நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும் பின்பற்றுவதிலுமுள்ள ஒழுங்கு

ஹதீஸ் தெளிவுரை:

அரபு: அப்துர்ரஹ்மான் இப்னு பஹ்த் அல்வுத்ஆன் அத்தவ்ஸிரிய்

தமிழில்: இம்தியாஸ் யூசுப் ஸலபி

நபி (ஸல்) அவர்களை நேசிப்பதும் பின்பற்றுவதிலுமுள்ள ஒழுங்கு

صحيح البخاري (8:129)
عن عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ: كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الخَطَّابِ، فَقَالَ لَهُ عُمَرُ: يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ» فَقَالَ لَهُ عُمَرُ: فَإِنَّهُ الآنَ، وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: الآنَ يَا عُمَرُ)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நபியவர்கள் உமர் (ரலி) அவர்களின் கையை பிடித்துக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) நபியவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் தூதரே! என் உயிரைத் தவிர மற்ற எல்லா பொருட்களையும் விட நீங்கள் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர்கள் என்று கூறினார்கள். இல்லை! என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அந்த அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு கூறுகிறேன். உமரே! உமது உயிரை விட நான் நேசத்திற்குரியவராக ஆகும்வரை உமது ஈமான் பூரணமடையாது என்றார்கள்.அப்போது உமர் (ரலி) அல்லாஹ் வின் மீது சத்தியமிட்டு கூறுகிறேன் என் உயிரை விட நீங்கள் எனக்கு நேசத்திற்குரியவர்கள் என கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இப்போதுதான் (ஈமான் பூரணமடைந்துள்ளது) என்றார்கள்.
அறிவிப்பவர்:அப்துல்லாஹ் இப்னு ஹிஷாம்(ரலி) (நூல்:புகாரி)

இந்த ஹதீஸின் வழிகாட்டல்கள்:

1. முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்று சாட்சி பகரும் வரை ஒருவரது ஈமானும் அவரது மார்க்கமும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

இதன் அர்த்தம் என்னவெனில், முஹம்மத் (ஸல்) அவர்கள் முழு மனித சமூகத்திற்கும் இறைதூதராக அனுப்பப்பட்டார்கள் என்று உண்மையாக ஈமான் கொண்டு ஏற்றுக்கொள்வதும் உறுதிப்படுத்துவதுமாகும்.

அதாவது, இறைதூதர் (ஸல்) அவர்கள் அறிவித்தவைகளை ஏற்றுக்கொள்வதும் அவர்கள் ஏவியவைகளுக்குக் கட்டுப்படுவதும், அவர்கள் தடுத்தவைகளையும் எச்சரிக்கை செய்தவைகளையும் விட்டு தவிர்ந்து கொள்வதும் அவர்கள் மார்க்கமாக்கியதைக் கொண்டே அல்லாஹ்வை வணங்கப்படுவதற்குரியவனாக ஏற்றுக் கொள்வதுமாகும்.

2. இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.
அல்லாஹ்வின் மீதும் அவனது தூதர் மீதும் நேசம் கொள்வது ஈமானின் கடமைகளில் பிரதானமான அம்சமாகவும் இஸ்லாமிய சட்டங்களில் தலையாயக் கடமையாகவும் உள்ளது. மார்க்கம் மற்றும் ஈமானிய காரியங்கள் அனைத்திலும் இதுவே அடிப்படையுமாகும். (நூல்:அத்துஹ்பதுல் இராகி.பக்கம். 58)

இமாம் குர்துபி (ரஹ்) கூறுகிறார்கள்: நேசிக்கப்படக் கூடிய அனைத்தையும் விட முஹம்மத் நபி(ஸல்)அவர்கள் மீதுள்ள நேசத்தை முற்படுத்த வேண்டும் என்பதில் இஸ்லாமிய உம்மத்தில் எவ்வித கருத்துவேறுபாடும் இல்லை. (நூல்:அல்ஜாமிஉல் அஹ்காம். 8/95)

மற்றுமொரு ஹதீஸில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

“தங்களுடைய பெற்றோர் பிள்ளைகள் மற்றும் மனிதர்கள் அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவராக ஆகும்வரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

3. நபி (ஸல்) அவர்கள் மீது நேசம் கொள்வதன் அடையாளங்களும் அந்நேசத்தை அதிகரிப்பதற்கான காரணிகளும் அதனை உள்ளங்களில் வளர்ப்பதற்கான வழிகளும் பின்வருமாறு காணப்படுகின்றன.

நபி(ஸல்) அவர்கள்; ஏவியவைகளுக்கு கட்டுப்படுவதும் அவர்கள்; தடுத்த வைகளை விட்டும் தவிர்ந்து கொள்வதும். இரவில் நின்று வனங்குவதும், அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அவனை நினைவுகூர்வதும் நோன்பு நோற்பதும் தொழுகையை நிலை நாட்டுவதும் போன்ற இபாதத்களில் மார்க்கம் கடமையாக்கிய அனைத்து விவகாரங்களிலும் நபியை முன்மாதிரி கொண்டு பின்பற்றுவதும்.
மக்களுடனான உறவுகள், பண்பாடுகள், தூக்கம், இயற்கையான அம்சங்கள், ஆடை அலங்காரங்கள் போன்ற வணக்க வழிபாடுகள் சாராதவைகளிலும் இறைத் தூதரைப் பின்பற்றுவதும்.
சுன்னாவை நேசித்தலும் அதற்கு எதிராக உள்ளவை கண்டு கிளர்ந் தெழுவதும் சுன்னாவின் பால் அழைப்பு விடுத்தலும் அதனை பரப்புவதும் அதனை செயற்படுத்துவதில் மகிழ்ச்சியடைதலும்.
ரஸூலுல்லாஹ்வின் பெயரில் ஸலவாத்தும் ஸலாமும் அதிகமாகக் கூறுதலும் -குறிப்பாக அவர்களுடைய பெயர் குறிப்பிடப்படும்போதும் ஜும்ஆவுடைய தினத்திலும் ஸலவாத்து கூறுதலும்.
நபி (ஸல்) அவர்களின் ஸீரா (வரலாறு) பற்றிய நூல்களையும் பொதுவாக ஹதீஸ் நூற்களையும் வாசித்து விளங்கிக் கொள்வதும் பாடங்கள் மற்றும் விரிவுரைகள் மூலம் அஸ்ஸீராவை செவிமடுப்பதும் நேரடியாக வாசித்துக் காட்டக் கூடியவரிடமிருந்தும் அல்லது ஒலி ஒளி நாடாக்கள் மூலமாகவும் அல்லது அது போன்ற வழிகளினூடாகவும் ஸீராவை அறிந்து கொள்வதும் நேசத்தை அதிகரிப்பதற்கான காரணிகளாகும்.
(இதை விடுத்து) நபிகளாரின் பெயரை மட்டும் தெரிந்து வைத்திருப்பவனுக்கு எப்படி நேசம் அதிகரிக்கும்? அவன் எப்படி நபிகளாரை பின்பற்றுபவனாக இருப்பான்.?
(மேலும்) நபி(ஸல்) அவர்களின் ஹதீஸ்களை அறிந்துகொள்வதும், அவை களை செவி மடுப்பதும் அவைகளை அதிகமாக மீட்டுவதும் அவைகளை மனனமிடுவதில் ஆர்வம் கொள்வதும் அதன் கருத்துக்களை விளங்கிக் கொள்வதும் மக்களுக்கு அவைகளை எத்திவைப்பதும் அறிவுசார்ந்த விடயங்களில் அவைகளைக் கொண்டு ஆதாரங்கள் எடுப்பதும் அவைகளை நேசிப்பதும் அவைகளைக்; கொண்டு மகிழ்ச்சி அடைவதும் தகுதியுடையவர் ஹதீஸ்களிலிருந்து சட்டங்களை எடுப்பதும் நேசத்தை அதிகரிப்பதற்கான வழிகளாகும்.
நபிகளாரை காண்பதில் ஆசைக் கொள்ளவதும்;(நேசத்திற்கான வழியாகும்)
எனது உம்மத்தில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர்கள் யாரெனில் எனக்குப் பின்னர் சில மனிதரக்ள் வருவார்கள். அவர்கள் அவர்களுடைய குடும்பத்துடனும் பொருட்களுடனும் என்னைக் காண வேண்டும் என ஆசைப்படுபவர்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பர்: அபூ ஹுரைரா (ரழி), நூல்: முஸ்லிம்)

நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் மீது நேசம் கொள்வதும் அவர்களது நடை முறைகளை மீட்டுவதும் மக்கள் மத்தியில் அதனை பரப்புவதும் அந்நேசத்தின் வெளிபாடாகும்.

நபி(ஸல்) அவர்களை நேசிக்கக்கூடியவர்களுடன் அமர்ந்துகொள்ளவும் வேண்டும். (காரணம்) அவர்கள் நபிகளாரை அதிகமாக நினைவூட்டு வார்கள். அவர்களது ஸீராவையும் ஹதீஸ்களையும் குணநல பண்களையும் அதிகமாக படிப்பார்கள். எனவே இவ்வாறான சபைகளிலிருந்து விலகிச் செல்லாதவர்களாகவும் இருக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களை நேசிக்கக்கூடியவர்களை நேசிக்கவும் அவர்கள் மீது கோபம்கொள்கின்றவர்களை கோபிக்கவும் வேண்டும். நபி (ஸல்) விரும்பக் கூடிய வைகளை நேசம் கொள்ளுவதும். அவர்கள் வெறுத்தவைகளை வெறுத்து விடுவதும் நேசத்தின் வெளிப்பாடாகும்.
நபி (ஸல்) அவர்களை நேசம் கொள்வதில் எமது குழந்தைகளை பயிற்று வித்தலும் அந்த நேசத்தை அவர்களது உள்ளங்களில் வளர்த்தலும் அவசியமாகும்.

4. நபி(ஸல்) அவர்களை ஸலபுகளான முன்னோர்கள் நேசித்த முறைகள் (நமக்கு) அழகிய பாடமாகும்:

உங்களது தந்தையை விட மனிதர்களில் நேசத்திற்குரியவர் எவரும் எங்களுக்கு இருக்கவில்லை. உங்களது தந்தைக்குப் பிறகு உங்களை விட நேசத்திற்குரியவர் எவருமில்லை என உமர் (ரழி) அவர்கள் பாதிமா அவர்களை பார்த்து கூறினார்கள். (நூல்: அஹ்மத்)

உஹத் யுத்தத்தின் போது ஓர் இரவு எனது தந்தை என்னை அழைத்து மகனே! இந்த யுத்தத்தில் நபித்தோழர்களில் முதலாவதாக கொல்லப்படுபவர்களில் ஒருவராக நான் இருப்பேன் என கருதுகிறேன். எனக்குப் பிறகு மிகச் சிறந்தவரான நபி (ஸல்) அவர்களை விட யாரையும் உனக்கு விட்டுச் செல்லவில்லை. எனக்கு கடன் இருக்கின்றது. அதனை நீ ஒப்படைத்துவிடு. மேலும் உனது சகோதரிகளுக்கு நல்லதை உபதேசிப்பாயாக எனக்கூறினார் (அடுத்த நாள் காலை நடந்த யுத்தத்தில் என் தந்தை கொல்லப்பட்டார்) என ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி)

உஹத் யுத்தத்தின்போது மக்கள் நபிகளாரை விட்டும் பிரிந்து சென்றனர். அபூ தல்ஹாவோ நபியவர்களுக்கு முன்னால் நின்று தமது கேடயத்தால் தடுத்துக் கொண்டிருந்தார்கள். அபூ தல்ஹா (ரழி) மிக துல்லியமாக அம்பு வீசக் கூடிய மனிதர். அன்றைய தினம் இரண்டு அல்லது மூன்று வில்லுகளை உடைத்தார்கள். எவரேனும் ஒருவர் அம்புக்கூட்டுடன் செல்வதைக்கண்டால் அதனை அபூதல் ஹாவிடம் போட்டு விட்டு செல் என நபி(ஸல்) அவர்கள் கூறுவார்கள். அந்நேரத்தில் நபி(ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை(அவர்களது நிலவரங்களை காண்பதற்கு) எட்டிப் பார்த்தார்கள். அப்போது அபூதல்ஹா(ரலி) அவர்கள் அல்லாஹ்வின் துhதரே உங்களுக்கு என் தாயும் தந்தையும் அர்ப்பணமாகட்டும். எட்டிப்பார்க்காதீர்கள். எதிரிகளின் அம்புகளில்; ஒன்று உங்களைத் தாக்கி விடக்கூடும். என்மாரப்பு உங்கள் மார்ப்புக்கு (நெஞ்சிப்பகுதிக்கு) கேடயமாக இருக்கும் என கூறினார்கள் என்று அனஸ் (ரலி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி.)

5. ஒரு முஸ்லிமுக்கு நபி(ஸல்) அவர்களை நேசிக்க தூண்டும் காரணிகள் பல உள்ளன. அதில் சில பின்வருமாறு:

நபி (ஸல்) அவர்கள் தனது சமூகத்திற்கு நம்பிக்கைக்குரிய ஒரு உபசேதியாக திகழ்ந்தார்கள்.
இருள்களிலிருந்து ஒளியின் பக்கம் அழைப்பு விடுத்த அல்லாஹ்வின் வஹீயை நபி(ஸல்) அவர்களிடமிருந்தே மக்கள் பெற்றனர். அதுவே அவர்களுக்குரிய வெற்றி யாகவும் இருந்தது. நபி (ஸல்) அவர்களை பின்பற்றிய ஒவ்வொருவரின் வெற்றிக் கான காரணியும் இதுவாகவே அமைந்தது.
தனது உம்மத்தின் மீது பூரணத்துவமுள்ள பரிவும், இரக்கமும் கொண்ட வராகவும் இந்த உம்மத்தை நேர்வழி செலுத்துவதற்காக ஆர்வமுடையவராகவும் நபி(ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மீது நேசம் கொள்வதையும்;, அவர்களுக்குக் கட்டுப்பட்டு வழிப்படுவதையும் அல்லாஹ் முஸ்லிம்கள் மீது கடமையாக்கியுள்ளான். அல்லாஹ் வின் மீது நேசம்கொள்வதும் அவனுக்குக் கட்டுப்படுவதும் என்பதற்கான அடையாளமாகவும் இதனை ஆக்கியுள்ளான்.
(மேலும்) நபி (ஸல்) மீது நேசம் கொள்வதனால் ஒரு முஃமின் அடைகின்ற மகத்தான பயன்களில் பின்வரும் இரு விடயங்களும் காணப்படும்.
சுவனத்தில் நபிகளார்(ஸல்) அவர்களுடன் ஒன்றாக இருத்தல்.
ஈமானின் இன்பத்தை சுவைத்தல் என்பதே இவ்விரு பயன்களாகும்.
நபி (ஸல்) அவர்களை நேசிப்பதன் மகத்தான அடையாளங்களில் சிலஉள்ளன. அவை நபிகளாரை பின்பற்றுவதும் அவர்களுடைய கட்டளைகளுக்கும் விலக்கல்களுக்கும் முற்றிலும் அடிபணிதலும் ஆகும்.
இதற்கு ஸலபுகள் வியக்கத்தக்க பல உதாரணங்களை விட்டுச் சென்றுள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்டபோது நாங்கள் நாட்டுக் கழுதையொன்று பெற்று அதனை சமைத்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களின் அழைப்பாளரில் ஒருவர் வந்து அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும், நாட்டுக் கழுதையை உண்பதை விட்டும் உங்களை தடைசெய்கிறார்கள். நிச்சயமாக அது ஷைத்தானின் அசுத்தமான செயலில் உள்ளவை” எனக் கூறினார். உடனே இறைச்சி கொதித்துக் கொண்டிருக்கும்போது பாத்திரங்கள் கவிழ்த்தப்பட்டு (கீழே கொட்டப்)பட்டது. (அறிவிப்பவர்: அனஸ் (ரழி) நூல்: புகாரி, முஸ்லிம்)

நான் (என் தந்தை) அபூ தல்ஹாவின் வீட்டிலுள்ள மக்களுக்கு மது பரிமாறிக் கொண்டிருந்துன். அப்போது நபி (ஸல்) அவர்களின் அழைப்பாளர் ஒருவர் (வீட்டுக்கு வெளியில் நின்று கொண்டு) அறிந்து கொள்ளுங்கள் மது ஹராமாக் கப்பட்டு விட்டது” எனக் கூறினர்.
உடனே அபூ தல்ஹா (ரழி) என்னை அழைத்து வெளியில் என்ன சப்தம் என்று பார்த்து விட்டு வா என என்னிடம் கூறினார். நான் வெளியில் வந்து பார்த்து விட்டு அழைப்பாளரின் செய்தியை எடுத்துச் சொன்னேன். அப்போது அவர்கள் ‘போய் மதுவை கீழே கொட்டி விடு என எனக் கூறினார். நான்; மதுவை கொட்டிவிட அது மதீனாவின் பாதையில் ஓடிக் கொண்டிருந்தது.
(மது ஹராம் என்று அந்த மனிதரின் செய்தி சொல்லப்பட்டபின் அது பற்றி எக் கேள்வியும் கேட்காது அதிலிருந்து பின்வாங்காது அப்படியே கொட்டி விட்டார்கள்) என அனஸ் (ரழி) அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஒருமுறை இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஒரு ஹதீஸை அறிவித்து விட்டு அது ஸஹீஹான ஆதாரபூர்வமான ஹதீஸ் எனக் கூறினார்கள்.அப்போது (கூட்டத்திலிருந்து) ஒருவர், இதை நீங்களாகவே கூறுகிறீர்களா? எனக் கேட்டார். இதைக் கேட்டதும் இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் கலக்கமடைந்தார்கள். பிறகு நீ என்னை கிறிஸ்தவன் என்று அல்லது கிறிஸ்தவ ஆலயத்திலிருந்து வெளிவந்தவன் என்று அல்லது கிறிஸ்தவப் பட்டியை இடுப்பில் கட்டியவன் என்று கருதுகிறாயா என்று கண்டித்து விட்டு நான் நபிகளார் (ஸல்) அவர்கள் அறிவித்த ஹதீஸைத் தான் அறிவிக்கிறேனே தவிர நானாக (சுயமாக எதனையும்) கூறவில்லை என்றார்கள்.
(நூல்: மிப்தாஉல் ஜன்னா, பக்கம்:148, தபகாதுஷ் ஷாபிஈயத்தில் குப்ரா2 /141)

இமாம் இப்றாஹீம் இப்னு ஹானி (ரஹ்) அறிவிக்கிறார்கள். இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் மூன்று நாட்கள் என்னிடம் எனது பாதுகாப்பின் கீழ் மறைந்திருந்தார்கள். அதன் பின் நான் இடம் மாறி இருப்பதற்கு வேறொரு இடத்தைப் பார் என்று என்னிடம் இமாமவர்கள் கூறினார்கள். அப்போது நான் வேறொரு இடத்தில் உங்களுக்கு பாதுகாப்பு வழங்க எனக்கு முடியாது. வேறொரு இடம் கிடைத்ததும் உங்களுக்குச் சொல்கிறேன் என்று சொல்லி விட்டு, அவருக்காக (பொருத்தமான) இடத்தினைப் பார்த்து சொன்னேன். அவர்கள் என் வீட்டிலிருந்து வெளியேறும்போது ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹிரா குகையில் மூன்று நாட்கள் தங்கி விட்டு இடம் மாறினார்கள். செழிப்பிலும் கஷ்டத்திலும் அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையை (ஸுன்னாவை) நாம் பின்பற்றுவதே போதுமானதாகும் எனக் கூறினார்கள்.
(நூல்: ஹில்யதுல் அவ்லியா 9/180, தபகாதுல் ஹனாபிலா 1/97)
Previous Post Next Post