ஜிஹாத் என்றால் என்ன?

ஜிஹாதின் பொருள்:

ஜிஹாத் எனும் வார்த்தை ஜுஹ்த் எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும். ஜுஹ்த் எனும் அரபிச்சொல்லுக்கு, ‘கடுமையாக முயற்சி செய்தல்’ அல்லது ‘வெற்றி கிடைக்கும் வரை கடுமையாக போராடுதல்’ அல்லது ‘விடாப்பிடியான எதிர்ப்பு முயற்சி (Struggle)’ என்று பொருள். ஒருவர் தன்னுடைய இலட்சியத்தை அல்லது நோக்கத்தை அடைய தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் முயல்தல் என்பது தான் இதன் அர்த்தம்.

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் புரிவது இஸ்லாமின் மிகப்பெரிய கடிவாளமாகும்.

இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

ஜிஹாத் என்பது இறைவனை நிராகரிக்கக்கூடிய மக்களிடம் போர் புரியும் போது மேற்கொள்ளப்படும் "கடும் முயற்சி" என்பதாகும். அவ்வாறே மனிதன் தன்னுடைய மனோ இச்சையுடனும், ஷைத்தானுடனும், பாவிகளுடனும் போராடுவதற்கும் ஜிஹாத் என்று சொல்லப்படும். மனோ இச்சையுடன் போர் புரிவது என்பது மார்க்கக் கல்வியை கற்றுக் கொள்வது, அதனை செயல்படுத்துவது பின்னர் அதனைப் பிறருக்கு கற்றுக் கொடுப்பதாகும். ஷைத்தானுடன் போர் புரிவது என்பது, அவன் ஏற்படுத்துகின்ற சந்தேகங்களுக்கு எதிராகவும் அவனால் அலங்காரமாக காட்டப்படும் மனோ இச்சைகளுக்கெதிராகவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாகும். நிராகரிப்பாளர்களுடன் போர் புரிவது என்பது கைகளாலும், நாவாலும், உள்ளத்தாலும், செல்வத்தாலும் மேற்கொள்ளப்படும். பாவிகளுடன் போர் புரிவது என்பது, கையினாலும் பின்னர் நாவு மற்றும் உள்ளத்தால் மேற்கொள்வதாகும்.
நூல்: ஃபத்ஹுல் பாரி - 6/3

சத்தியத்தையும், அமைதியையும் நிலை நாட்டுவதற்கும் அக்கிரமங்கள், அநியாயங்கள், குழப்பங்கள் ஆகியவற்றை அழித்தொழிப்பதற்கும் வேண்டி மேற்கொள்ளப்படும் முயற்சி தான் ஜிஹாத். இதன் மூலம் உயிர், உடமைகள் பாதுகாக்கப்படும்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَمَا لَـكُمْ لَا تُقَاتِلُوْنَ فِىْ سَبِيْلِ اللّٰهِ وَالْمُسْتَضْعَفِيْنَ مِنَ الرِّجَالِ وَالنِّسَآءِ وَالْوِلْدَانِ الَّذِيْنَ يَقُوْلُوْنَ رَبَّنَاۤ اَخْرِجْنَا مِنْ هٰذِهِ الْـقَرْيَةِ الظَّالِمِ اَهْلُهَا‌  وَاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ وَلِيًّا ۙ وَّاجْعَلْ لَّـنَا مِنْ لَّدُنْكَ نَصِيْرًا 

பலஹீனமான ஆண்களையும் பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் போர் செய்யாதிருக்கக் காரணம் யாது? (அவர்களோ) “எங்கள் இறைவனே! அக்கிரமக்காரர்கள் இருக்கும் இவ்வூரைவிட்டு எங்களை வெளிப்படுத்துவாயாக; எங்களுக்காக உன்னிடமிருந்து தக்க ஒரு பாதுகாவலனை அளித்தருள்வாயாக; இன்னும் எங்களுக்காக உன்னிடமிருந்து ஓர் உதவியாளனையும் அளித்தருள்வாயாக” என்று பிரார்த்தனை செய்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 4:75)

اُذِنَ لِلَّذِيْنَ يُقٰتَلُوْنَ بِاَنَّهُمْ ظُلِمُوْا‌  وَاِنَّ اللّٰهَ عَلٰى نَـصْرِهِمْ لَـقَدِيْرُ ۙ

போர் தொடுக்கப்பட்டோருக்கு - அவர்கள் அநியாயம் செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பதனால் (அவ்வாறு போர் தொடுத்த காஃபிர்களை எதிர்த்துப் போரிடுவதற்கு) அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது; நிச்சயமாக அவர்களுக்கு உதவி செய்ய அல்லாஹ் பேராற்றலுடையவன்.
(அல்குர்ஆன் : 22:39)

ஜிஹாதின் மூலம் சமுதாயத்தில் மக்களின் வழிபாட்டுத்தலங்கள் பாதுகாக்கப்படும்.

اۨلَّذِيْنَ اُخْرِجُوْا مِنْ دِيَارِهِمْ بِغَيْرِ حَقٍّ اِلَّاۤ اَنْ يَّقُوْلُوْا رَبُّنَا اللّٰهُ‌  وَلَوْلَا دَ فْعُ اللّٰهِ النَّاسَ بَعْضَهُمْ بِبَـعْضٍ لَّهُدِّمَتْ صَوَامِعُ وَبِيَعٌ وَّصَلَوٰتٌ وَّمَسٰجِدُ يُذْكَرُ فِيْهَا اسْمُ اللّٰهِ كَثِيْرًا‌  وَلَيَنْصُرَنَّ اللّٰهُ مَنْ يَّنْصُرُهٗ  اِنَّ اللّٰهَ لَقَوِىٌّ عَزِيْزٌ

இவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; “எங்களுடைய இறைவன் ஒருவன்தான்” என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 22:40)

அப்பாவிகளை கொல்வதற்கோ, செல்வத்தைக் கொள்ளை அடிப்பதற்கோ, நாடுகளை கைப்பற்றுவதற்கோ மேற்கொள்ளப்படும் முயற்சியல்ல ஜிஹாத். மாறாக கொள்கையுடன் வாழும் சமுதாயம் தங்களுடைய கொள்கையை பாதுகாத்துக் கொள்வதற்கு இடையூறு செய்பவர்களையும், தங்களுடைய சுதந்திரத்தைப் பறிக்கும்போது அதற்கு எதிராகவும், தங்களுடைய சொத்துக்கள் சூறையாடப்படும் போது அதனை எதிர்த்து செய்யப்படும் போர்தான் இறைவழியில் மேற்கொள்ளப்படும் ஜிஹாத்.

யாரிடம் ஜிஹாத் செய்ய வேண்டும்?

அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்ய விரும்புவோர் நான்கு எதிரிகளிடம் போர்புரிய வேண்டும்.

1. தனது நஃப்ஸுடன்: 

அல்லாஹ்வின் மார்க்கத்தை கற்றுக்கொள்வதில் ஏற்படும் சிரமங்களை தாங்கிக்கொண்டு சரியான அகீதாவையும், இபாதத்தின் சட்டங்களையும், ஒழுக்கம், நற்குணங்களையும் கற்றுக்கொண்டு அதனைக் கடைப்பிடித்து தேவை ஏற்படும் போது பிற முஸ்லிம்களுக்கும் அதனைக் கற்றுக் கொடுத்து, மனோ இச்சைக்கு அடிபணியாமலும், ஷைத்தானின் சூழ்ச்சிக்கு ஆளாகி அல்லாஹ் விதித்த கடைமைகளை தவறவிடாமலும், அவன் விலக்கியவற்றை செய்யாமலும் இருப்பதற்கு மனதுடன் ஜிஹாத் செய்ய வேண்டும். இது மிகப்பெரிய ஜிஹாத் ஆகும். திர்மிதி - 1621

2. மனித குலத்தின் எதிரியான ஷைத்தானுடன் ஜிஹாத் செய்வது:

அல்லாஹ் கூறுகிறான்:

اِنَّ الشَّيْطٰنَ لَـكُمْ عَدُوٌّ فَاتَّخِذُوْهُ عَدُوًّا  اِنَّمَا يَدْعُوْا حِزْبَهٗ لِيَكُوْنُوْا مِنْ اَصْحٰبِ السَّعِيْرِ

நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காகவே தான்.
(அல்குர்ஆன் : 35:6)

இந்த எதிரியிடம் ஒரு முஸ்லிமின் ஜிஹாத் என்பது, அவன் ஏற்படுத்துகின்ற ஊசலாட்டத்தை புறக்கணித்து, அவன் அழகாக்கிக்காட்டுகின்ற பாவங்களையும், அல்லாஹ்விற்கு மாறு செய்கின்ற விஷயங்களையும் விட்டு தூரமாவதுமாகும். இன்னும் அவனது சூழ்ச்சியில் வீழ்ந்து விடாமல் இருக்க அல்லாஹ்விடம் ஷைத்தானைவிட்டு பாதுகாவல் தேடவேண்டும்.

أعوذ با لله من الشيطان الرجيم
விரட்டப்பட்ட ஷைத்தானைவிட்டு நான் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று கூற வேண்டும்.

وَاِمَّا يَنْزَغَـنَّكَ مِنَ الشَّيْطٰنِ نَزْغٌ فَاسْتَعِذْ بِاللّٰهِ‌ اِنَّهٗ سَمِيْعٌ عَلِيْمٌ

ஷைத்தான் ஏதாவதொரு (தவறான) எண்ணத்தை உம் மனத்தில் ஊசலாடச் செய்து (தவறு செய்ய உம்மைத்) தூண்டினால், அப்போது அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! மெய்யாகவே அவன் செவியேற்பவனாகவும், (யாவற்றையும் நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 7:200)

இவ்வாறு தான் ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேட வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

3. பாவிகளிடத்தில்:

முஃமின்களில் யார் கடமையான வணக்கத்தை நிறைவேற்றாமல் அதனை உதாசீனம் செய்து அல்லாஹ் தடுத்தவற்றை செய்கிறார்களோ அவர்களை உபதேசிப்பதன் மூலமும், அவர்களுக்கு நேரான வழியை காட்டுவதன் மூலமும் அவர்களிடம் ஜிஹாத் செய்ய வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் ஒரு தீமையை (மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை)க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும், முடியாவிட்டால் தமது நாவால் (சொல்லித் தடுக்கட்டும்), அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் (அதை வெறுத்து ஒதுக்கட்டும்). இந்த (இறுதி) நிலையானது இறைநம்பிக்கையின் பலகீனமா(ன நிலையா)கும்.
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் : 78.

4. குப்ஃபார்களுடனும் நம்மை எதிர்த்து போர் புரிபவர்களுடனும் ஜிஹாத் செய்வது:

இவர்களுடன் கைகளாலும், நாவாலும், உள்ளத்தாலும், செல்வத்தாலும் ஜிஹாத் செய்ய வேண்டும்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இணைவைப்பாளர்களிடத்தில் உங்கள் நாவினாலும், உயிராலும், செல்வத்தாலும், கைகளாலும், ஜிஹாத் செய்யுங்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் இப்னு மாலிக் (ரலி)
நூல்: சுனன் அபிதாவூத் - 2504, முஸ்னத் அஹ்மத் - 12555.

இந்தவகை ஜிஹாதில் தான் சில வேளை சமாதானம், நீதியை நிலைநாட்ட ஆயுதங்களை பயன்படுத்தியும் ஜிஹாதில் (பிரயத்தனத்தில்) ஈடுபட வேண்டிய சந்தர்ப்பங்கள் ஏற்படுகின்றன. இந்த வகை ஜிஹாதை முஸ்லீம்களுக்காகவும், இஸ்லாமிய ஆட்சியரின் கீழ் வாழும் முஸ்லீம் அல்லாதவர்களுக்காக அல்லது  முஸ்லீம்களுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துகொண்ட முஸ்லீம் அல்லாதவர்களை ஏனைய நிராகரிப்போரிடமிருந்து பாதுகாப்பதற்காகவும் மேற்கொள்ள முடியும்.  

இரு சந்தர்ப்பங்களிலேயே இந்தவகை ஜிஹாதில் ஈடுபட முடியும். 

இஸ்லாமிய ஆட்சியரினால் போருக்காக ஒன்றுதிரளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டால் இந்த இரு சந்தர்ப்பங்களிலும் போரிடுவதற்காக புறப்பட்டுச் செல்வதனை குடிமக்களான ஆண்கள் மீது அல்குர்ஆனின் போதனைகள் கட்டாயமாக்கியுள்ளன.

1. இஸ்லாமிய தேசத்திற்கு எதிராக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காகவும், தற்காப்புக்காகவும் யுத்தத்தில் இறங்குதல். இது தனிப்பட்ட அல்லது குழு ரீதியாக இயங்கி, அடிப்படையற்ற வகையில் எடுக்கப்படும் முடிவின் படி முன்னெடுக்கப்படமுடியாது. அரசின் அல்லது பொறுப்புள்ள மக்கள் தலைமைத்துவத்தின் வழிகாட்டலினதும் கீழேயே இது நடைபெற வேண்டும். இது ‘‘தற்காப்பு ஜிஹாத்” என வழங்கப்படுகின்றது.

‘‘உங்களை எதிர்த்துப் போர் புரிய முற்பட்டோரை, அல்லாஹ்வுடைய பாதையில் நீங்களும் எதிர்த்துப் போர் புரியுங்கள். ஆனால், நீங்கள் வரம்பு மீற வேண்டாம். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் அத்துமீறுபவர்களை நேசிப்பதில்லை”.
(அல்குர்ஆன் 2:190)

2. உலகில் நடைபெறுகின்ற அநியாயங்கள், அநீதி, கொடுமை, பயங்கரவாதம் போன்றவற்றுக்கு எதிராக இஸ்லாமிய தேசம் முன்னெடுக்கும் யுத்த நடவடிக்கையை இரண்டாவது வகையில் சேர்க்கலாம். கொடுமை மற்றும் அநீதி ஆகியவை நிகழ்கின்றமையை அவதானித்த வண்ணம், மௌனமாக இருப்பதற்கான அனுமதி இஸ்லாமிய நாடுகளுக்கு இல்லை. பெண்களை பலவந்தப்படுத்துதல், சிறுவர் துஷ்பிரயோகம், போதைப் பொருள் பாவனை, களவு, பயங்கரவாதம், அநீதி, தாக்குதல்கள் போன்ற விடயங்கள் பரவும் போது, எந்த அரசுக்குத்தான் மௌனமாக இருக்க முடியும்? இயற்கை சட்டத்தை மீறாமல், இந்த விடயங்களுக்கு எதிராகச் செயற்படுவது எமது கடமையாகும். எதிரியின் அதிகாரத்தையும், பலத்தையும் உடைத்தெறிந்து, எதிரியின் கொடுமையையும், அடக்குமுறையையும் ஒழித்துக்கட்டி, சமாதானம், நீதி, நேர்மை ஆகியவற்றை நிறுவும் வரை ஜிஹாதில் ஈடுபடுவது இஸ்லாமிய நாடொன்றுக்குக் கட்டாயமாகின்றது. இது ஆக்கிரமிப்பு ஜிஹாத் எனப்படுகின்றது.

‘‘பலவீனமான ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும் பாதுகாப்பதற்காக அல்லாஹ்வுடைய பாதையில் நீங்கள் போர் புரியாதிருக்க நேர்ந்த காரணம் என்ன?” அவர்களோ (இறைவனை நோக்கி) “எங்கள் இறைவனே! அநியாயக்காரர்கள் வசிக்கும் இவ்வூரிலிருந்து எங்களை. வெளியேற்றுவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து பாதுகாவலரையும் ஏற்படுத்துவாயாக! நீ எங்களுக்கு உன்னிடமிருந்து உதவி செய்பவரையும் ஏற்படுத்துவாயாக!” என்று பிரார்த்தனை செய்த வண்ணமாய் இருக்கின்றனர்’’. (அல்குர்ஆன் 4:75)

இந்த (4வது) வகை ஜிஹாதின் வழிமுறை:

இரண்டு செயல்களின் மூலம் தான்‌ இந்த வகை ஜிஹாத் முழுமைபெறும்.

1: உண்மையான நிய்யத்.

ஒரு முஃமின் ஜிஹாதிற்கு புறப்படும்போது அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு, அவனிடம் கிடைக்க இருக்கும் நற்கூலியில் ஆசைக்கொண்டு புறப்பட வேண்டும். பெயருக்காகவோ, புகழுக்காகவோ, முகஸ்துதிக்காகவோ ஜிஹாத் செய்யக்கூடாது.

2. முஸ்லிம்களின் தலைவரின் கொடியின் கீழ் ஜிஹாத் செய்ய வேண்டும்.

முஸ்லிம் சமுதாயம் பைஅத் செய்து தந்த உம்மத்தின் தலைவரின் ‌வழிகாட்டுதலின் அடிப்படையில் தான் ஜிஹாத் செய்ய வேண்டும். இதைத்தான் குர்ஆனும், ஸுன்னாவும் ஏவியுள்ளது. இது விஷயத்தில் அஹ்லுஸ்ஸுன்னாவினர் ஏகோபித்துள்ளார்கள்.

நூல்: ஹகீகதுல் ஜிஹாதி ஃபி ஸபீலில்லாஹி வ முஹர்ரமதுல் ஹுருஜ் அலா ஹுக்காமில் முஸ்லிமீன்,
ஆசிரியர்: ஷெய்க். அபூபக்கர் அல் ஜஸாயிரி, பக்கம் 4-6

இந்த (4வது) வகை ஜிஹாதின் நிபந்தனைகள்:

தொழுகை நிறைவேறுவதற்கு தூய்மை எவ்வாறு நிர்பந்தமாக உள்ளதோ அதேபோன்று ஜிஹாத் செய்ய சில நிபந்தனைகள் உள்ளன.

1. கடமை: மார்க்கத்தைப் பொறுத்தவரை பருவ வயதை அடைந்து, அறிவு முதிர்ச்சியுள்ளவர்கள் மீதுதான் ஜிஹாத் கடமை. உஹது போரின் போது இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு 14 வயது தான் ஆகியிருந்தது. அவருக்கு நபி(ஸல்) அனுமதி வழங்கவில்லை.

2. சுதந்திரம்: அடிமைகள் மீது ஜிஹாத் கடமையில்லை (9:91)

அடிமைகள் மீது ஜிஹாத் கடமையில்லை என்பதாக பெரும்பாலான அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.

3. ஆற்றல்: மேற்சொன்ன வசனத்தில் பலவீனர்கள் மீது ஜிஹாது கடமையில்லை என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

4. ஆண்கள்: ஆண்களுக்குத் தான் மார்க்கம் ஜிஹாத் கடமையாக்கியுள்ளது. பெண்களுக்கு கடமையாக்கவில்லை.

5. பெற்றோரின் அனுமதி: நபி(ஸல்) அவர்களிடத்தில் ஒருவர் ஜிஹாத் செய்ய அனுமதி கோரினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் உன் பெற்றோர் உயிருடன் உள்ளார்களா என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்று கூறினார். அப்படியானால் அவ்விருவருக்காகவும் நீர் ஜிஹாத் செய் என்று கூறினார்கள்.

6. தலைமையின் அனுமதி: மார்க்க ரீதியான தலைவர் ஒருவர் இல்லாமல் ஜிஹாத் செய்வது கூடாது.

மேற்சொன்ன நிபந்தனைகள் பூர்த்தியாகும் போதுதான் ஜிஹாத் கடமையாகும்.

நூல்: முஹிம்மாது ஹவ்லல் ஜிஹாத்,
ஆசிரியர்: ஷெய்க். ஸாலிஹ் அல் ஃபவ்ஸான், பக்கம் 23-25.

இஸ்லாத்தின் அம்சங்களை தவறாக விளங்கி பல்வேறு வழிகெட்ட கோட்பாடுகளும் இயக்கங்களும் இஸ்லாத்தின் பெயரால் தோன்றியதுபோல் ஜிஹாதுடைய சட்டங்களையும் தவறாக புரிந்துகொண்டு இஸ்லாமிய வரலாற்றில் பல வழிகெட்ட இயக்கங்கள் தோன்றின. இவர்களை ‘கவாரிஜ்கள்’ அல்லது ‘காரிஜிய்யாக்கள்’ என காலம்காலமாக நேர்வழியில் நடந்த ஸலஃப் மன்ஹஜ் அறிஞர்கள் அடையாளம்காட்டிச் சென்றுள்ளனர். 

மார்க்கத்தில் சரியான விளக்கமில்லாத, எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிடக்கூடிய நிகழ்வுகளை திரைமறைவிலிருந்து திட்டமிட்டு உருவாக்கி, அவர்கள் அறியாமலேயே அவர்களைத் தங்கள் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்குள் உள்வாங்கி, அவர்களைத் தங்களின் அரசியல் ஆதாயத்துக்காகவும் நிகழ்ச்சி நிரலுக்கமையவும் இஸ்லாத்தின் பெயரிலான சூழ்நிலைத் தீவிரவாதிகளாக மாற்றி அவர்களுக்கு நிதி ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் பல பங்களிப்புகளையும் மறைமுகக் கரங்களால் வழங்கி, இஸ்லாமிய வரலாற்றில் இதற்கு முன்னர் என்றுமே காணப்படாத தற்கொலைத் தாக்குதல்களைக் கூட நிகழ்த்தும் அளவுக்கு மூளைச்சலவை செய்து... என உலகெங்கிலுமுள்ள ஏகாதிபத்திய, பேரினவாத அரசுகளால் சிறுசிறு தீவிரவாத குழுக்களாகவும், குறிப்பாக அமெரிக்காவின் சீ.ஐ.ஏ வினால் தற்காலத்தில் உருவாக்கப்பட்டு காணப்படும் அல்கைதா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற தீவிரவாத இயக்கங்களும் மற்றும் முஸ்லீம்களே முஸ்லீம்களின் கைகளால் கொத்துக் கொத்தாக கொன்று குவிக்கப்பட காரணமாயிருக்கின்ற இஹ்வானுல் முஸ்லிமீன், ஜமாஅதே இஸ்லாமி, ஹிஸ்புத் தஹ்ரீர் போன்ற ஹாக்கிமிய்யத் பேசும் இயக்கங்களும் இந்த கவாரிஜிகளின் வழிமுறைகளை தெளிவாக பின்பற்றுபவர்களாவர்.

ஸலஃப் மன்ஹஜ்ஜின் அடிப்படையில் இஸ்லாத்தை விளங்கி பின்பற்றி நடப்பவர்களுக்கு இவ்வாறான கவாரிஜிகளின் சிந்தனைப் போக்குகளையும், பண்புகளையும் மிகத் தெளிவாகவும் துல்லியமாகவும் அடையாளம்காண முடியும் எனபது குறிப்பிடத்தக்கதாகும்.


ஜிஹாத் என்பது புனிதப் போரா?

ஆனால் அதே நேரம் இன்று இஸ்லாத்தோடு தொடர்புபடுத்தி ஜிஹாதின் அர்த்தமாக உலகமெல்லாம் ஏகாதிபத்தியவாதிகளால் திணிக்கப்படும் ‘புனிதப்போர்’ என்ற சொல்லுக்கு அரபியில் ‘ஹர்ப் முகத்தஸா’ என்று வழங்கப்பெறும். அதாவது அரபியில் ‘ஹர்ப் முகத்தஸா’ என்றாலே ‘புனிதப்போர்’ என்று பொருள் வரும். இது திருக்குர்ஆனில் எங்குமே காணக்கிடைக்காத ஒரு சொல்லாகும்.

“ஜிஹாத்” என்ற சொல்லை ‘‘புனிதப் போர்’’ அல்லது ‘‘Holy War’’ என்று முஸ்லிம் அல்லாதோர் மத்தியில் பிரபல்யமடைந்துள்ளபோதும், ‘Holy War’ என்பதன் உண்மையான அரபு மொழிபெயர்ப்பான ‘‘ஹர்ப் முகத்தஸஹ்’’ என்ற சொல் அல் குர்ஆனிலோ நபிகளாரின் வாக்குகளிலோ எங்கும் குறிப்பிடப்படவில்லை. இஸ்லாமியக் கோட்பாடு, பண்பாடு மற்றும் சட்டப் புத்தகங்களிலும் இந்த சொல்லை அவதானிக்க முடியாது. கவலைக்குரிய விதமாக ஊடகங்களும், ஏன் முஸ்லீம்களிலுள்ள அரசியல் சரிநிலை அறியாது மார்க்கம் கற்றவர்கள் கூட ஜிஹாத் என்ற சொல்லுக்கு ஒத்த சொல்லாகப் “புனிதப் போர்”, “தர்ம யுத்தம்” போன்ற சொற்களைப் பயன்படுத்துகின்றனர். கிறிஸ்தவர்களின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டே ‘‘புனிதப் போர்’’ என்ற சொல் முதன் முறையாகப் பிரயோகத்துக்கு வந்தது. இது குறித்து பி.பி.சி. நிறுவனம் வழங்கியுள்ள தகவல்கள் மீது எமது அவதானத்தைச் செலுத்துவோம். ‘‘இரண்டாம் அர்பன் பாப்பரசர்” புனிதப் பூமியில் புனிதஸ்தலமொன்றைக் கைப்பற்றுவதனை நோக்காகக் கொண்டு 1095 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு எதிராகத் தொடங்கிய ஆயுத ரீதியான முன்னெடுப்பு (Crusade) “புனிதப் போர்” (Holy War) என்று அழைக்கப்படுகின்றது. http://www.bbc.co.uk/ethics/war/religious/holywar.shtml

இந்த அடிப்படையில், ‘‘புனிதப் போர்’’ என்பது முஸ்லிம்களுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையே அன்றி, ஒருபோதும் அது முஸ்லிம்களின் செயற்பாடு அல்ல என்பது தெளிவாகின்றது. எனவே, ‘‘புனிதப் போர்’’ என்பது “ஜிஹாத்” அல்ல.


அல் குர்ஆன் பயங்கரவாதத்தை போதிக்கிறதா?

முதலாவதாக, பயங்கரவாதம் என்பதன் மூலம் கருதப்படுவது என்ன? என்பது குறித்து நாம் புரிந்து கொள்வது அவசியமாகும். அகராதிகளின் கருத்தை முதலாவதாக அவதானிப்போம். பயங்கரவாதம் என்பதன் மொழிக் கருத்து அச்சமூட்டுதல் என்பதாகும். பிரயோகத்தில், 

‘‘ஆயுதம் தரித்தல் அல்லது பயமுறுத்துதல் போன்ற செயற்பாடுகளின் மூலம் அரசாங்கமொன்றையோ சமூகமொன்றையோ அச்சுறுத்தி, தமது நோக்கங்களை அடைந்து கொள்ளும் முறை’’ என்ற அர்த்தம் வழங்கப்படுகின்றது. (சரசவி சிங்கள-சிங்கள அகராதி, பக்கம் 661)

பயங்கரவாதிகளின் அல்லது குழப்பம் விளைவிப்போரின் உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்தி, அவர்களின் சட்ட விரோதச் செயற்பாடுகளைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது சட்டத்தை மதிக்கின்ற அரசாங்கத்தினதும் மக்களினதும் பொறுப்பும், கடமையுமாகும். 

சட்ட ஒழுங்கை நடைமுறைப்படுத்தும் அதிகாரியொருவரைக் காணும்போது, பயங்கரவாதியின் அல்லது ஓர் குற்றவாளியின் உள்ளத்தில் அச்சம் ஏற்படுவது இயற்கையானதாகும்.

எனவே, மொழி அடிப்படையில் ‘‘பயங்கரவாதம்’’ என்பதன் கருத்து ‘‘பயமுறுத்தல்’’ என்று அமைவதனால், ஓர் குற்றவாளி சட்ட ஒழுங்கு அதிகாரியைப் பார்த்து பயமுறுவதைப் போல.. ஒரு போலிஸ் அதிகாரி திருடனைப் பயமுறுத்துவது போல.. ஓர் இறையாண்மை உள்ள நாட்டின் இராணுவம் கலவரக்காரர்களை பயமுறச்செய்து அடக்குவதைப் போல..

சட்டத்தை மதிக்கின்ற இஸ்லாமிய அரசாங்கம், இவ்வாறு செயற்பட்டுப் பயங்கரவாதிகளை - அமைதியையும், நீதியையும், சட்ட ஒழுங்கையும்  நிலை நிறுத்தும் பொருட்டு பயமுறுத்த வேண்டும் என அல்குர்ஆன் போதிக்கின்றது. 

கீழ் வரும் அல்-குர்ஆன் வசனத்தில் ‘‘இர்ஹாப்’’ என்ற அறபுச் சொல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

 ‘‘இர்ஹாப்’’ என்பதன் மூலம் “பயங்கரம்’’ எனப்படும் ‘‘பயமுறுத்தல்’’ என்ற கருத்து நாடப்படுகிறது. 

எனவே, அரசாங்கத்துக்கோ சமூகமொன்றுக்கோ எதிராகச் செயற்படுகின்ற பயங்கரவாதிகளைப் பயமுறுத்துமாறு இஸ்லாமிய தேசப் படையின் அங்கத்தவர்களான முஸ்லிம் மக்களிடம் அல் குர்ஆன் கூறுகிறது.

அல்-குர்ஆனில் :

 “அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், திறமையான குதிரைகளைக் கட்டிவைப்பதையும் உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய எதிரிகளையும், உங்களுடைய எதிரிகளையும் நீங்கள் பயப்படச் செய்யலாம்’. (அல்-குர்ஆன் 8:60)

எனவே, இஸ்லாத்தில் பயமுறுத்தல் என்ற கருத்துள்ள ‘‘இர்ஹாப்’’ என்ற சொல், அரசாங்கமொன்றுக்கோ அல்லது சமூகமொன்றுக்கோ அச்சுறுத்தல் விடுத்து, சட்ட விரோத நோக்கங்களை அடையும் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படும் நடவடிக்கைக்கே பயன்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.

பயங்கரவாதிகள் தொடர்பாகவும், அவர்கள் சமாதானத்தின் பக்கம் சாய்வதாயின் நாமும் சமாதானத்தின் பக்கம் சாய வேண்டும் என அதற்கடுத்த அல்-குர்ஆன் வசனம் போதிக்கின்றது.

 ‘‘அவர்கள் சமாதானத்திற்கு இணங்கி வந்தால், நீங்களும் அதன் பக்கம் இணங்கி வாருங்கள். அல்லாஹ்விடமே பொறுப்புச் சாட்டுங்கள். நிச்சயமாக அவன் செவியுறுபவனும், (அனைத்தையும்) நன்கறிந்தவனுமாவான். (அல்குர்ஆன் 8:61)

எனவே, பயங்கரவாதிகளின் உள்ளத்தில் பயத்தை ஏற்படுத்துவதற்கான ஆயுத நடவடிக்கையே ஜிஹாத்; என்பதாகும். மாறாக பயங்கரவாதம் என்பது ஜிஹாத் அல்ல.


தற்கொலைக் குண்டுதாரி மேற்கொள்ளும் பயங்கரவாதம்:

தற்கொலை செய்வது, இஸ்லாமியப் பார்வையில் ஒரு மாபெரும் பாவமாகும். உயிரை வழங்குவதும், அதனை மீண்டும் எடுப்பதும் மனிதனின் உரிமைக்கு அப்பாலான விடயமாகும். ‘‘எவரொருவர் இரும்புத் துண்டொன்றை (அல்லது வேறு வழிமுறையை)க் கொண்டு தற்கொலை செய்து கொள்கிறாரோ, அந்த இரும்புத் துண்டாலேயே அவருக்கு நரகில் தண்டனை வழங்கப்படும்.” என்று வந்துள்ளது. (முஸ்லிம் : 313 )


மனிதர்களைக் கொலை செய்யும் பயங்கரவாதம்:

முஸ்லிம் அல்லாதோரைக் கண்டால், அவர்களைக் கொலை செய்யுமாறு அல்குர்ஆன் போதிப்பதாக சிலர் தவறான விளக்கம் அளித்து வருகின்றனர். இது போர்க்களம் ஒன்றில் எதிரிகளைக் குறித்து இறக்கி வைக்கப்பட்ட வசனமாகும். 

இஸ்லாம் அனைவருக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதிப்படுத்தியிருக்கின்றது. அல்குர்ஆன் வசனங்கள் குறித்த சரியான, ஆழமான அறிவின்றிப் பரப்பப்படும் இவ்வாறான தவறான கருத்துகளை நாம் கடுமையாகப் புறக்கணிக்கின்றோம். பயங்கரவாதம் என்பது மனிதர்களைக் கொல்லும் செயற்பாடே. மனிதர்களை கொலை செய்வது குறித்து இஸ்லாத்தின் கருத்து என்னவென்று பார்ப்போம்.

‘‘எவரொருவர் மற்றோர் ஆத்மாவின் கொலைக்குப் பிரதியாகவோ, அல்லது பூமியில் (உண்டாகும்) குழப்பத்தி(னைத் தடை செய்வதற்) காகவோ தவிர, (அநியாயமாக மற்றொருவரைக்) கொலை செய்கின்றாரோ அவர், மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவர் போலாவார். எவர் அதனை (ஓர் ஆத்மாவை) வாழ வைக்கின்றாரோ அவர், மனிதர்கள் அனைவரையுமே வாழவைத்தவர் போலாவார்’. (அல்குர்ஆன் 5:32)

நாட்டின் சிறந்த பயணத்தை நோக்காகக் கொண்டு, நீதி நாணயத்தை அடிப்படையாகக் கொண்ட நீதிமன்ற அமைப்பின் ஊடாக வெளியிடப்படும் தீர்ப்பின் அடிப்படையில் அன்றி, ஒரு மனிதனை தான்தோன்றித்தனமாக வீணாகக் கொலை செய்வது முழு மனித இனத்தையும் கொலை செய்துவிடும் அளவு பாரதூரமான செயல் என இஸ்லாம் கருதுகின்றது.

அல்குர்ஆனில் இவ்வாறு மகத்தான போதனைகள் உள்ளடங்கியிருக்கின்றன. ஆனால், அல்குர்ஆன் பற்றிய பூரணமான அறிவின்றி சில வசனங்களை மேற்கோள் காட்டி, மக்களை வழிதவறச் செய்வதற்கு முயற்சிப்பது எந்தளவு பண்பாடானது?.

எனவே, மனிதர்களைக் கொலை செய்யும் பயங்கரவாதம் ஜிஹாத் அல்ல.
 

இஸ்லாத்தைத் தழுவுமாறு பலவந்தப்படுத்தும் பயங்கரவாதம்:

மதம் குறித்து மேற்கொள்ளப்படும் அனைத்து வகையான பலவந்தங்களையும் தடை செய்வதற்காக இறக்கப்பட்ட, கீழே உள்ள அல்குர்ஆன் வசனங்களுக்கு மாற்றமாக செயற்படுவதற்கு, எந்தவொரு இஸ்லாமியருக்கும் அனுமதி இல்லை.
‘‘மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை.”(அல்குர்ஆன் 2:256)

அது மட்டுமன்றி, மதங்களின் பன்மைத்துவத்தை உலக யதார்த்தமாகவும் இஸ்லாமியப் போதனைகள் ஏற்றுக் கொள்கின்றன. எனவே, இங்கு மனிதனின் சிந்தனைச் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படுகின்றது.

எனவே, இஸ்லாத்தைத் தழுவுமாறு பலவந்தப்படுத்தும் பயங்கரவாதம் ஜிஹாத் அல்ல!

சட்டத்தையும், நீதியையும் செயலிழக்கச் செய்து செயற்படுவதற்கு எந்தவொரு இஸ்லாமியருக்கும் அனுமதி கிடையாது. தனிப்பட்ட கோபத்தையும், குரோதத்தையும் அடிப்படையாகக் கொண்டு, ஏனையோர் குறித்து அநீதமான முறையில் செயற்படுவதற்கும் எந்தவொரு இஸ்லாமியருக்கும் அனுமதி இல்லை.

எனவே, சட்டத்தைச் செயலிழக்கச் செய்து மேற்கொள்ளும் பயங்கரவாதம் ஜிஹாத் அல்ல.


முஜாஹித் என்பவர் யார்?

இறைவழியில் இடைவிடாது நல்லறங்கள் புரிய கடின முயற்சியில் ஈடுபடுவோரை அரபியில் முஜாஹித் என்பர். அதாவது ஜிஹாத் செய்பவர்கள் முஜாஹித் என்று அழைக்கப்படுகின்றனர். இம்முஜாஹித்களின் சில பணிகளைக் குறித்து முஸ்னத் அஹ்மத் எனும் நபிமொழி நூலில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவை
1. அல்லாஹ்விற்காகத் தன் மனசாட்சியோடு போராடுபவன் முஜாஹித்.
2. அல்லாஹ்விற்காக (நற்செயல்கள் புரிந்து) போராடுபவன் முஜாஹித்.
3. அல்லாஹ்வின் விருப்பத்திற்கு அடிபணிவதற்காகத் தன் மனசாட்சியோடு போராடுபவன் முஜாஹித்.

மேற்கண்ட முஜாஹித்களின் பணிகளில் ஜிஹாத் என்றால் என்ன என்பதற்கு தெளிவான விளக்கங்கள் உள்ளன.

மேலும், போர் என்பது தற்செயலாக, எதிர்பாராமல் அல்லது திட்டமிட்டு நிகழ்வது. இது எப்பொழுதாவது நிச்சயம் முடிவுக்கு வரும் வந்தே ஆக வேண்டும். 

ஆனால் ஜிஹாத் என்பது தொடர்ந்து இடையறாது நிகழ்ந்து கொண்டிருக்கும் ஒரு செயல் இரவிலும் பகலிலும் இறை நம்பிக்கையாளனின் மனதில் நீக்கமற ஊன்றி நிலைபட்டிருக்கும் எண்ணம் அது. இடையறாது நிகழும் இந்த ஹிஜாத் என்பது. 

ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இறைவனின் விருப்பத்திற்கு முற்றிலும் அடிபணிய முயல்வது, இறைவனின் விருப்பத்திற்கு அடிபணிவதில் ஏற்படும் தடங்கல்கள், இடர்பாடுகள் எல்லாவற்றையும் இன்முகத்துடன் எதிர்கொண்டு அதில் உறுதியாக இருத்தல் ஆகிய பண்புகள் ஆகும். 

இது நபருக்கு நபர் அவரவரின் சூழ்நிலைகளுக்கேற்ப மாறுபடும்.

அதனால்தான் இறைத்தூதர் (ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்: உயிர்த் தியாகிகள் ஐந்து பேர்கள் ஆவர்: 1. பிளேக் நோயால் இறந்தவர் 2. வயிற்று(ப் போக்கு போன்ற) வியாதிகளால் இறந்தவர் 3. தண்ணீரில் மூழ்கி இறந்தவர். 4. வீடு, கட்டிடம் ஆகியவை இடிந்து விழும் போது) இடிபாட்டில் சிக்கி இறந்தவர் 5. இறைவழியில் இறந்தவர்.  அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) ​நூல்: புகாரி 2829, 2830, 5732

மேற்குறிப்பிடப்பட்ட ஐந்து தரப்பினருமே ஜிஹாதில் மரணித்தவர்களின் அந்தஸ்தையே பெறுகின்றனர்.

பரந்து விரிந்த பல பொருள் கொண்ட இவ்வார்த்தை இடத்திற்கும், கால சூழலுக்கேற்பவும் மாறுபடுகிறது. 

சமாதான சூழலில் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு; போர் முனைகளில் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு, செல்வந்தன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு, ஏழை செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு, பலசாலி செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு, பலகீனமானவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு, கற்றவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு, கல்லாதவன் செய்ய வேண்டிய ஜிஹாத் வேறு.

எடுத்துக்காட்டாக சுயவிருப்பங்கள், ஆசைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற மனத்தூண்டுதல்கள், சமுதாய மரபுகளால் ஏற்படும் நிர்பந்தங்கள், சொத்து செல்வம் மீது உண்டாகும் பற்று, தான் எனும் அகங்காரம் ஆகிய யாவும் நற்கிரியைகளைத் தடை செய்யக்கூடியவை, தீமைகளில் ஈடுபட வழி வகுப்பவை இவற்றிலிருந்து மனதைக் கட்டுபடுத்துவதும் ஜிஹாத் ஆகும்.

அப்படியிருக்க இன்று உலகில் ‘ஜிஹாத்’ என்றாலே ‘புனிதப்போர்’ தான் என்பது போன்ற அர்த்தம் வலிந்து திணிக்கப்படுகிறது. அதன் மூலம் முஸ்லிம் சமூகத்தை ஒட்டுமொத்தமாக ‘ தீவிரவாதிகள்’ என்ற சொல் கொண்டு அடையாளப்படுத்தி இறைவனின் மார்க்கமான இஸ்லாத்தை ‘இஸ்லாமியத் தீவிரவாதம்’ என்ற வார்த்தையை கொண்டு களங்கப்படுத்த முயற்சிக்கின்றனர்.

இஸ்லாத்தைப் பொறுத்தவரை ஒரு விஷயத்திற்கான விளக்கம் வெறும் வார்த்தைகளின் அர்த்தங்களோடு முடிந்து போவது அன்று. அதற்குத் தெளிவான விளக்கம் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையாகும். ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை தனது வாழ்வில் கடைபிடிக்கும் எவ்விஷயத்திற்கும் நடைமுறை விளக்கத்திற்கு முன்மாதிரியாக இறைத்தூதரின் வாழ்வை தான் எடுத்துக் கொள்ளவேண்டும். அங்கு அனைத்திற்கும் முன்மாதிரி உள்ளது. எனவே ஜிஹாதிற்கான விளக்கத்தையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் வாழ்க்கையில் இருந்து தான் பெற வேண்டும்.

நபி(ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கும் நபிமொழி ஒன்று நபி(ஸல்) அவர்களின் செயல்பாட்டின் பொதுவான ஒரு நெறிமுறையை அறிவிக்கின்றது.

‘இரண்டு வழிமுறைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டிய நிலை ஏற்படும்போது நபி(ஸல்) அவர்கள் அவற்றுள் எளிதானதையே தேர்ந்தெடுப்பார்கள். ஏதேனும் ஒரு காரியத்தில் இரு கருத்துக்கள் எழும்போது அவற்றுள் கடினமானதை விட்டுவிட்டு எளிதானதையே தேர்ந்தெடுப்பார்கள் என்பது தான் இதற்குப் பொருள்’ என ஆயிஷா(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.

நபி(ஸல்) அவர்களின் இந்த வழிமுறை அன்றாட விவகாரங்களுக்குப் பொருந்துவதோடு கடினமான வழிமுறையைப் பரிந்துரைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் காரியங்களுக்கும் பொருந்தும்.


நபி (ஸல்) ஏன் போர் செய்தார்கள்?

அவ்வாறெனில் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் அவர்கள் ஏன் அதிகமான போர்கள் செய்தார்கள் என்ற கேள்வி எழுவது இயல்பு தான். இக்கேள்வியை அடிப்படையாக வைத்து ஜிஹாத் என்றாலே அர்த்தம் போர் தான் என விளங்கி விடக்கூடாது. அதற்கான காரணம் முன்னரே விளக்கப்பட்டுவிட்டது. பின்னர் ஏன் நபி(ஸல்) அவர்கள் போர்களில் ஈடுபட்டார்கள் என்ற கேள்விக்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வை அக்காலகட்டத்தோடு ஆராய்ந்து பார்ப்பது அவசியமாகும்.

நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கையை ஆராயும் போது, அவர்கள் தாமாகவே எந்த போர் நடவடிக்கைகளையும் பரிந்துரைத்ததில்லை என்பதை அறிய முடியும். அன்னாருடைய எதிரிகள் அவர்களைப் போரில் சிக்க வைக்க முயன்றபோதெல்லாம் ஏதாவது ஒரு வழிமுறையை உபயோகித்துப் போரைத் தவிர்க்கவே முயன்றார்கள். வேறு வழி அறவே இல்லாமலிருந்த சூழ்நிலையில் தன் மீது போர் திணிக்கப்பட்ட போது தான் போரிடும் நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள்.
 
எனவே நபி(ஸல்) அவர்களின் வழிமுறைபடி ஒருவரையோ அல்லது ஒரு நாட்டையோ பிடிப்பதற்காக அல்லது தாக்குவதற்காக போரிடுவது என்பது இஸ்லாமிய வழி முறையன்று. இஸ்லாம் தற்காப்புக்காக மட்டுமே போரிட அனுமதித்துள்ளது. அதுவும் வேறு வழியே இல்லாத நிலையில் மட்டுமே.


உண்மையான ஜிஹாத்:

இஸ்லாம் தீமைக்கெதிராக, அடக்கு முறைக்கு எதிராக, அநியாயத்திற்கு எதிராக நம்பிக்கையாளர்கள் எப்பொழுதும் முன்னணியில் இருக்க வலியுறுத்துகிறது. இதற்காக நம்பிக்கையாளர்கள் தனது மனதை பக்குவப்படுத்துவதை தான் மனோஇச்சைக்கு எதிரான போராட்டமாக – ஜிஹாதாக இஸ்லாம் கற்றுத்தருகிறது.

இதனை பின்வரும் நபி மொழியின் மூலமாக தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:’ஜிஹாதிலேயே உயர்ந்தது அநியாயக்காரனின் முன்னிலையில் நியாயத்தை எடுத்துக் கூறுவதாகும்’.

இதற்கு உதாரணமாக திருக்குர்ஆன் நபி மூஸா(அலை) அவர்களின் வரலாற்றை நம்பிக்கையாளர்களுக்கு கற்றுத்தருகிறது.
மிகப்பெரும் கொடுங்கோலனான ஃபிர்அவ்னின் முன்னிலையில் நன்றாக வாய் பேச இயலாத திக்கு வாய் கொண்ட மூஸா(அலை) அவர்கள் அவனின் அநியாயங்களை நெஞ்சுறுதியுடன் எடுத்துக் கூறி அவனை எதிர்த்த சம்பவம் அநியாயத்திற்கெதிரான போராட்டத்தின் ‘ஜிஹாதின்’ மணிமகுடமாகும்.

‘அல்லாஹ்வையும் அவனது தூதரையும், உலகின் மற்ற எவரையும், எல்லாவற்றையும் விட அதிகமாக நேசிக்கும் வரை ஒருவர் உண்மை நம்பிக்கையாளராக ஆக முடியாது’ என்று இறை தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறிய பொன்மொழி இங்கு நினைவு கூரத்தக்கது. 

நன்றாக வாய்பேசக்கூட இயலாமல் இருந்த மூஸா(அலை) அவர்கள் எதற்காக ஒரு கொடிய கொடுங்கோல் அரசனின் முன் சென்று அவனுக்கு எதிராக அடக்குமுறைக்கு ஆளான பாவப்பட்ட மக்களுக்காக போராட வேண்டும்? இங்கு இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவது மட்டுமே மூஸா(அலை) அவர்களின் நோக்கமாக இருந்தது. 

இதிலிருந்து நம்பிக்கையாளர் ஒருவர் இறைவன் காட்டிய நேர்வழியில் நடப்பதற்கும் அவனின் கட்டளையை நிறைவேற்றப் போராடுவதும் தான் ஜிஹாத் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ஜிஹாத் என்பதற்கு புனிதப்போர் என்ற அர்த்தம் கிடையாது என்பதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த மற்றொரு சம்பவத்தையும் உதாரணமாக கூற இயலும். 

ஒருமுறை பெண்களும் போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்கப்பட்ட போது இறை தூதர் நபி(ஸல்) அவர்கள், ‘மிகச்சிறந்த ஜிஹாத் என்பது சிறப்பான, பிழையற்ற முறையில் நிறைவேற்றப்படும் ஹஜ் ஆகும்’ என்று கூறினார்கள். 

இங்கும் இறைவனின் கட்டளையை நிறைவேற்றுவதில் நம்பிக்கையாளர் எடுக்கும் சிரத்தையும் முயற்சியும் மட்டுமே ஜிஹாதாக இறைத்தூதரால் சுட்டிக்காட்டப்படுகிறது. உண்மையில் ஜிஹாத் என்பதற்கு புனிதப்போர் தான் அர்த்தம் எனில் பெண்களுக்கு நபி(ஸல்) அவர்கள் இவ்வாறு ஏவியிருக்க மாட்டார்கள். ஏனெனில் இறைக்கட்டளையை முன்பின் மாற்றம் இல்லாமல் உள்ளதை அப்படியே எடுத்துரைப்பதிலும் வழிகாட்டுவதிலும் எம்பெருமானார்(ஸல்) அவர்களை சிறந்த முன்மாதிரியாக இறைவன் அடையாளம் காட்டியுள்ளான்.

இன்னுமொரு சந்தர்ப்பத்தில், ஒருவர் இறை தூதர்(ஸல்) அவர்களிடத்தில் ஒரு போரில் பங்குபெற அனுமதி கேட்டார். அதற்கு இறை தூதர்(ஸல்) அவர்கள், அவரிடம் அவருடைய பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? என வினவினார்கள். ஆம் என்று பதிலளித்த அந்த மனிதரிடம், இறை தூதர்(ஸல்) அவர்கள், ‘நீங்கள் உங்கள் பெற்றோர்களுக்கு சேவை செய்வதன் மூலம் ஜிஹாத் செய்யுங்கள்’ என்று கட்டளையிட்டார்கள்.

ஜிஹாத் என்றால் போர் செய்வது மட்டும் தான் அர்த்தம் எனில் எதற்காக நபி(ஸல்) அவர்கள் இம்மனிதரைத் தடுத்து பெற்றோர்களுக்கு சேவை செய்ய அனுப்பினார்கள் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பல பரந்து விரிந்த பொருளை கொண்ட, யாருக்கு வேண்டுமெனிலும் அவரவருக்கு இயைந்தது போல் எப்படி வேண்டுமெனிலும் திரித்துக் கூறவும் அதன் அடிப்படையில் விளக்கமளிக்கவும் இயலுமான ஒரு சொல்லே ஜிஹாதாகும். எனவே அதன் உண்மையான பொருளையும் அது எங்கே யாருக்கு எதிராக எவ்வாறு செய்யப்பட வேண்டியது என்பது போன்றவற்றின் விளக்கத்தினை இஸ்லாத்தின் பார்வையில் பார்த்தலே சரியான அணுகுமுறையாகும்.





Previous Post Next Post