திருமணத்தில் பெண் வீட்டு விருந்து – தடுக்கப்பட வேண்டியதே!

-இஹ்ஸானா பின்த் மனாப்

அல்லாஹ்வின் திருப்பெயரால்…

“இஸ்லாமிய திருமணத்தில் ஆண் தரப்பு எவ்வாறு ஒரு விருந்தை[வலீமா] ஏற்பாடு செய்கிறதோ அவ்வாறே பெண்தரப்பும் ஒரு விருந்தை அளிப்பதில் குற்றமில்லை. பெண் வீட்டு விருந்தானது எம் வழக்காறுகளிலிருந்து ( العادة) வந்ததோர் விடயமாகும். அப்படியானதோர் வழக்கு ஹராம் ஆகும் என்றிருந்தால் அதை உணர்த்தும் வகையில் ஒரு தெளிவான ஆதாரம் தேவையாகும். ஆக, இந்த பெண் வீட்டு சாப்பாட்டை தடுக்கும் வகையில் எந்த ஒரு ஆதாரமும் இடம்பெறாததனால் அது ஆகுமானதே! வசதியுள்ளவர்கள் அதை ஏற்பாடு செய்வதில் எக்குற்றமும் இல்லை….” 

எனும் ஒரு மார்க்கத்தீர்ப்பு இன்று சமூக வலையத்தளங்களில் ஒரு பேசு பொருளாக மாறியிருப்பதை நாம் அனைவரும் அறிந்ததே!

உண்மையில், திருமணத்தில் பெண் வீட்டு விருந்து எனும் அம்சத்தை அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களின் ஒளியின் கீழ் இஸ்லாமிய சட்டக்கலை கோட்பாடுகளோடு அதை அலசி அராய்ந்தோமெனின்- அது தற்போதைய காலகட்டத்தில் கட்டாயம் தடுக்கப்பட வேண்டிய விடயமாகும்.

இதை இரண்டு பிரதான அம்சங்கள் மூலம் விளக்கலாம்.

முதலாவது-

இப்பெண்வீட்டு விருந்து சமூக வழக்கு என்ற அடிப்படையில் ஹலால் ஆகுமா?
அன்றாட வழக்கில் இருக்கும் ஒரு உலக காரியம் நாம் மக்கள் முன்னிலையில் ஹலால் என தீர்ப்பு கொடுப்பதாயின், அந்த வழக்கின் அடித்தளம் என்ன? அது எங்கிருந்து உருவானது? அதை முஸ்லிம்கள் யாரிடமிருந்து அனந்தரமாக்கி கொண்டார்கள்? அது யாருக்குரிய கலாச்சாரம்? போன்றவற்றை பொருட்படுத்துவது மிக முக்கியமானதாகும்.

ஏனெனில், நபி[ஸல்] அவர்கள் யூதர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மாற்று மதத்தவர்கள் தனதாக்கிக்கொண்ட, அவர்களுக்குரிய தனித்துவமான வணக்கவழிபாட்டு முறைகளையும், அவர்களுக்குரிய வழக்காறுகளையும் முஸ்லிம்கள் எடுத்து நடக்கக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருந்தார்கள்.

ஆகவே, அவர்களுக்கு ஒப்பாகும் விதத்தில் இருக்கும் முஸ்லிம்களின் பழக்கவழக்கங்களை கலைத்தெறிந்தார்கள்; அவர்களுக்கு மாறு செய்யுமாறு முஸ்லிம்களுக்கு கட்டளையும் பிறப்பித்தார்கள்.

நபி[ஸல்] அவர்கள் மீசையை கத்தரிக்கச்சொன்னதும், தாடியை வளரவிடச்சொன்னதும், நரைத்த முடிக்கு கறுப்பு சாயமிடுவதை தடுத்ததும், கணவன் தன் மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணை அறவே நெருங்காமல் மொத்தமாக ஒதுக்கி வைப்பதை தடுத்ததும், அல்லது மாதவிலக்குடைய காலங்களில் அவளோடு உறவு கொள்வதை தடுத்ததும்- இவையனைத்தும் முஸ்லிம்கள் அந்நிய மதத்தவர்களுக்குரிய வழக்குகள், கலாச்சாரங்களில் அவர்களோடு ஒத்துப்போகமல் அவர்களுக்கு மாறு செய்ய வேண்டும் என்பதற்காகத்தான்.

அவ்வாறெனின், இன்று திருமணத்தில் பெண் வீட்டு விருந்து ஹலாலாகும் எனும் தீர்ப்புக்கொடுத்தவர்கள்,
அவ்விருந்து எவர்களுக்குரிய சம்பிரதாயம்? அது எங்கிருந்து உருவானது? அது யாருக்குரிய கலாச்சாரம் என்பதை சிந்தித்து பார்த்து பத்வா கொடுத்திருக்கக்கூடாதா..?

உண்மையில், பெண் தரப்பால் விருந்து கொடுப்பதென்பது- இந்துக்கள் தொண்டு தொட்டு பரம்பரை பரம்பரையாக செய்து வரும் அவர்களுகென்ற தனித்துவமானதோர் கலாச்சாரமாகும். இவ்விருந்தை அவர்கள் வீட்டில் ஏற்பாடு செய்தால் பெண் வீட்டு விருந்து என்றும், கோவில்களில் ஏற்பாடு செய்தால் அதை அண்ணதானம் என்றும் கூறுவர்.

ஆக, பெண் வீட்டு விருந்து கொடுப்பதை தடுக்கும் விதமாக அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவிலே ஆதாரங்கள் பெறப்படாததனால்- அதை தாராளமாக பகிரலாம் என நாம் தீர்ப்புக்கொடுப்பதாயின்,
இந்துக்கள், பெளத்தர்கள், யூதர்கள், கிறிஸ்தவர்கள் போன்ற மாற்று மதத்தவர்கள் இன்று மரண வீட்டின் பெயரால், …
பிறந்த நாளின் பெயரால், …
பெண் பிள்ளைகள் பருவ வயதை அடைந்ததன் பெயரால், ….
வருடப்பூர்த்தி விழாக்களின் பெயரால்… செய்யப்படும் எத்தனையோ அனாச்சாராங்களை ஹலால் ஆக்க நேரிடும்.

ஆகவே, மாற்று மதத்தவர்களது கலியாண வைபவங்களில் முக்கியமானதொரு கலாச்சாரமாக கருதப்படும் இந்த பெண் வீட்டு சாப்பாட்டை முஸ்லிம்கள் எடுத்து நடப்பதென்பது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு அவர்கள் செய்வார்களெனின் அவர்கள் அந்த அந்நிய மதத்தவர்களுக்கு ஒப்பாகி அவர்களை சார்ந்தவர்களாகிவிடுவார்கள்.

ஏனெனில், அல்லாஹ் தஆலா யூத, கிறிஸ்தவர்களை தம் நேசகர்களாக எடுத்துக்கொள்வோரைப்பற்றிப்பேசுகையில் பின்வருமாறு கூறுகிறான்.

“உங்களில் யார் அவர்களை நேசகர்களாக எடுத்துக்கொள்கிறாரோ அவரும் அவர்களைச்சார்ந்தவர் தான். நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்கார கூட்டத்தினருக்கு நேர்வழிகாட்ட மாட்டான்’[அல்மாயிதா:51]

மேலும் நபி[ஸல்] அவ்வர்கள், மாற்றுமதத்தவர்களுக்கென்ற தனித்துவமான வழக்காறுகள் எம் நடைமுறையில் சிறிதளவேனும் வந்து விடுவதையும் பின்வருமாறு கடுமையாக எச்சரித்தார்கள்.

திட்டமாக நீங்கள் உங்களுக்கு முன்னிருந்தவர்களின் வழிமுறைகளை சாண் சாணாகவும் முழம் முழமாகவும் பின்பற்றுவீர்கள். எந்தளவுக்கெனில் அவர்கள் ஒரு உடும்பு பொந்தில் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப்பின்பற்றிவீர்கள்.[அல்புகாரி3456]

ஆக, இந்த பெண் வீட்டு விருந்து என்பது இன்றளவில் மாற்று மதத்தவர்களுக்குரிய கலாச்சாரமாக இருப்பதால் அதை முஸ்லிம்களாகிய நாம், நம் சமூகத்தில் பரவிவருவதை தடுப்பதோடு அவர்களுக்கு மாறு செய்யும் முகமாக நபி[ஸல்] அவர்கள் காட்டித்தந்த வலீமா என்பதை மாத்திரம் நிலைநிறுத்த வேண்டும்.

அடுத்து, இஸ்லாமிய திருமணத்தில் பெண்வீட்டு சாப்பாடு என்பது தடுக்கப்படவேண்டியாதாகும்
என்பதை உணர்த்தும் இரண்டாவது விடயம்…

ஒரு சமூகக்கொடுமையை அங்கீகரிக்கும் முகமாக வழங்கப்படும் பத்வா அறிவுடமையானதா?

நபி[ஸல்] அவர்கள் தம் பிரச்சாரப் பணியில் நன்மையை ஏவி, தீமையை தடுத்து மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது தூர நோக்கோடு மிக நூதனமாகவும், நிதானமாகவும் நுட்பமாக சிந்தித்து செயற்பட்டிருக்கிறார்கள்.

அதற்காகத்தான் அடிப்படையில் அனுமதியான சில விடயங்களை குறித்ததொரு காலப்பகுதிக்கு தடை விதித்து மற்றைய காலங்களில் அவற்றை அனுமதியாக்கினார்கள்.

மேலும் சில இடங்களில் அவற்றுக்கு தடை விதித்து மற்றைய இடங்களில் அவற்றை அனுமதியாக்கினார்கள்.

இவ்வாறு நபி[ஸல்] அவர்கள் சந்தர்ப்ப, சூழ்நிலையின் நலவு மற்றும் கெடுதியை கருத்திற்கொண்டு தீர்ப்பெடுத்தமைக்கான சான்றுகள் ஹதீஸ்களில் நிறையவே காணலாம்.

உதாரணமாக,
இஸ்லாத்தில் ஆரம்ப காலப்பகுதியில் ஒருமுறை ஹஜ்ஜுப்பெருநாளுடைய சந்தர்ப்பத்தில் கிராமப்புற ஏழை மக்களில் சிலர் வந்தனர். அப்போது நபி[ஸல்] அவர்கள் ஸஹாபாக்களைப்பார்த்து ‘[குர்பான் இறைச்சிகளை] மூன்று நாட்களுக்கு மாத்திரம் சேமித்து வையுங்கள். எஞ்சியதை தர்மம் செய்யுங்கள்’ எனக்கூறினார்கள்.
ஆனால், அடுத்த ஆண்டு அந்த கிராமப்புற ஏழை மக்கள் இருக்காததன் காரணத்தால் மூன்று நாட்களை விட அதிகமாக சேமித்து வைப்பதற்கு நபி[ஸல்] அவர்கள் அனுமதி வழங்கினார்கள்.(ஹதீஸ் சுருக்கம்-பார்க்க ஸஹீஹ் முஸ்லிம்1971]

ஆகவே, மேற்படி சம்பவத்தில் நபி[ஸல்] மக்கள் நலன் கருதி சூழ்நிலைக்கேற்றவாறு ஒரே விடயத்தை இரு விதமாக அணுகியிருக்கிறார்கள்.

இதற்கு இன்னுமொரு உதாரணம் கூறுவதாயின்-
நபி[ஸல்] அவர்கள் ‘நான் உங்களுக்கு கப்றுகளை தரிசிப்பதை தடுத்திருந்தேன். ஆனால் தற்போது நீங்கள் அவற்றை தரிசியுங்கள்’ எனக்ககூறினார்கள்.[முஸ்லிம்977]

கப்ருகளை தரிசித்தலானது அடிப்படையில் ஆகுமான விடயமாகும். ஆனால் இங்கு நபி[ஸல்] அவர்கள் அதை ஆரம்ப காலப்பகுதிகளில் தடுத்தார்கள்.
ஏனெனில், அக்காலத்தில் ஸஹாபாக்கள் ஜாஹிலிய்யக்காலத்தோடு மிக அண்மித்திருந்ததால் ஜாஹிலிய்ய காலத்திற்குரிய தவறான காரியங்கள் மீண்டும் இஸ்லாத்தில் பரவிவிடுவதைப்பயந்தார்கள்.
பின்னர் காலம் செல்லச்செல்ல நபி[ஸல்] அவர்கள்- ஜாஹிலிய்யக்கால பழக்கங்கள் சமூகத்திலிருந்து மொத்தமாக நீங்கியிருப்பதையும், ஸஹாபாக்களில் தெளிவான நிலைமையை கண்டதும் கப்ருகளை தரிசிக்குமாறு ஆர்வமூட்டினார்கள்.

இது போன்ற நிலமையை விளக்கக்கூறும் இறைத்தூதரின் முன்மாதிரியிலிருந்து மற்றுமொரு மிகப்பெரும் ஆதாரம் ஸகாத் வசூலிக்கச்சென்ற ஸஹாபியோடு தொடர்புபட்ட ஹதீஸ்.

ஒருமுறை நபி[ஸல்] அவர்கள் ஒரு மனிதரை ஸகாத் வசூலிப்பதற்காக பொறுப்பாக்கினார்கள். அம்மனிதர் தன் பணியை முடித்து வந்ததும் அவருக்கு அன்பளிப்பு கொடுக்கப்பட்டதாகக்கூறி தன் பங்கை நபி[ஸல்] அவர்களிடம் எடுத்துக்காட்டினார்கள். அப்போது நபி[ஸல்] அவர்கள் கடும் கோபத்துக்குள்ளாகி-
“நாம் ஸகாத் வசூலிப்பதற்காக நியமித்த பொறுப்புதாரிக்கு என்ன நேர்ந்தது? அவர் நம்மிடம் வந்து ‘இது நீங்கள் என்னை நியமித்த பொறுப்பிலே சேர்க்கப்பட்டதாகும். இது எனக்கு அன்பளிப்பாக கொடுக்கப்பட்டதாகும்’ எனக்கூறுகிறார். அவர் தன் தந்தையின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் அமர்ந்து தனக்கு அன்பளிப்பு வருகிறதா இல்லையா எனப்பார்க்கட்டும்’’ எனக்கூறினார்கள். [ஹதீஸ் சுருக்கம், பார்க்க அல்புகாரி 6636]

இங்கே நாம் நோக்க வேண்டிய விடயம் யாதெனில்- அன்பளிப்பென்பது மார்க்கத்தில் அடிப்படையிலே அனுமதிக்கப்பட்டதும் ஆர்வமூட்டப்பட்டதுமாகும்.
இங்கே, அன்பளிப்பு கொடுத்த மக்களோ, அல்லது அன்பளிப்பை பெற்றுக்கொண்ட ஸஹாபியோ அந்த அன்பளிப்பை ஆளுக்காள் ஹராமான அடிப்படையில் பரிமாரிக்கொள்ளவில்லை. அவ்வாறு ஹராமாக ஆகிவிடும் என்றிருந்தால் அவர்கள் கொடுத்திருக்கவுமாட்டார்கள். அவர் அதை வாங்கியும் இருக்க மாட்டார்.

ஏனெனில், அவர்களது நோக்கமும் நல்லதே! மற்றும் அன்பளிப்பு கொடுத்தல் எனும் செயலும் அனுமதியானதே!

ஆனால் நபி[ஸல்] அவர்கள் கோபப்பட்டர்கள்; ஆத்திரப்பட்டார்கள்; காரமான வார்த்தைகளை பிரயோகித்து அதை கண்டித்தார்கள். காரணம், அந்த அன்பளிப்பு பரிமாரப்பட்ட இடமும் தருணமும் தவறானதாகும்.

அதாவது, இன்று இந்த இடத்தில் முறையாக எடுக்கப்படும் இந்த அன்பளிப்பானது நாளை லஞ்சம், வற்புறுத்தல் போன்ற மோசடிகளின் பெயரால் பரிமாறப்படலாம். சேர்க்கப்படும் ஸகாத் தொகையும் நாளுக்கு நாள் குறைந்து கொண்டும் செல்லலாம்.
ஆக, அடிப்படையில் அனுமதியாக இருக்கும் இந்த அன்பளிப்பு பல சந்தர்ப்பங்களில் ஹலாலாக இருந்த போதிலும் மேற்படி சந்தர்ப்பத்தில் நபி[ஸல்] அவர்கள் அதை ஹராமாக்கினார்கள்.

இந்த அடிப்படையில், திருமணத்தில் பெண் வீட்டு விருந்து’ என்பதை அணுகினோமெனின்-
இன்றைய காலகட்டத்தைப்பொறுத்தவரையில் இந்த பெண் வீட்டு சாப்பாடானது ஆண் தரப்பு, பெண் தரப்பினரிடம் வலுக்கட்டாயப்படுத்தி நிர்ப்பந்த்தித்து கேட்குமளவுக்கு நிலைமை மோசமடைந்து செல்கிறது. அது வெகு சீக்கிரமாக சமூகக்கொடுமையொன்றாக உருமாறும் என்பதை உறுதிப்படுத்துமளவுக்கு சான்றுகள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.

அது மட்டுமல்லாமல், இந்த பெண் வீட்டு விருந்துபசாரத்தால் ஆணை விட பெண் தரப்பினருக்கு செலவீனங்கள் பல மடங்காக அதிகரித்துச்செல்கின்றன.

இது மணமகனால் கொடுக்கப்பட வேண்டிய நபி[ஸல்] அவர்கள் சுன்னாவாக வலியுறுத்தியிருக்கும் மஹர்-திருமணக்கொடை என்பதன் கணதியையும் அதன் பெறுமதியையும் இல்லாதொழிக்கின்றது.

இன்னும் சொல்லப்போனால் ஒருகாலத்தில் இந்த பெண் வீட்டு விருந்து மற்றும் சீதனம் போன்றவற்றால் வலீமா எனும் சுன்னா மக்களிடத்தில் நடைமுறையில் இருக்கவில்லை.

ஆக, இந்த பெண் வீட்டு விருந்தின் பிண்ணனியில் இது போன்ற இடர்கள், தீங்குகள் காணப்படுவதால் அவற்றைத் தடுக்கும் முகமாக இவ்விருந்து தடுக்கப்பட்டதாக அமைவது அவசியம். (سدا للذرائع)
அதாவது, அடிப்படையில் மார்க்கத்தில் அனுமதியாக்கப்பட்டிருக்கும் விருந்தானது அநேகமான சந்தர்ப்பங்களில் ஹலாலாக இருந்த போதிலும் மேற்படி நிலைமையையும் சூழ்நிலையையும் கருத்திற்கொண்டு கட்டாயம் தடுக்கப்பட வேண்டும்..
இவ்வாறான நிலைமைகளின் மையக்கருவை அடிப்படையாக வைத்து தான் இஸ்லாமிய சட்ட வல்லுனர்கள் ஒரு சட்டக்கலை கோட்பாட்டை விதித்திருக்கிறனர்.

الحكم يدور مع علته وجودا وعدما
இதன் தமிழ்மொழிபெயர்ப்பை விளக்கக்கூறின்-
குறித்ததொரு விடயத்தில் தீர்மானிக்கப்படும் சட்டமானது அதன் காரணிகளில் தான் தங்கியிருக்கிறது. அந்தக்காரணிகள் இருக்கும் போது எடுக்கப்படும் சட்டமும் அவை இல்லாத போது எடுக்கப்படும் சட்டமும் ஒன்றுகொன்று வேறுபடும்.
அதாவது, திருமணத்தில் பெண் வீட்டு விருந்தானது, அது பெண் தரப்பினருக்கு ஒரு பாரமாக மாறியமை, அது அவர்கள் மீது வலுக்கட்டாயப்படுத்தப்படுகின்றமை, ஆண் தரப்பால் நிறைவேற்றப்பட வேண்டிய வலீமா, மஹர் போன்றவற்றுக்கு சமூகத்தில் பெறுமதியற்றுப்போகின்றமை போன்ற காராணிகள் பெறப்படும் காலமெல்லாம் அது அனுமதியற்றதாக மாறுகிறது.

ஆக, முடிவாகச்சொல்வதாயின் இஸ்லாமிய திருமணத்தில் பெண் வீட்டு சாப்பாடானது அல்குர்ஆன் மற்றும் அஸ்ஸுன்னாவினது ஒளியில் பார்க்கும் போது நாம் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டிய அம்சமாகும்.

அதை நாம் மக்கள் மன்றத்தில் சொல்லும் போது “பேணுதல் அடிப்படையில் விரும்பியவர்கள் தவிர்ந்து கொள்ளலாம்’ எனக்கூறுவதே முற்றிலும் தவறாகும்.
ஏனெனில், பேணுதல் ரீதியாக தவிர்ந்து கொள்ளுதல் என்பதன் அடிப்படை அம்சம் அது அனுமதியானது என்பதாகும்.

ஆனால், இந்த பெண் வீட்டு விருந்தானது மாற்று மதத்தவர்களது கலாச்சாரத்திற்கு ஒப்பாகுவதோடு அது சமூகத்தில் பலதரப்பட்ட தீங்குகளுக்கான வாயிலையும் திறந்து விடுகின்றது.

இதுவே, இந்த பெண் வீட்டு விருந்து தடுக்கப்பட வேண்டும் என்பதற்குரிய போதுமான சான்றாகும்.
அதனோடு சேர்த்து, இங்கே நாம் நோக்க வேண்டிய இன்னுமோர் முக்கிய விடயம் இருக்கிறது.
அதாவது, மார்க்கத்தில் நாம் சில சுன்னாக்களை நடைமுறைப்படுத்தும் போது அதிலே பெருமை, கர்வம், முகஸ்துதி போன்ற காரணிகள் இருக்குமாயின் அது அல்லாஹ்விடத்திலும் அவனுடைய தூதரிடத்திலும் பலிப்புக்குரியது என்பது நாம் அறிந்ததே!

ஆனால் நபி[ஸல்] அவர்கள் சில சந்தர்ப்பங்களில் பொறாமை, பெருமை, மக்கள் திருப்தி போன்றவை ஏற்படுவதற்கு இடம்பாடு இருக்கும் சில விடயங்களையும் பலிப்புக்குரியதாகவே கருதினார்கள்.

எவ்வாறெனில், நபி[ஸல்] அவர்கள் கூறினார்கள்;
வருபவர்கள்[ஏழைகள்] தடுக்கப்பட்டு மறுப்பவர்கள்[செல்வந்தர்கள்] அழைக்கப்படும் மணவிருந்து தான் கெட்ட விருந்தாகும்.[பார்க்க முஸ்லிம்1432]

இங்கு நாம் நோக்க வேண்டிய விடயம் யாதெனில், நபி[ஸல்] அவர்கள் இந்த ஹதீஸில் எண்ணத்தை பொருட்படுத்தவில்லை. மாறாக, வெளிப்படையை வைத்து தான் அந்த விருந்து கெட்டது என மக்களுக்கு தெரியப்படுத்தினார்கள்.

அதாவது விருந்து கொடுப்பவர் எனது எண்ணம் தூய்மையாக இருக்கிறது எனச்சொல்லிக்கொண்டாலும் அந்த விருந்துக்கு பணக்காரர்கள் வரவழைத்து ஏழைகள் விடப்படுவார்களானால் அது கெட்ட விருந்தாகவே கருதப்படும். ஏனெனில், அது பெருமைக்குரியவர்களின் விருந்துக்கு ஒப்பாகிறது.
அதுமட்டுமல்லாமல், சுன்னாவாக வலியுறுத்தப்பட்ட ஒரு விடயமே இது போன்ற சந்தர்ப்பங்களில் கெட்டதாக மாறிவிடுமென்றால்,
எந்த ஒரு அடிப்படையும், வழிகாட்டலுமே இல்லாத இந்த பெண்வீட்டு விருந்தின் நிலை என்னவாகும்?
அந்த வகையில், இன்று பெண் வீட்டு விருந்தைக்கொடுக்கும் பெண் தரப்பினரில் போட்டி, பொறாமை, பெருமை போன்றவற்றை இன்று நாம் சமூகத்தில் சிலரில் வெளிப்படையாகக்காண்கிறோம்.

அதேநேரம் எம்மில் சிலர் ‘நாங்கள் பெருமைக்காக விருந்து போடவில்லை. எமக்கு வசதி இருப்பதால் அதை ஏற்பாடு செய்கிறோம்’ எனக்கூறினாலும், அது பெருமை அல்லது முகஸ்துதிக்குரியவர்களின் விருந்துக்கு ஒப்பாகின்றது என்பதை மறுக்க முடியாது.
ஆக; திருமணத்தில் பெண்வீட்டு விருந்து மாற்றுமதத்தவர்களின் கலாச்சாரங்களுக்கு ஒப்பகுவதால் அது அடிப்படையிலே தடுக்கப்பட வேண்டும்.

மேலும் அது பல இடர்களை சுமந்து வருவதால் இந்த பாவத்தை நபி[ஸல்] அவர்கள் தீர்ப்பளிப்பதில் கையாண்ட நுட்பமான பொறிமுறையும் மற்றும் இஸ்லாமிய சட்டக்கலை கோட்பாடுகளையும் வைத்து நிறுத்துப்பார்க்கும் போது அது தடுக்கப்பட வேண்டும் என்பதில் சந்தேகம் கிடையாது.

இறுதியாகச்சொல்வதாயின்- நாளுக்கு நாள் இஸ்லாமிய உம்மத்திற்கு பெரும் சவாலாக மாறி வரும் இந்த பாவத்தை ஈமானிய ரோஷமுள்ள எந்த ஒரு உள்ளமும் அனுமதிக்காது என்பதும் தீர்க்கமானதே!

அல்லாஹ் மிக அறிந்தவன்!
Previous Post Next Post