“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள்

“தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற இரு சொற்களுக்குமிடையான வேறுபாடுகள்.

பொதுவான மனிதன், சிலவேலை பாவங்களை தெரிந்தோ அல்லது தெரியாமலோ செய்யக்கூடியவனாகவே இருக்கின்றான். ஆதலால் அல்லாஹுத்தஆலா தன்அடியார்களின் பாவங்களை எப்பொழுதும், எச்சந்தர்ப்பத்திலும் மன்னிப்பதற்காக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றான். மேலும், அப்படி பாவமன்னிப்பு வேண்டுபவர்களை தான்விரும்புவதாகவும் அல்குர்ஆனிலே பின்வருமாறு பிரஸ்தாபிக்கின்றான்;

اِنَّ اللّٰهَ يُحِبُّ التَّوَّابِيْنَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِيْنَ‏ (البقرة : 222)

“நிச்சயமாக அல்லாஹுத்தஆலா பாவங்களை விட்டு மீள்பவர்களை நேசிக்கின்றான். இன்னும், தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.” (அல்பகரா 222)

وَهُوَ الَّذِىْ يَقْبَلُ التَّوْبَةَ عَنْ عِبَادِه وَيَعْفُوْا عَنِ السَّيِّاٰتِ وَيَعْلَمُ مَا تَفْعَلُوْنَ (الشورى : 25)

”அவன்தான் தன் அடியார்களின் பாவமன்னிப்பு கோறுதலை ஏற்றுக்கொள்கின்றான், அவர்களின் குற்றங்களை மன்னிக்கின்றான். இன்னும், நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.” (அஷ்ஷுறா 25)

எனவே, “பாவமன்னிப்பு” என்ற தமிழ் சொல்லுக்கு அரபு பரிபாசையில் பலதரப்பட்ட சொற்கள் பயன்படுத்தப்பட்டாலும். அதிலும் அதிகமாக பரவலாக “தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” என்ற சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. என்றாலும் இந்த இரண்டு சொற்களும் ஒரே கருத்துப்பட இருந்தாலும் அவைகள் இரண்டுக்குமிடையில் வேறுபாடு காணப்படுகின்றன. அந்த அடிப்படையில் அவை இரண்டுக்குமிடையிலான வேறுபாடு என்ன என்பதைப் பார்ப்போம். இன்ஷா அல்லாஹ்,

தௌபா: “தௌபா” என்றால் “பாவமன்னிப்பு” என்றாலும். அதற்கு நான்கு நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு வினவப்படுகின்றபோதே அது ‘தௌபா’வாக கருதப்படும். அவைகளில் மூன்று நிபந்தனைகள் பொதுவானவையாகவும் , ஒரு நிபந்தனை ”ஹுகூகுல் இபாத்” அதாவது மனிதர்களுக்கு மத்தியிலுள்ள உரிமைகளுடன் தொடர்புபட்டதாகும். அவைகளாவன,
முதலாவது: தான் செய்த பாவத்தை நினைத்து பரிதாபப்படுவது.
இரண்டாவது: அப்பாவத்தை விட்டு முழுமையாக நீங்குவது.
மூன்றாவது: அப்பாவத்தை நோக்கி மீண்டும் ஒருபோதும் செல்லமாட்டேன் என்ற உறுதிப்பாடு.
நான்காவது: ஒரு மனிதன் மற்றொரு மனிதனுக்கு தீங்கிழைத்துவிட்டால். பாதிக்கப்பட்ட மனிதனிடம்போய் மன்னிப்புக்கோர வேண்டும். இல்லை என்றால் அதுவரை அல்லாஹுத்தஆலா மன்னிக்க மாட்டான்.
இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு நடக்கக்கூடிய பாவமன்னிப்பிற்கே “தௌபா” என்று கூறப்படும்.

இஸ்திஃபார்: “இஸ்திஃபார்” என்ற சொல்லுக்கும் தமிழில் “பாவமன்னிப்பு” என்றே கூறப்படும். சிலவேலை இஸ்திஃபார் என்பது மேலே கூறப்பட்ட தௌபாவாகவும் இருக்கலாம். சிலவேலை நமது நாவினால் கூறக்கூடிய வார்த்தைகளாகிய “அஸ்தஃபிருல்லாஹ்” (أسْتَغْفِرُ اللهَ) அல்லது ”அல்லாஹும்ம இஃபிர்லீ” (اللَّهُمَّ اغْفِرْ لِي) என்பதாகவும் இருக்கலாம். எனவே, தௌபாவுடைய நிபந்தனைகள் இஸ்திஃபாரிலே ஒன்று சேர்ந்தால் அந்த இஸ்திஃபாரை “தௌபா” என்றும் அழைக்கலாம். அப்படி தௌபாவின் நிபந்தனைகள் இன்றி கேட்கப்படும் பாவமன்னிப்பு “இஸ்திஃபார்” என்று கூறப்படும்.

ஏனெனில், பாவம் செய்தவன் தனது பாவத்தை நினைத்து கவலைப்பட்டு “யா அல்லாஹ் என்னை மன்னிப்பாயாக” (اللَّهُمَّ اغْفِرْ لِي) , (أسْتَغْفِرُ اللهَ) என்று நாவினால் கூறுவான், ஆனால் அதன் பிறகு அப்பாவத்தை விட்டு விலகி, அதன்பால் செல்லக்கூடாது என்ற எண்ணம் இருந்தாலும் அது தௌபாவைப்போன்று உறுதியான எண்ணமாக இருக்காது. அந்த அடிப்படையிலேயே அவனுடைய நாவிலிருந்து, “அஸ்தஃபிருல்லாஹ்” அல்லது “அல்லாஹும்ம இஃபிர்லீ” போன்ற வார்த்தைகள் வெளிவரும்.

எனவே, தௌபா என்பது பாவத்திலிருந்து முழுமையாக நீங்கி தனது இறைவனிடத்தில் முழுமையாக மீள்வதையும், இஸ்திஃபார் என்பது அல்லாஹ்விடத்தில் தனது பாவத்திற்கான மன்னிப்பு வேண்டுவதை நாடுவதையும் குறிக்கும்.

அதேபோன்று அவை இரண்டுக்கும் மத்தியிலான மற்றுமொரு வேறுபாடு என்னவென்றால்; “தௌபா”வைப் பொருத்தவரை அதற்கு என்று குறிப்பிட்ட நேரம் இருக்கின்றது. அந்த குறிப்பிட்ட நேரத்துடன் முடிவடைகின்றது. ஆனால் “இஸ்திஃபார்” அதனைப் பொருத்தவரை அதற்கு என்று குறிப்பிட்ட நேரம் கிடையாது. ஆதலால்தான் மரணித்தவர்களுக்கு “இஃதிஃபார்” கேட்கப்படும். ஆனால், அவர்களுக்கான “தௌபா” அவர்களுடைய தொண்டைக்குழியை அடைய முன்னர் அவா்களாகவே கேட்கலாம் அதன்பிற்பாடு கேட்கமுடியாது, கேட்டாலும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

அதேபோன்று மற்றுமொரு வேறுபாடுதான் “தௌபா”வை உரிய நபரே கேட்கவேண்டும். அவருக்குப் பகரமாக அவருடைய பிள்ளைகளோ, பெற்றோர்களோ, நண்பர்களோ கேட்கமுடியாது. ஆனால் “இஸ்திஃபார்” அதனைப் பொருத்தவரை ஒருவருக்காக மற்றவர் கேட்கமுடியும். அந்தஅடிப்படையிலே ஒரு மனிதன் மற்ற மனிதனுக்கும், மலக்குமார்கள் மனிதர்களுக்கும், மனிதர்களுக்காக கடல்வால் உயிரிணங்களும் “இஸ்திஃபார்” கேட்கின்றன.

மற்றுமொரு வேறுபாடு “இஸ்திஃபார்” என்பது நடைபெற்ற பாவத்திற்கு, அல்லது அல்லாஹ்விற்கு கட்டுப்படுவதில் ஏற்பட்ட குறைபாட்டிற்கு பிரதியாக கேட்கப்படும். ஆதலால்தான், தொழுகை நிறைவுபெற்ற உடனே “அஸ்தஃபிருல்லாஹ்” ”அஸ்தஃபிருல்லாஹ்” ”அஸ்தஃபிருல்லாஹ்” என்று மூன்று விடுத்தம் கூறுகின்றோம். ஏனெனில், எங்களுடைய தொழுகையில் ஏற்பட்ட குறைபாட்டிற்காக. ஆனால் “தௌபா”வைப் பொருத்தவரை நடைபெற்ற பாவத்திற்காக இருந்தாலும், அப்பாவத்தை இதன்பிறகு எதிர்காலத்திலும் செய்யமாட்டேன் என்ற உறுதிப்பாட்டுடனே கேட்கப்படுவதாகும்..

எனவே, “தௌபா” மற்றும் “இஸ்திஃபார்” போன்ற அரபுச்சொற்களுக்கு தமிழில் “பாவமன்னிப்பு” என்று கருத்துகொடுத்தாலும், அவை இரண்டுக்கும் மத்தியில் சிலவேறுபாடுகள் காணப்படுகின்றன.

யாவும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன் மாத்திரமே.

தொகுப்பு : றஸீன் அக்பர் (மதனி)
அழைப்பாளன் : தபூக் அழைப்பு நிலையம், சவுதி அரேபியா.
أحدث أقدم