முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பிரேதப் பரிசோதனை செய்யலாமா?

-உஸ்தாத் இம்தியாஸ் ஸலபி

ஒருவர் திடீரென மரணித்து விட்டால் அல்லது நீரில் மூழ்கி மரணித்து விட்டால் கீழே விழுந்து, விபத்தில் சிக்கி, வெட்டப்பட்டு, சுடப்பட்டு மரணித்து விட்டால் அல்லது இது போன்ற ஏதோ ஒரு விபத்தில் மரணித்தால் அந்த மரணம் சம்பந்தமாக உண்மையான நிலையை கண்டறிவதற்காக அந்த மையத்தின் உடலை அறுத்து பிரிசோதனை செய்யப்படுகிறது. இதனையே “போஸ்ட்மாட்டம்” என கூறுவோம். யாருடைய மையத்தாக இருந்தாலும் ஜாதி பேதமின்றி அரசாங்கம் இதைசெய்துதான் ஆகும். ஆனாலும், முஸ்லிம்களில் பெரும்பாலானோர் இதை விரும்புவதில்லை.

இஸ்லாத்தின் பார்வையில் இதில் தடையிருப்பதாக தெரியவில்லை. “யுத்தம் நடை பெறும் நேரங்களில் இறந்துவிட்ட எதிரிகளின் உடல்களை சிதைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள் என்ற ஹதீஸை காரணம் காட்டி தற்போது நடை முறையிலுள்ள பிரேதப் பரிசோனையை கூடாது என சிலர் வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.

யுத்தம் முடிவடைந்த பின் எதிரிகள் மீதுள்ள கோபத்தின் காரணமாக பழி தீர்ப்பதற்கு இறந்துபோன உடல் உறுப்புக்களை துண்டு துண்டாக வெட்டுவது அன்றைய நடைமுறையில் இருந்தது. இது மனிதாபி மானமற்ற செயல். முஸ்லிம்கள் ஒருபோதும் இதை செய்யக் கூடாது என நபியவர்கள் கண்டிப்பாக உத்தரவிட்டார்கள்.

யுத்தமாக இருந்தாலும் யுத்தமல்லாத ஏனைய நேரங்களாக இருந்தாலும் ஒருவரது உடல் உறப்புக்களை சிதைப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. என்றாலும் இன்றைய காலச் சூழலில் பிரேதப் பரிசோதனைக்காக மையத்தின் உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோனை செய்வது என்பது வீணாக உறுப்புக்களை வெட்டி வீசுவதற்கல்ல.

இது கொலையா? அல்லது மரணமா? என்பதை ஆராய்ந்து குற்றத்தை நிரூபித்து குற்றவாளியை நீதிக்கு முன் நிறுத்துவதற்காக செய்யப்படுகின்ற மருத்துவப் பரிசோதனையாகும். இந்த மருத்துவப் பரிசோதனைக்காக குறிப்பிட்ட உறுப்புக்கள் வெட்டி பரிசோதிக்கப்படுகிறதே தவிர மொத்த உடல் உறுப்புக்களும் யுத்தங்களில் எதிரிகள் செய்வதுபோல் வெட்டி சிதைக்கப்படுவதில்லை. எனவே, இவ்விரண்டிற்குமுள்ள வேறுபாட்டையும் நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

சில முஸ்லிம்கள், இந்த பிரேதப் பரிசோதனை முறை தேவையில்லை என்றும் அது மையத்திற்கு செய்கின்ற வேதனையாக இருக்கும் என்றும் கூறி தவிர்த்து விடுகிறார்கள். சிலநேரம் மையத்தை மருத்துவ சோதனைக்கு உட்படுத்த விடாமல் தடுப்பதற்கு சில வழிமுறைகளையும் கையாளுகின்றார்கள். இது இவர்கள் செய்கின்ற பெரும்தவறாகும்.

இதன் காரணமாக குறித்த அந்த மரணத்திற்கான உண்மையான காரணம் என்ன என்பதை அறிய முடியாமல் போவதுடன் குற்றவாளியையும் தண்டனையிலிருந்து காப்பாற்றி விடுகின்ற ஒரு காரியமாகவும் அமைந்து விடுகிறது.

பிரேதப் பரிசோதனையை தவிர்ப்பதன் மூலமாக நாளடைவில் மொத்த சமுதாயத்தையும் பாதிப்படையச் செய்யக் கூடிய நடவடிக்கையாகக் கூட அது மாறிவிடும். அது மட்டுமன்றி குற்றவாளிக்கு சட்ட அங்கீகாரத்தை நாங்களாகவே ஏற்படுத்திக் கொடுத்தது போல் ஆகிவிடும்.

முஸ்லிம்கள் பிரேதப் பரிசோதனையை விரும்ப மாட்டார்கள் என்று எதிரிகள் தெரிந்துக் கொண்டால் திட்டமிட்ட முறையில் முஸ்லிம்கள் கொலை செய்யப்படுவதற்கு காரணமாக அமைந்துவிடும்.

எதிரிகள் என்று குறிப்பிடும்போது சமூக எதிரிகளாகவும் இருக்கலாம். நண்பர்களுக்கிடையே உருவாகும் எதிரிகளாகவும் இருக்கலாம். எனவே, இது ஒரு தனிப்பட்ட பிரச்சினையல்ல. சமூகப் பிரச்சினை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒருவர் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் ஏற்பட்ட நோய் அல்லது காயம் காரணமாக சிலநேரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை உருவாகும். அப்போது அவரது உடல் உறுப்புக்களை அறுத்து பரிசோதனை செய்து மருத்துவம் செய்யப்படுகிறது. இறைவன் நாடினால் உயிர் பிழைப்பார் அல்லது மரணித்து விடுவார்.

இயற்கையாகப் பிள்ளையை பெற்றெடுக்க முடியாதபோது அறுவை சிகிச்சை (ஸிஸேரியன்) முறையில் குழந்தையை வெளியில் எடுக்கிறார்கள். இருதயம் ஒழுங்காக செயல்படவில்லையானால் அதனை ஒழுங்குபடுத்துவதற்காக இருதய அறுவை சிகிச்சை செய்கிறார்கள். கிட்னி பழுதடைந்தால் அதனை அகற்றிவிட்டு வேறொரு கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திக் கொள்கிறார்கள். இப்படி நூற்றுக் கணக்கான அறுவை சிகிச்சைகளை மனிதனின் நலன் கருதி செய்யப்படுகிறன.

நிர்ப்பந்தம் கருதிதான் இந்த அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகிறன. அப்படி செய்யும்போது உயிருள்ள மனிதனின் உடல் உறுப்புக்களை சிதைக்கிறார்கள் என்று யாரும் சொல்வதில்லை. இது அவசியமான ஒன்று என்று எப்படி புரிந்து கொள்கிறார்களோ அதுபோல பிரேதப் பரிசோதனையம் அவசியமான ஒன்று என்று புரிந்து கொள்ள வேண்டும். நிர்ப்பந்தம் காரணமாக செய்யப்படும் எந்தக் காரியத்தையும் இஸ்லாம் தடுக்கவில்லை. எனவே, பிரேதப் பரிசோதனை செய்யக் கூடாது என்பது தவறான வாதமாகும்.
Previous Post Next Post