுற்றம் தழுவுவதிலும் மனைவியின் குணநலன்கள் வளைந்து நெகிழ்ந்து அமைந்திருந்தால்தான் குடும்பத்தில் நிம்மதி நிலவ முடியும். அவ்வாறின்றி, மனைவியின் குணங்களை நேர்மைப்படுத்தியே தீருவது என புறப்படுவோமானால் அது ஒருக்காலமும் நிறைவேறப் போவதில்லை.

நீங்கள் மனைவியுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள்.ஏனெனில் அவர்கள் கோணலான விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டார்கள். நீங்கள் அதன் கோணலுடன் அவர்களைப் பயன்படுத்துவீர்களாயின் அது பலன் தரும். அன்றி அந்தக் கோணலை நிமிர்த்தப் பாடுபடுவீர்களாயின் அதை ஒடித்து விடுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்

ஆண்மை நிமிர்ந்து நிற்பது, பெண்மை வளைந்து கொடுப்பது. இந்த இரு வேறு இயல்புகளின் சங்கமம்தான் குடும்பம் என்பதை உணர்ந்து பெண்களிடம் பரிவோடும், வாஞ்சையோடும் கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுல் வேண்டும். சோற்றிற்கு உப்புப் போட மறந்து விடலாம் ஒரு மனைவி. அதற்காக அவள் மீது சேற்றை வாரி இறைப்பதும் அடித்து உதைப்பதும் எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும்? இதுபோன்ற வெகு அற்பமான காரணங்களுக்காக அன்றாடம் அடிபட்டுக் கொண்டிருக்கும் மனைவியர் ஏராளம் ஏராளம்.

திருமறை வழிகாட்டுதலுக்கிணங்க நபி(ஸல்) அவர்களும் பெண்களை ஆண்கள் எப்படி நடத்துதல் வேண்டும் என விளக்கியுரைத்துள்ளனர். பெண்கள் பகிரங்கமாக மானக்கேடான செயலைச் செய்தால் மட்டுமே அவர்களைக் கடுமையாகத் தண்டித்தல் வேண்டும். இதுவல்லாத சாதாரண குற்றங்குறைகளைச் செய்வார்களாயின், அவர்களை எப்படித் திருத்த வேண்டும் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் நமக்குக் காட்டித் தந்துள்ளார்கள்.

ஒரு மனைவியின் தவறை அவளுக்குச் சுட்டிக் காட்டுவதற்காக, படுக்கையறையில் அவளுடன் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளலாம். இங்ஙனம் உணர்வு பூர்வமாகவும், உளவியல் ரீதியாகவும் அவள் தன் தவறை எண்ணித் திருந்திக் கொள்ள முதல் வாய்ப்பினை வழங்க வேண்டும். அடுத்த கட்டமாக அடித்துத் திருத்த வேண்டிய நிலை ஏற்படுமாயின், அவளுக்குக் காயம் எதுவும் ஏற்படாத வகையில் லேசாக அடித்துக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.

இந்த நடவடிக்கைள் வாயிலாகப் பெண்கள் திருந்திக் கொள்ளும் போது, வேறு கடுமையான தண்டனைகளை மேற்கொண்டு பெண்களைத் துன்புறுத்துதல் கூடாது என நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

பெண்கள் பகிரங்கமான கெட்ட செயலைச் செய்யும் போதுதான் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளுதல் வேண்டும். மற்ற வகையில் அவர்கள் தவறு செய்தால், படுக்கையறையில் அவர்களுடன் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள். அவர்களைக் காயப்படுத்தக் கூடிய அளவுக்கு அல்லாமல் இலேசாக அடியுங்கள். பிறகு அவர்கள் உங்கள் சொல்லை ஏற்று நடந்தால் அவர்களைத் துன்புறுத்தி விடாதீர்கள் என்பது நபிமொழியாகும். அறிவிப்பவர்: அம்ர் பின் அஹ்வஸ்(ரலி), நூல்:திர்மிதீ

பெண்களை இலேசாக அடித்துத் திருத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால்கூட, அவளுடைய முகத்தில் அடிப்பது ஒரு போதும் கூடாது. வீணான கெட்ட வார்த்தைகளைச் சொல்லித் திட்டுவதும் சபிப்பதும் கூடாது. அவர்களுடன் உள்ள தொடர்பைவிட நேர்ந்தால் வீட்டிற்குள் மட்டுமே அப்படித் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள வேண்டும். வெளியார் மத்தியில் நல்ல விதமாக நடந்து கொள்ளுதல் வேண்டும்.

மனைவியின் முகத்தில் அடிக்காதீர். அவளைச் சபிக்காதீர். அவளுடன் தொடர்பை விட்டு விட நேர்ந்தால், வீட்டில் மட்டும் தொடர்பைத் துண்டித்துக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஹகீம் பின் முஆவியா(ரலி), நூல்: அபூதாவூத்

மனைவி தவறிழைக்கும்போது அவளைத் திருத்துவதற்குரிய முதல் கட்ட நடவடிக்கையாக அவளுடனுள்ள படுக்கையைப் பிரித்துக் கொள்ளுமாறு நபிமொழி இயம்புகின்றது. இதன் வாயிலாக மனைவிக்குத் தண்டனை கிடைக்கிறதோ இல்லையோ கணவனுக்கும் அது பெரும் கைசேதத்தை ஏற்படுத்தி விடுகின்றது. இந்த இடைக்காலத் தடங்கலைக் கூடத் தாங்கிக் கொள்வதற்குரிய மன வலிமையற்ற நிலையில்தான் பல கணவர்கள் காணப்படுகின்றனர்.

இங்கு இஸ்லாம் மனைவிக்குத் தரும் தண்டனையில் கணவனுடைய உணர்வுகளைக் கட்டுப்படுத்துகின்ற பரீட்சையையும் சோதித்துப் பார்க்கின்றது. இதில் பல கணவர்கள் தோற்றுப் போவது இயல்பே. எனவே இத்தண்டனையும் நிறைவேறுவதில்லை. இதில் கூட எத்துணை நளினமாகவும் தந்திரமாகவும் பெண்ணுக்குத் தண்டனை' யளிக்கப்படுகிறது என்பதையும் எண்ணிப் பார்க்க முடிகிறது.

அடுத்த கட்ட நடவடிக்கையாகத்தான் மனைவியைக் காயம் ஏற்படுத்தாத வகையில் இலேசாக அடிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. அதுவும் முகத்தில் அறையலாகாது என்றும் நிபந்தனை விதிக்கப்படுள்ளது. ஆக, முதல் கட்ட நடவடிக்கையாகப் படுக்கையைப் பிரிப்பதும், இரண்டாம் கட்டமாக இலேசாக அடிப்பதும் என வரையறுக்கப்பட்டுள்ளன.

இப்படி இருக்கும்போது பல கணவர்கள் முதல் கட்ட நடவடிக்கையை வசதியாக மறந்து விட்டு, எடுத்த எடுப்பிலேயே இரண்டாம் நிலையை மேற்கொள்ளத் தொடங்கி விடுகின்றனர். இப்படி நடந்து கொண்ட கணவன் அன்றைய இரவுப் பொழுதுக்காவது முதல் கட்டமாகிய படுக்கையிலிருந்து விலகும் நடவடிக்கையைப் பின்பற்றுகின்றானா என்றால், அதுதான் இல்லை.

பகலில் மனைவியை அடித்த கைகள் இரவில் அவளை அணைக்கத் துடிக்கின்றன. எப்படி இந்த ஆடவனால் இது போல நடந்து கொள்ள முடிகின்றது? என்று நபி(ஸல்) அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கேட்பது போல் நபிமொழி ஒன்று அமைந்துள்ளது. பகலுக்குப் பின் இரவு வரும் என்பதையும், இரவில் தான் எப்படி நடந்து கொள்ளவிருக்கிறோம் என்பதையும் முன் கூட்டியே கருதிப் பார்த்திருப்பானாயின், ஒரு கணவன் தன் மனைவி மீது கை வைத்திருக்க மாட்டான். எனவே இத்தகைய பலவீன நிலையில் உள்ள ஆடவர்கள் பெண்களைத் திருத்த முற்படும்போது இதமாக உபதேசித்துத் திருத்த முனைதல் வேண்டும். அடித்துத் திருத்த முனைவானாயின் இரவில் அவளை நெருங்காமலிருக்கவும் தன்னைப் பக்குவப் படுத்திக் கொள்ள வேண்டும்.

மனைவிக்கு நீர் அறிவுரை கூறும். அவளுக்குள் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும் ஆற்றலும், பக்குவமும் இருந்தால் அவள் உம் சொல்லை ஏற்றுக் கொள்வாள். எச்சரிக்கை! நீர் உம் அடிமைப் பெண்ணை அடிப்பதைப் போல் உம் மனைவியை அடிக்கக் கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: லகீத் பின் ஸப்ரா(ரலி), நூல்: அபூதாவூத்

உங்களில் எவரும் தமது மனைவியை, அடிமையை அடிப்பது போன்று அடித்துவிட்டு,பிறகு(அன்று) பகல் கழிந்ததும் அவளுடன் உடலுறவு கொள்ளத் தயாராகிவிடக் கூடாது என்றும் நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அப்துல்லாஹ் பின் ஜம்அ(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்.

எனவே இதனையும் நினைவில் வைத்துக் கொண்டு கணவர்கள் மனைவியருடன் இதமாக இறையச்சத்துடன் நடந்து கொள்ளுதல் அவசியமாகும்.

மனைவியரை அடிக்காதீர் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந் தார்கள். நபிகளாருடைய இக்கட்டளை காரணமாக மனைவிகள் மிகவும் துணிச்சல் பெற்று விட்டதாக உமர்(ரலி) அவர்கள் நபிகளாரிடம் முறையிட்டார்கள். இதைக் கேட்ட நபி(ஸல்) அவர்கள், அத்தகைய பெண்களை அடிக்கலாம் என அனுமதி வழங்கி விட்டார்கள். இதன் பின்னர் பல பெண்கள் திரண்டு வந்து, தம் கணவன்மார்கள் தங்களை அடிப்பதாக நபி(ஸல்) அவர்களது மனைவியரிடம் முறையீடு செய்தனர், இதை அறிந்தபோது நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

என் துணைவியரிடம் பெண்கள் பலர் தம் கணவன்மார்களைக் குறித்து முறையிட்டுள்ளார்கள். இவ்வாறு நடந்து கொள்பவர்கள் உங்களில் சிறந்தவர்கள் அல்லர். அறிவிப்பவர்: அயாஸ் பின் அப்துல்லாஹ்(ரலி), நூல்: அபூதாவூத்

மனைவியரிடம் முரட்டுத்தனமாக நடந்து கொள்பவர் ஒரு போதும் சிறந்த மனிதராக மாட்டார். மாறாக மனைவியரிடம் நளினமாகவும், கனிவாகவும் சிறந்த முறையில் எவர் நடந்து கொள்கிறாரோ, அவரே மனிதரில் சிறந்தவர் என இஸ்லாம் எடுத்துரைக்கிறது.

நபி(ஸல்) அவர்கள் இவ்வகையில் ஒரு சிறந்த முன் மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். ஒரு மாமனிதராக மாபெரும் ஆட்சியாளராகத் திகழ்ந்த போதிலுங் கூட நபி(ஸல்) அவர்கள் மனைவியரிடம் பரிவோடு நடந்துள்ளார்கள். வீட்டு வேலைகளில் மனைவியருக்குப் பணி விடை புரிந்துள்ளார்கள். ஆட்டுப் பாலைத் தானே கறந்தனர். சமையல் வேலைகளிலும் மனைவிக்குத் துணை புரிந்துள்ளார்கள். அஸ்வத்(ரலி) அறிவிக்கும் நபிமொழி ஒன்று இதோ:

தங்கள் வீட்டிலிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்'' என்று நான் ஆயிஷா பிராட்டியாரை வினவினேன். தங்கள் மனைவிக்குப் பணிவிடை புரிந்து கொண்டிருந்தார்கள்'' என்று ஆயிஷா(ரலி) விடையளித்தார்கள். இதனால் அவர் கொண்ட கருத்து,அவர்கள் தங்கள் மனைவிக்கு உதவியாக ஊழியம் புரிந்து கொண்டிருந்தார்கள் என்பதாகவே இருந்து வந்தது''. நூல்: புகாரி

பெண்களின் மீது தனக்கு மேலாதிக்கம் இருக்கிறது என்ற காரணத்திற்காக எடுத்ததற்கெல்லாம் பெண்களைக் கடுமையாக நடத்துவதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள்.

உங்களில் சிறந்தவர் உங்கள் குடும்பத்திற்கும் மனைவியருக்கும் சிறந்தவர்களே! நான் உங்கள் எல்லோரையும் விட எனது மனைவியரிடத்தில் என்றும் சிறந்த முறையில் நடந்து கொள்கிறேன். என நபி(ஸல்) அவர்கள் நமக்கு நல்லுரை வழங்கியுள்ளார்கள். அறிவிப்பாளர்: ஆயிஷா(ரலி), நூல்: திர்மிதீ, இப்னுமாஜா

எந்தப் பெண்கள் (தம் கணவருக்கு)மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள். (திருந்தாவிடில்) அவர்களைப் படுக்கையிலிருந்து ஒதுக்கிவையுங்கள். அதிலும் திருந்தாவிடில் அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து விட்டால் அவர்கள் மீது (குற்றம் சுமத்த) யாதொரு வழியையும் தேடாதீர், நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவன் வல்லமையுடையவன். அல்குர்ஆன் 4:34

குடும்பக் காரியங்களில் மட்டும்தான் மனைவி கணவனுக்கு மாறு செய்வது கூடாது என்றில்லை. அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டிய, கடமையல்லாத உபரியான வணக்க வழிபாடுகளை ஒரு பெண் செய்வதாயினுங் கூட, கணவனுடைய முன் அனுமதியைப் பெற்றுத்தான் அவள் அதனை நிறைவேற்றுதல் வேண்டும். இதில் கூட ஒரு மனைவி கணவனுடைய விருப்பத்திற்கு மாற்றமாக நடந்து கொள்ளுதல் கூடாது. அப்படியானால் குடும்பச் செயல்பாடுகளில் கணவனுக்கு முரண்பட்டு நடப்பதென்பது எத்துணைப் பாதகமானது என்பதையும் புரிந்து கொள்ளலாம்.

இறைவனுக்குச் செலுத்த வேண்டிய கட்டாயக் கடமையான வணக்கம் தொழுகையாகும். இத் தொழுகையைக்கூட கணவனுடைய திருப்தியைப் பெறுவதற்காகப் சுருக்கமாகத் தொழுது கொள்ள வேண்டுமே தவிர, கணவனின் பொறுமையைச் சோதிக்கும் முகமாக தொழுகையில் நீண்ட நெடிய அத்தியாயங்களை ஓதி நீட்டித்துக் கொண்டிருக்கக் கூடாது.

அபூஸயீதுல் குத்ரீ(ரலி) அறிவிக்கிறார்கள்: நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களோடு இருந்த போது ஒரு பெண்மணி அங்கு வந்தார்.

எனது கணவர் ஸஃப்வான் இப்னு முஅத்தல் நான் தொழும்போது என்னை அடிக்கிறார். இன்னும் நான் (நஃபிலான) நோன்பு பிடிக்கும் போது (அதனை) முறிக்கிறார். சசூரிய உதயம் வரை அவர் ஃபஜ்ரு தொழுவதில்லை என்று கூறினார்.

(அப்போது) ஸஃப்வானும் நபி(ஸல்) அவர்களருகில் இருந்தார். அவள் சொன்னது குறித்து நபி(ஸல்) அவர்கள் அவரை வினவினார்கள்.

அப்பொழுது அவர். அல்லாஹ்வின் தூதர் அவர்களே! நான் தொழும்போது என்னை அடிக்கிறார் என்று அவள் கூறுவதாவது என்ன வெனில் நான் முன்னரே விலக்கியிருக்க அவள் இரு சசூராக்கள் ஓதுகிறாள் என்றார்.

எனவே ஒரு சசூரா மானிடருக்குப் போதுமானது என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவருக்குக் கூறினர்.

(ஸஃப்வான் தொடர்ந்து) நான் நோன்பு பிடிக்கும்போது முறிக்கிறார் என்று அவள் கூறுவது என்னவெனில், நான் வாலிபனாயிருக்கும் போது அவள் (பாட்டிற்கு) நோன்பு நோற்றுக் கொண்டே இருக்கிறாள், நான் பொறுத்திருக்க முடியவில்லை என்றார்.

அப்பொழுது தனது கணவனுடைய அனுமதியின்றி ஒரு பெண் (நஃபில்) நோன்பு நோற்கலாகாது என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.

(ஸஃப்வான் தொடர்ந்து) சசூரிய உதயம் வரை நான் தொழுவதில்லை என அவள் கூறுவது என்னவெனில், நாங்கள் சசூரிய உதயம் வரை விழித்தெழ முடியாத ஒரு குடும்பத்தினர் என்பது நன்கு அறியப்பட்டதாயிருக்கிறது என்றார்.

அவ்வாறாயின், ஸஃப்வானே! நீர் விழித்தெழுந்த உடனே தொழுது கொள்வீராக! என்று நபி(ஸல்) அவர்கள் அருளிச் செய்தனர். நூல்: அபூதாவூத், இப்னுமாஜா

ஸஃப்வானுடைய மனைவி தொழும்போது பாத்திஹா சசூராவுக்குப் பின்னர் இரண்டு மூன்று அத்தியாயங்களை ஒதுவது வழக்கம். தனது மனைவி விரைவாகத் தொழுது மீண்டும் தன்னோடு அளவளாவியிருக்க வேண்டும் என்னும் வேட்கையுடைய ஸஃப்வான், இவ்வழக்கத்தை விரும்பவில்லை. இந்நிலையில் கணவனை மகிழ்விப் பதற்காக ஒரு அத்தியாத்தை ஒதித் தொழுகையைச் சுருக்கிக் கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் ஸஃப்வானின் மனைவிக்கு உபதேசம் செய்தார்கள்.

கடமையான தொழுகையைச் சுருக்கிக் கொள்வது மட்டுமன்று, கணவனின் இசைவைப் பெற்ற பின்னரே நஃபிலான நோன்பைப் பிடிக்குமாறு நபி(ஸல்) அவர்கள் நல்லுரை புரிந்துள்ளார்கள்.

இந்த அளவுக்குக் கணவனுக்கு ஒரு மிக முக்கியமான இடத்தை இஸ்லாம் வழங்கியிருக்கின்றது. இது மட்டு மல்லாது இன்னும் எத்தகைய சிறப்பினை எல்லாம் இஸ்லாம் கணவனுக்குத் தந்துள்ளது தெரியுமா?

இறைவன் ஒருவனுக்கே மனிதன் ஸஜதா செய்தல் வேண்டும். எல்லாவற்றையும் படைத்துக் காத்துப் பரிபாலித்து இரட்சிப்பவன் அவனே. எனவே, அவனால் இரட்சிக் கப்படும் படைப்புக்கள் அவனுக்கு ஸஜதா செய்தல் இயல்பே. இறைவனல்லாத வேறு எவருக்கும் அல்லது எதற்கும் எவரும் ஸஜதா செய்தல் கூடாது.

அப்படி மனிதரில் ஒருவர் இன்னொருவருக்கு ஸஜதா செய்வது தகும் என்றிருக்குமாயின் ஒரு கணவனுக்கு மனைவியை ஸஜதா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். தனது மனைவி,குழந்தைகளை இரட்சிப்பதற்காகக் கணவன் செய்கின்ற முயற்சிகளையும் தியாகங்களையும் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, அவன் இத்தகைய ஒரு மாபெரும் மரியாதைக்குரியவனாகத் திகழ்கின்றான்.

இறைவனுடைய இரட்சிப்பிற்காக அடியான் ஒருவன் எப்படி அவனுக்கு ஸஜதாவின் மூலம் நன்றி நவில்கிறானோ அதுபோல ஒரு கணவன் தன்னை இரட்சிப்பதற்காக மனைவி ஒருத்தியும் அவனுக்கு நன்றி பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறாள். இறைவன் அல்லாத இன்னொருவனுக்கு இந்த ஸஜதாவைச் செலுத்தலாம் என்றிருக்குமாயின், கணவனுக்காக ஸஜதா செய்யும்படி மனiவி கட்டளையிடப் பட்டிருப்பாள்.

நான் ஒருவருக்கு ஸுஜுது செய்யும்படி (வேறு) ஒருவருக்குக் கட்டளையிடுவதாயிருந்தால் தம் கணவருக்கு ஸுஜுது செய்யும் படிப்பெண் களுக்குக் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), நூல்: திர்மிதீ

இந்த நபிமொழியை மேலும் விளக்கும் விதமாக இன்னொரு நபிமொழி அமைந்துள்ளது.

கைஸ் இப்னு ஸஃத்(ரலி) அறிவிக்கிறார்கள். நான் ஹீராவுக்குச் சென்றபோது அங்குள்ளவர்கள் தமது தலைவனுக்கு ஸுஜுது செய்யக்கண்டேன்.அப்போது ஸுஜுது செய்யப்படுவதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மிகவும் உரிமையுடையவர் என்று சொல்லிக் கொண்டேன்.

பின்னர் ரஸுலுல்லாஹ்(ஸல்) அவர்களிடம் வந்து, நான் ஹீராவுக்குச் சென்றிருந்தேன். அங்குள்ளவர்கள் தமது தலைவனுக்கு ஸுஜுது செய்யக் கண்டு ஸுஜுது செய்யப்படுவதற்கு தாங்கள் தான் மிகவும் உரிமையுடைய வர்களாயிருக்கிறீர்கள் என்றேன்.

அப்போது, எனது சாமதியின் அருகே நீர் நடக்க நேர்ந்தால் அதற்கு ஸுஜுது செய்வீரா? என நபி (ஸல்) அவர்கள் என்னைக் கேட்டார்கள். நான் மாட்டேன் என்றேன். உடனே அப்படிச் செய்யாதிருப்பீராக! ஒருவருக்கு ஸுஜுது செய்யும்படி (வேறு) ஒருவரை நான் ஏவியிருக்கக் கூடுமாயின்கணவர்களுக்கு மனைவிகள் மீது அல்லாஹ் விதித்த மகத்தான கடமையை உத்தேசித்து, பெண்களைத் தம் கணவருக்கு ஸுஜுது செய்யும் படி ஏவியிருப்பேன் என்று நபி(ஸல்) எடுத்துரைத்தார்கள். நூல்:அபூதாவூது

முஆத் இப்னு ஜபல்(ரலி) வாயிலாக இதே நபிமொழி அஹ்மத் •நூலிலும் பதியப்பட்டுள்ளது.

குடிமக்கள் அந்நாட்டுத் தலைவனுக்கு ஸஜதா செய்ததை நபி(ஸல்) அவர்கள் கண்டித்ததுள்ளார்கள். குடிமக்கள் தம் தலைவனுக்குக் காட்ட வேண்டிய மரியாதையைக் காட்டிலும் ஒரு மனைவி தன் கணவனுக்கு மரியாதை செலுத்தக் கடமைப்பட்டுள்ளாள் என்பது இந்நபிமொழியில் புலனாகிறது.

அத்தோடு ஒரு உம்மத் தனது நபிக்கு ஸஜதா செய்வதைக் காட்டிலும் அல்லது ஒரு முஸ்லிம் நபி(ஸல்) அவர்களுக்கு ஸஜதா செய்வதைக் காட்டிலும் ஒரு மனைவி தன் கணவனுக்கு ஸஜதா செய்வதுவே மிக்க அருகதையுடையது என்னும் கருத்தையும் இதில் பெற முடிகின்றது.

குடிமக்களுக்கு ஒரு தலைவன் ஆற்றுகின்ற கடமைகளை விட, தனது உம்மத்துக்களுக்கு நபிமார்கள் ஆற்றுகின்ற கடமைகளை விட, ஒரு மனைவிக்கு அவள் கணவன் புரிகின்ற கடமைகள் மகத்தானவை.

கணவர்களுக்கு மனைவிகள் மீது அல்லாஹ் விதித்துள்ள மகத்தான கடமை என்பதாக நபி(ஸல்) அவர்கள் இதனை எடுத்தியம்பியுள்ளனர். இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது ஒருவர் இன்னொரு வருக்கு ஸஜதா செய்யலாம் என்பது ஆகுமானதாயிருக்குமாயின் யாரும் யாருக்கும் ஸஜதா செய்வதைக் காட்டிலும் ஒரு மனைவி கணவனுக்கு ஸஜதா செய்வதுவே ஏற்புடையதாக இருந்திருக்கும். ஆனால் அதற்கு, இறையனுமதியில்லாத காரணத்தினால் நபி(ஸல்) அவர்கள் அங்ஙனம் கட்டளையிடவில்லை.

ஆனால் இன்று மார்க்க உண்மைகளை அறியாத பல பெண்கள் கபுருகளுக்கு ஸஜதா செய்து கிடக்கின்றனர், இதனையும் நபி (ஸல்) அவர்கள் இதே நபிமொழியில் தடுத்துள்ளார்கள்.

ஆக, இக்கருத்துக்களையெல்லாம் உள்ளடக்கியிருக்கின்ற இந்த நபிமொழி யின் வாயிலாக நாம் எதைத் தெரியவருகிறோம்? இறைவனுக்குப் பிறகு ஒரு மனைவியானவள் யாருக்கு அதிகம் கடமைப்பட்டிருக்கிறாள் என்றால், தன் கணவனுக்கேயாகும் என்ற பதிலை இதிலிருந்து பெறுகிறோம்.

எனவே அல்லாஹ் விதித்த மகத்தான கடமைகளுக்குக் கட்டுப்பட்டு ஒரு மனைவியைப் பராமரிக்கின்ற கணவன், உயர்ந்த நிலையில் வைத்து மதிப்பதற்குரியவன் என்பதில் எவ்விதச் சந்தேகமுமில்லை. ஆனால் நடைமுறை வாழ்க்கையில் நாம் எதைக் காண்கிறோம்? அல்லாஹ்வை அஞ்சி மனைவியரிடத்தில் கணவர்கள் எத்துணைப் பரிவாக நடந்து கொண்டாலும் மனைவியர் அதை நன்றியோடு நினைத்துப் பார்ப்பதில்லை.

ஒரு நபிமொழி இதோ: நான் என் வயதையொத்த சில பெண்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது எங்கள் பக்கமாக நபி(ஸல்) அவர்கள் சென்றார்கள். எங்களை நோக்கி ஸலாம் உரைத்தார்கள்.
நல்லவிதமாக நடந்து கொள்ளும் கணவர்களுக்கு நீங்கள் நன்றியில்லாமல் நடப்பதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.
மேலும் கூறினார்கள் பெண்களாகிய உங்களில் ஒரு சிலர் தம் பெற்றோரிடம் கன்னிப் பெண்ணாக உட்கார்ந்திருக்கின்றீர்கள். பிறகு வல்ல அல்லாஹ் அவளுக்குக் கணவனை அளிக்கின்றான். ஏதாவதொரு விஷயத்தில் கோபங்கொண்ட அவள், தன் கணவனைப் பார்த்து உன்னால் எனக்கு எந்த நிம்மதியும் கிடைத்ததில்லை. நீ எனக்கு எந்த நன்மையும் செய்ததில்லை என்று கூறுகிறாள். அறிவிப்பவர்: அஸ்மாபின்த்யஸீத்அல்அன்ஸாரிய்யா,நூல்: அல்அதபுல் முஃப்ரத்

முஸ்லிமல்லாத பல குடும்பங்களில் மோசமாக நடந்து கொள்ளும் கணவர்களிடம் கூட மனைவியர்கள் பெரும் பாலும் நன்றி கெட்டு நடப்பதில்லை. ஆனால் பல முஸ்லிம் குடும்பங்களில் நல்லவிதமாக நடந்து கொள்ளும் கணவன்மாரிடமும் பெண்கள் நன்றியில்லாமல் நடந்து கொள்வதைக் காணமுடிகின்றது.

பெண்கள் இங்ஙனம் நடந்து கொள்வதாக நபி(ஸல்) அவர்கள் அறிந்த போது, அதுகுறித்து அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்கள். இவ்வாறு நன்றி கெட்டு நடப்பதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு அப்பெண்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

கணவர் வாயிலாகப் பெண்களுக்குக் கிடைக்கும் பேருபகாரத்தையும் இந்நபிமொழி நினைவூட்டிக் காட்டுகின்றது. மணமாகாத கன்னியாக இப்பெண்கள் தம் பெற்றோரிடம் வெறுமனே அமர்ந்திருந்தபோது அல்லாஹ் தன் அளப்பெரும் அருளினால் அவர்களுக்குத் தக்கதோர் துணையை வழங்கினான். இதனை அப்பெண்கள் நன்றியோடு நினைத்துப் பார்க்கக் கடமைப் பட்டுள்ளார்கள். நல்லதோர் கணவர் தனக்கு வாய்த்ததே ஒரு பெரும் நன்மையாயிருக்கும் போது, அதனை அப்பெண்கள் எளிதில் மறந்து விடுகின்றனர்.

இது மட்டுமன்றி அக்கணவர் வாயிலாக எல்லா இன்பங்களையும் பெற்றுக் கொள்கின்றனர். உணவு, உடை, உறையுள் போன்ற அனைத்துத் தேவைகளையும் தம் மனைவியருக்காக அக்கணவர்கள் நிறைவேற்றிக் கொடுக்கின்றனர். இப்படியெல்லாம் கணவரிடமிருந்து பயனடைந்த பின்னருங்கூட, சின்னச் சின்ன விஷயங்களுக்காக அப்பெண்கள் தம் கணவன் மேல் எரிந்து விழுகின்றனர். கணவன் வாயிலாக ஏதேனும் ஒரு காரியம் அவர்களுக்குக் கைகூடாமல் போகலாம். உடனே பொறுமையிழந்து போகின்றனர். இதுவரை அவன் செய்த பேருபகாரங்களையெல்லாம் ஒரு நொடியில் மறக்கத் தொடங்கி விடுகின்றனர்.

உமக்கு வாழ்க்கைப்பட்டு எனக்கு என்னதான் சுகம் கிடைத்தது என்று உடனே மூக்கைச் சிந்தத் தொடங்கி விடுகின்றனர். மனைவியிடம் காணப்படும் இந்தக் குறைபேசும் இயல்பும் நன்றி மறந்த நடத்தையும் குடும்ப அமைதிக்குப் பெரிதும் பங்கம் விளைவிப்பனவாகும். எனவே பெண்கள் இது போன்று நன்றி கொன்றவர்களாக ஒரு போதும் நடந்து கொள்ளுதல் கூடாது என நபி(ஸல்) அவர்கள் எடுத்துணர்த்தியுள்ளார்கள்.

மாறாக, தம் கணவனிடம் நன்றியோடு நடந்து அவனுடைய ஈமானை உறுதிப்படுத்துவதற்கு உதவியாக இருப்பவளே நல்ல மனைவியாவாள்.இத்தகைய ஒரு மனைவி வாய்ப்பது என்பது ஒருவனுக்கு ஒரு பெரும் புதையல் கிடைப்பது போன்றதாகும்.

ஒருவனுடைய சேமிப்பில் சிறந்ததை நான் உமக்குத் தெரிவிக்கட்டுமா? (அந்தச் சேமிப்பு) நல்லொழுக்கமுடைய மனைவியே என்பது நபி மொழியாகும். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி), நூல்: அபூதாவூத்

நல்லொழுக்கமில்லாத, ஒழுக்கக் கேடான பெண் ஒருவனுக்கு மனைவியாக வாய்த்து விட்டால், அதைவிடக் கேடு பயக்கக்கூடிய வேறு எதுவும் அவனுக்குக் கிடையாது எனலாம்.

ஆண்களுக்கு (ஒழுக்கமற்ற) பெண்களைக் காட்டிலும் மிகத் தீய சோதனைக்குரியது எதனையும் எனக்குப் பின்னே நான் விட்டுச் செல்லவில்லை என நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். அறிவிப்பவர்: உஸாமா இப்னு ஜைத் (ரலி), நூல்: முஸ்லிம்

இவ்வுலகம் இனிமையானது, செழிப்பானது. மேலும் நிச்சயமாக அல்லாஹ் அதில் (ஆட்சி புரியும்) பிரதி நிதிகளாக உங்களை ஆக்கி, நீங்கள் எப்படிச் செயல் படுகிறீர்கள் என்று பார்க்கின்றான். எனவே உலக விஷயங்களில் அஞ்சிப் பேணி நடப்பீராக! இன்னும் (கெட்ட) பெண்கள் விஷயத்தில் அஞ்சுங்கள். ஏனெனில் இஸ்ரவேலருக்கு முதலாவது சோதனை, பெண்களிலேயே நடந்தது. அறிவிப்பவர்: அபூஸயீதுல் குத்ரீ(ரலி), நூல்: முஸ்லிம்

இந்த நபிமொழிகள் பெண்களின் ஒழுக்கக் கேட்டினால் ஏற்படும் சமூகச் சீரழிவுகளை எச்சரித்து நிற்கின்றன. ஆவதும் பெண்ணாலே, அழிவதும் பெண்ணாலே என்பர். ஒரு பெண் நினைத்தால் ஒரு ஆடவனை நல்ல மனிதனாகப் புடம் போடவும் செய்யலாம். அவளே அவனைத் தரங்கெட்டவனாகவும் ஆக்கிவிடலாம். எனவே பெண்கள் இவ்விஷயத்தில் மிகவும் பேணுதலாக நடந்து கொள்ளுமாறு நபி(ஸல்) அவர்கள் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்கள். இதுபோலவே தீய ஆண்கள் விஷயத்திலும் பெண்கள் கவனமாக இருக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

கணவன் மனைவியருக்கிடையே உள்ள உறவானது ஆண்டவனுக்கும் அடியானுக்கும் உள்ள உறவுக்கு அடுத்த நிலையில் வைத்துப் பேசப்பட்டிருப்பதைக் கணவனுக்கு ஸஜதா செய்யச் சொல்லியிருப்பேன்' என்ற நபிமொழி வாயிலாக அறிந்தோம்.

இறைவனுக்கு மட்டுமே விசுவாசம் கொண்டு, அவன் கட்டளைகளுக்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டியது அடியானின் கடமையாகும். இறைவனுக்கு இணை வைக்கின்ற செயலை, நம்பிக்கை மோசடியாகவும், மாபெரும் மன்னிக்க முடியாத பாவமாகவும் இஸ்லாம் கருதுகின்றது.

அன்ஸாரிகளின் தலைவராகிய ஸஃது இப்னு உபாதா(ரலி) அவர்களுக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே நடந்த ஒரு உரையாடல் இதோ:

ஸஃது இப்னு உபாதா: என் மனைவியோடு வேறு ஒரு ஆடவனைக் கண்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரும் வரை நான் அவளை விட்டுவைக்க வேண்டுமா?

நபி(ஸல்): ஆம்

ஸஃது இப்னு உபாதா: அவ்வாறில்லை. சத்தியத்தைக் கொண்டு உம்மை அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக, அதற்கு முன்பே என்னுடைய வாளுக்குஅவளை இரையாக்கி விடுவேன்.

நபி(ஸல்): உங்கள் தலைவர் (ஸஃது) சொல்லுவதை (அன்சாரிகளே) கேளுங்கள். அவர் ரொம்ப ரோஷக்காரராக இருக்கிறார். நான் அவரைவிட ரோஷக்காரன். அல்லாஹ் என்னைவிடப் பெரிய ரோஷக்காரன். அறிவிப்பவர்: ஸஃது இப்னு உபாதா(ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்

தனக்கு இணைவைக்கப்படுவதைக் கண்டு இறைவன் எப்படி ரோஷப்படுகின்றானோ, அது போன்று ஒரு மனைவி, கணவனல்லாத இன்னொருவனுக்கு உடன்படும் போது கணவன் ரோஷப்படுகின்றான் என்பதை இதன் மூலம் அறிகிறோம்.

படைத்த இறைவனுக்கும் படைப்புக்களுக்குமிடையே உள்ள உறவானது ஆண்டான் அடிமை உறவாகும். படைப்பினங்களுக்கிடையே உள்ள உறவுநிலைகளில், அதுவும் மனித உறவுகளில் ஒருவர் இன்னொருவருக்குக் கட்டுப்பட்டு நம்பிக்கையோடு செயல்பட வேண்டிய முன்னுரிமை மிக்க உறவு ஒன்று உள்ளதென்றால், அது கணவன், மனைவி உறவே ஆகும். இந்த உறவைப் பேணி நடந்து கொள்ள வேண்டியது கணவன் மனைவியாகிய இரு சாராருடைய தலையாய கடமையாகும்.


குழந்தைகள் இறையருள்செல்வங்கள்

திருமணமானதும் கணவன் மனைவியரின் அடுத்த எதிர்பார்ப்பு மக்கட்பேறாகும். திருமணமும் அதைத் தொடர்ந்த மக்கட்பேறும் ஆகிய இவற்றின் இடையறாத இயக்கமே குடும்ப இயலையும் சமூகவியலையும் நிர்மாணிக்கிறது எனலாம்.

அல்லாஹ் உங்களுக்கு உங்களிலிருந்தே மனைவியரை ஏற்படுத்தியிருக்கிறான், உங்களுக்கு உங்கள் மனைவியரிலிருந்து பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் ஏற்படுத்தி உங்களுக்கு நல்ல பொருள்களிலிருந்து ஆகாரமும் அளிக்கின்றான். அல்குர்ஆன் 16:72

திருமணம் புரிவதன் வாயிலாகக் கணவன் மனைவியர் தம்முள் ஒன்று கூடிக் கருத்தொருமித்துக் காதலின்பம் பெறுவதோடு, மக்கள் செல்வங்களையும் ஈன்றெடுக் கின்றனர். திருமணம் செய்து கொண்ட அனைவரும் தங்கள் விருப்பம் போல விரும்பியவாறு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது இயலாத ஒன்றாகும். அதுவும் இறைவனது பிடியில் அவன் விருப்பத்தைப் பொறுத்தே அமைக்கின்றது.

வானங்கள் பூமியினுடைய ஆட்சி அல்லாஹ்வுக்குரியதே. அவன் விரும்பியவாறு எதையும் படைக்கிறான். அவன் விருபியவர்களுக்குப் பெண் குழந்தைகளாகக் கொடுக்கிறான். அவன் விரும்பியவர்களுக்கு ஆண் குழந்தை களாகக் கொடுக்கிறான் அல்லது ஆணையும் பெண்ணையும் கலந்தே கொடுக் கிறான். மேலும் அவன் விரும்பியவர்களை மலடாகவும் ஆக்கிவிடுகின்றான். அல்குர்ஆன் 42:49,50

குழந்தையைப் பெறுவது என்பது தாய் தந்தையரின் முழு முதல் விருப்பத்தைப் பொறுத்ததன்று, அவர்களுடைய பங்கு பணியும் அதில் அடங்கியிருக்கிறது என்றாலும் இவ்விஷயத்தில் முடிந்த முடிவான கட்டுப்பாடு இறைவனின் நாட்டத்தைப் பொறுத்தே இருக்கின்றது. குழந்தை பெற்றது போதும், இனி வேண்டாம் என எண்ணுவோர் மென்மேலும் குழந்தைகளைப் பெற்றுக் கொண்டிருக்கக் காண்கிறோம். அதே நேரத்தில் ஒரு குழந்தைக்காக அரிய சிகிச்சை முறைகளையெல்லாம் மேற்கொண்ட பின்னரும் அந்தப் பேறு வாய்க்கப் பெறாதவர்களையும் பார்க்கின்றோம்.

ஆண் குழந்தை ஒன்றுக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து முயற்சிப்பவர்கள் பெண் குழந்தைகளாகவே பெற்றெடுத்து விட்டு ஓய்ந்து போதலையும் காண்கிறோம். அது போலவே பெண் குழந்தைக்கு ஆசைப்பட்டு ஏமாந்து போய் நிற்கின்ற பெற்றோர்களையும் பார்க்கின்றோம். இவையெல்லாம் நமக்கு இறைவனின் தன்னிகரற்ற படைப்பாற்றலைப் பறைசாற்றி நிற்கவில்லையா?

திருமணமான ஒவ்வொரு தம்பதியரும் தமக்குப் பின் தம் குடும்பப் பெயரைத் துலங்கச் செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டுமே என்பது குறித்து மிகவும்அக்கறை எடுத்துக் கொள்கின்றனர். ஒரு குழந்தையையேனும் காலாகாலத்தில் பெற்று எடுத்துவிட்டால் அதுவே போதும். திருமணத்தின் வாயிலாகத் தம்பதிகள் கருதிய பயன் எதுவோ அது கைகூடி விட்டதாக ஆனந்தம் கொள்கின்றனர். இந்தப் பேறு உரிய காலத்தில் வாய்க்கப் பெறாமல் போகும்போது அதனால் தம்பதியரும் உற்றாரும் எந்த அளவுக்குக் கவலைப்படுகின்றனர் என்பதை அந்நிலையில் இருப்பவர்கள் நன்கு உணரவியலும்.

நபிமார்கள் கூட இத்தகைய குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கி நின்றிருக்கின்றனர். நபி ஜகரிய்யா(அலை) அவர்கள், முதுமைப்பருவம் அடைந்தபிறகும் கூட தனக்கு ஒரு குழந்தை வாய்க்கவில்லையே என்று மிகவும் கவலைப்பட்டார்கள்.

இறைவா! உன்புறத்திலிருந்து எனக்கு ஒரு வாரிசை வழங்குவாயாக!'' என்று இறைவனிடம் நம்பிக்கையோடு பணிந்து பிரார்த்தனை புரிந்தார்கள். இறைவன் அவர்களின் இறைஞ்சுதலை ஏற்றுக் கொண்டான். தள்ளாத வயதில் முதுமைப் பருவத்திலிருந்த ஜகரிய்யா(அலை) அவர்களின் மனைவிக்குக் குழந்தைப் பேற்றை நல்கினான். எஹ்யா (அலை) அவர்கள் இம்முதிய பெற்றோருக்குப் புதல்வராகப் பிறந்தார்கள். இதனைத் திருமறை குர்ஆனில் 19-ஆம் அத்தியாயத்தின் 2 முதல்11 வரையுள்ள வசனங்கள் எடுத்துரைத்துள்ளன.

ஜகரிய்யா (அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கிய அருள்-ரஹ்மத்-இது என்று திருமறை இதனைக் குறிப்பிடுகின்றது.

மரியம் (அலை) அவர்களுக்கு ஈஸா நபி(அலை) அவர்களைப் புதல்வராக வழங்கியது பற்றிக் கூறும்போதும் அதனைத் தன்னிடமிருந்து வந்த அருள்-ரஹ்மத்-என்பதாக இறைவன் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன்: 19:21)

குழந்தைப் பேற்றிற்காக ஏங்கியது மட்டுமின்றி, பிறந்துவிட்ட குழந்தைகளின் மீது கொண்ட பாசத்தின் காரணமாகப் பெற்றோர் எவ்வளவு சஞ்சலமடைந்தனர் என்பதற்கும் கூட, நபிமார்களின் வாழ்வில் முன்னுதாரணங்களைக் காண்கிறோம்.

யஃகூப் நபி(அலை) அவர்கள் தமது மகன் யூஸுஃப் (அலை) அவர்களிடம் கொண்டிருந்த அன்பின் ஆழத்தையும் அது தொடர்பாக அவர்கள்பட்ட சஞ்சலத்தையும் திருமறை குர்ஆனின் 12-ஆம் அத்தியாயம் எடுத்தோதுகின்றது.

இதுபோலவே நூஹ் நபி(அலை) அவர்கள், தம் மகன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத போதும் கூட அவனிடம் கொண்டிருந்த பிள்ளைப்பாசத்தின் காரணமாக, அவனை அழிவிலிருந்து காப்பாற்றித்தருமாறு இறைவனிடம் பிரார்த்தனை புரிந்து நின்றதையும் காண்கிறோம். (அல்குர்ஆன் 11:45)

நபி(ஸல்) அவர்கள், தமது புதல்வர் இப்ராஹிமிடம் கொண்டிருந்த பிள்ளைப்பாசம் எத்தகையது என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவிக்கின்றது.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் அபூஸைஃபினில் கைன் என்பவரிடம் சென்றோம். அவர் (நபியவர்களின் புதல்வரான) இப்ராஹி முடைய பால்குடித் தாயின் கணவராவார். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இப்ராஹிமை எடுத்து அவரை முத்திமுகர்ந்தனர்.

இதன் பின்னர் இப்ராஹிமின் உயிர் பிரியும் தருணத்தில் அவர் (அபூ ஸைஃபினில் கைன்) இடத்திற்கு நாங்கள் சென்றோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இருவிழிகளும் நீரைச் சொரியலாயின. அப்போது அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! தாங்களுமா (அழுகின்றீர்கள்)?'' என்று வினவினார்கள்.

உடனே நபி(ஸல்) அவாகள் அவ்ஃபின் புதல்வரே! நிச்சயமாக இது அருள், ரஹ்மத்'' ஆகும் எனக் கூறினர்.

மீண்டும் கண்ணீர் சிந்தியவர்களாக, நிச்சயமாகக் கண் நீர் சொரிகின்றது, நெஞ்சம் கவலை கொள்கின்றது. (எனினும்) நம் இரட்சகன் பொருந்தாததை நாம் கூற மாட்டோம்.

இப்ராஹிமே! மெய்யாகவே உமது பிரிவால் நாங்கள் துக்கமடைகின்றோம் என்று எடுத்துரைத்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

இப்ராஹிம் என்னும் தன் பாலகர் மீது நபி(ஸல்) அவர்கள் கொண்டிருந்த அன்பின் பிணைப்பை இந்நபிமொழி நன்கு வெளிப்படுத்தியுள்ளது. குழந்தைகளைக் கைகளில் வாரியெடுத்து முத்தி முகர்தலை நபி(ஸல்) அவர்கள் தம் இயல்பாகக் கொண்டிருந்தார்கள்.

இதே பாசத்திற்குரிய புதல்வர் இப்ராஹிம் இறப்பெய்திய போது, நபி (ஸல்) அவர்களால் துயரத்தைக் கட்டுப்படுத்த இயலவில்லை. கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர்ப் பெருக்கெடுக்கலாயிற்று. இதைப் பார்த்தார் அருகிலிருந்த நபித்தோழர் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் அவர்கள்.

இந்த அகிலமனைத்துக்கும் மாபெரும் அருளாக அனுப்பப்பட்ட நபியே அழுகின்றாரே! இது அவர்களுடைய மாபெரும் நபித்துவ அந்தஸ்துக்குத் தகுந்த ஒன்றல்லவே! என்றெல்லாம் அந்த நபித்தோழர் கருதியிருக்க வேண்டும். எனவே, அவர் நபி(ஸல்) அவர்களைப் பார்த்து, தாங்களுமா கண்ணீர் விட்டு அழுகின்றீர்கள்? என்று வினவுகின்றார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் இன்னஹா ரஹ்ம(த்)துன்', நிச்சயமாக இது அருளாகும் என்று பதிலுரைத்தார்கள். ஜகரிய்யா நபியவர்களுக்கு இறைவன் அருளிய குழந்தைப் பேற்றைச் சொல்லும் போதும் (19:20) மரியம் அவர்களுக்கு இறைவன் நல்கிய குழந்தைப் பாக்கியத்தைச் சுட்டும்போதும் (19:21) இதே ரஹ்ம(த்)துன்' என்ற சொல்லையே பயன்படுத்து கின்றான் இறைவன். அதற்கேற்ப நபி(ஸல்) அவர்களும் குழந்தைப் பாக்கியம் என்பது ஒரு பேரருளாகிய ரஹ்மத்' என்பதை இந்த இடத்தில் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

அல்லாஹ் வழங்கிய இந்த ரஹ்மத் என்னும் பேரருளைத் தாம் இழந்துவிட்டபோது, நபி(ஸல்) அவர்களால் துக்கத்தைக் கட்டுப்படுத்திக்கொள்ள இயலவில்லை. என்ன தான் மாபெரும் நபியாக இருந்தாலும் குழந்தையை இழந்து நிற்கும் ஒரு தந்தையின் மனநிலை என்ன பாடுபடுமோ, அதிலிருந்து அவர்களால் விலகியிருக்க முடியவில்லை. எனவே அவர்களுடைய பாச ஊற்று, கண்ணீராக வழிகின்ற காட்சியைக் காண்கிறோம். இதுவே பிள்ளைப் பாசமாகும்.

நபி(ஸல்) அவர்கள் வேறு எவரிடத்திலும் வைத்திராத அளவுக்குப் பாச உணர்வைத் தம் அருமை மகள் பாத்திமா (ரலி) அவர்கள் மீது கொண்டிருந்தார்கள். இதனைப் பின்வரும் நபிமொழி எடுத்துக்காட்கின்றது.

ஆயிஷா(ரலி) கூறுகிறார்கள்:
உருவ அமைப்பிலும் ஒழுக்கத்திலும் ஜாடையிலும் (மற்றோர் அறிவிப்பின்படி) பேச்சுவார்த்தையிலும் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுக்கு பாத்திமாவை, விட மிகவும் ஒப்பானவர் ஒருவரையும் நான் கண்டதில்லை. அவர்களிடம் அவர் (பாத்திமா) வரும்போது அவருக்காக நபியவர்கள் எழுந்து நின்று அவர் கரத்தைப் பற்றி அவரை (புருவ மத்தியில்) முத்தமிட்டுத் தங்கள் இருக்கையில் அவரை அமர்த்துதல் வழக்கம். நூல்: அபூதாவூது

தந்தையும் மகளும் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த அன்பும் மதிப்பும் எத்தகையன என்பதை இதனால் நன்கு தெரிகின்றோம். குழந்தைகள் மீது அன்பு பாராட்டாத வரை நபி(ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். அன்பு செலுத்துவதற்கு மிகவும் அருகதையுடையவர்களாகக் குழந்தைகள் திகழ்கின்றார்கள். இவர்கள் மீது யார் அன்பு செலுத்துகிறார்களோ, அவர்கள் அன்பு செலுத்தப்படுவார்கள்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் இக்கருத்துடைய நபிமொழியை அறிவித்துள் ளார்கள். அக்ரவுப்னு ஹாபிஸ் (ரலி) தம்மோடு இருக்கும்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், அலியின் புதல்வர் ஹஸனை முத்தமிட்டார்கள்.

அப்போது எனக்குப் பத்து மக்கள் உள்ளனர், நான் அவர்களில் ஒருவரைக் கூட முத்தமிட்டதில்லை'' என்று அக்ரவு கூறினார்.

உடனே அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் அவரை நோக்கி அன்பு செலுத்தாதவன் அன்பு செலுத்தப்பட மாட்டான்'' எனத் திருவாய் மலர்ந்தருளினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

குழந்தைகளிடம் அன்பு பாராட்டாதவரிடம் குழந்தைகளும் மற்றவர்களும் அன்பு பாராட்டாமல் இருப்பதோடு இறைவனும் அத்தகையவர்களிடம் அன்பு பாராட்டுவதில்லை என்ற பொருளையும் இந்நபி மொழி நயந்து நிற்கின்றது.

குழந்தைகளிடம் அன்பு பாராட்டுதல் தொடர்பாக அரபி ஒருவருக்கும் நபி(ஸல்) அவர்களுக்குமிடையே நடந்த உரையாடல் இங்குக் கருதிப்பார்ப்பதற்குரியதாகும்.

ஒரு அரபி நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்.

(நபிகளாரைப் பார்த்து) நீங்கள் குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்கள் அவர்களைப் முத்தமிடுவதில்லையே!'' என்றார்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் உனது நெஞ்சத்தை விட்டு அன்பை அகற்றிவிட்டால், நான் உனக்கு என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

குழந்தைகளைப் பற்றிப் பேசும்போதும் அவர்களிடம் செலுத்துகின்ற அன்பைப் பற்றிக் குறிப்பிடும்போதும் ரஹ்மத்' என்ற சொல் மீண்டும் மீண்டும் பயன்படக் காண்கிறோம். மேற்கண்ட நபி மொழியிலும்இச்சொல்லே இடம் பெற்றுள்ளது.

ரஹ்மத்' என்னும் அரபிச் சொல் அன்பு, அருள், கருணை, பாசம், நேசம் முதலிய பல பொருள்களை உள்ளடக்கி நிற்கின்றது. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய இறைவன் தனது தன்னிகரற்ற பண்புகளைக் குறிக்கும் போது, ரஹ்மான், ரஹீம் என்ற சொற்களையே முன்னிலைப் படுத்துகின்றான்.

தாயின் கர்ப்பபையைச் சுட்டுவதற்கும் ரஹ்ம்' என்னும் அரபிச்சொல் பயன்படுகின்றது. தாய்மார்களின் கர்ப்ப அறைகள் ஈன்ற செல்வங்களே மக்கள் பாக்கியங்களாகும். இதிலிருந்து உலகுக்கு வந்த மனிதர்கள் அனைவரும் ஒருவரோடு ஒருவர் அன்பு பாராட்டி வாழக் கடமைப்பட்டுள்ளனர்.

கருவறையைப் பற்றிக் குறிப்பிடும் போதும் சரி, அன்பு பாராட்டி வாழும் மனித சமூகத்தைக் குறிப்பிடும் போதும் சரி, திருமறை குர்ஆன் அர்ஹாம்' என்னும் சொல்லை இவ்விடங்களில் பயன்படுத்தக் காண்கிறோம். ரஹ்ம்' என்னும் ஒருமைச் சொல்லுக்குரிய பன்மையே அர்ஹாம்' ஆகும்.
கணவனும் மனiவியும் ஒருவருக்கொருவர் அன்பு செலுத்தி வாழும்போது அதன் பயனாக அந்த அன்பின் விளைவாகக் குழந்தை வந்து பிறக்கிறது. அன்பின் அடித்தளமாகி கருக்குவளையில் பூத்த பாசமலர்களாகிய இக்குழந்தைகளை அன்பு வடிவமாகவே காண்கின்றனர் பெற்றோர்.

குடும்ப உறவிலிருந்து மகிழ்க்கும் இந்த அன்புணர்ச்சியானது ஒட்டுமொத்த சமுதாயத்தை நோக்கியும் வியாபித்துப் பரந்து செல்ல வேண்டும் என இஸ்லாம் எதிர்பார்க்கின்றது.

விண்ணில் பெரிய பெரிய கோள்களும் நட்சத்திரங்களும் புவிஈர்ப்பு விசையால் எங்ஙனம் கட்டுப்பட்டுக் கிடக்கின்றனவோ அதுபோல மனித சமுதாயம் மண்ணில் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் திகழ்வதற்குத் தேவையான மனித ஈர்ப்பு விசை எது என்றால் அது அன்பேயாகும், இந்த அன்பின் பயிற்சிக்கூடமே குடும்பம். இங்கே மனிதர்களுக்கு அன்பைப் புகட்டும் பயிற்சியாளர்களே குழந்தைகள்!.

குழந்தைகளை ஓர் அருள் பேறாக, ரஹ்மத் ஆக இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ளான். பிறந்த குழந்தை ஆணோ பெண்ணோ எதுவாயினும், இறை நாட்டம் இது என்பதைப் பொருந்திக் கொண்டு அதனைப் பேணி வளர்த்திட வேண்டியது பெற்றோர் தம் தலையாய கடமையாகும்.

ஆண் குழந்தைகள் மீது அதிக விருப்புக் கொள்வதும் பெண் குழந்தைகள் மீது அதீத வெறுப்புக் காட்டுவதும் மடமைக் காலத்து நடை முறைகளாயிருந்தன என்பதைத் திருமறை குர்ஆன் வாயிலாகத் தெரிய வருகிறோம்.

பெண்கள் மீது இயல்பாகவே மோகம் கொள்கிறான் மனிதன். பெண்கள் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது என்கிறது திருமறை குர்ஆன் (3:14).. எனினும் தனக்குப் பெண் குழந்தை பிறப்பதை மட்டும் ஏனோ மனிதன் விரும்புவதில்லை.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பிறந்துள்ளது என்று நன்மாராயம் கூறப்பட்டால் அவன் முகம் கறுத்து விடுகின்றது. அவன் கோப முடையவனாகிறான்; எதைக் கொண்டு நன்மாராயம் கூறப்பட்டானோ அந்தக் கெடுதிக்காக (தம்) சமூகத்தாரை விட்டும் ஒளிந்து கொள்கிறான். அதை இழிவோடு வைத்துக் கொள்வதா? அல்லது அதை (உயிரோடு) மண்ணில் புதைத்து விடுவதா? (எனக் குழம்புகின்றான்) அவர்கள் (இவ்வாறு) தீர்மானிப்பது மிகவும் கெட்டதல்லவா?. அல்குர்ஆன் 16:58,59

பெண் குழந்தைகள் விஷயத்தில் இப்படி நடந்து கொள்ளும் அதே வேளையில், பல ஆண் குழந்தைகளுக்குத் தகப்பனாக இருப்பதில் மனிதன் கர்வம் பாராட்டுகின்றான். ஆண் குழந்தைகளே தங்களுக்குரியன் பெண் குழந்தைகள் இறைவனுக்குச் சொந்தமானவை என்று மனிதன் வெறுத்து வேதாந்தம் பேசித்திரிந்தான்.

மேலும் அவர்கள் அல்லாஹ்வுக்குப் பெண் மக்களை ஏற்படுத்துகிறார்கள். அல்குர்ஆன் 16:57
அல்லாஹ் பிள்ளைகளைப் பெற்றான் (என்போர்) நிச்சயமாகப் பொய்யர்களே( (அன்றியும் அல்லாஹ்) ஆண்மக்களை விட்டுப் பெண் மக்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானா?. அல்குர்ஆன்: 7:152,153

வெற்று வேதாந்தம் பேசித் திரிந்த விகார மனங்களுக்கு இந்த இறைவசனங்கள் வாயிலாகத் திருமறை குர்ஆன் தக்க பதிலடி கொடுக்கின்றது. பெண் குழந்தைகள் மீது தனக்கிருந்த வெறுப்பை நியாயப்படுத்துவதற்காக மனிதன் என்னவெல்லாமோ பொய்க் காரணங்களைப் பிதற்றித் திரிந்தான்.

பெண் குழந்தைகளை இறைவன் அதிகமதிகம் தேர்ந்தெடுத்துக் கொள்கிறான். எனவே பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைத்து இறைவனிடத்திற்கே அனுப்பிவைத்து விடுவோம் என்றெல்லாம் மனிதன் செயல்பட்டான்.

இத்தகைய மடமைக் காலத்து நடைமுறைகள் இன்று மீண்டும் மறு அவதாரம் எடுத்திருப்பதைக் காண்கிறோம். சில கிராமப்புறங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் அவற்றைக் கொன்று விடுகின்றனர். நகர்ப்புறங்களிலோ, கருப்பையில் இருக்கும்போதே அதனை அடையாளம் கண்டு அழித்துச் சிதைத்து விடுகின்றனர். விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளின் துணை கொண்டு இந்த அஞ்ஞான காலத்து வழக்கங்களை மனிதன் சுலபமாக நிறைவேற்றிக் கொள்கிறான்.

பெண் குழந்தைகள் மீது இங்ஙனம் வெறுப்பு காட்டுவதை இஸ்லாம் வெறுக் கிறது. ஆண் என்றும் பெண் என்றும் குழந்தைகளிடையே பாரபட்சம் காட்டப்படு தலை இஸ்லாம் ஒரு போதும் விரும்பவில்லை.

மனித வாழ்க்கை இவ்வுலகத்தோடு முடிந்து விடுவதன்று. முடிவில்லாத மறுவுலக வாழ்க்கை ஒன்று மனிதனுக்காகக் காத்திருக்கின்றது. அந்த முடிவில்லா மறுமை வாழ்க்கையில் மனிதன் வெகுமதிகளைப் பெறுவதோ அல்லது தண்டனைகளை அனுபவிப்பதோ அவனுடைய இவ்வுலக வாழ்க்கையின் செயல்பாடுகளைப் பொறுத்தே அமைகின்றது.

இஸ்லாத்தின் இந்த அடிப்படை நம்பிக்கையை நெஞ்சில் நிறுத்திக் கொண்ட மனிதர்கள், தம் குடும்ப வாழ்விலும் குழந்தை வளர்ப்பிலும் இந்த நம்பிக்கைக் கேற்பச் செயல்படுகின்றார்களா என்று இறைவன் சோதித்துப் பார்க்கின்றான். குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகின்ற வகையில் மனிதர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்து மனிதனுக்கு மறுமைப் பயன்கள் தீர்மானிக்கப் படுகின்றன.

அஞ்ஞான காலத்து அரபுச் சமுதாயம் பெண் குழந்தைகளைக் கேவலமாகக் கருதியது என்றால், விஞ்ஞான காலத்து இன்றைய சமுதாயத்தினர் கூட பெண் குழந்தைகளைக் கேவலமாகத் தானே பாவிக்கிறார்கள். ஆண் குழந்தைகளைப் போற்றி வளர்ப்பதும் பெண் குழந்தைகளைத் தூற்றி ஒதுக்குவதும் இன்றைய சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இந்தப் போக்கை இஸ்லாம் ஒரு போதும் விரும்பவில்லை.

ஒருவனுக்கு ஒரு பெண் மகவு இருந்து, அதனை அவன் உயிரோடு புதைக்காமலும், அதனைக் கீழாக நடத்தாமலும், அதனைக் காட்டிலும் தன் ஆண் குழந்தையை உயர்வாகக் கருதாமலும் இருப்பானாயின், அல்லாஹ் அவனைச் சுவர்க்கத்தில் புகுத்துவான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத்

முஸ்லிம் அல்லாதவர்களை விட்டு விடுங்கள், பல முஸ்லிம் குடும்பங்களில் இன்றும் கூட ஆண் குழந்தைகளுக்கும் பெண் குழந்தைகளுக்குமிடையே பாரபட்சம் காட்டப்படுதலை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது.

உணவு, உடை, கல்வி வாய்ப்புகள் முதலியவற்றில் ஆண் பிள்ளைகளுக்கே பல பெற்றோர் முன்னுரிமை வழங்குகின்றனர்.பெண் குழந்தைகள் கருவறையிலிருந்து உயிரோடு வெளியே வருவது ஒரு போராட்டமாகவே இருக்கிறது. அப்படியே வந்து பிறந்து விட்டாலும் உயிரோடு புதைக்கப் படாமலிருப்பது அடுத்த கட்டப் பேராட்டமாக அமைகின்றது.

எல்லாவற்றையும் தாக்குப்பிடித்துக் கொண்டு உயிர்வாழும் பெண் குழந்தைகளோ, பெற்றோர், சுற்றத்தாரின் பாரபட்சமான நடவடிக்கைகளுக்கு ஆளாகி இரண்டாம் தரத்துக்குத் தள்ளப்பட்டு வேதனைப் படுத்தப் படுகின்றனர். பெற்றோர்களின் இத்தகைய மனப்போக்கை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மாறாக, பெண் குழந்தையை ஆண் குழந்தைக்குச் சமமாகப் போற்றி வளர்த்து வரும் பெற்றோர்களுக்குச் சிறப்பான சுவர்க்கப் பேறுகளை அல்லாஹ் சித்தப்படுத் தியிருப்பதாக நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

பருவம் எய்தும் வரை தன் பெண்மக்களைப் பரிபாலனம் செய்பவர் இறுதித்தீர்ப்பு நாளன்று வருவார். நானும் அவரும் இவ்வாறு இருப்போம் என்று நபி(ஸல்) அவர்கள் தன் இரு விரல்களையும் சேர்த்துக் காண்பித்து கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: முஸ்லிம்

பெண் குழந்தையைக் கருவிலோ அல்லது பிறந்த பின்னரோ கொன்று விடாமலும், அவர்கள் பருவம் எய்தும் வரை வளர்த்துப் பராமரிப்பதில் எந்தக் குறையும் வைக்காமலும் பேணுகின்ற பெற்றோருக்கு மறுமையில் கிடைக்கவிருக்கும் உயர்பதவி எத்தகையது என்பதை இந் நபிமொழி எடுத்துரைத்துள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் மற்றொரு நபிமொழி இதோ...

என்னிடம் ஒரு பெண் வந்தாள். அவளோடு அவளுடைய பெண் குழந்தைகள் இருவர் இருந்தனர். அப்பெண் என்னிடம் யாசகம் கேட்டாள். ஒரு பேரீச்சம் பழத்தை அவளுக்குக் கொடுத்தேன். அதைத் தவிர வேறெதையும் அவளால் பெற முடியவில்லை.

இந்நிலையில் நபி(ஸல்) அவர்கள் வந்தார்கள். உடனே நான் அவர்களிடம் இச்சம்பவத்தை எடுத்துரைத்தேன். அப்போது , இப்பெண் குழந்தைகள் விஷயத்தில் ஏதாவது ஒரு வகையில் சோதிக்கப்பட்டு அவர்களுக்கு உபகாரம் செய்கின்றவர்களுக்கு (பெண் மக்களாகிய) அவர்கள் நரகத்தை விட்டுப் பாது காக்கும் திரையாவார்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் நல்லுரையருளினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்.

இறைவன் பெண் குழந்தைகளை வழங்கிப் பெற்றோர்களைச் சோதித்துப் பார்க்கின்றான். அக்குழந்தைகளை அவர்கள் எப்படி நடத்துகின்றனர்? ஆண் குழந்தைகளுடன் சமமாகப் பாவிக்கின்றார்களா? இல்லையேல் இவர்களை மட்டம்தட்டுகின்றார்களா? என்றெல்லாம் இறைவன் நோட்டமிடுகின்றான்.

யாசகம் பெற்று வயிற்றைக் கழுவும் வறுமை நிலையில் வருந்திய போதும் தன் பெண் குழந்தைகளைப் பேணி வளர்த்த தாய் ஒருத்திக்குச் சுவர்கத்தைக் கொண்டு சுபச்செய்தி கூறினார்கள் நபி(ஸல்) அவர்கள் என்பதை மேலே கண்ட நபிமொழி உணர்த்துகின்றது.

வறுமைக்குப் பயந்து (பெண்) குழந்தைகளைக் கொன்று விடாதீர் என்று திருமறை குர்ஆன் எச்சரித்து நிற்கின்றது. அல்குர்ஆன் 6:151

பெண் குழந்தைகளின் பொருட்டுப் பெற்றோருக்கு ஏற்படும் சிரமங்களை அவர்கள் பொறுமையுடன் தாங்கிக் கொள்கின்றனரா இல்லையா என்பதை இறைவன் பரீட்சித்துப் பார்க்கின்றான்.

துன்பங்கள் துயரங்கள் சசூழ்ந்தபோதும் எந்தப் பெண் குழந்தைகள் பெற்றோர் களால் அரவணைக்கப் படுகின்றார்களோ, அந்தப் பெண் குழந்தைகள், பெற்றோர் களை நரகிலிருந்து காக்கும் கவசமாகத் திகழ்வர். இதற்கு மாற்றமாக நடந்த பெற்றோர் நரக நெருப்பில் வேதனைப் படுத்தப்படுவர் என்பதையும் இதனால் அறியமுடிகிறது.

பெண்மக்களைப் பேணி வளர்த்து அவர்களுக்குத் திருமணம் முடித்துக் கொடுப்பதோடு பெற்றோரின் கடமை முடிந்து விடுவதில்லை. சில நேரங்களில் கணவனை இழந்த நிலையிலோ அல்லது குடும்ப வாழ்வின் பிரச்சனைகளால் கணவனால் திருப்பியனுப்பப் பட்ட நிலையிலோ தனது மகள் திரும்பி வருவாளாயின், அவளைப் பராமரித்துக் காப்பாற்ற வேண்டியதும் பெற்றோரின் கடமையாகும்.

நன்மைகளில் சிறந்தது எது என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா?
உம்மைத் தவிரச் சம்பாதிப்பவர் (எவரும்) தனக்கு இல்லாமல், உம்மிடம் திரும்பி வந்த உமது மகள் தான் (அதுவாகும்) என நபி(ஸல்) அறிவித்தார்கள். அறிவிப்பவர்: சுறாக்கத் துப்னு மாலிக், நூல்: இப்னுமாஜா.

பெண்குழந்தைகள் விஷயத்தில் இஸ்லாம் மேலதிகமாக முக்கியத்துவம் வழங்கியுள்ளதை இவற்றால் அறிய முடிகின்றது.

இறைவனுடைய அருள்பேறாக வந்துபிறந்த குழந்தைகளிடம் அன்பு செலுத்தி அவர்களை நல்ல முறையில் பாதுகாத்து வளர்த்திட வேண்டியது இஸ்லாத்தின் ஒரு முக்கியக் கடமையாகும். ஆண்குழந்தை, பெண் குழந்தை என்ற பாகுபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு, கருவாகி இவ்வுலகில் வந்துபிறந்த குழந்தை எதுவாயினும் அதற்கு இவ்வுலகில் வாழும் உரிமையை இஸ்லாம் வழங்கிக் கவுரவித்துள்ளது.

குழந்தைகளின் உயிரைப் பாதுகாத்து அவர்களை வாழச் செய்வதற்கேற்ற வசதி வாய்புக்களைப் பெற்றோர் உருவாக்கி தருதல் வேண்டும். பசி, பஞ்சம், பட்டினி, வறுமை முதலிய துன்பங்களுக்குப் பயந்து குழந்தைகளைக் கருவிலோ பெற்ற பின்னரோ கொன்றுவிடுதல் மிகப்பெரிய பாவச் செயலாகும் எனத் திருமறை குர்ஆன் எச்சரிக்கிறது.

வறுமை நிலையிலிருந்த போதும் கணவன் மனைவியராகிய இவர்களுக்கு இறைவன் இதுவரை எவ்வாறு உணவளித்து வந்தானோ, அதுபோலப் பிறந்த குழந்தைக்கும் உணவு வழங்க இறைவன் ஏற்பாடு செய்வான் என இறைமறை இயம்புகின்றது.

வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர். ஏனெனில் உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அல்குர்ஆன் 6:151

எனத் திருமறை குர்ஆன் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோருக்கு நம்பிக்கையூட்டி ஊக்கப்படுத்துகின்றது.

குழந்தைப்பேறு என்பது வருத்தப்படுவதற்கோ சஞ்சலப்படுவதற்கோ உரியதன்று. அது மகிழ்ச்சிக்குரியதாகும். பிறந்த குழந்தைக்கு அழகிய பெயரிடுவதும், குழந்தை பிறந்த ஏழாம் நாளில் குழந்தையின் தலைமுடியைக் களைவதும், இந்த இனிய நாளில் ஆட்டை அறுத்து ஏழை எளியவர்களுக்குத் தானதர்மங்கள் செய்வதும் நபி(ஸல்) அவர்களின் அழகிய வழிமுறையாகும். பெற்றோர் தன் வசதி வாய்ப்புக்கேற்றாற் போல் குழந்தைப் பேற்றை மகிழ்வோடு வரவேற்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.

குழந்தைகள், வாழ்வை நுகரத்துடிக்கும் மொட்டுக்கள். எனவே, குழந்தைகளின் வாழ்வுரிமைக்கு எந்த வகையிலும் பங்கம் நேர்ந்துவிடாமல் பெற்றோர் அவர்களைப் பாதுகாத்து வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர். இது தொடர்பான நபி(ஸல்) அவர்களின் நல்லுரை ஒன்று இங்குக் கருத்ததக்கது.

நல்ல அழகும் குடும்பப் பெருமையும் கொண்ட பெண்மணி ஒருத்தி, தன் கணவனை இழந்து விதவையாகிறாள். மறுமணம் செய்து கொண்டு மகிழ்வோடு வாழ்வதற்குரிய வாய்ப்புக்கள் அனைத்தும் அவள் முன்னே விரிந்திருக்கின்றன. இருப்பினும் தன் குழந்தைகளை வாழவைத்து அவர்களைச் சொந்தக் காலில் நிலை நிறுத்தச் செய்வதற்காக, இப்பெண்மணி மறுமணம் புரியாது தாமதித்து வந்தாள். குடும்பத்தை அரவணைத்துக் காப்பாற்றுகின்ற தலைவன் இல்லாத காரணத்தினால், குழந்தைகளைப் பராமரித்து வளர்ப்பதற்காக இப்பெண் அல்லும் பகலும் அயராது பாடுபடுகிறாள்.

இதன் காரணமாக அழகிய தோற்றம் கொண்ட இவளுடைய முகம் பொலிவிழந்து கன்னங்கள் கறுத்துப் போயின. இப்படித் தன்னுடைய இளமையழகையும் கண்ணியத்தையும் பொருட்படுத்தாமல் தன் குழந்தைகளுக்காகவே இவற்றைத் தியாகம் செய்து உழைத்து உழைத்து உருக்குலைந்து போகிறாள் இந்தத் தாய்.

இவளை நபி(ஸல்) அவர்கள் எந்த அளவுக்குப் பாராட்டியுள்ளார்கள் என்பதைப் பின்வரும் நபிமொழி அறிவித்துக் காட்டுகின்றது.

இறுதித் தீர்ப்பு நாளன்று நானும் (வறுமையாலும் உழைப்பாலும்) இரு கன்னங்களும் கறுத்துப் போன பெண்ணும் இவ்விரண்டினையும் போல் இருப்போம். (இவ்விடத்தில் அறிவிப்பளார் யஸீதுப்னு ஜுரைவு(ரலி) அவர்கள் நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்துக் காட்டினார்கள்.

அப்பெண் கணவனை இழந்த விதவை. அழகும் கண்ணியமும் வாய்ந்தவள். இறந்து போன தன் கணவனின் குழந்தைகள் பருவம் எய்தும் வரை அல்லது மரணிக்கும் வரை (மறுமணம் செய்யாமல்) தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள். அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக் (ரலி) நூல்: அபூதாவூது
குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர் எந்த அளவு அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை இந்நபிமொழி இனிது எடுத்துரைத்துள்ளது. இளவயது விதவையாயிருந்தாலுங் கூட, முந்திய கணவனுக்குப் பிறந்த குழந்தைகளை வாழச் செய்வதற்காக அவள் மறுமணம் புரிதல் கூடாது என இவ்விடத்தில் அர்த்தம் கொள்வது தவறாகும்.

இப்படிப்பட்ட ஒரு நிபந்தனையை இஸ்லாம் விதிக்குமாயின், அது பெண்குலத்துக்கு இழைக்கப்பட்ட ஒரு பெரும் அநீதியாகவே அமைந்து விடும். ஆனால் இஸ்லாம் இப்படிக் கட்டளையிடவில்லை. இந்தக் குறிப்பிட்ட பெண்மணி குழந்தைகளின் நலனுக்காக மேலதிகமாக அக்கறை எடுத்துக்கொண்டு தனது மறுமணத்தைத் தள்ளிப் போட்டிருக்கிறாள். இது பாராட்டத்தக்க செயல் என்பதுவே இந்நபிமொழி உணர்த்தும் கருத்தாகும்.

முந்திய கணவனுக்குப் பெற்றெடுத்த குழந்தைகள் இருக்கும்போது மறுமணம் செய்து கொண்ட எத்தனையோ பெண்கள் இருந்துள்ளனர். நபி(ஸல்) அவர்களின் திருமனைவியருள் ஒருவரான அன்னை உம்மு ஸலமா(ரலி) அவர்களே கூட இந்த வகையினருக்கு ஒரு சான்றாகத் திகழ்கின்றனர்.

இவர்களுடைய முந்திய கணவர் அபூஸலமா வாயிலாக இவர்களுக்குப் பிள்ளைகள் இருந்தனர். இப்படிப்பட்ட நிலையில் நபி(ஸல்) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட உம்முஸலமா(ரலி) அவர்களிடம் முந்திய கணவரின் குழந்தைகளைப் பேணி வளர்த்திட வேண்டியதன் இன்றியமையாமையை நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

நான் அன்ணலாரிடம் கேட்டேன்
அல்லாஹ்வின் தூதரே! அபூஸலமாவின் பிள்ளைகளுக்கு நான் செலவிடுவதால் எனக்கு நற்கூலி கிடைக்குமா? நிச்சயமாக அவர்கள் என்னுடைய பிள்ளைகளாக இருக்கின்றார்களே!'' அதற்கு அண்ணலார், அவர்களுக்குச் செலவிடுவாயாக! நீ அவர்களுக்காக எதைச் செலவிடுகின்றாயோ அதற்குரிய நற்கூலி உனக்குக் கிடைக்கும்'' என விடையளித்தார்கள். அறிவிப்பவர்: உம்முஸலமா (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

குழந்தைகளின் பொருட்டு விதவையானவள் மறுமணம் புரியாமல் இருக்க வேண்டும் என்று எந்தக் கண்டிப்பும் கிடையாது. அது அவர்களுடைய சொந்த விருப்பத்தைப் பொறுத்தது. மறுமணம் புரிந்துகொண்ட பின்னரும் முந்திய கணவருக்குப் பிறந்த குழந்தைகளைப் பராமரிப்பதில் பின் வாங்கி விடுதல் கூடாது என்பதுவே கவனத்தில் கொள்ளத்தக்கதாகும், இதனை எல்லோருக்கும் தெரிவிப்பதற்காகவே உம்முஸலமா(ரலி) அவர்கள் அண்ணலாரிடம் வினா எழுப்பி விடை பெற்றிருக்கிறார்கள் என்பதையே இந்நபிமொழியில் விளங்கிக் கொள்ள முடிகின்றது.

குழந்தைகள் குடும்ப அமைப்பைத் தழைக்கச் செய்யும் குலக்கொழுந்துகள் ஆவார்கள். அவர்கள் குடும்பக் கட்டுமானத்தின் வாரிசுகள் மட்டுமின்றி, சமுதாய, தேச, அமைப்புகளுடைய வருங்காலச் சந்ததிகளாகத் திகழ்கின்றனர். இத்தகைய குழந்தைகளை நல்ல குடிமக்களாக உருவாக்க வேண்டிய முதல் பொறுப்பு பெற்றோரைச் சார்ந்ததாகும்.

குழந்தைகளைப் பெற்றோர் எப்படி வளர்த்தனர் என்பது குறித்து மறுமையில் விசாரிக்கபடுவார்கள். நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று இதனை எடுத்துரைத்துள்ளது.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளராவார். உங்களில் ஒவ்வொரு வரும் அவரது கண்காணிப்பின், பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றிக் கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே. அவரிடமும் அவரது குடிமக் களைப் பற்றி வினவப்படும். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். பெண், தன் கணவனுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளியா வாள். பணியாள் தன் எஜமானனுக்குப் பொறுப்பாளியாவான். உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக்கேட்கப்படும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

பெற்றோரின் பல்வேறு குடும்பப் பொறுப்புக்களிலும் தலையாயது குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாக வளர்த்து ஆளாக்குகின்ற பொறுப்பாகும். குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஒரு குறிப்பிட்ட பருவம் எய்தும் வரை பெற்றோரைச் சார்ந்தே இருக்கவேண்டிய நிலையில் உள்ளனர் குழந்தைகளின் இளமைப்பருவம் என்பது பிசைந்த களிமண் போன்றது. களிமண்ணை நாம் விரும்பிய வாறெல்லாம் எப்படி வடிவமைத்துக் கொள்கிறோமோ அது போலவே குழந்தைகளின் பண்பு நலன்களை வார்த்தெடுப்பதில் பெற்றோரின் பங்கு முக்கிய இடத்தை வகிக்கின்றது.

எந்தக் குழந்தையும் பாவப் பிறவியாக இந்த உலகில் வந்து பிறப்பதில்லை. ஒவ்வொரு குழந்தையும் பரிசுத்தமான நிலையிலேயே பிறக்கின்றன. அதனை நல்ல பிள்ளையாக உருவாக்குவதிலும் தறுதலையாக உருவாக்குவதிலும் பெற்றோருக்கு இருக்கின்ற பங்கு கணிசமானது.

இயற்கைப் பிரகாரமே (இஸ்லாத்தை ஏற்கும் நிலையிலேயே) பிறக்காத குழந்தை எதுவுமில்லை. பின்னர் அதன் பெற்றோர்களே அதனை யூதனாகவோ கிறிஸ்தவனாகவோ அக்கினி ஆராதனைக் காரனாகவோ ஆக்குகின்றனர் என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அது நல்லவன் ஆவதும் தீயவன் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே' என்று இக்கருத்தையே ஒரு கவிஞரும் பாடியுள்ளார்.

எந்த மார்க்கத்தில அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ,அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும் எனத் திருமறை குர்ஆன் பகர்கின்றது' அல்குர்ஆன் 30:30

இந்த இயற்கை நெறியாகிய இஸ்லாத்தை ஏற்கும் முறைப் பிரகாரமே ஒவ்வொரு குழந்தையும் நல்ல குழந்தையாக இம்மண்ணில் உதிக்கின்றது. இப்படிப் பரிசுத்தமாகப் பிறந்த குழந்தைகளை அதன் பெற்றோர் இஸ்லாமிய நெறிக்கு முரணான போக்கில் வளர்த்து ஆளாக்கி விடுகின்றனர். இவ்வாறு இஸ்லாத்துக்கு முரண்பட்டு வளர்ந்த ஆணும் பெண்ணும் திருமணம் முடித்து குழந்தை பெற்று வளர்க்கின்றபோது இக்குழந்தைகளும் அதே இஸ்லாமல்லாத தடத்தில் செலுத்தப்படுகின்றனர். அதன் காரணமாக இன்று மக்கள் தொகையில் ஒரு பெரும் பங்கினர் இஸ்லாத்தை விட்டு விலகிப் போய் நிற்கின்ற ஓர் அவல நிலையைக் காண்கின்றோம்.

இத்தகைய தீய விளைவுகள் எதுவும் ஏற்பாடாதிருக்க, குழந்தை வளர்ப்பில் தம் முழுக் கவனத்தையும் பெற்றோர் செலுத்தியாதல் வேண்டும்.


நல்லொழுக்கத்தின் நாற்றங்கால்

குழந்தைகளை நல்லொழுக்கமுடையவர்களாக வளர்ப்பதில் பெற்றோரின் பங்கு மிக முக்கியமானதாகும். குழந்தைகளுக்காகப் பெருஞ் செல்வத்தைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று பெற்றோர் ஆசைப்படுகின்றனர். குழந்தைகளுக்கு மிகச்சிறந்த கல்வியளித்து உயர் பட்டதாரிகளாக அவர்களை உருவாக்கி மகிழ்வதற்காகப் பெற்றோர் காலமெல்லாம் படாதபாடுபடுகின்றனர்.

செல்வமும் கல்வியும் சேர்த்துக் கொடுத்தாலுங்கூட நல்லொழுக்கமில்லா விட்டால் அதனால் எந்தப் பயனும் கிடைக்கப் போவதில்லை. ஆகவே நல்லொழுக்கம் என்னும் அடித்தளத்தின் மீது கல்வி, செல்வம் முதலியவற்றை அமைத்துக் கொடுத்தல் வேண்டும். அப்போது தான் அதனால் குழந்தைகள் மட்டுமின்றி குடும்பமும் சமுதாயமும் பெரும் பயன் பெறவியலும்.

ஒரு தந்தை தன் குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தை விடச் சிறந்ததாக வேறு எதையும் விட்டுச் செல்வது கிடையாது என்பது நபி மொழியாகும். அறிவிப்பவர்: ஸயீத் இப்னுல் ஆஸ் (ரலி) நூல்: திர்மிதீ

இன்றைய சமுதாயம் எங்கணும் ஒழுங்கீனங்கள் மலிந்து காணப்படுகின்றன. இவை பள்ளிக் குழந்தைகளின் சின்னஞ்சிறு பருவத்திலேயே அவர்களுடைய மனதில் பதிந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தவல்லனவாக உள்ளன. சினிமா, டிவி, பத்திரிகைகள், விளம்பரங்கள் போன்ற கலாச்சாரச் சீரழிவு சக்திகளால் இக்காலக் குழந்தைகள் பெரிதும் கவரப்படுகின்றனர். இப்படிப்பட்ட உருக்குலைந்த சமுதாயச் சசூழ்நிலைகள் குழந்தைகளின் நல்லொழுக்கத்தை எளிதில் சீரழிக்கக்கூடிய அளவுக்குக் கோரத் தாண்டவ மாடுகின்றன.

இவற்றிலிருந்து பெற்றோர் தங்களைக் காத்துக் கொள்வதோடு தம் குழந்தைகளையும் காத்து வளர்க்கக் கடமைப்பட்டுள்ளனர். குழந்தைகளை நல்லொழுக்கத்தின் பால் செலுத்துவதற்காகப் பிள்ளைப்பருவத்திலிருந்தே அவர்களுக்குத் தொழுகையைக் கட்டளையிடவேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உங்கள் குழந்தை ஏழு வயதை எட்டிவிடும் போது தொழுகையை நிறைவேற்றும்படி அவர்களை ஏவுங்கள். அவர்கள் பத்து வயதை எட்டிவிடும் போது தொழுகையைத் தவறவிட்டால் அவர்களை அடியுங்கள். இந்த வயதை அடைந்ததும் அவர்களின் படுக்கையைத் தனித்து அமையுங்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்

சின்னஞ்சிறு பிராயத்திலிருந்தே தொழுகை என்னும் கட்டாயக் கடமையைக் குழுந்தைக்குப் போதித்து இறையச்சப் பயிற்சி அளித்திடுதல் வேண்டும். நிச்சயமாக தொழுகையானது மானக்கேடான, கேவலமான செயல்களிலிருந்து மனிதனைப் பாதுகாக்கின்றது' எனத் திருமறை குர்ஆன் பகர்கின்றது. அல்குர்ஆன் 29:45

இந்தத் திருமறை குர்ஆன் பற்றிய கல்வியையும நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றிய கல்வியறிவையும் குழந்தைகளின் மனதில் கொள்ளுமாறு எடுத்துரைத்து அவர்களை இளம் பருவத்திலேயே இஸ்லாமிய வார்ப்பில் வடித்தெடுக்க வேண்டியது பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும்.

தந்தை தன் மக்களுக்கு அளிக்கும் அன்பளிப்புக்களில் மிகச் சிறந்தது அவர்களுக்கு அளித்திடும் நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியுமேயாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஸயீதுப்னுல் ஆஸ்(ரலி) நூல் திர்மிதீ

நல்லொழுக்கப் பயிற்சியும் நல்லகல்வியும் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பவையாகும். கல்வியறிவோடு கூடிய ஒழுக்கமும் ஒழுக்கத்தோடு கூடிய கல்வியறிவும் வாய்க்கப் பெறுவதே தந்தையிடமிருந்து பிள்ளைகள் பெறுகின்ற மிகப் பெரிய பாக்கியமாகும்.

மருத்துவம், பொறியியல், கம்ப்யூட்டர் கல்வி போன்ற துறைகளில் தம் பிள்ளைகளைப் பிரகாசிக்கச் செய்ய வேண்டும் என்று அதீத அக்கறை எடுக்கும் முஸ்லிம் பெற்றோர் பலரைப் பார்க்கின்றோம். இஸ்லாத்தின் அடிப்படைகளாகிய திருக்குர் ஆனைப் பற்றியும் திரு நபி(ஸல்) அவர்களின் வரலாற்றைப் பற்றியும் ஒவ்வொரு முஸ்லிமும் ஒரளவுக்கேனும் தெரிந்து வைத்திருக்க வேண்டுமே! இந்தக் கட்டாயக் கல்வியோடு கூடிய, மனிதனுக்குப் பயன்படுகின்ற ஏனைய கல்வித் துறைகள் அனைத்தையும் கற்றுக் கொள்வதற்கு இஸ்லாம் ஊக்கமளிக்கின்றது.

அறிவைத் தேடுவது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கட்டாயக் கடமையாகும் என்பது நபிமொழி அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: இப்னுமாஜா

ஆனால் முஸ்லிம் பெற்றோர்களே கூட இஸ்லாத்தின் அடிப்படைகளாகிய திருக்குர்ஆன், ஹதீஸ் பற்றிய போதிய ஞானமில்லதவர்களாகவே இருக்கின்றனர். இந்நிலையிலிருந்து பெற்றோர் முதலில் தம்மை விடுவித்துக் கொள்ளவேண்டும். அப்படியானால்தான் குழந்தைகளுக்கு இளமை முதலே நல்லொழுக்கத்தைப் போதித்து, கல்வியறிவு புகட்டி, தொழுகை முதலிய கடமைகளை நிறைவேற்றுகின்ற அளவுக்கு அவர்களை நெறிப்படுத்தவியலும்.

திருமறை குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் திருவாக்கியங்களும் எழுத்தறிவை யும் படிப்பறிவையும் வலியுறுத்திப் பேசியுள்ளன. அதிலும் சிறுவர்களுக்கு எழுதவும் படிக்கவும் சொல்லிக் கொடுக்க வேண்டியதன் அவசியத்தை நபி(ஸல்) அவர்கள், போரை ஒட்டிய காலங்களில் கூட மறவாமல் அமல்படுத்தி வந்துள்ளார்கள்.

பத்ருப் போரில் வெற்றி பெற்ற முஸ்லிம்கள் எதிரிப்படையைச் சேர்ந்த குரைஷிக் காஃபிர் வீரர்கள் சிலரைப் பிணைக் கைதிகளாக மதினாவுக்குப் பிடித்து வந்தார்கள். 4000 திர்ஹம் பிணைத் தொகையைச் செலுத்தி இவர்களின் உறவினர்கள் இவர்களை மீட்டுச் செல்லலாமென நிபந்தைனை விதிக்கப்பட்டது. இந்த அளவுக்குப் பொருள் வசதி பெற்றிருக்காத பிணைக் கைதிகளின் நிலை என்ன என்பது பற்றியும் நபி(ஸல்) அவர்கள் அருமையான ஒரு திட்டத்தை வகுத்துரைத் தார்கள்.

எழுத, படிக்கத் தெரிந்த பிணைக் கைதிகள் ஒவ்வொருவரும் மதினா நகரில் உள்ள கல்வியறிவில்லாத ஏழைச் சிறுவர் பத்து பேருக்கு எழுதவும் படிக்கவும் கற்றுக்கொடுத்து விட்டால் 4000 திர்ஹம் ஈட்டுத்தொகைக்குப் பகரமாக இப்பணி கருதப்பட்டு அவர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என நபி(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

குழந்தைகளுக்கு எழுத்தறிவும் படிப்பறிவும் கற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்புக்கள் எவை கிடைத்தாலும் பெற்றோர் அவற்றைச் செவ்வனே பயன்படுத்திக் கொள்ளத் தவறிவிடுதல் கூடாது என்பதை நபிகளாரின் இம்முன் மாதிரியிலிருந்து நாம் உணரக் கடமைப்பட்டுள்ளோம்.

இது இப்படியிருக்க, இன்று நாம் நடைமுறையில் காணும் நிலைமை எப்படி இருக்கிறது? ஏழு வயதில் குழந்தைகளைத் தொழுமாறு ஏவ வேண்டிய பெற்றோர், எழுபது வயதில் கூடத் தொழுகையை மறந்து திரிகின்ற அவல நிலையைக் காண்கிறோம்.

அறிவின் புதையலாக இறைவனால் வழங்கப் பட்டிருக்கும் திருக்குர்ஆனைக் கற்றறியாத பெற்றோர்கள் ஆங்காங்கே முஸ்லிம் பெயர் தாங்கிகளாக வாழ்ந்து வரக்காண்கிறோம். நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை முறைபற்றி எதுவுமறியாத பரிதாப நிலையில் பெற்றோர்கள் திசைமாறித் திரியும்போது இவர்களுடைய குழந்தைகளின் நிலையை என்னென்பது?.

பிள்ளைப் பருவத்திலிருக்கும் முஸ்லிம் குழந்தைகள் தம் பெற்றோரைப் பார்க்கின்றனர். பெரும்பாலான முஸ்லிம் பெற்றோர் இஸ்லாமியக் கல்வியறிவோ ஏனைய கல்வித்தேர்ச்சியோ இல்லாத நிலையிலேயே வாழ்ந்து வருகின்றனர்.

நடைபாதை வியாபாரம் போன்ற சாதாரண வேலைகளில் ஈடுபட்டிருக்கும் இந்த முஸ்லிம்கள் வாய்க்கும் வயிற்றுக்குமே அன்றாடம் போராடிக் கொண்டிருக்கின்றனர். வறுமை, வேலையின்மை காரணமாகக் குடும்பத்தில் தந்தையும் தாயும் எந்த நேரமும் சண்டை சச்சரவுகளில் முட்டி மோதிக் கொண்டிருப்பது இக்குழந்தைகள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

பெற்றோரிடம் இஸ்லாமிய அறிவோ நல்லொழுக்க நடைமுறைகளோ கொஞ்ச மும் இல்லாத நிலை; மூத்த சகோதரர்கள் கல்வியறிவின்றிக் குழந்தைத் தொழிலாளர் களாகப் பாடுபடுகின்ற அவலம்; அண்டை அயலவர்கள், சுற்றுப்புறம் யாவும் இஸ்லாத்துக்கு முற்றிலும் முரணான வகையில் அமைந்துள்ள சமூகச் சசூழல்; இப்படிப்பட்ட நிலையில் வளரும் முஸ்லிம் குழந்தைகள் நல்லொழுக்கமில்லாத கல்வியறிவற்ற முரட்டுச் சுபாவம் கொண்டவர்களாகவே உருவாகின்றனர்.

இஸ்லாம் சாந்தியையும் சமாதானத்தையும் தரும் மார்க்கம். ஆனால் இங்கே வளர்கின்ற முஸ்லிம் குழந்தைகள் சண்டைக்குணம் கொண்ட ஒழங்கீனம் மிக்க முரடர்காளக உருவாகின்றனர். பெற்றோர் இருக்கும்போதே குழந்தைகளின் வளர்ப்பு நிலை இப்படியென்றால், பெற்றோரை இழந்து நிற்கும் அநாதைக் குழந்தைகளின் நிலையைக் கேட்கவே வேண்டாம். தாயை இழந்து மாற்றாந்தாயால் வளர்க்கப்படும் குழந்தைகள்; தந்தையை இழந்து மாற்றுத்தந்தையால் வளர்க்கப்படும் குழந்தைகள் ஆகியோருக்கும் அந்தக் குடும்பங்களிலிருந்து முறையான பராமரிப்புக் கிடைப்பதில்லை.

வேறு எவளுக்கோ பிறந்த குழந்தையிடம் நாம் ஏன் பரிவுகாட்டவேண்டும் என்று மாற்றாந்தாய் நினைக்கிறாள். வேறு யாருக்கோ பிறந்த குழந்தையை நாம் ஏன் பராமரிக்க வேண்டும் என்று மாற்றுத் தந்தை எண்ணுகிறான்.

இவர்கள், குடும்பத்தினரால் உதாசீனம் செய்யப் படுகின்றனர். எனவே சீரழிந்து கிடக்கும் சமுதாயம்தான் இவர்களை இருகை நீட்டி வரவேற்கின்றது.

கல்வியைப்பற்றியோ ஒழுக்கத்தைப் பற்றியோ இவர்கள் கவலைப்படுவதில்லை. வயிற்றைப் பற்றிய கவலை ஒன்றே மிகைக்கிறது. எனவே பிக்பாக்கெட், பிச்சை எடுத்தல், ஏமாற்று, மோசடி போன்ற காரியங்களில் ஈடுபடும் சமூகத் திமிங்கலங்களின் எடுபிடிகளாக இவர்கள் இளமையிலேயே உருவாகின்றனர்.

இந்த இழிநிலையிலிருந்து இவர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் இஸ்லாமிய சமுகத்தைச் சார்ந்ததாகும். சமுதாயத் தலைவர்கள், செல்வந்தர்கள், கல்வியாளர்கள், சமூக நலனில் அக்கறை கொண்ட ஒவ்வாருவரும் இந்த இழிநிலைக்குப் பொறுப்பேற்கக் கடமைப்பட்டுள்ளனர்.

இத்தகைய சமூக அவலங்களைக் களைவதற்காக இவர்கள் அனைவரும் ஒருங்கிணந்து நின்று ஊர்தோறும் திட்டமிட்டுச் செயல்படுதல் வேண்டும். இஸ்லாமிய அரசும் பொதுநிதியும் பெற்றிருக்காத இன்றையஇந்தியச் சசூழலில் இப்படிப்பட்ட நலிந்த பிரிவினராகிய குழந்தைகளின் நலன் காப்பதற்கு முஸ்லிம் சமுதாயத்திடம் என்ன திட்டம் இருக்கிறது? மிகப்பெரிய முஸ்லிம் சமுதாயத்தின் முன் எழுந்து நிற்கும் மிகப் பெரிய கேள்வி இது.

குழந்தைகளின் இளநெஞ்சில் நல்ல எண்ணங்களையும் நல்லொழுக்கத்தையும் போதிக்க வேண்டியது பெற்றோர் தம் கடமையாகும். நேர்மை, உண்மை போன்ற உயரிய பண்புகளை இளம் உள்ளங்களிலேயே செதுக்கிவிட வேண்டும். இளமையில் கல்வி சிலையில் எழுத்து, என்பதற்கேற்ப, பிள்ளைப் பருவத்தில் ஊட்டப்படும் இந்நல்லொழுக்கக் கல்வியானது, அவர்கள் வளர்ந்த பின்னரும் அவர்களது பண்பு நலன்களில் பளிச்சிடும்.

குழந்தை வளர்ப்பைப் பொறுத்தவரை, சின்னச் சின்ன விஷயங்களில் கூடக் கண்ணும் கருத்துமாக இருந்திடுதல் வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள். வேடிக்கைக்காகவும் விளையாட்டுக்காகவும் கூடக் குழந்தைகளிடம் பொய்யுரைத்தல் கூடாது. பொய் என்பது எவ்வளவு தீமை பயப்பது என்பதனைக் குழந்தைகள் உள்ளங் கொள்ளுமளவுக்கு எடுத்துணர்த்தி அவர்களைப் பேணுதலாக வளர்த்தல் வேண்டும். ஆனால் பொய் பேசுவதைப்பற்றி இன்று யாருமே அலட்டிக் கொள்ளுவ தில்லை.

பொய் சொல்லக் கூடாது என்று குழந்தைகளக்குப் போதிக்கக் கடமைப் பட்டுள்ள தந்தையே வீட்டில் இருந்து கொண்டு, தன்னைத் தேடி வருபவரிடம் தான் இல்லை என்று கூறுமாறு குழந்தைக்குக் கட்டளையிட்டுக் கொண்டிருப்பார். தந்தையின் இத்தகைய நல்லொழுக்கத்தைக்,' காணும் குழந்தை, பெரியவனான பிறகென்ன, அக்குழந்தைப் பருவத்திலேயே பொய் பேசும் கலையில் தேர்ச்சிபெற்று விடுகின்றது. இது இன்று எங்கும் கண் கூடாகக் காணப்படும் நடைமுறையாகும்.

பொய் ஒரு குற்றமில்லை இதில் என்ன இருக்கிறது?'' என்று ஆரம்பிக்கும் பழக்கமானது, சின்னச் சின்னப் பொய்களில் தொடங்கிப் பெரும் பொய்யில் தொடர்ந்து நாளடைவில் முற்றி முதிர்ந்து போய், எதுவுமே குற்றமில்லை என்ற மரத்துப் போன உணர்வைத் தோற்றுவித்து விடுகின்றது. இதன் காரணமாகப் பழிபாவத்துக்கிடமான காரியங்களையெல்லாம் போகிற போக்கில் எளிதாகச் செய்து விட்டுப் போகிறார்கள் இளைஞர்கள். இன்று கல்விக் கூடங்களில் தலைவிரித்தாடும் ராகிங், இளவட்டங்கள் சேர்ந்து கொண்டு மாணவிகளைக் கேலி கிண்டல் செய்கின்ற ஈவ்டீஸிங்' முதலிய எல்லாத் தீய ஒழுக்கங்களுக்கும் வீட்டு வளர்ப்புகூட ஒரு காரணமேயாகும். நல்லொழுக்கங்களின் நாற்றங்கால் வீடேயாகும்.

நபி(ஸல்) அவர்கள் இளமனதில் நல்லொழுக்க நாற்றை எப்படி நடுவது என்பதற்கான அருமையான வழி முறைகளைப் பெற்றோருக்குக் காட்டித் தந்துள்ளார்கள்.

அப்துல்லாஹ் இப்னு ஆமிர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் எங்கள் வீட்டிற்கு ஒருமுறை வருகைதந்தபோது என் தாயார் என்னிடம், இங்கே வா! உனக்கு ஒன்று தரப் போகிறேன்'' என்று கூறினார்.

நபி(ஸல்) அவர்கள் நீர் அவனுக்கு எதைத் தர விரும்புகின்றீர்?'' எனக் கேட்டார்கள்.

நான் அவனுக்குப் பேரீத்தம் பழம் தர விரும்புகின்றேன்'' என்று என் தாய் உரைத்தார்.

நீர் எதையாவது அவனுக்குக் கொடுப்பதாகச் சொல்லி அழைத்துவிட்டுக் கொடுக்கவில்லை என்றால், உம் செயலேட்டில் இந்தப் பொய் எழுதப்பட்டுவிடும்'' என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்தார்கள். நூல்: ஆபூதாவூத்

இதே கருத்தில் மற்றொரு நபிமொழியும் அமைந்திருக்கின்றது.

ஒரு குழந்தையை அழைத்து, அக்குழந்தையிடம், நான் இன்னதை உனக்குத் தருவேன்' எனக் கூறுபவர், அதைத் தரவில்லையென்றால், அவர் அங்கே ஒரு பொய்யைச் சொல்லிவிட்டார் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: ஆபூஹுரைரா(ரலி) நூல்: அஹ்மது

இந்த நபிமொழிகளைப் பற்றி முஸ்லிம் சமுதாயம் தீவிரமாகச் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றது. மார்க்கத்தைக் கற்றறிந்த அறிஞர் முதல் எதுவுமே அறிந்திராத பாமரர் வரை இன்று சர்வ சாதாரணமாகப் பொய்யுரைத்தே குழந்தைகளை வளர்க்கின்றோம்.

இத்தனை ரூபாய் மஹருக்கு இன்னாரை உனக்குத் திருமணம் முடித்துத் தருகிறேன்'' என்று ஆலிம் சாகிபு பொய்யுரைத்துத் திருமணம் செய்து வைப்பார். அந்தத் தம்பதிகளுக்குப் பிறந்த குழந்தைகள் பொய்யுரைத்தே வளர்க்கப்படுகின்றார் கள். ஆக, பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த இக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களானால் எப்படி இருப்பார்கள்?

எனவே, குழந்தைப் பருவத்திலேயே இஸ்லாமிய நெறி சார்ந்த கல்வியைக் குழந்தைகளுக்குப் புகட்டுதல் வேண்டும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை உலகக் கல்வி, ஆன்மீகக் கல்வி என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. மனிதனைப் பண்படுத்துவதும் மனிதகுலத்துக்குப் பயன்படுவதுமான எல்லாக் கல்விகளும் ஆகுமானவையே. இத்தகைய கல்வியைத் தேடிப் பெறுவது ஒவ்வாரு முஸ்லிமுக்கும் கட்டாயக் கடமையாகும் என்ற நபி(ஸல்) அவர்கள், தாமே அத்தகைய கல்வியை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனை செய்தமையைத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

ரப்பீ ஸித்னீ இல்மா' இறைவா! எனக்குக் கல்வி ஞானத்தை அதிகப்படுத்து வாயாக! என நபி(ஸல்) அவர்களை இறைவன் பிரார்த்திக்கச் சொல்கிறான்.அல்குர்ஆன் 20:114

உலகக் கல்வி ஆன்மீகக் கல்வி என்று பாகுபடுத்தாத நபி(ஸல்) அவர்கள் கல்வியைப் பயன்தரும் கல்வி, பயனற்ற கல்வி எனப் பாகுபடுத்தியுள்ளர்கள். பயன் தராத கல்வியும் இருக்கிறதா என்ற வினா எழலாம், மனிதனுடைய அழிவுக்கும் நாசத்திற்கும் வழிவகுக்கின்ற கல்வி பயனற்ற கல்வியே. மனிதனுடைய மனத் தூய்மையை மாசுபடுத்துவதும் அவனுடைய உடல் சார்ந்த லௌகீக அழிவுக்குக் காரணமாக இருப்பதுமான எல்லாக் கல்வியும் இப்பயனற்ற கல்வியில் அடங்கும். இப்படிப்பட்ட பயனற்ற கல்வியிலிருந்து தன்னையும் தன் குழந்தைகளையும் பாதுகாத்திட வேண்டியது பெற்றோர் பொறுப்பாகும்.

இறைவா! பயனற்ற கல்வியிலிருந்து நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன் என நபி (ஸல்) அவர்கள் அடிக்கடி இறைஞ்சுவார்கள். அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி) நூல்: முஸ்லிம்

ஆன்மீக சுகம்' என்ற பெயரில் புனையப்பட்டுள்ள அத்வைத சூபிசக் கவிதைகளும், இலக்கிய இன்பம் என்ற போர்வையில் எழுதப்படும் இழிவான இச்சையைத் தூண்டும் படைப்புகளும், விஞ்ஞான முன்னேற்றம் எனக் கூறிக் கொண்டு மனிதகுலத்தைப் பூண்டோடு கருவறுப்பதற்காககக் கண்டுபிடிக்கப்படும் நாச சக்திகளும் ஆகிய இவையெல்லாம் பயனற்ற கல்விகளல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?

இதுமாதிரியான பயனற்ற கல்வியை ஒருவன் கற்கிறான். பிறருக்கும் கற்றுக் கொடுக்கிறான். பின்னர் அவன் செத்துப் போகிறான். அவன் வித்திட்ட இப்பயனற்ற கல்வியானது அடுத்தடுத்த சந்ததிதோறும் தொடர்கிறது. அதைப் பின்பற்றுபவர் களுக்கு அது பெருங்கேட்டைத் தேடிக்கொடுக்கிறது. முதன் முதலில் இந்த நச்சுக் கல்வியை எவன் விதைத்துச் சென்றானோ அவன் செத்த பிறகும். அதனால் பிந்தைய தலைமுறைகள் அடையும் கேட்டுக்குரிய பாவச் சுமையானது, அவன் கணக்கிலும் சேர்ந்துகொண்டே போகிறது. எனவேதான் நபி(ஸல்) அவர்கள் இந்தப் பயனற்ற கல்வியின் பால் மனிதன் சென்றுவிடக் கூடாது என எச்சரித்தார்கள்.

ஒருவனது மரணத்துக்குப் பின்னரும் பயனற்ற கல்வி அவனுக்குப் பாவம் சேர்த்துக் கொண்டே இருக்கும் என்ற கருத்தை நபி(ஸல்) அவர்களின் வேறொரு நபிமொழி உணர்த்தி நிற்கிறது. அதாவது ஒருவன் பிறருக்குக் கற்றுக் கொடுக்கும் பயனுள்ள கல்வியானது. அவன் இறந்த பின்பும் அவனுக்குப் புண்ணியத்தைத் தேடிக் கொடுத்துக் கொண்டே இருக்கும் என்பது நபி(ஸல்) அவர்களின் நல்லுரையாகும்

மனிதன் மரணமடையும் போது மூன்றினைத் தவிர பிற செயல்பாடுகள் அனைத்தும் அறுந்துவிடுகின்றன. அவை 1. அவன் புரிந்த நிலையான தர்மம் 2. (அவன் பரப்பிய) பயனுள்ள கல்வி 3.  அவனுக்காகப் பிரார்த்திக்கின்ற நல்லொழுக்கமுடைய பிள்ளைகள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்

நிரந்தர நன்மைக்கு வித்திட்டுவிட்டு மரணிக்கின்ற தந்தை ஒருவர், தன் மகன் பெரியவனாகி முதுமையடைந்து மரணிக்கும்போதும், இதுபோன்ற நிலையில் நன்மைகளை இம்மண்ணில் ஊன்றிவிட்டுச் செல்லுமளவுக்கு அப்பிள்ளைகளை உருவாக்குதல் வேண்டும்.

அப்படியானால், ஒரு மனிதர் தன் மக்களிலிருந்து தொடங்கி இச்சமுதாயத்துக் குப் பயனுள்ள கல்வியைக் கற்றுக் கொடுத்தல் வேண்டும். அப்போது கல்வியைப் பரப்பிய நன்மை மட்டுமின்றி, தன் புதல்வனைக் கல்வியறிவுள்ள நல்ல பிள்ளையாக வளர்த்ததற்கான வெகுமதியும் அவருக்குக் கிடைக்கிறது. இத்தகைய பிள்ளைகளின் பிரார்த்தனையானது பெற்றோருக்கு நிரந்தர நன்மையைத் தந்து கொண்டே இருக்கிறது. ஆக, பயனுள்ள கல்வியும் நல்லொழுக்கமுள்ள குழந்தைகளும் ஒன்றை ஒன்று தழுவிச் செல்லுகின்றமையைக் காண்கிறோம்.

இந்தக் கல்விக்கும் நல்லொழுக்கத்திற்கும் ஊற்றுக் கண்ணாக இருப்பது இறையச்சப் பண்பாகும். எந்தக் கல்வி இறையச்சத்தையும் இறை நினைப்பையும் ஊட்டுகின்றதோ அதுவே உயிருள்ள கல்வியாகும். இதை மறந்த கல்வி செத்த கல்வியாகும். இத்தகைய கல்வியைக் கொண்டு ஒருவன் பெருமை பாராட்டுவது என்பது சடலத்தை அலங்கரித்தமைக்குச் சமமாகும்.

தன் இறைவனை நினைப்பவனே (உண்மையில்) உயிர் வாழ்பவன் போலாவான், நினைக்காதவன் செத்தவனுக்கு சமமாவான் என்பது நபிமொழி அறிவிப்பவர்: ஆபூமூஸா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

எந்தக் கல்வி மனிதனுக்கு இறைநினைவை ஊட்டுகிறதோ அப்படிப்பட்ட உயர்கல்வியைக் குழந்தைகளுக்கு ஊட்ட வேண்டும். லுக்மான் (அலை) அவர்கள் ஓரிறைச் கொள்கையை நினைவூட்டுகின்ற இக்கல்வியைத் தம் மகனுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். இணைவைத்தல் என்பது எத்துணை அக்கிரமமானது என்பதை எடுத்துரைத்தார்கள். பிள்ளைகள் பெற்றோரைப் பேணி அவர்களுக்குப் பணிவிடை புரிந்து நன்றி பாராட்ட வேண்டியதன் இன்றியமையாமையைப் புகட்டினார்கள். பெற்றோருக்குக் கட்டுப்படுகின்றேன் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாம் வெறுக்கின்ற காரியத்தை ஒருபோதும் செய்யக் கூடாது என்பதையும் அன்றாட வாழ்வில் அனுஷ்டிக்க வேண்டிய அருமையான நடைமுறை களையும் தம் மகனுக்கு லுக்மான்(அலை) அவர்கள் அறிவுறுத்தினார்கள்.

ஒரு தந்தை தன் குழந்தைக்கு எப்படிப்பட்ட அடிப்படைக் கல்வியைப் புகட்ட வேண்டும் என்பதை லுக்மான்(அலை) அவர்கள் வாயிலாக இறைவன் திருமறை மூலம் நமக்குக் கற்றுத் தந்துள்ளான். அல்குர்ஆன் 31:13-19

இஸ்லாமியக் குடும்ப அமைப்பில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையே உள்ள உறவு மட்டுமின்றி, கணவன் மனைவி மற்றும் உற்றார் உறவினர் போன்ற அனைத்து உறவு நிலைகளும் எந்த வரையறைக்குள் இயங்க வேண்டும் என்பதையும் திருமறை தெளிவு படுத்தியுள்ளது. குடும்ப அமைப்பில் ஒருவருக்கொருவர் அன்பும் பாசமும் கொண்டு உறவாடுதல் இயல்பு. ஆனால் இந்த அன்பும் பாசமும் மரியாதையும் இறை வரம்புகளைத் தாண்டிச் செல்வதற்கு ஒரு மனிதனை உந்திவிடக் கூடாது. லுக்மான் (அலை) அவர்களுடைய உபதேசத்தில் மட்டுமின்றி வேறுபல இடங்களிலும் திருக்குர்ஆன் இந்த வரைவிலக்கணத்தை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளது.

(நபியே) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமாரும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமாரும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் ஏற்பட்டுவிடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற உங்கள் வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்குப் பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள். அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. அல்குர்ஆன் 9:24

மனித உறவுகளிடம் நாம் கொள்ளும் பாசம் இஸ்லாத்திடம் நமக்குள்ள பாசத்தைக் காட்டிலும் விஞ்சிப் போய்விடலாகாது. இறைவனும் இறைத்தூதரும் காட்டிய வழியை விடுத்து, மாற்றமான வழியில் செல்வதற்குத் தாயோ தந்தையோ உற்றார் உறவினரோ எவர் கட்டளையிட்டாலும் அதற்குக் கட்டுப்படுதல் கூடாது. அல்லாஹ்வின்பாலும் அவன் தூதர்பாலும் இறைவழியில் கடும் பிரயாசை எடுப்பதன் பாலும் கொள்ள வேண்டிய நேசத்தைக் காட்டிலும் பெற்றோரிடமோ பிள்ளைகளி டமோ நேசம் மிகுந்து போகுமானால் அது மனிதனை நாசத்துக்கே இட்டுச் செல்லும் என எச்சரிக்கிறான் இறைவன்.

இப்ராஹீம் நபி(அலை) அவர்கள், தம் தந்தையின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு இறையாணையைப் புறக்கணித்தார்களா? இல்லை. மாறாக, இறையாணைக்குக் கட்டுப்பட்டுத் தந்தையால் புறக்கணிக்கப்பட்டார்கள். நூஹ் நபி(அலை) அவர்கள் தனயன் பேச்சைச் செவிமடுத்து அவன் பின்னே செல்லவில்லை. மாறாக, தவ்ஹீதை ஏற்றுத் தன் பின்னே வந்து தப்பிப் பிழைத்துக் கொள்ள வருமாறு தன் மகனிடம் மன்றாடினார்கள்.

இதுபோல நபி லூத்(அலை) அவர்களுக்குத் தன் மனைவி மீதிருந்த நேசம் இறை நேசத்தை விஞ்சிப் போய் விடவில்லை. ஃபிர் அவ்னின் மனைவி ஆசியா(ரலி) அவர்கள், தம் கணவனுடைய கட்டளைக்குக் கட்டுப்பட்டு ஓரிறைக் கொள்கையிலிருந்து விலகிடவில்லை. மாறாக, இறைநேசமே பெரிது எனக் கொண்டு, அதன் காரணமாகப் பெருந்துன்பங்களையெல்லாம் வரவழைத்து இறை வனுக்காக அவற்றைச் சகித்துக் கொண்டார்கள்.

திருமறை குர்ஆன் இந்த வரலாறுகளையெல்லாம் விரிவாக எடுத்துரைத்துப் படிப்பினை நல்கியுள்ளது.

ஒருவருக்குத் தன் தந்தையை விடவும் தன் பிள்ளைகளை விடவும் மனிதர்கள் அனைவரை விடவும் நேசத்துக்குரியவனாக நான் ஆகாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார் என நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

இந்த இறைப்பற்றையும் நபிநேசத்தையும் பிள்ளைகளுக்குப் பெற்றோர் இளமை முதலே போதித்திடுதல் வேண்டும். ஆனால், இன்று பல குடும்பங்களில் விபரமறிந்த' பிள்ளைகள் பெற்றோருக்கு இவற்றைப் போதிக்கும் தலைகீழ் நிலையைக் காண்கிறோம். வேறுபல குடுபங்களில் முஸ்லிம் இளைஞர்கள் யூதர்களைப் போல் நெருப்பு வணங்கிகளைப் போல் தடம்புரண்டு திரிகிறார்கள் என்றால் அதற்கு முழுக்காரணம், பெற்றோர்களின் வளர்ப்பும் தீய வழிகாட்டுதலுமேயாகும்.

குமரி மாவட்டம் போன்ற பகுதிகளில் முன்பெல்லாம் முஸ்லிம் குழந்தைகளை முதன்முதலில் திருமறை பயிலுவதற்காக மத்ரசாக்களுக்கு அழைத்து வருவார்கள். அங்கே முதல் பாடமாக இப்பிஞ்சுக் குழந்தைகளுக்கு நபி(ஸல்) அவர்களுடைய சுருக்கமான வரலாறு கற்றுக் கொடுக்கப்படும் எங்கள் நயினார் முஹம்மத் நபி மக்கத்தில் பிறந்து மதீனத்தில் வஃபாத்தானர்கள். அவர்கள் தாயார் பெயர் ஆமினா, தந்தையார் பெயர் அப்துல்லா, பாட்டனார் பெயர் அப்துல் முத்தலிபு'' எனத் தொடங்கும் பாடத்தைத் தான் முதலாவதாகப் பிள்ளைகளுக்குப் பயிற்றுவிப்பார்கள்.

மூன்று, நான்கு வயதுக் குழந்தையானது தன்னுடைய தாயார், தகப்பனார், பாட்டனார் பெயரைத் திருத்தமாக உச்சரித்து அறியாத நிலையில் தனது நபி(ஸல்) அவர்கள் பெயரையும் அவர்களது வரலாற்றுச் சுருக்கத்தையும் கற்றுக் கொள்ளும். ஆனால் இன்றைய நர்சரி'யுகத்தில் முஸ்லிம் குழந்தைகளின் இஸ்லாமியக் கல்வி மிகவும் பரிதாபத்திற்குரியதாக மாறி இருக்கின்றது.

மம்மி, டாடி' என்று குழந்தைகளால் அழைக்கப் படுவதைக் கேட்டுப் பெற்றோர் பூரித்துப் போகின்றனர். அல்ஹம்து சூராவைப் பிள்ளைகள் மனப்பாடம் செய்ததெல்லாம் அந்தக் காலம். வீட்டுக்கு வரும் விருந்தினர் முன்னே, எங்கே பாபா பிளாக் ஷீப்' பாடு பார்ப்போம்'' என்று குழந்தைகளைப் பாடச் சொல்லித்தான் பெற்றோர் பெருமிதம் கொள்கின்றனர்.

இந்தப் பிள்ளை வளர்ந்து பெரியவனாகி இஸ்லாத்திற்குள்ளயே பிளாக் ஷீப்' (டீடயஉம ளூநநி) கறுப்பு ஆடாக உருவாகி, தீனுல் இஸ்லாத்தை மட்டம் தட்டுகின்றது, காட்டிக் கொடுக்கின்றது. எனவே, இது குறித்து முஸ்லிம் சமுதாயம் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்.


சந்ததிகளைச் சந்தியில் நிறுத்தாதீர்

இஸ்லாமியக் குடும்ப இயலில் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான உறவு மிகச் சிறப்பாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளையும் பிள்ளைகள் பெற்றோருக்குப் புரிய வேண்டிய கடமைகளையும் இஸ்லாம் இனிது இயம்பியுள்ளது. பெற்றோரும் பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் ஆற்ற வேண்டிய கடமைகள் குடும்ப வாழ்வில் இன்றியமையாத இடம் வகிக்கின்றன.

பல பிள்கைகள் இருக்கும் போது அவர்களைப் பராமரிப்பதிலோ கல்வி வாய்ப்பு போன்றவற்றை அளிப்பதிலோ அவர்களுக்கிடையே பாரபட்சம் காட்டாமல் பெற்றோர் நடந்து கொள்ளுதல் வேண்டும். பிள்ளைகளுக் கிடையே வேற்றுமை பாராட்டுவதை நபி(ஸல்) அவர்கள் கடுமையாகக் கண்டித்துள்ளார்கள். அப்படிப் பாரபட்சம் காட்டுபவரைக் கொடுமையாளன் என்றே நபி(ஸல்) சுட்டியுள்ளர்கள்.

பல குடும்பங்களில் இத்தகைய பாரபட்சமான போக்கு நிலவக் காண்கிறோம். பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு அன்பளிப்பு வழங்குவதில் கூட, நடு நிலைமை பிறழ்ந்து நடந்து கொள்கின்றனர். இதுபோன்ற ஓரவஞ்சனையான காரியங்களை நபி(ஸல்) அவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளார்கள்.

நுஃமான் பின் பஷீர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
என் தந்தையார் என்னை அழைத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் ஓர் அடிமை இருந்தான். அவனை நான் என்னுடைய இந்த மகனுக்கு அன்பளிப்பாகத் தந்து விட்டேன்'' என்று கூறினார்கள்.

நீர் உம் புதல்வர்கள் அனைவருக்கும் அன்பளிப்புச் செய்தீரா?'' என்று நபி(ஸல்) கேட்டார்கள். இல்லை'' எனப் பதிலளித்தார் என் தந்தை. அப்படியானால் அந்த அடிமையைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

மற்றோர் அறிவிப்பு இதோ! நுஃமான் பின் பஷீர் (ரலி) அறிவிக்கிறார்கள்: என் தந்தை எனக்கு ஓர் அன்பளிப்பு வழங்கினார். ஆனால் என் தாய் அம்ரா பின்த்து ரவாஹா அவர்களோ, நபி(ஸல்) அவர்களை இதற்கு சாட்சியாக ஆக்காதவரை, நான் இதனை ஒருபோதும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை' எனக் கூறிவிட்டார்.

எனவே என் தந்தை நபி(ஸல்) அவர்களிடம் சென்று, இறைவனின் தூதரே! அம்ரா பின்த்துரவாஹாவுக்குரிய ஒன்றை நான் எனது மகனுக்கு அன்பளிப்பாக வழங்கினேன். ஆனால் அவளோ, தங்களை இதற்கு சாட்சியாக ஆக்குமாறு எனக்கு உத்தரவிட்டுள்ளார்' என்று கூறினார்.
உம்முடைய ஒவ்வொரு பிள்ளைக்கும் நீர் இதுபோல் வழங்கியுள்ளீரா' என நபி(ஸல்) அவர்கள் வினவியபோது என் தந்தை இல்லை' எனப் பதிலளித்தார்.

இறைவனை அஞ்சிக் கொள்க! உம்முடைய பிள்ளைகளுக்கிடையே சமத்துவமாக நடந்து கொள்வீராக!'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

என் தந்தை திரும்பி வந்ததும் அவர் எனக்கு வழங்கிய அன்பளிப்பைத் திருப்பி எடுத்துக் கொண்டார்.

நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறியதாக மற்றோர் அறிவிப்பில் வந்துள்ளது. அப்படியென்றால் நீர் என்னை (இச்செயலுக்கு) சாட்சியாக்காதீர்! நான் கொடுமை யாளர்களுக்கு சாட்சியாக மாட்டேன்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.

இன்னோர் அறிவிப்பு இவ்வாறு இயம்புகிறது: எல்லாப் புதல்வர்களும் உம்முடன் நல்லவிதமாக நடந்துகொள்ள வேண்டும் என்று நீர் விரும்புகின்றீரா?' என்று நபி(ஸல்) வினவினார்கள்.

என் தந்தை, ஆம்! அவ்வாறே விரும்புகிறேன்' என்று பதிலளித்தார்கள். அப்படியென்றால் இப்படிச் செய்யாதீர்' என்று நபி(ஸல்) கூறினார்கள். நூல்:புகாரி, முஸ்லிம்.

புதல்வர்களுக்கிடையே வேற்றுமை பாராட்டுதல் மாபெரும் அநீதியாகும். பெற்றோருடைய இத்தகைய ஒரு தலைப்பட்சமான நடத்தை காரணமாக, அன்பளிப்பு வழங்கப்படாத குழந்தைகளின் உள்ளத்தில் பெற்றோர் மீது அதிருப்தி உண்டாகும். ஆனாலும் கூட, பிள்ளைகள் பெற்றோர் மீது வெறுப்பினைக் காட்டுதல் கூடாது என்கிறது இஸ்லாம்.

பெற்றோர் பாரபட்சமாக நடந்து கொண்டாலுங்கூட பிள்ளைகள் பெற்றோரின் திருப்தியைப் பெறுவதில் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என நபி(ஸல்) நவின்றுள்ளார்கள்.

தன் பிள்ளை மீது பெற்றோரில் ஒருவர் கோபம டைந்தாலும் அவர் திருப்தி அடையும் வரை அல்லாஹ் அவனை (அந்த மகனை) குறித்துத் திருப்தியடைய மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அந்தப் பெற்றோர் நீதம் செய்தாலுமா?'' என்று கேட்கப்பட்டது ஆம் அவர்கள் அநீதம் செய்தாலும் தான்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: புகாரி

பெற்றோர் பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமையைக் காட்டிலும் பிள்ளைகள் பெற்றோருக்கு ஆற்ற வேண்டிய கடமைக்கு இஸ்லாம் எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளது என்பது இதனால் புலனாகின்றது.

எனவே, பிள்ளைகள் பெற்றோரிடம் பணிவுடனும் பரிவுடனும் நடந்து அவர்களுக்குப் பணிவிடை புரிதல் வேண்டும்.

அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகம் அடைந்து விட்டால், அவ்விருவரையும் (துன்புறுத்தும் வகையில்) சீ'' என்று சொல்ல வேண்டாம். மேலும் அவ்விருவரையும் விரட்டவும் வேண்டாம் எனத் திருமறை குர்ஆன் கட்டளையிடுகின்றது. அல்குர்ஆன் 17:23

இஸ்லாத்தின் வரம்புக்குள் நின்று எல்லா நிலைகளிலும் பெற்றோருக்குக் கட்டுப்பட வேண்டியது பிள்ளைகளின் தலையாய கடமையாகும். இறைவனோ இறைத்தூதரோ தடை செய்துள்ள ஒரு செயலைச் செய்யுமாறு பெற்றோர் சிலர் ஏவக் கூடும். பெற்றோரை வேதனைப்படுத்த மாட்டேன் எனக் கூறிக்கொண்டு அத்தகைய கட்டளைகளை நிறைவேற்றலாமா? நிச்சயம் நிறைவேற்றக் கூடாது. இந்தக் கட்டுப்பாட்டுக் கோட்டின் எல்லையை நாம் நன்கு உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

நீர் அறியாத ஒன்றை எனக்கு இணையாக்கும்படி (பெற்றோராகிய) அவர்கள் உம்முடன் வாதாடினால், நீர் அவ்விருவரையும் பின்பற்றலாகாது. (ஆனாலும்) அவர்களோடு இவ்வுலகில் அன்பான உறவு பாராட்டுவீராக எனத் திருமறை தெளிவு படுத்துகின்றது. அல்குர்ஆன் 31:15

இறைவழியில், நபிநெறியில் பெற்றோரும் பிள்ளைகளும் கருத்தொருமித்துச் செயல்படுவோராக, ஒரு குடும்பம் அமைந்து விடுமானால் அந்தக் குடும்பத்தின் இனிமையைப் பற்றிக் கூறத் தேவையில்லை. இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் மாற்றமாகப் பெற்றோர் நடந்து கொண்டால் அல்லது தன் மகனையோ மகளையோ அது போன்ற வழியில் நடக்குமாறு நிர்ப்பந்திக்கின்றனர் என்றால் என்ன சொல்வது?

பல முஸ்லிம் இளைஞர்களைப் பார்க்கிறோம். என் தாய் தந்தையர் வரதட்சணை வாங்கித்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று கூறிவிட்டனர், அவர்களுடைய பேச்சை எப்படி மீறுவது? எனவே வேறு வழியில்லாமல் அப்படிச் செய்ய வேண்டியதாகி விட்டது'' என்று கூச்சமின்றிக் கூறித் திரிகின்றனர். இப்படிப் பட்டவர்களும் தவ்ஹீதுவாதி'களுள் உள்ளனர். இறைவனுடைய கட்டளையையும் இறைத்தூதருடைய கட்டளையையும் புறக்கணித்து விட்டு, பெற்றோரின் கட்டளைக்குக் கூடக் கீழ்ப் படியலாகாது.

படைத்தவனுக்கு மாறு செய்யும் காரியங்களில் எந்தப் படைப்பினத்திற்கும் கட்டுப்படலாகாது என்பது நபிமொழியாகும். அறிவிப்பவர்: அலீ(ரலி) நூல்: முஸ்னத் அஹ்மத்

இறைநெறிக்கு மாற்றமாகச் செயல்படுகின்றனரே என்ற ஆதங்கம் காரணமாகப் பெற்றோர் மீது பிள்ளைகள் ஒரேயடியாக வெறுப்புணர்வைக் கொட்டிவிடவும் கூடாது என்கிறது இஸ்லாம். இறைவனுக்குச் செய்யவேண்டிய கடமை நீங்கலாக உள்ள ஏனைய உலக விவகாரங்களில் அவர்களோடு நல்லிணக்கமாக நடந்து கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

அஸ்மா(ரலி) அவர்களின் தாயார் சிலைவணக்கம் புரிபவராயிருந்தார். இந்நிலையில் ஹுதைபிய்யா உடன்படிக்கையின் வேளையில் அந்தத் தாய், தன் மகள் அஸ்மாவைக் காண்பதற்கு வருகிறார். ஷிர்க்'கில் இருக்கும் தாயும் தவ்ஹீதில்' இருக்கும் மகளும் எப்படி நல்லிணக்கமாக நடந்து கொள்ளவியலும்? இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஆபூபக்கர்(ரலி) அவர்களின் புதல்வியாகிய அஸ்மா (ரலி) அவர்களே அறிவிக்கும் நபிமொழி இதோ:
குரைஷியரின் உடன்படிக்கைக் காலத்தில், இணைவைப்பவராயிருந்த என் தாய் என்னிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! என்னை விரும்பியவளாய் என் தாய் என்னிடம் வந்திருக்கிறார். நான் அவருடன் உறவாடலாகுமா? என்று நான் அண்ணலாரிடம் கேட்டேன். அதற்கு, ஆம், அவரோடு உறவு பாராட்டுக! என நபி(ஸல்) அவர்கள் விடை பகர்ந்தார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

உடன்படிக்கை நடந்து கொண்டிருந்த சமாதானக் காலத்தில் தாயும் மகளும் கொள்கையளவில் வேறு பட்டிருந்தாலும் நல்லிணக்கமாக நடந்து கொண்டனர். அதே நேரத்தில் போர்வேளையாயிருந்தது என வைத்துக் கொள்வோம். போர் என்றால் இங்கே கொள்கைப் போர். இறை நம்பிக்கையும் இறை நிராகரிப்பும் மோதிக் கொள்கின்ற நேரம். இத்தகைய போர்க்களத்தில் தந்தையும் மகனும் எதிரெதிர் அணியில் போராட வேண்டி காலகட்டம். இப்போது என்ன செய்வது? தந்தையும் மகனும் நல்லிணக்கமாக உறவாடிக் கொண்டிருப்பதா?

மேலே கண்ட சம்பவத்தில் அபூபக்கர் (ரலி) அவர்களின் மனைவியும் அவர்களுடைய புதல்வியும் சம்பந்தப்பட்டிருந்தனர். இங்கே காணப் போகும் நிகழ்ச்சியில் அபூபக்கர்(ரலி) அவர்களும் அவர்களின் புதல்வர் அப்துர் ரஹ்மானும் இடம் பெறுகின்றனர்.

ஆம்! பத்ருப் போர் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. இறை நம்பிக்கையாளர்களின் அணியில் அபூபக்கர்(ரலி) அவர்கள் வீறு கொண்டு போரிடுகின்றார்கள். இறைநிராகரிப்போர் அணியில் அவர்களது மைந்தர் அப்துர் ரஹ்மான் போரிடுகிறார். போரெல்லாம் முடிந்து, காலங்கள் நகர்கின்றன. அப்துர் ரஹ்மான் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்கிறார்.

இந்நிலையில் ஒரு சமயம் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்கள், தன் தந்தையிடம் முன்னர் நடந்த போர்க்களச் சம்பவத்தை நினைவு கூர்கிறார். தந்தையே! உக்கிரமாகப் போர் நடந்து கொண்டிருந்த ஒரு தருணத்தில் என் வாளுக்கு இரையாவது போல நீங்கள் எதிர்ப்பட்டீர்கள். ஆனால் என் தந்தை ஆயிற்றே என்பதற்காக நான் உங்களைத் தாக்காமலிருந்துவிட்டேன்'' என்றார்.

இதைக் கேட்ட அபூபக்கர்(ரலி) அவர்கள், இது போன்றதொரு பொன்னான வாய்ப்பு எனக்கு மட்டும் கிடைத்திருக்குமானால் அந்தக் கணமே அல்லாஹ்வுக்காக உன்னை நான் வெட்டி வீழ்த்தியிருப்பேன்'' என்றுரைத்தார்.

இஸ்லாத்தை நிலை நிறுத்தும் கட்டம் வரும்போது இரத்த பந்தம் குடும்பப் பாசம் ஆகியன எல்லாமே இரண்டாம் பட்சமானவையே! ஓர் உண்மையான முஃமின் இந்த நிலையைத்தான் மேற்கொள்வான். இருந்தாலும் மனிதர்களிடம் இயல்பிலேயே உறைந்திருக்கும் தாய்ப் பாசம், தந்தைப்பாசம், பிள்ளைப்பாசம் முதலியன பல இடங்களில் மேலோங்கி விடுகின்றன.

சாதாரண மனிதர்கள் என்ன? நபிமார்களிடத்திலேயே இந்த உணர்வு வெளிப்பாடுகள் தென்பட்டிருக்கின்றமையைத் திருக்குர்ஆன் எடுத்துரைத்துள்ளது. தவ்ஹீதை ஏற்றுக் கொள்ள நூஹ் நபியின் மகன் முன்வரவில்லை, நூஹ் நபியும் அவரைப் பின்பற்றிய நம்பிக்கையாளர்களும் இறைவழிகாட்டுதலுக்கேற்ப ஒரு கப்பலைக் கட்டி அதனுள் பாதுகாப்பாகப் பிரவேசித்துக் கொண்டார்கள். நூஹ் நபியின்மகன் உள்ளிட்ட அனைத்து நிராகரிப்பாளர்களையும் பெருவெள்ளம் மூழ்கடித்தது.

நூஹ் நபி இறைவனிடம், என் இறைவனே! நிச்சயமாக என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனே....'' எனக் கூறினார்.

அதற்கு இறைவன் கூறினான்: நூஹே! உண்மையாகவே அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்: நிச்சயமாக அவன் ஒழுக்கமில்லாச் செயல்களைச் செய்து கொண்டிருந்தான். ஆகவே நீர் அறியாத விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்க வேண்டாம். நீர் அறியாதவர்களில் ஒருவராகிவிட வேண்டாம் என்று திடமாக நான் உமக்கு உபதேசம் செய்கிறேன்''.

இதைக்கேட்ட நூஹ் நபி(ஸல்) அவர்கள், என் இறைவா! எனக்கு எதைப் பற்றி ஞானம் இல்லையோ அதை உன்னிடத்தில கேட்பதைவிட்டும் உன்னிடம் நான் பாதுகாப்புத் தேடுகின்றேன். நீ என்னை மன்னித்து எனக்கு அருள் புரியாவிட்டால் நான் நஷ்டமடைந்தோருள் ஒருவனாக ஆகிவிடுவேன்'' என்று கூறினார். அல்குர்ஆன் 11:45,47

ஏகத்துவக் கொள்கைக்கும் தூதுத்துவக் கொள்கைக்கும் வாழ்க்கைப்பட்டு, அதில் பிடிப்போடு ஒழுகும் தந்தை ஒரு பக்கம்; இவற்றை நிராகரித்துவிட்டு அவற்றுக்கு நேர் மாற்றமாக முரண்பட்டு வாழும் மகன் ஒருபக்கம்; இப்படிப்பட்ட தந்தை, மகன் உறவில் இஸ்லாத்துக்குப் பங்கம் நேராத வகையில் தந்தை நடந்து கொள்ளவேண்டும். தந்தை மகன் உறவு இங்கு ஒர் உதாரணமாகக் கூறப்பட்டது. ஒவ்வோர் உண்மை முஸ்லிமுக்கும் இதுபோன்ற சொந்தபந்தங்கள் இருக்கக்கூடும்.

இவர்களுடன் உறவு கொள்ளும்போது தீனுல் இஸ்லாத்தை இரண்டாம் இடத்துக்குத் தரம் தாழ்த்திவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும், அப்படிச் சொந்தங்களுக்கு முதலிடம் தந்து தீனைக் காற்றில் பறக்கவிடுவோர் பலரை நாம் காண்கிறோம்.

மனைவியின் பேச்சைக் கேட்டு, பிள்ளைகளின் பேச்சைக் கேட்டு, அவர்களின் மீது கொண்ட பாசம் காரணமாக மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஒருவன் ஈடுபடக்கூடும். இத்தகையவனுக்கு அந்த மனைவியும் மக்களும் உண்மையில் நேசத்துக்குரியவர் அல்லர், மாறாக நாளைய மறுமை வாழ்க்கையில் இவனது நாசத்துக்குரியவர்களாகவே அவர்கள் விளங்குவர்.

நம்பிக்கை கொண்டவர்களே! நிச்சயமாக உங்கள் மனைவியரிலும் உங்கள் மக்களிலும் உங்களுக்கு விரோதிகள் இருக்கின்றனர், எனவே அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருங்கள் என்று இத்தகைய சொந்தபந்தங்களைப் பற்றி இறைவன் எச்சரித்துள்ளான். அல்குர்ஆன் 64:14

பெற்றோரும் பிள்ளைகளும் முஸ்லிம்களாகவே இருக்கும்போது, அவர்கள் ஒருவருக்கொருவர் எவ்விதம் நடந்து கொள்ள வேண்டும்? பல முஸ்லிம் குடும்பங்களில் பெற்றோர்- பிள்கைளுக்கிடையிலான உறவுகள் சீர் கெட்டுக் கிடப்பதற்குக் காரணம் என்ன? பல்வேறு காரணங்க ளிருப்பினும், பொருளாதார அடிப்படையிலான காரணம் சற்று தூக்கலாக இருப்பதைக் காணமுடிகிறது.

பொருளாதாரப் பங்கீட்டில் குழந்தைகளுக்கிடையே பெற்றோர் பாரபட்சம் காட்டுதல் கூடாது. அப்படிப் பாரபட்சம் காட்டுவார்களாயின், பிள்ளைகள் பெற்றோரிடம் கொண்டிருக்கும் நேசத்திலும் மாற்றம் தென்பட அது வழிவகுக்கக் கூடும் என்பதை நபிமொழிகள் வாயிலாக அறிந்தோம்.

குடும்பப் பொருளாதாரம் என்று வரும்போது குடும்பத்தின் உறுப்பினர்களுக் காகக் குடும்பத்தலைவர் தாராளமாகச் செலவு செய்தல் வேண்டும்.

மனிதன் மறுமையில் நற்கூலி பெறும் எண்ணத்துடன் தன் வீட்டாருக்காகச் செலவிடும்போது அது அவனுக்கு அறமாக (ஸதகாவாக) அமைந்துவிடுகின்றது என்பது நபிமொழியாகும். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல் பத்ரீ(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

சில குடும்பத் தலைவர்கள் பொருள் வசதி படைததவர்களாயிருந்தாலுங்கூட, மனைவி மக்களுக்குச் செலவிடுவதில் தாரளமாக நடந்து கொள்வதில்லை. இதனால் குடும்ப உறுப்பினர்களுக்கிடையே வேண்டாத மனக் கசப்புகளே மிஞ்சுகின்றன. வசதி வாய்ப்பிருந்தும் குடும்பத் தலைவர் நியாயமான செலவினங்களில் கூட, கஞ்சத்தனம் பிடிப்பாரானால் மனைவி மக்கள் எப்படி நடந்து கொள்வது?

நபி(ஸல்) அவர்கள் கவனத்திற்கு இதுபோன்ற ஒரு சமாச்சாரம் கொண்டு வரப்பட்டது. அத்தகைய குடும்பத் தலைவரின் பொருளிலிருந்து அவருக்குத் தெரியாமல் மனைவிமார்கள் தக்க செலவினங்களுக்காக எடுத்துக் கொள்ளலாம் என நபி(ஸல்) அவர்கள் அனுமதி வழங்கியுள்ளார்கள். இது தொடர்பான நபிமொழியை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்

(எனதுகணவர்) அபூ சுஃப்யான் ஒரு கஞ்சரா யிருக்கிறார்: அவருடைய பணத்திலிந்து அவருக்குத் தெரியாமல் ரகசியமாக நான் எடுத்துக் கொள்ள எனக்கு அனுமதியுண்டா?'' என்று முஆவியா(ரலி) அவர்களின் அன்னை ஹிந்தா, நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்.

நீயும் உனது பிள்ளைகளும் உங்களுக்குப் போதுமான அளவுக்கு நியாயமான வகையில், தக்க காரணங்களுக்காக (பணம்) எடுத்துக் கொள்ளுங்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் விடையளித்தார்கள். நூல்:புகாரி

மனைவி மற்றும் பிள்ளைகளுக்குரிய நியாயமான செலவுகளுக்குப் பணம் கொடுக்கக் கணவன் மறுத்தாலோ, பெற்றோர் இருவரும் சேர்ந்து கொண்டு பிள்ளைகளின் நியாயமான செலவுக்குப் பணம் தர மறுத்தாலோ அப்படி மறுக்கப்பட்டவர்கள் தந்தைக்கோ தாய்க்கோ தெரியாத முறையில் ரகசியமாகப் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற நிலைக்குக் குடும்பத்தினரைக் கொண்டு வந்து விடாத அளவுக்குக் குடும்பத் தலைவர்கள், குடும்பத்தின் தேவையறிந்து தாமே முன்வந்து செலவு செய்தல் வேண்டும்.

நன்கு உடல் நலத்தோடு பொருளீட்டி வாழும் தந்தைக்கும் பிள்ளைகளுக்கு மிடையிலான பொருள் ரீதியிலான உறவை இந்த நபிமொழி எடுத்துரைத்துள்ளது. உடல் தளர்ந்து, முதுமை எய்தி மரணத் தறுவாயில் கிடக்கும் தந்தை ஒருவர், தனக்குச் சொந்தமான சொத்து சுகங்கள் விஷயத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கும் நபி(ஸல்) அவர்கள் தெளிவான வழி காட்டுதல்களை வழங்கியுள்ளனர்.

பெற்றோர் மரணிக்கும் தறுவாயிலும் தம் குழந்தைகளுக்கு அநீதி செய்தல் கூடாது. மாறாக, அவர்கள் தேடிய செல்வத்தைக் குழந்தைகளுக்கு விட்டுச் செல்ல வேண்டும்.

ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்:
நான் நோய் வாய்ப்பட்டிருந்தேன். நபி(ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். நபியவர்கள் என்னிடம், நீர் வஸிய்யத் (மரண சாஸனம்) எதுவும் செய்திருக்கின்றீரா?'' என வினவினார்கள்.
நான், ஆம்! செய்து வைத்திருக்கின்றேன்'' எனப் பதிலளித்தேன்.
நபியவர்கள், எவ்வளவு எப்படிச் செய்து வைத்துள்ளீர்?'' என்று கேட்டார்கள்.
என் செல்வம் முழுவதையும் இறைவழியில் செலவிட வேண்டும் என மரண சாஸனம் செய்துள்ளேன்'' என்று கூறினேன்.
நபியவர்கள், உம் குழந்தைகளுக்கு என்ன விட்டு வைத்தீர்?'' என்று வினவினார்கள்.
அவர்கள் செல்வந்தர்களாக நல்ல நிலையில் உள்ளனர்'' என்று நான் பதிலுரைத்தேன்
அதற்கு நபி(ஸல்) அவர்கள், இல்லை! உம் சொத்தில் பத்தில் ஒரு பங்கை இறைவழியில் செலவிடுவதற்காக வஸிய்யத் செய்யும்'' என்று கூறினார்கள்.
நான், நாயகமே! இது மிகவும் குறைவு . இறைவழியில் செலவிடுவதற்காக இன்னும் சிறுது அதிகமாக வஸிய்யத் செய்ய என்னை அனுமதியுங்கள்'' என்று கோரிய வண்ணமிருந்தேன்.
இறுதியில், சரி! உம் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை இறைவழியில் செலவிடுவதற்காக வஸிய்யத் செய்யும், இதுவே அதிகம்'' என்று நபியவர்கள் நவின்றார்கள். நூல்: திர்மிதீ

ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பாகவே, புகாரி நூலில் இந்நபிமொழி சற்று மாற்றத்துடன் அமைந்துள்ளது.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் வருடத்தில், எனக்கிருந்த கடுமையான வியாதியின் காரணமாக மக்காவில் (அடிக்கடி) என்னை வந்து பார்ப்பது வழக்கமாயிருந்தது.
எனது நோய் முற்றிவிட்டது; எனக்கோ ஏராளமான சொத்திருக்கிறது; மேலும் எனது வாரிசாக ஒரே ஒரு மகளையன்றி வேறு எவருமில்லை. எனவே நான் எனது சொத்திலிருந்து மூன்றில் இரண்டு பாகத்தைத் தருமத்துக்கென வஸிய்யத் செய்து விடட்டுமா?'' என்று நபியவர்களிடம் கேட்டேன்.
நபியவர்கள், கூடாது'' எனக் கூறிவிட்டார்கள்.
பாதி?'' என்று நான் கேட்டேன்.
இதற்கும் நபியவர்கள் வேண்டாம்'' என விடையளித்து விட்டார்கள்.
மூன்றில் ஒன்றை வஸிய்யத் செய்க. மூன்றில் ஒன்றே அதிகம். நீர் உம்முடைய வாரிசுகளை வறுமையிலிருந்து அப்புறப்படுத்தி வைப்பீராக! அவர்கள் பிற மக்களிடம் சென்று கையேந்துமளவுக்கு வறுமையில் வாடுவதை விட இதுவே மேலானதாகும் என்று நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள்.

இந்த நபிமொழி பல உண்மைகளை உணர்த்துகின்றது. தான் பெற்ற பிள்ளைகள் செல்வச்செழிப்பில் இருந்தாலுங்கூட, தந்தை தன் சொத்திலிருந்து அவர்களுக்குக் கணிசமான பங்கைக் கொடுக்கக் கடமைப்பட்டுள்ளார் என்பது முதல் கட்டளை.

அதுவும் இங்கே ஒரே ஒரு பெண் மகளை மட்டுமே வாரிசாகக் கொண்டிருக்கிறார் இந்த நபித்தோழர். அந்த மகளும் செல்வச் செழிப்பில் வளவாழ்வு வாழ்ந்து கொண்டிருக்கிறாள். இந்நிலையில் கூட, தம் சொத்து முழுவதையும் இறைவழியில் செலவு செய்ய முன்வந்த நபித்தோழரின் செயலை நபியவர்கள் ஆட்சேபிக் கின்றார்கள். வாரிசுக்குரிய பெரும்பங்கைத் தக்க முறையில் அளித்து விடுமாறு நபி(ஸல்) அவர்கள் வற்புறுத்து கின்றார்கள்.

இறைவழியில் செலவு செய்ய முழுச் சொத்தையும் வலியவந்து தர முன்வருகிறார் நபித்தோழர். நபியவர்களோ பிள்ளைகளுக்குப் பெரும்பகுதியைக் கொடுத்துவிட்டு, சிறுபகுதியை மட்டும் இறைவழியில் செலவிடுக! என உபதேசிக் கின்றார்கள். அப்படியானால், பிள்ளைகளுக்குப் பெற்றோர் ஆற்றவேண்டிய கடமை எத்தனை மகிமை மிக்கது என்பதை இதனால் உணரமுடிகின்றது.

நல்ல செல்வ நிலையிலிருக்கும் வாரிசைப் புறக்கணித்து விட்டு, தனது செல்வம் அனைத்தையும் இறைவழியில் செலவிடுவதாயினும் கூட, அது ஒருபோதும் கூடாது என்றனர் நபி(ஸல்) அவர்கள். ஆனால் இன்று சமுதாயத்தில் நாம் காணும் நிலை எப்படி இருக்கின்றது? ஏழ்மை நிலையிலிருக்கும் வாரிசுகளை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு, இறைவழியில் அல்ல் இரண்டாம் தாரத்து வசிய வலையில் தம் சொத்து சுகங்களையெல்லாம் தாரை வார்த்துக் கொடுக்கின்ற முஸ்லிம் பெற்றோரைப் பார்க்கின்றோம். தாம் பெற்ற பிள்ளைகளை அடுத்தவரிடம் கையேந்திப் பிச்சை எடுக்க வைத்துவிட்டு, தனது சொத்து சுகங்களையெல்லாம் தன் கண்ணுள்ள போதே கண்டபடி கரைத்துவிட்டுப் போகின்ற பொறுப்பற்ற பெற்றோரும் பலர் உள்ளனர்.

குடும்பத்தினருக்கும் மனைவி மக்களுக்கும் ஒரு மனிதன் ஆற்றவேண்டிய பங்குபணி எத்தகையது என்பதை இஸ்லாம் எடுத்துரைத்துள்ளது போன்று வேறு எந்தச் சித்தாந்தமும் எடுத்துரைத்ததில்லை. இறைவனுக்காக வாழ்கிறேன் என்று சொல்லிக் கொண்டு முற்றும் துறந்த முனிவராகப் போய்விடு ' என்ற கேடு கெட்ட உபதேசத்தை இஸ்லாம் போதிக்கவில்லை. மாறாக, குடும்பம் என்னும் கூட்டிலிருந்து மனiவி, பிள்ளைகளுடன் கூடிக் களித்து இறைநெறியில் இன்புற்று வாழுமாறு அது பணிக்கின்றது. பிள்ளைகளின் நலனுக்காக உழைத்துப் பாடுபட்டு, அவர்களின் வருங்கால வாழ்வுக்காக உரிய செல்வத்தை வழங்கிச் செல்லுமாறு இஸ்லாம் போதிக்கின்றது.

வறுமையிலும் ஏழ்மையிலும் தம் சந்ததியரை விட்டுச் செல்லுவதை விட அவர்களுக்குச் சொத்து சுகங்களை விட்டுச் செல்லுவது எவ்வளவோ சாலச் சிறந்தது என்று நபி(ஸல்) அவர்கள் நல்லுரை பகர்ந்துள்ளார்கள்.

ஒருவன் தன் வாரிசுக்குத் தன் சொத்தில் அவனுக்குரிய பங்கினை அளிக்காமல், அவனை இழப்புக்குள்ளாக்கிவிட்டால், அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் சுவனத்தில் அவனுக்குரிய பங்கினை இழக்கச் செய்துவிடுவான் என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: இப்னுமாஜா,

இஸ்லாம் இவ்வுலக வாழ்க்கையின் மீது ஒரு நியாயமான பிடிப்பை ஏற்படுத்திக் கொள்ள மனிதனுக்கு வழிகாட்டுகின்றது. தம் சந்ததிகளின் எதிர்கால வாழ்வுக்காகத் தம் சொத்திலிருந்து அவர்களுக்கு சேர வேண்டிய பங்கை முறையாகக் கொடுத்து விடும்படி திருமறையும் நபிமொழியும் கட்டளையிட்டுள்ளன.

இத்தகைய இஸ்லாமிய நெறிமுறைகளைப் பேணாமல், பெற்றோர் தம் சந்ததிகளை நிர்க்கதியாக நிறுத்திவிட்டு, அவர்களுக்கு இழப்பினை உண்டு பண்ணுதல் கூடாது. இங்ஙனம் எவர் சந்ததிகளுக்கு இவ்வுலகில் சிறிய இழப்பை எற்படுத்துகின்றனரோ, அவர்களை மறுவுலகில் சுவர்க்கப் பேற்றை இழந்து நிற்கும் பேரிழப்புக் குரியவர்களாக இறைவன் ஆக்கிவிடுகின்றான். எனவே, பிள்ளைகள் விஷயத்தில் பெற்றோர் கண்ணுங்கருத்துமாயிருந்து கடமையாற்றுதல் வேண்டும்.


திருமறை நிழலில் முற்றிய தளிர்கள்

இக்காலத்தில் பொதுவாகப் பெற்றோரைப் பிள்ளைகள் மதிப்பதில்லை என்று பரவலாக ஒரு கருத்து நிலவுகின்றது. பெற்றோர், பிள்ளைகளுடைய நலனுக்காகத் தங்கள் பொருள் அனைத்தையும் செலவிட்டு உடலை வருத்தி, அவர்கள் மீது பாசத்தைப் பொழிந்தாலுங்கூட, பல பிள்ளைகள் நன்றி மறந்தவர்களாக, பெற்றோருக்குக் கட்டுப்படாதவர்களாகத் திரிகின்ற நிலையைக் காண்கிறோம்.

மாணவப் பருவத்தினர், வாலிபப் பருவத்தினர் மட்டுமன்றி, குடும்பத் தலைவராகப் பொறுப்பு வகிக்கின்ற நடுத்தர வயதினர் கூட, தங்கள் வயது முதிர்ந்த பெற்றோருக்கு உரிய முறையில் கண்ணியம் வழங்குவதில்லை. தந்தை தாய்ப் பேண்' என்பது அந்தக் காலம். தந்தை தாய் வீண்' என்பது இந்தக் காலம். மனித உறவுகளின் மதிப்பீடுகள் இன்றைய பரபரப்பான விஞ்ஞான யுகத்தில் தலைகீழாக மாறிவிட்டன.

பணம், இன்னும் பணம், மேலும் பணம் என்று பணத்துக்காக ஆவலாய்ப் பறக்கிறான் மனிதன். பெற்றோரிடம் பேசுவதற்கு அவனுக்கு நேரமில்லை. பணத் தாசை அவனை இப்படியெல்லாம் அலைக்கழிக்கின்றது. யாருக்காக அவன் இப்படி மாய்ந்து மாய்ந்து பாடுபடுகின்றான்? தன்னுடைய சின்னஞ்சிறு மகிழ்ச்சி களைக் கூட அனுபவிக்காமல், அவற்றை யெல்லாம் தியாகம் செய்துவிட்டு, பிள்ளை களைப் படிக்க வைத்து உயர்ந்த நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என்றே இரவு பகலாகப் பாடுபடுகின்றான்.

பிள்ளைகள், தங்களை வயதான காலத்தில் உடன் வைத்திருந்து காப்பாற்றுவார்கள் என நம்புகின்றனர் பெற்றோர். இந்த நம்பிக்கையோடு, தங்களது சேமிப்பு, சொத்து சுகம் அனைத்தும் தம் பிள்ளைகளின் ஒளிமயமான வாழ்விற்காக என்று எண்ணிப் பிள்ளைகளை வளர்க்கின்றனர் பெற்றோர்.

வருங்காகல வைப்பு நிதி, ஆயுள் காப்பீட்டுச் சேமிப்பு போன்ற இக்கால வசதி வாய்ப்புகளைச் சிலர் பயன்படுத்துகின்றனர். அந்தக் காலத்தில் இது போன்ற திட்டம் எதுவும் இருந்ததில்லை. இன்று கூட, கிராமப்புற மக்களும் நகர்ப்புற ஏழை எளிய மக்களும் இவை பற்றி நினைத்துக் கூடப் பார்க்க முடிவதில்லை. இது போன்ற நிலையில் தங்களுடைய வருங்கால வைப்பு நிதியும் தங்களது ஆயுள் காப்பீடும் எல்லாமே தம் பிள்ளைகளின் வளவாழ்வில் தான் இருக்கிறது என்று நம்பிக்கையோடு பிள்ளைகளை ஆளாக்குவதற்காகவே உழைத்து உருக்குலைகின்றனர் பெற்றோர்.

பணத்துக்காக நாம் பட்ட கஷ்டத்தை நம் பிள்ளைகள் படக் கூடாது என்ற பதை பதைப்பில், வாழ்வின் நோக்கமெல்லாம் பணமே' என்ற தாரக மந்திரத்தைப் பிள்ளைகளுக்குப் புகட்டுகின்றனர் பெற்றோர். இப்போது நிலைமை தலை கீழாகிறது. பிள்ளை வளர்ந்து பெரியவனாகிப் பொருளீட்டத் தொடங்கியதும், மேலும் மேலும் பணம் குவிப்பது எப்படி என்பதிலேயே தன் முழுச் சிந்தனையையும் செலுத்துகின் றான். அன்று பெற்றோர் எதை விதைத்தார்களோ அதையே இன்று அறுவடை செய்கிறார்கள்.

பெற்றோருக்கு எப்படி மரியாதை கொடுக்க வேண்டும்? அவர்களை எப்படிக் கண்ணியப்படுத்த வேண்டும்? இறைவனுக்கு அடுத்தபடியாக ஒரு மனிதன் பெற்றோருக்குக் கட்டுப்படக் கடமைப்பட்டிருக்கிறான் என்று இறைமறை கூறுகின்றதே! இதை எத்தனை பெற்றோர் தம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்துள்ளனர்?

இருபெரும் பண்புகளை இணைத்துப் பேசுகின்ற வகையில் இறைவன் சில இணைப்புத் தொடர்களைத் திருமறை குர்ஆனில் எடுத்துரைக்கின்றான். அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கீழ்ப் படியுங்கள்..அ(த்)தீவுல்லாஹ் வரஸுலஹு'' (3:32, 3:132, 8:20, 8:46, 58:13), தொழுகையை நிலை நிறுத்துங்கள் ஜகாத்தும் கொடுங்கள் அகீமுஸ்ஸலாத்த வஆ(த்) துஸ்ஸகாத்த'' (2:43, 2:83, 2:110, 2:177, 2:277....) ஆகிய தொடர்கள் இத்தன்மையில் அமைந்து இன்னும் ஏராளமான பல இடங்களில் திருக்குர் ஆனில் பயின்று வருகின்றன.

இதுபோலவே இன்னொரு சிறப்புமிக்க இணைப்புத் தொடரும் அமைந்துள்ளது.எனக்கும் உன் பெற்றோருக்கும் நன்றி செலுத்து' அனிஷ்குர்லீ வலிவாலிதைக்க'' (4:36, 6:151 17:23, 31:13, 14) என்று இறைவன் திருமறையின் அனேக இடங்களில் மனிதனுக்குக் கட்டளையிடுகின்றான். இதிலிருந்து பெற்றோருக்கு நன்றி பாராட்ட வேண்டியதன் முக்கியத்துவத்தை நாம் நன்கு உணர முடிகின்றது.

தந்தையின் திருப்தியில் இறைவனின் திருப்தி இருக்கிறது. தந்தையின் அதிப்ருதியில் இறைவனின் அதிப்ருதி இருக்கிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அப்துல்லாஹ் பின்அம்ருபின்ஆஸ்(ரலி) நூல்: திர்மிதீ, ஹாகிம்

ஒரு நபித்தோழர் இறைவனின் வெகுமதியை வெகுவாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். இறைவனுக்காக ஹிஜ்ரத் செய்து, இறைவனுக்காக ஜிஹாத் செய்து, அவனிடமிருந்து அளப்பரிய கூலியை அள்ளிப் பெற வேண்டும் என்ற பேராவலுடன் நபி பெருமானிடம் விரைந்து வந்தார், அந்த நபித் தோழருக்கும் நபிக்குமிடையே நடந்த உரையாடலைப் பின்வருமாறு அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்.

அல்லாஹ்வின் கூலியை விரும்பி ஹிஜ்ரத் செய்யவும் ஜிஹாத் செய்யவும் உங்களிடம் உறுதிமொழி எடுக்க வந்துள்ளேன்'' எனறு ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் கூறினார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், உம் பெற்றோரில் யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள்.

ஆம்! இருவருமே உயிருடன் இருக்கிறார்கள்'' என்றார் வந்தவர்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வெகுமதியைத் தானே எதிர்பார்க்கின்றீர்?'' எனக் கேட்க, அவர் ஆம்'' என்றார்.

நீர் உமது பெற்றோரிடம் திரும்பிச் சென்று அவர்களுடன் தோழமையாக நடந்து கொள்ளும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். நூல்: முஸ்லிம்

இதே கருத்தில் அமைந்த மற்றொரு நபிமொழியை முஆவியா பின் ஜாஹிமா(ரலி) அறிவிக்கிறார்கள்.

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து,அல்லாஹ்வின் தூதரே ! நான் போரில் பங்கெடுக்க விரும்புகின்றேன். (அது பற்றி) உங்கள் ஆலோசனையைக் கேட்க வந்துள்ளேன்'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், உனக்குத் தாய் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அவர் ஆம்'' என்றார், அவரைப் பற்றிக் கொள்ளும், ஏனெனில், சுவர்க்கம் அவரது காலடியில் உள்ளது'' என்று நபி(ஸல்) எடுத்துரைத்தார்கள். நூல்: நஸயீ, அஹ்மத், ஹாகிம்

ஜிஹாத் என்னும் புனிதப் போரில் ஈடுபட்டு, இறைவனுக்காக உயிர்த்தியாகம் செய்து, அதன் வாயிலாக நேரடியாகவே சுவர்க்கம் செல்ல நாடியிருக்கின்றார் இந்த நபித்தோழர். இந்தத் தனது விருப்பத்தோடு நபி(ஸல்) அவர்களிடம் வந்து, அவர் அனுமதி வேண்டிய போது, நபியவர்கள் என்ன பதிலுரைத்திருக்கின்றார்கள்?

உமக்கு சுவர்க்கம் தானே வேண்டும், ஜிஹாதுக்குச் சமமான இன்னொரு புண்ணியச் செயலை நான் உமக்குக் கூறுகிறேன் என்பது போல, நீர் சென்று உம் தாயாருக்குப் பணிவிடை புரிவீராக!'' எனக் கட்டளையிட்டார்கள். தாயாருக்குப் பணி விடை புரிவதன்•வாயிலாக நீர் சுவர்க்கப் பேற்றை அடைய முடியும் என்பதை இலக்கிய நயம்பட, சுவர்க்கம் உம் தாயாரின் காலடியில் உள்ளது' என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.

வீட்டிலிருந்து பெற்றோரிடம் அன்பு பாராட்டி அவர்கiளுடைய மனம் மகிழுமாறு நடந்திடும் பிள்ளைகளை இறைவன் பொருந்திக் கொள்கிறான். பெற்றோரைப் போற்றிய இத்தகைய பிள்ளைகளுக்கு இறைவன் சுவர்க்கத்தைத் தயார்படுத்தி வைத்திருக்கிறான். யார் பெற்றோரைத் துன்புறுத்துகின்றாரோ அவரை இறைவன் வெறுக்கிறான், அத்தகையவருக்கு வெந்நரகைச் சித்தப்படுத்தி வைத்திருக் கின்றான். எனவே ஒருவன் சுவர்க்கம் செல்வானா, நரகம் புகுவானா என்பதை இந்த உலகத்திலேயே தெரிந்து கொள்ள வேண்டுமாயின், அவன் தனது பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதையும் சமுதாயம் கவனித்துப் பார்க்கக் கடமைப்பட்டிருக்கிறது.
இறைவனின் தூதரே! தமது புதல்வர் மீது பெற்றோர் இருவருக்கும் உரிய கடமை யாது?'' என ஒருவர் கேட்டார்.

அவ்விருவரும் உமது சுவர்க்கமும் நரகமுமாவர்'' என்று நபி (ஸல்) விடையளித்தார்கள். அறிவிப்பவர்: அபூ உமாமா (ரலி) நூல்: இப்னு மாஜா

வயோதிகப்பெற்றோரைக் கவனிக்காமல் புறக்கணித்துத் திரிபவனை இறைவனும் மறுமையில் புறக்கணித்து விடுகின்றான். அவனுக்கு சுவர்க்கப் பேறு மறுக்கப்படுகின்றது. இதனைப் பின்வரும் நபிமொழி விளக்குகின்றது.

அவன் மூக்கு மண்ணாகட்டும்! அவன் மூக்கு மண்ணாகட்டும் ! அவன் மூக்கு மண்ணாகட்டும்! (அதாவது அவன் இழிவடையட்டும்!)'' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! எவன் (இழிவடையட்டும்?) என்று கேட்கப்பட்டது. எவன் தனது பெற்றோர் இருவருள் ஒருவரையோ அல்லது இருவரையுமோ முதுமைப் பருவத்தினராகக் கண்டும் அவர்களுக்குப் பணிவிடை செய்து சுவர்க்கம் புகவில்லையோ, அவன் '' என்று நபி(ஸல்) நவின்றார்கள் அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல்:முஸ்லிம்

வயது முதிர்ந்த பெற்றோரை அருகிலிருந்து கவனித்துக் கொள்வதின் மூலம் ஒரு மனிதன் சுவர்க்கப் பேற்றிற்கு உரியவனாகிறான். இது மட்டுமன்றி, பெற்றோருக்கு உதவும் மனிதன், தான் இழைத்துவிட்ட பாவங்களுக்கு அதன் வாயிலாகப் பிராயச் சித்தத்தையும் தேடிக் கொள்கிறான். இக்கருத்தை உணர்த்தும் நபி மொழியையும் காண்கிறோம்.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதரே! நான் மிகப் பெரிய பாவம் செய்து விட்டேன் மன்னிப்பு உண்டா?'' என்று கேட்டார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், உனக்குத் தாய் இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அவர் இல்லை'' என்றார், உன் தாயின் சகோதரி இருக்கிறாரா?'' என்று கேட்டார்கள். அவர் ஆம்'' என்றார். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,அவருக்கு உதவிகள் செய்வீராக!'' என்றார். அறிவிப்பவர் இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதீ

தாய் இறந்து போன நிலையில் தாயின் சகோதரிக்கு உன்னாலியன்ற உதவியைச் செய்வாயாக! அதுவே உன் பாவமன்னிப்புக்குப் பாதை வகுக்கும்'' என்றனர் பெருமானார். இது போலவே, தந்தை மரணித்த பின்னர் தந்தையின் நேசத்துக்குரியவர்களுடன் புதல்வர்கள் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் நபி(ஸல்) உபதேசித்தார்கள்.

ஒரு மனிதர் செய்யும் நன்மைகளில் மிகச் சிறந்த நன்மை, தம் தந்தை மரணித்த பிறகு தந்தைக்கு விருப்பமானவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்வதாகும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: முஸ்லிம், அபூதாவூது, தீர்மிதி

பெற்றோருக்குப் பணிவிடை புரிந்து அவர்களைக் கண்ணியப்படுத்திய புதல்வர் ஒருவர் ஒரு குகைக்குள்ளே சிக்கி, பேராபத்தில் மாட்டிக் கொள்கிறார். அவரோடு அங்கு அகப்பட்டுக் கொண்ட மற்ற இருவரும் தத்தம் நற்செயல்களை எடுத்துரைத்து இறைவனிடம் உதவி கோரிப் பிரார்த்தித்தனர். பெற்றோரைக் கண்ணியப்படுத்தி, அவர்களின் மனநிறைவுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்த இப்புதல்வர், தான் ஒருமுறை இரவு முழுவதும் விழித்திருந்து பெற்றோருக்கு ஆற்றிய பணிவிடையை விளக்கமாக எடுத்துரைத்து இறைவனிடம் மன்றாடி துஆ கேட்டார். அவரது முறையீட்டைக் கேட்டு இறைவன் இவருக்கு நிகழவிருந்த பேராபத்திலிருந்து காப்பாற்றினான். முடிவில் மூவரும் அங்கிருந்து விடுதலை பெற்றனர். இத்தகைய நீண்ட செய்திகளையெல்லாம் நபிமொழி நூல்கள் எடுத்துரைத்துள்ளன. (புகாரி, முஸ்லிம் நூல்களில் இடம் பெற்றுள்ள நெடிய ஹதீஸின் சுருக்கம்)

இதுபோன்ற நபிமொழிகளை நாம் நம் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுத்திருக்கின்றோமா? இதையெல்லாம் சொல்லிக் கொடுப்பதை விட, நம் பிள்ளைகளுக்கு ஆங்கிலக் கல்வியைப் புகட்டுவதில் தானே நாம் அதிக அக்கறை எடுத்துக் கொண்டோம், இஸ்லாமியக் கலாச்சாரம், இஸ்லாமியப் பண்பாடுகளில் பிள்ளைகளை வார்த்தெடுப்பது பிற்போக்குத்தனமானது என எண்ணிக் கொண்டிருந்தோம்.

நபி(ஸல்) அவர்களின் அழகிய முன் மாதிரியைப் பின்பற்றி தாடி வைத்துக் கொண்ட வாலிபனைப் பார்த்துப் பரிகசித்தோம். இந்த வயதிலேயே இவன் என்ன தாடி வைத்துக் கொண்டு அலைகிறான்? அது அதுக்குரிய காலம் கிடையாதா? என்றெல்லாம் கூறி, சுன்னத்தை மழுங்கச் சிரைத்து நிற்கின்ற மைனர் பெற்றோர்கள் செய்கின்ற ஏளனத்தையும் கேட்கின்றோம்.

நமது புதல்வர்கள் இஸ்லாமியச் சின்னங்களை அவர்களாகவே வலிய முன்வந்து ஏற்றபோது, நாம் அதற்குத் தடை விதித்தோம். பிள்ளைகளை இஸ்லாமிய நெறியில் செலுத்த வேண்டிய நாமே அவர்களைத் திசை திருப்புகின்றோம். இப்படி எல்லா மட்டங்களிலும் இஸ்லாமியக் கலாச்சாரத்தை மட்டம் தட்டிவிட்டு, மேனாட்டுக் கலாச்சாரத்தில் மகன் மூழ்கித் திளைக்கவேண்டும் என்று திட்டமிட்டுச் செயல்பட்டோம். இன்று அந்த மேனாட்டு நாகரிக மோகத்தை இந்த மகன் பிசகாமல் பின்பற்றுகின்றான்.

வயதான தாய் தந்தையரை வீட்டில் வைத்துக் கட்டி மாரடிக்க முடியாது என்கிறான் இன்றைய இளைஞன். இந்தக் கிழடுகளுடைய தொணதொணப்பைத் தாங்க முடியவில்லையே எனச் சலித்துக் கொள்கிறான். எங்காவது முதியோர் இல்லங்களில் இதுகளைக் கொண்டு போய்த் தள்ளிவிட முடியுமா என்று யோசிக்கின்றான். இதற்கெல்லாம் காரணம் யார்?

முதிய பெற்றோரைக் குறித்தும், பெற்றோரைப் பேண வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் இஸ்லாம் எந்த அளவுக்குச் சிறப்பித்துக் கூறியுள்ளது என்பதை இளவயதில் பிள்ளைகளுக்குப் பெற்றோர் கற்றுக் கொடுக்காமையே இதற்கெல்லாம் தலையாய காரணமாகும்.

வயது முதிர்ந்த பெற்றோரை எப்படியெல்லாம் பேணிப் பாதுகாக்க வேண்டும் என்ற இஸ்லாமிய வழிமுறைகள் இக்காலத்து முஸ்லிம் இளைஞனுக்குத் தெரியவில்லை, தெரிவிக்கப்படவுமில்லை. 1420 ஆண்டுகளுக்கு முன்பே திருமறை குர்ஆன், தாய் தந்தையருக்குப் பிள்ளைகள் செய்யவேண்டிய பெருங்கடமைகளைச் சிறப்பித்துக் கூறியுள்ளது.

மேனாட்டு நாகரிகக் கல்வியைக் கற்றவர்களுக்குத் திருமறை குர்ஆனை மேற்கோள் காட்டிப் பேசினால் புரிந்துகொள்ள முடியாது. ஆனால் 1999 ஆம் ஆண்டை முதியோர் பாதுகாப்பு ஆண்டாக ஐ.நா. மன்றம் அறிவித்துள்ளது என்று சொன்னால்தான் அவர்களால் புரிந்து கொள்ளவியலும்.

இதுபோலவே இன்று ஆண்டுதோறும் அக்டோபர் மாதத்திய முதல் நாளை, உலக முதியோர் தினம் என்று கொண்டாடி வருவதையும் பார்க்கிறோம். ஓர் ஆண்டை மட்டும் முதியோர் நலப் பாதுகாப்பு ஆண்டாக அறிவித்து விடுவதாலோ ஆண்டின் ஒரு நாளை மட்டும் உலக முதியோர் தினம் என்று பிரகடனப் படுத்தி விடுவதாலோ முதியோருக்கு எந்தப் பயனும் வினளயப் போவதில்லை. இத்தகைய வெற்றுப் பிரகடனங்கள் விளம்பரத்துக்கு வேண்டுமானால் பயன்படலாம்.

இன்றைய விஞ்ஞான யுகத்தில், இப்போதுதான் முதியோர் தினம் என்ற ஒன்றை வைத்துக் கொள்ளும் நிலைக்கு மனிதன் அடியெடுத்து வைத்திருக்கின்றான். ஆனால் இஸ்லாம் 1420 ஆண்டுகளுக்கு முன்பே இதற்குரிய செயல்முறைத் திட்டத்தை செம்மையாக வழங்கிவிட்டது.

ஓர் ஆண்டையோ ஒரு நாளையோ முதியோர் நாளாக இஸ்லாம் கருதவில்லை. மாறாக, ஒவ்வொரு நாளும் முதியோர் நல நாளாகவே இருத்தல் வேண்டும் எனக் கட்டளையிடுகிறது இஸ்லாம். முதியோர் நலத்தைப் பேணவேண்டும் என்று வாயளவில் மட்டும் பேசிவிட்டுச் செல்லாதே. அதை அன்றாடம் உன் இல்லத்தில் உன் முதிய பெற்றோர்களுடன் நீ கொண்டிருக்கும் நல்லுறவில் செயல்படுத்திக் காட்டு என்று இஸ்லாம் உத்தரவிடுகிறது.

நடுத்தர வயதினை அடைந்த ஒரு குடும்பத் தலைவன் தன் பெற்றோரை எப்படிப் பேண வேண்டும், தனது பிள்ளைகளை எவ்விதம் வளர்க்க வேண்டும் என்பதை இறைமறை குர்ஆன் இனிது இயம்பியுள்ளது. முதிய பெற்றோருக்கு நன்மை செய்யும் படி இறைவன் எங்ஙனம் உபதேசித்துள்ளானோ அங்ஙனமே அவர்களுக்கு நன்மை புரிந்து வரவேண்டியதும் மனைவி, பிள்ளைகளோடு வாழ்கின்ற குடும்பத் தலைவனின் தலையாய கடமையாகும்.

வாலிபப் பருவம் கடந்து நாற்பது வயது எய்தி இன்று குடும்பத் தலைவனாக, மனைவி மக்களுடன் குதூகலமாக வாழ்ந்து வருகின்ற ஒருவன், தான் இந்த நிலைக்கு வருவதற்கு வழிவகுத்துக் கொடுத்த தன் பெற்றோரை ஒரு போதும் புறக்கணித்து விடுதல் கூடாது.

இவனுடைய பெற்றோர் மீது இறைவன் பல்வேறு நிஃமத்துக்களை, அருட்கொடைகளைப் பொழிந்தான். இவனைப் புதல்வனாக அவர்கள் ஈன்றெடுத்தது அத்தகைய அருட்கொடைகளுள் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.

ஏன் தான் இப்படிப்பட்ட தறுதலைப் பிள்ளையைப் பெற்றோமோ?'' என்று பெற்றோர் ஏங்கி வருந்தும் அளவுக்குப் புதல்வன் நிலை திரிந்து விடக் கூடாது. பெற்றோருக்கு நாம் ஒரு நல்ல நிஃமத்தாக வாய்த்துள்ளோம் என்பதை அவன்தன் செயல்கள் வாயிலாகப் பிரதிபலித்துக் காட்டிக் கொண்டே இருக்க வேண்டும்.

பெற்றோருக்குக் கீழ்ப்படிந்து முகம் சுளிக்காமல் அவர்களுக்கு மனமகிழ்வோடு பணிவிடையாற்ற வேண்டியது குடும்பத் தலைவன் ஆன பின்னரும் ஒருவன் மறவாது நிறைவேற்ற வேண்டிய கடமையாகும்.

ஒரு மனிதன் ஸாலிஹான நல்லொழுக்க முடையவனாக இருக்கிறானா இல்லையா என்பதை, அவன் தன் பெற்றோரிடம் எப்படி நடந்து கொள்கிறான் என்பதை வைத்துக் கண்டு கொள்ளலாம். ஒரு மனிதனின் நல்லொழுக்கத்தைக் கணக்கிடுகின்ற முக்கியமான அளவு கோல்களில் பெற்றோரைப் பேணுகின்ற இப்பண்பும் சிறப்பாகக் கவனிக்கப்படுகின்றது.

பெற்றோருக்கு இறைவன் அருளிய அருட்கொடை காரணமாக இவன் எப்படிப் பிறந்தானோ அது போலவே இவனுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடை காரணமாக இவனும் பிள்ளைகளைப் பெற்றெடுக்கின்றான். இவன் தன் பெற்றோரைப் பேணுவதில் எப்படி நல்லொழுக்கமுடைய, ஸாலிஹான புதல்வனாக நடந்து கொள்கிறானோ, அதைப் பொறுத்துத்தான் இவனுடைய பிள்ளைகளும் நாளை இவனைப் பேணிக் காப்பாற்றுவர்.

இதையெல்லாம் கருத்தில் கொண்டு, ஒரு மனிதன் தன் பெற்றோர் விஷயத்தில், தான் ஸாலிஹான முறையில் வாழ்வதோடு, தன் சந்ததியும் அவ்வாறு ஸாலிஹானவர் களாக மலர்ந்து மணம் வீசுவதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்யக் கடமைப் பட்டுள்ளான். இதனை இறைமறை குர்ஆன் பின்வருமாறு எடுத்துரைக்கிறது.

தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம், அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும், அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி நாற்பது வயதை அடைந்ததும், இறைவா! நீ என் மீதும் என் பெற்றோர்மீதும் புரிந்த அருள்கொடைகளுக்காக நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல செயல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாகச் சீர்படுத்தியருள் வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகின்றேன், அன்றியும் நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவனாக) இருக்கின்றேன்'' என்று கூறுவான். அல்குர்ஆன் 46:15

இன்றைய இளைஞன்தான் நாளைக்கு முதியவனாகிறான். இருந்தும் வாலிப மிடுக்கு இதைப் புரிய மறுக்கிறது. வாலிபப் பருவமடைந்து ஓடியாடிப் பொருளீட்டி மனைவி பிள்ளைகளுடன் மகிழ்வோடு வாழும்போது கூட, தன் பெற்றோரை மறவாமல் அவர்களுக்குத் தொண்டு புரிவோர் எத்தனை பேர்?
தான், தன் மனைவி, தன் குழந்தைகள் ஆகிய இந்த இனிய சூழலைக் கெடுப்பதற்காகவே வந்து வாய்த்துவிட்ட கிழட்டு ஜன்மங்கள் இவை எனப்பெற்றோரைக் கருதுகின்ற பலரைக் காண்கிறோம்.
சொத்துபத்துக்கள், நகை நட்டுக்கள், வீடு வாசல்கள் முதலியவற்றைத் தங்கள் பெயரில் வைத்துக் கொண்டிருக்கும் முதிய பெற்றோர் மட்டுமே விழுந்து விழுந்து உபசரிக்கப்படுகின்றனர். பொருளின் மீது கொண்ட பாசம் காரணமாகவே இவர்களுக்கு இந்த வரவேற்பு வழங்கப்படுகின்றது. பொருள் வைப்பு, சேர்ப்பு எதுவுமில்லாத அன்றாடங் காய்ச்சிக் குடும்பங்களில் வயோதிகப் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் மரியாதை' குறித்துப் பேசவே வேண்டாம்.

மனித உறவுகள் இன்று பெரும்பாலும் பொருள் வசதியின் அடிப்படையில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன. பெற்றோர், பிள்ளைகள் என்ற நேரடி இரத்த பந்தங்களில் கூட, இந்தப் பொருள் பார்வை' எந்த அளவுக்கு ஊடுருவிச் சென்று, குடும்பங்களைப் படாதபாடுபடுத்திக் கொண்டிருக்கிறது என்பதனைப் பல்வேறிடங் களில் கண்கூடாகவே காணலாம்.

குடும்ப அமைப்பினைப் பற்றி அவ்வளவாகச் சிரத்தை எடுத்துக் கொள்ளாத வெளிநாட்டினர் முதியவர்களை ஒரு பிரச்சனையாகவே கருதுகின்றனர். குழந்தைக் காப்பகங்கள் போலவே முதியோர் இல்லங்களும் மேனாட்டுக் கலாச்சாரம் காரணமாக இன்று உலக நாடுகளில் வேகமாகக் கிளைபரப்பிக் கொண்டு வரக் காண்கிறோம்.

மேனாட்டுக் கலாச்சாரம் உலகெங்கும் மனித வாழ்வில் பலவகைகளிலும் தாக்கத்தை எற்படுத்தி வருகின்றமைக்கு இதுவும் ஒரு சான்றாகும், முதியோர் பிரச்சனை என்பது இன்றைக்கு ஒரு சமூகப் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இது மிகவும் கவலைக்குரிய ஒன்றாகும்.

வயதான பெற்றோரைப் பராமரிக்க வேண்டியது பிள்ளைகளின் தார்மீகக் கடமை என்பதைக் கூட, மனிதனுக்கு நினைவூட்ட வேண்டிய மிகக் கொடுமையான சூழலில் இன்று நாம் வாழ்கிறோம். முதியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் பழக்கம் சமூகத்தில் குறைந்து கொண்டே வரக் காண்கிறோம், அதே நேரத்தில் இன்றைய சந்ததிகளின் பிரச்சனைகளையும் கருத்தில் கொண்டு அவர்களுடைய வாழ்க்கை வசதிக்கேற்ப அனுசரித்துச் செல்பவர்களாக முதிய பெற்றோரும் தங்களை ஆக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

வெளியூரில் அரசுப் பணியாற்றும் புதல்வன் ஒருவன் அங்கு மனைவி பிள்ளைகளுடன் குடும்பத்தோடு வசிக்கிறான் என வைத்துக் கொள்வோம். இவனுடைய முதிய பெற்றோரைக் கவனிப்பதற்காக இவனைவிட்டால் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். இந்நிலையில் தான் பணியாற்றும் ஊருக்கு வந்து, தன் குடும்பத்துடன் இருந்து கொள்ளுமாறு மகன் பெற்றோரை வற்புறுத்தி அழைக்கிறான். இது அவனுடைய கடமையும் கூட.

இருந்த போதிலும் தங்களது பூர்வீக வீட்டையும் ஊரையும் விட்டு, தங்களால் வெளியே எங்கும் வரமுடியாது என்று பிடிவாதமாக மறுத்துவிடுகின்றனர் பெற்றோர். இது மாதிரியான பலவகை எதிர்மறைப் போக்கு, பிடிவாத குணம், முரண்டு பிடித்தல், முன்னுக்குப் பின் முரணாகப் பேசுதல் போன்ற பண்புகளிலிருந்து முதியோரும் தங்களைச் சீர்படுத்திக் கொள்ளுதல் வேண்டும். இல்லையேல், முதியோரைப் புறக்கணித்திடும் இன்றைய தலைமுறையினரின் இயல்பான போக்கானது, இதன் காரணமாக இன்னமும் விசுவரூபமே எடுத்து நிற்கும்.

பல இல்லங்களில் முதியோரின் மன நிலை எப்படி இருக்கிறது தெரியுமா? சோற்றுக்குக் கேடாகவும் பூமிக்குப் பாரமாகவும் போய்விட்டோமோ என்று முதியோர் பலர் விரக்தியடைந்து வெறுமை உணர்வில் காலந்தள்ளக் காண்கிறோம். ஏனைய குடும்ப அங்கத்தினர்களால் இம்முதியோர் நிராகரிக்கப்பட்டு, தனிமைப் படுத்தப்படு கின்றனர். தங்களோடு சகஜமாகப் பேசுவதற்குக் கூட யாரும் முன்வருவதில்லையே என்று நாள் தோறும் இம்முதியோர் வாடி வதங்குகின்றனர்.

குடும்பத்தில் அவர்களுக்குரிய மரியாதை மறுக்கப்பட்டு, அவர்கள் தேவையில்லாத ஒரு வீண் சுமை போலக் கருதப்படுகின்றனர். பெற்று வளர்த்துப் பாராட்டிச் சீராட்டி ஆளாக்கப்பட்ட மகனும் அவனுக்கு வாழ்க்கைப்பட்ட மருமகளும் சேர்ந்து கொண்டு, தங்களை வசவுமொழிகளால் அவமரியாதைப்படுத்தி, உதாசீனம் செய்வதைக் கண்டு பெற்றோர் மனம்உடைந்து போகின்றனர். இவர்களுடைய முன்மாதிரியைப் பார்த்து, இவர்களது பிள்ளைகளும் தந்தையைப் பெற்றெடுத்த தாத்தா, பாட்டி ஆகியோருக்கு உரிய கண்ணியம் கொடுக்க மறுக்கின்றனர்.

இதன் காரணமாக இன்று வீடுகள் தோறும் முதியோர் படும் அவஸ்தை சொல்லி மாளாது. எல்லாவற்றுக்கும் மேலாக நடுத்தர, ஏழை எளிய குடும்பங்களில் முதிய பெற்றோர் பொருளாதாரப் பாதுகாப்பு எதுவும் இல்லையே என்ற அச்சம் காரணமாகப் பெரும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். பொருளாதாரப் பாதுகாப்பு இருந்த போதும் சில வசதியான குடும்பத்து முதியோர் மெய்யான பாசத்துக்காகவும் அன்புக்காகவும் அரவணைப்புக்காகவும் பரிதவித்து ஏங்கிக் கிடக்கின்றனர்.

இம்முதியோர் முன்பு குடும்பத் தலைவராக, தலைவியாக துடிப்போடு இருந்தபோது, குடும்ப நிர்வாகம் முழுவதையும் தம் கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்திருப்ப. இப்போது முதமைப் பருவம் எய்தியதும் குடும்ப நிர்வாகமும் வரவு செலவுப் பொறுப்புகளும் அடுத்த தலைமுறைக்குக் கைமாறிப் போகின்றன. தங்களிடமிருந்து அதிகாரம் விலகிப்போய், முதுமையடைந்து பார்வை மங்கி, காது மந்தமாகிப்போன வயோதிகப் பெற்றோர், குடும்பத்தில் யாரும் நம்மைப் பொருட் படுத்துவதில்லையே என மனம் குமைந்து போகின்றனர்.

அவர்களுக்கு ஒரு செய்தியை எடுத்து விளங்கவைப்பதற்கு, ஒரு முறைக்கு இரு முறை உரக்கப் பேசிப் புரிய வைக்க வேண்டியிருப்பதை ஒரு பெரும் பிரயாசை யாகக் கருதுகின்றனர் இளந்தலைமுறையினர். தங்களுக்குச் சம்பந்தமில்லாத எல்லா விஷயங்களிலும் மூக்கை நுழைத்து அது என்ன, இது என்ன,.என்று ஓயாமல் நச்சரித்துக் கொண்டிருக்கும் முதியோரைப் பார்த்து மற்றவர்கள் எரிச்சல்படுகின்றனர். இப்படி முதியோர் பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.

இந்நிலையில் இளையோர் பொறுமையுடன் அவர்களைப் பக்குவமாகவும் நளினமாகவும் நடத்துதல் வேண்டும். முதுமைப் பருவம் எத்தகையது என்றால், அது குழந்தைப் பருவத்தின் மறுவடிவமே'' என்பர் இன்றைய அறிஞர் சிலர். இந்தக் குழந்தைப் பருவத்தின் மறுவடிவம் குறித்துத் திருமறை குர்ஆன் பன்னூறு ஆண்டுகளுக்கு முன்னரே மிக அருமையாக எடுத்தியம்பியுள்ளது.

இரண்டாம் குழந்தைப் பருவத்திலிருக்கும் முதிய பெற்றோரை எப்படிப் பேண வேண்டும் என்பது பற்றி, திருமறை குர்ஆனும் திருநபி மொழிகளும் காட்டியுள்ளது போன்ற அருமையான வழிமுறைகளை வேறு எங்கும் காணவியலாது.

மேலும், நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம்வரை கர்ப்பப் பையில் தங்கச் செய்கிறோம். பின்பு உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்பு நீங்கள் உங்கள் வாலிபத்தை அடையும்படிச் செய்கிறோம். அன்றியும் (இதனிடையில்) உங்களில் சிலர் மரிப்பவர்களும் இருக்கிறார்கள். (ஜீவித்து) அறிவு பெற்ற பின்னர் ஒன்றுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக் கூடிய தளர்ந்த வயது வரை விட்டு வைக்கப்படுபவர்களும் இருக்கின்றனர். அல்குர்ஆன் 22:5

கல்வியறிவு பெற்றிருந்தும் எதுவுமே அறியாதவர்களைப்போல் ஆகிவிடக்கூடிய மிகத் தளர்ந்த வயோதிகப் பருவம் வரையில் வாழ்ந்திருப்பவர்களும் உங்களில் உண்டு. அல்குர்ஆன் 16:70

மேலும் எவரை நாம் வயோதிகராக்குகிறோமோ, அவருடைய நிலைமையைப் படைப்பில் (பலவீனமான நிலைக்கு) மாற்றி விடுகின்றோம், அவர்கள் (இதை) அறிந்து கொள்ள வேண்டாமா? அல்குர்ஆன் 36:68

முதுமைப் பருவம் எப்படிப்பட்டது என்பதை இறைவன் இரத்தினச் சுருக்கமான வார்த்தைகளில் இந்த இடங்களில் கூறிவிடுகின்றான். நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து வயோதிகப் பருவத்தை எய்துபவர்களின் நிலையை இங்குக் கருதிப் பார்த்தல் வேண்டும்.

முதுமையும் வயோதிகமும் மனிதனைப் பெரிதும் பலவீனப்படுத்தி விடுகின் றன. எந்த அளவுக்கு என்றால், அந்த மனிதன் முதன்முதலில் இந்த உலகில் இளந்தளிராகப் பிறந்த போது எப்படிப் பலவீனமாக இருந்தானோ, அதே போன்ற ஒரு நிலையை இப்போது சருகாக முதிர்ந்த நிலையிலும் பெறுகின்றான்.

வயோதிகமடைந்தவரின் நிலையை நாம் தலைகீழாகப் புரட்டி விடுகிறோம் என்கிறான் இறைவன். உடல் அளவிலும் உணர்வு அளவிலும் இந்தத் தலைகீழ் மாற்றத்தை இறைவன் உண்டு பண்ணிவிடுகிறான். பச்சிளங் குழந்தைகளைப் பாருங்கள். அவை தாமே தனித்து வாழும் ஆற்றல் இல்லாதவை. பெற்றோரைச் சார்ந்துதான் குழந்தைகளால் வாழ முடியும். குழந்தைகளின் உடலும் மனமும் உரிய வளர்ச்சி பெற்றிருக்காத மழலைப்பருவம் அது.

பசியையும் வலியையும் இயற்கைத் தேவைகளையும் குழந்தைகள் பேசித் தெரிவிப்பதில்லை, அதற்குரிய திறன் அவர்களுக்கில்லை. தாய்தான் குழந்தையின் அசைவினை அறிந்து அதற்கு என்னவேண்டும் என்பதைத் தாய்மையுணர்வினால் தெரிந்து பிள்ளையைப் பராமரித்து வளர்த்திடுவாள். உணவூட்டுவதற்கோ, குழந்தையின் அசுத்தத்தைக் கழுவிச் சுத்தம் செய்வதற்கோ தாய் முகம் சுழிப்பதில்லை. நடை வண்டியோடு குழந்தை தள்ளாடித் தடுமாறி நடப்பதைக் கண்டு ஆனந்தமடையாத பெற்றோர் யார் இருக்க முடியும்? இவையெல்லாம்தான் குழந்தையின் நிலைகள்.
இப்படி வளர்ந்து, வாலிபம் எய்தி வலுவான உடலும் திடமான உள்ளமும் வாய்க்கப் பெறுகிறான் மனிதன். துணிச்சல், வீரம், முரட்டுக் குணம், நினைத்ததை முடிக்கும் அபார ஆற்றல் அனைத்தையும் பெறுகிறான், பின்னர் வாலிபமுறுக்கு விடைபெறுகிறது. முதுமைப் பருவம் அழையாத விருந்தாளியாக வந்து புகுந்து கொள்கிறது. பெரும் வயோதிக நிலையில் முதுமை அடையும்போது, மனிதனுடைய ஆட்டபாட்டங்கள் எல்லாம் ஒடுங்கிப் போகின்றன.

குழந்தைப் பருவத்தில் எத்தகைய பலவீனமான நிலையில் இருந்தானோ, அத்தகையதொரு நிலைக்கு மீண்டும் வந்து விடுகிறான் மனிதன். பல் விழுந்த பொக்கை வாயனாகி, பல்லோடு சொல்லும் போய்க் குழறிப்பேசும் மழலை நிலைக்குத் திரும்புகின்றான். நடைவண்டியுடன் தடுமாறியவன் இப்போது ஊன்றுகோலுடன் தள்ளாடுகின்றான்.

முதுமையே ஓர் உபாதை. அதிலும் வியாதிகள் வேறு வந்து சேர்ந்து கொண்டால் கேட்கவே வேண்டாம். படுத்த படுக்கையிலேயே அசுத்தம் வெளியாகிறது. ஊட்டிக் கொடுத்தாலன்றி உண்ணமுடியாத தளர் நிலை. நினைவாற்றலின்றி எதை எதையோ சம்பந்தா சம்பந்தமில்லாமல் பிதற்றுகின்றான். மெய் தளர்கிறது; பார்வை மங்குகிறது; கேட்கும் திறன் குறைகிறது; வாய் குழறுகிறது; நுகரும் திறனற்று மனமும் தடுமாறிப் போகிறது. இப்படியாக ஜம்புலனோடு ஆறாவதாகிய சிந்தனையாற்றலும் செயல் குன்றிப் போகின்றது.

வாழ்க்கை என்னும் ராட்டினச் சக்கரத்தின் காலச் சுழற்சியில் எழுபது எண்பது ஆண்டுகளுக்குப் பின், மேல் தட்டு கீழே வருகிறது. கீழ் தட்டு மேலே போகிறது குழந்தைப் பருவத்தைக் கடந்து வந்தவன் அது போன்றதொரு நிலையை முதுமைப் பருவத்தில் எய்துகின்றான். இப்போது இவனைப் பராமரிப்பதற்கு, குழந்தைப் பருவத்தில் இவனைப் பேணிக் காத்த பெற்றோர் உயிரோடு இருந்திடவில்லை. மாறாக, இவனால் பெற்று வளர்க்கப்பட்ட பிள்ளைகள் தாம் இவனுடன் தெம்போடு இருக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில் குடும்பங்களுக்குள்ளே யதார்த்த வாழ்வில் இம்முதியோர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் வித்தியாசமானவை!

குடும்பத்தில் முதலாம் குழந்தைப் பருவத்திற்குத் தரப்படுகின்ற வரவேற்பும் உபசரிப்பும் இரண்டாம் குழந்தைப் பருவமாகிய முதுமைப் பருவத்திற்குத் தரப்படுவதில்லை. தளிரைக் கண்டு மகிழ்கின்ற மனம் சருகைக் கண்டு அதுபோல் மகிழ்வதில்லையே! ஏன்?
கணவனும் மனைவியுமாக இல்வாழ்க்கையில் அடியெடுத்து வைத்தவர்களுக்கு, பெற்றோர் என்னும் சிறப்பான அந்தஸ்தைத் தருவது குழந்தையே. எனவே இக்குழந்தையின் வருகையை ஆவலுடன் எதிர்பார்க்கின்றான் மனிதன். இக்குழந்தை வளர்ந்து ஆளாகி, பின்னாளில் எப்படியெல்லாம் உருவெடுப்பான் என்பதை இறைவனைத் தவிர வேறு எவரும் அறியார், இந்நிலையில் இளம் மொட்டினை நல்ல விதத்தில் மலரச் செய்வதற்காகப் பெற்றோர் படாதபாடு படுகின்றனர்!

ஆனால், முதியோர் விஷயமே வேறு. அவர்கள் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து எல்லா கஷ்ட நஷ்டங்களையும் ஆண்டு அனுபவித்து ஓய்ந்து போனவர்கள், அவர்கள் வாழ்ந்த காலத்தில் குடும்ப உறுப்பினர்களான மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரக் குழந்தைகள் முதலியோருடன் பலவாறாக உறவு பாராட்டியிருந் திருக்கலாம், கொண்டு, கொடுத்து உறவு பாராட்டுவதில் பாரபட்சமாகவும் ஓரவஞ்சனையாகவும் கூட நடந்திருக்கலாம். அல்லது இறைவனுக்கு அஞ்சி நடுநிலை பிறழாமலும் நடந்திருக்கலாம். ஒரு காலத்தில் குடும்பத்தின் தூணாக நின்று தாங்கிய இம்முதியோர், இனி எந்த வகையிலும் உபயோகப்படாத ஓர் உயிர்ப்பிண்டம் போன்று முடங்கிப்போய்க் கிடக்கும்போது நன்றி மறந்த மனித மனம் அம்முதியோரை வேண்டாவெறுப்பாக அணுகுகின்றது.

பெற்றோர் கையோங்கிருந்த காலத்தில் பாரபட்சமாக நடந்த காரணத்தாலோ, அல்லது அவர்கள் முதுமைப்பருவமடைந்து எதற்கும் லாயக்கற்றவர்களாகப் போய் விட்ட காரணத்தினாலோ, இன்று அவர்களைப் பராமரிக்க மறுக்கும் பிள்ளைகளைப் பார்க்கின்றோம். வாய்க்கு வந்தபடி அவர்களை இழிமொழிகளால் வைகின்ற மக்களையும் பார்க்கின்றோம்.

முதியோர் மீது அன்பு, பாசம், பரிவுகாட்டுதல் போன்ற குடும்ப அரவணைப்புப் பற்றிக் கவலைப்படாத மேனாட்டினருக்கு இம்முதியோர் இல்லங்கள் பெரிதும் கைகொடுக்கின்றன. ரொம்பவும் மிஞ்சிப்போனால், வயோதிக வியாதியாளர் களைக் கருணைக் கொலை என்ற பெயரால் இவ்வுலகத்தை விட்டே ஒரேயடியாக அனுப்பி வைத்து விடுகின்ற மனித நேயத்தை'யும் காண்கிறோம்.

முதிய பெற்றோருக்கு இப்படிப்பட்ட இன்னல்கள் விளைவிக்கப்படுவதை இஸ்லாம் ஒருபோதும் சகித்துக் கொள்ளவில்லை. வயோதிகமடைந்து செல்லாக்காசாக ஆகிவிட்ட ஒரே காரணத்துக்காக அவர்களைக் கண்ணியக் குறைவாகத் திட்டுவதையோ, வீட்டை விட்டுத் துரத்துவதையோ இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மாறாக இத்தகைய முதிர்ந்த குழந்தைகளைப் பெற்றிருக்கின்ற பிள்ளைகள் இவர்களை எப்படிக் கண்ணும் கருத்துமாகப் பொன்னைப் போல் பாவிக்கவேண்டும் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைத்துள்ளது.

அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான். அவ்விருவரில் ஒருவரோ அல்லது இருவருமோ உம்மிடத்தில் முதுமை அடைந்து விட்டால், அவர்களைச் சீ' என்று கூடக் கூறாதீர், அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்டி விடாதீர். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான, கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக் காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும், என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னை பரிவோடு அவ்விருவரும் இரட்சித்ததுபோல, நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக!'' என்று கூறிப் பிரார்த்திப்பீராக! அல்குர்ஆன் 17:23.24

பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்று இறைவன் கட்டளையிடுகின்ற இதுபோன்ற இடங்களிலெல்லாம் இஹ்ஸான்' என்னும் பதத்தைப் பிரயோகிக்கின் றான், இஹ்ஸான்' என்னும் வார்த்தை திருமறை குர்ஆனில் ஆறு இடங்களில் இடம் பெற்றுள்ளது, இவற்றுள் ஐந்து இடங்களில் (2:83, 4:36, 6:151, 17:23, 46:15) இச்சொல், பெற்றோருக்கு நன்முறையில் பணிவிடையாற்றுதல் என்னும் பொருளோடு ஒட்டி நிற்கின்றது.

முஸ்லிம் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு இறைவனுக்கு முற்றிலும் தன்னை அர்ப்பணித்து வாழும் ஒரு மனிதன், இஹ்ஸான்' என்னும் நற்கருமங்களின் வாயிலாக அன்றி, வேறு எவற்றைக் கொண்டும் இறைவனை நெருங்க முடியாது.

எவர் அல்லாஹ்வுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு (முஹ்ஸின் என்னும்) நற்செயல் புரிபவராக இருக்கிறாரோ, அவருக் குரிய வெகுமதி, அவருடைய இரட்சகனிடத்தில் உண்டு எனத் திருமறை குர்ஆன் உத்தரவாதம் அளிக்கின்றது. அல்குர்ஆன் 2:112

இறைவனின் திருப்தி ஒன்றை மட்டுமே நாடி வாழுகின்ற ஒரு முஸ்லிம் இஹ்ஸான் என்னும் நற்செயல் புரிகின்ற முஹ்ஸின் ஆகவும் வாழவேண்டும், அப்படியானால் இந்த இஹ்ஸான்' என்னும் நற்கருமத்தை 'உன் இல்லத்திலிருந்தே நீ தொடங்குவாயாக!'' என்கிறது இஸ்லாம்.

ஊருக்கெல்லாம் நல்லவனாக ஒருவன் பெயரெடுக்கலாம். ஆனால் வீட்டினுள் தன் பெற்றோரைக் கண்ணியக் குறைவாக நடத்தி, அவர்களுடைய மனம் புண்படும்படி நடந்து கொள்வானேயானால், அத்தகையவன் ஒரு போதும் முஹ்ஸின்' என்னும் நல்லவன் ஆகமாட்டான்.

நற்செயல் என்பதை வீட்டிலிருந்து தொடங்குதல் வேண்டும். அதுவும் தன்னை ஈன்றெடுத்த பெற்றோரிடம் உரிய மரியாதையுடன் நடந்து, அவர்களைப் போற்றிப் பேணுவதில் இருந்து ஆரம்பிக்க வேணடும். இவ்வாறுதான் நடந்து கொள்ள வேண்டும் என்பது இறைவனுடைய கட்டளையாகும்.

பெற்றோரில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமை எய்திவிடுவார்களாயின், அவர்களைப் பார்த்து உதாசீனமாகப் பேசுதல் கூடாது. அவ்விருவரையும் வீட்டை விட்டு வெளியே செல்லுமாறு விரட்டுதல் கூடாது, அவர்களிடம் கண்ணியமான பேச்சுக்களையே பேசுதல் வேண்டும் என்றெல்லாம் இறைமறை நமக்குப் பாடம் புகட்டுகின்றது.

தாமாகப் பறந்து இரைதேடத் தெரியாத குஞ்சுப் பறவைகளுக்குத் தாய்ப்பறவை இரை தேடி வந்து ஊட்டி மகிழ்கின்றது. இக்குஞ்சுகளுக்கு ஓர் ஆபத்து என்றதும் ஓடோடிச் சென்று தன் இறகுகளை அகல விரித்து அரவணைத்துப் பாதுகாக்கின்றது. இப்படித்தான் பெற்றோரும் தம் பிள்ளைகளைப் பேணி வளர்த்தனர்.

இன்று இப்பெற்றோர் முதுமையடைந்து, ஓடியாடித் திரிந்து பொருளீட்ட முடியாமல் கூட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கின்றனர். வாழ்ந்து முடிந்து வலுவிழந்து சிறகொடிந்து கூட்டுக்குள்ளே முடங்கிக் கிடக்கும் இம்முதிய பெற்றோர் மீது பிள்ளைகள் எரிந்து விழுவார்களானால் அதன் காரணமாக அப்பெற்றோர் மேலும் மனம் புண்படுவர்.

எனவே, அவர்களின் இயலாத நிலை கண்டு நாம் அவர்களிடம் கருணை காட்டுதல் வேண்டும். அன்றியும் அம்முதிய பெற்றோரிடம் நம்மால் இயன்ற வரை பணிவுடனும் பரிவுடனும் பழகுதல் வேண்டும். சிறகொடிந்து, வாழ்வின் அந்திமக்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருக்கும் அவர்களுக்காக, பணிவு என்னும் இறக்கையைப் பிள்ளைகள் விரித்துத் தாழ்த்தி, அவர்களைஅரவணைத்துச் செல்ல வேண்டும். இப்படியாக இறைமறை குர்ஆன் நமக்கு இலக்கிய நயத்துடன் உபதேசித்துள்ளது.

பகுத்தறிவற்ற விலங்கு, பறவை உள்ளிடட்ட உயிரினங்களின் நடைமுறைக்கும் பகுத்தறிவுடைய மனிதனின் ஒழுக்கத்துக்குமிடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடும் இங்குக் கருதத் தக்கது. விலங்கு, பறவை முதலியன, தாம் பெற்றெடுத்த குட்டிகளையும் குஞ்சுகளையும் ஒரு நிலைக்குக் கொண்டு வருவதுவரை பேணிப் பாதுகாக்கின்றன. அத்தோடு அவற்றுக்கிடையே உள்ள தாய் பிள்ளைப்பாசம் தடம் தெரியாமல் போய்விடுகின்றது. தாய் விலங்கோ, தாய்ப் பறவையோ தளர்ந்து போய்விடும்போது அவற்றின் பிள்ளைகள் வந்து அவைகளைப் பராமரிப்பதில்லை. இதுதான் விலங்கு ஒழுக்கம்.

யார் தாய், யார் தந்தை, யார் பிள்ளை என்றெல்லாம் பகுத்தறிந்து வாழ்நாள் காலத்துக்கும் குடும்ப உறவைப் பேணுமளவுக்கு அவற்றுக்கு இறைவன் பகுத்தறிவை வழங்கிடவில்லை. ஆனால் மனிதனுக்கு இறைவன் பகுத்தறிவை வழங்கியுள்ளான். இருந்தும் முதிய பெற்றோரைப் பராமரிக்காமல் நன்றி மறந்து மனிதன் திரிகிறான் என்றால், அவன் பகுத்தறிவுடைய மனித நிலையிலிருந்து தரம் தாழ்ந்து விலங்கு நிலைக்குப் போய்விட்டான் என்பதே பொருளாகும்.

இப்படிப்பட்ட இழிந்த நிலைக்கு மனிதன் சென்று விடக் கூடாது. முதிய பெற்றோர் விஷயத்தில் அவன் மனிதனாக' நடந்து கொள்ளவேண்டும். அவர்களிடம் பிள்ளைகள் பயன்படுத்தும் நல்ல சொற்களும் அவர்களை நோக்கிய நல்ல நடத்தையும் நிச்சயமாக அம்முதியவர்களை மனம் குளிரச் செய்யும். வாழ்வின் விளிம்பில் தொங்கிக் கொண்டிருக்கும் அவர்களுடைய தளர்ந்த மனதுக்கு இவையே தக்க ஊன்று கோலாக அமைய முடியும். பணிவு என்னும் இறக்கையை அம்முதிய பெற்றோருக்காக நீ தாழ்த்துவாயாக!'' என்று இறைவன் கூறுவதிலிருந்து பகுத்தறிவற்ற உயிரின வாழ்க்கையிலிருந்து நீ வேறுபட்டுச் செயல்படுவாயாக! பிள்ளைப் பறவையாகிய நீ தாய்ப்பறவைக்கு உன் பணிவு என்னும் அரவணைப்பைக் கொடுப்பாயாக! என்பதையும் உபதேசிக்கின்றான். எனவே கருணையுள்ளத்துடன் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதோடு, இறைவன் தன் அளவிலாக் கருணையை அம்முதிய பெற்றோர் மீது பொழிவதற்காக நாம் பிரார்த்தனையும் புரிதல் வேண்டும். அந்தப் பிரார்த்தனையை எப்படிப் புரிய வேண்டும் என்பதையும் இறைவனே நமக்குக் கற்றுத் தருகின்றான்.

என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னை (பரிவோடு) அவ்விருவரும் இரட்சித்தது போல நீயும் அவ்விருவருக்கும் கிருபை செய்வாயாக!'' என்றும் கூறிப் பெற்றோருக்காக நாம் பிரார்த்தனை புரிதல் வேண்டும்.

ரப்பு' ஆகிய இரட்சிப்பவனே! என் பெற்றோர் இருவர் மீதும் நீ கிருபை பொழிவாயாக!
நான் சிறு பிள்ளையாக இருந்தபோது என் பெற்றோர் இருவரும் எனக்கு ரப்பு' ஆக இருந்து இரட்சித்தது போன்று நீயும் அவர்களை இரட்சிப்பாயாக!

இப்பிரார்த்தனைத் தொடரில் இடம் பெற்றுள்ள ரப்பு' என்னும் சொல்லாட்சி யானது தன்னிகரற்ற இரட்சகனாகிய இறைவனோடும், தம் பிள்ளைகளை தம்சக்திக் கேற்ப இரட்சிக்கின்ற பெற்றோரோடும் இணைத்துப் பயன் படுத்தப்பட்டிருக்கின்றது.

ஒரு மனிதனைப் பெற்று வளர்த்து ஆளாக்குவதில் தன்னிகரற்ற இரட்சகனுக்கு அடுத்த நிலையில் அவனது பெற்றோரே சிறப்பிடம் வகிக்கின்றனர். இந்த உண்மை யையும் இப்பிரார்த்தனைத் தொடர் உணர்த்தி நிற்கின்றது. இதனை மறவாமல் நினைவில் நிறுத்தி, ஒவ்வொரு மனிதனும் தன் முதிய பெற்றோரின் நலனுக்காகத் தன்னிடம் துஆ கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் எனச் சொல்லித் தருகிறான் வல்ல இறைவன்.

ஏதோ, மனிதன் தன் பெற்றோருக்குச் செய்யக்கூடிய உபகாரமன்று இது. மாறாக இப்பெற்றோர் அவனுக்கு அன்று செய்த பேருபகாரத்திற்காக அவன் இன்று செய்திடும் ஒரு சின்னஞ்சிறிய கைம்மாறுதான் இது. இந்த நன்றியுணர்வை மறந்து நன்றிகெட்டவனாக ஒரு போதும் மனிதன் ஆகிவிடக் கூடாது.

எனவே தான் இந்தப் பிரார்த்தனையின் தொடரிலேயே, இந்த மனிதன் சிறு பிள்ளையாயிருந்த போது பெற்றோர் அவனை எப்படியெல்லாம் பாராட்டிச் சீராட்டி வளர்த்தார்கள் என்பதை நயமாக நினைவுபடுத்தி, அதையே ஒர் ஒப்புமையாக எடுத்துரைத்து, அது போன்ற மகத்தான ஒரு கிருபையை இறைவன் அப்பெற்றோர் மீதும் பொழிய வேண்டும் எனக் கேட்குமாறு நமக்குத் தெளிவாக உணர்த்திக் காட்டுகிறது திருமறை குர்ஆன்.

உன்னைப் பெற்றெடுத்த பிறகு உன் தாய் உன்னைப் பாராட்டிச் சீராட்டி உனக்குப் பாலூட்டிக் கண்விழித்துக் கண்ணை இமை காப்பது போல் உன்னைக் காத்து வளர்த்தது ஒரு புறமிருக்கட்டும். உன்னைக் கருவில் சுமந்து திரிந்த போது அந்தத் தாய் பட்ட சிரமங்களுக்காக ஒரு மகன் அல்லது மகள் என்ன விலை கொடுத்தால் அதற்கு ஈடாகும்? எப்படி நன்றி பாராட்டினாலும் தாய் பட்ட அந்தச் சிரமத்திற்கு முன்னால் அந்த நன்றிகள் சிறுத்தே போகும்.

அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகுசிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள் (46:15) எனஇயம்புகிறது திருமறை குர்ஆன்.

இன்னோர் இடத்தில் இதைச் சொல்கிறபோது, அவனுடைய தாய் பலஹீனத் தின் மேல் பலஹீனம் கொண்டவளாக கர்ப்பத்தில் அவனைச் சுமந்தாள் (31: 14) எனக் குறிப்பிடுகிறான் இறைவன்.

சிரமத்துக்கு மேல் சிரமம்' பலஹீனத்துக்கு மேல் பலஹீனம்' என்ற திருமறைத் தொடர்கள் சிந்திப்பதற்குரியன. கருவுற்ற நிலையில் தாய்படுகின்ற சிரமமும் பலஹீனமும் வார்த்தைகளால் வருணிக்க முடியாதன. எத்தனை நீளமாக நெடியதாக எடுத்துரைத்தாலும் அந்தச் சிரமமும் பலஹீனமும் சொல்லி முடியாதன. எனவே சிரமத்துக்கு மேல் சிரமம்', 'பலஹீனத்துக்கு மேல் பலஹீனம்' என்ற சொல்லடுக்குகள் வாயிலாக இதனை நமக்குச் செறிவாக உணர்த்துகின்றான் இறைவன்.

இவ்விரு தொடர்களிலும் இடம் பெற்றுள்ள சிரமத்துக்கும் பலஹீனத்துக்கும் மனிதன் எத்தனையோ பொருள் கொடுத்துக் கொண்டே போகலாம். இதையெல்லாம் உன்னைக் கருவுற்ற போதே தாய் தாங்கிக் கொண்டாள். உன்னை ஈன்றெடுத்த பின்னர் அவள் புரிந்த தியாகங்கள் இன்னொரு வகை. இப்படிப்பட்ட சிறப்புக்குரிய தாய் முதுமையடைந்திருக்கிறாள். நீயும் பதிலுக்கு அம்முதியவர்களை உன் முதுகில் சுமந்து கொண்டே திரி என்று இறைவன் கூறவில்லை.

அவர்களிடம் கனிவோடும் கண்ணியத்தோடும் நடந்துகொள், எரிச்சலுற்று அவர்களை உதாசீனமாகப் பேசாதே! பெற்றோரைவிரட்டித் தள்ளாதே! பணிவு காட்டி அவர்களைப் பேணிப் பராமரித்திடு. அதுவே நீ முதிய பெற்றோருக்குச் செய்திடும் நன்றிக் கடனாகும் என்கிறான் இறைவன்.


பெற்றோர் உறவைப் பேணித் தொடர்க!

முதுமைப் பருவத்தை ஒரு மனிதன் எப்போது எய்துகின்றான்? இந்த வினாவுக்குச் சரியான விடையைப் பொதுமைப்படுத்திக் கூற இயலாது மனித வரலாற்றில் முந்தைய கால கட்டங்களில் மனிதர்கள் நீண்ட நெடுங்காலங்கள் வாழ்ந்துள்ளனர். நூஹ் நபி(அலை) அவர்கள் 950 ஆண்டுகள் வாழ்ந்திருந்ததாகத் திருமறை குர்ஆன் கூறுகிறது (29:14).

அடுத்தடுத்த பிந்தைய காலகட்டங்களில் மனித ஆயுள், கணிசமாகக் குறைந்து வந்திருக்கிறது. இன்றைய உளவியலார் அறுபது வயதைக் கடந்த நிலையை முதுமை நிலை எனக் குறிப்பிடுகின்றனர்.

எமது சமுதாயத்தினரின் சராசரி வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்டதாகும் ஒரு சிலர் இதிலிருந்து விதிவிலக்காகலாம். என நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி) நூல்: இப்னுமாஜா

அறுபதைத்தாண்டிய நிலையிலும் துடிப்போடு செயல்படுகின்ற பல மனிதர்களைப் பல்வேறு துறைகளிலும் கண்டு வருகிறோம். நபி(ஸல்) அவர்கள் 63-ஆம் வயதில் இவ்வுலகைப் பிரிவது வரை, ஒரு சிறந்த ஆட்சித் தலைவராகச் செயல்பட்டிருக்கிறார்கள்.

அரசியல் துறையில் இன்று பெரும்பான்மையான தலைவர்கள் அறுபதைக் கடந்தவர்களாகவே காணப்படுகின்றனர்.பொருளாதாரத் துறை வல்லுநர் அமார்த்யசென் தொடங்கி ராக்கெட் விஞ்ஞானி அப்துல் கலாம் வரை எத்தனையோ நிபுணர்கள் அறுபதுக்கு மேலும் சுறுசுறுப்பாகச் செயல்படுகின்றவர்களே.

இவர்களைப் போன்று, அறுபது எழுபது வயதுக்குப்பிறகும் இளமைத் துடிப்போடு வாழ்பவர்கள் ஒரு புறமிருக்க, மறுபுறத்தில் முப்பது நாற்பது வயதில் கூட முதுமையுணர்வோடு வாழ்வில் விரக்தியுற்றுத் திரிபவர்களையும் கண்டுதான் வருகிறோம்.

இதிலிருந்து என்ன தெரிகிறது? முதுமை என்பது அவரவருடைய உணர்வு சார்ந்த நிலையே ஆகும், முதுமை உணர்வைத் தள்ளிப் போடச் செய்வதில் இன்றைய மருத்துவ விஞ்ஞானமும் ஓரளவுக்குத் துணை செய்து வருகிறது. வயதானவர்களின் உடலில், உள்ள பிரச்சனைகளைக் கவனிப்பதற்கென்றே இன்று நவீன மருத்துவ விஞ்ஞானத் துறைகள் (ஏங்ழ்ண்ஹற்ழ்ண்ஸ்ரீள்) தோன்றியுள்ளன. மனிதன் முதுமை அடைவதைக் கணிசமான அளவுக்குத் தள்ளிப்போடுவது எப்படி என்ற ரீதியில் மருத்துவ விஞ்ஞானிகள் ஆராய்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மனித உடலின் பழுதடைந்த உறுப்புகளைச் சீர்செய்யவும், முடியுமானால் மாற்று உறுப்புக்களையோ செயற்கை உறுப்புக்களையோ பொருத்தி மனித ஆயுளை நீட்டிக்கச் செய்வதற்கும் பெருமுயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இறைநாட்டமும் இறைவல்லமையும் எந்த விஞ்ஞானத்தாலும் வெல்லமுடியாதன. சமீபத்தில் ஜோர்டான் மன்னர் ஹுஸைனுக்கு அமெரிக்க நாட்டின் உலகின் முதல் தர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னரும் 63 வயதில் அவர் மரண மடைவதிலிருந்து யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை,

காலந்தோறும் இத்தகைய நிகழ்வுகளை ஏராளமாகப் பார்த்து வருகிறோம்., இருந்த போதிலும் முதுமையை வெல்ல என்ன வழி என்பதைக் கண்டறிய விஞ்ஞானிகள் பாடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஒரு மனிதன் எப்போது முதுமை அடைகிறான் என்பதற்கு யாரும் திட்டவட்ட மான விடையளித்ததில்லை. ஆனால் திருமறை குர் ஆன் இதற்கும் ஒரு அழகான அளவுகோலை எடுத்துவைத்துள்ளது. தாம் பெற்ற பிள்ளைக்கு நாற்பது வயதாகும்போது, அந்தப் பெற்றோர் முதிய பெற்றோர் பட்டியலில் இடம் பெறுகின்றனர்.

உதாரணமாக ஒருவர் தன் இருபத்தைந்தாம் வயதில் திருமணம் புரிந்து, இருபத்தாறாம் வயதில் ஒரு மகனைப் பெறுகிறார் என வைத்துக் கொள்வோம். இந்த மகனுக்கு நாற்பது வயதாகும் போது, தந்தைக்கு அறுபத்தாறு வயதாகிறது.

இதுபோலவே முப்பது வயதில் மணமுடித்து முப்பத்தொன்றாம் வயதில் ஒரு மகனைப் பெறுபவர், அந்த மகனுக்கு நாற்பது வயதாகிறபோது, தான் எழுபத்தொரு வயதை அடைகிறார்.

எப்படியாயினும், பிள்ளைகளுக்கு நாற்பது வயது ஆகும்போது, அந்தப் பெற்றோரை முதிய பெற்றோராகக் கருதலாம். இதில் சில விதிவிலக்குகள் இருக்கக் கூடும். இருந்தாலும் பொதுவான ஒரு வரன்முறையாக இது அமைகிறது.

நாற்பது வயதில் ஒரு மனிதனுக்குக் குடும்பப் பொறுப்புகள் அதிகமாகின்றன. தன் மனைவி, தன் மக்கள் ஆகியோருக்கு ஆற்ற வேண்டிய குடும்ப பாரத்தின் காரணமாகப் பலர் தங்களது பெற்றோரை மறந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட நெருக்கடியான கட்டத்தில் தான் இவனது பெற்றோர் முதுமை யின் படிக்கட்டில் காலெடுத்து வைக்கின்றனர். ஆகவே, இந்தத் தருணத்தில் முதிய பெற்றோரை நன்றியுடன் நினைத்துப்பார்த்து, அவர்களைக் கனிவுடன் நடத்துதல் வேண்டும் என இறைவன் கட்டளையிடுகின்றான்.

தன் பெற்றோருக்கு நன்மை செய்யும் படி மனிதனுக்கு நாம் உபதேசம் செய்தோம். அவனுடைய தாய் வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள். (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும் அவனுக்குப் பால்குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும், இறைவா நீ என் மீதும் என்பெற்றோர் மீதும் புரிந்த அருள் கொடைகளுக்காக நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல செயல்களைச் செய்யவும் எனக்கு அருள்பாலிப்பாயாக! என்னுடைய சந்ததியையும் நல்லோர்களாகச் சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன் பக்கமே திரும்புகிறேன். அன்றியும் நான் முஸ்லிம்களில் ஒருவனாக (உனக்கு முற்றிலும் கீழ்ப்படிந்தவனாக) இருக்கிறேன்'' என்று கூறுவான். அல்குர்ஆன் 46:15

வயோதிகப் பெற்றோருக்குப் பணிவிடை செய்வதில் இறைவனின் திருப்தி அடங்கியிருக்கிறது என்ற உண்மையையும் இத்திருவசனம் உணர்த்துகின்றது, தங்களிடம் பரிவும் கனிவும் காட்டுகின்ற சந்ததிகளையுடைய பெற்றோருக்கு, வயோதிகம் என்பது ஒரு சுமையன்று. வாழ்வின் பல்வேறு நிலைகளுள் அதுவும் இயல்பான ஒரு நிலையேயாகும்.

ஆனால் இன்று நாம் காண்பது என்ன?

வயோதிகம் இறை விதிப்படி மனிதனுக்கு ஏற்படுகின்ற ஒரு இயல்பான நிலை என்பதைப் பலர் மறந்து விடுகின்றனர். வயோதிகம் என்றாலே அது வேதனை மிக்கதுதான் என்பது போன்ற ஒரு மிரட்சியை இன்றைய செய்தித்தாள்கள், இதழ்கள், டி.வி. நாடகங்கள், திரைப்படங்கள் முதலியன பூதாகரமாகச் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

ஓய்வுபெறுதல், முதுமையடைதல் போன்றவற்றைத் தாங்கமுடியாத துன்பம் தரும் பிரச்சனைகளாக, இந்த மீடியாக்கள் நீட்டி முழக்கி விஸ்தரிக்கின்றன, குடும்பத்தலைவர் ஒருவர் பணிஓய்வு பெறுதலை அதிர்ச்சிக்குரிய சம்பவமாக இவை மிகைப்படுத்திக் காட்டுகின்றன. குடும்பத்து மன நிலையிலும் சமுதாயத்து மன அமைப்பிலும் இந்த மீடியாக்களின் தாக்கம் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றது.

பணியிலிருந்து ஓய்வுபெறுவது என்பது ஒருவர் கடந்த காலங்களில் ஆற்றிய அரும்பெரும் உழைப்பின் பலாபலன்களை ஓய்வுடன் நிம்மதியாக இருந்து அனுபவிப்பதற்குரிய காலமாகும் என்பதைக் குடும்பத்தினரும் சமுதாயமும் நினைத்துப் பார்ப்பதில்லை.

எந்த விதமான பிக்கல் பிடுங்கலுமின்றி, குதூகலமாகக் குடும்பத்துடன் முழு நேரத்தையும் கழிப்பதற்கு வாய்ப்பளிக்கின்ற அற்புதமான காலம் முதுமைப் பருவமாகும். குடும்பப் பாரங்களையெல்லாம் இளந்தோள்களின் மீது சுமத்திவிட்டு, முதியவர்கள் அவற்றிலிருந்து விடுபட்டு, பிறரோடு ஒத்திசைந்து போகிறவர்களாகவும், நல்லிணக்கமாக நடந்து கொள்பவர்களாகவும் ஆகிவிடுதல் வேண்டும். இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்குத் தீர்வு காண இயலும்.

ஓய்வு பெற்ற முதியோர் சிலர் ஒதுங்கியிருப்பதில் மகிழ்ச்சியடைகின்றனர். சிலர் தங்களுடைய ஆக்கபூர்வமான அனுபவங்களைக் கொண்டு பொதுக்காரியங் களில் தங்களை ஆர்வமாக ஈடுபடுத்திக் கொண்டு, சமூக நலப்பணிகளில் அக்கறை காட்டுகின்றனர்.

குறைந்த பட்சம், பேரக்குழந்தைகளைப் பள்ளிக்குக் கொண்டு போய்விடுதல், திருக்குர்ஆனையும் பள்ளிப்பாடங்களையும் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தல், வீட்டுத் தேவைகளுக்காக மார்க்கெட் போய் வருதல் போன்ற சின்னச்சின்ன உதவிகளைச் செய்வதன் மூலம் முதியவர்கள் தங்கள் பொழுதைப் பயனுள்ள வழியில் செலவிட முடியும். அதே வேளையில் குடும்பத்தினரின் மன நிறைவையும் ஈட்டிக் கொள்ள முடியும்.

இப்படிப்பட்ட உதவி ஒத்தாசைகளைச் செய்ய இயலாத நிலையிலுள்ள வயோதிகர்களிடம் குடும்பத்தினர் பரிவோடு நடந்து கொள்ளுதல் வேண்டும். முதியவர்களுக்கு முக்கியமாகத் தேவைப்படுவது சிறிது பொருளாதாரப் பாதுகாப்பும், அன்பு பாராட்டும் குடும்பத்தினரும், சற்று பேச்சுத்துணையுமே ஆகும். இவற்றைக் குடும்பச் சூழ்நிலையில் செய்து கொடுத்து விட்டால் அதுவே அவர்களுக்குப் பெரும் பயனளிப்பதாக இருக்கும்.

குடும்ப விஷயங்களில் சில முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்பாக வயோதிகப் பெற்றோர்களின் அறிவுரையையும் அனுபவ வழி காட்டுதல்களையும் நாடுதல் வேண்டும். இல்லையேல் தாம் புறக்கணிக்கப் படுவதாகக் கருதி அவர்கள் மனம் புழுங்குவர்.

முதியோரைப் புறக்கணித்தல், கீழ்த்தரமாக நடத்துதல், அவர்களிடம் கொடுூரமாக நடந்து கொள்ளுதல் போன்ற காரியங்களால் அவர்களுடைய வாழ்வுமட்டுமன்றி, முழுக்குடும்ப அமைதியுமே நிலை குலைகிறது.

பெற்றோரைப் பார்த்து சீ' என்று கூடக் கூறலாகாது என்கிறது திருமறை குர்ஆன்.இப்படியிருக்க அவர்களைத் திட்டுவது என்பது இறைவனை அஞ்சி ஒழுகுபவர் எவரும் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒரு செயலாகும். பெற்றோரை நாம் திட்டாமல் இருந்தால் மட்டும் போதுமா? பிறரிடமிருந்து பெற்றோருக்கு ஏச்சு வாங்கிக் கொடுக்காமலும் இருத்தல் வேண்டும். இது தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் நல்கியுள்ள அறிவுரையை எண்ணிப் பார்த்தல் வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தன் பெற்றோரைத் திட்டுவது பெரும்பாவங்களில் உள்ளதாகும் என்று கூறினார்கள். அப்போது (நபித்தோழர்கள்)'', அல்லாஹ்வின் தூதரே! எந்த மனிதராவது தனது பெற்றோரைத் திட்டுவாரா?'' எனக் கேட்டார்கள்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம் ஒருவர் இன்னொருவரின் தந்தையைத் திட்டுகிறார். அப்போது அவர் இவருடைய தந்தையைத் திட்டுகிறார். ஒருவர் இன்னொருவரின் தாயைத் திட்டுகிறார். அப்போது அவர் இவருடைய தாயைத் திட்டுகிறார்'' என்று விளக்க மளித்தார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

முதியோருக்கும் இளையோருக்குமிடையே உள்ள உறவுகளாயினும் சரி; கணவன், மனைவி, மக்கள், உறவினர் முதலியோருக்கிடையே உள்ள உறவு நிலைகளாயினும் சரி; இங்கெல்லாம் தேவையற்ற உரசல்களும் விரிசல்களும் எதனால் ஏற்படுகின்றன? இந்த இடத்தில் மனிதனுடைய நாவு ஆற்றுகின்ற பங்குபணி மிக மிக முக்கியமானதாகும்.

குடும்பத்தில் ஏற்படக்கூடிய சண்டை சச்சரவுகள், பிணக்குகளுக்குப் பல்வேறு காரணங்களிருப்பினும், நாவை அத்துமீறிப் பயன்படுத்துதலே, பல நேரங்களில் வேண்டாத விபரீதங்களைத் தோற்றுவித்து விடுகின்றது.

முரட்டுத்தனமாகப் பேசுதல், இடைமறித்துப் பேசுதல், இழிவாகவும் ஏளனமாகவும் பேசுதல், சிறுமைப்படுத்திப் பேசுதல், தற்பெருமை பாராட்டுதல் போன்ற நாவின் திருவிளையாடல்களால் குடும்ப அமைப்பிலும் கூட்டு அமைப்பிலும் பெருஞ் சீரழிவுகள் ஏற்பட்டு விடுகின்றன.

ஒருவர் இல்லாத போது அவரைப் பற்றி இன்னொருவரிடம் புறம் பேசுதலும், அவதூறுகளை வாரியிறைத்தலும், தனி ஒருவரின் பண்பு நலன்களையும், இல்லம் என்னும் அன்பு மாளிகையையும் தூள் தூளாக உடைத்துச் சிதைத்து விடுகின்றன. குடும்பத்திலுள்ள அத்துணை பேரும் ஒரேமாதிரி எண்ணுவதில்லை, செயல்படுவ தில்லை. ஒவ்வொருவருக்குமிடையே கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பே.

கணவன் மனைவிக்கிடையேயும் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையேயும் உடன் பிறந்தவர்களுக்கு மத்தியிலும் கருத்து மாறுபாடுகள் இருக்கத்தான் செய்யும். குடும்ப அமைப்புக்குள்ளேயே இப்படிப்பட்ட வேறுபாடுகள் நிலவும்போது சமுதாய அமைப்பைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

இக்கருத்து மாறுபாடுகளைப் பரஸ்பரம் புரிந்து கொள்ளுவதன் வாயிலாகத் தீர்த்துக் கொள்ளுதல் வேண்டும். நல்லெண்ணம் கொள்ளுதல், நட்புக்கரம் நீட்டுதல், அமைதியான நட்புச் சூழ்நிலையில் உரையாடுதல், ஆகியவற்றால் மிகக் கடுமையான சிக்கல்களுக்கும் எளிதில் தீர்வு காண இயலும்.

இதை விடுத்து குடும்பத்துக்குள்ளே ஒருவர் மீது ஒருவர் தவறான எண்ணத்தை வளர்த்துக் கொண்டு தங்களுக்கிடையே முகம் கொடுத்துப் பேசாமல் ஒருவரை ஒருவர் பழித்துப் பேசிப் பகைமை பாராட்டிக் கொண்டிருப்பதால் குடும்ப அமைப்பின் அடித்தளமே செல்லரிக்கத் தொடங்கிவிடும்.

எனவே கடுஞ்சொற்களின் அழிவுச் சக்தியை நாம் குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது. குடும்ப அமைப்பையும் சமுதாய அமைப்பையும் வெடித்துச் சிதைத்துவிடும் அணுகுண்டு போன்றவை இவை எனலாம்.

குடும்ப அமைப்பில் ஒருவரின் கற்பு நெறிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவம் நாவடக்கத்திற்கும் இருக்கிறது. கற்பு நெறி பிறழ்ந்தவர்கள் சமுதாய மதிப்பீட்டில் எந்த இடத்தைப் பெறுகிறார்களோ, அது போன்ற இடத்தைத்தான் நாகாக்கத் தவறியவர்களும் பெறுவார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று இதனை நமக்கு நன்கு உணர்த்திக் காட்டுகின்றது.

எவர் தமது இரண்டு தாடைகளுக்கு மத்தியில் உள்ளதையும் இரண்டு தொடைகளுக்கு மத்தியில் உள்ளதையும் சரியாகப் பயன்படுத்தப் பொறுப்பேற்றுக் கொள்கிறாரோ அவருக்குச் சொர்க்கத்திற்கு நான் பொறுப் பேற்று கொள்கின்றேன் என்பது நபி மொழியாகும். அறிவிப்பவர்: ஸஹ்ல் இப்னு ஸஃத்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

தொடைகளுக்கிடையில் உள்ளதைப் பேணுவதில் கண்ணும் கருத்துமாக இருந்து இறைவனை அஞ்சிக் கற்பொழுக்கத்துடன் வாழ்பவர்களை மிகுதியாகக் காண்கிறோம். ஆனால் இப்படிப்பட்டவர்களுள் பெரும்பான்மையினர் தாடைகளுக் கிடையே உள்ளதைப் பேணுவதில் தடம் புரண்டு போய் விடுகின்ற காட்சியைக் குடும்பந்தோறும் கண்டு வருகின்றோம்.

மனிதர்கள் போகிற போக்கில் நரம்பில்லாத நாக்கைக் கொண்டு லேசாகப் பேசிக் சென்று விடுகிறார்கள். ஆனால் இதன் விளைவாகக் குடும்பத்திற்குள்ளேயும் சமுதாயத்திற்குள்ளேயும் எவ்வளவு பெரிய பாதிப்புக்கள் ஏற்பட்டு விடுகின்றன என்பதை அவர்கள் எண்ணிப் பார்ப்பதில்லை. மறுமையின் சொர்க்கப் பேற்றிற்கே இது தடையாக அமைந்துவிடும் என்ற நபிகளாரின் எச்சரிக்கையை நாம் கவனத்தில் கொண்டு காரியமாற்றக் கடமைப்பட்டுள்ளோம்.

வயோதிகமடைந்த பெற்றோருக்கு ஆற்றவேண்டிய கடமைகள் குறித்துத் திருமறை குர்ஆனும் நபிமொழிகளும் தெளிவான வழிகாட்டுதல்களை நல்கியுள்ளன. இவை மட்டுமின்றி, பெற்றோர் காலமான பின்னர், பிள்ளைகள் அவர்களுக்கு நிறைவேற்றிட வேண்டியன யாவை என்பது குறித்தும் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்.

இறைத்தூதர் அவர்களே! பெற்றோர் இறந்து விட்ட பிறகு, நான் ஆற்றவேண்டிய உதவிகள் (பிர்ரு) எதேனும் உண்டா? என்று பனூஸலி மா கூட்டத்தைச் சேர்ந்த ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வினவினார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், ஆம்!
1. பெற்றோரின் ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளுதல்.
2. அல்லாஹ்விடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோருதல்.
3. அவர்கள் முடிவு செய்துவிட்டுச் சென்ற உடன்படிக்கைகளை நிறைவேற்றுதல்.
4. அவர்களின் உறவினர்களுக்கு உதவிபுரிதல்
5. அவர்களின் நண்பர்களைக் கண்ணியப் படுத்துதல் ஆகியவையாகும் என விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: உஸைது ஸாயிதீ (ரலி) நூல்: அபூதாவூத், இப்னுமாஜா

ஆகவே பெற்றோருக்குப் பிள்ளைகள் ஆற்ற வேண்டிய கடமைகள் பெற்றோரின் மரணத்தோடு முடிந்து விடுவன அல்ல. பெற்றோர் காலமான பின்னரும் அவை தொடர்கின்றன.

பெற்றோருடைய ஜனாஸாவுக்கு யார் யாரெல்லாமோ பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள். அதற்கு முன்னுரிமை பெற்ற பிள்ளைகள் ஜனாஸா தொழுகை யில் கலந்து கொள்ளாமல் தூரமாக ஒதுங்கி நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள். இது போன்ற வேதனைக்குரிய காட்சிகளை நாம் பல இடங்களில் கண்டு வருகிறோம். இந்தப் போக்கினைப் பிள்ளைகள் நீக்கிக் கொள்ளுதல் வேண்டும்.

பெற்றோருக்குப் பாவமன்னிப்புக் கோருவதற்காகக் கூலிக்கு ஆள் பிடித்து வந்து கத்தம் பாத்திஹா முதலியவற்றை அரங்கேற்றி, தூய இஸ்லாத்தின் வழி காட்டுதல்களிலிருந்து விலகிப் போகின்றவர்களைப் பார்க்கின்றோம். ஒவ்வொரு தொழுகைக்குப் பின்னரும், வாய்ப்பு கிடைக்கும் போதும் பெற்றோருக்காகப் பிள்ளைகள் மனமுவந்து இறைவனிடம் கையேந்தக் கடமைப்பட்டுள்ளனர். அந்தப் பிரார்த்தனையே உயிரோட்ட முடையதாகும்.

சொத்து சுகங்களுக்கு அதிபதியான தந்தை அல்லது தாய் மரணமடைந்து விட்டால், பல குடும்பங்களில் சொத்துப் பங்கீடு காரணமாகப் பெரும் சண்டை சச்சரவுகள் ஏற்படக் காண்கிறோம். அண்ணன் தம்பிகளே ஒருவருக்கொருவர் பகைத்துக் கொண்டும்; கோர்ட்டு, கேசு என்று எதிரிகள் போல வழக்காடிக் கொண்டும்; நீ யாரோ நான் யாரோ என்று பிரிந்து போவதைக் காண்கிறோம்.

ஜனாஸாவுக்காகச் செய்யப்படும் பல்வேறு பிரார்த்தனைகளுள் இறைவா (இறந்து விட்ட) அவருக்குப் பிறகு எங்களை வழிதவறச் செய்துவிடாதே, எங்களைக் குழப்பத்தில் ஆக்கிவிடாதே!'' என்று ஒரு இறைஞ்சுதலும் இடம் பெறுகின்றது. இதனை நம்மில் பலர் உணரத் தவறி விடுகின்றனர்.

பெற்றோர் உயிருடனிருக்கும்போது முடிவு செய்துவிட்டுச் சென்ற உடன் படிக்கைகளை நிறைவேற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும்.

மரணசாஸனத்தைக் கேட்டபின்னர், எவரேனும் ஒருவர் அதைமாற்றினால், நிச்சயமாக அதன் பாவமெல்லாம் யார் அதை மாற்றுகிறார்களோ அவர்கள் மீதே சாரும். நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன் 2:181

எனவே இவ்விஷயத்தில் குடும்பத்தினர் கவனமாக இருத்தல் வேண்டும். அதே வேளையில் இறந்து போனவர் வேண்டுமென்றே பாரபட்சமாக மரணசாஸனம் செய்திருப்பாரானால், அதனை மாற்றிவிட்டு, நியாயமான முறையில் சீர்செய்திடவும், குடும்பத்தின் வாரிசுதாரர் அனைவரும் சமாதானமாகும் விதத்தில் அதை நேர்படுத்திடவும் வேண்டும் என்பதையும் திருமறைத் தெளிவுபடுத்தியுள்ளது.

ஆனால் மரணசாஸனம் செய்பவரிடம் (பாரபட்சம் போன்ற) தவறோ அல்லது மனமுரண்டான அநீதமோ இருப்பதை அஞ்சி ஒருவர் (சம்பந்தபட்ட வர்களிடையே) சமாதானம் செய்து (அந்த மரண சாஸனத்தை) சீர்செய்தால் அ(ப்படிச் செய்ப)வர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் மன்னிப் பவனாகவும் நிகரற்ற அன்புடையோனுமாகவும் இருக்கிறான். அல் குர்ஆன் 2:182

குடும்பங்களில் பகையும் பிணக்கும் ஏற்படுவதற்கு சொத்து சுகங்கள் ஒரு முக்கியக் காரணமாக இருக்கின்றன. இதனைக் குடும்பத்தினர் எப்படி நல்லிணக்கமான முறையில் பங்கிட்டுக் கொள்ளுதல் வேண்டும் என்பதற்கு இஸ்லாம் மிக அருமையான வாரிசுரிமைச் சட்டங்களை வரையறுத்துக் கூறியுள்ளது. அதனை இஸ்லாமியக் குடும்பங்கள் இறைவனுக்குப் பயந்து இனிது பேணுவார்களாயின், அதன் காரணமாக எழுகின்ற மனஸ்தாபங்கள் சண்டை சச்சரவுகளிலிருந்து விடுபட்டு சாந்தி பெறவியலும்.

பெற்றோரின் உறவினர்களோடு நன்முறையில் நடந்து கொள்ளுதலும் பெற்றோருக்குப் புரிகின்ற மரியாதையைச் சார்ந்ததாகும் உறவினர்கள் மற்றும் சுற்றத்தினரைத் தழுவி வாழ்ந்திடுதல் வேண்டும் என்பதைத் திருமறை குர்ஆன் பல இடங்களில் வலியுறுத்திப் பேசியுள்ளது.

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும் நன்மை புரியுமாறும் உறவினர்களுக்குக் கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகின்றான். அன்றியும் மானக்கேடான காரியங்கள்,பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகிறான். நீங்கள் நினைவு கூர்ந்துச் சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான். அல்குர்ஆன் 16:90

(அல்லாஹ்வாகிய) அவனைக் கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களை (துண்டித்து விடுவதிலிருந்தும்) நீங்கள் அல்லாஹ்விற்காகப் பயந்து கொள்ளுங்கள். அல்குர்ஆன் 4:1

உறவைத் துண்டிப்பது மிகப்பெரும் தவறாகும் என்பதைத் திருக் குர் ஆன் கூறி நிற்கிறது. உறவைப் பேணுவதுவே நீதியான நன்மையான செயலாகின்றது. மானக் கேடான அநீதியான செயல்களுள் ஒன்றாக உறவை மறுப்பதும் அமைந்து விடுகின்றது. எனவே இவ்விஷயத்தில் அல்லாஹ்வைப் பெரிதும் அஞ்சி, உறவினர்களுடன் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் நல்லுறவுடன் நடந்து கொள்ள வேண்டியது குடும்பத்தினரின் தலையாய கடமையாகும்.

இந்த (4:1) இறைவசனத்தில் இரத்தக் கலப்புடைய குடும்பத்தினரைக் சுட்டும் சொல்லாக அர்ஹாம்' என்பது இடம் பெற்றுள்ளது. நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி இதனை மேலும் விளக்குகின்றது.
அபூஹுரைரா(ரலி) பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

(உற்றார் உறவினரைப் பேணுதல் என்னும் பொருளுக்கு இடம் தந்து நிற்கின்ற கருவறை'யைக் குறிக்கும்) அர்ரஹ்ம்' என்னும் வார்த்தையானது, (இறைவனின் திருநாமங்களுள் ஒன்றாகிய) அர்ரஹ்மான் என்பதிலிருந்து பிறந்துள்ளது.

கருவறையே! உன்னோடு நல்லுறவு பேணுகின்றவருடன் நானும் நல்லுறவு பேணுவேன், உன்னைத் துண்டிப்பவருடன் நானும் துண்டித்து விடுவேன் என அல்லாஹ் கூறினான் என்பதாக நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள். நூல்: புகாரி

யார் யார் உறவினர்களுடன் நேசம் கொண்டிருக்கிறார்களோ அவர்களுடன் தான் இறைவனும் நேசம் பாராட்டுகிறான். யார் யார் குடும்ப உறவுகளைத் துண்டித்து விடுகிறார்களோ, அத்தயை அன்பற்றவர்களுடன் இறைவனும் அன்பு பாராட்டுவ தில்லை. மாறாக அவர்களுடன் உள்ள உறவை இறைவன் துண்டித்து விடுகிறான் என்ற ஒரு முக்கியச் செய்தியை இந்நபிமொழி நமக்கு உணர்த்தி நிற்கின்றது.

இதன் முக்கியத்துவத்தை நம்மவர் உணர்ந்து பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். தொட்டதற்கும் பிடித்ததற்கும் உறவுக்காரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு, பகைபாராட்டுவதால் இறைநேசத்திலிருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டு விடுகின்றனர். இதைவிட பெரிய நஷ்டம் ஒரு முஸ்லிமுக்கு வேறு என்னதான் இருக்க முடியும்?

குடும்ப உறவைத் துண்டிப்பதன் வாயிலாக இறைநேசதத்திலிருந்து துண்டிக்கப்பட்டவன் நரகம் புகுவது திண்ணம்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், (குடும்ப உறவை) துண்டிப்பவன் சுவனம் புகமாட்டான். அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

எனவே குடும்ப உறவை எவர் முறிக்கிறாரோ அவர் இறைவனுடனுள்ள உறவையே முறித்தவராவார். இத்தகையவர் சுவர்க்கப் பேற்றுக்கே அருகதையற்றுப் போகிறார்.நம்முடைய சொந்த பந்தங்கள் நம்முடன் உறவை முறித்துக் கொண்டாலுங் கூட, நாம் அர்களுடன் உறவை முறித்து விடுதல் கூடாது. இதனை எடுத்துரைக்கும் விதமாக நபி(ஸல்) அவர்களின் பொன்மொழி ஒன்று அமைந்துள்ளது.

ஒருவர் உறவு பாராட்டுகிறார் என்பதற்காகப் பிரதி உறவு பாராட்டுபவர் உறவை நேசித்தவர் ஆகார். மாறாக, தன்னுடன் உறவை முறித்துக் கொண்டவர் களுடனும்தான் உறவு பாராட்டி, அவர்களுடன் நன் முறையில் நடப்பவரே உறவை நேசித்தவராவார். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்: புகாரி

இதனை நமக்கு எடுத்துரைத்த நபி (ஸல்) அவர்களே இந்தத் திருமொழிக்கு முன் மாதிரியாக வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களின் பெரிய தந்தையார் அபூதாலிபைத் தவிர அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த வேறு யாரும் நபிகளாருக்குப் பாதுகாப்பு அளித்திடவில்லை. அபூதாலிபின் குடும்பத்தினர் தனக்குப் பாதுகாப்பு அளிக்கவில்லை என்ற காரணத் துக்காக நபி(ஸல்) அவர்கள் அக்குடும்பத்தினருடனுள்ள உறவைத் துண்டித்து விட வில்லை. மாறாக அக்குடும்பதாருடன் தானே வலியச் சென்று நல்லுறவை நிலை நிறுத்தினார்கள். அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை மனமுவந்து நிறை வேற்றினார்கள்.

நபிகளாரின் இத்தகைய நன்னடத்தையை அம்ரு பின்ஆஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இரகசியமாக அன்று; பகிரங்கமாகவே சொன்னதை நான் கேட்டேன்.
எனது தந்தை (அபூதாலிப்) குடும்பத்தினர் எனது அவ்லியாவாக' (பாதுகாப்பாளாராக) இல்லை.
நிச்சயமாக அல்லாஹ்வே நம்பிக்கை கொண்ட நல்லோரின் வலியாக' (பாதுகாவலனாக) இருக்கிறான்.
ஆயினும் (அக்குடும்பத்தினராகிய) அவர்கள் எனது உறவினர்களே! நான் அவர்களுடன் நல்லுறவு பேணி அவர்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை நிறைவேற்றுகின்றேன். நூல்: புகாரி.
குடும்ப உறவுகளும் சொந்த பந்தங்களும் சிதைந்து சின்னா பின்னப்பட்டுப் போகாமலிருக்க வேண்டுமானால், இது மாதிரியான அழகிய நடை முறைகளை மேற்கொள்ள வேண்டியது நம் ஒவ்வொருவரின் தலையாய கடமையாகும்.


உறவுக்குக் கைகொடு உயர்வுக்கு வித்திடு

இறைவன் ஒருவனுக்கு மட்டுமே வணக்கங்களை உரித்தாக்கி, தாய் தந்தையருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அநாதைகள், அண்டை அயலவர், ஏழை எளியோருக்கும் உதவி புரிந்து வாழ்தலே இல்வாழ்க்கையின் இனிய இயல்பாகும் என இறைமறை இயம்புகின்றது.

மேலும் அல்லாஹ்வையே வழிபடுங்கள், அவனுடன் எதையும் இணை வைக்காதீர், மேலும் தாய் தந்தையருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அருகிலுளள அண்டை வீட்டாருக்கும் கூட்டாளிகளாயிருப்போருக்கும் வழிப் போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமையுடை யோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன்: 4:36

ஒரு இனிய இல்லத்தின் செயல்பாடு என்பது இல்லத்தின் உள்ளே மட்டும் அமைந்துவிடுவதன்று, அது இல்லத்துக்கு வெளியேயும் விரிந்து பரந்து செல்லுதல் வேண்டும் எனப் பணிக்கிறான் இறைவன். தாய் தந்தையருக்கு அடுத்து, நெருங்கிய உறவினர்களை வைத்துப் பேசுகின்றான் இறைவன்.

உறவினர்கள் நம்மைப் புறக்கணித்தாலும் நாம் அவர்களை ஒதுக்கிவிடாமல் பொறுமையுடனும் சகிப்புத் தன்மையுடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும். இங்ஙனம் யார் கருணையுடனும் கனிவுடனும் நடந்து கொள்கிறாரோ அவருக்கு இறைவன் உதவிய வண்ணமிருப்பான். அதைவிடுத்து கர்வம் கொண்டு வீண்பெருமை பேசி, உறவினரை உதாசீனம் செய்பவரை இறைவன் ஒருபோதும் நேசிப்பதில்லை என்பதைத் திருமறை குர்ஆனும் நபிமொழிகளும் நன்கு எடுத்துரைத்துள்ளன.

ஒரு மனிதர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! எனக்குச் சில உறவினர்கள் இருக்கிறார்கள். அவர்களுடைய உரிமைகளை நான் நிறைவேற்றுகிறேன். ஆனால் அவர்கள் என் உரிமைகளை நிறை வேற்றுவதில்லை. நான் அவர்களுடன் நல்ல விதமாக நடந்துகொள்கிறேன். ஆனால் அவர்கள் என்னுடன் மோசமாக நடந்து கொள்கிறார்கள். நான் அவர்களுடன் பொறுமையோடும் சகிப்புத் தன்மையோடும் நடந்து கொள்கிறேன். ஆனால் அவர்கள் என்னுடன் அறிவீனமாக நடந்து கொள்கிறார் கள்'' எனக் கூறினார்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள், நீர் சொல்வதைப் போன்றே அவர்களுடன் நடந்து கொண்டிருந்தால், அது அவர்களின் முகத்தில் கரிபூசுவது போன்றதாகும், அல்லாஹ் அவர்களுக்கு எதிராக எப்போதும் உமக்கு உதிவியவண்ணமிருப்பான், நீர் இதே பண்பில் நிலைத்திருக்கும் வரை'' என்று பதிலுரைத்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல் : புகாரி, முஸ்லிம்

நெருங்கிய உறவினர்கள் பாராமுகமாக நடந்து கொள்ளலாம், பரஸ்பர உதவி புரியாதவர்களாக இருக்கலாம், ஆபத்துக்காலங்களிலும் கஷ்டநேரங்களிலும் நாம் அவர்களுக்கு ஓடோடிப்போய் உதவியிருக்கலாம், நமக்கு ஒரு ஆபத்து அல்லது கஷ்டம் ஏற்பட்டபோது அந்த உறவினர்களின் ஆதரவுக்கரங்கள் நம்மை நோக்கி நீளாதிருந்திருக்கலாம்.

அன்று நாம் எப்படியெல்லாம் அவர்களுக்கு உதவினோம். இன்று அவர்களிடமிருந்து நமக்கு எத்தகைய உதவியும் கிடைக்கவில்லையே என்று நாம் எண்ணக்கூடும், நாம் எண்ணாவிட்டாலும் நம்மைச் சுற்றியுள்ளவர்கள் இதுபோன்ற எண்ணங்களை நம் நெஞ்சில் விதைத்து நீர் வார்த்து, உரம்போட்டு வளர்த்து விடுவார்கள். இப்படியாக உறவினர் மேல் தப்பெண்ணம் கொள்ளுமாறு நம்மைத் தூண்டி விடலாம் சிலர். இதையெல்லாம் நாம் பெரிதாகக் கருதிப் பொருட்படுத்துதல் கூடாது.

உறவினர்களுக்கு உதவிபுரிந்து வாழுமாறு என் இறைவன் எனக்குக் கட்டளையிட்டுள்ளான். எனவே எந்தப் பிரதிபலனையும் எதிர்பாராமல் நான் என்னாலியன்ற உதவிகளைச் செய்து கொண்டே இருப்பேன் எனக் கூறிச் செயல்படுபவரே உண்மை முஸ்லிம் ஆவார். உறவினர்களின் பிரதி உதவி கிடைக்காமல் போகலாம், ஆனால் இறைவனின் அருள்மாரி இவர்கள் மீது பொழிந்து கொண்டே இருக்கும் என்பது திண்ணமாகும்.

இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் அருளியதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வரும் நபிமொழியை அறிவித்திருக்கின்றார்கள்.

உறவினர்களோடு கருணையுடன் நடந்து கொள்வது இரக்கம் நிறைந்த இறைவனின் கட்டளைக்குட்பட்டதாகும். அது (இரக்கம் இறைவனிடம் இப்படி) பேசும்:
என்னுடைய இறைவனே! நான் மோசமான முறையில் நடத்தப்பட்டேன், என்னுடைய இறைவனே! எனக்குத் தவறிழைக்கப்பட்து''.

அதற்கு இறைவன் பதில் சொல்வான், நான் அதன் (கருணை) உடன் சேர்ந்திருப்பவர்களிடமே சேர்ந்திருப்பேன். அதனை (கருணையை) பிரிந்திருப் பவர்களிடமிருந்து பிரிந்தே இருப்பேன்.'' நூல்: அஹ்மத்

உறவினர்களிடம் பரிவும் கருணையும் யார் காட்டுகின்றாரோ அவருக்கு இறைவன் பரிவும் கருணையும் காட்டுகின்றான். யார் உறவினருக்குக் கருணை காட்டுவதிலிருந்து தூரமாகி விடுகின்றாரோ அவருக்குக் கருணை காட்டுவதிருந்து இறைவனும் தூரமாகிவிடுகின்றான் என்பதை நாம் உணர்தல் வேண்டும்.

உறவினர்களிடம் இரக்கம் காட்டுவது அல்லாஹ்வின் சட்டங்களின் நியதியாகும் என்பதை மற்றொரு நபிமொழி அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளது. நபி(ஸல்) அவர்கள் இப்படிக் கூறினார்கள்:
அடுத்தவர்களின் மீது இரக்கம் கொள்பவர்களிடம் அல்லாஹ் இரக்கம் கொள்கின்றான், பூமியிலுள்ளவர்களிடம் நீங்கள் இரக்கம் காட்டுங்கள், வானங்களின் அதிபதி உங்களிடம் இரக்கம் காட்டுவான். உங்களுடைய உறவினர்களிடம் இரக்கம் காட்டுவது அல்லாஹ்வின் சட்டங்களின் நியதியாகும். தன்னுடைய உறவினர் களிடையே ஒற்றுமையை ஏற்படுத்துபவ ருடன் அல்லாஹ்வும் ஒற்றுமையை ஏற்படுத்திக்கொள்கிறான். தன்னுடைய உறவினர்களிடமிருந்து தன்னை வெட்டிக் கொள்பவனிடமிருந்து அல்லாஹ் விலகியே நிற்கின்றான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்: திர்மிதீ

உறவினர்களுக்கிடையே அன்பைப் பரிமாறுவதிலும் பொருள்களை, கொண்டும் கொடுத்தும் வாங்குவதிலும் கூடுதல் குறைவு இருக்கலாம். இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் ஏதேனும் சின்னச் சின்ன உரசல்கள் கூட எழலாம். எனினும் அவற்றையெல்லாம் மனதில் வைத்துக்கொண்டு ஒருவரோடு ஒருவர் வன்மம் பாராட்டி உறவை முறித்துக்கொள்ளுதலை இஸ்லாம் ஒருபோதும் விரும்புவதில்லை.

இதுபோன்ற சில்லறைப் பிரச்சனைகளை ஊதிப்பெரிதாக்கிக் கோள் மூட்டிவிட்டுக் குடும்பத்தவர்களுக்கிடையே சிண்டு முடிந்து வைத்து வேடிக்கை பார்ப்பதற்காக அங்கங்கே சகுனிகளும் கூனிகளும் உலா வந்து கொண்டிருக்கின்றனர். உறவுகளை முறித்து வைப்பதில் இந்தக் குடிகேடர்களுக்கு ஒரு கேவலமான ஆனந்தமிருக்கிறது போலும்!

எவர் உறவை முறிக்கின்றாரோ அல்லது உறவை முறித்து விடுவதற்காகத் தூபம் போடுகின்றாரோ அவர்களுடன் உள்ள உறவை அல்லாஹ் முறித்துக் கொள்கிறான் என்பதை நாம் நினைவில் நிறுத்தக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

அது போன்று உறவினர்களுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துவதற்காக யார் யாரெல்லாம் முனைகின்றார்களோ அவர்களுடன் அல்லாஹ்வும் ஒற்றுமையை ஏற்படுத்திக் கொள்கிறான் என்பதையும் நம்மவர்கள் நெஞ்சில் நிறுத்திச் செயல்படுதல் வேண்டும்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சொன்னார்கள்:
நீங்கள் ஒருவரை ஒருவர் வெறுக்காதீர், ஒருவர் மீது ஒருவர் சந்தேகம் கொள்ளாதீர், ஒருவரை ஒருவர் பகிஷ்காரம் செய்யாதீர், இன்னமும் சகோதரர்களைப் போல் இறைவனின் அடியார்களாகவே இருந்து கொள்வீர்களாக! மேலும் ஒரு முஸ்லிம் தன்னுடைய சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் தனது தொடர்பை முறித்துக் கொள்வதென்பது சட்ட விரோதமாகும். அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி

நபி(ஸல்) அவர்கள் நவின்றதாக அபூதர்தா(ரலி) அறிவித்திடும் மற்றொரு நபிமொழி இதோ: நோன்பு, தர்மம், தொழுகை இவற்றையெல்லாம் மிகைத்துவிடுகின்ற ஒரு நற்செயலை நான் உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? என நபி(ஸல்) ஒரு முறை வினவினார்கள். தெரியப்படுத்துங்கள் என்றுரைத்த போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்லிம்களிடையே சமாதானம் செய்து வைப்பதுவே அதுவாகும். அவர்களுக்கு மத்தியில் வெறுப்பை ஏற்படுத்துவது நாச காரியமாகும். நூல்: அபூதாவூத்

இப்படியெல்லாம் உறவைப் பேணுதலின் இன்றியமை யாமை குறித்து நபி(ஸல்) அவர்கள் நமக்குப் புத்தியில் உறைப்பது போல் எடுத்துரைத்துச் சென்றுள்ளார்கள் இருந்தபோதிலும் இதைப் பற்றியெல்லாம் யாரும் அலட்டிக் கொள்ளுவதில்லை.

தொட்டதற்கும் பிடித்ததற்கும் உறவுக்காரர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு ஆயுள்பகை பாராட்டித் திரிபவர்களையும் ஆங்காங்கே காண்கின்றோம். உறவினர் என்ன! பெற்றெடுத்த தாயையும் தந்தையையும் பகைத்துக்கொண்டு வாழ்பவர்களாகவும் பல முஸ்லிம்களே இருக்கக் காண்கிறோம்.

சக முஸ்லிம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமலிருப்பதுவே சரியன்று என்றிருக்கும்போது, பெற்றோருடன் வாழ்நாள் முழுமைக்கும் பேசாமல் இருக்கின்றவர்களை என்னென்பது? எனவே இதுபோன்ற நிலையில் நம்மவர் எவரேனும் இருப்பாராயின் அவர்கள் உடனடியாக தவ்பா என்னும் பாவமன்னிப்பை இறைவனிடம் வேண்டிவிட்டு, ஒடோடிச் சென்று பெற்றோருடன் உறவைச் சீர்படுத்திக்கொள்ளுதல் வேண்டும். இதுவே குர்ஆன், ஹதீஸ் காட்டும் உறவுநெறியாகும்.

குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் எதனால் ஏற்படுகின்றன? அதற்குரிய முக்கியக் காரணிகள் எவை? ஒருவரை ஒருவர் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதுவே இதற்கு முக்கியக் காரணமாகும். சந்தேகப்பார்வை பார்ப்பவன் பொய்யன் என்னும் நிலையை அடைந்து விடுகிறான். எனவே சந்தேகம் கொள்ளாதே என நபி(ஸல்) எச்சரிக்கின்றார்கள்.

அதுமட்டுமின்றி ஒருவரை ஒருவர் தூண்டித்துருவி ஆராய்வது குடும்பப் பிணக்குகளுக்கு வழி வகுத்துவிடும். எனவே பிறரைப் பற்றித் தேவையில்லாத வகையில் தூண்டித் துருவி ஆராய்ந்து கொண்டிருப்பது வெறுக்கத்தக்க செயலாகும். இதுபோலவே அடுத்தவரின் நடமாட்டத்தை உற்று உற்றுப் பார்த்து, எங்குப் போகிறார், எதற்குப் போகிறார் என்றெல்லாம் ஒற்றுவேலை செய்தலையும் நபி பெருமானார் தடைசெய்துள்ளார்கள்.

சந்தேகம் கொள்தல் குறித்து உங்களை எச்சரிக்கின்றேன். சந்தேகிப்பது என்பது மிகப்பெரிய பொய்யாகும், ஒருவரை ஒருவர் தூண்டித்துருவி ஆராயா தீர், ஒருவரை ஒருவர் வேவு பார்க்காதீர், ஒருவரோடு ஒருவர் போட்டியிட்டுக் கொண்டு விலையை உயர்த்தாதீர். பொறாமை உணர்வு கொள்ளாதீர், ஒருவரைப் பார்த்துப் புழுக்கம் கொள்ளதீர், புறம் பேசாதீர், இறையடியார்கள் அனைவரும் சகோதரர்களக இருந்து கொள்வீராக. அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

இவையெல்லாம் தனிமனித சுதந்திரத்துக்கும் மனித உரிமைக்கும் உலைவைக்கின்ற காரியங்கள் என்பது ஒருபுறமிருப்பினும் குடும்பச் சூழ்நிலையிலான சுமூக உறவுக்கும் இவை வேட்டு வைத்து விடுகின்றன என்பதையும் நாம் உணர்ந்து கொள்ளுதல் வேண்டும்.

சந்தேகம், பொறாமை, பொல்லாங்கு, கேவலமான போட்டி மனப்பான்மை, பொய் சொல்லிப் புறங்கூறித் திரிதல், பரிகசித்தல் முதலியன அனைத்தும் மனித பந்தங்களை எரித்துவிடும் தீப்பந்தங்கள் என இஸ்லாம் எச்சரித்துள்ளது.

இறைநம்பிக்கையாளர்களே! அதிகமாகச் சந்தேகம் கொள்வதைத் தவிர்த்து விடுங்கள். ஏனெனில் சில சந்தேகங்கள் பாவமாக இருக்கின்றன. மேலும் நீங்கள் துருவித்துருவி ஆராய்ந்து கொண்டிராதீர். இன்னம் உங்களில் ஒருவர் மற்றவரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். உங்களில் எவரேனும் இறந்துவிட்ட தன் சகோதரனின் இறைச்சியை உண்ண விரும்புவாரா, என்ன? பாருங்கள்! நீங்கள் அதனை அருவருப்பாய்க் கருதுகின்றீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங் கள். திண்ணமாக அல்லாஹ் பாவ மன்னிப்புக் கோரிக்கையைப் பெரிதும் ஏற்றுக் கொள்பவனாகவும், பெரும் கிருபையாளனாகவும் இருக்கின்றான் என திருமறை அறிவுறுத்துகின்றது. அல்குர்ஆன் 49:12
ஆயிஷா (ரலி) அவர்களின் நல்லொழுக்கம் குறித்து ஒரு சந்தேகச் செய்தி அவதூறாகப் பரப்பப்பட்டபோது பெருமானார்(ஸல்) அவர்கள் கூடத் திட்டவட்டமான முடிவுக்கு வர இயலாமல் தவித்து நின்றார்கள். அடிப்படை ஆதாரமற்ற இந்த அவதூறை நீங்கள் புறக்கணித்திருக்க வேண்டாமா என இறைவனே நபிகளைத் தட்டிக்கேட்டான். இந்த நிகழ்ச்சி பற்றித் திருமறை குர்ஆனின் 24:11-20 வரையிலான வசனங்கள் விளக்கமாக எடுத்துரைக்கின்றன.

இதுபோன்ற அவதூறுகள் குடும்ப அமைதிக்கே குந்தகம் விளைவிக்க வல்லன. எனவே சந்தேக வியாதியிலிருந்து முஸ்லிம்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளுதல் தலையாய கடமையாகும். சந்தேகம் மட்டுமின்றி, இன்னும் சில விரும்பத்தகாத செயல்களும் குடும்பப் பிணக்குகளுக்கு வழி கோலுகின்றன.

பிறரைப் பார்த்துப் பரிகசிப்பது, எள்ளி நகையாடுவது, அடுத்தவர் உடல மைப்பை விமரிசிப்பது போன்ற செயல்களால் குடும்ப உறவுகள் விரிசலைடகின்றன.

ஒருமுறை ஆயிஷா (ரலி) அவர்கள், நபி பெருமானாரின் இன்னொரு மனைவியாகிய ஸஃபிய்யா (ரலி) அவர்களைப் பற்றி, பெருமானாரிடமே பரிகாச தொனியில் பேசலானார்கள். ஸஃபிய்யா (ரலி)யவர்களின் குள்ளமான உருவ அமைப்பை ஆயிஷா (ரலி)யவர்கள் குறைசொல்வது போன்று இப்பேச்சு அமைந்தது. உடனே நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி)யைக் கண்டித்தார்கள். இம்மாதிரி அடுத்தவரைப் பரிகசிப்பது மிகப்பெரிய தீயவிளைவை உண்டு பண்ணிவிடும் என்பதை ஒரு உவமை வாயிலாகவே எடுத்துரைத்து உணர்த்தினார் கள். இதுபோன்ற கேலிப்பேச்சினைக் கடலில் போட்டால் இதன் கடுமை காரணமாகக் கடல் நீரே மாசடைந்துவிடும் என எச்சரித்தார்கள்.

இச்சம்பவத்தை ஆயிஷா (ரலி) அவர்களே அறிவிக்கின்றார்கள்:
நான் அண்ணல் நபி(ஸல்) அவர்களிடம் ஒரு முறை ஸஃபிய்யா இப்படி இருக்கிறார் என்னும் குறையே அவருக்குப் போதுமானதாகும்'' (அதாவது ஸஃபிய்யா குள்ளமானவர் என்பது அவருக்கு ஒரு பெரும் குறையாகும்) எனக் கூறினேன்.

அண்ணல் நபி(ஸல்) அவர்கள், ஆயிஷாவே!' எவ்வளவு மாசுபடிந்த சொல்லை உன் வாயினால் வெளிப்படுத்தியிருக்கிறாயென்றால், அதனைக் கடலில் கரைத்துவிட்டால் அது கடல் முழுவதையும் அசுத்தப்படுத்திவிடும்'' எனக் கூறினார்கள். நூல்: அபூதாவூத், திர்மிதீ, அஹ்மத்


இறைமறை குர்ஆன் இப்படி இயம்புகின்றது:

இறைநம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம் செய்யவேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர் களாயிருக்கலாம்,. எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம் செய்ய வேண்டாம். ஒரு வேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். நீங்கள் ஒருவரை ஒருவர் குத்திப் பேசாதீர். ஒருவருக்கொருவர் மோசமான பட்டப் பெயர்களைச் சூட்டி அழைக்காதீர். இறைநம்பிக்கை கொண்ட தன் பின்னர் மோசமான பெயர்களைச் சூட்டுவது மிகவும் கெட்ட விஷயமாகும். எவர்கள் இந்த நடவடிக்கையை கை விடவில்லையோ அவர்கள் தாம் கொடுமைக்காரர்கள். அல்குர்ஆன் 49:11

குடும்பத்தில் ஆண்களாயினும் சரி, பெண்களாயினும் சரி, நான்கு பேர் கூடி விட்டால் போதும், அங்கு இடம் பெற்றிருக்காத ஜந்தாம் நபரைப் பற்றிப் புறம் பேசுதலே இங்கு பெரிதும் அரங்கேறும் . அத்தோடு, தங்களுக்குப் பிடிக்காத உறவினர்களை மோசமான பட்டப் பெயர்களால் சுட்டிக் காட்டுதல், குத்திப் பேசுதல், நையாண்டி செய்தல் முதலியனவும் சகஜமாக இடம் பெறுதலுண்டு.

இம்மாதியான நடத்தைகள் மிகவும் கண்டிக்கத்தக்கன என்கிறது திருமறை குர்ஆன். இத்தகைய கேடு பயக்கும் நடவடிக்கைகளை விட்டு விலகிக் கொள்ளாமல் எவர் இதில் தொடர்ந்து ஈடுபடுகிறாரோ அவரே கொடுமையாளர் என்கிறான் இறைவன். இப்படிப்பட்ட கொடுமையாளர்கள் அமைதியான குடும்பங்களில் கொந்தளிப்புக்களை எழச் செய்கின்றனர். எனவே இவர்கள் விஷயத்தில் குடும்பத்தினர் எச்சரிக்கையாய் இருத்தல் வேண்டும்.

தொடக்கத்தில் கணவன், மனைவி, பிள்ளைகள் எனக் குடும்ப அமைப்பு இயங்குகின்றது. பின்னர் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகின்றனர். அவர்களுக்குத் திருமணமாகிப் பேரன் பேத்திகள் பிறக்கின்றனர். குடும்பம் பெருகுகின்றது. கூட்டுக் குடும்பத்தினர் ஒரு கட்டத்தில் தனிக் குடித்தனம் போகின்றனர்.

இப்படியாக ஒரு வீட்டிலிருந்து நான்கைந்து வீடுகள் கிளை பரப்புகின்றன. குடும்ப உறவு இங்ஙனம் விரிவடைகிறது. இவ்வாறு உருவாகின்ற அண்ணன், தம்பி, அக்காள், தங்கை போன்ற நெருங்கிய குடும்ப உறவினர்களுடன் நல்லிணக்கமாக நடந்து கொள்ளுதல் வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

மறுமையில் அநியாயக்காரர்களுக்குப் பெருந்தண்டனை வழங்கப்படும். அதே வேளையில் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்த நல்லோர் சுவனத்துப் பூஞ்சோலையில் தங்கியிருப்பர். அந்தச் சுவனத்தில் அவர்கள் ஆசைப்படுபவை அனைத்தும் அவர்களுக்குக் கிடைக்கும்.. இதைவிட ஒரு மனிதன் பெறும் பெரும்பாக்கியம் என்ன இருக்க முடியும்?

நினைத்ததெல்லாம் நிறைவேறக் கூடிய இப்படிப்பட்ட ஒரு மகத்தான சுவனப் பேற்றினை நாம் பெறவேண்டுமென்றால் எனன செய்ய வேண்டும்? இறைவன் கூறுகின்றான், நீங்கள் விரும்பியதெல்லாம் உங்களுக்குக் கிடைக்கின்ற சுவர்க்கப் பாக்கியத்தை உங்களுக்கு வழங்க நான் தயாராக இருக்கின்றேன். ஆனால் இதற்காக நீங்கள் ஒரு கூலி தரவேண்டும். நான் உங்களிடம் எதிர்பார்க்கும் கூலி, உறவினர் மீது அன்பு கொள்ளுவதைத் தவிர வேறெதுவுமில்லை என்கிறான் இறைவன்.

இறைமறை குர்ஆன் இதனைப் பின்வருமாறு இயம்புகின்றது.
எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்தார்களோ அவர்கள் சுவனத் தோட்டங்களில் இருப்பார்கள். அவர்கள் விரும்புகின்றவை அனைத்தையும் தம் இறைவனிடமிருந்து பெற்றுக் கொள்வார்கள். இதுவே மிகப்பெரும் பாக்கிய மாகும். இறைநம்பிக்கை கொண்டு நற்செயல் புரிந்த தன் அடியார்களுக்கு இதைப் பற்றித்தான் அல்லாஹ் நற்செய்தி சொல்கிறான். (நபியே!) நீர் கூறும் உறவினர்கள் மீது அன்பு காட்டுவதைத் தவிர, இதற்காக நான் உங்களிடம் எந்தக் கூலியையும் கேட்கவில்லை. அல்குர்ஆன் 42:22,23

மகத்தான சுவர்க்கத்தை மறுமையில் தருவதற்குக் கூலியாக இம்மையில் மனிதர்கள் தங்கள் உறவினர்களுடன் நல்லிணக்கம் பாராட்டுதலைக் கோருகின்றான் இறைவன். இதிலிருந்து உறவினர்களுடன் அன்பு செலுத்த வேண்டியதன் இன்றியமையாமையை நாம் உணர முடிகின்றது.

இந்தத் திருவசனத்தை நபிமொழி ஒன்று மேலும் விளக்குகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு இறைவன் நபிப்பட்டம் என்னும் உயரிய அந்தஸ்தை வழங்கி உலகமக்களுக்குத் தன்னுடைய செய்தியை எடுத்துரைக்கும் பொறுப்பை ஒப்படைத்தான். இந்த நபித்துவப் பிரச்சாரத்தின் வாயிலாக மக்களுக்கு முன்னெ டுத்து வைக்கப்பட்ட முதல் செய்தி உறவினர்களுடன் இணைந்து வாழ்வீராக என்பதாகும்.

இதனைப் பின்வரும் நபிமொழி நமக்குத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது.
நான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களை, அவர்களுக்கு நபித்துவம் கிடைத்த ஆரம்பகட்டத்தில் மக்கா நகரில் சந்தித்தேன் நான் அண்ணலாரிடம் நீங்கள் யார்?'' எனவினவினேன். அதற்கு அவர்கள் நான் நபி'' எனப் பதிலுரைத்தார்கள். நபிஎன்றால் என்ன?'' என நான் வினவினேன்.
அதற்கவர்கள், என்னை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள்.
என்ன செய்தியை அளித்துத் தங்களை அவன் அனுப்பியுள்ளான்?'' என்று கேட்டேன்.
மக்களை உறவினர்களுடன் இணைந்து வாழும் படி அறிவுறுத்த வேண்டும், சிலை வணக்கம் நீக்கப்பட வேண்டும். அல்லாஹ் ஒருவன் என்னும் ஏகத்துவக் கொள்கை ஏற்கப்பட வேண்டும், மேலும் அவனுடன் வேறெவரை யும் இணை சேர்க்கக்கூடாது என்ற நோக்கத்திற்காக அல்லாஹ் என்னை அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ருப்னு அபுஸா (ரலி) நூல்: முஸ்லிம்

உறவினர்களுடன் நல்லிணக்கமாக வாழ்பவருக்கு மறுமையின் சுவனப்பேறு மட்டுமன்று, இவ்வுலகிலேயும் உயரிய வெகுமதிகள் கிடைக்கின்றன எனவும் நபி(ஸல்) அவர்கள் நவின்றுள்ளார்கள்:
வாழ்நாள் அதிகரிக்கப்படவும் உணவு விசாலப் படுத்தப்படவும் விரும்புபவர் தம் சுற்றத்தினருடன் நல்லுறவு பாராட்டுவாராக! அறிவிப்பவர்: அனஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

சுற்றத்தினருடன் நல்லுறவு பாராட்டுபவருக்கு வாழ்நாள் அதிகரிக்கிறது. இரணம் அபிவிருத்தியாகிறது. இவை மட்டுமன்றி, அவர்களை எத்தகைய தீங்கும் நெருங்காது என்பதையும் பிறிதொரு ஹதீஸ் தெரிவிக்கின்றது. திருமறையின் முதல் வஹி வெளிப்பாட்டினைச் சுமந்து வந்த நபி(ஸல்) அவர்கள், தம் அருமைத் துணைவியார் கதீஜா (ரலி) அவர்களிடம் வந்து நடந்த செய்தியை எடுத்துரைத்து, தமக்கு எதேனும் தீங்கு நிகழ்ந்து விடுமோ எனத் தாம் அஞ்சுவதாகக் கூறினார்கள். அப்போது அன்னை கதீஜா(ரலி) அவர்கள் பின்வருமாறு ஆறுதல் மொழிந்தார்கள்.
அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒருபோதும் அல்லாஹ் இழிவுபடுத்த மாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கிறீர்கள், (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கிறீர்கள், வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள், விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள், உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள். அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) நூல்: புகாரி

உறவினர்களுடன் இணங்கியிருந்து குடும்பம் சார்ந்த பொறுப்புகளை மனித நேயத்துடன் நிறைவேற்றுபவருக்கு எந்தத் தீங்கும் நிகழாது. அவர்களை இறைவன் இழிவுபடுத்தவும் மாட்டான் என்பதை இந்நபிமொழி உணர்த்துகின்றது.

உறவினர்களுடன் அன்பு பாராட்டுவது எப்படி? அடிக்கடி உறவினர்களைச் சந்தித்து இன்முகம் காட்டி கனிவான சொற்களைப் பேசிப் பழகுவது முதல் நிலை எனலாம், இதோடு அமைந்து விடாமல் உறவினருக்காகப் பொருள் ரீதியாகவும் உதவி செய்தல் வேண்டும்.

தங்களுடைய அத்தியாவசியத் தேவைகளைக் கூட நிறைவேற்றுவதற்குப் பொருள்வசதியின்றிச் சிரமப்படும் ஏழை எளிய உறவினர்கள் அனேகர் இருப்பர். அவர்கள் தங்களது தேவைகளை வாய் திறந்து கேட்கக் கூச்சப்படலாம். நம்முடைய தேவைக்குமேல் எஞ்சியுள்ள பொருளைக் கொண்டு இத்தகைய உறவினருக்கு உதவிடுதல் நமது தலையாய கடமையாகும்.

இதனை எடுத்துரைக்கும் நபிமொழி இதோ!
ஆதமின் மகனே! (உமது தேவைக்கு) மேலதிகமானதை நீர் செலவிடுவதே உமக்குச் சிறந்ததாகும். அதனைச் செலவிடாமல் தடுத்து வைத்திருப்பது உமக்குக் கெடுதியாகும். தேவைக்கெனத் தடுத்து வைத்திருப்பதற்காக நீர் சபிக்கப்படமாட்டீர்! எனவே (செலவிடும்போது) சுற்றத்தினரைக் கொண்டு ஆரம்பம் செய்வீராக! உயர்ந்து நிற்கும் கரமே தாழ்ந்திருக்கும் கரத்தினை விடச் சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி) நூல்: முஸ்லிம்

உறவினர்களுடன் இனிக்க இனிக்கப் பேசி உறவு பாராட்டுபவர்கள் பலர் இருக்கலாம். தேவைக்கு மிஞ்சிய பொருள் வசதி படைத்தவர்களாகவும் இவர்கள் இருக்கக்கூடும். இருந்தாலும் வறிய நிலையிலுள்ள உறவினர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு இவர்கள் முன்வருவதில்லை. உதட்டளவில் மட்டுமே குடும்ப உறவு பாராட்டிவிட்டு, பணத்தை இறுக முடிந்து வைத்துக் கொண்டிருக்கும் இத்தகைய கருமித்தனம் கொண்டவர்களைப் பற்றி இறைமறை பின்வருமாறு இயம்புகின்றது.

மனித உள்ளங்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டு விடுகின்றன. (அவ்வாறு இல்லாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால், நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். அல்குர்ஆன் 4:128

எனவே உறவினருக்கு உதவிபுரிவதில் கஞ்சத்தனம் காட்டுதல் கூடாது, சொல்லப் போனால் உறவினர்களுக்குச் சேர வேண்டிய உரிமையாகவே அது கருதப்படுகிறது.
உறவினர்களுக்கு அவர்களது உரிமையைக் கொடுத்து விடுவீராக! மேலும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் (அவரவர் உரிமையை வழங்கி விடுவீராக!)
அல்லாஹ்வின் திருப்தியைப் பெற விரும்புவோருக்கு இதுவே மிகச்சிறந்த வழிமுறையாகும். அவர்கள் தாம் வெற்றியாளர்களாவர். அல்குர்ஆன் 30:38

அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தைப் பெற எவர் விரும்புகின்றாரோ அவர் உறவினருக்குரிய பாத்தியதைகளை மனமுவந்து வழங்கிவிடுதல் வேண்டும். அதுபோலவே வறியோர், வழிப் போக்கருக்கும் அவரவருக்குரியதைக் கொடுத்துவிடுதல் வேண்டும். இப்படிச் செயல்படுபவரே இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெற்றவராகத் திகழ்வார் என்கிறான் இறைவன். எனவே இறைதிருப்தியும் ஈருலக வெற்றியும் விரும்புவோர் இந்த இறையாணையைக் கவனத்திலிருத்திச் செயல்படக் கடமைப்பட்டுள்ளனர்.

ஏழைக்குச் செய்யும் தர்மம், தர்மம் ஒன்றேயாகும். ஆனால் அது உறவினருக்குச் செய்யப்பட்டால் தர்மமும் உறவினை ஆதரித்தலும் ஆகிய இரண்டு (நன்மைகள் செய்தது) ஆகும். அறிவிப்பவர்: சுலைமான் இப்னு ஆமிர் நூல்: அஹ்மத், நஸயீ, திர்மிதீ, இப்னுமாஜா

இன்றைய சமுதாயச் சூழலில் நல்லொழுக்கம், பண்புச் சிறப்பு ஆகியன வெல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு, மனிதனுடைய வாழ்க்கைத் தரத்தைப் பணம் ஒன்றே நிர்ணயிக்கக் காண்கிறோம். தனிமனிதனிடம் மட்டுமின்றி குடும்ப உறவுகளுக்கிடையேயும் பணம் ஒரு பலம் வாய்ந்த இணைப்புச் சங்கிலியாக வடிவெடுத்திருக்கிறது. நெருங்கிய ஏழைச் சுற்றத்தினரைப் பணக்காரர்கள் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அத்தகைய மிஸ்கீன்களைத் தங்களது நெருங்கிய உறவினர்களாகக் காட்டிக் கொள்வதனால், இவர்களுடைய சமூக அந்தஸ்துக்கு ஏதோ பங்கம் ஏற்பட்டு விடும் போலக் கருதுகின்றனர்.

அது மட்டுமின்றி, அப்படிப்பட்ட ஏழை எளிய சொந்த பந்தங்களுடன் உறவு பாராட்டினால், அவர்கள் அடிக்கடி வந்து தங்கள் தேவைகளுக்காக இவர்களிடம் உதவி கோரி நச்சரித்து விடக்கூடும் எனவும் செல்வர்கள் பயப்படுகின்றனர்.

நேற்றுவரை இவர்கள் வறுமையில் வாடியிருப்பார்கள். இன்று இறையருளால் இவர்கள் கையில் நாலுகாசு சேர்ந்து விட்டதும் பழைய வாழ்க்கையை நொடிப் பொழுதில் மறந்துபோகின்றனர். பழைய உறவு இப்போது இவர்களுக்குக் கசந்து போகின்றது.

பணம், காசு, கார், பங்களா என்று சொகுசு வாழ்க்கை வாழக்கூடிய பணக்காரர் கள் அத்தனைபேரும் தங்களுக்குள் நெருக்கமாகிக் கொள்கின்றனர். இன்றைய சமூக அமைப்பில் இது போன்றதொரு பணப்பந்தம் எல்லா ஊர்களிலும் நிலவக் காண்கிறோம்.

வமிசாவளியிலோ சம்பந்தத் தொடர்பிலோ எந்தச் சொந்தமும் இவர்களுக் கிடையே இல்லாவிட்டாலுங்கூட, பணம் என்னும் பசை இவர்களுக்கிடையே இறுக்கமான ஒரு ஒட்டுதலை உருவாக்கிவிடுகின்றது. இத்தகைய பணக்காரர்கள் தம் வீட்டு விருந்து வைபவங்களுக்குக் கூட தம்மையொத்த பணக்காரர்களையே விழுந்து விழுந்து அழைத்து உபசரிக்கின்றார்கள். தம் நெருங்கிய சுற்றத் தினர்களை அவர்கள் ஏழைகள் என்ற ஒரே காரணத் துக்காகக் கண்டு கொள்ளாமல் சென்று விடுகின்றனர்.

செல்வச் செழிப்பில் திளைத்திடும் பணக்காரர்கள் தங்களது மகனுக்கோ மகளுக்கோ திருமணச் சம்பந்தம் செய்து கொள்ளும்போதாயினும், நெருங்கிய ஏழை உறவினரிலிருந்து நல்லொழுக்கமுள்ள துணைகளைத் தேர்ந்தெடுப்பாராயின், சமுதாய ஏற்றத் தாழ்வுகளை ஓரளவுக்காயினும் சமன் செய்யவியலும். இத்தகைய பரந்த மனம் கொண்ட செல்வந்தவர்களைப் பூதக்கண்ணாடி வைத்துத்தான் நாம் தேடவேண்டியதிருக்கின்றது! திருமணச் சம்பந்தங்களுக்காகச் செல்வந்தர்கள் தங்களை யொத்தவர்களையே நாடி ஓடுகின்றனர்!

சம்பந்த உறவு கொள்ளாவிடினும், தேவைக்குப் போக எஞ்சியதை இலவசமாகக் கொடுக்காவிட்டாலும், ஏழை எளிய உறவினர்களுக்கு அத்தியாவசியத் தேவைகளுக்காகக் கடன் கொடுத்து உதவுவதற்குக் கூடச் சமுதாயத்தில் பல செல்வந்தர்கள் முன்வருவதில்லை. நமது முஸ்லிம் சமுதாயத்தின் குடும்பங்களில்தான் இத்தகைய அவல நிலைகளைக் காண்கிறோம். ஏனைய முஸ்லிமல்லாத சமுதாயத்தினர் பலர் இது போன்ற நல்ல காரியங்களைச் செய்து தங்களது ஒட்டு மொத்தமான சமுதாய நலனிலும் அக்கறை காட்டுகின்றனர். ஆனால் இப்படித்தான் வாழவேண்டும் என்று வழிகாட்டப்பட்ட நமது இஸ்லாமிய சமுதாயம் தான் மனம் திருந்தவில்லை
நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும் உறவினர்களுக்குக் கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகின்றான். அன்றியும் மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமம் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான். அல்குர்ஆன் 16:90

மானக்கேடான வெறுக்கத்தக்க அக்கிரமமான செயல்களைச் செய்தலைவிட்டும் மனிதர்களை விலக்குகின்ற இறைவன், நீதி செலுத்துமாறும் நன்மை புரியுமாறும் உறவினர்களுக்குக் கொடுத்து உதவுமாறும் இங்ஙனம் திருக்குர்ஆனில் கட்டளையிடுகின்றான்.

இவ்விடத்தில் இன்ன செயலைச் செய்யற்க என்று குறிப்பிட்டுக் கூறாமல் பொதுவாகவே மானக்கேடான பாவமான அக்கிரமமான காரியங்களைச் செய்யாதீர் என இறைவன் தடைவிதிக்கிறான்.

அதுபோல இன்னவற்றைச் செய்க என ஏவும்போது நீதி செலுத்துமாறும் நன்மைபுரியுமாறும் பொதுவாகக் குறிப்பிட்ட இறைவன் இதே தொடரில் ஒரு குறிப்பிட்ட நற்செயலைப் பிரத்தியேகமாகச் சுட்டிக்காட்டியுள்ளான். உறவினருக்குக் கொடுத்து உதவுக' என்ற கட்டளை இங்கு விஷேசச் சிறப்புக்குரியதாக எடுத்தோதப்பட்டுள்ளது

இதிலிருந்து உறவினருக்காற்றும் உதவிக்கு இறைவன் எந்த அளவு முக்கியத்துவம் தந்துள்ளான் என்பதை அறியமுடிகின்றது.

எதைச் செலவிடுவது? யாருக்குச் செலவிடுவது? என்ற வினாக்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் எழுப்பப் பட்டன. அந்த வினாக்களுக்கு விடை தரும் வகையில் பின்வரும் இறைவசனம் வெளியாயிற்று.

(நபியே) உம்மிடம் (யாருக்கு) எதைச் செலவு செய்யவேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். நீர் கூறும் நீங்கள் எந்த ஒரு நல்ல பொருளைச் செலவு செய்தாலும் (அதனை) பெற்றோருக்கும் நெருங்கிய உறவினருக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் வழிப்போக்கர் களுக்கும் (வழங்குங்கள்), இன்னும் நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும், அதனை நிச்சயமாக இறைவன் அறிகிறான். அல்குர்ஆன்: 2:215

மற்றோர் இறை வசனம் இப்படிப் பேசுகிறது:
எதைச் செலவு செய்ய வேண்டும் என்றும் அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். (உங்களுடைய தேவைக்குப் போக) மேலதிகமாகவுள்ளதை (செலவிடுங்கள்) என அவர்களிடம் கூறுவீராக. அல்குர்ஆன் 2:219

உன்னுடைய மனைவி மக்கள் பெற்றோர் அடங்கிய உனது குடும்பத்தை மறந்துவிட்டு உன் உறவினருக்கு அதிகமாகச் செலவிடு என்று இஸ்லாம் இயம்பவில்லை. மனித இயல்புகளுக்கேற்ற நடைமுறை சாத்தியமான வழிமுறைகளை இஸ்லாம் இனிய முறையில் எடுத்துரைத் துள்ளது. உனது குடும்பத் தேவைக்கு மேல் எஞ்சியுள்ளதை நெருங்கிய உறவினருக்குச் செலவிடுவாயாக என்றே இறைமறையும் நபிமொழியும் இயம்புகின்றன.

இந்த நவீன விளம்பர யுகத்தில் மனிதனுடைய தேவைகள் எல்லை மீறிப் பெருத்துக் கொண்டே போகின்றன. ஆடம்பரப் பொருட்களெல்லாம் இன்று அத்தியாவசியத் தேவைகள் என்கிற அளவுக்கு மனிதர்களுக்கு ஓய்வொழிச்சல் இல்லாமல் மூளைச் சலவை செய்யப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

இப்படிப்பட்ட நிலையில் அவரவரும் தமது தேவையை நிறைவேற்றுவதற்கே படாதபாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தம் தேவை நிறைவேறினால் தானே பிறகு நெருங்கிய உறவினருக்கு உதவி புரிய முடியும்?
எங்கள் தேவைகளே இன்னும் எவ்வளவோ நிறை வேறாமலிருக்கின்றனவே! இப்படியிருக்கும் போது உறவினருக்கு எப்படி உதவ முடியும் என வினவுபவரும் உள்ளனர். மனித மனம் எதைக் கொண்டும் திருப்தியடையாது. இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும் என்று பேராசையுடன் பொருள் குவித்து, யாருக்கும் கொடுக்காமல் கட்டிக் காத்து வருவது பெரும்பான்மை மனித இயல்பாக இருந்து கொண்டிருக்கிறது. இதனை நபி(ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதை நான் கேட்டேன். ஆதமின் மகனுக்கு இரு பள்ளத்தாக்குகள் நிறையுமளவுக்குச் செல்வமிருந்தாலும், அவன் மூன்றாவது ஒன்றுக்குத் தான் ஆசைப்படுவான். ஆதத்தின் மகனது உள்ளத்தை எதுவுமே நிறைவு செய்யாது மண்ணைத்தவிர. நூல்: புகாரி.

எனவே அதிகப்படியான பேராசையினையும் மிதமிஞ்சிய சுகபோகங்களையும் மனிதன் ஓரளவுக்கேனும் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும். அப்போதுதான் நெருங்கிய உறவினர்களுடைய சுக துக்கங்களில் மனிதர்கள் பொருளாதார ரீதியாகப் பங்களிக்கவியலும்.


குடும்பப்பாத்தியில் அநாதை நாற்றுகள்

தனக்கென வாழும் தன்னல மனப்போக்கை விடுவித்து பெற்றோர், மனைவி, குழந்தைகள், உற்றார், உறவினர் என்ற பரந்த நிலையிலான அன்புப் பரிமாற்றத்துக்கு வழிவகை செய்யும் இடம்தான் வீடு ஆகும். தன்னலப் பற்றை விடுவிப்பது எதுவோ அதுவே வீடு', தன் சுய நலப்பற்றை மிகுவிப்பவை வீடுகள் அல்ல, காடுகள்!

நாம் பெற்றதை மற்றவர்களும் பெறத் துணை செய்வது தான் உண்மையான வாழ்க்கையாகும். ஒவ்வொருவருடைய வாழ்வும் பிறிதோர் உயிரின் வாழ்க்கைப் பயணத்திற்குத் துணையாக அமைதல் வேண்டும். தன் வாழ்வின் மூலம் பிறர் வாழ்வுக்குத் தொண்டாற்றுகின்ற பண்பை, குடும்ப அமைப்பு அபிவிருத்தி செய்கிறது எனலாம்.

பெண்கள் எனப்பொருள் தரும் அன்னிஸாவு' என்ற தலைப்பில் திருமறை குர்ஆனின் நான்காம் அத்தியாயம் அமைந்துள்ளது. இதன் 34,35 ஆம் வசனங்கள் கணவன் மனைவியருக்கிடையிலான குடும்ப உறவைப் பற்றிப் பேசுகின்றன. இதையடுத்து வருகின்ற 36ஆம் வசனம் குடும்ப அமைப்பின் நோக்கம் எப்படியிருக்க வேண்டும் என்பதை எடுத்துரைக்கின்றது.

மேலும் அல்லாஹ்வையே வழிபடுங்கள், அவனுடன் எதையும் இணை வைக்காதீர். மேலும் தாய் தந்தையருக்கும் நெருங்கிய உறவினர்களுக்கும் அநாதைகளுக்கும் ஏழைகளுக்கும் அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும் அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும் கூட்டாளிகளாயிருப் போருக்கும் வழிப் போக்கர்களுக்கும் உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள். நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமையுடை யோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை. அல்குர்ஆன் 4:36

வாழ்வித்து வாழ், உண்பித்து உண், மகிழ்வித்து மகிழ்... இப்படியாகப் பிறர் நலம் பேணும் இல்வாழ்க்கையை இயன்ற வகையிலெல்லாம் பேணுவாயாக என எடுத்தோதுகிறது இஸ்லாம். நாம் எதையெல்லாம் குடும்ப அமைப்பிலிருந்து கொண்டு அனுபவித்து மகிழ்கிறோமோ, அவற்றில் சிலவற்றையேனும் நம்மைச் சார்ந்த உற்றார் உறவினர்களும் அண்டை அயலவர்களும் பெற்று மகிழத்தக்க வகையில் பயனுள்ள வாழ்வு வாழ்தல் வேண்டும் என இந்த வசனம் இயம்பி நிற்கின்றது.
பெற்றோருக்கும் உறவினருக்கும் ஆற்றவேண்டிய குடும்பக் கடமைகளை முந்திய இயல்களில் கண்டோம். அடுத்தபடியாக அநாதைகள், ஏழைகள், அண்டை வீட்டினர் முதலியோருக்கு ஆற்ற வேண்டிய இல்லறப் பொறுப்புக்களைக் காண்போம். முதலில் அநாதைகளை எடுத்துக் கொள்வோம்.

தந்தையை இழந்த, பருவ வயதினை அடையாத சிறுவர், சிறுமியர் அநாதைகள் ஆவர். சாதாரண மரணம் எய்தும் தந்தையர் ஒருபுறம், போர்க்காலங்களில் பெருவாரியாக உயிர்துறக்கும் வீரர்கள் மறுபுறம். இந்நிலையில் இவர்களுடைய குழந்தைகள் திக்கற்ற வர்களாகி விடுகின்றனர். இத்தகைய குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டியது சமூகக் கடமையாகும்.

தந்தையை இழந்து அநாதைகளாகிவிட்டாலும் தாயாரின் அரவணைப்பு இருக்கின்ற நிலையில் அக்குழந்தைகள் ஒருவாறு தங்களைத் தேற்றிக் கொள்ள வியலும். கணவனை இழந்த இளம் பெண் ஒருத்தி, தான் மறுமணம் செய்து கொள்ளாமல் தன் குழந்தைகளைக் கரை சேர்ப்பதற்காகவே அரும்பாடுபட்டாள் என்பதைப் பின்வரும் நபி மொழி எடுத்துரைக்கின்றது.

இறுதித் தீர்ப்பு நாளன்று நானும் (உழைப்பினால்) இரு கன்னங்களும் கறுத்த ஒரு பெண்ணும் இவ்விரண்டினையும் போல் இருப்போம் (இவ்விடத்தில் அறிவிப்பாளரில் ஒருவரான யஸீதுப்னு ஜுரைஉ நடுவிரலையும் ஆட்காட்டி விரலையும் சேர்த்துக் காட்டினார்)

அப்பெண் கணவனை இழந்த விதவை. அழகும் கண்ணியமும் வாய்ந்தவள். தனது அநாதைக் குழந்தைகள் பருவம் அல்லது மரணம் அடையும் வரை (மறுமணம் புரியாமல்) தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டவள். அறிவிப்பவர்: அவ்ஃப் இப்னு மாலிக்(ரலி) நூல்: அபூதாவூத்

ஒரு தந்தை தன் பிள்ளைகளின் வருங்கால வாழ்க்கையை மேம்படுத்துவதற் காக இரவு பகலாக அரும்பாடுபடுகின்றார். தனது மரணத்துக்குப் பின்னர் தன் குழந்தைகளின் கதி என்னவாகுமோ என்ற கவலை ஒவ்வொரு தந்தையின் சிந்தனை யிலும் நிழலாடிக் கொண்டே இருக்கின்றது.

இப்படித் தன் சொந்தக் குழந்தைகளைப் பற்றி தந்தைமார் கவலைப் பட்டுக் கொண்டிருக்க, மனித சமுதாயத்தில் தந்தையின்றி பரிதவிக்கின்ற அநாதைக் குழந்தைகள் பற்றி, பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னரே இஸ்லாம் அக்கறை எடுத்துக் கொண்டது.

தந்தையுடன் தாயையும் ஒரு சேரப் பறிகொடுத்து விட்டு தனித்தும் தவித்தும் நிற்கின்ற அநாதைக் குழந்தைகளின் நிலை மிகவும் பரிதாபத்திற்குரியதாகும். வாழ்வின் கொடிய பல துன்பங்களுள் போக்கவியலாத தனிமைத் துயரும் ஒன்றாகும்.

ஒருவனது வாழ்க்கைப் போராட்டங்களில் அவனுக்கு உறுதுணைபுரிய யாருமில்லை, அவனது சாதனைகளைக் கண்டு களிப்படையவும் வேதனைகளுக்கு ஆறுதல் கூறவும் எவருமில்லை, தாய் இல்லை, தந்தை இல்லை, வீடில்லை, வாசலில்லை, இப்படிப்பட்ட நாதியற்ற நிலையில் அநாதையாக வாழ்வதைப் போன்ற ஒரு கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது எனலாம்.

கதிரவனின் ஒளியற்ற செடிகொடிகள் வாடிவதங்கி விடுவது போன்று அன்பும் பரிவுமற்ற பிஞ்சுக் குழந்தைகளின் வாழ்க்கையும் தன்னுடைய சுவையையும் உற்சாகத்தையும் இழந்துவிடுகின்றது. அன்பென்னும் ஒளிச் சேர்க்கையே இந்தப் பிஞ்சுகளைக் கருகவிடாமல் தளிரச் செய்வதற்கு மிகவும் இன்றியமையாது வேண்டப் படுவதாகும்.

திருமறை குர்ஆனும் நபி(ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் அநாதைகளைப் பேணுவது குறித்து அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்துள்ளன.

எந்த வீட்டில் ஒரு அநாதை இருந்து அவ்அநாதையுடன் நல்லமுறையில் நடந்து கொள்ளப்படுகிறதோ அந்த வீடே முஸ்லிம்களின் வீடுகளில் மிகச்சிறந்த வீடாகும். எந்த வீட்டில் ஒரு அநாதை இருந்து அவ்அநாதையுடன் மோசமாக நடந்து கொள்ளப்படுகிறதோ அந்த வீடு தான் முஸ்லிம்களின் வீடுகளிலேயே மிகக் கெட்ட வீடாகும் என்று நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி) நூல்: இப்னுமாஜா

அநாதைப் பிள்ளைகளைப் பராமரிப்பவர் தம் சொந்த வீட்டில் அவர்களைத் தங்கவைத்துத் தமது குடும்பப் பின்னணியில் அவர்களிடம் அன்பு பாராட்டி வளர்த்தல் வேண்டும். அப்போதுதான் அந்தப் பிஞ்சுக் குழந்தைகள் குடும்பச் சூழ்நிலையிலான பரிவையும் பாசத்தையும் பெறமுடியும். இதைத்தான் நபி(ஸல்) அவர்களின் இப்பொன்மொழி உணர்த்துகின்றது.

குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டுப்பிள்ளைகள் போலக் கலந்து வளரும்போது தான் ஒரு அநாதை என்ற மானசீக அவஸ்தையிலிருந்து அந்தப்பிள்ளைகள் விடுபடுகின்றனர். பெற்றெடுத்த பிள்ளைகளை எப்படிப் பேணி வளர்க்கின்றோமோ அதுபோலவே நமது பராமரிப்பிலிருக்கும் அநாதைப் பிள்ளைகளையும் பாவித்தல் வேண்டும் எனவும் நபி(ஸல்) அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

ஜாபிர் (ரலி) அறிவித்திடும் நபிமொழி இதோ:
நான் நபி (ஸல்) அவர்களிடம் வினவினேன் என் பராமரிப்பில் இருக்கும் அநாதையை எந்தெந்தக் காரணங்களுக்காக நான் அடிக்கலாம்?''
நபி(ஸல்) கூறினார்கள் எந்தக் காரணங்களுக்காக உம் சொந்தக் குழந்தைகளை அடிப்பீரோ அந்தக் காரணங்களுக்காக மட்டும் அவர்களை நீர் அடிக்கலாம்'' நூல்: முஃஜம் தப்ரானீ
அடிப்பதாயினும் சரி, அணைப்பதாயினும் சரி, சொந்தக் குழந்தைகளை எப்படி நடத்துகின்றோமோ அதுபோலவே அநாதைக் குழந்தைகளையும் கவனித்திடுதல் வேண்டும். நம் குழந்தைக்கு உணவு, உடை, கல்வி முதலியன வழங்குதல் போல இந்தப் பிள்ளைகளுக்கும் வேறுபாடின்றி வழங்குதல் வேண்டும். இங்ஙனம் வீட்டுச்சூழலில் வளர்க்கப்படும் போதுதான் அநாதைப்பிள்ளைகள், தாம் அநாதை என்ற உணர்வை மறந்து மகிழ்வர்.

இதைவிடுத்து அநாதை இல்லம்' என்று போர்டு மாட்டப்பட்ட ஒரு கூடாரத்தில் இப்பிள்ளைகளைத் தங்கவைத்து அவர்களுக்கு ஒரு சீருடையும் வழங்கி நீ ஒரு அநாதை' என்ற முத்திரை குத்தி வளர்க்கப்படும் அவல நிலையை இன்று காண்கிறோம்.

பொது மக்களின் நன்கொடை வாயிலாக இவர்களுடைய உணவுத் தேவைகள் நிறைவேற்றப் படுகின்றன. இன்னும் சில அநாதை இல்லத்துச் சிறுவர்கள் மௌலூது, பாத்திஹா வீடுகளுக்கு விருந்துண்பதற்காக வீதியுலா செல்கின்ற பரிதாபக் காட்சிகளையும் பார்க்கின்றோம்.

ஆணும் பெண்ணுமாகிய குடும்ப உறுப்பினர் பலதரப்பாருடனும் பரஸ்பரம் அன்புடன் பழகுமிடமே இல்லமாகும். இதைவிடுத்துப் பல அநாதைச் சிறுவர்களை மட்டும் ஒரு இடத்தில் கூட்டமாகத் தங்கவைத்து வளர்க்குமிடம் உண்மையில் இல்லம்' என்று ஒருபோதும் ஆகமுடியாது. இந்தச் செயல் உளவியல் ரீதியாகவே அவர்களிடத்தில், ஒரு தாழ்வு மனப்பான்மையை உருவாக்கி விடுகின்றது.

இன்று ஆங்காங்கே நடத்தப்படும் அநாதை இல்லங்கள் பெரும்பாலும் சிறுவர்களுக்குரியனவாகவே காணப்படுகின்றன. சிறுமியர்களுக்கான அநாதை இல்லங்கள் மிகமிக அரிதாகவே காணப்படுகின்றன. அநாதைகளைப் பராமரிப்பதற்கு இன்றைய சமுதாயத்தில் எந்த ஏற்பாடும் இல்லாத நிலையில் இதுபோன்ற அநாதை நிலையங்கள் வாயிலாகவேனும் அவர்களுக்கு ஓரளவு ஆதரவு கிடைக்கின்றமையை நாம் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

எனினும் இம்மாதிரியான பிரத்தியேகமான நிலையங்களில் அவர்கள் வளர்க்கப் படுவதை விட முஸ்லிம் குடும்பத்து இல்லங்களில் அவர்கள் வளர்க்கப் படுதல் வேண்டும். இதைத்தான் இஸ்லாம் விரும்புகிறது.

அநாதைகளுடன் ஒருமித்துச் சேர்ந்து வாழ்வதால் அவர்களுடைய சொத்துக்களில் எதையேனும் தாம் அனுபவிக்க நேர்ந்துவிடுமோ எனப் பயந்து போய் அவர்களுடைய உணவைப் பிரித்துத் தனியாகப் பராமரித்தனர் சில நபித்தோழர்கள். இப்படித் தனியாகப் பராமரிப்பது அவர்களுக்கு மேலும் சிரமத்தையளித்தது. எனவே இது குறித்து நபி (ஸல்) அவர்களிடம் நபித் தோழர்கள் வினவினர். இதற்கு விடையாக ஒரு இறைவசனம் அருளப்பட்டது. இந்தப் பின்புலத்தைக் கீழ்க்காணும் நபிமொழி அறிவிக்கின்றது.

இப்னு அப்பாஸ்(ரலி) அறிவிக்கிறார்கள்:
மேலும் நியாயமான முறையிலன்றி அநாதைக் குழந்தைகளின் சொத்தை நெருங்காதீர் (குர்ஆன் 6:152) என்றும், நிச்சயமாக அநாதைக் குழந்தைகளின் சொத்துக்களை அநியாயமாக விழுங்குபவர் தங்கள் வயிறுகளில் நெருப்பைத்தான் உண்மையில் புசிக்கின்றனர் (4:10) என்றும் இறைவசனங்கள் இறங்கிய போது தம்மிடம் அநாதைக் குழந்தையுள்ளவர்கள் (தம் வீட்டிற்குச்) சென்று தமது உணவை (குழந்தைகளாகிய) அதன் உணவிலிருந்தும் தமது பானத்தை அதன் பானத்திலிருந்தும் ஒதுக்கி அந்த அநாதைக் குழந்தையின் உணவிலும் பானத்திலும் ஏதேனும் மிஞ்சினால் அதனை அது புசிக்கும் (வரை) அல்லது அது கெட்டுப்போகும் வரைப் பத்திரப்படுத்தி வைத்தனர்.

இது அவர்களுக்குச் சிரமமாயிருக்கவே இதனை அவர்கள் இறைத் தூதரிடத்தில் முறையிட்டார்கள்.

அப்போது, மேலும் அநாதைக் குழந்தைகளைப் பற்றி அவர்கள் உம்மிடம் வினவுகின்றனர். நீர் கூறுவீராக அவர்களுக்குரிய காரியங்களைச் சீராக்கி வைத்தல் மிகவும் நல்லது. ஆயினும் நீங்கள் அவர்களுடன் சேர்ந்து வசித்தால் அவர்கள் உங்கள் சகோதரர்களேயாவர். நன்மை செய்பவரிலிருந்து தீமை செய்பவரை அல்லாஹ் பிரித்தறிகின்றான். அல்லாஹ் நாடியிருந்தால் உங்களைக் கஷ்டப் படுத்தியிருப்பான். நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்'' (குர்ஆன் 2: 220) என்னும் திருவசனத்தை அல்லாஹ் இறக்கினான்.

பின்னர் (அநாதைகளாகிய) அவர்களுடைய உணவைத் தம்முடைய உணவோடும் அவர்களுடைய பானத்தைத் தம்முடைய பானத்தோடும் அவர்கள் சேர்த்துக் கொண்டார்கள். நூல்: அபூதாவூத், நஸயீ
அநாதைக் குழந்தைக்குரிய உணவைத் தனிமைப் படுத்திப் பராமரித்து உங்களுக்குக் கஷ்டம் தர ஒருபோதும் இறைவன் விரும்பவில்லை. அவர்களுடைய செல்வத்துக்கு நஷ்டம் ஏற்படாதவாறும் அவர்களுடைய நலன்கள் பாதிக்கப்படாதவாறும் கவனமாக இருந்துகொண்டு உங்கள் குடும்பத்தில் அவர்களைச் சகோதரர்களாகக் கண்ணியப்படுத்திப் பராமரித்திடுக எனத்திருமறை அறிவுறுத்துகிறது.

சொத்து சுகங்களுடைய அநாதைக் குழந்தைகள் விஷயமாக இந்த வசனம் இறக்கப்பட்டது என்றாலும் அநாதைப் பிள்ளைகளைக் குடும்பத்தின் சகோதரர்களாகப் பராமரித்திடுதல் வேண்டும் என்ற வழிகாட்டுதலை இதிலிருந்து நாம் பெற முடிகின்றது. அநாதைக் குழந்தைகள் நல்ல முறையில் வளர்க்கப்படுகின்ற வீடே சிறந்த வீடு என நபிகளாரும் பாராட்டியுள்ளார்கள்.

இதை மறந்துவிட்டு இவர்களை அநாதை நிலையங்களில் வைத்துப் பராமரிப்பது சிரமத்திற்குரியதாகவே இருக்கும் என்ற குறிப்பையும் இந்த இறைவசனம் மற்றும் நபி மொழியிலிருந்து உணர முடிகிறது. இன்று நாட்டு நடப்பில் இந்தக் கஷ்ட நிலையையே நாம் காண்கிறோம். அநாதை நிலையம் நடத்துவோர் பொருள் சிரமத்தில் சிக்கித் தவிக்கின்றனர். எப்போது பார்த்தாலும் நன்கொடை திரட்டுவதற்காக அலைந்து கொண்டே இருக்கின்றனர். குடும்பப் பாத்திகளில் அநாதை நாற்றுக்கள் வளர்க்கப்படும்போது இந்தச் சிரமங்களிலிருந்து விடுபடுவது எளிதாகும்.

அநாதைகளுக்கு இழைக்கப்படும் மோசடி, துரோகம் முதலியவற்றைக் கண்டித் தும் அவர்கள் மீது அன்பும் கரிசனையும் காட்டி ஆதரிக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருமறை குர்ஆனில் ஏராளமான வசனங்கள் வந்துள்ளன.

சொத்து சுகமுள்ள அநாதைப்பிள்ளைகளைப் பராமரிப்பதற்குப் பலர் முன்வரக் கூடும். ஆனால் எதுவுமேயின்றி நாதியற்ற குழந்தைகளை ஏறெடுத்துப் பார்க்கக்கூட யாரும் முன் வருவதில்லை. தம் உறவில் உள்ள அநாதைப் பிள்ளைகளையேனும் வசதி வாய்ப்புள்ளவர்கள் தம் இல்லங்களில் தங்கவைத்துப் பராமரிக்க முன்வருதல் வேண்டும். ஆங்காங்கே இப்படி ஊர்தோறும் செல்வர்கள் தம் சொந்த பந்தங்களிலுள்ள ஏழை எளிய அநாதைப் பிள்ளைகளைப் பராமரித்திடுகின்ற பொறுப்பை ஏற்பாராயின் இப்பிரச்சனைக்கு ஓரளவு தீர்வு காண முடியும்.

உறவுக்கார அநாதைகளுக்கு உணவு வழங்கி ஆதரிக்குமாறு திருக்குர்ஆன் எடுத்துரைக்கின்றது (90:15). உறவினரால் ஆதரிக்கப்படாத, அநாதை நிலையங்களில் இடமளிக்கப்படாத முஸ்லிம் குழந்தைகள் சமூக விரோத சக்திகளின் பிடியில் சிக்கிச் சீரழிந்து போகின்றனர். இது போன்ற தீயவிளைவுகள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு இஸ்லாம் இதற்குரிய வழிவகைகளை அன்றே அழகாக எடுத்துரைத்துள்ளது.

ஆனால் இன்று நாம் காண்பது என்ன? சொந்தப் பிள்ளைகளை வளர்த்துப் பராமரிப்பதையே இன்றைய பெற்றோர் வெகு சுமையாகக் கருதுகின்றனர். வசதி வாய்ப்பும் உடல்வலுவும் உள்ளோர்கூட அளவாகப் பெற்றுக் கொள்வதில் திருப்தியடைகின்றனர். இப்படி அளவாகப் பெற்றதையேனும் தாங்களே வளர்க்கின்றனரா என்றால் அதற்குக்கூட அவகாசம் இல்லை.

குழந்தைகள் காப்பகத்திலும் ஆயாக்கள் பராமரிப்பிலும் பிள்ளைகளை ஒப்படைத்து விட்டுத் தங்களது பிற உலகத் தேவைகளைக் கவனிக்கச் சென்று விடுகின்றனர். நிலைமை இப்படியிருக்க, அநாதைக் குழந்தைகளை, இவர்கள் எப்படிக் கையேற்கப் போகிறார்கள்? இவைகளைத் தங்கள் குடும்பத்தின் ஒரு அங்கமாக எங்ஙனம் பாவிக்கப் போகிறார்கள்?.

இன்றைய இயந்திரமயமான மனிதவாழ்க்கையில் இவையெல்லாம் சாத்திய மில்லாத ஒன்றாகத் தேன்றலாம். சமுதாய உயிரோட்டத்துக்கு அடிப்படைத் தேவையான மனிதப் பண்புகள் நலிந்து போனமையே இதற்கு முதல் காரணமாகும். எனவே மனித நேயப்பண்புகள் தழைப்பதற்கேற்றபடி மனிதமனங்களை இஸ்லாமிய உணர்வு கொண்டு பண்படுத்துதல் வேண்டும்.

இந்த நவீனயுகத்தில் மனித மனங்களையும் குடும்ப அமைப்புக்களையும் பற்றிப் பிடித்துக் கொண்டு பொருள் நேயம் ஒன்று மட்டுமே பேயாட்டம் ஆடு கின்றது. இந்தப் பொருளாசை மட்டுப்படுத்தப்படும்போது தான் அங்கே அநாதைகளைப் பராமரித்தல் போன்ற நல்லறங்கள் பூத்துக் குலுங்கமுடியும்!


பக்கத்து இல்லங்கள்... தூரத்துஉள்ளங்கள்...

தன்வீடு, தன் குடும்பம், தனது சுற்றுப்புறம், தனது மனைவி மக்கள் ஆகிய வற்றின் மேம்பாட்டைக் கருதிச் செயல்படுவது மனித இயல்பாகும். தனது குடும்பத்தினரின் நலனைப் பேணுவது போலவே அடுத்தவர் நலனையும் நாம் கருதிப் பார்த்திடல் வேண்டும். குடும்ப அமைப்பிலிருந்து கொண்டு உற்றார் உறவின ரைப் பேணினால் மட்டும் போதாது. அண்டை அயலவருடன் நல்லுறவு பாராட்டினால் தான் குடும்ப அமைதி தழைக்கும். நமது நலன்கள் எவ்வளவு முக்கியமோ அதுபோலவே அண்டை அயலவர்களின் நலனிலும் நாம் அக்கறை எடுத்துக் கொள்ளுதல் வேண்டும்.
ஒரு குடும்பம் தனது அயல்வீட்டாரோடு எப்படி நல்லுறவுடன் நடந்து கொள்ளவேண்டும் என்பது பற்றி இஸ்லாம் அருமையான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. அண்டை வீட்டிலுள்ள உறவினருக்கும் அருகிலுள்ள வீட்டினருக் கும் உபகாரம் செய்து வாழுமாறு திருக்குர்ஆன் (4:36) நமக்குக் கட்டளையிடுகின்றது.

நபி பெருமானாரின் பொன்மொழிகள் பல அண்டை வீட்டாருக்கு நாம் ஆற்ற வேண்டிய கடமைகளைக் குறித்து விரிவாக எடுத்துரைத்துள்ளன. ஒரு குடும்பத்தி னருடைய சொத்தில் அண்டை வீட்டாருக்கும் வாரிசுரிமை வழங்கப்பட்டு விடுமோ என்று நினைக்குமளவுக்கு, பக்கத்து வீட்டாரின் முக்கியத்துவத்தை இஸ்லாம் பறை சாற்றுகின்றது.

அண்டை வீட்டாரை (சொத்துரிமை பெறத்தக்க) வாரிசு ஆக்கிவிடுவாரோ என்று நாங்கள் சந்தேகம் கொள்ளுமளவிற்கு (அண்டை வீட்டாருக்கு உதவி செய்வதன் அவசியம் பற்றி) ஜிப்ரயீல் எனக்கு உபதேசித்துக் கொண்டே இருந்தார் என நபி (ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

கட்டுக்கோப்பு மிக்கக் கிராம வாழ்க்கையில் ஒவ்வொரு வீட்டினரும் தம் அண்டை வீட்டைப்பற்றி நன்கு அறிந்து வைத்திருப்பர். ஒரு வீட்டில் ஏதேனும் ஓர் எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்துவிட்டால் பக்கத்து வீட்டினர் தாம் உடனடியாக ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவர். அண்டை வீட்டுக்காரர்களுக்குப் பிறகுதான் உறவினர் வருவர்.

அக்கம்பக்கத்தினரின் சுக துக்கங்களில் மனித நேயத்துடன் பங்கெடுத்த காலமெல்லாம் இப்போது கொஞ்சம் கொஞ்மாகத் தேய்ந்து கொண்டே வருகிறது. இன்றைய பரபரப்பான நகர வாழ்க்கையில் அண்டை வீட்டாரைப் பற்றிக் கவலைப் பட மனிதனுக்கு அவகாசமே இல்லை. தனது பக்கத்து வீட்டில் குடியிருப்பவர் யார்? அவர் ஊர் எது? என்பதைப் பற்றிக் கூடத் தெரியாத நிலையில்தான் இன்றைய பட்டணவாசிகள் பட்டும் படாமலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

பக்கத்து வீட்டில் கொலையே நடந்தால்கூட நமக்கு என்ன என்று பாராமுகமாக நடந்து கொள்ளுமளவுக்கு நகர வாழ்க்கை மனித மனங்களைக் குறுகலாக்கி விட்டது. ஆனால் இஸ்லாம் இது மாதிரியான குறுமனம் கொண்டவர்களை வன்மையாகக் கண்டிக்கின்றது.

பக்கத்து வீட்டோடு உள்ள உறவைப் பராமரிப்பதில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் ஆற்றுகின்ற பங்கே மிகுதி எனலாம். ஒரு காலத்தில் ஆண்கள் மட்டுமே பொருளீட்டுவதற்காக வீட்டை விட்டு வெளியே சென்றனர். பெண்கள் இல்லத்து அரசிகளாக வீட்டிலிருந்தே கடமையாற்றினர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் அக்கம்பக்கத்துப் பெண்கள் கூடிக்கலந்து உறவாடிக் கொண்டனர். ஆனால் இன்றோ அதிகாலையிலேயே வீட்டைப் பூட்டி விட்டுக் கணவன் ஒரு புறம், மனைவி ஒரு புறம், பிள்ளைகள் மற்றொருபுறம் எனத் திசைக்கொருவராகப் பரபரப்போடு வெளியேறிச் செல்கின்றனர். பொழுது அடைந்த பின்பு தான் அவர்கள் மீண்டும் திரும்புகின்றனர்.

குடும்ப உறுப்பினர்களாகிய இவர்களே தங்களுக்குள் கலந்துறவாட முடியாத அளவுக்கு இயந்திரகதியில் இயங்கிக் கொண்டிருக்கும் போது பக்கத்து வீட்டாரைப் பற்றிக் கவலைப்பட இவர்களுக்கு எங்கே நேரம் இருக்கிறது?.

பக்கத்து வீட்டாரை வாரிசாக்கி விடுவாரோ எனத் தொடங்கும் ஹதீஸை அறிவித்த ஆயிஷா (ரலி) அவர்களே இன்னொரு ஹதீஸையும் அறிவிக்கின்றார்கள். பக்கத்து வீட்டுடன் நல்லுறவைப் பேணுவதில் பெண்களுக்குப் பெரும் பங்கு இருக்கிறதன்றோ! அதற்கேற்ப ஆயிஷா (ரலி) அவர்கள், நெருங்கிய அண்டை வீடு எது என்பது குறித்து நபிகளாரிடம் தூண்டித் துருவி வினவினார்கள்.

நான் அண்ணலாரிடம் கேட்டேன். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அண்டை வீட்டார் இருவர் இருக்கிறார்கள். அவ்விருவரில் யாருக்கு நான் அன்பளிப்பு அனுப்புவது?
அண்ணலார் பதிலளித்தார்கள். எவருடைய வாசல் உன் வாசலுக்கு மிக அருகில் உள்ளதோ அந்த அண்டை வீட்டுக்காரருக்கு! அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி

இன்றைக்கு நகரத்து அடுக்குமாடி வீடுகளில் தேனடை போல் ஒட்டிக் கொண்டு எண்ணற்ற குடும்பங்கள் குடித்தனம் நடத்துகின்றன. ஒரு வீட்டின் வாசலுக்கும் இன்னொரு வீட்டின் வாசலுக்கும் இடையே உள்ள தூரம் நான்கைந்து அடிகள்தான் இருக்கும். இருந்தாலும் யாரும் யாரைப்பற்றியும் கவலைப்படாமலே போய்க் கொண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.

எட்டாத்தூரதிலிருக்கின்ற கோள்களோடும் கிரகங்களோடும் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்ள இன்றைய புத்துலக மனிதன் அரும்பெரும் முயற்சி மேற்கொள்கிறான். ஆனால் பக்கத்து வீட்டிலிருக்கும் சகமனிதனைப் புரிந்து கொள்ள முயலாமல் புறக்கணித்துச் செல்கின்றான். இத்தகைய முரண்பாடுகள் களையப்படவேண்டும் என்பது குறித்து இஸ்லாம் அன்றே அருமையான வழிவகைகளை வகுத்துச் சென்றுள்ளது.

நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள்:
அண்டை வீட்டார் மூவகைப்படுவர். ஒரு கடமைக்குரிய அண்டை வீட்டார் ஒருவர்; இரண்டு கடமைக்குரிய அண்டை வீட்டார் இன்னொருவர்; மூன்று கடமைக்குரிய அண்டை வீட்டார் மற்றொருவர்.
உறவினரான முஸ்லிம் அண்டை வீட்டார் மூன்று கடமைக்குரியவர். அவருக்கு அண்டை வீட்டார் என்னும் உரிமையும் இஸ்லாத்தின் உரிமையும் பந்துத்துவ உரிமையும் இருக்கின்றன.
முஸ்லிமாகிய அண்டை வீட்டார் இரண்டு கடமைகளுக்குரியவர். அவருக்கு அண்டை வீட்டினர் என்னும் உரிமையுடன் இஸ்லாத்தின் உரிமையும் உள்ளது. இனி,இணைவைப்பவரான அண்டை வீட்டினர் ஒரு கடமைக்குரியவராகிறார். அறிவிப்பவர்: ஹஸன் இப்னு ஸுஃப்யான் நூல்: அபூ நயீம்.
எந்த வகையினராயினும் சரியே; அண்டை வீட்டார் என்ற ஒரே காரணத்துக்காகவே நாம் அவர்களுக்கு ஆற்ற வேண்டிய கடமைகள் பல உள்ளன.
பொதுவாகவே அண்டை வீட்டினரோடு எதனால் அடிக்கடி பிரச்சனைகள் உருவாகின்றன. அவர்களுடைய இடத்தைத்தனது இடமாக உரிமை கோருவது, அவர்களுடைய வளர்ச்சி கண்டு பொறாமை கொள்வது, இதுபோன்ற சின்னச் சின்ன உரசல்கள் தவிர்த்துக் கொள்ளப்பட வேண்டியனவாகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
1, விலக்கப்பட்டதைத் தவிர்த்துக் கொள்வீராக! (அவ்வாறு நடந்தால்) நீர் மனிதர்களுக்குள் நல்லடியாராவீர்! 2, மேலும் அல்லாஹ் உமக்கு விதித்த (பாக்கியத்)தைக் கொண்டு திருப்தியடைவீராக! நீர் மனிதர்களுக்குள் பெருஞ்சீமானாவீர்! 3. இன்னும் உம்முடைய அண்டை வீட்டாருக்கு நன்மை புரிவீராக! நீர் (மெய்யான) விசுவாசி ஆவீர்! 4, மேலும் நீர் உமக்காக விரும்புவதை (இதர) மனிதர்களுக்காகவும் விரும்புவீராக! நீர் (உண்மை) முஸ்லிமாவீர்! 5, மேலும் சிரிப்பை அதிகப்படுத்தாதிருப்பீராக! ஏனெனில் அதிகச் சிரிப்பானது இருதயத்தை மரணிக்கச் செய்யும்! அறிவிப்பவர்: ஆபூ ஹுரைரா(ரலி) நூல்: அஹ்மத், திர்மதீ

இந்த நபிமொழியின் மையப்பகுதியிலுள்ள மூன்றாவது கருத்து மட்டுமே அண்டை வீட்டாருக்கு நன்மை புரிவீராக என்று நேரடியாகப் பேசுகின்றது. இருப்பி னும் மேலும் கீழும் சொல்லப்பட்ட பிற நற்செயல்களையும் இது கோர்த்துக் கொண்டு, அண்டை வீட்டு உறவில் அனைத்துப் பண்புகளையும் பேண வேண்டும் என்பதை யும் உணர்த்தி நிற்கின்றது, அண்டை வீட்டாருக்குரிய கடமைகள்' என்னும் தலைப்பின் கீழ் இந் நபிமொழி இடம் பெற்றுள்ளமையும் கவனிக்கத்தக்கதாகும்.

அண்டை வீட்டாருடைய இடத்தை ஒருபோதும் அபகரிக்க நினையாதே! அது உனக்குத் தடைசெய்யப்பட்டுள்ளது, இது போன்ற தடைசெய்யப்பட்ட காரியங்களை மேற்கொள்பவர் ஒருபோதும் நல்லடியாராக இருக்கமாட்டார். விலக்கப் பட்டவற்றைத் தவிர்த்துக் கொள்பவரே மனிதர்கள் மத்தியில் நல்லடியாராக விளங்குவார்.

அண்டை வீட்டினரைப் பார்த்துப் பொறாமை கொள்ளாதே! அவர்களுடைய வளவாழ்வு கண்டு மனம் கறுவாதே! இறைவன் எதை உனக்கு வகுத்துத் தந்துள்ளானோ அதைக் கொண்டு நீ திருப்தியடைவாயாக! அதுவே சீமான் தனத்தின் சின்னமாகும்.

அண்டை வீட்டாருக்கு உன்னாலியன்ற நன்மைகளைச் செய்வாயாக! அப்போது தான் நீ உண்மை விசுவாசியாக முடியும்!

குப்பைக் கூழங்களை உன்வீட்டு முற்றத்தில் குவித்து வைக்க நீ விரும்புவதில்லை. சாக்கடை நீர் உன் வீட்டு வாசல் முன்பு தேங்கிக் கிடைப்பதை நீ அனுமதிப்பதில்லை. இப்படி எதை எதையெல்லாம் நீ விரும்புவதில்லையோ அதனை அடுத்தவரும் விரும்பமாட்டார் என்பதை நீ உணர்வாயாக! சுத்தம் சுகாதாரம் இவற்றையெல்லாம் நீ எப்படி உனக்காக விரும்புகின்றாயோ, அதுபோலவே அடுத்தவருக்காவும் இவற்றை விரும்புவாயாக! அப்போது தான் நீ உண்மை முஸ்லிமாக முடியும்.

அண்டை அயலவரின் குடும்பங்களில் பல்வேறு பிரச்சனைகள் இருக்கக் கூடும். இந்நிலையில் அக்கம் பக்கத்தினருக்கெல்லாம் கேட்கும் படியாக அடிக்கடி உரத்துச் சிரிப்பதும் கும்மாளமடிப்பதும் விரும்பத்தக்க செயலன்று. இச்செயலானது அடுத்தவர் மனநிலையைக் கருதிப் பார்க்க வியலாத அளவுக்கு இருதயத்தை மரணிக்கச் செய்துவிடும் என நபிகளார் நவின்றுள்ளார்கள்.

அடுத்த வீட்டுக் குடும்ப விவகாரங்களில் தேவையின்றி மூக்கை நுழைப்பதையும், அந்தக் குடும்பத்தினரின் அமைதியைக் கெடுக்கும் வகையில் நடந்து கொள்வதையும் இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அண்டை வீட்டாருக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை நபி(ஸல்) அவர்கள் நமக்குப் பட்டியல் போட்டுப் படிப்பித்துள்ளார்கள்.

அண்டை வீட்டாருக்குரிய கடமை யாதென்று உங்களுக்குத் தெரியுமா? அவர் உம்மிடம் ஆதரவு வேண்டினால் அவருக்கு ஆதரவளிப்பீராக! மேலும் அவர் உம்மிடம் உதவி கோரினால் அவருக்கு உதவி புரிவீராக! அவர் உம்மிடம் கடன் கேட்டால் அவருக்குக் கடன் கொடுப்பீராக! இன்னும் அவருக்குத் தேவையேற்பட்டால் உபகாரம் செய்வீராக! அவர் நோயுற்றால் அவரை விசாரிப்பீராக! அவர் மரணமடைந்தால் அவர் ஜனாஸாவைப் பின் தொடர்வீராக!

மேலும் அவருக்கு ஒரு நன்மை விளைந்தால் அவரை வாழ்த்துவீராக! அவருக்கு ஒரு துன்பம் நேர்ந்தால் அனுதாபம் காட்டுவீராக! அவருடைய அனுமதியில்லாமல் அவரை விட்டும் காற்றைத் தடுக்கும் வகையில் கட்டிடம் எழுப்பாதிருப்பீராக!

இன்னும் அவரைத் தொந்தரவு செய்யாதிருப்பீராக! நீர் ஒரு பழம் வாங்கும் போது அவருக்கும் அளிப்பீராக! நீர் (அவ்வாறு) சொய்யாவிட்டால் அதனை (வீட்டிற்குள்) இரகசியமாகக் கொண்டு போவீராக!

அன்றியும் அவருடைய குழந்தைகள் ஏங்கும் படியாக உம்முடைய குழந்தைகள் அவர்களுடன் வெளியேறாதிருப்பார்களாக!

அறிவிப்பவர்: அம்ரு இப்னு ஷுஐப், தம் பாட்டனார் வழியாக

தம் தந்தையிடமிருந்து, நூல்: காமில், மகாரிமுல் அக்லாக்.

ம்அகில உலக அண்டை வீட்டார் தினம்' என்ற ஒரு நாளை ஐக்கிய நாட்டு மன்றம் இனி மேல்தான் கருதிப் பார்க்க வேண்டும். அண்டை வீட்டாரின் முக்கியத்து வம் பற்றி இன்றைய காலத்தில் கூட யாரும் எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால் 1420 ஆண்டுக்களுக்கு முன்பே அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இதனை அழுத்தந் திருத்தமாக எடுத்துரைத்துள்ளார்கள்.

அண்டை வீட்டாருக்குரிய கடமைகளை அக்கு வேறு ஆணி வேறாக அலசுகின்றது இந்த ஹதீஸ். அண்டை வீட்டாரின் இன்ப துன்பங்கள் அனைத்திலும் பங்கெடுக்க வேண்டியதும், அவருக்கு உதவி தேவைப்படும் போது ஓடோடிச் சென்று உதவ வேண்டியதும் ஒரு முஸ்லிமின் தலையாக கடமையாகும்.

அண்டை வீட்டாரின் அனுமதியில்லாமல் அவரை விட்டும் காற்றைத் தடுக்கும் வகையில் கட்டிடம் எழுப்பாதே என்றனர் நபிகளார். அண்டை வீடுகளுக்கிடையே ஏற்படும் பெரும்பான்மையான மனஸ்தாபங்களுக்கு இது ஒரு முக்கியக் காரணமாகும்.

பக்கத்து வீட்டினருக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எந்தத் தொந்தரவும் கொடுத்தல் கூடாது என்பதையும் இந்நபிமொழி வலியுறுத்திக் கூறியுள்ளது.

அண்டை வீட்டார் ஏழைகளாயிருக்கலாம், தம் குழந்தைகள் விரும்பும் தின்பண்டங்களை அவர்கள் வாங்கிக் கொடுக்குமளவுக்கு வசதியற்றவர்களாயிருக் கலாம், இந்நிலையில் நம் வீட்டுக் குழந்தைகளுக்குப் பழங்களையும் தின்பண்டங் களையும் வாங்கிக் கொடுக்கும் போது, முடியுமானால் அண்டை வீட்டினருக்கும் அன்பளிப்பு வழங்க வேண்டும். இல்லையேல் அந்தக் குழந்தைகள் கண்ணில் படாதவாறேனும், நம் சொந்தப் பின்ளைளுக்கு அவற்றை இரகசியமாக உண்ணக் கொடுக்க வேண்டும்.

இதைவிடுத்து அண்டை வீட்டு ஏழைப் பிள்ளைகளின் பார்வையில் படுமாறு பழங்களின் தோல்கள் விதைகளோயோ இனிப்புப் பண்டங்களின் உறைகளையோ போடுவோமானால் அந்த ஏழைக் குழந்தைகள் ஏங்கிப் போகக் கூடும்! இத்தகைய குழந்தை மனப்பாங்கையெல்லாம் பெருமானானர்(ஸல்) அவர்கள் நன்றாக உணர்ந் திருந்தார்கள். ஆகவேதான் இவ்வாறாகவெல்லாம் விளக்கிச் சென்றுள்ளார்கள்.

நம் வீட்டுக் குழந்தைகளுக்கு உயர்தர ஆடை அணிகலன்களை அணிந்து, விலையுயர்ந்த விளையாட்டுச் சாதனங்களைக் கொடுத்து, வெளியே அனுப்பும் முன்பாக அவர்கள் எப்படிப்பட்ட அண்டை வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடு வதற்காக வெளியேறுகிறார்கள் என்பதையும் கொஞ்சம் கருதிப் பார்த்திட வேண்டும்.

ஏழை எளிய அண்டை வீட்டுப் பிள்ளைகள் பணக்கார வீட்டுக் குழந்தைக ளின் பகட்டைப்பார்த்துப் பரிதவித்து ஏங்கிப் போகக்கூடும்! பாவம், இந்தப் பிஞ்சு நெஞ்சங்களில் இப்படிப்பட்ட வேதனைப் பெருமூச்சு வெளிப்பட்டு விடக்கூடாது என்பதில் கூட நபி(ஸல்) அவர்கள் எவ்வளவு முன்னெச்சரிக்கையாக இருந்திருக்கின்றார்கள்!

இன்டர்நெட் என்னும் வலைப்பின்னல் மூலம் இன்றைய நவீன மனிதன் தொலைதூர நாடுகளோடெல்லாம் நொடிப் பொழுதில் தொடர்பு கொள்கிறான். தகவல் தொடர்பு வேகத்தில் மனிதன் எண்ணிப் பார்க்க முடியாத முன்னேற்றத்தை எட்டிக் கொண்டிருக்கின்றான். உலகமே ஒரு கைப்பந்து அளவுக்கு இன்று மனிதக் கண்டு பிடிப்புகளின் முன்னே சிறுத்துக் காணப்படுகிறது. ஆனால் என்ன பயன்?

கட்டைவண்டிக் காலத்தில் மனிதர்களுக்கிடையே இருந்த உறவு வலைப்பின்னல், இன்று இந்த வலைப்பின்னல் (இன்டர்நெட்) காலத்தில் கிழிந்துக் கந்தலாகிக்கிடக்கிறது! தகவல் தொடர்பில் கைப்பந்து அளவுக்கு உலகம் சுருங்கியதோ இல்லையோ, மனித உறவுகளின் அடிப்படையில் ஒளியாண்டு தூரத்துக்கு அண்டை வீட்டாருக்கிடையே உள்ளங்கள் தூரதூரமாகிக் கொண்டிருக்கின்றன.

நவீன கண்டுபிடிப்புகளுக்கும் மனித உறவு விரிசல்களுக்கும் இடையே உள்ள தொடர்பு ஆய்விற்குரியதே! குடும்பமனைத்தும் டி.வி.யின் முன் உட்கார்ந்து ரொம்பவும் இன்டரஸ்டிங்காக குடும்பம்' தொடரைப் பார்த்துக் கொண்டிருக் கும்போது, அண்டை அயலவரோ வேறு யாரேனுமோ அந்த வீட்டுக்கு விஜயம் செய்து பாருங்கள்! வந்தவருக்கு எந்த மாதிரியான உபசரிப்புத் தரப்படுகின்றது என்பதை அப்போது உணர்ந்து கொள்வீர்கள்! இன்றைய தொலைத் தொடர்புச் சாதனங்கள் மனித உறவு நிலைகளில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு இது ஒரு சின்னஞ்சிறிய சாம்பிள். இதுதான் இன்றைய காலனிக் கலாச்சாரம்.

அண்டை அயலவர், உற்றார் உறவினர் புடை சூழ, பழமையான முஹல்லாக் களில் காலங்காலமாகப் பரம்பரையாக வசித்து வந்தவர்கள் கூட, அது போன்ற சூழ்நிலையிலிருந்து விடுபடுவதற்காக, ஊருக்கு வெளியே விரிவாக்கப் பகுதிகளில் காலனிக் குடியிருப்புக்களில் வீடுகளை மாற்றிக் கொள்ளத் துடிக்கின்றனர். ஏன்?

ஏழை எளிய அண்டை அயலவர், உற்றார் உறவினர்களின் அருகே இருந்தால், அவர்களுடைய நச்சரிப்புத் தாளவில்லையாம். எனவே, யாருடைய தொந்தரவும் இல்லாதவாறு தனது குடும்பம் மட்டும் ஹாயாக நிம்மதியாக வாழ்வதற்காகப் புதிய காலனிகளைக் நாடிச் செல்கின்றனர் பலர்.

ஆனால் இஸ்லாம் இதனை வழிமொழியவில்லை. அண்டை அயலவர்களுடன் நல்லுறவு கொண்டு அன்னியோன்னியமாக வாழுமாறு இஸ்லாம் வலியுறுத்துகின்றது. அண்டை வீட்டாருக்குத் துன்பம் நேரும் போது ஆறுதல் கூறு. அவர்கள் மகிழ்ச்சியில் நீயும் பங்குகொள் என்கிறது இஸ்லாம்.உடலளவில் அண்டை வீட்டுக்குப் போய் வருவதும் பேச்சளவில் அவர்களுடன் உறவு கொள்வதும் மட்டும் போதாது. பண்டப் பரிமாற்றங்களைச் செய்து, பொருள் ரீதியாகவும் அவர்களுடன் நல்லுறவு பேணுதல் வேண்டும் என இஸ்லாம் கட்டளையிடுகின்றது.

(நபியே) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா? அநாதைகளை விரட்டுபவன் அவன்தான். மேலும் ஏழைகளுக்கு உணவளிக்கத் தூண்டாதவன். இன்னும் (கவனமற்ற) தொழுகையாளிக்குக் கேடுதான். அவர்கள் தங்களுடைய தொழுகையில் கவனமில்லாதவர்கள். அவர்கள் பிறருக்குக் காண்பிக் (கவேதான் தொழு)கிறார்கள். மேலும் அற்பமான (புழங்கும்) பொருள்களை (கொடுப்பதை விட்டும்) தடுத்துக் கொள்வார்கள். அல்குர்ஆன் 107:1-7

அற்பமான பொருளைக் கூட அடுத்தவருக்குக் கொடுக்காமல் தடுத்து வைத்துக் கொள்பவர் நியாயத் தீர்ப்பு நாளையே பொய்ப்பிக்கின்றவர் ஆவார். ஆகவே, நாம் எதை விரும்புகின்றோமோ அதை அண்டை அயல் வீட்டினருக்குக் கொடுத்து உதவ வேண்டும். சிலர் வெகு அற்பமானவற்றையும் அண்டை வீட்டி னருக்கு இரவலாகக் கூட வழங்க முன்வருவதில்லை. அந்தப் பொருள் தன்னிடத்தில் இல்லவே இல்லை என்று துணிந்து பொய்யுரைத்து விடுகின்றனர்.

நபி(ஸல்) அவர்கள் அண்டை அயலவருடன் சகஜமாகக் கொடுத்து வாங்கி நல்லுறவு கொள்ளுமாறு நமக்கு அறிவுறுத்தியுள்ளார்கள்.
முஸ்லிம் பெண்மணிகளே! ஓர் அண்டை வீட்டாள் தன் அயல் வீட்டாளுக்கு (அனுப்புவதில் எந்த வஸ்துவும்) அற்பமானது என்று கருதவே கூடாது; அது ஒரு ஆட்டின் குழம்பாயினும் சரியே என்பது நபி மொழியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

குழம்பு சமைக்கும் போது அயல் வீட்டாரைக் கருதி, அதன் சாற்றைப் பெருக்கிக் கொள்வாயாக எனவும் நபி(ஸல்) நவின்றார்கள். அறிவிப்பவர்: அபூதர்ரு (ரலி) நூல்: முஸ்லிம்.

குமரிமாவட்டம் போன்ற பகுதிகளிலுள்ள முஸ்லிம் முஹல்லாக்களில் அண்டை வீட்டாருக்கிடையேயுள்ளள கொல்லைப்புறப் பொதுச் சுவரில் ஒரு சின்னஞ்சிறிய வழி வைத்திருப்பர். இந்த வாயிலைத் தொண்டு' என அழைப்பர். அண்டை வீட்டினர் இருவரும் இதன் வழியாகப் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் தொண்டு ஆற்றிக் கொள்வர். ஆணம், குழம்பு, பதார்த்தவகைகளின் பரிமாற்றங்கள் எல்லாம் இதன் வாயிலாக இனிதே நடைபெறும். இருபது முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இம்மாதிரியான நடைமுறைகள் பெரிதும் காணப்பட்டன. இன்று இவையெல்லாம் தேய்ந்து போய் விட்டன.

நபி(ஸல்) அவர்கள் அண்டை வீட்டுக்கு அனுப்பும் எந்தப் பொருளையும் அற்பம் எனக் கருதக் கூடாது என்றார்கள். அதுபோலவே தனக்கு அனுப்பப்பட்ட பொருள் மிகவும் அற்பமானது என அதனைப் பெற்றுக் கொள்பவரும் கருதலாகாது.

ஏழைகள் தாங்கள் உயர்வாகக் கருதும் ஒரு பொருளைப் பணக்கார அண்டை வீட்டினருக்குப் பிரியத்தோடு கொடுப்பர். ஆனால் பணக்காரர்களோ அதை வெகு அற்பமாகக் கருதித் துச்சமாக மதித்திடுவர். தமக்கு அனுப்பப்பட்ட அப்பதார்த் தத்தைக் குப்பைத் தொட்டியில் வீசி ஏழைகளை அவமதிப்பர். அண்டை வீட்டினர் மனம் புண்படும்படியாக இப்படி நடந்து கொள்ளுதல் கூடாது. நாவினாலும் செயலினாலும் அண்டை வீட்டாருக்குத் துன்பமிழைப்பவர் மூமினாக மாட்டார் என்றும், அவர் நரகம் புகுவார் என்றும் நபிகளார் நவின்றுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! ஒருத்தி தன்னுடைய ஏராளமான தொழுகையாலும் நோன்புகளாலும் தர்மத்தாலும் பிரபலமடைந்திருக்கின்றாள். ஆனால் அவள் தன்னுடைய அண்டை வீட்டாளை நாவினால் துன்புறுத்து கின்றாள் என்று ஒருவர் சொன்னார். அவள் நரகத்திலிருப்பாள் என்றார்கள் நபிகளார். அல்லாஹ்வின் தூதரே! ஒருத்தி சொற்ப நோன்புகளும் தர்மமும் தொழுகையும் உடையவள் என்று பிரஸ்தாபிக்கப்படுகிறாள். அவள் பால்கட்டி யில் சிறிதே தர்மம் கொடுக்கிறாள். ஆனால் தன்னுடைய நாவினால் தனது அண்டை வீட்டாரை அவள் துன்புறுத்துவதில்லை என்று அவர் சொன்னார். அவள் சொர்க்கத்திலிருப்பாள் என்றார் நபிகளார். அறிவிப்பவர் : ஆபூஹுரைரா(ரலி) நூல்: அஹ்மத்

நாவினால் அண்டை வீட்டினருக்குத் துன்பமிழைப்பவர் நரகம் புகுவார். நாவினால் அண்டை வீட்டினருக்குத் துன்பமிழைக்காதவர் சொர்ககம் புகுவார் என இந்நபிமொழி எடுத்துரைக்கின்றது. அண்டை வீட்டாருக்குத் துன்பம் தருபவன் இறை நம்பிக்கையே இல்லாதவன் என்று மற்றொரு நபி மொழி கடிந்துரைக்கின்றது.

இறைவன் மீது ஆணையாக! அவன் இறைநம்பிக்கை இல்லாதவன்! என்று அண்ணலார் மூன்று முறை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எவன் இறை நம்பிக்கை இல்லாதவன்? என்று வினவப்பட்டது.

எவனுடைய அண்டை வீட்டார் அவனது துன்பங்களைவிட்டுப் பாதுகாப்புடையவராக இல்லையோ அவன் என்று பதில் உரைத்தார்கள் அண்ணலார். அறிவிப்பவர்: ஆபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

ஒரு மனிதனுடைய இயல்புகள் எப்படிப்பட்டன என்பதை அவனுடைய அண்டை வீட்டார் ஒரளவுக்கு நன்கு அறிந்து வைத்திருப்பார். ஏன் என்றால் இரவும் பகலும் அவனுடைய நடமாட்டங்களைத் தெரிந்து கொள்வதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருக்கின்றது.

முஸ்லிமாயிருக்கலாம், முஸ்லிமல்லாதவராயிருக் கலாம், எவராயிருப்பினும் ஒருவர் நல்லவரா கெட்டவரா என்பதை அறிவதற்கு, வேறு எவரிடத்திலும் கேட்டுத் தெரிவதைக் காட்டிலும் அண்டை வீட்டாரிடம் விசரித்துப் பார்த்தால் உண்மை புலப்பட்டு விடும்.

நான் நன்மை செய்தேனா அல்லது தீமை செய்தேனா என்பதை எப்படி அறிவது? என்று ஒருவர் நபிகளாரிடம் கேட்டார்.

நீர் நன்மையே செய்தீர் என்று உம்முடைய அண்டை வீட்டார் சொல்ல நீர் கேள்விப்படும் போது, நீர் நன்மை செய்தவாராகின்றீர்.

நீர் தீமையே செய்தீர் என்று அவர்கள் சொல்ல நீர், கேள்விப்படும் போது நீர் தீமையே செய்தவர் ஆகின்றீர் என்று நபி(ஸல்) அவர்கள் அப்போது விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத்(ரலி) நூல்: இப்னு மாஜா.

ஒரு மனிதனுடைய நற்பண்புக்குச் சான்று பகர்பவராக அண்டை வீட்டார் அமைகின்றார்.

ஒரு மனிதனின் இம்மை மறுமை நற்பேற்றுக்குக் காரணமாக அமைகின்ற அண்டை வீட்டார் நல்லொழுக்க முள்ளவராக அமைந்துவிடுவாரானால் அதைவிட ஒரு சிறந்த பாக்கியம் வேறு எதுவும் இல்லை எனலாம். இது குறித்தும் நபி(ஸல்) அவர்கள் பேசியுள்ளார்கள்.

விசாலமான தங்குமிடமும் நல்லொழுக்கமுள்ள அண்டை வீட்டானும் இணக்கமான வாகனமும் ஒரு முஸ்லிம் ஆடவனுடைய நற்பேற்றைச் சேர்ந்தவையாகும் என்பது நபிமொழி. அறிவிப்பவர்: ஸஃது இப்னு அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

அண்டை வீட்டார் ஒழுக்கங்கெட்டவராகவும், தொட்டதற்கும் பிடித்ததற்கும் சண்டையிடுபவராகவும் வாய்த்து விடுவாராயின், அருகில் குடியிருப்பவருடைய முழு நிம்மதியும் குலைந்து போகும். வாடகை வீடுகளில் குடியிருப்பவராயின் இது மாதிரியான மோசமான அண்டை வீட்டாரின் தொல்லை தாங்க முடியாமல் வேறு வீட்டுக்கு எளிதில் குடிபெயர்ந்து விட இயலும். அண்டைவீட்டார் இருவருமே சொந்த வீட்டுக்குரியவராயிருந்து, அதில் ஒருவர் மோசமானவராக அமைந்து விடுவாரானால், நல்லொழுக்கமுடையவருக்கு அது ஒரு நிரந்தர நெருடலாகிவிடும்.

அண்டை வீட்டார் நல்ல மனிதராக வாய்ப்பதுவும் ஒரு நற்பேறே என இதைத்தான் நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்தார்கள். அண்டை வீட்டுக்காரர் நல்லவரோ பொல்லாதவரோ, முஸ்லிமோ முஸ்லிமல்லாதவரோ, எவராயிருப்பினும் சரியே, அண்டை வீட்டுக்காரர் என்ற வகையில் நாம் அவருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளில் எதுவும் குறை ஏற்படுத்திவிடக் கூடாது.

இரு அண்டை வீட்டாருக்கிடையே பொதுச் சுவர் என்று ஒன்று இருக்கும். பல இடங்களில் இந்தப் பொதுச் சுவர் காரணமாகவே பெரும் பிரச்சனைகளும் மனத் தாங்கல்களும் ஏற்படக் காண்கிறோம். பொதுச் சுவரில் பக்கத்து வீட்டுக்காரர் கை வைக்கலாகாது. அதை அவர் தன் சொந்த உபயோகத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றெல்லாம் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர். ஆனால் இஸ்லாம் இதற்கு என்ன தீர்வு சொல்கிறது?

அப்துர்ரஹ்மான் பின் ஹுர்முஸ் அல் அஃரஜ்(ரஹ்) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், ஒருவர், தன் (வீட்டுச்)சுவரில், தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று கூறினார்கள் எனச் சொல்லி விட்டு, அபூஹுரைரா(ரலி) அவர்கள், என்ன இது? இ(ந்தக் கட்டளை) தனைப் புறக்கணிப்பவர்களாக உங்களை நான் பார்க்கின்றேனே! அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் இந்த நபிவாக்கைத் தொடர்ந்து எடுத்துரைத்துக் கொண்டே இருப்பேன்'' என்று கூறுவார்கள். நூல்: புகாரி

பொதுச்சுவர் தாவாக்கள் நபித்தோழர்கள் காலத்திலேயே இருந்துள்ளன என்பதையும் இதனால் தெரிய வருகின்றோம். பொதுச்சுவரை இரு வீட்டாரும் பயன்படுத்திக் கொள்ளச் சம உரிமை பெற்றுள்ளனர். நான் இதைப் பயன்படுத்த வில்லை. எனவே நீயும் இதை அனுபவிக்கக்கூடாது'' என்பது விதண்டாவாதமாகும்.

பொதுச்சுவரில் மரக்கட்டை பதித்து, கூரைவேய்ந்து தன் எல்லைக்குள் பயன்படுத்த அண்டை வீட்டார் விரும்புவாராயின் நாம் அதனை ஆட்சேபித்தல் கூடாது. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மரக்கட்டைகளுக்குப் பதிலாக இன்று இரும்பு கர்டர்கள், கான்க்ரீட் பீம்கள், உத்திரம் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன. இவற்றைப் பயன்படுத்திக் கொள்வதில் ஒருவருக்கொருவர் பெருந் தன்மையோடு நடந்து கொள்ள வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டிச் சென்றுள்ளார்கள்.


விருந்துகொடுப்பவரும் கொள்பவரும்

எவரொருவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் தன் அண்டை வீட்டுக்காரருக்குத் துன்பம் இழைப்பது கூடாது. மேலும் எவரொருவர் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்புகிறாரோ, அவர் தன் விருந்தினரைக் கண்ணியப் படுத்துதல் வேண்டும் என்பது நபிமொழியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி.

விருந்தினரைக் கண்ணியப்படுத்துதல் என்பது இஸ்லாமியக் குடும்ப இயலில் வலியுறுத்திக் கூறப்பட்டிருக்கும் ஒரு பண்பாகும். விருந்தினர் என்றால் யார்? நம் வீட்டுக்கு வருகை தரும் நமக்கு நன்கு அறிமுகமான உறவினர்கள் மற்றும் நண்பர்களை விருந்தினர் எனப் பொதுப்படையாகச் சொல்கிறோம். இவர்கள் மட்டும் தான் விருந்தினர்களா? இல்லை.

நமக்கு முன்பின் அறிமுகமில்லாத நிலையில் ஊருக்குப் புதிகாக வருகை தருபவரும் விருந்தினர் என்னும் தகுதிக்குப் பெரிதும் அருகதையுடையவராகிறார். சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு நெடுந்தூரம் பயணம் மேற் கொள்வோர் அங்கங்கே தங்கி இளைப்பாறுவதற்கும் உணவு உட்கொள்வதற்கும் இக்காலத்தில் லாட்ஜ்கள், ஹோட்டல்கள் உள்ளன.

நவீனப் போக்குவரத்து வசதியில்லாத முந்திய காலங்களில் நாள் கணக்கில் மாதக்கணக்கில் நீண்ட தூரம் பிரயாணம் செய்வர் பலர். இந்தப் பிரயாணிகள் இடையிடையே தங்குவதற்கோ உண்பதற்கோ இன்றைக்கிருப்பது மாதிரியான வசதி வாய்ப்புகள் அன்று இருந்திடவில்லை. கட்டுச் சோறும் மர நிழலுமே கதியெனச் சென்றனர். பல நேரங்களில் கட்டுச் சோறு தீர்ந்து போய் ஒண்டுவதற்கு மரநிழலும் இல்லாமல் திண்டாடி நிற்கும் இந்தப் பிரயாணிகள், அருகாமையிலுள்ள ஊர்களில் தஞ்சம் புகுவர். இப்படி ஊருக்குப் புதியவராகப் பிரவேசிப்பவர் அந்த ஊரின் விருந்தினராகிறார். இத்தகையவரிடம் போதிய பணவசதி இருக்கலாம், இருந்தாலும், காசு கொடுத்து உணவைப் பெறுவதற்கு உணவு விடுதிகள் இருப்பதில்லை. அது போலவே தங்குமிடமும் கிடைப்பதில்லை. இப்படிப்பட்ட வழிப்போக்கர்களை உபசரித்து அவர்களுக்கு உணவூட்டி, தங்குமிடமளித்து அனுப்பிவைப்பது ஒரு மகத்தான மனித நேயக் கடமையாகும். வசதி வாய்ப்புக்கள் பெருத்துப் போய்விட்ட இன்றைய காலகட்டத்திலிருந்து பார்க்கும்போது இது போன்ற விருந்தினர்கள் இன்று மிக அரிதாகவே காணக்கிடைப்பர் எனலாம்.

முன் பின் அறிமுகமில்லாத நிலையிலும் கூட, தம் ஊருக்கு வருகை தந்துள்ள புதிய மனிதரை மனிதநேயம் கருதி, தம் இல்லத்துக்கு அழைத்து வந்து விருந்துபடைத்து மகிழ்வதை ஒரு சிறப்பான பாக்கியமாகக் கருதினர் அன்றையச் சமூகத்தினர். இது குறித்துக் திருக்குர்ஆனும் நபிமொழிகளும் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன.

இப்ராஹீம் நபி(அலை) அவர்களிடம் மனித உருவில் சில வானவர்கள் வந்தனர். வந்தவர்கள் மலக்குகள் என்பது இப்ராஹீம் நபிக்குத் தெரியாது, முன்பின் அறிமுகமில்லாத அந்தப் புதிய மனிதர்களைத் தம் இல்லத்துக்கு அழைத்து வந்த இப்ராஹீம் நபியவர்கள், அந்த விருந்தினர்களுக்குச் சிறப்பான உணவு தயாரித்துக் கண்ணியப்படுத்த முனைந்ததை திருமறை குர்ஆன் பின்வருமாறு கூறகின்றது.

இப்ராஹீமின் கண்ணியம் மிக்க விருந்தினர்களின் செய்தி உமக்கு வந்ததா? அவர்கள், அவரிடம் பிரவேசித்தபோது ஸலாம் என்று கூறினர் (அவரும் பதிலுக்கு) ஸலாம் கூறினார். இவர்கள் நமக்கு அறிமுகமில்லாத கூட்டத்தினர் (என எண்ணிக் கொண்டார்). எனினும் அவர் தம் குடும்பத் தாரிடம் விரைந்து சென்று ஒரு கொழுத்த காளைக் கன்றை (சமைத்து)கொண்டு வந்தார். அதை அவர்கள் முன் வைத்து, நீங்கள் புசிக்க மாட்டீர்களா?' என்றார். அல்குர்ஆன் 51:24-27

தமக்கு முன்பின் அறிமுகமில்லாத சிலர் தம்மை நோக்கி வந்தபோது இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் அந்தப் புதியவர்களை வரவேற்றுக் கண்ணியப்படுத்திடத் தவறவில்லை. அவர்களை உபசரிப்பதற்காகத் தம் குடும்பத்தாரிடம் விரைந்து சென்றார். அவர்களுக்கு உண்ணக் கொடுப்பதற்காகச் சிறப்பான உணவைத் தயாரித்துப் பரிமாறத் தொடங்கினார்.

அறிமுகமில்லாதவரும் விருந்தினரே என்பதையும் அவர்களைக் கண்ணியமான முறையில் உபசரிக்க வேண்டியது மாந்தர் தம் கடமை என்பதையும் இந்தத் திருமறை வசனங்களிலிருந்து தெரிய வருகின்றோம்.

அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவித்திடும் நபி மொழி ஒன்று இதோ:
ஒரு மனிதர் நபி(ஸல்)அவர்களிடம் வந்து, நான் பசியால் நிம்மதியற்றிருக் கிறேன்' என்றார். நபி(ஸல்) தம் சார்பாக ஒருவரைத் தமது மனைவி ஒருவரிடம் அனுப்பி, ஏதேனும் அங்கிருந்தால் கொண்டு வாருங்கள்' என்றனர். அத்துணைவியார், தண்ணீரைத் தவிர இப்போது எதுவுமில்லை' எனப் பதிலளித் தார்கள். பின்னர் மற்றொரு மனைவியிடம் அனுப்பினார்கள். அங்கும் இதே பதில்தான் கிடைத்தது.

ம்தங்களைச் சத்தியத்துடன் அனுப்பியிருக்கும் அந்த இறைவன் மீது ஆணையாக! இங்கு தண்ணீரைத் தவிர வேறெதுவுமில்லை' என்றே அண்ணலாரின் எல்லா மனைவியரும் கூறினர். எனவே அண்ணலார் மக்களிடம் இன்றிரவு இந்த விருந்தாளிக்கு உணவளிக்கக் கூடியவர் யார்?' என்று வினவினார்கள்.

அன்ஸாரிகளில் ஒருவர்,ம்அல்லாஹ்வின் தூதரே! இவருக்கு நான் உணவளிப்பேன்' என்று கூறினார். அவர் அவ்விருந்தாளியை அழைத்துக் கொண்டு தம் வீட்டிற்குச் சென்றார். மனைவியிடம், இவர் நபி(ஸல்) அவர்களின் விருந்தி னர். இவரை உபசரி! உன்னிடம் ஏதாவது உணவு இருக்கிறதா?' என்று கேட்டார்.

அவள், இல்லை குழந்தைகளின் உணவு மட்டும் இருக்கிறது. அவர்கள் இன்னும் உணவருந்தவில்லை' எனக் கூறினாள். அந்த அன்ஸாரித் தோழர் கூறினார்: குழந்தைகளுக்கு ஏதாவது சிறுது கொடுத்து ஆறுதல் அளித்துவிடு. அவர்கள் உணவு கேட்கும் போது அவர்களைத் தட்டிக் கொடுத்துத் தூங்கச் செய்து விடு. நமது விருந்தினர் வீட்டினுள் உணவருந்த வரும் போது விளக்கை அணைத்துவிடு. இவர்களும் நம்முடன் உணவருந்திக் கொண்டுதான் இருக்கின்றார்கள் என்று விருந்தினர் நினைக்கும் வகையில் ஏதாவது ஒரு வழி செய் என்றார்.

எனவே அனைவரும் உணவருந்த அமர்ந்தனர். விருந்தினரோ வயிறு நிரம்ப உண்டு எழுந்தார். ஆனால் (அன்ஸாரித்தோழரும் அவர் மனைவியுமா கிய) இருவரும் பசியுடன் இரவைக் கழித்தனர். காலையில் இந்த அன்ஸாரித் தோழர் அண்ணலாரிடம் சென்ற போது, அண்ணலார் நீங்கள் கணவன் மனைவி இருவரும் விருந்தினருடன் நடந்து கொண்ட விதத்தைக் கண்டு அல்லாஹ் மிகவும் மகிழ்ந்தான்' என்று கூறினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்.

ஊருக்குப் புதிதாக வந்த விருந்தினரை உபசரிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்ட பிரயாசையை நாம் அறிகிறோம். அன்ஸாரித் தோழரும் அவர் மனைவி பிள்ளைகளும் பசியைப் பொறுத்துக் கொண்டு, வந்த விருந்தினருக்காகத் தங்கள் உணவைத் தியாகம் செய்த உன்னத நிலையைக் காண்கிறோம். விருந்தினரை இவர்கள் கண்ணியப்படுத்திய திறம்கண்டு அல்லாஹ்வே மகிழ்ச்சியடைந்ததாக நபி(ஸல்) அவர்கள் எடுத்துரைத்துள்ளார்கள்.

முன்பின் அறிமுகமில்லாத வெளியூர் விருந்தினருக்கு முன்னுiரிமை கொடுக்கும் இஸ்லாம் உள்ளுர் விருந்தினர்களை மறந்துவிடவில்லை. உறவினர்கள், நண்பர்கள் முதலியோரை இல்லத்திற்கு வரவழைத்து விருந்தூட்டுவது பற்றியும் திருமறை குர்ஆனும் நபிமொழிகளும் எடுத்துரைத்துள்ளன.
குடும்பத்தில் பல்வேறு சிறப்பான வைபவங்கள் இடம் பெறுதலுண்டு. புதிய வீடு கட்டிக் குடிபோதல், திருமணம் போன்ற மகிழ்ச்சியான தருணங்களில் உற்றார் உறவினரை அழைத்து விருந்து கொடுத்தலை இஸ்லாம் விரும்புகின்றது.

புதிதாக வீடு கட்டியதும் உறவினர்களை அழைத்து விருந்து கொடுக்கலாம் என்பதை ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழியிலிருந்து அறிய முடிகின்றது.

வானவர்கள் சிலர் என்னிடம் வந்து, இவருக்கு உதாரணம் கூறுங்கள்' என்று தமக்கிடையே பேசிக் கொண்டார்கள்.

ம்ஒருவர் வீட்டைக் கட்டி அதில் விருந்துக்கு ஏற்பாடு செய்கிறார். விருந்துக்கு அழைக்கவும் ஒருவரை அனுப்பி வைக்கிறார். யாரெல்லாம் அந்த அழைப்பை ஏற்றார்களோ, அவர்கள் அவ்வீட்டில் நுழைந்து விருந்து உண்பார்கள். யாரெல்லாம் அழைப்பை ஏற்கவில்லையோ அவர்கள் வீட்டிற்குள் நுழையமாட்டார்கள். விருந்தும் உண்ண மாட்டார்கள். இதுவே இவருக்கு உதாரணமாகும் என்று கூறினார்.

வீடு என்பது சுவர்க்கமாகும். அழைக்கச் சென்றவர் முஹம்மத்(ஸல்) அவர்களாவார் என வானவர்கள் விளக்கமளித்தனர், என்று நபி(ஸல்) கூறினர்கள். அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ்(ரலி) நூல்: புகாரி.

இது போலவே திருமணம் முடிந்ததும் மணமகன் வலிமா விருந்து அளிக்கவேண்டும் எனவும், வலிமா விருந்தின் போது உறவினர் மட்டுமின்றி ஏழை எளியவர்களையும் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும், விருந்தழைப் பைப் புறக்கணிக்கக் கூடாது எனவும் நபி(ஸல்) அவர்கள் எடுத்துக் கூறியுள்ளார்கள்.

எந்த வலிமாவில் (மணமகன் வீட்டு விருந்தில்) செல்வர்கள் மட்டும் அழைக்கப்பட்டு, ஏழை எளியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்களோ அந்த வலிமாவின் உணவே மிக மோசமான உணவாகும்.
எவர் வலிமா விருந்திற்கான அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லையோ அவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தவராவார் என்பது நபிமொழியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்.

செல்வந்தர்கள் மட்டும் அழைக்கப்பட்டு ஏழைகள் புறக்கணிக்கப்படும் விருந்துதான் விருந்துகளில் மிகக் கெட்டதாகும் என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: முஸ்லிம்
விருந்துக்குரிய அழைப்பை ஏற்று கவுரவிக்கச் சொன்ன நபி(ஸல்) அவர்கள், அழையாத விருந்தாளியாகச் செல்லுதலை மிகவும் கண்டித்துள்ளார்கள்.

ஒருவர் (விருந்துக்கு) அழைக்கப்பட்டு, அவர் அங்கீகரிக்காமல் (அல்லது பதில் தராமல்) இருந்துவிட்டால், அன்னவர் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாற்றமிழைத்தவராகிறார்.
மேலும் எவனொருவன் அழைக்கப்படாமலே (ஒரு விருந்துக்குப்) போகிறானோ, அவன் ஒரு திருடனைப் போல (உள்ளே) நுழைகிறான். அது மட்டுமன்றி, சின்னாபின்னச் சூறையாடியவனைப் போன்று வெளிப் புறப்படுகின்றான் என நபி(ஸல்) அவர்கள் நவின்றார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) நூல்: அபூதாவூத்

அழைக்கப்படாத நிலையில் வலியச் சென்று விருந்தில் கலந்து கொள்பவனைத் திருடன் என்றும், அவன் உண்டு விட்டு வெளியேறுவது விருந்து வீட்டில் சூறையாடிவிட்டுச் செல்வதற்குச் சமம் என்றும் நபி(ஸல்) அவர்கள் மிகக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள்.

அழைக்கப்பட்ட குறிப்பிட்ட எண்ணிக்கையினருக்காக விருந்து தயாரிக்கப் பட்டிருக்கும் போது, அழைக்கப் படாதவர்கள் அவர்கள்பாட்டுக்கு விருந்தில் பங் கெடுப்பதென்பது நாகரீகக் குறைவான செயலாகும், இதன் காரணமாக அழைக்கப் பட்டவர்களுக்கு உணவுத் தட்டுப்பாடாகி, வீட்டுக்காரர் பெரும் சிரமத்துக்கும் அவமானத்துக்கும் ஆளாகின்ற நிலை ஏற்பட்டு விடுகின்றது. எனவே, அடுத்தவரை இக்கட்டில் ஆழ்த்துகின்ற இது போன்ற காரியங்களை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்கள்.

அழையாத விருந்தினரை யாரும் விரும்பி உபசரிப்பதில்லை. அவரை யாரும் மரியாதையோடு அனுப்பி வைப்பதுமில்லை. அவர் ஒரு திருடனைப் போன்று சொல்லாமல் கொள்ளாமல் வெளியேறுகின்றார். அதே நேரத்தில் அழைப்பை ஏற்று வருகை தந்தவர்களின் நிலையோ அதற்கு நேர் மாறானதாகும். இத்தகைய விருந்தினரை வாசல் கதவு வரை சென்று வழியனுப்பி வைத்துக் கண்ணியப்படுத்த வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஒரு மனிதர் தன்னுடைய விருந்தினரை வீட்டு (வெளி)க்கதவு வரை (யேனும்) பின் தொடர்நது செல்வது நபி வழியாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி) நூல்: இப்னுமாஜா

வீட்டில் திருமணம், வலிமா போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறாத சாதாரண நாட்களில்கூட விருந்தினர் வருகை தருதலுண்டு. யாராவது விருந்தினர் வரமாட்டார் களா என்று வீட்டுக்காரர்களே சில தருணங்களில் ஏங்கி எதிர்பார்த்திடுவர். வீட்டில் மனைவி மக்களுடன் காலமெல்லாம் வாழ்ந்து கொண்டுடிருக்கும் போது ஒருவிதமான சலிப்பு கலந்து வெறுமையுணர்வு ஏற்படக்கூடும். இடையிடையே வருகை தரும் விருந்தினர்களால் இந்தச் சலிப்புணர்வு நீங்கிப் போகிறது.

கணவன் மனைவியருக்கிடையே சில வேளைகளில் சில்லறை மனத்தாங் கல்கள் நிலவக் கூடும். தங்களது மனத்தாங்கல்களை வெளியே காட்டிக் கொள்ளா மல் கணவனும் மனைவியும் ஒருமித்து நின்று விருந்தினரை உபசரிக்கின்றபோது, அவர்களுக்கிடையே எழுந்த கருத்து மாறுபாடுகள் கரைந்து காணாமல் போய்விடுகின்றன.

விருந்தினர் வருகையால் பெரியவர்கள் மட்டுமின்றி, குழந்தைகளும் குதூகல மடைகின்றனர். ஒரேவிதமான உணவை உண்டு அலுப்புற்றிருந்த நிலை மாறி, இப்போது விருந்தினர் பொருட்டால் விதவிதமான உணவு வகைகளை அனைவரும் உண்டு மகிழும் வாய்ப்பு கிடைக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக மனித உறவுகள் வலுப்படுகின்றன. ஒருவரோடு ஒருவர் அன்னியோன்னிய மாகின்றனர். இவையெல்லாம் விருந்து தரும் பயன்கள்.

இத்தகைய பயன்களைப் பழுதறப் பெறத்தக்க வகையில் விருந்தினர்களும் நடந்து கொள்ளுதல் வேண்டும். விருந்து கொடுப்பவரும் விருந்து பெறுபவரும் எப்படி நடந்து கொண்டால் இது சாத்தியமாகும்? நபி (ஸல்) அவர்களின் திருமொழி ஒன்று இதை விளக்குகின்றது.

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை வைத்திருப்போர் தம் விருந்தினர்களை உபசரிக்கட்டும். முதுல்நாள் அன்பளிப்புக்கு உரிய தினமாகும். அதில் மிக உயர்ந்த உணவை விருந்தினருக்கு ஊட்ட வேண்டும். விருந்து உபச்சாரம் மூன்று நாட்கள் வரையுண்டு. (அதாவது இரண்டாவது மூன்றாவது நாட்களில் விருந்தளிப்பதற்கு அதிகச் சிரத்தை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை)

அதற்குப் பின் அவர் செய்யும் உபசரிப்பு அனைத்தும் அவருக்குத் தருமமாகும். விருந்தாளி தனக்கு விருந்தளிப்பவரை நெருக்கடியிலும் கவலையிலும் ஆழ்த்துமாறு அவரிடம் தங்கியிருப்பதும் கூடாது. அறிவிப்பவர்: குவைத் இப்னு அம்ரு(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்

விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்பர். விருந்தினர் அதிகபட்டசமாக மூன்று தினங்கள் வரை தங்கியிருக்கலாம் என இந்நபிமொழி பகர்கிறது. விருந்தூட்டுபவருக் குரிய வழிகாட்டுதல்களை எடுத்துரைத்த நபிகளார், விருந்தாளி எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்கேற்ற நெறிமுறைகளையும் காட்டியுள்ளர்கள்.

தம் வீடு அல்லாத அடுத்தவர் வீடுகளில் வந்து தங்கும்போதும் உண்ணும் போதும் பெரும் பான்மையான விருந்தினர் சங்கோஜம் கொள்வர். எவ்வளவுதான் நெருங்கிய உறவினர் வீடாயிருந்தாலும், தமது சொந்த வீட்டில் புழங்குவது போல அவர்களால் சுதந்திரமாக இயங்கவியலாது. வீட்டுக்காரர் எந்த அளவுக்கு வாஞ்சையுடன் நடந்து கொள்கிறாரோ அதைப் பொறுத்துத் தான் விருந்தினருடைய சங்கோஜ உணர்வை ஒரளவுக்கேனும் குறைக்க முடியும்.

விருந்தினர்களை வசதியாகத் தங்க வைக்க இயலாத அளவுக்குப் பெரிய வீடாக இல்லாமலிருக்கலாம், இருக்கின்ற சிறிதளவு வசதிகளையும் விருந்தினருக்குக் கொடுத்து விட்டு, வீட்டுக்காரர்கள் சிரமத்துடன் தங்கள் அன்றாடப் பழக்கங்களை நிறைவேற்ற வேண்டியிருக்கலாம். இதுமாதிரியான சின்னஞ்சிறிய வீடுகளுக்குச் செல்லும் விருந்தினர்கள் அங்கே நாள் கணக்கில் டேரா போடுவது விரும்பத்தகாத ஒன்றாகும். ஆண் விருந்தினர்களுக்கு மஹ்ரமல்லாத பெண்கள் வீட்டில் இருக்கக் கூடும். அது போலவே வீட்டு ஆண்களுக்கு மஹ்ரமல்லாத பெண் விருந்தினர் களும் இருக்கக் கூடும். நாள் கணக்கில் தங்கியிருக்கும் விருந்தினர்களால் இவ்விரு சாராரும் பெரும் நெருக்கடிக்குஆளாகநேரிடும்.,

முதல் நாள் மிக உயர்ந்த உணவை விருந்தினருக்கு ஊட்ட வேண்டும் என்பது நபிமொழியாகும். இருந்த போதிலும் அடுத்தடுத்த நாட்களில், தாம் உண்ணுவது போன்ற சாதாரண உணவை விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வீட்டுக்காரர் மனது இடம் கொடுக்காது. விருந்தினருக்கென்று ஏதேனும் சிறப்பாகத் தயாரித்து வழங்கவே விரும்புவர். பொருளாதார வசதிகளில் பின்தங்கியிருப்போர் இதன் காரணமாக மேலும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். விசாலமான வீடும், மேம்பட்ட பொருளாதார வசதியும் உடையவர்களாக இருந்தாலுங்கூட, விருந்தினர் அதிக நாள் தங்கியிருப்ப தனால், வீட்டினருக்குச் சலிப்பு ஏற்படக்கூடும்.

இவை யாவற்றையும் கருத்தில் கொண்டுதான், நெருக்கடியிலும் கவலையிலும் வீட்டினரை ஆழ்த்துமளவுக்கு விருந்தினர் அங்கு தங்குதலாகாது என நபி(ஸல்) அவர்கள் வரம்பு கட்டினார்கள்.
இன்னும் சிலர் இருக்கின்றனர். விருந்து சாப்பிடப்போன இடத்தில் மூக்கு முட்டத்தின்று விட்டு, பின்னர் அந்தச் சாப்பாட்டைப் பற்றிக் குறையும் கூறுவார்கள். இதுமாதிரியான செயல் மிகவும் வெறுக்கத்தக்க தாகும்.

நபி(ஸல்) அவர்கள் ஒரு போதும் சாப்பாட்டைக் குறைகூறியது கிடையாது. அவர்களுக்குப் பிடித்திருந்தால் அதை உண்பார்கள். பிடிக்கவில்லை யென்றால் அதை உண்ணாதிருந்து விடுவார்கள் என்று அண்ணலாரின் அழகிய நடை முறையை அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறியத்தருகிறார்கள். நூல்: புகாரி

விருந்து வைபவங்களில் கலந்து கொள்வோரிடையே விருந்துச் சாப்பாட்டைக் குறை கூறி விமர்சிக்கும் பழக்கம் மலிந்து காணப்படுகிறது. ஏனைய சமுதாயங்களை விட இஸ்லாமியச் சமுதாயம் இதுபோன்ற விமர்சனங்களில் முன்னணியில் நிற்கின்றது. நபிகளாரின் நடைமுறையிலிருந்து இந்த வகையில் நாம் படிப்பினை பெறக் கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பிட்ட நேரத்துச் சாப்பாட்டுக்காக விருந்துக்குச் செல்கிறபோது யார் அழைக்கப்பட்டாரோ அவர் மட்டும் செல்லுவதே முறையாகும். அழைக்கப்படாத மற்றொருவரையும் சேர்த்துக் கொண்டு விருந்தளிப் பவருடைய இல்லத்திற்குத் திடுதிப்பெனச் செல்லுதல் கூடாது. அப்படியே செல்லுவதாயிருந்தால், வீட்டினரிடம் முன் அனுமதி பெற்றாக வேண்டும் என்பதையும் நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்துள்ளார்கள்.

அபூ ஷுஐப் என்று அழைக்கப்பட்ட ஒரு மனிதர் இருந்தார். அவருக்கு ஒரு கசாப்புக் கடைக்கார அடிமை இருந்தார். தன் அடிமையிடம், அல்லாஹ்வின் தூதரையும் அவர்களுடன் மற்றும் நான்கு பேரையும் நான் விருந்துக்கு அழைக்கின்றேன். எனவே அதற்காக உணவு தயாரிப்பீராக!'' என்று (அபூஷுஐப்) கூறினார்.

நபி(ஸல்) அவர்களுக்கும் மற்றும் நால்வருக்கும் அவர் அழைப்பு விடுத்தார். ஆனால் இன்னொரு மனிதரும் அவர்களைப் பின்தொடர்ந்து வந்தார்.

(என்னுடன் சேர்த்து) ஐந்து நபர்களைத்தான் நீர் அழைத்தீர். ஆனால் மற்றொருவரும் எங்களைப் பின் தொடர்ந்து வந்துள்ளார். நீர் விரும்பினால் இவரை ஏற்கலாம், நீர் விரும்பினால் இவரை மறுக்கலாம்'' என்றனர். நபி(ஸல்) அவர்கள் பரவாயில்லை, நான் அவருக்கும் அனுமதி வழங்குகின்றேன்'' என்றார் அவர். அறிவிப்பவர்: அபூமஸ்வூத் அல் அன்ஸாரி(ரலி) நூல்: புகாரி

விருந்தளிப்பவருக்கு எந்த வகையிலும் விருந்தினர் தொல்லை தருதல் கூடாது. விருந்துக்குச் சென்றால், காரியம் முடிந்ததும் புறப்பட்டுக் கிளம்பி வந்துவிட வேண்டும். அதை விடுத்து, போன இடத்திலேயே பொழுதெல்லாம் உட்கார்ந்து கொண்டு வீண் பேச்சுப் பேசிக்கொண்டிருத்தல் கூடாது. வீட்டுக்காரருக்கு ஆயிரம் வேலைகள் இருக்கக் கூடும். சில அவசர வேலைகளைக் கூட அவர்கள் நிறைவேற்ற முடியாமல், வீட்டில் ஆணி அடித்தாற்போல் அமர்ந்திருக்கும் விருந்தினர் எப்போது புறப்படுவார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பார்.

இது மாதிரியான நெருக்கடி நிலைக்கு வீட்டுக்காரர் களைக் கொண்டு வந்து நிறுத்தி விடாமல் விருந்துண்டு முடிந்ததும் புறப்பட்டு வந்துவிடுதலே நாகரிகமான நடைமுறையாகும். தலைக்கு மேல் அவசர வேலையா யிருக்கும் போது வீட்டுக்கு வந்த விருந்தினரிடம் எப்படி அதை எடுத்துரைத்து அவர்களைக் கிளப்புவது என்று வீட்டுக்காரர்கள் தயங்கக் கூடும். நபி(ஸல்) அவர்களுக்கு இம்மாதிரி ஒரு அனுபவம் ஏற்பட்டது.

அனஸ்(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
ஹிஜாப் பற்றி எந்த மனிதரையும் விட நான் (நன்கு ) அறிவேன், உபை இப்னு கஃபு அதுபற்றி என்னிடம் வினவினார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் மதினாவில் ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களை மணமுடித்து மணமகனாக இருந்தார்கள். சூரியன் உச்சியை அடைந்த பகல் வேளைக்குப் பிறகு இறைத்தூதர் அவர்கள் ஜனங்களை உணவு உண்ண அழைத்தார்கள்.

ஏனையோர் (உணவருந்திவிட்டு) எழுந்து சென்ற பின்னரும், இறைத்தூதர் அவர்கள் அமர்ந்திருக்க (அங்கிருந்து நகராமல்) சிலபேர் அவர்களுடன் அமர்ந்திருந்தனர். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து வெளியேறினார்கள், அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களின் அறைவாயிலை அடையும் வரை நானும் அவர்களைப் பின் தொடர்ந்து சென்றேன், (நகராமலிருந்த) அவர்கள் புறப்பட்டுப் போயிருக்கக்கூடும் என்று எண்ணிய நபி(ஸல்) அவர்கள் திரும்ப வந்தார்கள், நானும் அவர்களுடன் திரும்பினேன்.

அவர்கள் இன்னும் அந்த இடத்திலேயே அமர்ந்து கொண்டிருக்கிறார்கள். (எனவே) இரண்டாம் தடவையும் நபி(ஸல்) அவர்கள் ஆயிஷா(ரலி) அவர்களின் அறைவாயிலை அடையும் வரை, திரும்பிச் சென்றனர். நானும் அவர்களுடன் திரும்பிச் சென்றேன்.

பின்னர் அவர்கள் புறப்பட்டிருப்பார்கள் எனக் கருதிக் கொண்டு நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போது அவர்கள் எழுந்து போயிருந்தனர். அதன்பிறகு நபி(ஸல்) அவர்கள் எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு திரையை இட்டார்கள். (அப்போதுதான்) ஹிஜாபைப் பற்றிய இறைவசனம் அருளப்பட்டது. நூல்: புகாரி

விருந்து முடிந்த பின்னர் விருத்தளித் தவருடைய இல்லத்தில் அனாவசியமாக எப்படித் தங்கியிருத்தல் கூடாதோ, அது போலவே ஊருக்கு முந்தியே புறப்பட்டுப் போய், சாப்பாட்டை எதிர்பார்த்துக் கொண்டு விருந்தளிப்பவர் இல்லத்தில் பழிக்கிடை கிடக்கவும் கூடாது. இம்மாதிரியான செயல்பாடுகள் இல்லத்தினருக்குத் தொந்திரவு தரக்கூடும். அவர்கள் இதனை வெளிப்படையாக எடுத்துரைப்பதற்கு வெட்கப்பட லாம். எனவே, இடம் பொருள் ஏவல் அறிந்து இங்கிதமாக நடந்து கொள்ள வேண்டும் எனத் திருமறை குர்ஆன் எடுத்தியம்புகின்றது.

இறை நம்பிக்கையாளர்களே (உங்களுடைய நபி) உங்களை உணவருந்த அழைத்தாலன்றியும், அது சமையலாவதை எதிர்பார்த்தும் (முன்னதாகவே) நபியுடைய வீடுகளில் பிரவேசிக்காதீர். ஆனால் நீங்கள் அழைக்கப்பட்டீர்களா னால் (அங்கே) செல்லுங்கள். அன்றியும் நீங்கள் உணவருந்தி விட்டால் (உடன்) கலைந்து போய்விடுங்கள், பேச்சுக்களில் மனங் கொண்டவர்களாக (அங்கேயே) அமர்ந்துவிடாதீர், நிச்சயமாக இது நபியை நோவினை செய்வதாகும். இதை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுவார், ஆனால் உண்மையைக் கூற அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. அல்குர்ஆன் 33:53

நபி(ஸல்) அவர்களின் இல்லத்திற்குச் செல்லும் நபித் தோழர்கள் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதற்கு வழிகாட்டுவதற்காக இத்திருவசனம் சிறப்பாக அருளப்பட்டது. இருந்தபோதிலும் பிறர் இல்லங்களுக்குச் செல்கிற போது நாம் எப்படி நாகரிமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்குரிய பொதுவான வழி காட்டுதல்களை இதன் வாயிலாக நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள முடிகிறது.


நிறைவாக....... நிம்மதியாக....

குடும்பத்தினர் ஒவ்வொருவரும் மனநிறைவையும் நிம்மதியையும் பெற்று வாழ்கிற போது தான் இல்வாழ்க்கையின் நோக்கம் இனிது நிறைவேறுகிறது. .குடும்பத்துக்குள்ளே ஒருவருக்கொருவர் சண்டை சச்சரவிட்டுக் கொண்டு முகம் கொடுத்துப் பேசாமல், ஒரே கூரையின் உள்ளே காலந்தள்ளுவது போன்றதொரு அவஸ்தை வேறெதுவும் இருக்கமுடியாது.

கணவன் மனைவி ஆகியோர் தங்களுக்கிடையேயுள்ள பரஸ்பரக் கடமைகளை முழுமனதுடன் நிறைவேற்றுதல் வேண்டும். பெற்றோருக்கும் பிள்ளை களுக்கும் ஆற்ற வேண்டிய கடமைகள் இதனைத் தொடர்ந்து அமைகின்றன. உடன்பிறந்தோர், உற்றார், உறவினர், விருந்தினர், அண்டை அயலவர், ஏழை எளியோர், அநாதைகள், வழிப்போக்கர்கள் முதலியோருக்கு ஆற்ற வேண்டிய பொறுப்புக்களும் கணிசமாக இருக்கின்றன.

இவற்றையெல்லாம் இனிது நிறைவேற்ற வேண்டுமானால் குடும்பத்துக்குள்ளே முதன் முதலில் நிம்மதியும் நிறைவும் நிலவ வேண்டும். இந்த நிம்மதியைப் பெறுவதற்கு ஏற்ற இல்லம் கூட்டுக் குடும்பமா? தனிக்குடித்தனமா?

திருமணவாழ்க்கையின் தலையாய பயன்யாது? கணவனும் மனைவியும் தம்முள் கலந்திருந்து நிம்மதி பெறவேண்டும், ஒருவருக்கொருவர் அன்பையும் பரிவையும் பரிமாறிக்கொண்டு ஒருவரில் ஒருவர் ஆறுதல் பெறவேண்டும் எனத் திருமறை குர்ஆன் (30:21) கூறுகிறது. ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாக இணைந்து வாழ்தலின் மூலம் சந்ததிப் பெருக்கத்தை ஏற்படுத்துகின்றனர் என்பதுவும் திருமணவாழ்வின் நோக்கமாகும் என்கிறது திருமறை (4:1).

குடும்ப வாழ்வில் சந்ததியைப் பெறுகிறோம். ஆனால் நிம்மதியைப் பெறுகின் றோமா? குடும்பக் கட்டுமானங்களில் காணப்படும் முட்டுக்கட்டைகள் நிறைவான நிம்மதிக்குப் பங்கம் ஏற்படுத்துகின்றன. கூட்டுக் குடும்பம் என்பது கணவன் மனைவியரின் இனிய இல்வாழ்வுக்கு ஒரு தடை மேடாக அமைகின்றதோ?

கணவனுடைய தாய், தந்தை, அண்ணன்மார், தம்பி, தங்கைகள் அடங்கிய பெரியதோரு குடும்பத்துக்குள்ளே புதிதாக மணம் முடித்துவரும் பெண்ணும் மாட்டிக்கொண்டு, பல இல்லங்களில் படாதபாடுபடுகின்றாள். மாமனும் மாமியும் நன்கு திடகாத்திரமாக இருப்பர், முன்பே திருமணம் முடித்துக் குழந்தைகளைப் பெற்றிருக்கின்ற கணவனின் அண்ணன்மார் குடும்பமும் அங்கேயே இருக்கும். ஏற்கனவே புகுந்த வீட்டுக்குப்போன நாத்தனாரின் நாட்டாமை அவ்வப்போது தலை யெடுக்கும். திருமணப் பருவத்திலிருக்கின்ற கணவனின் தம்பிகள், தங்கைகள் சிலர் இருப்பர். இப்படிப்பட்ட ஒரு பெரிய உறவு வலைப் பின்னலைத்தான் கூட்டுக் குடும்பம் என்கிறோம்.

இது மாதிரியான பெரும்பான்மைக் கூட்டுக் குடும்பங்களில் சண்டை சச்சரவுகள் தாம் மேலோங்கியிருக்கும். இங்கெல்லாம் கணவன் மனைவியருக் கிடையே உள்ள உறவுகளில் கூட உரசல்கள் எழுந்து கொண்டே இருக்கும். அமைதியும் மகிழ்ச்சியும் நிலவ வேண்டிய தாம்பத்திய வாழ்க்கையில் மனக்கசப்பும் கவலையும் குடி புகுந்து விடும். இது மாதிரியான அமைதியற்ற சூழ்நிலைகளுக்கு நடுவிலும் கூட்டுக் குடும்பத்தையே தான் பற்றிக் கொண்டு தொங்க வேண்டுமா?
கணவன் மனைவியருக்கிடையே உள்ள விவாக பந்தத்தில் நிம்மதியில்லை, மனஅமைதியில்லை என்றிருக்குமானால் கடைசித் தீர்வாக விவாக விலக்கினை மேற்கொள்ளலாம் என்றிருக்கும் போது, கூட்டுக் குடும்பத்தில் நிம்மதியில்லை என்ப தற்காகத் தனிக்குடித்தனம் போய் நிம்மதியடைவதில் என்ன தவறு இருக்க முடியும்?
சில பேற்றோர், திருமணம் முடித்த மகன், மருமகளுடன் தனிக் குடித்தனம் செல்லுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மகனுக்குத் தலையணை மந்திரம் ஓதி, மருமகள்தான் இந்த ஏற்பாட்டுக்குத் துணை போகிறாள் என்று மருமகள் மீது கரித்துக் கொட்டுவர்.

இதே பெற்றோர் தம் புதல்வியருக்கு மணம் முடித்துக் கொடுத்ததும் என்ன நினைக்கின்றனர்? தம் அருமை மகள் கணவனுடைய வீட்டில் கூட்டுக் குடும்பத்தில் கிடந்து நசுங்காமல், தனிக் குடித்தனம் போய்விட வேண்டுமே எனக் கச்சை கட்டிச் செயல்படுகின்றனர். பெற்றோரின் இந்த முரண்பட்ட மனோபாவம் அநீதி மிக்கதாகும்.

கூட்டுக் குடும்பத்தில் மாட்டிக் கொண்ட மருமகளை, அவளது பிறந்த வீட்டுக்குச் சென்று வரத் தடை விதிப்பார்கள். அதே நேரத்தில் மணம் முடித்துக் கொடுக்கப்பட்ட தங்கள் மகளைத் தங்கள் வீட்டிலேயே அதிக நாட்கள் தங்க வைப்பதில் ஆனந்தம் கொள்வர். இந்தப் பாரபட்சமான மனப் போக்கையும் பல பெற்றோரிடம் பார்க்கின்றோம்.

திருமணம் முடித்துக் கொண்டவர்கள் தனித் தனியாகக் குடித்தனம் நடத்துவதே சாலச் சிறந்தது. பெற்றோர் திடகாத்திரத்துடன் இருக்கின்றனர். பிறர் தயவின்றி, அவர்களால் வாழ முடிகிற இந்நிலையில் மணமான மகன்கள் பலர் பெற்றோருடைய இல்லத்திலேயே சேர்ந்துதான் குடியிருக்க வேண்டும் என வற்புறுத்துவது நியாயமாகாது. மகன், தன் மனைவியுடன் தனிக் குடித்தனம் செல்ல விரும்புகின்ற போது, துடிப்போடு இருக்கின்ற பெற்றோர் அதற்குத் தடை போடுகின்றனர். இத்தகைய எதிர்மறை மனப் போக்கைப் பெற்றோர் தளர்த்திக்கொண்டு, தனிக் குடித்தனம் செல்லவிரும்பும் மகனுக்குத் தாங்களே முன்னின்று வழிவகை செய்து கொடுத்தல் வேண்டும்.

சுதந்திரமாக இயங்கும் ஆற்றலுடைய பெற்றோரைப் பிரிந்து சென்று பிள்ளைகள் தனியாக வாழ்வதால் யாருக்கும் பெரிதாகப் பாதிப்பு ஏற்படப் போவதில்லை. இங்ஙனம் தனித்தனி இல்லங்களில் வாழ்ந்து கொள்ளலாம் என்பதற்குத் திருமறை குர்ஆனிலும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.

நீங்கள் உங்கள் சொந்த வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தைமார் வீடுகளிலோ அல்லது உங்கள் தாய்மார் வீடுகளிலோ அல்லது உங்கள் சகோதரர் வீடுகளிலோ அல்லது உங்கள் சகோதரிகள் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரர்கள் வீடுகளிலோ அல்லது உங்கள் தந்தையின் சகோதரிகள் வீடுகளிலோ அல்லது உங்கள் தாயின் சகோதரர் வீடுகளிலோ அல்லது உங்கள் தாயாரின் சகோதரிகள் வீடுகளிலோ அல்லது எ(ந்த வீட்டுடைய) தன் சாவிகள் உங்கள் வசமிருக்கின்றதோ (அதிலும்) அல்லது உங்கள் தோழரின் வீடுகளிலோ நீங்கள் சேர்ந்தோ அல்லது தனித்தனியாகவோ புசிப்பது உங்கள் மீது குற்றமாகது அல்குர்ஆன் 24:61

பெற்றோர், சகோதரர்கள், சகோதரியர் முதலானோர் தனித்தனி இல்லங்களில் குடித்தனம் நடத்துவதில் தவறு காணவியலாது. சொல்லப்போனால் இங்ஙனம் தனித்தனி வீடுகளில் வாழ்கிற போது குடும்பங்களிடையே நல்லுறவு மேன்மேலும் ஓங்கித் திகழ முடியும். இதை விடுத்து, எல்லோரும் ஒரே கூரைக்குள்ளேயே கட்டி உருண்டு கொண்டிருக்கும்போது மனத்தாங்கல்களுக்கும் உறவு விரிசல்களுக்குமே அது இடங் கொடுக்கக் காண்கிறோம். ஒன்று சேர்ந்திருந்து தினம் சண்டை போடுவதை விடப் பிரிந்திருந்து அன்பு பாராட்டுவதே மேலாகும். சின்னஞ் சிறிய இல்லத்தில் கூட்டுக் குடும்பத்தில் நெளிந்து கொண்டிருக்கும் தம்பதிகளின் அவலநிலை சொல்லிமாளாது.

உங்கள் மனைவியர் உங்கள் விளை நிலங்கள், உங்கள் விருப்பப்படி உங்கள் விளை நிலங்களுக்குச் செல்லுங்கள். அல்குர்ஆன்:2:223

அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கிறீர்கள். அல்குர்ஆன் 2:187

ஃபஜ்ருத் தொழுகைக்கு முன்னரும், நீங்கள் உங்கள் (மேல்மிச்சமான) உடைகளைக் களைந்திருக்கும் லுஹர் நேரத்திலும், இராத்திரித் தொழுகைக்குப் பின்னரும் ஆகிய இம்மூன்று நேரங்களும் உங்களுக்காக (அமையப் பெற்ற) மூன்று அந்தரங்கவேளைகளாகும் அல்குர்ஆன் 24:58

திருமறையாம் இறை நெறி இப்படியெல்லாம் கணவன் மனைவியரின் தாம்பத்திய உறவுக்கு வழிமொழிந்து நிற்கின்றது. ஆனால் கூட்டுக் குடும்பத்தில் உழல்வோர் திருமறை கூறும் இந்த அன்னியோன்னிய நிலையிலிருந்து அன்னியப் பட்டுப் போகின்றனர். அவர்களுடைய மனம் அன்னியோன்னியத்தை விரும்பினாலும் குடும்பப் பின்னணி அதற்கு இடம் கொடுப்பதில்லை.

எண்ணியதை ஈடேற்ற முடியாத இத்தகையதொரு மன ஏமாற்ற நிலைக்கு நிர்ப்பந்திக்கப்படுவோர், ஒருவர் மீது ஒருவர் எரிந்து விழுகின்றனர். உளவியல் ரீதியாக இவர்கள் காயம்பட்டுக் கொதிப்படைகின்றனர். இளந்தம்பதிகளின் இந்த உள்மன ஆதங்கத்தைப் பெற்றோர் எண்ணிப்பார்க்கக் கடமைப்பட்டுள்ளனர். பெரும்பான்மையான குடும்பங்களில் ஏற்படுகின்ற சண்டை சச்சரவுகளுக்கு மேலோட்டமாகப் பல்வேறு சல்லிவேர்க்காரணங்கள் கற்பிக்கப்பட்டாலுங் கூட, கண்ணுக்குத் தெரியாத ஆழமான ஆணி வேர்க் காரணம் இதுவாகத் தானிருக்கும்.

தாம்பத்திய ஒழுக்கத்தில் மட்டுமன்றி, மனித உறவு நிலைகளிலும் கூட்டுக் குடும்பம் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. கணவனின் சகோதரர்கள், நாத்தனார் களின் கணவர்கள் போன்றோர் கூட்டுக்குடும்பத்தில் சகஜமாக நடமாடுவர். இவர்களுக் கிடையே பெண் ஒருத்தி சதாசர்வ காலமும் ஹிஜாப் ஆடையுடனேயே வீட்டிற் குள்ளும் உலவி வர வேண்டிய கட்டாயம் ஏற்படுகின்றது.

வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது ஹிஜாபைப் பேணும் பெண்கள், வீட்டிற்குள்ளாவது சற்று சுதந்திரமாக, மேல்மிச்சமான ஆடைகளின்றி இருக்கலாம் என எண்ணக்கூடும், இந்த எண்ணத்திற்குக் கூட்டுக் குடும்பம் வேட்டு வைக்கின்றது. மார்க்கத்தில் அதிகப் பிடிப்புடைய ரொம்பவும் அரிதான சில பெண்களால் மட்டுமே இத்தகைய நிலையிலும் ஹிஜாபைப் பேண முடிகின்றது.

ஏனைய பெண்கள் வீட்டுச் சூழலில் கணவனின் சகோதரர் முன்னிலையில் ஹிஜாபைப் பேணாமல் சாதாரணமாகத் தோற்றமளிப்பதற்கு இந்தக் கூட்டுக்குடும்ப நெருக்கடி வழி வகுத்து விடுகின்றது. இப்படிப்பட்ட சந்தர்ப்பச் சூழ்நிலைகளின் காரணமாகக் கணவரல்லாத ஆண் உறவினர்களின் வக்கிரப்பார்வைக்குப் பெண்கள் இலக்காகின்றனர். இதன் முற்றிய தீய விளைவுகளைச் சமுதாயத்தில் அவ்வப்போது பார்த்து வருகின்றோம்.

ஒரே சமையல் நடைபெறும் கூட்டுக் குடும்பத்தில் பல பெண்கள் வீட்டிலிருக்கும் போது வீட்டுப்பணிகளைப் பகிர்வதில் பெண்களுக்கிடையே மனப்புகைச்சல் கள் உருவாகின்றன. பொருளாதாரப் பகிர்வில் ஆண்களுக் கிடையே அபிப்பிராய பேதங்கள் ஏற்படுகின்றன. குழந்தைச் சண்டைகள் பெரிய மனிதர்களின் மண்டைக் குழப்பத்தை அதிகரிக்கின்றன. மனைவிமார்களின் தலையணை மந்திரங்களுக்கு இவையெல்லாம் சாதகமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கின்றன. அன்பான ரம்மியமான குடும்ப உறவுகள். இதன் காரணமாகச் சிதறிச் சின்னா பின்னப்பட்டுப் போகின்றன.

இவ்வாறு பல்வேறு கோணங்களிலிருந்து எண்ணிப் பார்க்கின்ற போது தனிக்குடித்தனத்தால் சாதகமான அம்சங்கள் ஏராளமாக இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், தாமே சுயமாக வாழவியலாத, பொருளாதாரத் தேவைகள் முதல், பிற தேவையனைத்திற்கும் தம் பிள்ளைகளையே சார்ந்து வாழவேண்டிய நிலையிலிருக்கின்ற வயது முதிர்ந்த பெற்றோர் நிலையையும் இங்குக் கருதிப் பார்த்தல் வேண்டும்.

பல்வேறு சகோதர, சகோதரியரின் குடும்பங்களுக்குள்ளே தாமும் கூட்டுக் குடும்பம் நடத்தாமல் விலகிப்போய்த் தனிக் குடித்தனம் நடத்துவதில் தவறில்லை. அதே நேரத்தில் வயது முதிர்ந்த பெற்றோரை ஒதுக்கி வைத்து விட்டு, தான் மட்டும் தன் மனைவி பிள்ளைகளுடன் தனிக்குடித்தனம் நடத்துவது மாபெரும் தவறாகும்.

வயது முதிர்ந்த நிலையிலும் ஆரோக்கியத்துடன் தாமாகவே தனித்து இயங்கும் பெற்றோர்களாயிருக்கலாம். இந்தப் பெற்றோர் தனி இல்லத்தில் வாழலாம், இவர்களுடைய புதல்வர்கள் அடிக்கடித் தம் பெற்றோரைப் பார்த்து வேண்டிய உதவி ஒத்தாசைகளைக் கண்டிப்பாக நல்கி வருதல் வேண்டும்.

ஆரோக்கியமற்ற நிலையில் அடுத்தவர் உதவியை எதிர்பார்த்து வாழ்கின்ற பெற்றோரைத் தனியே விட்டு விடுதல் கூடவே கூடாது. இவர்களுக்குப் பல புதல்வர்கள் இருப்பார்களாயின், இம்முதியோரைக் கவனிக்க வேண்டிய பொறுப்பினை அனைத்துப் புதல்வர்களும் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும்.

உடல் ஆரோக்கியமற்ற, பொருளாதார வசதியில்லாத, தாமே தனித்து இயங்க முடியாத பெற்றோர்களாயிருந்தால், அவர்களுடைய இல்லத்தில் பிள்ளைகள் தங்கியிருந்தோ, அல்லது தமது இல்லத்துக்குப் பெற்றோரைத் தருவித்தோ அவர்க ளுடன் சேர்ந்திருந்து பணி விடை புரிந்தாக வேண்டும்.

இறையச்சமுடைய பல புதல்வர்கள் இருக்கும் பட்சத்தில், தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு, பெற்றோரைப் பராமரிக்க முனைந்திடுவர், ஒரே ஒரு புதல்வர் மட்டும் இருப்பாராயின், முதிய பெற்றோரைப் பராமரிக்கும் முழுப் பொறுப்பும் அவருக்கே உரியதாகின்றது. இஸ்லாத்தின் பார்வையில் தனிக்குடித்தனம் என்பது முதிய பெற்றோர் உள்ளிட்ட தனிக் குடித்தனத்தையே குறிப்பதாகும். இறை மறை குர்ஆன் இதனை உறுதி செய்கிறது.

அவனையன்றி (வேறு எவரையும்) நீர்வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான், அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமையடைந்து விட்டால், அவர்களைச் சீ''என்று சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடமிருந்து) விரட்டவேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!

இன்னும், இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக! மேலும், என் இறைவா! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது என்னை அவ்விருவரும் வளர்த்தது போல, நீயும், அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக! என்றும் கூறிப் பிரார்த்திப்பீராக! என்பது இறைவழிகாட்டுதலாகும். அல்குர்ஆன் 17:23,24

பெற்றோரைப் பேணுவது ஆண்மக்களுக்கு மட்டும் உரிய கடமையன்று. பெண்களுக்கும் உரித்தானதாகும், பெண் மக்களை மட்டுமே பெற்றெடுத்தவர்கள் தள்ளாத முதுமையடையும் போது, அவர்களைப் பராமரிக்கின்ற பொறுப்பை அந்தப் பெண் மக்கள் ஏற்றல் வேண்டும்.. இந்தப் பெண்களின் கணவர்கள் இவ்விஷயத்தில் பெருந்தன்மையுடனும் மனிதாபிமானத்துடனும் நடந்து கொள்ளுதல் வேண்டும்.

பெண் குழந்தைகளை விட ஆண் குழந்தைகளைப் பெறவே பெற்றோர் பெரிதும் ஆசைப்படுகின்றனர். ஆனால் பின்னாளில் என்ன நடக்கிறது? எந்த ஆண்பிள்ளைகளைப் போற்றி வளர்த்தார்களோ அவர்கள், முதிய பெற்றோரைக் கைவிட்டுப் போய் விடுகின்றனர். ஆனால் புகுந்த வீட்டுக்குச் சென்ற பெண்கள்தாம் தங்கள் முதிய பெற்றோருக்குப் பெரிதும் பணிவிடை புரிகின்றனர். உலக நடப்பில் இதுபோன்ற நிகழ்ச்சிகளைப் பரவலாகக் காண்கிறோம்.

அஸ்மா பின்த் அபூபக்கர்(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி(ஸல்) அவர்கள் காலத்தில் என்னுடைய தாயார் என்னிடம் வந்தார். அவர் இறை வனுக்கு இணை வைப்பவராக இருந்தார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம், இறைத்தூதர் அவர்களே! என்னுடைய தாய் இஸ்லாத்தின் மீது வெறுப்புக் கொண்ட நிலையிலே என்னிடம் வந்துள்ளார். அவரை நான் அரவணைத்துக் கொள்ளட்டுமா? என்று கேட்டேன். அப்போது நபியவர்கள் ஆமாம் உன்னுடைய தாயாரைச் சேர்த்து அரவணைத்துக் கொள்' என்று கூறினார்கள். நூல்: புகாரி, முஸ்லிம்

முதிய பெற்றோரைப் பேண வேண்டிய பொறுப்பு, பெண்மக்களுக்கும் இருக்கிறது என்பதை இந்நபிமொழி எடுத்துரைக்கிறது. இஸ்லாத்தின் மீது வெறுப்புக் காட்டுகின்ற இயல்புடையவராயிருப்பினும் அவர்களைப் பிள்ளைகள் வெறுத்து விடாமல், பரிவு காட்டிப் பராமரித்திடுதல் வேண்டும் என்பதையும் இதனால் அறிகிறோம்.

குர்ஆனும் ஹதீஸும் குடும்ப வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனவோ, அந்த அடிப்படையில் குடும்ப இயல் அமையும் போது இவ்வுலகிலும் மறுவுலகிலும் மனிதன் நிம்மதியடைகிறான், நிறைவு பெறுகிறான். குர்ஆன், ஹதீஸ் பற்றி எனக்குக் கவலையில்லை. எனது பெற்றோர் என்ன சொல்கிறார்களோ அதன்படியே நான் செயல்படுவேன், என் மனைவி பிள்ளைகளின் விருப்பங்கள் எப்படியோ அதற்கேற்பத்தான் நான் நடந்து கொள்வேன் என்று கூறுபவர்களையும் பார்க்கின்றோம்.

குடும்பத்தினரின் திருப்திக்காக குர்ஆன் ஹதீஸை மறந்து வாழ்ந்தவர்கள், நாளை மறுமையின் தீர்ப்பு நாளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்படுவர். இந்த உலகில் எந்த மனைவிமக்களுக்காகவும், உற்றார் உறவினர்களுக்காகவும் குர்ஆன் ஹதீஸை மறந்து வாழ்ந்தார்களோ, அந்தக் குற்றவாளிகள் , தான் உயிரினும் மேலாக நேசித்தத் தாய் தந்தையரையும், மனைவி மக்களையும், இன்னும் உலகப் பொருட்கள் அனைத்தையும் பகரமாகக் கொடுத்தேனும் மறுமை வேதனையிலிருந்து தப்பிக்க விரும்புவர் எனத்திருமறை கூறுகிறது.

குற்றவாளி அந்த (இறுதி) நாளில் தன்னுடைய வேதனைக்குப் பகரமாகத் தன்னுடைய மக்களையும் தன்னுடைய மனைவியையும் தன்னுடைய சகோதரனையும் தான் அரவணைத்துக் கொண்டிருந்த தன்னுடைய சுற்றத்தாரையும், இன்னும் பூமியிலுள்ள யாவையுமே கொடுத்தேனும் தன்னை இரட்சித்துக் கொள்ள விரும்புவான் அல்குர்ஆன் :70:11-14

அந்த நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் தன் தாயை விட்டும்,தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும் வெருண்டு ஓடுவான். அந்நாளில் ஒவ்வொரு மனிதனுக்கும் மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலையே போதுமானதாயிருக்கும். அல்குர்ஆன் 80:34-37

இந்தத் திருமறை வசனங்களை நெஞ்சில் நிலை நிறுத்தி, நாமும் நம் குடும்பமும் இறைவழிகாட்டுதல்படி வாழ்வோமேயானால், இம்மையில் சில சோதனைகளிருந்தாலுங்கூட, மறுமையின் நிலைத்த வாழ்வில் நாம் நிறைவான சாந்தியையும் நிலையான மகிழ்ச்சியையும் பெற முடியும் என்பதில் ஐயமில்லை. திருமறை குர்ஆனில் ஏக இறைவன் நமக்கு இதற்கான உத்தரவாதத்தை வழங்குகின்றனான்.

என்னுடைய அடியார்களே! இந்நாளில் உங்களுக்கு எவ்விதப் பயமுமில்லை, நீங்கள் துக்கப்படவும் மாட்டீர்கள்(என்று கூறப்படும்). இவர்கள் நம்முடைய வசனங்கள் மீது நம்பிக்கை கொண்டு (நமக்கு) முற்றிலும் வழிபட்டு நடந்தவர்களாக இருந்தனர். (எனவே) நீங்களும் உங்கள் மனைவியரும் மகிழ்வடைந்தவர்களாகச் சுவர்க்கத்தில் நுழையுங்கள் (என்று மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்). அல்குர்ஆன் 43:68-70

நிலையான (அந்த) சுவனபதிகளில் இவர்களும், இவர்களுடைய தந்தையரில், இவர்களுடைய மனைவிமார்களில், இவர்களுடைய சந்ததியினரில் (சன்மார்க்கத்திற்கு) இசைந்து யார் நடந்தார்களோ அவர்களும் நுழைவார்கள், மலக்குகள் ஒவ்வொரு வாயில் வழியாகவும் இவர்களிடம் வருவார்கள். அல்குர்ஆன் 13:23

திருமறை குர்ஆனின் இவ்விரு வசனங்களும் சிந்திப்பதற்குரியன. இவ்வுலகில் வாழும்போது ஏக இறைவனை நம்பி இஸ்லாம் காட்டித்தந்தது போன்று வாழ்வின் அனைத்து அம்சங்களையும் அமைத்துக் கொண்டவர்களுடைய குடும்பத்தினருக்கு இறைவன் வழங்கும் மகத்தான பாக்கியங்களை இத்திருவசனங்கள் எடுத்தியம்புகின்றன. மனித வாழ்க்கை இவ்வுலகோடு முடிந்து விடுவதன்று. மரணத்திற்குப் பின் மனிதனுக்கு முடிவில்லாத மறுவுலக வாழ்க்கை ஒன்று காத்திருக்கிறது. அந்த மறுவுலக வாழ்க்கையில் மனிதன் நிறைவும் நிம்மதியும் பெறவேண்டும். அதுவே மனிதனின் பிறவிப் பயனாகும்.

மறுவுலக நிம்மதியே ஒரு முஸ்லிமின் முக்கியக் குறிக்கோள் எனும் போது, அந்த நிம்மதியையும் நிறைவையும் தேடி மேற்கொள்ளும் பயணம் போன்றதே இவ்வுலக வாழ்க்கை எனலாம். இந்த வாழ்க்கைப் பயணத்தில் மேடுபள்ளங்களாக எத்தனை இன்பதுன்பங்கள் எதிர்பட்டாலும் அவற்றையெல்லாம் அழகிய முறையில் சகிப்புத்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு, இஸ்லாமிய நெறியிலிருந்தும் சறுகிவிடாமல் குடும்பவாழ்க்கையை அமைத்துக்கொள்ளுதல் வேண்டும்.

குடும்பங்கள் இவ்விதம் சீர்பெறுகிற போது சமுதாயம் சீர்பெறுகிறது. இதை மறந்து வாழும்போது குடும்பம் சீர்குலைகிறது, அதன் காரணமாக ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்குலைந்துபோகிறது.

இவ்வுலகில் மனிதசமுதாயத்தின் வாழ்க்கை சீரும் செம்மையும் பெறவேண்டுமானால், சமுதாயத்தின் அடிப்படை அங்கமாக இருக்கின்ற குடும்பங்கள் சீர் பெற்றாகவேண்டும். இஸ்லாம் காட்டித்தருகின்றவண்ணம் குடும்பவாழ்க்கை அமைகிறபோது, இவ்வுலக வாழ்க்கையில் குடும்பங்கள் நிறைவையும் நிம்மதியையும் பெறுகின்றன. என்றென்றும் நிலைபேறுடையதாகத் திகழும் மறுமை வாழ்க்கையிலும் மனிதர்கள் தத்தம் குடும்பத்தினருடன் மகிழ்வோடிருப்பர். எனவே மறுமையின் நிறைவையும் நிம்மதியையும் பெறத்தக்க வகையில் நம் குடும்பவாழ்க்கையை இஸ்லாமியநெறிப்படி அமைத்து, நம்மை நாமே காப்பாற்றிக்கொள்வோமாக!
Previous Post Next Post