சூனியத்தை உண்மைப்படுத்துபவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்ற ஹதீஸின் சரியான விளக்கம் என்ன? PJ & TNTJ கூட்டத்தினருக்கான மறுப்பு!

அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் கூறினார்கள், மூன்று வகையினர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். ( அவர்கள்) தொடர்ந்து மது அருந்துபவர், உறவுகளை துண்டிப்பவர், சூனியத்தை உண்மைப்படுத்துபவர்.

 (அறிவிப்பாளர் அபு மூஸா அல்அஷ்அரி ரலி, 
நூல் அஹமத்)

இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து PJ & TNTJ கூட்டத்தினர் சூனியத்தினால் எந்த ஓரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அதனால் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்று நம்புவது மறைமுகமான இணைவைப்பாகும். எனவே சூனியத்தை நம்பி சொர்க்கத்தை இழந்திட வேண்டாம் என்ற ஒரு வாதத்தை வைக்கின்றனர். 

இவர்களின் இந்த வாதம் சரியானதா? இதனுடைய உண்மை நிலை என்ன என்பதை இனி பார்ப்போம்.

1 - சூனியத்தை நம்புபவர்கள் சொர்க்கம் செல்ல மாட்டார்கள் என்ற ஹதீஸை இமாம் அஹமது இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் தனது முஸ்னதில் பதிவு செய்துள்ளார்கள். அவ்வாறே நபி ஸல் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதால்  ஏற்பட்ட பாதிப்பு தொடர்பான  ஹதீஸையும் பதிவு செய்துள்ளார்கள். மேலும் அந்த பாதிப்பு 6 மாதங்கள் வரை இருந்தது தொடர்பான அறிவிப்பையும் தனது முஸ்னதில் இடம் பெற செய்துள்ளார்கள்.
 
தனது ஹதீஸ் கிரந்தத்தில் இரண்டு வகையான ஹதீஸையும் பதிவு செய்த  இமாம் அஹமது இப்னு ஹம்பல்  ரஹ் அவர்கள் தொடர்பாக PJ & TNTJ நிலைபாடு என்ன?  அவர்கள் சொர்க்கம் செல்வார்களா? மாட்டார்களா?

2 - ஹதீஸின் தமிழாக்கத்தை மட்டுமே படித்து சூனியத்தினால் எந்த ஓரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அதனை உண்மை என்று நம்புபவர்கள் சொர்க்கம் செல்ல முடியாது என்று கூறும் PJ & TNTJ வினரின் நிலைபாடு தான் சரியானது என்றால்?

இந்த ஹதீஸை பதிவு செய்த மூல ஆசிரியர் இமாம் அஹமது இப்னு ஹம்பல் ரஹ் அவர்கள் இதனை எப்படி பதிவு செய்தார்கள்?  இமாம் அவர்களுக்கு தெரியாத மறைமுகமான ஷிர்க் உங்களுக்கு மட்டும் தெரிந்து விட்டதா? 

3 - நபி ஸல் அவர்களுக்கு சூனியத்தினால் ஏற்பட்ட பாதிப்பை பதிவு செய்த ஹதீஸ் துறையின் இமாம்களான இமாம் புகாரி ரஹ், இமாம் முஸ்லிம் ரஹ்  போன்ற அறிஞர்கள் எல்லாம் இந்த மறைவான ஷிர்க்கை அறியாமல் பதிவு செய்து விட்டார்களா?

இது எப்படி சாத்தியம் ஆகும்? அல்குர்ஆனை சரியாக ஓத தெரியாத  PJ & TNTJ கூட்டத்தினருக்கு  தெரிந்த சூனியத்தை நம்புவதினால் வருகின்ற மறைவான ஷிர்க். பல இலட்சம் ஹதீஸ்களை மனப்பாடம் செய்த, தன் வாழ்க்கையையே இஸ்லாத்திற்காக அர்ப்பணித்த அறிஞர்களுக்கு தெரியாமல் போய் விட்டது?

4 - ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை நபி ஸல் அவர்களோடு தொடர்பு படுத்தி விட்டால் அதிலுள்ள   தகவல்கள், சம்பவங்கள் 100% உண்மையானது, உறுதியானது என்பதை ஒரு முஸ்லிம் நம்பிக்கை கொள்வது இஸ்லாத்தின் அடிப்படை அம்சமாகும். 
நபி ஸல் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டு அதனால் ஏற்பட்ட பாதிப்பை நபி ஸல் அவர்களிடமிருந்து ஆயிஷா ரலி, ஜைத் இப்னு அர்கம் ரலி போன்ற ஸஹாபாக்கள் அறிவித்த ஹதீஸையும் இப்படி தான் நாம் நம்ப வேண்டும். இஸ்லாமிய உம்மத் ஸஹாபாக்கள் காலம் தொட்டு இன்றுவரை இப்படி தான் இதனை நம்பி வருகிறது.  

உண்மை இப்படி இருக்க பின்னால் வந்த ஒருவர் இந்த நம்பிக்கைக்கு மாற்றமாக சூனியத்தினால்  எந்த ஓரு பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அவ்வாறு நம்புவது மறைமுகமான ஷிர்க் ஆகும் என்று கூறி ஹதீஸ்களை மறுப்பது எவ்வாறு சரியான வாதமாகும்?    

தனது குறைமதியை வைத்து நடந்த ஒரு சம்பவத்தை மறுப்பது எப்படி சரியான நம்பிக்கை ஆகும்?

இதனை விட தெளிவான வழிகேடு வேறு என்னவாக இருக்க முடியும்?

5 - சூனியத்தை உண்மைப்படுத்துபவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்பது 

சூனியம் என்ற ஓரு கலை உண்டு, அதில் ஈடுபடுபவர் குஃப்ர்,  ஷிர்க்கான காரியங்களை செய்து  ஷைத்தான்களிடம் உதவியை பெற்று  சூனியம் செய்வார். அல்லாஹ்வின் அனுமதி இருந்தால் அதில் பாதிப்பு ஏற்படும்.
அல்லாஹ்வின் அனுமதி இல்லை என்றால் எந்த ஒரு பாதிப்பையும் சூனியத்தினால் ஏற்படுத்த முடியாது என்று நம்புவது குறித்து அது கூறவில்லை.

 இதற்கு ஆதாரமாக அல்குர்ஆனின் 2: 102  வசனத்தையும், நபி ஸல் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ்களையும் கூறலாம்.

6 - சூனியத்தை உண்மைப்படுத்துபவர் சொர்க்கம் செல்ல மாட்டார் என்பதற்கான சரியான விளக்கம் என்னவெனில் 

சூனியத்தில் ஈடுபடுகின்றவருக்கு மறைவான ஞானம் தெரியும். அவர் கூறியது அப்படியே நடக்கும் என்று  நம்பிக்கை கொள்வதை பற்றி தான் இந்த ஹதீஸ் கூறுகிறது. ஆகவே தான் சூனியம் ஷிர்க்கோடு இணைந்து வந்துள்ளது.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரலி கூறினார்கள், எவர் ஜோதிடனிடமும் அல்லது  சூனியக்காரனிடம் அல்லது  குறிசொல்பவனிடம் வந்து அவர்கள் சொல்வதை உண்மையென நம்புகிறாரோ, அவர் முஹம்மத் ஸல் அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட அல்குர்ஆனை நிராகரித்தவர் ஆவார். (நுல்: பைஹகி)

இஸ்லாமிய அறிஞர்கள் இந்த விளக்கத்தையே அளித்துள்ளார்கள்.

ஆக்கம்:
ஹசன் அலி உமரி
Previous Post Next Post